குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/தமிழ் - ஒரு நாகரிகம்
8
மூவேந்தர் ஆட்சி நலம்
தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சியிலமைந்து புகழ்பெற்ற பெருமையுடையது. தமிழகத் தில் ஆட்சி செய்த இந்த மூன்று பேரரசுகளும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் எண்ணற்ற தொண்டுகளைச் செய்தன. தமிழரசுகள் செய்த பணிகள் காலத்தால் அழியாத கற்கோயில்களாகவும் சொற்கோயில்களாகவும் விளங்குகின்றன. பழந்தமிழக அரசுகள் சமயச் சார்பற்றவையாக விளங்கின; மொழிந்லம் காத்துப் பேணின; ஆயினும், அவற்றுக்குப் பிறமொழிக் காழ்ப்பு இருந்ததில்லை. தமிழகத்தில் சாதி, குல அமைப்புகள் இருந்துள்ளன. ஆயினும் அவற்றினிடையே பிரிவினை இருந்ததில்லை; பகைமை இருந்ததில்லை. மக்கள் ஒருமைப்பாட்டு உணர்வுடன் கூடி உலகியலை நடத்தி வந்துள்ளனர். -
பாண்டிய நாட்டின் பெருமை
இந்த மூன்று பேரரசுகளுக்குள்ளும் பாண்டிய நாட்டு அரசு தனிச்சிறப்புடையது. பாண்டிய நாட்டு அரசர்கள் தமிழ்ச் சங்கங்கள் நிறுவித் தமிழை வளர்த்தனர்; தமிழ் நெறியை வளர்த்தனர். செந்தமிழ் வழக்கைப் போற்றிப் பாது காத்தனர். பாண்டிய அரசர்கள் குடிகளைத் தழுவிய அரசர்கள்; நீதி சார்ந்த அரசர்கள். பொற்கைப் பாண்டியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியோர் நீதிக்காகவே தம்மை இழந்தனர். இத்தகைய வரலாறுகள் உலக வரலாற்றில் யாண்டும் இல்லை. இவ்வாறு புகழ் பெற்ற பாண்டியப் பேரரசின் நாட்டு எல்லை அடியிற் கண்டவாறு கூறப்பெறுகிறது.
"வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி".
இந்த நாட்டு எல்லையில் செந்தமிழ்க் கவிஞர்கள் எண்ணற்றவர்கள் வாழ்ந்துள்ளனர். உலகு போற்றும் உயர் அறவுரையாகிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கவிதையினைத் தந்த கணியன் பூங்குன்றனார்தான்் பாண்டி நாட்டை அணி செய்தவர். புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன், பாண்டிய நாட்டில் பிறந்து தமிழகம் தழுவிய புகழுடையவர். நற்றமிழ்க் கீரனும் பாண்டிய நாட்டுக்கே உரியவர். நெஞ்சினை நெகிழ்வித்து, மனிதனை மனிதனாக வளர்க்கும் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகரும் பாண்டியநாட்டுத் திருவாதவூரிலேயே பிறந்தவர். பாண்டிய நாட்டை ஆண்ட அரசர்களில் பலர் கவிஞர்களாகவும் இலக்கியப் படைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பாண்டியன் அறிவுடை நம்பி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ் - ஒரு நாகரிகம்
வரலாறு ஒரே மாதிரியாகச் செல்வதில்லை. ஏற்றத் தாழ்வுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது. தமிழ் ஒரு வளர்ந்த மொழி, பழங்காலத்தில் தமிழ் என்றால் அது மொழியை மட்டும் குறிப்பதில்லை. அம்மொழியைச் சார்ந்து வளர்ந்த பண்புகளையும் நாகரிகத்தையும் குறிக்கும் சொல்லாகவும் தமிழ் விளங்குகிறது. "தமிழ் தழிஇய சாயல்" என்ற கல்லாடத் தையும், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்” என்ற சுந்தரர் தேவாரத்தையும், "செழுந்தமிழ் வழக்கு" என்ற சேக்கிழார் வாக்கையும் எண்ணுக. பாண்டியப் பேரரசு கண்ட தமிழ்ச் சங்கங்களில் ஆலவாய் அண்ணல் அண்டமெல்லாம் கண்ட , நாயகன் தமிழாய்வுக்குத் தலைமைப் புலவனாய் அமர்ந்து தமிழாய்ந்ததை யாரறிவார்? சிவ பெருமான் மட்டுமல்ல, உமையம்மையும் முருகனும் சங்கத் தமிழ்ப் பலகையில் உடனிருந்து தமிழாய்வு செய்தனர். பாண்டியப் பேரரசில் பெருமான் விருப்புற்று எழுந் தருளினன். "பாண்டியநாடே பழம்பதியாக" என்று திருவாசகம் கூறும். பாண்டிய நாட்டை இடமாகக் கொண்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எண்ணற்றவை. இவற்றுள் 64 திருவிளையாடல்கள் சிறப்பானவை.
மாறவர்மன் அரிகேசரி
இத்தகு புகழ் பெற்ற பாண்டிய நாட்டு வேந்தனாக கி.பி. 640-இல் மாறவர்மன் அரிகேசரி என்பவன் அரியணை ஏறினான். இவனது ஆட்சி மிகுந்த உயர் நிலையை எய்தியிருந்தது. சேரர்களை வென்று வாகை சூடினான். சோழப் பேரரசிற்குரிய உறையூரை ஒரு பகற்பொழுதில் வெற்றி கொண்டான். சோழப் பேரரசோடு இவன் நிகழ்த்திய போரின் முடிவு நட்பாயிற்று உறவாக மலர்ந்தது. சோழ மன்னனின் மகள் மங்கையர்க்கரசியாரைத் திருமணம் செய்து கொண்டான். மாறவர்மன் அரிகேசரி தொடக்க காலத்தில் உயிரிரக்கக் கொள்கை அடிப்படையில் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டுச் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகினான். மாறவர்மன் அரிகேசரிக்கு, குலச்சிறையார் முதலமைச்சராக விளங்கினார்.
குலச்சிறையார்
குலச்சிறையார் பாண்டிய நாட்டின் வடகிழக்கு எல்லையில் உள்ள மணமேற்குடி என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர்.
"பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச்
செந்நெ லார்வயல் தீங்கரும் பின்அயல்
துன்னு பூகம் புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையி னார்மண மேற்குடி
அப்பதிக்கு முதல்வர்மன் தொண்டர் தாம்
ஒப்பரும் "பெருநம்பி” என் றோதிய
செப்பரும் சீர்க்குலச் சிறையார்”
என்று சேக்கிழார் பெருமானும்,
"அருந்தமி ழாகரன் வாதில் அமணைக் கழுதுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்.எழில்
சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்னதி காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற் குடியன் குலச்சிறையே"
மாண்பு நிறைந்த மணமேற்குடி
மணமேற்குடி, வடவெல்லையாக வெள்ளாற்றையும், அம்மாப் பட்டினத்தைத் தெற்கெல்லையாகவும், வங்கக் கடலைக் கிழக்கு எல்லையாகவும், நென்மலி, வெள்ளுர் ஆகிய ஊர்களை மேற்கெல்லையாகவும் கொண்டு விளங்கும் ஓர் அழகிய சிற்றூர்; வளம் பொருந்திய ஊர். மருத நில அமைப்பும், முல்லை நில அமைப்பும், நெய்தலும் சார்ந்த சிறப்புடைய சிற்றூர், குருந்த மரங்கள் அடர்ந்து விளங்கும் அழகிய ஊர். இவ்வூரின் வரலாறு ஏழாம் நூற்றாண்டுக்கும் முந்திய பழமையுடையது. மணமேற்குடியில் வாழுநர் வழி வழி தமிழ் மரபுக்கேற்ற வள்ளன்மை மிக்கோராவர். இதனைச் சேக்கிழார்,
"மன்னுவண்மையினார் மணமேற்குடி” என்று பாராட்டுகின்றார். இத்தகு சிறப்புமிகு மணமேற்குடியில் குலச்சிறை நாயனார் தோன்றினார்; நாளும் நலமுற வளர்ந்து, பாண்டிய நாட்டரசன் மாறவர்மன் அரிகேசரியின் முதன்மை அமைச்சுப் பொறுப்பேற்றார்.
கடமை க்ளம்
அரிகேசரி மாறவர்மன் சமண சமயச் சார்பு, அரசி மங்கையர்க்கரசியால் ஏற்றுக் கொள்ள இயலாத நிலை. குலச்சிறை நாயனார் நிலையும் அதுவே. ஏன்? சமண சமயத்தின் கொள்கை, கோட்பாடுகள் பல தமிழ் மரபுகளுக்கு இசைந்தன அல்ல. சமண சமயம் கடுந்துறவு நெறிச் சார்புடையது; பெண்மையை இழிவு ப்டுத்துவது; மனையறத்தை வெறுப்பது; பண்ணும், பாட்டும் ஏற்காதது. இயற்கையோடிசைந்து வாழ்தல், சமணத்திற்கு ஏற்புடையதன்று. வழி வழித் தமிழ் மரபுகளுக்கு மாறாகத் தமது அரசன் சமண சமயத்தைச் சார்ந்து ஒழுகுதல் முதலமைச்சர் குலச்சிறை நாயனாருக்கு நெஞ்சில் துயரத்தைத் தந்தது. அரசி மங்கையர்க்கரசியாருக்கு ஆற்றொனாத் துன்பம். ஆயினும், இருவரும் கடமைகளின் வழி நின்றவர்கள். மாறுபாடுகள் கருதிக் கடமைகளைத் துறப்பவர் பண்பாடுடையவராகக் கருதப்பெறமாட்டார்கள். கடமைகளின், களத்தில் காலூன்றி நிற்பதன் மூலமே மாறுபாடுகளையும் கூடக் காலப் போக்கில் தவிர்க்க இயலும். இந்நெறியையே குலச்சிறை நாயனார் மேற்கொண்டொழுகினார். ஆன்றவிந்தடங்கிய அமைச்சர் அல்லவா? மங்கையர்க்கரசியாருடைய திருவுள்ளக் கருத்தைக் குலச்சிறை நாயனாரின் அமைச்சுத் திறன் முடித்து வைக்கிறது.
திருஞானசம்பந்தரை அழைத்தல்
இதே காலத்தில் தமிழ் நாட்டில் இரண்டு ஞானத் தலைவர்கள் அவதரித்தருளி திருநெறிய தமிழை வளர்த்து வருகின்றனர். அவருள் திருநெறிய திருத்தொண்டின் நெறிக் காவலராக விளங்கியவர் தமிழாளியர் திருநாவுக்கரசர். மற்றொருவர் ஞாலமுய்ய சைவநன்னெறியின் சீலமுய்ய எழுந்தருளிய தமிழ்ஞான சம்பந்தர். இந்த இரண்டு ஞானத்தலைவர்கள் இந்த மண்ணில் நடந்ததால் தமிழ்நாடு எழுச்சியுற்றது; மறுமலர்ச்சி பெற்றது! எங்கும் தமிழ் முழக்கம்! சைவ சமய இயக்கம்! சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தன! திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டில் எழுந்தருளி யிருந்தார். பாண்டிய நாட்டுக்கு நேர்ந்துள்ள இடரினை நீக்கி உய்யும் நெறி காட்டும்படி திருஞான சம்பந்தரை அழைக்க அமைச்சர் குலச்சிறை நாயனாரும் அரசி மங்கையர்க் கரசியாரும் ஒரு சேர எண்ணினர். திருஞான சம்பந்தரைப் பாண்டிய நாட்டுக்கு அழைக்கத் துதுவர்கள் செல்கின்றனர். திருஞான சம்பந்தரும் இவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளுகின்றார். திருஞான சம்பந்தரைப் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை நகரின் எல்லையில் குலச்சிறை நாயனார் எதிர் கொண்டழைக்கிறார். திருஞான சம்பந்தரைச் சிந்தை குளிர, செவிகுளிரப் பாராட்டி வரவேற்கின்றார்.
"சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனி.எதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உயர்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம்" என்பர்.
(திருத்தொண்டர்புராணம். திருஞான. சம்பந்த சுவாமிகள் புராணம்-559)
திருஞான சம்பந்தர் எழுந்தருளிய காட்சியைக் கண்ட மங்கையர்க்கரசியார் தலையன்பால் தாக்குண்டு அமுதப் பால் பொழிகின்றார். அதே போழ்து சமணர்களுடைய வன்மங்களின் முன்னே இந்தப் பால்மணம் மாறாத ஞானக்குழந்தை என் செய்யும் என்று தாயிற் சிறந்த தயையுடன் கவலுகின்றார். இதனை உணர்ந்த திருஞான சம்பந்தர், அரசியாரைத் தேற்றி,
மானினேர் விழி மாதராய் வழுதிக்கு மாபெருந் தேவிகேள்
பானல் வாயொரு பாலனிங்கிவ னென்று நீபரி வெய்திடேல்
ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலென் திருவாலவாயர
என்று பதிகம் எடுத்தோதித் தேற்றுகின்றார்.
“பையவே சென்று பாண்டியற்காகவே”
திருஞானசம்பந்தர், மதுரையில் அமைக்கப் பெற்றிருந்த திருமடத்தில் தங்குகின்றார். திருஞான சம்பந்தரின் வருகை சமண முனிவர்களிடத்தில் கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. அச்சமும் பயமும் கொண்டவர்கள், அறிவை இழந்து விடுவர்; குறிக்கோளை இழந்து விடுவர்; நோன்பை இழந்துவிடுவர்; தவத்தை இழந்துவிடுவர்; நெறியல்லா நெறியில் தலைப்படுவர் என்பதற்கேற்பத் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திரு மடத்திற்குத் தீ வைத்தனர். இதனைத் திருவுள்ளம் கொண்ட திருஞான சம்பந்தர் அருள் நெஞ்சத்தோடு,
"செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐய னேஅஞ்சல் என்றருள் செய்எனைப்
பொய்ய ராம்.அம ணர்கொழு வும்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே"
(மூன்றாம் திருமுறை 51-1)
என்றார். திருஞான சம்பந்தரிடம் சமய வேறுபாடுகள் வழிப்பட்ட காழ்ப்பில்லை; பகைமையில்லை. அருள் குடிகொண்ட நெஞ்சினரான அவர், பாண்டிய நாடு நன் நெறியில் நிற்றல் வேண்டும்; பாண்டிய நாட்டு அரசன் மாறவர்மன் அரிகேசரியால் மங்கையர்க்கரசியார் மங்கல நாண் சிறக்க வாழ்தல் வேண்டும் என்பனவற்றையெல்லாம் திருவுள்ளத்திற் கொண்டு, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” என்றார். தீமை செய்தல் தவறு என்ற படிப்பினையைக் காட்டுவதே இங்கு திருஞான சம்பந்தரின் நோக்கம். அதுவும் தீ வைத்தலாகிய தீவினை செய்தாரைத் தி சென்றடைய ஆணையிடாமல் பாண்டியற்கு ஆகுக" என்றார். அரசின் குறையினால் தான்ே தீவினையாளர் தீவினை செய்ய இயல்கிறது. ஆதலால், ஒறுக்கத்தக்கவர் தீவினையாளர் அல்லர். தீவினைக்குத் துணை போன அரசே என்ற பழந்தமிழ்க் கொள்கை வழி திருஞான சம்பந்தர் "பாண்டியற்கு ஆகுக" என்றார். கடிதோச்சிமெல்ல எறிக. என்ற நெறிப்படி "பையவே சென்று பாண்டியற்கு ஆகுக" என்றார்.
மந்திரமாவது நீறு
திருஞானசம்பந்தரின் ஆணைவழி தீ, மாறவர்மன் அரிகேசரியை வெப்பு நோயாகப் பற்றிக் கொண்டது; உடல் வருந்தியது; எலும்பு உருகியது; முதுகு கூன் விழுந்தது. அரசன் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்ந்தான்். மங்கையர்க் கரசியாரும் குலச்சிறை நாயனாரும் திருஞான சம்பந்தரை அழைத்து மருத்துவம் செய்விக்கலாம் என்று அரசனிடம் விண்ணப்பிக்கின்றனர். அரசனும் உடன்படுகின்றான். ஆனால் அருகிலிருந்த சமண முனிவர்கள் தங்களுடைய மந்திரத்தாலேயே நோயை மாற்றிவிட முடியும் என்று அரசனிடம் விண்ணப்பிக்கின்றனர். அரசன் அறச்சங்கடத் துக்காளாகி நடுநிலை உணர்வுடன் திருஞானசம்பந்தர் வலப்பாகத்திற்கும் சமண முனிவர்கள் இடப்பாகத்திற்கும் மருத்துவம் செய்யும் படி கேட்டுக்கொண்டான். திருஞான சம்பந்தர் "மந்திரமாவது நீறு" என்ற திருநீற்றுப் பதிகத்தை ஒதி மன்னவனின் வலப்பாகத்தில் திருவருள் சிந்தனையோடு திருநீற்றைச் சாத்துகின்றார், வெப்பம் தனிகிறது. சமணர்கள் சமணமந்திரங்களை ஒதி இடப் பாகத்தில் மயிற்பீலியால் தடவுகின்றனர். வெப்பு நோய் தணிந்தபாடில்லை. அரசன் திருஞானசம்பந்தரிடமே இடப்பாகத்திற்கும் திருநீறு சாத்திக் கொண்டு நோய் நீக்கம் பெறுகின்றான்.
அனல் வாதம்-புனல் வாதம்
சமணர்களுக்கு உண்மையறியும் உணர்வு தலைப்படவில்லை. சினமே மேலிட்டது. மூர்க்கத்தனத்தோடு வாதினை விரும்பினர். அவரவர் மந்திரம் எழுதிய ஏடுகளை நெருப்பி லிடுவது; எரியாத ஏடுதாங்கிய மந்திரமே மந்திரம், மறை மொழியே மறைமொழி; அதற்குரிய சமயமே சமயம் என்று உறுதி செய்தனர். திருஞான சம்பந்தர், "தளரிள வளரொளி' என்று தொடங்கும் பாடலின் ஏட்டைத் தீயிலிட்டார். சமண முனிவர்கள் தாம் பொருளெனக் கொண்ட மந்திரத்தை எழுதித் தீயில் இட்டனர். சமணர்கள் இட்ட மந்திர ஏடு எரிந்து சாம்பலாகிவிட்டது.
தோற்ற சமண முனிவர்களுக்கு உண்மையை ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை. மீண்டும் திருஞான சம்பந்தரை வாதுக்கு அழைக்கின்றனர். திருஞானசம்பந்தரும் உடன்படுகின்றார். கடைசியாக அவரவர் சமய மறைமொழி, மந்திர மொழியில் எழுதிப் போட்ட ஏடு வைகையாற்றின் வெள்ளப் போக்கில் செல்லாமல் அந்த வெள்ளத்தை எதிர்த்து வரவேண்டும் என்பது நிபந்தனை. இந்த வாதில் தோற்றால் தாங்கள் அனைவரும் கழுவேறுவதாகவும் சமணர்கள் மன்னர்முன் சூளுரை ஏற்றனர். திருஞானசம்பந்தரும் உடன்பட்டார். திருஞானசம்பந்தர்,
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக
ஆழ்க தீயதெல் லாம்.அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"
(மூன்றாம் திருமுறை-திருப்பாசுரம். பா-1)
குலச்சிறையார் பெருமை
தண்டமிழ்ப் பாண்டிய நாட்டில் தமிழ் நெறிக்கு வந்த இடர்ப்பாடு குலச்சிறை நாயனாரின் அமைச்சுச் சிறப்பால் நீங்கியது. வெப்பு நோயால் பாதிக்கப் பெற்றுக் கூன் விழுந்த மாறவர்மன் அரிகேசரி, நின்றசீர் நெடுமாறன் ஆனான். இத்தகு சிறந்த பணியால் குலச்சிறை நாயனார் திருஞான சம்பந்த சுவாமிகளாலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பாடப்பெறும் புண்ணியப்பேற்றினை அடைந்தார்.
திருஞானசம்பந்தர் திருவாலவாய்க்குரிய சிறப்பாகக் "குலச்சிறை குலாவி நின்றேத்தும் பெருமையுடையது” என்று சிறப்பித்துப் பாடுகின்றார்.
"வெற்றவே யடியாரடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்தி ரியாய
குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ
னுலகினி வியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற .
வாலவா யாவது மிதுவே"
மூன்றாம் திருமுறை திருவால-பா-2
சுந்தர மூர்த்தி நாயனார், "பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் பாடிப் பரவுகின்றனர். நம்பி என்ற சொல் தலைவன் என்ற பொருளுடையது. "பெரு நம்பி” என்று பெருமைக்குரிய தலைவன் என்ற பொருள் தோன்றப் பாடிய அருமை நினைந்து இன்புறத்தக்கது.
புன்மை நிறைந்த பொய் நீங்கவும் தென்னர் நாடு திருநீற்றொளியில் தோயவும் திருஞானசம்பந்தரின் திருவடிகளைத் துணைகொண்டு தொண்டு செய்த குலச் சிறையார் என்று பாராட்டுகின்றார் சேக்கிழார்.
"புன்ன யத்தரு கந்தர்பொய் நீக்கவும்
தென்னர் நாடு தீருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.
(திருத்தொண்டர் புராணம்-குலச்சிறை-10
என்பது காண்க
குலச்சிறை நாயனார் சிவநெறியே சார்பாகக் கொண்டொழுகியவர். சிவநெறிச் சார்பு கருதி நன்மை தீமை கூடக் கருதாது சிவனடியாரை ஏற்றுப் பாராட்டும் இயல்பான ஒழுக்கம் உடையவர் குலச்சிறை நாயனார் என்பதனை,
"உலகர் கொள்ளும் நலத்தின ராயினும்
அலகில் தீமைய ராயினும் அம்புவி
இலகு செஞ்சடை யார்க்கடி யாரெனில்
தலமு றப்பணிந் தேத்தும் தகைமையார்”
(திருத்தொண்டர் புராணம். குலச்சிறை நாயனார்-5 என்று சேக்கிழார் பாராட்டுகின்றார்.
தமிழ்ப் பண்பாட்டில் மிகச் சிறந்தது விருந்து ஒம்புதலாகும். அடியார்களுக்குத் திருவமுது அளித்தலாகும். இந்த இனிய பண்பில் குலச்சிறை நாயனார் மிகச்சிறந்து விளங்கியுள்ளார். பண்புடையோர் பலர்கடி வந்தாலும் நட்புணர்வு மீக்கூரத் திருவமுதளித்தார். உண்பதற்கென்றே யாரொருவர் வந்தாரானாலும் அவருக்கும் விருப்பம் மீதுர உணவூட்டும் நலத்திற் சிறந்தவர் குலச்சிறையார். இதனை சேக்கிழார்,
"பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ய வேண்டி ஒருவர் அணையினும்
எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்தமு துரட்டும் நலத்தினார்."
(திருத்தொண்டர் புராணம் குலச்சிறை நாயனார்-6) என்று போற்றிப் புகழ்கின்றார். -
பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் விரும்பிய நற்சைவக் காப்புத் தொண்டுக்கு மெய்த்தொண்டாராயிருந்து, காப்புச் செய்த பெருமையைச் சிந்தை களிகூரச் சேக்கிழார் வாழ்த்துகின்றார்.
"ஆய செய்கைய ராயவர் ஆறணி
நாய னார்திருப் பாதம் நவின்றுள்ளார்;
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டராயினார்.”
(திருத்தொண்டர் புராணம், குலச்சிறை நாயனார் புராணம்-9)
திருவிளையாடற் புராணம் குலச்சிறை நாயனாரை "மந்திரர் ஏறு" என்றும், "கோதறு குலத்தின் மிக்க குலச்சிறை" என்றும் பாராட்டுகின்றது. திருவிளையாடற் புராணம் குலச்சிறை நாயனாரும் மங்கையர்க்கரசியாரும் செய்த தொண்டினை,
"வாலிதாகிய சைவவான் பயிரினை வளர்ப்பான்
வேலியாகி யோர் இருவரும்"
என்று போற்றிப் பரவுகிறது.
வாலிதாகிய சைவம்
திருவிளையாடற் புராண ஆசிரியர் சைவநெறியினை "வாலிதாகிய சைவம்" என்று சிறப்பித்துப் பேசுகிறார். ஏன்? சைவநெறிதான்் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியது; மானுடத்தின் சிந்தனை எல்லையில் முகிழ்ந்தது; அறிவியலுக்கு இசைந்த பெருநெறி. உலக இயக்கத்திற்கும் மூன்று பொருள்கள் அடிப்படையானவை என்று கொண்டு வாழ்க்கை நியதிகளை முறைப்படுத்திய நெறி சைவம். உயிர்களின் இன்பதுன்பங்களுக்கு உயிர்களே காரணம் என்ற உயர் கொள்கை சைவத்தின் சிறப்பு.
மண்ணின் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்பது சைவத்தின் கொள்கை புன்மை நிறைந்த சாதிச் சழக்குகளி லிருந்து விடுதலை பெற்றது சைவம், ஈந்து உவந்து வாழும் ஒப்பற்ற ஒப்புரவு நெறி சைவத்தின் கோட்பாடு. ஆரவாரச் சடங்குகளிலிருந்து வில்கி இறைவனை மனக்கோயிலில் எழுந்தருளச் செய்து நினைந்து மகிழ்ந்து வாழும் நெறியே சைவநெறி. சைவத்தின் சீலம் பொருள்களினின்றும் விலகியதல்ல. பொருள்களின் ஊடே கடுகிய பற்றும் தற்சார்பின்மையே சைவத்தின் சீலம், இன்னோரன்ன சிறப்புக்களால் சைவம் வாலிதாயிற்று. -
தொண்டினைத் தொடர்வோமாக!
இத்தகு சிறப்புமிகு குலச்சிறை நாயனார் நின்ற நெறியினைப் போற்றும் வகையில் நாம் செந்தமிழையும் சிவ நெறியையும் இரண்டு கண்களெனப் போற்றி வாழ்வோமாக செந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறை வென்று விளங்க, நாமும் குலச்சிறை நாயனார் இயற்றிய தொண்டினையே பற்றுக் கோடாகக் கொண்டு திருத்தொண்டு செய்வோமாக!