குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்
20
சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் பற்றி ஒரு சிந்தனை! நமது சமுதாய மறுமலர்ச்சி பற்றி எத்தனையோ தடவை சிந்தனை செய்தாகி விட்டது. உலக மொழிகளில் உள்ள சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் பல. இவ்வளவு சமுதாய மறுமலர்ச்சி எண்ணப் போக்குகள் தோன்றிய பிறகும் ஏன் சமுதாய மறுமலர்ச்சி தோன்றவில்லை?
சமுதாயத்தல் மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடாத வண்ணம் பிற்போக்காளர்கள் தடை செய்து வருகின்றனர். ஆயினும், கதிரவனைக் கையது கொண்டு பொத்தி மறைக்க முடியுமா? அதுபோலச் சமுதாயத்தையும் அதனுடைய முற்போக்குத் திசையிலிருந்து திருப்ப இயலாது; முடியாது! சமுதாயம் மெள்ளத்தான் நகரும்! நகரும் என்பது உறுதி!
சமுதாய மறுமலர்ச்சி என்பது என்ன? இன்று சமுதாய அமைப்பு, கால்கொண்டிருக்கிறதா? காடுகளில் மரங்கள் வளர்ந்து அடர்த்தியாக இருக்கும். ஆனால், மரங்கள் ஒழுங்குபட அமைந்திருக்கா. தான்தோன்றித் தனமாக - தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் மரங்களுக்கிடையில் ஆரோக்கியமில்லாத போட்டி இருக்கும்!
வல்லாண்மை மிக்க தாவரங்கள், வல்லாண்மையில்லாத தாவரங்களை அழித்து வாழும். "வல்லாண்மையே வாழும் என்ற நியதி தாவரங்களுக்கும் உண்டு! இன்றைய சமுதாயம் காடு போலத்தான் விளங்குகின்றது! பழத் தோட்டம் போல் அல்ல!
வைத்த பழத்தோட்டத்தில் ஒழுங்கு இருக்கும்! எல்லாம் வாழும்! அழிப்பு இல்லை! பழத்தோட்டம் போன்ற சமுதாய அமைப்பே, மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளின் நோக்கம்!
மானிட சமுதாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! மானிட சாதியின் வரலாறு, வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டேயிருக்கிறது! இனிமேலும் ஓடும்!
இந்த வரலாற்று ஆற்றில் அருமையான தெள்ளிய நீரும், சில சமயங்களில் செங்குருதியும், சில சமயங்களில் சாக்கடையும் ஒடும்! ஏன்? சில சமயங்களில் ஓடும் சாக்கடையில் குப்பையும் கூளங்களும் சேரும்பொழுது ஓட முடியாமல் தேங்கி நிற்பதும் உண்டு! இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வரலாற்றை, அதன் தேக்கத் தன்மை அறிந்து மாற்றி இயக்குவதை "மறுமலர்ச்சி" என்று வரலாற்றாசிரியர்கள் புகழ்வர்.
மானிட சமுதாயம் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் கட்டுப்படும் இயல்பினது. அதன் காரணமாக ஒருகட்டத்தில் திரும்பத் திரும்பச் சுற்றுவது தேக்கம். இத்தேக்கத்தை உடைத்து மானிடம் சுற்றும் வட்டத்தை விரிவாக்குவது மறுமலர்ச்சி இலக்கியத்தின் தன்மை!
வளைவுகள், வட்டங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி உடைக்கத் துண்டுவது புரட்சித் தன்மை வாய்ந்த இலக்கியம்! வெறும் அப்பட்டமான ரசனை, காம விகாரங்கள் உள்ள இலக்கியங்கள் படிக்கத்தக்கன அல்ல. அது போலவே, இருக்கும் நிலைமைகளை - அவலங்களை நினைந்து அழுது புலம்பி ஓய்வனவும் படிக்கத்தக்க இலக்கியங்கள் அல்ல. மானுடத்தை உறக்கத்தினின்று எழுப்பி முன்னேற்றத் திசையில் உசுப்பிவிடுவனவே மறுமலர்ச்சி இலக்கியங்கள்!
பழைமையை வெறுத்துப் புதுமையை நாடும் உணர்வு மானிடத்திற்கு இயல்பாகவே உண்டு! இந்தப் புதுமையை நாடும் வேட்கையினால்தான் மானிடன் தனது உணவில், உடையில், வழிபாட்டில் புதியன பலவற்றைக் கண்டிருக்கின்றான்!
யுகந்தோறும் கடவுளைக்கூட மாற்றும் மனப் போக்குடையவன் மானிடன்! ஆனால், கடவுளை மாற்ற அவனால் முடியவில்லை! அதனால், பெயர்களையும் உருவங்களையும் மாற்றிக் கொண்டான்! ஆதலால், மறுமலர்ச்சி இலக்கியங்களுக்கு வயது இல்லை! சங்க காலத்திலேயே மறுமலர்ச்சி வேகம் வந்துவிட்டது!
"ஒரில் நெய்தல் கறங்க ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்!
இன்னா தம்ம இவ் வுலகம்!
இனியகாண்க, இதன் இயல்புணர்ந்தோரே!"
(புறம் - 194)
என்ற சங்ககாலப் பாடலும்,
"......................மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
(புறம் - 192)
என்ற பாடலும் சங்ககாலத்தில் மறுமலர்ச்சிக்கு துணையாய்
அமைந்த பாடல்கள்! முடியரசுகள் செல்வாக்காக இருந்த நூற்றாண்டில், அரசனது ஆணை தெய்வீக ஆணை என்றிருந்த காலத்தில் அப்பரடிகள் அரசனின் ஆணையை எதிர்த்து முழங்கினார்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடிஇணையே குறுகினோமே!”
(ஆறாம் திருமுறை 90)
என்ற பாடல், முடியாட்சியை எதிர்த்து குடியாட்சிக்கு வரவேற்புக் கூறிய பாடல் அன்றோ? திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும்!
இந்த நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு தமது படைப்புக்கள் மூலம் உயிரளித்து வருபவர்களில் முன்னோடியாக விளங்குபவர் கவிஞர், எழுத்தாளர் குலோத்துங்கன் ஆவார். அறிவியல் மேதை வா. செ. குழந்தைசாமியின் புனைபெயர்தான் குலோத்துங்கன் என்பது. நமது வாழ்க்கையில் மிகவும் அருமையாக - உயர்வானதாகக் காக்கப்பெற வேண்டியது, காலம்! இன்று, நம் மக்களிடத்தில் காலத்தின் அருமைப்பாடு உணரப் பெறவில்லை! இன்று நம்நாட்டில் மலிவாகச் செலவழிக்கப்படுவது - களவாடல் செய்யப்படுவது காலமேயாம்! கவிஞர் குலோத்துங்கனின், காலத்தின் அருமையை உணர்த்தும் கவிதை அருமையானது. இந்தக் காலத்தில் வாழும் நாள்கள் சில. இந்தச் சிறிய கால எல்லைக்குள் அறிந்துணர வேண்டிய உண்மைகள் பல உள்ளன. சலிப்பின்றி உழைக்கின்ற வேளையில் வயிறு உணவு கேட்டுத் தொந்தரவு செய்கிறதாம்! வயிற்றுக்கு உணவு தேடுவதா என் தொழில்? குலோத்துங்கன் கவிதையைக் கேளுங்கள்!
"கால மோவிரை கின்ற தோர்சிறு
கணமும் மீளுமோ? ஏழை இப்பெரும்
ஞாலம் மீதுறை நாட்க ளோ, சில!
நான் தெளிந்திட வேண்டும் உண்மைகள்
சால வுள்ளன!ஒய்வ றிந்திலன்
சலிப்பி றந்துழைக் கின்ற வேளையில்
ஒலம் இட்டெனை உணவு தேடென
உரற்று வாய்வயி றே!இஃ தென்தொழில்?”
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 30)
காலத்தைக் காத்துப் பயன்படுத்துவோம்! வாரீர்! காலத்தை முறையாகப் பயன்படுத்துவோர் வாழும்
நாடு வளரும்!
மறுமலர்ச்சி என்பது புதியன வேட்டல்! பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் குறிசொல்லும் கோணங்கி! பாரதி மறுமலர்ச்சிக் கவிதையில் முடிசூடா மன்னன்! ஏன் அவன் தன் வட்டங்களையும் கூடத் தாக்கியவன்! புரட்சிச் சிந்தனையாளன்! பாரதி, புதிய கோணங்கியாக நின்று, நமது நாட்டின் மறுமலர்ச்சிக்குக் கட்டியம் கூறி வரவேற்கின்றான்!
மறுமலர்ச்சிக்கு முதல் தேவை படிப்பு. அதனால், "படிப்பு வளருது! பாவம் தொலையுது!" என்று பாடினான் பாரதி. ஆனால், கடந்தகால வரலாற்றில் படித்தவர்களில் ஒரு சிலராலேயே மறுமலர்ச்சி இயக்கம் பயன்பெற்றது.
பலர் மானிடத்தின் வட்டத்தைச் சுருக்கிவிட்டனர்! தந்திரமாகச் சாதி, ஊழ் முதலியனவற்றைப் படைத்து, வளரும் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்து விட்டனர். இவர்கள் மெத்தப்படித்தவர்கள்; சாத்திரங்கள் செய்து சதி செய்தவர்கள்! ஆதலால், கவிஞன் பாரதி, புதிய கோணங்கியில்,
"படிப்பு வளருது, பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான் ஐயோவென்று போவான்!"
(பாரதியார் கவிதைகள் பக். 221 புதிய கோணங்கி)
படித்தவர்களை மக்கள் நம்புகின்றனர். ஆதலால், படித்தவர்கள் சூது பண்ணக்கூடாது. சென்ற காலத்திலும் சரி, இன்றும் சரி படித்தவர்களில் பலர் - சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டு தான் வருகின்றனர்! என்று இந்தச் சூது ஒழியும்!
கல்வி என்பது ஆன்மாவில் ஏற்றப்படும் ஒரு ஒளி!அணையாது ஒளிவிடும் ஒளி! கல்வி, மனிதனின் பொறி, புலன்களுக்கு அர்த்தம் கற்பிப்பது; படைப்பாற்றலை வழங்குவது; அறிவியல் ஆளுமையை வழங்கி, மனிதனை முழுமைப்படுத்துவது; மானிடம் வெற்றி பெறத் துணையாய் அமைவது.
இன்றைய கல்வி இப்படியா இருக்கிறது? மூளையில் செய்திகளைத் திணிக்கிறார்கள். வினை - விடைகளாக உருப்போட வைக்கிறார்கள்; நினைவாற்றலைச் சோதிக் கிறார்கள். மதிப்பெண் வழங்குவதிலும் "தர்மம்" புகுந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும், ஆளுமையும் இம்மியும் இல்லை! ஆதலால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் சான்றிதழ்களைத் தூக்கிக் கொண்டு "வேலையோ வேலை" என்று அலைகின்றார்கள். . .
இதற்காகவா பட்டம் என்று, கவிஞர் குலோத்துங்கன் கேட்கின்றார். "பட்டம் என்பது வருந்தப் பாடுபடாமல் உண்பதற்குரிய உரிமமா?” என்று கேட்கின்றார். ஏன்? எதனால்? என்று ஆழ்ந்துணரும் இயல்பாவது இருக்கிறதா? அதுவும் இல்லை."தினை தின்ற கோழி தினையாகக் கழியும்" என்ற பழமொழியைப் போலக் கற்றதை ஒப்புவித்தல்! அவ்வளவு தான் இன்றைய படிப்பு!
"பட்டமெலாம் மெய்வருந்திப் பாடுபடா
வாழ்வுக்குப் பாதை காணும்
திட்டமென முடிந்ததுவே! தெளிவில்லேன்
ஆழ்ந்துணரும் திறமை காணேன்!”
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 26)
என்பது கவிஞர் குலோத்துங்கனின் கவிதை.
கல்வி என்னென்ன தரவேண்டும்? கல்வி பெருமையைத் தரவேண்டும்! புகழைத் தரவேண்டும்! நாளைய வாழ்க்கையை நல்வாழ்க்கையாக அமைக்க வேண்டும். இத்தகைய கல்வி அறிவாண்மையைத் தரும். ஆய்வு படைவீடு அமைக்கப் பெறுதல் வேண்டும் என்பது கவிஞர் குலோத்துங்கனின் ஆசை. இதோ பாடல்,
"பெருமையும் புகழும் நாளைப்
பெற்றியும் உயர்ந்த கல்வி
தரும்எனத் தெளிவோம் ஆய்வுச்
சாலைநம் படைவீ டென்போம்"
(குலோத்துங்கன் கவிதைகள் 80)
இந்தக் கவிதை என்று நடைமுறையாகும்? நமது மக்களும் அரசும் ஆசிரியப் பெருமக்ளும் இந்தக் கவிதையை உணர்ந்து நல்ல ஆளுமைத் தன்மையுடைய கல்வியை வழங்க முன்வருதல் வேண்டும். இது தவிர்க்க இயலாத அவசர அவசியக் கடமையாகும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்தல் வேறு! பிழைத்தல் வேறு. "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்ற திருவாசகத்தின் நுண்பொருள் தெளிக! "சீச்சி நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்ற பாரதியின் திட்டுதலையும் நினைவிற் கொள்க! ஆதலால் வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கை அக நிலையிலும் புறநிலையிலும் ஓயாது போராடும் தன்மையுடையதாக நிகழின், வாழ்வு செம்மையாக அமையும்!
"எந்தப் பொருளுக்கும் அழிவு உண்டு. எவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகளைக் கண்டு பயப்படக் கூடாது.
பிரச்சனைகளைக் கண்டு பயந்தால், அந்தப் பிரச்சனைகள் நம் தோளின்மீது ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை ஏவல் கொள்ளும்! நாம் அந்தப் பிரச்சனைகளைப் பிடித்து அமுக்கி நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் பிரச்சனைகள் தீரும்; வாழ்க்கையும் இயங்கும். இத்தகைய வாழ்க்கைப் பிரச்சனையைச் சந்திக்கத் தெரியாத ஒருவனின் அவலம் பற்றி, தொ. மு. சி. ரகுநாதனின் "பஞ்சும் பசியும்” நாவல் விவரிக்கிறது.
வாழ்க்கைப் பிரச்சனைகள் தன்னை நாலாபுறத்திலும் சூழ்ந்துகொண்டு பயமுறுத்துவதுபோல், அவனுக்குத் தோன்றியது. அடிவானத்தில் மின்னிய மின்னலைப் பார்க்கக் கூசும் கண்களைப் போல் அந்த பிரச்சனைகளை ஏறிட்டுப் பார்க்கவே அவன் மனம் கூசியது. ஏறிட்டுப் பார்க்காவிட்டாலோ பாரம் தாங்க முடியாத இருள் மண்டலம் தன்மீது விழுந்து தன்னை அமுக்குவது போல் அவனுக்குத் தோன்றியது” என்று விவரிக்கிறது.(பஞ்சும் பசியும் பக். 195)
ஏன் இந்த அவலம்? பிரச்சனைகள் நம்மைவிட ஆற்றல் வாய்ந்தவை அல்ல! பிரச்சனைகளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!
பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையில் நின்று, நீந்திக் கரையேறி, வெற்றி வாகை சூடவேண்டும். இப்படிக் கரையேறினால்தான் "மானிடப் பிறவி உயர்ந்தது என்ற சித்தாந்தத்திற்குப் பொருள் கிடைக்கும் என்று கன்னட இலக்கியங்கள் வழி நடத்துகின்றன.ஆம்! நாளும் வாழ்க்கை தளிர்த்தல் வேண்டும்! வாழ்க்கை பட்ட மரம் போலானால் என்ன பயன்? நாளும் வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டும்! வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் வேண்டும்! நாளும் வளராத வாழ்வும் -ஒரு வாழ்வா? இது கவிஞர் குலோத்துங்கனின் வினா!
"வாழப் பிறந்தவர்கள் சாகக் கூடாது! செத்துக் கொண்டே நடைப்பினங்களாக வாழ்வதில் பயனில்லை! வாழ்க்கை ஒரு போர்க்களம்! நன்றே நடக்கும் போர்க்களம்!” - இது, தொ. மு. சி. ரகுநாதன் தந்துள்ள பஞ்சும் பசியும் புதினத்தின் ஊக்க உரைகளாகும்.
இந்த நூற்றாண்டில் அறிவுப் புரட்சிபற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அறிவுப் புரட்சி ஏற்பட்டால் மட்டும் போதாதென்பது உண்மையாகி வருகிறது.
உயிர்க்குலம் அனைத்துக்குமே அறிவு உண்டு. விலங்குகள், தாவரங்கள் ஆகியவைகளுக்கும் அறிவு உண்டு. இவைகளுக்கும் மனித குலத்துக்குமிடையே அறிவில் இடைவெளி கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனாலும் மானிடன் தான் பெற்ற கூடுதல் அறிவைக் கொண்டு அப்படியொன்றும் பிரமாதமாகச் சாதித்து விடவில்லை. மாறாகத் தீங்கைத்தான் செய்து வருகிறான்.
இந்த அறிவியல் அளவுக்குச் சான்றோர்களும் மாமேதைகளும் விதி விலக்காவர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தகுதி வேறுபாட்டை அறிவினால் மட்டும் நிர்ணயித்தல் கூடாது.
மனிதன் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும், செயல் முறைகளும் மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும். இந்த அளவைக்கு ஈடுகொடுக்கும் மாந்தர் எங்குளர்? யார் அவர்? பஞ்சும் பசியும் ஆசிரியர் தொ.மு.சி. ரகுநாதன், அறிவுப் புரட்சி பற்றி விவரிக்கிறார் கேளுங்கள்.அறிவுப் புரட்சி, அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்கிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா? இப்போது என்னை எடுத்துக் கொள், எனக்கு இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால், என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா?
சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய் விட முடியுமா? அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றி பெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லா விட்டால் ஒன்றும் நடக்காது என்று ஓர் உரையாடலில் கூறுகிறார். இது நமது கவனத்திற்குரியது.
அறிவு, உணர்வைத்தான் தரமுடியும். ஆனால், வாழ்வியல் நடைமுறைதான் வெற்றியைத் தரமுடியும். கொள்கையும் நடைமுறையும், சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் காரியங்கள் நிறைவேறும்! துன்பம் அகலும், இன்பம் வந்தடையும்! அறிவை, உணர்வை நடைமுறைக்குக்கொண்டு வரும்பொழுது மானிடத்திற்கு உழைப்பு அறிமுகமாகிறது.
ஆம்! உலகத்தை இயற்றும் உன்னதமான ஆற்றல் உழைப்பிற்கு உண்டு. உழைப்புக்கு ஈடாக உலகத்தில் பிறிதொன்றில்லை! உழைப்பே உலக வரலாற்றில் உயிர்ப்பு! "கைவருந்தி உழைப்பவர் தெய்வம்" என்றான் பாரதி! எங்கே உழைப்பிருக்கிறதோ, அங்கே மனத்திற்கு ஊசலாட்ட மில்லை!
உழைப்புள்ள இடத்தில் மனம் தூய்மையாக இருக்கும். உழைப்பாளர் மனம், இறைவனின் சந்நிதியாகும். உழைப்பாளிகள் வாழ்வர்; வாழ்வித்து வாழ்வர், உழைப்பாளிகள் யாரொருவருக்கும் தீங்கு செய்யார். இக்கருத்துக்களை அழகுற விளக்கும் பாடல் ஒன்று இதோ:
"உழைக்கின்ற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது"
உழைக்கும் உள்ளம் பெற்ற ஒருவன் தனக்கு வாய்த்திருக்கிற கருவிகள், களங்கள், வசதிகள் ஆகியவை பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்! "பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்ற வள்ளுவம், இவன் வாழ்க்கையின் விளக்கம். ஏன், உடலில் ஊனம் இருந்தால் கூட அவன் அஞ்சுவதில்லை. திடமான மனத்துடன் திறமை சான்ற உழைப்பைச் சாதனமாகக் கொண்டு உலகில் வெற்றி பெறுகின்றான்.
ஜெயகாந்தனின் "நான் இருக்கிறேன்” என்ற சிறு கதையில் சில வரிகள் இந்த உணர்வுகளை நமக்கு ஊட்டுகின்றன.
"காலு இல்லாட்டிப் போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே! வாழறதுக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும்! அறிவு வேண்டும்! மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும், சிங்கத்தைக் காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப் போயிருக்கும் காலு இல்லாட்டி அது இல்லாத கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா காலு இருக்கிறவங்களைக் காட்டிலும் நீ வேகமா ஓடிட மாட்டியா?” என்று வியாதிக்காரன் மூலம் நொண்டியை ஊக்கப்படுத்தும் ஜெயகாந்தனின் அறிவுரை கொள்ளத்தக்கது.
ஆம்! உடலில் ஊனம் என்பது வாழ்க்கையைக் கெடுக்கக் கூடியதன்று! ஆனால், உடலில் ஊனம் என்ற நினைப்பு இருக்கிறதே, அது ஆளை அரித்து கொன்று விடும்! உடல் ஊனங்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும். மீண்டும் ஜெயகாந்தனின் "நான் இருக்கிறேன்" என்ற சிறுகதையின் வரிகளைக் கேளுங்கள்.
"இந்தாய்யா, நீ சாகப்படாது..... சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஷ்டப்படறே. மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே!" என்பவை அந்த வரிகள்!
மனித உலகம் சிந்திக்கத் தொடங்கிய காலந்தொட்டு உழைப்பு, உழைப்பின் உயர்வு பற்றி ஆயிரம் பேசப்பட்டுள்ளது. "உழைத்தால் உயரலாம்” என்று பல்லவி, அனு பல்லவியாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லி வந்திருக்கிறார்கள்!
ஆனால், உழைத்தவர்கள் முன்னேறியிருக்கிறார்களா? கழனியில் உழும் உழவன், உழைப்பாளி! அவன் நியாய விலைக் கடைக்கு அரிசி வாங்கப் போகாமல் இருக்கிறானா? இலவச அரிசி வாங்காமல் இருக்கின்றானா?
மாடுகள் வளர்த்துப் பாலினைக் கறந்து உலகுக்கு வழங்கும் தொழிலாளியின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பால் அறிமுகம் உண்டா? "கொக்குபோல் பால்” என்ற கதையை கேட்டிருப்பீர்கள்! அதுபோலத்தான் அவன் பிள்ளைகளின் நிலை!
நில உலகம் முழுதும் ஓங்கி உயர்ந்திருக்கும் மாளிகை களைக் கட்டித் தந்த கொத்தனார்களுக்கு வீடு உண்டா? ஏன் இந்த அவலம்!
அறிஞர் அண்ணா, இந்தத் துன்பம் நிறைந்த உழைப்பாளிகளின் வரலாற்றை "செவ்வாழை" என்ற கதையில் விளக்கும் பாங்கு, நினைக்கத்தக்கது! உணரத் தக்கது! இதயமிருந்தால் இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைவீர்!
இதோ, அண்ணாவின் படைப்பு! "செவ்வாழை"யின் ஒரு பகுதி:
"நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!" -என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும் அவன் மனக் கண்களுக்குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான்.
'அப்பா, குலையை வெட்டப் போறாரு - செவ்வாழைக் குலை' - என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்! உள்ளே கொண்டு வந்தான்! அரிவாளைக் கீழே போட்டான்!
"குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்” என்று குதித்தன குழந்தைகள்! கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். "கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன் - அழாதீங்க - இன்னும் ஒரு மாசத்திலே பக்கத்துக் கண்ணு மரமாகி குலைத் தள்ளும், அதை உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்துவிடறேன்” என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்."
இந்தப் பகுதி நம் உள்ளத்தை உருக்குகிறதல்லவா?
உழைப்பு - வேலை, அதாவது உழைக்கும் ஆற்றலைக் கருவியாகக் கொண்டு செய்யப்படுவது வேலை! உழைப்பின் ஆக்கமே வேலை!
இந்த நிலவுலகில் உழைத்து உண்ணவேண்டும் என்ற ஆர்வலர்களுக்கு எங்கும் வேலையுண்டு! அவர்களே தங்களுக்குரிய வேலையை உருவாக்கிக் கொள்வர். தாமே வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்கள், தகுதி மிகுதியும் உடையவர்கள்! உழைப்பால் மட்டுமே அவர்கள் வாழ விரும்புவார்கள்!
இத்தகைய ஆர்வம் இன்று பலரிடம் இல்லை! இன்று வேலை தேடுகிறார்கள்! வருகைப் பதிவேட்டோடும் ஊதியத்தோடும் தொடர்புடைய வேலையையே விரும்புகிறார்கள்! இவர்களுக்குக் கடின உழைப்பில் நாட்டமில்லை; இத்தகையோர் வேலை தேடு படலத்தில் ஈடுபடுகின்றனர்; உண்மையாக அல்ல - ஒப்புக்காகவே!
சிறுகதை ஆசிரியர் வல்லிக் கண்ணனின் "வாழ விரும்பியவன்" என்ற படைப்பில் ஒரு பகுதி.
"அவர்களுக்கு 'வேலை' என்று எதுவுமில்லை. தேடி வந்து சேராத - எங்கே எப்படிக் கிடைக்கும் என்றே தெரியாத - ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருப்பதாகத்தான் பாஸ்கரனும் அவனைப் போன்ற நண்பர்களும் சொல்லித் திரிந்தார்கள்” என்று வேலை தேடுவோரின் நிலையை சித்திரித்துக் காட்டுகின்றார் வல்லிக்கண்ணன்.
இத்தகையோரால் நாடு வளருமா? நாட்டு அரசுகள் வேலை வாய்ப்பை உண்டாக்குவதற்கு தமது திட்டங்களில் முன்னுரிமை தந்து வழங்கவேண்டும். அதே நேரத்தில், இளைஞர்களும் காத்துக் கொண்டு இராமல் சுயவேலை வாய்ப்புக்களில் ஈடுபட வேண்டும். முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்பு இருந்தால் இன்று எதையும் செய்யலாம். அவ்வளவு வாயில்கள் இன்று அமைந்துள்ளன.
"வாழ்க்கை சிறப்புற அமைய, போர்க்குணம் தேவை" என்றான் மாமேதை லெனின், அறியாமை, வறுமை, ஏழ்மை இவற்றை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் வேண்டும். போர்க்குணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கை. தொ.மு.சி. ரகுநாதன் தமது 'பஞ்சும் பசியும்' நாவலில்,
"போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!”
என்று, முழங்குவதைக் கேளுங்கள்!
ஒரு சமுதாயத்தில் எவை எவை மதிக்கப்படுகின்றனவோ, அவற்றைப் பொறுத்தே அந்தச் சமுதாயத்தின் நடைமுறை அமையும்; வரலாறு நிகழும்!
பொதுவாக, மனித மதிப்பீடு - "நீதி சார்ந்த மதிப்பீடு!"
"ஒழுக்கச் சார்பான மதிப்பீடு!", "பண மதிப்பீடு!" என்றெல்லாம் அமையும்.இன்று, நமது நாட்டை வருத்துவதெல்லாம் பண மதிப்பீட்டுச் சமுதாயமேயாகும். எங்குப் பார்த்தாலும் பணத்திற்கே மதிப்பு! கல்விக் கோயிலா? அங்கும் பணம் தான்! கடவுள் சந்நிதியா? ஐயய்யோ, சொல்லவே வேண்டாம்! அங்கும் பணத்திற்கே கொள்ளை மதிப்பீடு!
கணவன் மனைவி உறவா? அங்கும் ஊடே பணமே விளையாடுகிறது! இந்தப் பண மதிப்பீட்டுச் சமுதாயம் அன்பைக் கெடுக்கிறது; உறவைக் கெடுக்கிறது; வாணிகப் புத்தியை வளர்க்கிறது; இலாப வேட்டையை நடத்துகிறது. இன்று நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ள கையூட்டு, பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் விளைவேயாகும்.
"எப்பாடு பட்டேனும் பணத்தைச் சம்பாதித்துவிடு! அதற்கு அப்புறம் நீ, நீயேதான்” என்கிறது இந்தப் பண மதிப்பீட்டு சமுதாயம்! இப்படிப்பட்ட சமுதாய வளர்ச்சியில் மனித நேயம் மறக்கப்பட்டு வருகிறது.
பணம் இல்லையானால் இன்று சராசரி வாழ்க்கை கூட வாழ இயலாது. பணம் படைத்தவர்கள் வாழும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பார்த்துப் பலர், அத்தகைய வாழ்க்கையை விரும்புகின்றனர். அவர்களைப் போலவே, தாமும் வாழ ஆசைப்படுகின்றனர்.
அதன் காரணமாக ஜோதிடரை நாடுகின்றனர்; குறி சொல்லுபவனை நாடுகின்றனர்; பரிசுச் சீட்டை நாடு கின்றனர். ஆயினும் முன்னேற்றமில்லை! நேரத்தைக் கழித்ததே மிச்சம்; இதனால், இனம் தெரியாத விலங்கியல் வாழ்க்கை கால்கொள்கிறது. இதோ, முற்போக்குச் சிந்தனையாளர் வல்லிக்கண்ணனின் படைப்பில் ஒரு பகுதி:
"பணமே முக்கியம். பணத்துக்கே மதிப்பு அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட சமுதாய அமைப்பில், ஆசையும் அரிப்பும் பெற்றுள்ள அனைவரும் பணம் தேடுவதிலும், மேலும் மேலும் தேடிக் குவிப்பதிலும் தீவிர வேகம் காட்டுவது இயல்பாகி விட்டது.பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும். இஷ்டம் போல் அனுபவித்து வாழ முடியும் என்று வாழ்க்கை கண்முன்னே வெளிச்சமிட்டு மினுக்குகிற போது, துணிச்சல் பெற்றவர்களும், தேவை மிகுந்தவர்களும் எப்படியும் பணம் பண்ணுவது என்று வெறி உணர்வோடு மும்முரமாக முனைவது சகஜமாகியுள்ளது கால ஓட்டத்திலே.
"பணம் இல்லாமல் இருப்பதுதான் பாவம். இன்றைய சமுதாயத்தில் பணம் பண்ணத் தெரியாமல் இருப்பதுதான் குற்றம். நானும் வாழ வேண்டும். சுகமாக, வசதியாக, வெற்றிகரமாக வாழ்கிற பலரையும்போல் வாழ வகை செய்யவேண்டும் என்று பாஸ்கரனும் ஆசைப்பட்டான்" என்று வல்லிக்கண்ணன் தன் பாத்திரத்தின் மூலம் இன்றைய பண மதிப்பீட்டுச் சமுதாயத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
தனி மனிதன், சமூகம் இவர்களில் யார், யாருக்கு ஆதாரம்? சமூகத்தைத் துறந்து காட்டுக்கு ஓடிப்போவது தான் பெருமைக்குரிய விஷயமா? மனச்சாட்சி என்பது என்ன? அதற்குரிய மதிப்பு என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தறிவது அவசியம். தனிமனிதன் கணக்களவில் - எண்ணிக்கை அளவில் ஒரே ஒரு மனிதன்தான்! ஆயினும், அவன் பிறந்து வளர்ந்து வாழும் சமூகம் - சமூகத்தின் நிகழ்வு அவனிடத்தில் ஏராளமான தாக்கங்களை - பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
"மனித உலகத்தைத் துறந்து ஒடுவது துறவறமன்று. மனித சமூகத்திற்குள்ளேயே வாழ்ந்து கொண்டு மனித சமூகத்தைப் புரிந்துகொண்டு, மனித சமூகத்தின் துன்ப நீக்கத்துக்காகப் பாடுபடுபவர்களே ஞானிகள்" என்றான் கதே என்ற தத்துவஞானி!
இந்த கருத்தை, ஜெயகாந்தனின் "கருங்காலி” என்ற சிறுகதையில் வரும் கோவிந்தன், ராகவனிடம் கூறும் பாங்கில் கேட்டுத்தான் பாருங்களேன்! மகரிஷிகள், ஞானிகள் எல்லாம் காட்டுக்குப் போய், காட்டோடு அவர்கள் போயிருந்தால் அவர்களுக்கு என்ன பெருமை?உலகத்தைத் துறந்துபோன ஞானிகள் தங்கள் ஞானம் வாழணும்னா மனுஷ சமூகத்துக்குத் திரும்பி வந்து, அவர்கள் மத்தியில்தான் வாழனும். காட்டுக்குப் போனதாலே மட்டும் இல்லே; திரும்பி வந்ததனாலேதான் அவர்களுக்குப் பெருமை இருக்கு" என்ற ஜெயகாந்தனின் கோவிந்தன் கூறுவது நினைந்து போற்றத்தக்கது!
அடுத்து, மனசாட்சி! கவியரசு கண்ணதாசன்
கண்ணில் வருவது காட்சி அந்தக்
காட்சிக்கு சாட்சி மனம்!
காட்சியை மறந்தன கண்கள் - மனச்
சாட்சியை மறைத்தது உள்ளம்!
என்று அழகுறப் பாடுவார்.
ஒரு பொருளை ஒருவன் பார்க்கிற பார்வையில், எந்த நோக்கத்தோடு அவன் பார்க்கிறான் என்பது யாருக்குத் தெரியும்? பார்ப்பவன் மனச்சாட்சியே இதற்குச் சாட்சி! அவனோ, அவனுடைய மனச்சாட்சியை மூடி மறைத்து விடுகின்றான். மனச்சாட்சி என்பதைப் பற்றி மாவீரன் மாஜினி சொல்லும் செய்திகள் கவனத்திற்கு உரியன.
இன்று நம்மில் பலர், எடுத்ததற்கெல்லாம் "மனச் சாட்சிப்படி நான் பொய் சொல்லவில்லை" என்று கூறுவர். அவருடைய மனம் நடுநிலையில் நின்றதா? நீதியைச் சார்ந்திருந்ததா? என்றெல்லாம் ஆய்வு செய்து அறிவது கடினம்.
ஆதலால், அவருடைய மனச்சாட்சி மட்டுமே ஆய்வு அளவையில் எடுத்துகொள்ளக் கூடியது. தனிமனித மனச்சாட்சி என்பது சமூகத்தின் மனச்சாட்சியோடு ஒத்திருக்க வேண்டும். அதாவது, "ஒருவர் கூறுவது, சமூகம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்கவேண்டும்” என்பது மாவீரன் மாஜினியின் கருத்து.ஜெயகாந்தனின் படைப்பாகிய 'கருங்காலியில் ஒருசில வரிகள்: .
"தனிமனித மனச்சாட்சி, சமூக மனச்சாட்சிக்குக் கொஞ்ச காலமாவது கட்டுப்பட்டுத்தான் ஆகணும், அந்த தனிமனிதனின் நியாய வாதம் உண்மையிலேயே தர்மமா இருந்தா அதை நிச்சயம் சமூகம் கொஞ்சம் பொறுத்து ஏற்றுக் கொள்ளும். அப்படியும் சமூகம் ஏற்றுக் கொள்ளலேன்னா அது தர்மம் அல்ல; ஆமாம், தர்மத்துக்கு அதுதான் இலக்கணம்”
ஜெயகாந்தனின் இந்தக் கருத்திற்கேற்ப நாம் சமூகத்தின் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுப்போமா?
சமூகம் என்ற சொல், இன்று கிட்டத்தட்ட சமுதாயத்தின் ஒரு பகுதியை, ஒரு சிறு ஜாதி வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்படுகிறது. ஆனால் இலக்கியங்களில் சமூகம் என்பது மனிதகுலம் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. பாவேந்தன் பாரதிதாசன்,
"ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே! இறுதி! உறுதி! உறவினர் ஆவார் ஒருநாட்டார்-எனல் உறுதி!
பிறவியில் உயர்வும் தாழ்வும் செய்தல் மடமை! -இந்தப் பிழை நீக்குவதே உயிருள்ளாரின் கடமை!”
என்று பாடுவான்!
பாவேந்தன் கருத்துப்படி சமூகம் என்பது நாடு, மொழி, சமயம் கடந்தது. சமூகம் என்பது மாந்தர் கூட்டமேயாம். ஆனால், நமது நாட்டின் சமூக வரலாறு கூறுவது என்ன? மாந்தரிடையே தீண்டாமை, உயர்வு, தாழ்வு என்ற வேற்றுமைகள்! இந்த அடிப்படையிலான பேதா ஒபேதங்கள்! பிரிவினைகள்! இன்று நம் கண்முன் காட்சியளிக்கும் சமுதாயம் ஓருருவும், ஓருணர்வும் உடையதன்று. இதனை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
- "உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
- ஒரே வழியிலே கலக்குது!
- ஒற்றுமை யில்லா மனிதகுலம்
- உயர்வும் தாழ்வும் வளர்க்குது!"
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 18)
என்று மிகவும் அழகாக உணர்த்துகின்றார். மானிட சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து, ஒட்டி உறவாடி வாழ்ந்தால்தான் வளரலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒதுக்குதல் ஒதுங்குதல் என்ற கொள்கை அறவே கூடாது. மானிடத்தோடு ஒட்டி வளர்ந்தாலே உயர ம்; உயர முடியும். இந்த அழகிய கருத்தினை மூங்கில்கள் மூலம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை விளக்கிக் கூறும் பாடல் இதோ:
- "ஓங்கி வளரும் மூங்கில் மரம்
- ஒன்னை ஒன்னு புடிச்சிருக்கு!
- ஒழுங்காகக் குருத்து விட்டு
- கொள்ளை கொள்ளையா வெடிச்சிருக்கு!
- ஒட்டாமே ஒதுங்கி நின்னால்
- உயர முடியுமா? - எதிலும்
- ஒத்துமை கலைஞ்சுதுன்னா
- வளர முடியுமா?"
- "ஓங்கி வளரும் மூங்கில் மரம்
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக், 19)
ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஆறு! ஆற்றோட்டத்தின் ஒதுக்குப்புறத்தில் சிறு குழிகள்! அச்சிறிய குழிகளில் ஆற்று வெள்ளத்தோடு வரும் மாசுகள் அடையும்! இந்த உவமை, பாரதியின் உவமை. பாஞ்சாலி சபதத்தில் பாரதி எடுத்தாளும் உவமை.
ஆம்! பாண்டவர்களின் துன்பத்திற்கு அவர்களின் ஊழ் காரணமன்று. சகுனி, துரியோதனன் முதலியோருடைய கர்மப்பயன் பாண்டவர்களை வந்து வருத்துகிறது. காரணம், ஒரு நாடு, ஒரு சமூகம் ஆகிய அமைதியேயாம்! இன்றும் நம்மில் பலரை - ஏன்? கோடானுகோடி மக்களை ஏழ்மையிலும் அறியாமையிலும் கிடத்தித் துன்புறுத்துவது அவர்களுடைய ஊழ் அன்று.
இந்த நாட்டை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற அரசுகள், முதலாளித்துவத்திற்குக் கட்டியம் கூறும் மதத் தலைவர்கள் முதலியோர் செய்த தீயூழே இன்றைய ஏழை மக்களை வருத்துகிறது. இதற்குப் பெயர் "சமூக ஊழ்”
அன்று சிலப்பதிகாரக் கண்ணகியை வருத்தியது பூம்புகார்ச் சமுதாயத்தின் சமூக ஊழ். பாரதியின் "பாஞ்சாலி சபத"த்தில் ஒரு பாடல். கேளுங்கள்!
"..........
வைய மீதுள வாகும் அவற்றுள்
விதியினும் பெரிய தோர்பொரு ளுண்டோ?
மேலை நாம் செய்யும் கர்மம்அல் லாதே
நதியில் உள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பல்மாசு
பதியு மாறு பிறர் செய்யும் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ?”
(பாஞ்சாலி சபதம் பக். 407)
ஆதலால், தனித்து வாழ்ந்தால் உயர்ந்துவிடலாம் என்று எண்ணாதீர்கள்! நீங்கள் வாழும் சமுதாயத்தையும் உங்களை உருவாக்கும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
சமூகத்தைப் பாதுகாப்பது என்றால் என்ன? கழனியில் பயிரைப் பாதுகாப்பது போன்றது. அது. கழனியில் பயிரைப் பாதுகாப்பது என்றால் என்ன? பயன் தரும் பயிர்களை, பயன் தராத களைகள் அழித்து விடாமல் பாதுகாப்பது தானே, பயிர்ப் பாதுகாப்பு? அதுபோல, சமூகத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தடையாக இருக்கிற சமூகத் தீய சக்திகளை எதிர்க்க வேண்டும். களையெடுக்காமல் பயிர் வளர்க்க முடியாது. சமூகத்தின் தீய சக்திகளை வெற்றி கொள்ளாமல் நல்ல மனித சமூகத்தைக் காண முடியாது.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியும்கூட நமக்கும் நம்முடைய பாப்பாக்களுக்கும்,
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!"
என்று சொல்லிக் கொடுத்தது என்னவோ உண்மை! ஆயிரம் பாரதி வந்துதான் சொல்லட்டுமே! நமக்கு எங்கே அந்தத் துணிவு வரப்போகிறது? பாண்டவர்களுக்கே கண்ணன் வந்ததால்தானே துணிவு பிறந்தது! நமக்குக் கண்ணன் வருவானா? அந்த விஷயத்திலும் - கடவுள் விஷயத்திலும் நமக்குப் போதிய நம்பிக்கையில்லையே! நடப்பது நடக்கட்டும்!
நமக்கு எவ்வளவு தயக்கம்? இன்று நாம் அஞ்ச வேண்டியவைகளுக்கா அஞ்சுகிறோம்! அஞ்ச வேண்டாதவைகளுக்கே அஞ்சுகின்றோம்! இன்று மீண்டும் துரியோதனாதியர்கள்! சூரபதுமன்கள்! எங்குப் பார்த்தாலும் அவர்களே வெற்றி உலாப் போகின்றனர்! இந்த அச்சம் நமக்கு என்று தொலையுமோ, அன்று தான் நாட்டில் நல்லவர்கள் வாழ்வார்கள்! நல்லன நடக்கும்!
இதனை, புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் ஜைனேந்திர குமார் எழுதிய 'தியாக பாத்திரம்' என்ற கம்பீரமான குறுநாவல் உணர்த்துகிறது. 'காந்திய தத்துவமாகிய சாத்வீக எதிர்ப்பை அவர் தத்துவார்த்த' ரீதியில் உருவாக்கியுள்ளார்.
தனி மனிதனை, சமூகம் வளர்க்க கடமைப்பட்டுள்ளது. தனிமனிதன் அறியாமல் அல்லற்படுவதற்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பாவேந்தனின் கருத்து.
"கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் துரக்குமரம் அங்கே உண்டு”
என்பன, பாவேந்தன் பாடல் வரிகள். அதுபோலவே, ஒரு தனிமனிதன் உணவில்லாமல் இறந்து படுவானாயின் அவன் வாழ்ந்த சமுதாயத்தை அழித்தொழிக்க வேண்டும் என்பது பாரதியின் சூளுரை!
"தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!”
என்பது பாரதியின் கவிதை, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவாகள்.
"அண்டையன் பசியில் வாட
அணங்கொடு மாடி வாழ்தல்
மண்டையன் குற்ற மன்று
மன்னிடும் ஆட்சிக் குற்றம்"
என்றார். இங்ஙணம் வழிவழியாக அவலங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம். சமூகமும் ஆட்சியும்தான் என்று நூறாயிரம் தடவை சொல்லியும் என்ன நடந்திருக்கிறது? இன்று நமது நாட்டில் 77 விழுக்காட்டு மக்கள் எழுத்தறிவில்லாதவர்கள். 589 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்த இழிநிலை என்று மாறும்? இந்நிலையை "கனவோ நனவோ" என்ற கதையில் சக்திப் பெருமாள் விவரிப்பதைக் கேளுங்கள்.
"வாய் திறக்க வழியின்றி அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன், 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்" என்று என்னையறியாமலேயே என் வாய் முணுமுணுத்தது. பாரதியின் உள்ளக் குமுறல் - குருதிக் கொதிப்பு இப்படி எத்தனை காட்சிகளைக் கண்டதோ? தனியொருவன்கூட உணவின்றி நலியாத சமுதாயம் என்றுதான் உருவாகுமோ? கனல்தெறிக்கப் பறந்த அவனது வார்த்தைகள் இவ்வுலகை புடமிட்டுப் பொன்னாக் காதோ? அவனது கனவு நனவாகும் நாள் எந்நாளோ? எழுந்த வினாக்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் உள்ளத்தையே புதைத்துவிட்டன." (வெள்ளையங்கி பக். 96) என்கிறார் சக்திப் பெருமாள்.
இத்தனை பேர் எச்சரித்த பிறகு, ஏன் சமூகத்தில் இந்த அவலம் தொடர்கதையாக இருக்கிறது? சமூக நீதி ஏன் உருவாக்வில்லை? ஆசைதான் காரணம். அப்பட்டமான - நிர்வாணத் தன்மையுடைய - தன்னலம் சார்ந்த ஆசை, நீதியை, சமூக நீதியை பலி கொடுத்து செல்வத்தைக் குவிக்கத் துணை செய்கிறது. இந்தக் கொள்ளைக்கு அதிகாரமும் துணையாக நிற்கிறது. இந்த இழிநிலையைப் பட்டுக் கோட்டையின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.
"ஆசைக்கு நீதி இரையாகுதடா! அன்பை
அதிகார வெள்ளம் கொண்டு போகுதடா"
இன்றைய சமூகப் போக்கு நியாயங்களை எடுத்துச் சொல்லுவது மாதிரியும் இல்லை! இன்று எங்கு பார்த்தாலும் காசும் உழைப்பும், காசும் கண்ணியமும் என்று காசுடன் இணைத்துத்தான் எதுவும் மதிப்பிடப்படுகிறது! இது பெரும் பிழை!
மந்திரங்களைக்கூட காசுக்கு ஏற்றவாறு குறைவாகக் கொடுத்தால் சுருக்கியும், நிறைய கொடுத்தால் நீட்டி முழக்கியும் சொல்லும் புரோகிதர்கள் இருக்கிறார்கள்! இது தவறு என்று விளக்க, சொல் விளங்கும் பெருமாள் "வெள்ளையங்கி"யில் முயற்சி செய்கிறார்.
'பெரிய வாத்தியார்' காசுக்கேற்றவாறு மந்திரத்தைக் கூட்டியும் குறைத்தும் சொல்ல இணங்கியதை இராமையர் நினைந்து சொல்லுவதாக, சொல்விளங்கும் பெருமாள் எழுதுகிறார்.
"நீங்கள் நியாயமாக நடங்கள் என்று சொன்னால், மற்றவர்களை நியாயமாக நடக்கவில்லை என்று கூறுவது அதற்குப் பதிலாகிவிடாது" என்பது இராமையர் பெரிய வாத்தியாரைப் பற்றி நினைந்து சொல்வதாகும். இன்று நாம் நம்முடைய சமூகத்தில் அடிக்கடி கேட்பது இத்தகைய வாதத்தைதான்.
ஒருவர் செய்த தவறுகளை எடுத்துக்காட்டினால் "நீங்கள் செய்யவில்லையா?" என்று மிக்குயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்கூட கேட்டுவிடுகிறார்கள். இதனைத் திறமை என்று வேறு பலர் மதிக்கின்றனர். இது ஒன்றும் திறமை இல்லை. வீண் பகடித்தனம். எடுத்துக்கூறும் நியாயங்களை எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். அன்றுதான் நியாயத்தை நோக்கி, சமுதாயம் நடைபோடும்.
விவாதத்திலும் ஒரு சரியான நடைமுறை கையாளப் பெறவேண்டும். கிளர்ச்சி நோக்கத்தோடு விவாதித்தல் கூடாது.விவாதம் செய்தவரை மடக்கி, மண்டையில் அடித்து உட்கார வைக்கும் இழி மனப்பான்மையுடனும் விவாதிக்கக் கூடாது. விவாதத்தில் ஈடுபடுவோரிடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிலவ வேண்டும். விவாதத்தின் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டும்; ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை - சிந்தனைப் புலன்கள் இருக்கின்றன. இவை நிச்சயமாக எல்லாருக்கும் ஒன்றுபோல இல்லை. விவாதங்களில் கலந்து கொள்ளுபவர்கள் இயற்கையில் உள்ள இந்த வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
எவனொருவன், தான் பேசுவதுதான் நியாயம் என்று வரையறுத்துக்கொண்டு, முரட்டுத்தனமாகப் பேசுகின்றானோ, அவன் நியாயத்தை மீறுகிறவன். அவன் நியாயத்தை மீறுகிறவன் மட்டுமல்ல; அவன் உலகத்தில் பல அநியாயங்களை அரசியலிலும் சில்லறை கிளர்ச்சிகளிலும் தோற்று விப்பான் என்று வங்கத்துக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் கூறுகின்றார். இதைத் தமது நல்ல வரன் என்னும் கதை வரிகளில் விளக்குவதைக் கேளுங்கள்.
"மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உண்டு. ஒருவன் யுக்தி மற்றவனுக்குச் சரிப்படாது. ஒருவன் தான் பேசுவது தான் நியாயம் என்றால், அவன் நியாயத்தை மீறினவனாகிறான். இதனால் அநியாயங்கள் உலகத்தில் தலைவிரித்தாடும். அரசியல் அல்லது சில்லறைக் கிளர்ச்சியில் பற்றுடையவர்கள் இதைக் கவனித்தல் நலம்."
(நல்லவரன் - தாகூர் பக். 38)
அடுத்து, மனித உலகத்தை அலைக்கழிக்கும் மிகப் பெரிய சிக்கல் வெற்றி - தோல்வி என்பவைகளாகும். நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. வெற்றி - தொடர் வெற்றிகளாக ஒருபோதும் இருப்பதில்லை. தோல்விகளும் அவ்வாறே.
ஆதலால், வெற்றி - தோல்விகளைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எது நடக்க வேண்டுமோ அது நடக்கத் தக்க வகையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.அந்த இனிய நல்ல முயற்சி தோல்வியடையுமென்று அச்சப்பட்டுக் காரியத்தை விட்டுவிடக் கூடாது.
தோல்விகளும்கூட எதிர்பார்த்து நிகழ்ந்தால் வெற்றி களைப் போல கருதிக் கொள்ள முடியும். "தோல்விகள் வெற்றிகளின் படிகள்” என்ற பழமொழியை எண்ணிக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தினை ஜெயகாந்தன் தமது 'யுகசந்தியில் விளக்குகிறார்.
"வெற்றி - என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான்."
(யுகசந்தி - தர்க்கத்திற்கு அப்பால்' - ஜெயகாந்தன் பக். 99)
ஆனாலும் ஒருசிலர் வெற்றிபெற்ற சூழ்நிலையில், போதைக்கும், மமதைக்கும் ஆளாகிவிடாமல், பெற்ற வெற்றியைப் பெரிதென எண்ணாமல் தொடர்ந்து முயற்சிப்பர்;துணிந்து புதிய முயற்சிகளில் அடி எடுத்து வைப்பர். இவர்கள் வெற்றி மேல் வெற்றியும் பெறுவர். இக்கருத்தை வல்லிக்கண்ணன் தமது கதை மூலம் கூறுவதைக் கேளுங்கள்.
"வாழ்க்கைப் பாதையில் துணிந்து அடி எடுத்து வைத்து வெற்றி கண்டவனே அடுத்து அடுத்து வெற்றிகளைச் சந்திக்க முடிகிறது. முதல் வெற்றி மேலும் பல வெற்றிகளைக் கொண்டு சேர்க்கிறது. அதனாலேயே "வெற்றிபோல் எதுவும் வெற்றி பெறுவதில்லை" என்ற ஆங்கில வசனம் ஏற்பட்டுள்ளது" - (வாழ விரும்பியவன் - வல்லிக்கண்ணன் பக். 38)
மனித சமூகத்தில், புராணங்களில், இதிகாசங்களில் மகளிர்க்குத் தனி இடம் - உயர்ந்த இடம் உண்டு. மதங்களிலும் அப்படித்தான். ஆனால் நடைமுறையில் நாம் நம்முடைய சமூகத்தில் பெண்களை நடத்தும் முறை வெட்கித் தலை குனிய வேண்டிய அளவிற்குள்ளது. நமது சமூகத்தில், மகளிர் விடுதலைக்கென்று முதற்குரல் கொடுத்தவன் பாரதி, அவனைத் தொடர்ந்து பாவேந்தனும் மகளிர் விடுதலைக்காகப் பாடுகிறான். நமது சமூகத்தில் மகளிர் நிலை, நேற்றைக்கு இன்று பரவாயில்லை. சற்றே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், மகளிர்க்கு இழைக்கும் கொடுமைகள் ஒய்ந்துவிட்டன என்று சொல்ல முடியாது. மகளிர் விடுதலை குறித்துப் புதுமைப்பித்தன் ஆழமாகச் சிந்தித்தார்; மகளிர் நலத்திற்கென எழுதினார்.
புதுமைப்பித்தனின் 'நினைவுப் பாதை' என்ற படைப்பில் வைரவன் பிள்ளை வருகிறார். அவருடைய மனைவி வள்ளியம்மை ஆச்சி, 50 ஆண்டுக்காலம் இல்லறத்தில் வாழ்ந்திருக்கின்றார். ஆயினும் வைரவன் பிள்ளை, வள்ளியம்மை ஆச்சியைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தது கிடைத்தது. இதனைப் புதுமைப்பித்தன் கேலி செய்வதைக் கேளுங்கள்!
"மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகி விட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்துவிரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?"
-(புதுமைப்பித்தன் சிறுகதைகள் பக். 408)
பகை என்பது ஒருவர் பிறிதொருவரிடத்தில் மனம் மாறாத நிலையில் காட்டுகின்ற வெறுப்புணர்ச்சியைக் குறிப்பது. இந்தப் பகையுணர்ச்சி ஒரு பொழுதும் தனி மனிதனுக்கும் நன்மை செய்யாது; சமூகத்திற்கும் நன்மை செய்யாது.
அதனாலேயே வள்ளுவம், 'பாழ் செய்யும் உட்பகை' என்கிறது. கம்பன் 'யாரோடும் பகை கொள்ளலன்' என்றான். ஆம்! நம்முடைய பகைவன், நம்மாட்டுப் பகை கொண்டிருக்கலாம். ஆனால், நாம் அப்பகைவன் மீது பகை கொள்ளக்கூடாது. இது வாழ்க்கை நியதி.
இந்தப் பொல்லாத பகை இன்று வீட்டிலும் புகுந்து விளையாடுகிறது; நட்புக் களங்களிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியலிலோ சொல்ல வேண்டாம். எழுத்தாளர் அய்க்கண் தமது வேர் என்ற கதையில், கணவன் - மனைவி தகராறைத் தீர்த்து வைத்த கருப்பையா அம்பலகாரர், 'தாம் தகராறைத்தான் தீர்க்க முடிந்தது; பகைமையைத் தீர்க்க முடியவில்லை" என்று கூறுவது சிந்திக்க வேண்டியது.
"அந்தத் தகராறைத் தான் என்னாலே தீர்க்க முடிஞ்சுது. அவங்க பகைமையைத் தீர்க்க முடியலே!”
(வேர் - அய்க்கன் - பக். 18)
பகைமையை மாற்றிக் கொள்ளாதவர்களுக்குக் கணவன், மனைவி என்ற உறவு என்ன வேண்டியிருக்கிறது?
ஒரு சமுதாயம் சிறப்புற இயங்க, பொதுப்பணிகள் நடைபெற வேண்டும். பாரதிதாசன், பொது நாட்டம் உடையார் வேண்டும்' என்றான். இன்று, பொது நாட்டம் உடையார் நம்மிடையில் உளரோ? பொதுப்பணியில் நினைவுமிருக்கிறதோ? பொருளும் புகழும் சேர்ப்பதைப் பற்றியே கவலை.
யாராவது ஒருவருக்குப் பொதுப் பணியில் நாட்ட மிருந்து திட்டம் தீட்டினால் அதை நிறைவேற்ற முடியாத நிலை! ஏன்? கூட்டாளிகள் சரியில்லை.
ஆம். பல நூறாண்டுகளாகவே தீண்டாமையை ஒழிக்கத் திட்டம்; நடந்ததா? ஏழ்மையை ஒழிக்க ஐந்தாண்டுத் திட்டங்கள்! ஒன்றா, இரண்டா? ஏழு ஐந்தாண்டுத் திட்டங்கள்! ஏழ்மை அகன்றதா? ஏன்? கூட்டாளிகள் சரியில்லை! நாம் கூறவில்லை. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை பாடுகிறான்."போதுமான பொருளும் வந்து
பொதுப் பணியில் நினைவு வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லை."
(- பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 24)
இன்று இந்திய சமூகம் மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி என்றால் என்ன? மக்களின் அதிகாரம்;மக்களுக்கு நன்மை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரம் - ஆட்சி ஒப்படைக்கப்படுகிறது. பிரிநிதிகளிடமும் அமைச்சர்களிடமும் உள்ள அதிகாரம் அவர்களுக்கு உரிமை உடையதல்ல; பொது மக்களுடையது.
மக்கள் தங்களுடைய செல்வத்தை - நிதியை - தங்களுக்கு நன்மை செய்து கொள்வதற்காக, தங்களால் தனித்தனியே நன்மை செய்து கொள்ள இயலாமையால் மக்கள், பொது நன்மையைச் செய்வதற்காக நிதியை அரசிடம் குவிக்கிறார்கள். அது மக்களுடைய நிதி. மக்கள் நலனுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டிய நிதி. இதுதான் மக்களாட்சி.?
இந்த மக்களாட்சியில் மனித நேயம் இருக்க வேண்டும்; மக்களை மதிக்க வேண்டும்; மக்களின் உரிமையை மதிக்க வேண்டும்.
மக்களை மூடர்களாக - குடிகாரர்களாக - கெட்ட வர்களாக ஆக்கும் வழியில் அரசு நேரடியாகவோ, மறை முகமாகவோ ஒருபொழுதும் துணை போகக்கூடாது. மக்களாட்சிக்கு சாமர்த்தியம் தேவைதான். ஆனால், சாமர்த்தியத்தைக் காட்டிலும் விவேகம் தேவை.
நெடிய பார்வையில் நெடிய நோக்கத்தோடு தமது மக்களுக்கு ஆக்கப் பணிகளைச் செய்யும் விவேகம் வேண்டும். கன்னட எழுத்தாளர் பேந்தரே விவேகமில்லாத மக்களாட்சி பயனற்றது என்று கூறுகிறார்.
வரி கொடுப்போரது வளர்ச்சிக்கும் நலனுக்கும் உத்தர வாதம் தராது, அவர்களை நெறியல்லா நெறிகளில் திருப்திப்படுத்துவதும் தாஜா செய்வதும் மக்களாட்சியன்று, என்றும் பேந்தரே கூறுகிறார். கேளுங்கள்!
விவேகம் இல்லாத ஜனநாயகத்தைச் சாடுகிறார். முனிசிபல் கவுன்சிலர்களுக்காக அவர் தயாரித்துள்ள விதிகள் வருமாறு:
"தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டு கவுன்சிலர்கள் ஒரே பேட்டையில் ஒரே தெருவில் இருக்கக் கூடாது. அப்போதுதான் எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்களோ அத்தனை தெருக்களாவது நமது நகரில் சுத்தமாக இருக்கும் என்ற உத்தரவாதமாவது வரி கொடுப்போருக்கு இருக்கும்."
(- இன்றைய இந்திய இலக்கியம் பக். 126)
நம்முடைய நாட்டு மக்களுக்கு வறுமையும் ஏழ்மையும், இழிவும் அவமானமும் இயல்பாகப் போய்விட்டன. அவர்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வ தில்லை. உண்மையாகச் சொன்னால் இப்போது நம்மிலே பலருக்குச் சூடும் இல்லை; சுரணையும் இல்லை.
நம்முடைய அவமானங்களையும் இழிவுகளையும் தாங்கியே ஆகவேண்டும் என்று மருட்டுகின்ற மதத்தலைவர் விதித்த தலைவிதித் தத்துவத்தினின்றும் இன்னும் நாம் விடுதலை பெற்ற பாடில்லை. இன்னமும் நம்முடைய மூளையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பழைய பஞ்சாங்கம்தான். .
கொடுமைகளை எதிர்க்கும் துணிவு நமக்கு என்று வரும்? நாம் இந்தத் தலைமுறையில் புரட்சியாளர்களாக ஆகமுடியுமா? ஒருகாலும் முடியாது. ஏனென்றால் நாம் புரட்சி என்ற சொல்லையே பொருள் புரியாமல் கொச்சைப் படுத்தி விட்டோம். "கொடுமையை எதிர்த்துப் போராடு” என்று மக்களுக்குப் பாடம் புகட்டி, இதனை உணர்த்த நாம் வணங்கும் தெய்வங்களின் கைகளில் கருவிகளைத் தந்தனர்.
ஆனால், இன்று நாம் செய்வதென்ன? அத்தெய்வங் களின் கைகளில் இருக்கும் கருவிகளிலும்கூட எலுமிச்சம் பழத்தைச் செருகி, முனையை மழுங்கச் செய்து கொண்டிருக்கிறோம். பாரதி நமது மூடத்தனத்தைப் பார்த்தான். ருஷ்ய நாட்டுப் புரட்சியை நமது கவனத்திற்குக் கொண்டு வருகிறான்.
சோவியத் ரஷ்யாவில் புரட்சி செய்து வெற்றி கண்டது போல்ஷ்விக் படைதான். ஆனாலும் பாரதி, "மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்த"தால் நிகழ்ந்தது புரட்சி என்று பாடுகிறான். ஏன் இங்ங்ணம் பாடுகிறான்? மாகாளியே புரட்சி செய்தாள் என்றால், இந்தியரும் எழுந்து நின்று புரட்சி செய்வார்கள் என்று நம்பினான்.
ஆனால் நம்நாட்டு மக்களோ மிகவும் கெட்டிக் காரர்கள்! கடவுளைக் கும்பிடுவார்கள்; காணிக்கை செலுத்து வார்கள்; அப்பமும் அவல் பொரியும் படைப்பார்கள். ஆனால், கடவுள் சொன்னதைச் சத்தியமாகச் செய்வதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறார்கள். பாரதி,
"மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி"
(பாரதியார் கவிதைகள் பக்.90)
என்று பாடுகிறான்.
நம்முடைய நாட்டில் கலியுகம் எப்போது போகும்? கிருதயுகம் எப்போது வரும்? இனிய அன்புடையீர்! எதுவும் தானாக நடக்காது. கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் காண எழுமின்! எழுமின்! சமுதாய வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கவேண்டும். வளர்ச்சிக்கு வாயில் மாற்றங்கள். எங்கு மாற்றமில்லையோ அங்கு வளர்ச்சியில்லை. அதுபோலவே எங்கு வளர்ச்சியில்லையோ அங்கு மாற்றமில்லை.
நம்முடைய சமுதாயம் நீண்ட நெடு நாட்களாகவே மூடத்தனத்தில் முடங்கிக் கிடக்கிறது. எந்தவொரு மூடத்தனத்தினின்றும் நாம் விடுதலை பெற்றோமில்லை. விடுதலை பெற முடியாத நிலையில் பொய்மைச் சாத்திரங்களும் மதங்களும் தடை செய்கின்றன. காதலிலிருந்து கடவுள் சந்நிதி வரை சாதிகள் ஆட்சி செய்கின்றன. நாளும் தன்னம்பிக்கையைக் கொல்லும் மூட நம்பிக்கைகள் ஏராளம்! ஏராளம்! எனவேதான் பாவேந்தன் பாரதிதாசன்,
"முடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப்படுத்தக் கை ஓங்குவீர்!"
(பாரதிதாசன் பா. 50 பக். 160)
என்று முழங்குகிறான்.
இன்று கோயில்களில் கூட காசுகளின் ஆதிக்கம்; மேலும் களவு நடைபெறும் இடங்களாகவும் கோயில்கள் ஆகிவிட்டன. அன்னை பராசக்தி, அருள்புரிய எழுந்தருளியுள்ளாள். ஏழை எளியவர்கள் படும் பாட்டைக் காண முடியாமல் அவளுக்குச் சாத்தும் வெள்ளிக் கண் மலர்கள் அவள் கண்களை மறைக்கின்றன.
மக்கள் அழுது அரற்றும் மொழியை அவள் கேட்க முடியாமல் மணியோசை ஒலித்துத் தடுக்கிறது. இல்லங்கள் தோறும் அவள் எழுந்தருளி, தம்மைத் தொழும் மக்களுக்கு இன்ப நலம் வழங்கலாம் என்று எண்ணினால், அதுவும் இயலாத நிலையில் பூசாரி பூட்டைப் போட்டு பூட்டி விடுகிறான்.
மானுடத்தை வாழ்விக்கும் மிக உயர்ந்த கடவுட் கொள்கை தகாதார் வயப்பட்டுக் கெட்ட கேட்டினைப் பாருங்கள்! இதனைப் பட்டுக்கோட்டை,"காசு தந்தால்தான் உன்னைக்
காணும் வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டு வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?”
(பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 23)
என்று சாடுவதை எண்ணுங்கள்.
நமது சமுதாயத்தில் ஒரு காலத்தில் கடவுளும் கடவுளின் திருக்கோயில்களும் அதாவது, ஆலயங்களும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. சமுதாயத்தின் மையமாகவே ஆலயங்கள் விளங்கின. குடிகளுக்கு நலம் செய்யும் மையங்களாக ஆலயங்கள் விளங்கின.
ஆலயங்களைத் தழுவி மக்கள் வாழ்ந்தனர். இது. நமது பழைய வரலாறு; பழைய நாகரிகம். 'கறையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல' நமது திருக்கோயில்களில் - நாமெடுத்த திருக்கோயில்களில், இடைக்காலத்தில் சாதி ஆதிக்கம் புகுந்தது; சன்மார்க்கம் வெளியேற்றப்பட்டது. உயர்சாதி மனப்பான்மை உடையோர் உள்ளே புகுந்தனர். சாமானியர்கள் வெளியே தள்ளப்பட்டனர்.
ஆலயங்களின் அகன்ற மண்டபங்களில் நடந்த பள்ளிகள், மருத்துவமனைகள் அகற்றப்பட்டன. அந்த மண்டபங்கள் தூங்குமூஞ்சிகளின் மண்டபங்களாக வௌவால்களின் மாளிகைகளாக மாறின.
ஒரு சிறந்த பழந்தமிழ் நாகரிகத்தின் வீழ்ச்சியை எண்ணுங்கள்! இந்தச் சிந்தனையை அறிஞர் அண்ணா நம்மிடத்தில் தோற்றுவிக்கிறார். ஆலயங்களைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா சொன்னதைக் கேளுங்கள்.
"ஆலயங்கள் கட்ட வேண்டியதுதான் அப்பா! ஆனால், அதன் அமைப்பிலே சில மாறுதல்கள் செய்துவிட வேண்டும். ஆயிரம் கால் மண்டபத்துக்கு ஆரம்ப ஏற்பாடாகிவிட்டது. அது கட்டி முடிக்க இன்னும் கொஞ்சம் வேலைதான் பாக்கி முடிந்த பிறகு, அதனை வௌவால்கள் வாழுமிடமாக்கி விடாமல், சிறுவர்களுக்கு அதனைப் பள்ளிக்கூடமாக்கி விடலாம். .......குளம் இங்கே வாழும் மக்கள் குளிக்குமிடமாகும்.”
(அண்ணாவின் சிறுகதைகள் பக். 94)
மீண்டும் நமது ஆலயங்கள் இழந்த பழம் பெருமையை அடைவது எந்நாளோ?
இனிய அன்புடையீா, சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் சிலவற்றைப்பற்றி சிந்தித்தோம். இந்த இலக்கியங்கள் ஆற்றல் வாய்ந்தன. சமுதாயத்தை உந்தி, முன்னோக்கிச் செலுத்தும் தன்மையுடையன.
ஆயினும் நம்மிடத்தில் இந்தச் சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் உருவாக்கும் கிளர்ச்சியை நடைமுறைப் படுத்தும் வாழ்வு அமையாமல் போனால் எங்ங்னம் மறுமலர்ச்சி தோன்றும்!
அன்புகூர்ந்து வளைந்து வளைந்து வராதீர்கள்! நேரிய நெடிய பார்வையொடு பயணத்தைத் தொடர்க! துணிந்து தொடர்க! எல்லாரும் கல்வி கற்றவர்களாக - எல்லாரும் எல்லாமும் உடையவர்களாக ஆகவேண்டும்.
இத்தகைய சிறந்ததொரு சமுதாயத்தை அமைக்க, கவிஞர் குலோத்துங்கன் சூளுரைத்து முன் செல்கின்றார். நாம் மட்டும் ஏன் தயங்கி நிற்கவேண்டும்? இளைஞர்களே, ஏன் தயக்கம்? எழுமின் ! குலோத்துங்கனின் சூளுரையைக் கேண்மின் !
"மாண்ச் சிறந்ததொரு வாழ்க்கைச் சமுதாயம்
படைக்கத் துணிந்தேன் நான் பாதையிலே காணும்
தடைக்கற்கள் யாவும் தகர்க்கும் வலியுடையேன்".
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 11)
என்று புதிய சமுதாயம் படைப்போம்?