குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6/தீ வைக்கட்டுமே
5
கவிஞன் பாரதி, காலவெள்ளத்தில் கரைந்து போனான். ஆனாலும், அவனது கவிதை முழக்கம் செந்தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிறது. அக்கவிதை முழக்கத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள், கவிதை முழக்கமா கேட்கிறது? இல்லை. கவிதைக்குப் பின்னணியில் கருத்தினையொட்டிய எழுச்சிமிக்க செயற்பாடன்றோ தெரிகிறது.
கவிஞன் பாரதி ஏழை நாட்டில் பிறந்தான், அடிமையாகப் பிறந்தான். அடிமையாகவே வாழ்ந்து மறைந்தும் போனான். ஆனால், அவன் அடிமையாக வாழ்ந்தாலும் அவன் உள்ளம் என்றும் சுதந்திரமாகவே விளங்கியது. அவனது கவிதைகள் சுதந்திரமாகவே பிறந்தன. அவனுடைய கவிதா சக்தி, அந்நிய ஆட்சியை வெற்றிகொண்டு நின்று விளங்கியது. அவனுடைய புதுமை வேட்கை, வறட்சி நிறைந்த பழமையைப் புறங்காணச் செய்தது. கவிஞன் பாரதி உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்டு, மட்டும் கவிதை இயற்றியவனல்லன் - அவனுடைய தேசபக்தி உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது. இந்த நாடு சுதந்திரம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது அதனாலன்றேர். 'ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே'... - 'ஆனந்த...சுதந்திரம்...' என்று முரசு கொட்டினான். சுதந்திரம் பெற்றால் மட்டும் போதுமா? சுதந்திர நாட்டைச் சுபிட்சமடைந்த நாடாக ஆக்கும் திட்டங்களைப்பற்றியும் எண்ணுகிறான். நம்முடைய அரசினருக்குத் திட்டங்களைப் பற்றிய கருத்தை தந்தவனே பாரதிதானோ என்று எண்ணுகிற அளவிற்குத் தொழில், பாரததேசம் என்ற கதைகளில் நாட்டு நலனுக்குரிய திட்டங்களின் நிறலையே தருகின்றான். எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் சமுதாயத்தை முதலில் தயார் செய்தாக வேண்டும் சமுதாயத்தை எப்படித் தயார் செய்வது? அடிமை வாழ்வில் இந்நாட்டு மக்கள் ஆட்சியுரிமையை மட்டுமா இழந்தார்கள்? அறிவையும் இழந்தார்கள். கம்பன் என்றும் காளிதாசன் என்றும் மாகவிஞர்கள் பிறந்து வளர்ந்த நாட்டிலே, எங்கும் அறியாமை. ஏடெடுத்தால் படிக்கத் தெரியாது. எழுத்தாணி எடுத்தால் எழுதத் தெரியாது. ஆனாலும், ஏடடுக்கிப் பூசை செய்யத் தவறில்லை. அதே நேரத்தில் அறிவின் தெளிவாலே பூத்துக் குலுங்க வேண்டிய சமய நெறிபற்றி நிறைய நம்பிக்கை. நம்பிக்கை நல்லதுதான். ஆனால், அங்கே தெளிவில்லை. தெளிவின்மையால் உறுதியில்லை, தெளிவும் உறுதியும் இன்மையால் தேர்ந்த அனுபவமில்லை. ஆயிரம் ஆலயங்கள் எடுப்பர். ஆனாலும் அங்கே ஆத்ம ஞானம் இருக்காது. அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவர். ஆனால் அங்கே ஆண்மை இருக்காது. வயிற்றுக்குச் சோறிடுவார். ஆனால் வாழ்வுக்கு ஞானம் தர மறந்தார்கள். இந்நிலை கண்டு பாரதி கொதித்தெழுந்தான்.
"அன்ன சத்திரம் மாயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் கட்டல்
அன்னயாவிலும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்."
என்று கொள்கை முழக்கம் செய்தான். அத்தோடு நின்றானா? சாத்திரத்திலும், ஞானத்திலும் பிறந்து வளர்ந்த சமுதாயம் அறியாமையில் சிக்கி உழல்வது கண்டு, ஆத்திரம் கொண்டு அந்த ஆத்திரத்தில் 'தேடு கல்வி இலாததொருரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதம்' என்றே முழங்குகிறான். பாரதி அன்று பாடினான். இன்றையத் தமிழகம் அதைச் செயல்படுத்துகிறது. தமிழகக் கல்வியுலகில் ஒரு புதுப்புரட்சி, அரசியலிலும், ஆட்சியிலும் சிறப்புற்று விளங்கும் காமராசர் ஆட்சி தமிழகத்தின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு பொற்காலத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
உயர்சாதியும், பணமும் இருந்தாலே கல்வி பெற முடியும் என்ற நிலை மாறிவிட்டது. காமராசர் ஆட்சி கல்வியைப் பொதுச் சொத்தாக்கி விட்டது. முன்பு, கல்வி பயில்கிறவர்கள், ‘உற்றுழியுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது’ கற்க வேண்டியிருந்தது. இன்றோ, கற்பிப்பவர்கள், கற்பவர்களுக்கு உற்றுழியுதவியும், உறு பொருள்கொடுத்தும் கற்பிக்கிறார்கள். பள்ளிகள் தோறும் மதியஉணவு, பிள்ளைகள் மேனி முழுதும் சீருடை - ஓடாத கடிகாரத்தை ஓடச் செய்ய - நின்று படிக்கும் பிள்ளைகள் இருந்து படிக்க ஏற்ற சாதனங்கள் - கண்ணுக்கு விருந்தும் கல்விக்கு வளமும் தரும் கல்விக்குரிய துணைப்பொருள்கள், கல்விச்சாலைகள் - கண்கவர் கோலம் பெற, பள்ளிச் சீரமைப்பு மாநாடு, கல்வி வளர்ச்சிக்குக் கோடிக்கணக்கில் திட்டம்-அரசு மட்டுமா? இல்லை. இந்நாட்டு மக்களும் கல்வியின் தேவையைக் கருத்திற்கொண்டு அள்ளி அள்ளி வழங்குகிறார்கள்.
கல்வி மட்டுமா வளர்கிறது. கல்வியின் தரமும் உயர்ந்திருக்கிறது. நாளையத் தமிழகத்தின் அறிஞர் உலகை உருவாக்கும் திருப்பணி, மேற்பார்வைப் படிப்பில் சீரோடும் சிறப்போடும் நடைபெறுகிறது. கல்விப் புரட்சி கண்ட தலைமுறையில் வாழ்வதே நமக்குத் தனிப்பெருமை. வாழ்ந்தால் மட்டும் போதுமா? பள்ளிச் சீரமைப்பில் நமது பங்கென்ன? எண்ணத்தால், உழைப்பால், பொருளால், ஊறு செய்யாமையால், பள்ளிச் சீரமைப்பில் பங்கு பெறுவோமாக பள்ளிச் சீரமைப்பு வேலைகள் பாங்குற நடை பெற்றுக் கொண்டிருக்கும் இன்றையத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பள்ளிகள்-ஆடு மாடு மேய்த்த சிறுவர்கள் அறிவகத்தில் அறிவு பெறுகிறார்கள்-இந்தச் சூழ்நிலையில் நாம் பாரதிக்கு-அறைகூவல் விடுக்கலாம். அது என்ன அறை கூவல்?
'தேடு கல்வி இலாத ஊரைத்திக் கொளுத்துவோம்' என்றாயே, இதோ எரிகின்ற இந்தத் தீப்பந்தத்தை வாங்கிக் கொள். தமிழகம் முழுவதையும் சுற்றி வா-தேடு-கல்வியில்லாத ஊரைத் தீக்கொளுத்து என்றே சொல்லுவோம்! கவிஞன் பாரதி தீ வைக்கட்டுமே பார்க்கலாம். அவன் தீ வைக்கத் தமிழகத்தில் ஊர் ஏது? இல்லை! இல்லை! எங்கும் கல்வி! எல்லோர்க்கும் கல்வி. இலவசக் கல்வி!