குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/வானொலியில்
மண்ணுக்கு மணமில்லை; மண்ணுக்கு வளமூட்டக் கொட்டப்பெறும் உரத்திலும் மனமில்லை. மாறாகத் துர்நாற்றம் வீசுகிறது. இந்தக் சூழ்நிலையில் அதில் ஒரு மல்லிகைச் செடி நடப்பெறுகிறது. அச்செடிக்கும் மனமில்லை. செடியின் விளைவாக அதனுள்ளிருந்து முகிழ்த்து வெளிவருகிறது மொட்டு. பின், அது மலராகிறது; மணம் வீசுகிறது; மானிடர் முதல் மாதேவன் வரை விரும்பி அணியும் தகுதி பெறுகிறது. மலரின் மணம், மணமற்ற செடியில் முகிழ்த்து வெளி வருகிறது. என்னே அதிசயம்! இந்த எளிய-ஆனால் அரிய காட்சி சிறந்த படிப்பினைக் கற்றுத் தருகின்றது. உடலில் உயிர்ப்பு இல்லை. ஆனால் உடம்புக்கு உயிர் இயக்கம் தருகின்றது. உடலுக்கு வாழ்வு உயிர்நிலை; உயிரின் உயிர்நிலை அன்பே யாகும்.
‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்றார் திருவள்ளுவர். தனக்கெனப் பொன்னிலும், பொருளிலும், போகத்திலும் உயிர் ஈடுபடும்பொழுது அவ்வுயிர் நோயுறுகிறது; நொந்து அழிகிறது. பிறர்க்கென முயலும்பொழுது உயிர் உயர்நிலை பெறுகின்றது. இது வாழ்க்கை முறை. தனக்குவமை இல்லாத தலைவனாகிய கடவுள், அன்பின் வடிவமாக இருக்கின்றான். "அன்பே சிவம்" என்பது திருமந்திரம். அன்புடைய வாழ்க்கையைச் சிறப்பித்து, உலகம் ஒரு குரலாகப் பாராட்டுகிறது. தூய அன்பு வாழ்க்கை எல்லை கடந்தது; வேற்றுமைகளைக் கடந்தது; நாடு, இனம், மொழி, அரசியல், சமயம் ஆகிய எல்லைக் கோடுகள் அன்புக்கு இல்லை. ஏன்? அன்பு, நட்பையும், பகையையும் கூடக் கடந்தது. இத்தகைய ஒப்பற்ற அன்பு நெறியை உலகச் சமயங்கள் அனைத்தும் வற்புறுத்துகின்றன. இறைவன் மக்களிடத்தில் பிட்சாடன மூர்த்தியாக வந்து பிச்சை கேட்கின்றான். அவன் கேட்கும் பிச்சை சோறல்ல-காசல்ல-அன்பேயாகும். அவன் கண்ணப்பர் அன்பினைத் துய்த்து மகிழ்ந்தான். இத்தகைய அன்பு வாழ்க்கை எளிதாகத் தோன்றினாலும் நடைமுறைப் படுத்துதல் கடினமானதாகவே இருக்கிறது. அதனால் அன்பு கடுமையானதென்பதல்ல-விரும்பி முயன்றால், எளிமையில் கைவரக் கூடியதேயாகும். ஆயினும் மனிதனைப் பிடித் தாட்டும் பேய்க்குணங்கள் எளிதில் அவனை விட்டு அகல்வதில்லை.
கண்ணாடித் தொட்டிக்குள் வளர்ந்த மீனைப் போல குறுகிய சார்புகளிலேயே பற்றுக்காட்டுகிறான். அப்படிக் காட்டுதல் கூடத் தவறில்லாமல் போகலாம்; பிறிதொன்றின் மீது பகை கொள்ளாமல் இருப்பானானால், அன்பிலிருந்து அன்பு தோன்றுதல் இயற்கை. அதற்கு அறிவும் ஆற்றலும் தேவையில்லை. அன்பிலிருந்து அன்பு தோன்றுதல் மணமுடைய மலரிலிருந்து நறுமணச் சாந்தும், சாறும் தயாரிப்பதுபோல், மலரிலிருந்து நறுமணச் சாறு எடுப்பதை விடச் செடி நறுமலரைத் தருவதுதான் அருமை. மனிதன் தன்னோடு அன்பாகப் பழகும் நண்பர்களுக்கே அன்பு காட்டக் கடமைப் பட்டிருப்பதாகக் கருதுகின்றான். அஃது அவனுடைய ஒரு சாதாரணக் கடமை. ஆனால் இன்றைய உலகியலில் நண்பனை நேசிப்பது கூடப் பாராட்டுதலுக்குரியதாகி விட்டது. காதலரிருவர் தம்முள் அன்பு காட்டுதலும்கூட இன்று பாராட்டுக்கு உரியதாக விளங்குகிறது. காரணம் அந்தச் சூழலிலும் கூட சுயநலமும், நம்பிக்கைத் துரோகமும் நடமாடத் துவங்கி விட்டன.
மானிடன் உண்மையாகத் தேவன் ஆவது தன் பகைவனுக்கும் அன்பு காட்டும் பண்பு பெறும்போதுதான். மனித ஆன்மாவாகிய மொட்டு அன்பு காட்டும்போதே மலர்கிறது. அவனால் உலகம் கவர்ச்சிக்கப் பெற்று அவன் சுற்றமாகச் சுற்றுகிறது உலகு. அவனது மனம், மொழி, மெய் ஆகியவற்றால் கூடிய அன்பு வாழ்க்கை ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பினைப் பிலிற்றுகிறது. இந்நிலையிலேயே விண்ணுலகம் உருவாகிறது. சாதாரண மல்லிகைச் செடி அறிவில்லாத-மணமில்லாத மண்ணோடு தொடர்பு கொண்டு மணமில்லாத உணவினைக் கொண்டு மணமுள்ள மலர்களைத் தருகின்றது. நறு நெய்யில்லாத தீஞ்சுவையில்லாத வெறும் வைக்கோலையும், தவிட்டையும் தின்னும் பசு, தீஞ்சுவையான பாலைத் தருகின்றது. பகுத்தறிவுடைய மனிதனோ இனிய பாலைக் குடித்துவிட்டு, இன்னாதனவே செய்கின்றான்.
உயிர் நலம் பெற வேண்டுமாயின், அதன் உயிர்ப்பாக-மூச்சுக் காற்றாக அன்பு அமைதல் வேண்டும். மறந்தும் உயிர் தீமையோடு கூட்டு வைத்துக் கொள்ளக்கூடாது. மனிதன் தீமையோடு கொள்ளும் கூட்டு, மடியில் நெருப்பைக் கட்டிக் கொள்வதைப் போன்றது. மனிதன் அன்பு காட்டுதலுக்கு மாறாகப் பகைகொண்டு தீங்கு செய்யும்பொழுது அவனும் அழிகின்றான் என்ற உண்மையை அவன் உணர்தல் வேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்ற அனுபவ மொழி எண்ணத் தக்கது. திருவள்ளுவர் இந்த உண்மையை விளக்குகின்றார். கொடுமையிற் சிறந்தது தீயா? தீமையா? என்று ஆராயத் தூண்டுகின்றார். தீ மிகுந்தால் எரித்தழிக்கும். அளவோடு பயன்படுத்தினால் சமைக்கப் பயன்படும். குளிர்காயப் பயன்படும். ஆனாலும் கூரையில் வைத்தால் பற்றி எரியும். தீயினால் நன்மையும் உண்டு - தீமையும் உண்டு. ஆனால், தீமையினால் நன்மையே இல்லை. மேற்பரப்பில் ஒருவன் பிறிதொருவனுக்குத் தீமை செய்யும் கருத்தில் தீமை செய்கின்றான். உலகியல் மரபுப்படி ஒன்றில் ஒட்டிச் சாராத ஒன்று இன்னொன்றிலும் சார முடியாது. எடுத்துக்காட்டாக அடுப்பு சூடேறாமல் பானை சூடேறாது. பானை சூடேறாமல், தண்ணீர் சூடேறாது; அதுபோல, பிறருக்குத் தீமை செய்கின்றவனின் மனம், அறிவு, உணர்வு, இரத்தம் ஆகியன கெடாமல் அவன் தீமை செய்ய முடியாது. தீமையை அழிக்கின்ற ஆற்றல், அன்பிற்கே உண்டு.
உயிர் வர்க்கத்தின் இலட்சியமே அன்பு காட்டுவது தான். உலகில் எந்த ஒரு பொருளும் தன்னை வளர்த்துக் கொள்ளுகிறது. வாழ்வித்துக் கொள்ளுகிறது. ஆனாலும் தன்னுடைய வளர்ச்சியையும், வாழ்க்கையையும் பிறிதொன்றின் நலத்தோடு அல்லது பரந்துபட்ட மக்கட் சமுதாயத்தின் நலத்தோடு பொருத்தி-வளர்வதைப் பார்க்கிறோம். தாவர இனம் தழைத்து வளர்ந்து விலங்கினத்திற்கும், மக்களினத்திற்கும் பயன்படுகிறது. விலங்கினம் வளர்ந்து தாவர இனத்தின் நலத்தோடும், மக்கள் இனத்தின் நலத்தோடும் பொருந்தி வாழ்கின்றன. மனிதன் வளர்ந்து வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையும் மற்றவர்களின் நலனோடு இணையவேண்டும்; பொருந்த வேண்டும். இஃது ஓரளவு மேற்பரப்பில் தற்காலிகக் காரிய சாதனைக்காக நடைபெறுகிறது எனினும், ஆழமில்லை.
இயற்கை தனி மனிதனிடத்தில் அன்பினைத் தோற்றுவித்து வளர்க்கவே இன்பம் நிறைந்த காதல் வாழ்க்கையையும், பிறர்க்கென முயலுவதில் இன்பம் காணும் சீலம் நிறை துறவு வாழ்க்கையையும், கண்டு காட்டியது. இரண்டும் இலட்சியத்தில் ஒன்றாகவும் நடைமுறையில் வெவ்வே றாகவும் உள்ளன. முன்னையதில் ஈடுபட்டுள்ள காதலர்கள் ஒருவர் தானும் இன்புற்று இன்னொருவருக்கும் இன்பம் தருகின்றார். இந்தக் காதல் ஆன்மக் காதல்; அழியாக் காதல். இத்தகு காதல் வாழ்க்கை காண்பதற்கு அருமையாகி விட்டது.
இன்றைய வீட்டு வாழ்க்கையில் கட்டுப்பாடும் பழக்கமுமே மிகுதியும் ஆட்சி செய்கின்றன. தூய காதல், அன்பு, ஆட்சி செய்யவில்லை. இங்குக் காணும் அன்புடைமை கானல் நீர் போன்றது. பின்னையதாகிய துறவு வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் தமக்கு இன்பம் நாடாமல் பிறருக்கு இன்பம் தரும் உழைப்பிலேயே இன்பம் காண்பவர்கள். அவ்வழி அவர்களுக்கு வரும் துன்பமும் கூட இன்பமாகும். இத்தகு சீலத் துறவு இன்று அருகிப் போய்விட்டது. வீட்டில் வாழும் குடும்பத் தலைவனுக்கும், வீடு கடந்த நாட்டில் வாழும் துறவிக்கும் அவனவனுடைய மனத்தில் அன்பு தோன்றாவிடில் பயன் என்ன? அன்பினைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளுதல் எளிமையில் முடியும். ஆயினும் தொடர்ந்து முயன்று வளர்த்து-பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். அன்பு பழகப் பழக ஆழமாகிறது. உறுதி பெறுகிறது; உய்தியைத் தருகிறது.
தன்னுடைய தோற்றம், தான் மட்டும் வாழ்தலுக்கல்ல-தனித்து வாழவும் முடியாது. எந்த ஒரு பொருளும் பிறிதொரு பொருளின் சார்பின்றி வளராது; வாழாது; பயன்தராது. ஆதலால், தன்னுடைய வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் மற்றவரிடத்து அன்பு பாராட்டுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்ளுதலேயாகும். அன்பினைத் தோற்றுவித்துக் கொள்ளும் முதல் நிலைக்களன் இதுவே. இந்த அறிவிலும், உணர்விலும் அன்பு தோன்றும். அன்பினை, உதவி, தொண்டு ஆகிய செயற்பாடுகளின் வழி செழுமைப்படுத்தி வளர்க்க வேண்டும். தோன்றிய குணம் செயற்பாடின்றி முடங்கிக் கிடக்குமாயின் அது வளர்வதில்லை. மேலும் தோன்றிய அளவிலேயே அழிந்தும் போகிறது. குணத்தின் உண்மை அக்குணமுடையவனின் செயலினாலேயே உணரப்படும். ஆதலால், பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பினை, கதிரவன் ஒளியை வரவேற்று மகிழும் தாமரையைப் போல, மகிழ்வோடு வரவேற்கும் பண்பு தேவை. அதனாலன்றோ எல்லோருக்கும் கொடுக்கும் இறைவன் வாங்கவும் செய்கிறான். அவன் வாங்குவதின் மூலம் சமூதாயத்திற்கு உதவும் பண்பை ஊட்டி வளர்க்கிறான்.
தாய்தான் தன் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருகிறாள். குழந்தை, தான் கடித்த மிட்டாயைத் தாய்க்குக் கொடுக்கிறது. அப்பொழுது அவள் அதை விரும்பி ஏற்கிறாள். எச்சில் என்றும் பாராமல் ஏற்கிறாள். அன்பு உள்ள இடத்தில் எச்சிலும் தீட்டும் இல்லை. காதல் வாழ்க்கையில் எச்சிலை அமிழ்தம் என்றார் திருவள்ளுவர். பக்தி வாழ்க்கையில் கண்ணப்பரின் எச்சிலைத் தூய கலச நீர் என்றார் சேக்கிழார். குரு சீட வாழ்க்கையில் எச்சிலைப் பிறப்பறுக்கும் மருந்து என்றார் குமரகுருபரர். எதை இழந்தாலும் இழக்கலாம்; பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பை இழக்கவே கூடாது. தோன்றி வளரும் அன்பினை அழிக்கும் நோயும் உண்டு. நோய், பகை இரண்டும் அற்ப மனிதனை அழிக்கும்; நல்ல மனிதனை வளர்க்கும். இன்னாதனவே செய்கின்ற மனிதன் சூழலில் அன்பு நெறியில் வளரும் மனிதனின் சால்பு உறுதியுடையதாக இருக்கும்.
இயேசுவின் அன்பும் அப்பரடிகளின் அருளும் சான்றாண்மைக்குச் சான்று. இவர்களின் அன்பு மற்றவர் தந்த துன்பங்களை உரமாகக் கொண்டு வளர்ந்து உறுதி நிலை பெற்றது. அன்புடைமைக்கு வரும் கொடிய நோய் அப்பட்டமான தன்னலம். ஆயினும் பிறர் வாழ்க்கையோடு இணையாத தன் வாழ்க்கை கேடுடையது. அதனினும் கேடுடையது தன்னலத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்தல். வாழ்வதற்காக உண்ணுகிறோமா? உண்பதற்காக வாழ்கிறோமா? என்று ஒரு வினா உண்டு. உண்ணுதலும் வாழ்தலும் தம்முள் தொடர்புடையன-பிரிக்க முடியாதன. ஒன்றித்து நிகழ வேண்டியதும் கூட. ஆனாலும் எதற்காக வாழ்கிறோம் என்ற வினாவிற்கு உண்பதற்காக என்று யாரும் கூறமாட்டார்கள். மீதூண் விரும்புபவனும் கூட உடன்பட மாட்டான். உண்பதற்காக வாழ்தலைப் போன்றது அளவிற்கு உட்பட்ட தன்னலம். அன்பிற்கு எதிரான நோய், நிர்வாணமான தன்னலமேயாகும். மேலும் அறியாமையை உணராமை, மறவாமை, போன்றவைகளும் நோய்களே. ஒருவன் தீமை செய்யலாம். ஆயினும் அவன் இயற்கையிலேயே வேண்டுமென்றே தீமை செய்கின்றானா அல்லது அறியாமையினால் செய்கின்றானா என்பதை ஆராய்ந்து அறிதல் அவசியம். அறியாமையினால் செய்யப்படுவதை பொறுத்தாற்றி இரக்கம் காட்ட வேண்டும். அவனிடத்தில் இல்லாத அறிவை உருவாக்குதல் வேண்டும். அத்துன்பத்தை மறக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும். அவனிடத்தில் அன்பு காட்டி நன்மை செய்ய வேண்டும். இயேசு பெருமான் ‘அறியாமல் செய்கின்றார்கள் மன்னித்து விடுக’ என்றார். ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்க’ என்றார் திருவள்ளுவர்.
தனி மனித வாழ்க்கையில், அன்பினைப் படிப்படியாக வளர்த்து விரிவாக்கும் வகையிலேயே மனைவி, மக்கள். சுற்றம், இனம், நாடு, உலகம் என்று முறை வைப்புத் தோன்றி வளர்ந்துள்ளது. மனைவியிடத்து அன்பு காட்டத் தொடங்குபவன் முறையாக உலக மக்களையே நேசித்து அன்பு காட்டும் அளவிற்குத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனித குலத்தின் வாழ்க்கையை இணைத்து வளப்படுத்தும் ஒழுக்க உணர்வுகள் பலப்பல. எல்லா ஒழுக்க உணர்வுகளுக்கும் தூய்மை நிலை ஒழுக்கம் அன்புடைமை.
தண்ணிலவைப் போல, குளிர் தென்றலைப் போல இன்பம் தருகிற இனிய சாதனம் அன்புடைமை. வாழ்வித்து வாழ்விக்கும் ஆற்றல் அன்புக்கு உண்டு.......
மனித வாழ்க்கையின் சிறந்த பண்பு இரக்கப்படுதலேயாம். இரக்கத்தின் வழித் தோன்றும் ஈதற் பண்பு இம்மைக்கும் மறுமைக்கும் நலந்தரத்தக்கது. இரக்க உணர்ச்சி இயல்பான ஒன்றே! இரக்க உணர்ச்சி இல்லாத மனிதர் இருப்பது அரிதே! இரக்க உணர்ச்சி இல்லாதாரை அரக்கர் என்று இலக்கியம் கூறும்.
‘இரக்கமென் றொருபொருள் இலாத நெஞ்சினர்
அரக்க ரென்றுளர் சிலர்’
என்றார் கம்பர். இரக்க உணர்ச்சி தோன்றலாம். ஆனால் அந்த இரக்கம் உதவியாக உருமாறி வளராது போனால் பயனில்லை. சிலர் உதட்டளவில் இரக்கம் காட்டுவர். அதனால் உலகம் பிழைத்து விடுமா? என்ன? ஐயோ பாவம்! என்ற இரக்கச் சொற்களைக் கூறினால் என்ன பயன்? வறுமையின் கொடுமை பற்றிக் கணக்கிலாத கலிவிருத்தங்களைப் பாடி என்ன பயன்? பட்டி மன்றங்களை நடத்தித்தான் என்ன பயன்? இரக்கம் துன்ப நீக்கத்திற்குரிய செயலாக உருப்பெற வேண்டும். ஈதல் அறமே! கொடை மடம்படுதல் சிறப்பே! வழங்கி வறியராதல் வரவேற்கத்தக்கதே! ஆனால் வாழும் நெறியன்று.
ஈதல் என்ற வேள்வி இடையீடின்றிச் செய்யப் பெறல் வேண்டும். வறுமை மாறும்வரை செய்யப் பெற வேண்டும். பசிக்கு ஒருவேளைச் சோறு போடுதல் ஈதலறம் ஆகிவிடாது. ஏழைக்குக் கஞ்சி வார்த்தல் பேரறமன்று. ஏழ்மையை முற்றாக மாற்றும் வகையில் வழங்குதலே ஈதல். அதுவே அறம். இன்றைய இரவலர் நாளைய இரவலராக வாழும் நிலையில் வழங்குவது பிச்சையே. அஃது ஈதலும் அன்று; கொடையும் அன்று. அறமும் அன்று. அதனாலேயே “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” அறம் என்றார் வள்ளுவர். இங்ஙனம் வறுமையை மாற்றும் வகையில் வழங்கி வாழ வேண்டுமென்றால் சற்றும் தளர்வில்லாத தாளாண்மை வேண்டும்.
சங்க காலக் கவிஞன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி இந்த உலகம் இருந்தது; இருந்து கொண்டிருக்கிறது; ஏன்? என்று வினாக் கேட்டு விடை சொல்கின்றான். தனக்கென முயலாது பிறர்க்கென முயன்று, உழைப்பில் ஈடுபடுகின்ற உழைப்புத் தவம் செய்யும் கண்களையுடையவர்கள் பலர் வாழ்வதால் உலகம் இருந்தது. இருந்து கொண்டிருக்கிறது, என்று விடை கூறுகின்றான். “உண்டாலம்ம இவ்வுலகம்” என்று தொடங்கும் பாடலில் “தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்று குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளையே உயிர்கள் தொழுகின்றன. ஏன்? திருவடிகளே உயிர்களைத் தாங்கித் தண்ணருள் சுரக்கின்றன. வாளில் காட்டும் ஆண்மையிலும் தாளில் காட்டும் ஆண்மை-அதாவது தாளாண்மை பெருமைக்குரியது; பாராட்டுதலுக்குரியது; இன்மையும் மறுமையும் தரத்தக்கது. வாளில் காட்டும் ஆண்மை நெடிய வரலாறல்ல. தாளாண்மையே நெடிய வரலாறு.
உலகம் தோன்றிய நாள் தொட்டு உலகின் வரலாற்றோடு உயிர் வர்க்கத்தின் வாழ்க்கையோடு வாள் மோதித் துன்பம் விளைவித்தது உண்மை. ஆனால் தாளாண்மை அந்த இன்னல்களையெல்லாம் கடந்து உலகத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. இனி தொடர்ந்து மேலும் வாழ்விக்கும்.
தாளாண்மையும், வேளாண்மையும் கணவனும், மனைவியும்போல, அறனும் அன்பும் போல, பண்பும் பயனும் போல. தாளாண்மை என்பது தாள்களோடு தொடர்புடையது. வேளாண்மை இதயத்தோடு தொடர்புடையது. தாளாண்மை என்ற தகைசான்ற பண்பில்லாதவன் வேளாண்மை செய்ய இயலாதவன். ஒரோ வழி செய்தாலும் தொடர்ந்து செய்ய இயலாது. விழுமம் துடைக்கும் அளவுக்குச் செய்ய இயலாது. வேளாண்மையில் செருக்குற்று விளங்க விழுமம் துடைக்கும் அளவுக்கு ஈதல் செய்ய வேண்டும். இல்லையென்ற சொல் வையகத்தில் வழக்கொழியும் வரை வழங்க வேண்டும். அதுவே முழுமையாக வேளாண்மை. இத்தகு வேளாண்மை அறம் இரக்க உணர்ச்சியினால்மட்டும் வரும் அறமன்று. தாளாண்மையில் ஓயாது ஈடுபட வேண்டும். தாளாண்மையில் முழு நிறை வெற்றி கண்டால் வேளாண்மையிலும் வெற்றி காணலாம். தாளாண்மையில் வெற்றி பெறாது வேளாண்மையில் மட்டும் வெற்றி பெற நினைப்பது, காலப் போக்கில் பிறிதொருவரின் வேளாண்மையை எதிர்நோக்கி வாழும் இரவலராக்கிவிடும். ஆதலின் தாளாண்மை பேணுக! தொடர்ந்து பேணுக! எல்லையின்றிப் பேணுக. பொருள்களைச் செய்து குவித்திடுக. வேளாண்மை செய்திடுக. இதுவே வள்ளுவம் தரும் வாழ்க்கைக் கலை.
‘தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.’
613
உடற்குறை துன்பமானது. உடற்குறை யுடையாரும் துன்பமுறுகின்றனர். உடற்குறையுடையாரைச் சார்ந்தோரும் துன்புறுகின்றனர். உடற்குறைறைய விடத் துன்பம் தரத்தக்கது ஒரு செயலை அரைகுறையாகச் செய்வது. அரைகுறையாகச் செய்யப்படும் செயல் வெந்தும் வேகாமல் இறக்கிய அரிசிச் சோற்றைப் போல அல்லலைத் தரும்.
செயல் செய்வதென்பது ஒரு கலை. அந்தச் செயல் முறையாக முழுமையாகச் செய்யப்பெறின் களை கட்டி விளங்கும்; நிறைந்த பலனைத் தரும். செயலைச் செய்யும் முன்பு அச்செயலோடு ஒன்றாகி உணர்வுடன் கலந்து விட வேண்டும். உணர்வோடு கலந்து செய்யப்பெறாத செயல் சோர்வுபடும். செயலில் ஈடுபட மனத்திற்கு அழுத்தமான உணர்வு இருக்க வேண்டும். முடிந்தால் செய்யலாம். சந்தர்ப்பம் இருந்தால் செய்யலாம் என்பன போன்ற விவாதங்கள் கவைக்கு உதவாதன. செயலைத் தொடங்கினால், அச்செயலைத் தொடர்ந்து நிறைவேறும் வரை கவனத்துடன் செய்யவேண்டும். ஒரு செயலைத் தொடர்ந்து செய்யின், மனித சக்தியும் கூட மிஞ்சும். செயலை விட்டு விட்டுச் செய்யின், அச்செயல் தொடர்பான செய்திகளை நினைவு கூர்தலில் மனித ஆற்றல் கழியும். இடையீடு பட்டதில் பாதிக்கப் பெற்றுவிடும். எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல் செய்தற்குரிய ஊக்கம், ஊக்கத்துடன் கூடிய உணர்வு முழுமையாக விளங்காது. ஆதலால் நமது நாட்டில் கட்டிமுடிக்கப் பெறாத வீடுகள் ஏராளம். நிறைவேற்றி முடிக்காத திட்டங்கள் அளப்பில. எழுதி முடிக்கப் பெறாத கற்பனைகள் கணக்கில. வன மகோத்சவத்தில் கன்றுகள் வைத்தும், கணக்கிலேற்றியும் வளர்ந்து பயன் தராது பட்டுப் போன கன்றுகள் ஆயிரம் ஆயிரம். இவையெல்லாம் செயலில் தொடர்ச்சியின்மையின் விளைவுகள். வானொலிக்கு உரிய கட்டணம் காலத்தில் கட்டாது, காலம் கடந்து செலுத்தித் தண்டம் கொடுப்போர் எத்தனை பேர். தாம் வாங்கும் செய்தித் தாளுக்கு உரிய காலத்தில் சந்தா செலுத்தாது பத்திரிகை நின்று, நின்று படிப்போர் எத்தனை பேர்? ஏன்? முடியாமை அல்ல. கூடாது என்பதும் அல்ல. இதற்குப் பெயர்தான் அக்கறையின்மை. செய்யும் பணியில் அக்கறை யின்மையால் செய்யத் தொடங்கிய பணியைத் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். எந்த ஒரு பணியையும் அவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்; வழக்கப் படுத்திக் கொள்ள மாட்டார்கள். செயல் செய்தலைப் பழக்க, வழக்கப்படுத்திக் கொண்டாலே நிறையப் பணிகளைச் செய்யலாம். இடையீடின்றிச் செய்யலாம். பணியைத் தொடங்கிய பிறகு இடையில் இல்லாத காரணங்களைச் சொல்லி நிறுத்தி விடுவது நல்லதல்ல. இது பணி செய்யும் பாங்கினையும் கெடுக்கும். நம்பிக்கையைச் சிதைக்கும். உள்ளத்தின் உறுதியைக் குலைக்கும். செயல் செய்யத் தொடங்கி, செயலை முற்றாகச் செய்து முடிக்காது இடையில் விடுவது துன்பத்தைத் தரும். பெருமையைக் குறைக்கும். உலகம் அவர்களை ஒரு பொருளாக மதிக்காது.
எண்ணித் துணிக துணிந்த பின் தொழிற்படுக; துணிவோடு தொழிற்படுக. வெற்றி தோல்விகளில், ஆசை வலையில் விழாது தொடர்ந்து தொழிற்படுக. செயலினை மூச்சாகக் கொள்க! தொடங்கிய செயலை முடிக்காது வாழ்தல் அறமன்று. அதற்குச் செயற்களத்தில் சாதலே அறங்கூறும் ஆக்கந் தரும்.
ஒரு செயலைத் தொடங்கி, அதை முற்றாக முடிக்காமல் பத்திரமாக வைத்துவிட்டு, வேறு ஒரு செயலைத் தொடங்குதல் நெறியன்று. ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! இனிதே செய்க! என்பது ஆன்றோர் வாக்கு. சீவி முடிக்கப் பெறாத தலையும், செயலுக்கு வராத சிந்தனையும், கடவுள் எழுந்தருளாத திருக்கோயிலும், மகப் பேறிலாத மனை வாழ்க்கையும் தொண்டின் துன்பம் தெரியாத துறவு வாழ்க்கையும், பயனுடையதல்ல. அது போல தொடங்கிய செயலைத் தொடர்ந்து செய்து முடிக்காத வாழ்க்கை வாழ்க்கையன்று. அந்த வாழ்க்கையை இன்றைய உலகமும் மதிக்காது. நாளைய உலகமும் பாராட்டாது. செயல் செய்திடுக! ஓயாது செய்திடுக; செயல் முடியும் வரை செய்திடுக! அதுவே இன்ப வாழ்க்கை!
‘வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரில் தீர்ந்தன்று உலகு!’
612
உயிர் ஒரு ஊற்றுக்கண்! ஆம்! உயிர் அறிவின் ஊற்றுக் கண்; ஆற்றலின் ஊற்றுக்கண். அறிவு, ஆற்றல் இவ்விரண்டும் மேலும், மேலும் பெருகி வளரத்தக்கன. செயற்பட செயற்பட வளரும். இவ்வளவுதான் என்கிற நியதி, அறிவையும் ஆற்றலையும் பொறுத்தவரை எந்த மனிதனுக்கும் இல்லை. ஆனால் அறிவில் வளர வேண்டும்; ஆற்றலில் வளர வேண்டும் என்ற தாகம் இல்லாது போனால் இவை வளர்வதில்லை. வளராததோடன்றி உள்ளதும் மங்கி மழுங்கிப் போகும். தாகம் இருந்தால் மட்டும் கூடப்போதாது. சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அறிவு ஆற்றல் இவைகளின் வளர்ச்சிக்குரிய வாயிலை அறிந்து தொழிற்படுவதில்லை.
அறிவு, ஆற்றல் இவைகள் பெருகி வளரும் வாயில் “செயற்படுதலேயாம்”. அறியாமையைத் தொடர்ந்து அறிவல்ல, அறிவை தொடர்ந்தே அறியாமை. அதாவது அறிவும் வேட்கை இருந்துதான் அறியாமை தெரிகிறது. “அறிதோறும் அறியாமை” என்பார் வள்ளுவர். ஆற்றல் செயற்படச் செயற்படத்தான் அனுபவ வாயிலாக அது வளரும். அறிவு ஆற்றலின் வளர்ச்சிக்குத் தாய். முயற்சி காரியங்கள் நிகழ்வன அல்ல; செய்யப் பெறுபவை. முயற்சியின்றி வாளா இருப்பது, துன்பத்தில் துன்பத்திற்கு ஆட்படுத்தும். முயற்சியுடைய வாழ்க்கை இல்லாதார்க்கு சொர்க்கத்தின் கதவு தாழிடப்பெறும். நரகத்தின் கதவே திறக்கப் பெறும்.
முயற்சியை முயற்சிக்காகவே தொடங்க வேண்டும். முயற்சி யெடுக்கப்பெறும் காரியங்களை நிறைவேற்றி முடிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி அவசியம் இல்லாத அளவுக்கு எண்ணி அலட்டிக் கொள்ளக் கூடாது. முயற்சியின் விளைவுகளைப் பற்றியும் உறும் பயன்களைப் பற்றியும் கற்பனை செய்து கவலையில் ஆழக் கூடாது. முடியுமா? என்ற கேள்வி தோல்வியின் தொடக்கம். முடியுமா? என்று நினைக்கத் தொடங்கும்போதே செயலூக்கம் சிதறி அழிந்து போகும். உலகத்தில் மகத்தான் பணிகளைச் செய்து வெற்றி பெற்றவர்கள் முயற்சியினாலேயே செய்தார்கள். சிலர் சூழ்நிலைகளைச் சார்ந்து வாழத் தலைப்படுவர். சூழ்நிலையை அனுசரித்தல் தவறன்று. ஆனால் சூழ்நிலையை முற்றாக நம்பி சூழ்நிலைக்கு ஆட்படுதல் வளர்ச்சிக்கு வழி செய்யாது. சூழ்நிலையின் விலங்குக்கு ஆட்படுதல் விலங்குகளுக்கே உரியது. மனிதன் சூழ்நிலைகளை வெற்றி காண வேண்டும்.
பணிகளைத் தொடங்கும் முன், பணிகளின் தரம், அப் பணியினால் சமுதாயம் அடையும் நன்மை, ஆகியவைகளைப் பற்றியே எண்ண வேண்டும்! அங்ஙணமின்றித் தன்னுடைய அன்றையச் சூழலை நினைந்து முடியுமோ, முடியாதோ என்று ஊசலாடுவது; தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் நம்பாது ஜோசியத்தை நம்புவது; இராசிப் பலனைப் படித்து மயங்குவது; ஆகிய கெட்ட பழக்கங்கள் ஊக்கக் கிளர்ச்சிக்கு எதிரானவை. ஊக்கக் கிளர்ச்சி குறைந்து போனால் அயற்சியே தலைகாட்டும். தன்னம்பிக்கை தளரும். பயம் குடிகொள்ளும். தோல்வி மனப்பான்மை தலை தூக்கும். உண்மையில் பெருமையில்லாத பெருமையைப் பற்றிக் கவலைப்படும். பெருமையென்பது வெற்றி, தோல்விகளை மையமாகக் கொண்டு நிர்ணயிப்பது அல்ல. எத்தனையோ வெற்றிகள் சிறுமையைத் தந்திருக்கின்றன. எத்தனையோ தோல்விகள் பெருமையைத் தந்திருக்கின்றன. பெருமையை வெற்றி தோல்விகளோடு இணைத்துச் சிந்திப்பதே சிறுமை. இந்தச் சிறுமைக்கு ஆளாகிவிட்டால் போலித்தனமான, பயன் தராத, வறட்சி தன்மையுடைய கௌரவ உணர்வுகளுக்கு அடிமையாக நேரிடும். இந்த வகை உணர்வுக்கு மனிதன் ஆளாகிவிட்டால் அவன் சைத்தான்ாகிவிடுவான். இது கொடுமை.
உண்மையான பெருமை முயற்சியை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப் பெறுகிறது. நல்ல காரியத்திற்கு நல்ல வண்ணம் முயற்சியைத் தொடங்கிக் களத்தில் போராடித் தோற்றாலும் பெருமையே! ஓர் உயர்ந்த பணிக்காக மனிதன் நடந்த வழிநடைப் பயணங்கள் பெருமைக்குரிய அளவு கோல்கள். ஆதலால் பணியைத் தொடங்கும் முன்பே இப்பணி பெரியது. நம்மால் ஆகக்கூடியதில்லை என்று எண்ணற்க! கைவருந்தி உழைக்கும் மனிதன் தெய்வம்! உழைப்பின் முத்திரைகளைக் கைகள் பெறட்டும்! கால்கள் பெறட்டும்! சந்தித்த தோல்விகளின் காயங்கள் முழங்காலிலும் கிடக்கட்டும்! பொய்ம்மையான வீண் பழக்கத்திற்கு அடிமையான சமூகத்தின் வசைகளும் குவியட்டும்! அஞ்சற்க! அயர்ச்சியை விலக்குக! நம்மால் ஆகும் என்று நம்புக! நம்மால்தான் செய்ய முடியும் என்று உறுதி கொள்க! முயற்சியினைத் தொடங்குக! பெருமை வந்து சேரும்.
‘அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.’
611
வாழ்க்கை, பார்வைக்கு எளிதாகக் காட்சியளிக்கிறது. அப்படித்தான் பலர் கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான வாழ்க்கை அருமையானது. ஆனாலும் எளிமையானது. சிக்கல்கள் நிறைந்தது. ஆனாலும் தீர்வு காணவல்லது. எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது கேள்வியல்ல. எப்படி வாழ்ந்தோம் என்பதே கேள்வி. அதனாலன்றோ மாணிக்கவாசகர் ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே’ என்று இடித்துரைக்கின்றார். வாழும் வகையில் வாழாத வாழ்க்கை பயனற்றது. ஆதலால் அது வாழ்வன்று. அப்பரடிகளும் "பேசாத நாள் பிறவாத நாள்" என்பார். வாழும் வகையே வளத்திற்கு அடிப்படை. வரலாற்றுக்கு ஊற்றுக் கண். அதனாலன்றோ வள்ளுவம் "வாழ்வாங்கு வாழ்க!" என்ற ஆணையிட்டது.
சுவைத்து உண்கின்றோம். ஆனாலும் சுவைத்து வாழ்வதில்லை. மற்றவர்களிடமிருந்து ஆயிரம் ஆயிரம் எதிர் பார்க்கிறோம். ஆனால் மற்றவர்கள் நம்மிடம் எதிர் பார்ப்பதற்கு உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறோம். பசுவைக் காயவைத்துக் கறந்து வாழ்வோரும் உண்டு. அதுபோல அன்புப் பசுவைக் காயவைத்து வாழ முயல்வது வறண்ட பாலைவனத்தில் தளிரைத் தேடியது போலாகும்.
உடைமைகள் இல்லையேயென்று உடைமையற்றவர்கள் ஏங்குகிறார்கள். உடைமை உடையவர்கள், காப்பதற்கு ஆளில்லையே என்று கலங்குகிறார்கள். இஃது ஒரு விநோதமான வறுமை. அதனாலன்றோ இன்றையச் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத விழுக்காடு காவலுக்கென்று செலவழிக்கப் பெறுகிறது. எங்கும் எதிலும் அன்பு முத்திரைக்குப் பதில் காவல் முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. எந்தையும் தாயும் எழுந்தருளியுள்ள கோயிலே இன்று கண்காணிப்புக்கும் காவலுக்கும் ஆளாகியிருக்கிறது. எல்லா நாட்டு அரசுகளும் படைகளுக்கென்று ஒதுக்கும் பொருள்தொகை மனித குலத்தின் பஞ்சத்தை மாற்றவல்ல பெருந்தொகையாகும். ஒரு புறம் படைப் பெருக்கம். பிறிதொரு புறம் பஞ்சத்தின் வளர்ச்சி.
பொதுவாக இன்று, பஞ்சம் உடைமைகளுக்கு அன்று. அன்பு கலந்த உறவுக்கே பஞ்சம். உடைமை உணர்வு பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அஃது உறவுக்குப் பதில் பகையை வளர்த்து வருகிறது. தொன்மைக் காலத்தில், உடைமை, உரிமை, நடைமுறை, நிர்வாக நலன் கருதியே தோன்றிற்று. உடைமை யுரிமையுடையவர்களே அனுபவத்திற்கும் உரியவர்கள் என்பது பொருந்தாத நெறிமுறை. பெரும் பொருள் பெற்று வந்த பெருஞ்சித்திரனார். “ஏற்றுக உலையை ஆக்குக சோறே! என்னோடும் சூழாது எல்லார்க்கும் கொடுமதி மனைகிழவோயே!” என்று கூறினார். ஏன்? செந்தமிழ் உலகம் “செல்வத்தின் பயனே ஈதல்” என்றும், “தாமே துய்ப்பது அன்று” என்றும் முடிவு செய்தது.
எந்த உடைமை இருந்தாலும் அல்லது இல்லாது போனாலும் கவலையில்லை. மனிதன் மகிழ்ச்சியோடு வாழ முடியும். அவனுக்கு ஒன்றின்மீது மட்டும் உரிமையிருக்குமானால், அந்த ஒன்று எது? காணியா? இல்லை! காசுகளா? இல்லை! கடைகளா? இல்லை! ஆலைகளா? இல்லை! தொழிற்சாலைகளா? இல்லை! ஆடு மாடுகளா? இல்லை! பொன் மணிகளா? இல்லை! பின் என்னதான் அது? வேறொன்றுமில்லை. நமது உள்ளம்தான். உலகத்தையே உரிமை பெற்றிருந்தாலும், நமது உள்ளத்தினிடத்து நமக்கு உரிமையில்லாது போகுமானால் எந்த உரிமையும் நிலை நிற்காது. அதனாலன்றோ,
‘உள்ளம் உடைமை உடைமை’
என்றது வள்ளுவம். இந்த உலகத்திலேற்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும், இன்று நம்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும், மூலமும் முதலும் உள்ளமேயாகும். நிலத்தின் இயற்கையும் செயற்பாலதேயாம். அறிவுப் புலனும் ஆற்றலுக்குரியதே யாகும். ஏன்? கோயிலில் கடவுளும் மனிதனின் படைப்பேயாம். நமது உள்ளத்தில் நமக்கு முழு உரிமை இருக்குமானால் முடியாத தொன்றில்லை.
உள்ளமோ, விந்தையான பொருள். அது கைக்கு அகப்படுவதில்லை. விரைவில் பயணம் செய்கிறது; கடிதில் பற்றுகிறது; துன்பத்தை இன்பம் போலக் காட்டுகிறது. தனி உணர்வை வளர்க்கிறது. ஆயினும் உள்ளத்தைக் கெட்ட தென்று சொல்ல முடியாது. "நீ நாளும் நினையாய் நன்னெஞ்சே!” என்று திருஞானசம்பந்தரும் நெஞ்சைக் குறிப்பிடுகிறார். அதை முறையாகப் பழக்கப்படுத்தினால் நல்ல வேலை செய்யும்; கைக்கு அடக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் அதனிற் சிறந்த தோழமை இல்லை. ஆனால், அதை எஜமானன் ஆக்கினால் வந்தது கேடு.
உள்ளத்தை ஒரு பொழுதும் ஓயவிடக் கூடாது. அதற்கு ஒழுங்காக முறைவைத்து வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குரிய நல்ல வேலைகளைக் கொடுக்காது, உறங்க வைத்தால் அது உறங்குவதில்லை. ஊர் சுற்றப் புறப்பட்டுவிடும். உள்ளத்திற்கு நல்ல சிந்தனைகளையும், கருத்துக்களையும் உணவாகத் தர வேண்டும். அன்பினை நீராக வார்க்க வேண்டும். இனிய செயலினை, அதன் மூச்சாக ஆக்கவேண்டும். உயர்ந்த பக்தியினை, அதன் உயிர்த் துடிப்பாக ஆக்கவேண்டும். அப்பொழுது உள்ளம் செழித்து வளரும்; வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும். மனித சமுதாயம் அனைத்தும், உறவு கலந்து, உண்டு களித்து வாழும். எங்கும் இன்ப அன்பு மலர்ந்து மணம் பரப்பும்.
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”
596