குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4/வாழ்கைத் துணைநல வாழ்த்து
திருக்குறள், குடும்பத் தலைவியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று போற்றுகிறது. தலைவனுக்குத் தலைவி இல்லறத்துக்கு வாய்த்த துணை என்று வாளா கூறாமல் அதன் பயனாகவே “துணை நலம்” என்று சொல்லும் பாங்கை உய்த்தறிக.
கற்பு, நுண்ணிய நலமுடையது. அன்பின் ஆக்கம் கற்பு. மனம், வாக்கு, உடலைக் கடந்தது கற்பு. இத்தகு புனிதக் கற்பைச் சிறை காக்க இயலாது. தலைவனாலும் காத்தல் இயலாது. ஆதலால் ‘தற்காத்து’ என்றார். காமம் ஒரு பசி. பசி தீர்ந்துழியன்றி வேட்கை தீராது. கணவனின் கற்பினைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பும் தலைவியிடமே உள்ளது. ஆம்! தலைவனைப் பரத்தையின் வழிச் செல்லாமல் தடை செய்து காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைவியினுடையதேயாம்.
தலைவன்-கணவன் புகழ் பெரியது. அது வழிவழியாக ஈட்டப்பட்டதாகக் கூட அமையலாம். கணவன் பீடுநடை போட வேண்டுமானால், தலைவி-வாழ்க்கைத் துணை நலம் வளத்திற்குத் தக்க வாழ்வு அமைத்து ‘இல்லை’ என்ற சொல் இல்லாமல் செய்து, வருகின்ற விருந்தினை உபசரித்து அனுப்புவாளாயின் அவள்தம் குடும்ப நிர்வாகம், அன்பியல் தழுவிய வாழ்வியல் தலைவனுக்கு - கணவனுக்குப் பெருமையைத் தருகிறது. ஒரோவழி இழுக்கு வந்தாலும் அந்த இழுக்கு வழுக்கலாகிவிடாமல் தடுத்து மடை மாற்றி வாழ்வியலைச் செப்பம் செய்து உயர்த்துவதே வாழ்க்கைத் துணை நலம். திருநீலகண்டர் மனைவியும் கண்ணகியும் இதற்கு எடுத்துக்காட்டாவர்.
கண்ணகி தன் கணவனின் புகழை, தன் குடும்பப் புகழைக் காக்கவே பாண்டியனின் அரசவையில் போராடினாள். கணவனின் புகழைக் காத்தல் வேண்டும். குடும்பத் தலைமகள்-வாழ்க்கைத் துணைநலம் சோர்வற்றவளாகத் திகழ்தல் வேண்டும். வாழ்க்கைத் துணைநலமே இன்பத்திற்கு-அறத்தின் ஆக்கத்திற்கு, புகழுக்கு- அனைத்திற்கும் அடிப்படை.
‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’
56
என்பது திருக்குறள்,
நாற்றங்காலில் நாற்று வளரும்! பருவம் வந்தவுடன் பறித்துக் கழனியில் நடப்பெறும். அந்த நாற்று பயிராகக் கழனியில்தான் வளர வேண்டும். கதிர் ஈன வேண்டும். கழனி பிடிக்கவில்லை என்று, திரும்ப நாற்றங்காலுக்கும் நாற்றுப் பயிர் வர இயலுமா! அது போலத்தான் பெண்! பெண்ணுக்குப் பிறந்த வீடு நாற்றங்கால்! திருமணம் செய்து கொண்டு புகும் வீடு கழனி. அப்பரடிகளும் தேவாரத்தில் "அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை"; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என்றார். ஆதலால் நீ மனைவியாகச் செல்லும் வீடு, ஊர் இவற்றின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்! பழகிக்கொள்! நாம் இங்ஙனம் கூறுவது ஒத்துப்போவதுக்குரியது.
திருமணத்திற்குப் பிறகு இயல்பாகவே கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி பழக்கங்கள் மாறும்! இஃது இயற்கை! ஆம்! தம்முள் மாறி அன்பு காட்டுவதால் சுவை முதலியன கணவனுக்கு மனைவியைச் சார்ந்தும் மனைவிக்குக் கணவனைச் சார்ந்தும் ஏற்படுகின்றன. ஆதலால் கணவன் உவப்பனவற்றை உவந்து ஏற்றுக்கொள்! கணவனின் சுற்றத்தை உன் சுற்றமாக ஏற்றுக்கொள்! தமிழ் மரபில் சுற்றம் பேணல், குடி செயல் போன்ற அறங்கள் இல்லறத்தார் செய்ய வேண்டியவை. அந்த அறங்களை உன் கணவன் செய்வதற்குத் துணையாக இரு. குடும்பத்தின் சூழலில் அமைதி நிலவினால் தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தின் அமைதியைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறிவிடாதே!
அன்புள்ள செல்வி!
நீ, படித்த பெண். உனக்கு அதிகம் எழுத வேண்டுமா என்ன? நீ, கணவன் வீட்டுக்குப் போகும் பொழுது திருக்குறளை எடுத்துக் கொண்டு போ! அடிக்கடி திருக்குறளைப் படி! திருக்குறள் காட்டும் நெறியில் வளர்க! வாழ்க!
விருந்தோம்பல் என்பது உலகந் தழீஇய பண்பு. நமது நாட்டில் விருந்தோம்பல் பண்பைப் பாராட்டிப் புகழாத இலக்கியம் இல்லை. தொல்காப்பியம் முதல் திருஞானசம்பந்தர் தேவாரம் வரை விருந்தோம்பல் பண்பு பாராட்டப்படுகிறது. பெரியபுராணத்தில் விருந்தோம்பற் பண்பு போற்றப்படுகிறது.
விருந்தினர்கள் - புதியவர்கள்; முன்பின் அறிமுகம் ஆகாதவர்கள். இது மரபுவழிக் கருத்து. வீட்டிற்கு வரும் விருந்தினரை இனிய முகத்துடன் வரவேற்று உணவளித்து உபசரிக்க வேண்டும். உணவைவிட உபசரணை முக்கியம். உபசரணையின் தரம் குறைந்தால் விருந்தினர் வருந்துவர்; விருந்தினரை உபசரிப்பது ஒரு பண்புமட்டுமல்ல; கலையும் கூட; இல்லற வாழ்க்கையின் கடமை வரிசையில் விருந்தோம்பலும் இருக்கிறது.
செல்வி! நீ எப்போதும் விருந்தினரை வரவேற்று உபசரிக்க ஆயத்தமாக இரு! குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பண்டங்களைச் சேகரித்து வைத்துக்கொள்! கணவன் வீட்டிலிருக்கும் பொழுது விருந்தளிப்பது என்பது முறை. தவறுகள் நிகழாமல் தவிர்க்க இது அவசியம். கூடுமானவரையில் விருந்தினரை அழைப்பது, குறித்த நாளில் குறித்த நேரத்தில் வரும்படி அழைப்பது ஆகிய நற்பழக்கங்களை நீயும் பழகிக்கொள்; விருந்தினரையும் பழக்கு.
நமது நாட்டில் விருந்தினர் திடீரென்று வந்து விடுவர். கணவனும் வீட்டில் இல்லை. என்ன செய்வது? அறச்சங்கட மாகிவிடும். எனவே, ஒரு மாதத்தில் சில நாட்கள் விருந்தினர்களுடன் இருப்பது, கூடி உண்பது என்ற நல்ல பழக்கத்தை நடைமுறைப்படுத்தலாம். இஃது ஒரு நல்லமுறை. விருந்தோம்புதல் தலைமைப் பண்பு; தலையாய கடமை; விருந்தோம்பல் மூலம் சுற்றம் விரிவடையும்; மன அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியுடன் வாழலாம்! விருந்தோம்புக! விருந்தோம்புதலைக் கடமையாகக் கொள்க!
நீ, குடும்ப அடிப்படையிலும் சுற்றத்துச் சூழ்நிலையிலும் பலருடன் கூடி வாழும் நிலை உருவாகியிருக்கிறது. இங்ஙனம் கூடிவாழ்தல் ஒரு கலை; பண்பு; நாகரிகம். ஆயினும் கூடி வாழ்தல் எளிதான் ஒன்றன்று.
கூட்டு வாழ்க்கைக்கு முதற்பகை அழுக்காறு. “அழுக்காறு என ஒருபாவி” என்று திட்டித் தீர்ப்பார் திருவள்ளுவர். ஆம்! மற்றவர்களைப் பார்த்து அழுக்காறு கொள்ளாதே! மற்றவர்களுடைய அழகை நீயும் ஆராதிக்கக் கற்றுக்கொள்! மற்றவர்களுடைய திறமையைப் போற்றிப் பாராட்டி உன்திறமையை வளர்த்துக் கொள்க!
ஆசைப்படாதே! - இது என்ன துறவிக்கு உபதேசமா? இல்லை, இல்லை! இல்லறத்தில் வாழப்போகும் அருமைச் செல்விக்குத்தான் ஆலோசனை! ஆம்! மற்றவர்களிடம் இருப்பதற்காக நீயும் வேண்டும் என்று ஆசைப்படாதே! “தேவைகளின் பெருக்கமே வறுமை” என்று ஓர் அனுபவ வாக்கு உண்டு. ஆதலால், உனது குடும்ப வருவாய் அளவில் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பார்த்து, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து ஆசைப்படக் கூடாது. யாரையும் கோபித்துக் கொள்ளாதே! சினம் சேர்ந்தாரைக் கொல்லும்! வேண்டாம் சினம்! எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வேண்டாம்! கடுஞ்சொல் கழறுதல் தீது. கொடிய சொற்களைக் கூறாதே! இனிமையாகப் பேசக் கற்றுக்கொள்! இனிய சொற்களையே வழங்குக! இந்தப் பண்பியல்புகளை நீ பெற்று விளங்கினால் உன் இல்லறம் சிறக்கும். சுற்றத்தார் சுற்றமாகச் சூழ்வர். வாழ்க்கையில் அமைதி இருக்கும். மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும்!
நல்ல வண்ணம் இல்லறம் அமைய இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று, அன்பு; பிறிதொன்று, அறம். அன்புள்ள செல்வி! குடும்பத்தலைவி, அன்பின் பிரதிநிதி. குடும்பத்தலைவன் அறத்தின் பிரதிநிதி. அன்பு-பண்பு. அறம்-பயன்.
அன்புள்ள செல்வி! அன்பு, அர்ப்பணிப்புத் தன்மையுடையது. நெகிழ்ந்து கொடுப்பது; வாழ்வித்து வாழ்வது. அன்பு, ஒரு பண்பு. அறம், வாழ்க்கையின் இலட்சியம்; குறிக்கோள். அறம் செய்ய உடல் வலிமை தேவை; வண்மை தேவை; துணிவு தேவை. அறத்தில் நெகிழ்ந்து கொடுத்தல் இயலாது. அன்பு என்ற பண்பின் உறைவிடமாகக் குடும்பத் தலைவி விளங்கினால் குடும்பத்தில் இன்பச் சூழல் அமையும்; அமைதி நிலவும்; உண்பன கிடைக்கும்; ஊரவர் கேண்மையும் கிடைக்கும். அன்பு, குடும்பத்திற்கு உயிர். அறம் பலரையும் வாழ்விப்பது. ஈதல், அறம், அறநெறிபேணும் குடும்பத் தலைவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் அரனாவான். வாழ்க்கையின் பயனே அறம். இல்லற வாழ்க்கையையே அறம் என்பார் திருவள்ளுவர். “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்று திருக்குறள் இல்லற வாழ்க்கையைப் போற்றுகிறது. ஆயினும் அந்த இல்லறம் பிறர் பழிக்க இயலாதவாறு அமைதல் வேண்டும். அன்பின் பிரதிநிதியாக வாழ்ந்த கண்ணகி, காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலிய மாதரசிகளை முன்னுதாரணமாகக் கொள்க. ஆனால் இந்த மாதரசிகளின் வாழ்க்கையில் வாய்த்த கணவன்மார்கள் அறத்தின் பிரதிநிதிகளாக இருக்கத் தவறி விட்டார்கள். ஆயினும் பொறுத்தாற்றும் பண்புடன்-தத்தம் கணவன்மார்களை நெறிப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இளமை மீதூர எளியராகி-ஒழுக்கநெறி தவறிய திருநீலகண்டரை அவர்தம் மனைவி நெறிமுறைப்படுத்திய வரலாறு நுட்பமானது. மனைவியின் ஆணையை ஏற்றுக் கொண்டு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து இல்லறக் கடமைகளில் வழுவாமல் வாழ்ந்துள்ளார். ஆயினும் புணர்ச்சி இல்லை. இந்த அற்புறு புணர்ச்சியின்மை அயலவருக்குத் தெரியாது. சொற்காக்கும் கற்புடைப் பெண்ணுக்கு இது சான்று. செல்வி உன் இல்லறத்தைத் திட்ப நுட்பத்துடன் இயக்குக. செல்வி! நீ அன்பாக வாழ்! அன்பே ஆகுக! நின் வாழ்க்கைத் துணைவர் அறத்தோடு நிற்கத் தூண்டுக! துணை செய்க!
மங்கலமானது மனையறம். ஆம்! மனையறத்தின் சிறப்புக்கள் அனைத்தும் பொருந்திய மனைமாட்சியே மங்கலமாகும். அன்பு நிறைந்த மனைவி. வளமாக வாழச் செல்வம், செல்வச் செழிப்பின் நற்றாயாகிய அறிவு, செல்வச் செழிப்பின் செவிலியாகிய உழைப்பு, மங்கலத்தைச் சிறப்பிக்கும் விருந்தோம்பல், ஒப்புரவு அமைந்த வாழ்க்கை முறை அமையுமாயின் அந்த மனையறம் மாட்சிமைப்பட்டது தானே! மங்கலம் நிறைந்ததுதானே!
மங்கலமாகிய மனைமாட்சியின் பயன்-நன்கலம் நன் மக்கட் பேறு! செல்வி! மனையறம் சிறப்புடையதெனப் போற்றப்படுதலுக்கு முதற்காரணம் ஓருயிர்க்கு உய்தியளிக்கக் கூடிய இந்த வையக வாழ்க்கையை வழங்குவதனால்தான்! மனைவாழ்க்கையின் சிறந்த பயன் இன்பம் மட்டுமல்ல, மக்கட்பேறும் கூட!
செல்வி! உனக்குப் பிறக்கும் நன்மகனும், நன்மகளும் நாட்டுக்கு நலம் சேர்ப்பர். வாழ்க! உன் மனைமங்கலம்! வளர்க, நின் மக்கட் செல்வம்.
இல்லறம் அறம் எனப் போற்றப்படுகிறது. நமது நாட்டில் துறவறம் மிகச் சிறப்புடையதெனவும் போற்றப்படுகிறது. ஆனால் துறவறத்தினும் இல்லறமே கடினமானது; பொறுப்பு நிறைந்தது. எப்படி?
பெரும்பாலும் துறவியர் வாழ்க்கை தனிமனித நிலையிலானது; ஒரு ஆள் சைக்கிளில் போவது போன்றது. இல்லறம் இரண்டு பேரையும் அதற்கு மேலும் பலரையும் சார்ந்தது. இரண்டு பேர் சைக்கிளில் போவது போல் ஒருவர் சைக்கிளில் போவதில் விபத்து நடக்க வழியில்லை. அப்படியே விபத்து நடப்பினும் ஆபத்து குறைவு; துன்பம் குறைவு. ஆனால், இல்லறம் என்பது அப்படியல்ல. இரண்டு பேர் சைக்கிளில் சவாரி செய்வது போன்றது. ஓட்டுநர் கணவர். பின்னே உட்கார்ந்திருப்பவர் மனைவி. ஓட்டுநர் ஒழுங்காக ஓட்டாவிட்டாலும் விபத்து ஏற்படும். அல்லது பின்னே உட்கார்ந்திருப்பவர் சரியாக இல்லாமல் ஆடினாலும் விபத்து ஏற்பட்டுவிடும். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகளான பின் நபர் எண்ணிக்கை கூடும். ஆதலால் செல்வி, நிதானமாக இல்லறத்தை நடத்தக் கற்றுக்கொள். எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாமல் நடத்தக் கற்றுக்கொள்; கணவனையும் நெறிப்படுத்துக.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் கடன் கூடாது. “இரவில் வெறும் வயிற்றோடு கூடப் படுக்கலாம்; கடனோடு படுக்கக் கூடாது” என்பர். ஆதலால் குடும்ப வருவாய்க்குத் தக்கபடி குடும்பத்தை நடத்து. நீயும் சோம்பலாக இல்லாமல் பொருளீட்ட முயற்சி செய்ய வேண்டும். வீட்டுக் கொல்லையில் தோட்டம் அமைத்தல் நல்ல முயற்சி. நல்ல பச்சைக் காய்கறிகள் உண்ணக் கிடைக்கும். வீட்டு உபயோகம் போக மீதியை விற்றும் காசாக்கலாம். அடுத்து, வீட்டில் ஒரு பசு இருப்பது அழகு. திருமகள் நலம் வந்து சேரும். வீட்டில் எல்லாருக்கும் பூரண உணவாகிய பால் கிடைக்கும். எஞ்சியதை விற்றுக் காசாக்கலாம். தையல் முதலிய வீட்டுத் தொழில் செய்யலாம். இங்ஙனம் செய்து பொருள் ஈட்டுதல் வருவாய்க்குத் துணை செய்யும். பொழுதும் நல்ல வண்ணம் கழியும். சுறு சுறுப்பாக வாழலாம்.
‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’
56
என்ற திருக்குறளில் “தற்கொண்டாற் பேணி” என்ற தொடருக்குப் பரிமேலழகர், “கனவனை உண்டி, முதலியவற்றால் பேணல்” என்று கூறினார். நல்ல உணவு, உடல் நலத்திற்குத் தேவை. நல்ல உடல் நலம் குடும்ப வாழ்க்கைக்குத் தேவை. ஆதலால், சமவிகிதச் சத்துணவு குடும்பத்தில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அரிசிச் சோற்றைக் குறை! காய், கனி வகைகளை அதிகப்படுத்து! அளவுக்கு அதிகமாக வேக வைத்து உணவுப் பொருள்களின் சத்தை வீணாக்கிவிடக் கூடாது; அளவோடு வேக வைக்க வேண்டும். காரட் முதலியவற்றை வேக வைக்கக்கூடாது. பச்சையாகவே உண்ண வேண்டும். நெய்யை உருக்கியும் மோரைப் பெருக்கியும் பயன்படுத்த வேண்டும். உடலுக்குத் தேவையான உணவுகளை முதலில் பரிமாறவேண்டும். சுவையானவற்றைக் கடைசியில் பரிமாற வேண்டும். அன்றாட உணவில் பருப்பு, தான்யவகைகள் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோலவே, முருங்கைக் கீரை முருங்கைக்காய், கருணைக்கிழங்கு முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தூதுவளைக் கீரை எல்லா வகையிலும் உயர்ந்தது; சுண்டைவற்றல் எத்தனை ஆண்டானாலும் வறுத்தாலும் சத்துக் கெடாது. வாரத்திற்கு ஒரு நாளாவது சுண்டைவற்றல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நல்ல உணவு வழங்கும் அன்னபூரணியாக, அட்சய பாத்திரமாக வளர்க!
கூடுமான வரையில் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகக் கூடி உட்கார்ந்து உரையாடிக்கொண்டு உண்பது நல்ல பழக்கம். நம்மில் சிலர் உண்ணும் பொழுது பேசக் கூடாது என்பர். இது தவறு. “உண்ணும்பொழுது உரையாடா” திருப்பது மரபன்று; “காகம் போல் உறவு கலந்து உண்பதே” நமது மரபு. உரையாடலில்தான் உறவு வளரும். கூடி உண்ணும் பழக்கத்தைக் குடும்பத்தின் நடை முறையாக்குக.
நீங்கள் புது வீடு கட்டி அதில் குடியேறியிருக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி. ஆம்! பழங்காலத்தில் ஒவ்வொரு தலைமகனும் தானே பொருளீட்டி மகட்கொடை தந்து திருமணம் செய்து கொண்டான். இன்றோ தலைமகன் மணமகள் வீட்டாரிடம் கொடை எதிர்பார்க்கிறான். இது மரபும் அன்று, அறமும் அன்று. அதுமட்டுமா? ஒவ்வொரு குடும்பத்தினரும் அக்குடும்பத்தின் தலைவன் ஈட்டிய பொருளில் வீடு கட்டி வாழ்வர். அந்த வீட்டில் தாமே ஈட்டிச் சேகரித்த பொருள்களைக் கொண்டு சுவையாகச் சமைத்துத் தமது சுற்றத்தாருடன் கூடி உண்பர். இங்ஙனம் வாழ்கின்ற இன்பம் இல்லற இன்பம் மேலானது என்பது திருக்குறள் கருத்து.
‘தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.’
1107
என்பது குறள்.
தமிழர் மரபில் கூட்டுக் குடும்பம் கிடையாது. கூட்டுக் குடும்ப முறை அயல் வழக்கு. இளங்கோவடிகள் கோவலன் கண்ணகி தனிக்குடித்தனம் தொடங்கியதை மனையறம் படுத்த காதையில் விவரிக்கின்றார். இன்றும் பழந்தமிழ் நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு வாழும் நகரத்தார் சமூகத்தில் ‘வேறு வைத்தல்’ என்ற பெயரில் மகன்-மருமகளுக்குத் தனிக்குடும்பம் அமைத்தல் என்ற நிகழ்ச்சி முறை இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தில் வெற்றி காண்பவை மிகச் சில குடும்பங்களே! பல குடும்பங்கள் மன முறிவுகளுக்கு ஆளாகின்றன. வாழ்க்கையின் சுவை, நபர்கள் தோறும் மாறுபடும். வாழ்க்கையை அனுபவிக்கும் திறன்களும் முறைகளும் கூட மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். இந்த வித்தியாசத்தை ஒரு சில மூத்தோர்களே தாங்கிக் கொள்வர்; ஒருக்கால் தாங்க இயலாதது எனக் கருதின் இதமாக அறிவுறுத்தி நெறிப்படுத்துவர்! மிகப் பலர் உளப்பாங்கியல் அறியாவண்ணம் இடித்துரைத்துக் காயப்படுத்துவர்; இல்வாழ்க்கையைக் கசப்பாக்கி விடுவர். தலைமகன் பாடு திண்டாட்டம்! தாயின் பக்கமா? தாரத்தின் பக்கமா? இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து அமைதியான நல்வாழ்க்கைக்கு வழி கோலுவது தனிக்குடும்ப அமைவேயாம்.
அப்படியானால் குடும்பப் பரிவு பாசம் பாதிக்காதா? என்று கேட்கலாம். மாமன் மாமி உறவு பாதிப்புக்குள்ளாகாதா? என்று கேட்கலாம். ஒருக்காலும் பாதிப்புக்குள்ளாகாது. பிரிவு அன்பைத் தூண்டி வளர்க்கும். அன்பைச் செழுமையாக வளர்க்கப் பிரிவு துணை செய்வது போல வேறொன்றும் துணை செய்யாது. பிரிவு, பிரிந்தவர்களின் அருமைப் பாட்டினை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதனால்தான் போலும் களவியலில் கூடக் காதலுக்குப் பிறகு பிரிவு வைத்தனர். மாணிக்கவாசகர் இறைவனைக் கண்டு பின் பிரிந்ததால்தான் அன்பின் பிழிவாகிய திருவாசகம் கிடைத்தது. சின்னமனிதர்கள் அல்லது அற்ப மனிதர்கள்தான் பிரிவில் மறப்பர். இத்தகைய மனிதர்கள் ஒன்றாக இருந்தாலும் ஒருமை நலத்துடன் வாழ்வர். குடும்பத்தில் கோள் முதலியவற்றால் கலகம் விளைவிப்பர். வளர்ந்தவர்கள் பிரிவின் பொழுது அன்பினை வளர்த்துக் கொள்வதால் உணர்ச்சி கலந்த நட்புப் பாங்கு வளரும்.
செல்வி, அடிக்கடி மாமனார் மாமியார் வாழும் இல்லத்திற்குச் செல்! அவர்களுக்கு உவப்பான பண்டங் களை எடுத்துக் கொண்டுபோய் வழங்கு! நலம் கேள்! நலம் செய்! அன்பாகப் பேசு! மாதத்தில் சில நாள் உன் வீட்டுக்கு அழைத்து வா! நல்ல வண்ணம் உபசரணை செய்! அவர்கள் உவப்பன செய்! ஆல் போல் தழைத்துக் குடும்பம் வளரும்; உறவு வளரும்.
குடும்பத்தின் வளர்ச்சிப் படிகளில் ஏறும்பொழுதெல்லாம் அவர்களிடம் ஆலோசனை பெறத் தவறாதே! நல்ல நாள்களில் குடும்பத்துடன் வந்து மாமனார், மாமியாரை வணங்கி வாழ்த்துப் பெறவும் தவறாதே! நல்ல குடும்பப் பாங்குடன் நடந்து கொள்! வெற்றி பெறுவாய்.
மகிழ்ச்சியுடன் உன் மனையறம் சென்று கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. அதுசரி! குடும்ப வரவு-செலவு இருக்கிறது. குடும்பப் பொருளாதாரம் முக்கியமானது. அதனால் வரவு- செலவுத் திட்டமிட்டுக் குடும்பத்தை நடத்துகிறாயா! நமது நாட்டு அரசாங்கங்களைப் போலப் பற்றாக்குறை நிதி நிலையுடன் வாழ்கிறாயா? நாட்டின் அரசுகளுக்குப் பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் இருப்பது நல்லதல்ல. ஆயினும் தீமையாகாது. ஏன் எனில் பரந்துட்ட மக்கள் தொகையுடன் சம்பந்தப்பட்டது, அரசின் வரவு - செலவுத் திட்டம். ஆனால், குடும்பம் வரவுக்குத் தக்க செலவுதான் செய்ய வேண்டும். குடும்பப் பொருளாதாரத்திற்குப் பிறிதொருவரை, நெருங்கின சுற்றத்தாரைக்கூட, தந்தை, தாய், மாமன் மாமியாரைக் கூடச் சார்ந்து வாழ்தல் கூடாது. அதனால் திருவள்ளுவர், குடும்பத் தலைவியை “வளத்தக்காள் வாழ்க்கைத்துணை” என்றார். முன்பு ஒரு கடிதத்தில் இதுபற்றி எழுதியிருப்பதை மீண்டும் படி.
பொருள் நலம் பேணல் குறித்துத் திருவள்ளுவர் அருமையான நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார். தேவைக்கேற்பத் தாமேமுயன்று பொருள் ஈட்டுதல் நன்று. அஃது இயற்கையாகப் பலருக்கு இயலாத ஒன்று. ஆதலால் வருவாய் பெருகி வளரவில்லை யெனில் கவலைப்பட்டு என்னாவது? மற்றவர் கைப் பொருளை எதிர்பார்ப்பதும் கேட்பதும் இழிவானது மட்டுமல்ல. அவர்களுடைய சூழலையும் பாதிக்கும்! மிச்சம் மனத்துன்பமும் பகையும்தான்! எல்லா இடங்களிலுமே எல்லாருடைய வீடுகளிலுமே பொருளியல் சிக்கல் இருக்கும். நாம் மற்றவருக்குத் தொல்லை தரக்கூடாது. ஒரு சிலர் மற்றவர்களுடைய வேதனை புரியாமல் பணம் கேட்டுத் தொல்லைப்படுத்துவர். இது வாழும் இயல்பன்று. வருவாய் பெருகி வளரவில்லை யாயினும் செலவுத்துறை அகலாமல் இருந்தால் செல்வம் பெருகும்; வளரும்.
‘ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.’
478
என்பது திருக்குறள். ஆதலால் குடும்ப வரவு-செலவைத் திட்டமிட்டு இயக்கு. வரவுகளை வங்கியில் இட்டு வைத்து எடுத்துச் செலவு செய்! செலவு செய்யும் உணர்வுக்கு வங்கி ஒரு பாதுகாப்பு! கையிலிருந்து காசுகள் செலவாவதைவிட, வங்கியில் இயக்கும் செலவில் சிக்கனம் ஏற்படுகிறது. வங்கி, செலவைக் கண்காணிக்கும் உணர்வைத் தருகிறது. இது நமது அனுபவமும் கூட!
வரவுக்குள் செலவு செய்யத் திட்டமிடு! செலவுத் திட்டத்தில் முதற் செலவு என்ன தெரியுமா? எதிர்வரும் காலத்திற்குச் சேமித்தல்தான் முதற் செலவு! நம்மில் பலர், “வாழ்க்கையை நடத்தவே வரவு போதவில்லை. எங்ஙனம் சேமிப்பது?” என்பர். இது தவறு. உழைத்து ஈட்டும் காலத்தில் சேமிக்கத் தவறிவிட்டால் உழைக்க இயலாத காலத்தில் என்ன செய்வது? தவறான பொருளியல் நடை முறையினால் தான் குழந்தைகள் பெற்றோரையும், பின் பெற்றோர்கள் பிள்ளைகளையும் சார்ந்து வாழ்கிறார்கள். சார்ந்து வாழ்தல் சுதந்திரமற்றது; மதிப்பு இழந்தது. தன்மானத்திற்கு எதிரானது. குடும்பங்களில் இரண்டு மூன்று சேமிப்புக் கணக்குகள் தொடங்க வேண்டும். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு சேமிப்புக் கணக்கு அல்லது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பிரிமியம் கட்ட வேண்டும். அவர்கள் வளர வளர அந்தச் சேமிப்பும் வளர்ந்து அவர்கள் படிப்பு, திருமணம் முதலிய வற்றிற்குப் பயன்படும். அதுபோகக் குடும்பத்திற்கென ஒரு சேமிப்பு எப்படியும் வருவாயில் 10 விழுக்காட்டுக்குக் குறையாமல் 25 விழுக்காடு வரையில் சேமிக்க வேண்டும். இந்தச் சேமிப்புக்குப் பிறகு எஞ்சிய தொகையில்தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். வாழ்க்கைச் சடங்குகளைக் குறைந்த செலவில் நடத்த வேண்டும். சாமி கும்பிடுவதில் அதிகம் செலவழிக்கக் கூடாது. பொருட் செல்வம் போற்றுவார்கண் உண்டு, என்ற திருக்குறளை மறவற்க.
நீ, தாயாகப் போகும் செய்தி செவிக்கினிய செய்தி! தாய்மைப்பேறு தவம் செய்து பெறும் பேறு. “இறைவன் அடிக்கடி உலகத்திற்கு, தான் வர முடியாமையால் தாயைப் படைத்தான்!” என்று கூறுவர். தாய் அற்புதமான வியக்கத்தக்க படைப்பாளி! தாயின் கருப்பையே மானுடத்திற்கு வடிவம் தருகிறது; பொறி, புலன்களை வழங்குகிறது. கருவுற்ற எட்டாவது மாதத்திலிருந்தே குழந்தைக்குப் புலன்கள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இந்தக் காலம் தொட்டே தாய்க்கு நல்ல சிந்தனை தேவை. நல்ல நூல்களைப் படித்தல், படிக்கச் செய்து கேட்டல் முதலிய பழக்கங்கள் தேவை. ஒரு குழந்தை கருவுற்ற எட்டாவது மாதத்திலிருந்து அது பிறந்து எட்டு வயது வரையில் கவனத்துடன் பேணி வளர்த்தால்-அறிவு நலமும் அன்பு நலமும் கெழுமிய நிலையில் வளர்த்தால் அந்தக் குழந்தை சிறப்புற வளரும். இந்த உலகை வென்றெடுக்கும் குழந்தையாக விளங்கும்.
குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர்,
‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.’
61
என்றார். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவதுடன் பண்பாட்டுடன் பழக்கி வளர்க்க வேண்டும். எந்த அவைக்குச் சென்றாலும் முதலில் இருக்கும் நிலைக்குரிய தகுதியுடன் குழந்தையை வளர்க்க வேண்டும். நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரைப் பல்கலைக் கழகம் தர இயலாது. நம்முடைய குழந்தைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு, அளவு கோலாகக் கொண்டு நாடு வழங்குவதாகும்! ஆதலால், செல்வி! உங்களுக்குப் பிறக்கும் குழந்தையை நன்றாக வளர்த்துப் புகழுக்குரியவராக்குக! குழந்தை பிறந்தவுடன் எழுது. வாழ்த்துக்களும் விளையாட்டுப் பொறிகளும் அனுப்பி வைக்கின்றோம். உங்கள் குடி விளங்க வரும் மக்களுக்கு வரவேற்பு! வாழ்த்துக்கள்.
தி.iv.20