குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9/திருமுறைத் திருநாளில் தலைமை உரை

விக்கிமூலம் இலிருந்து

10


திருமுறைத் திருநாளில்
தலைமை உரை


சித்தாந்தச் சிவநெறிச் செல்வர்களே!

செந்தமிழ்ச்-சொக்காின், பேரருட் பெருக்கிலே-குரு ஞானசம்பந்தப் பெருந்தகையின் ஞானவாரமுதப் பெருக்கிலே திளைக்கின்ற நாம் இன்று திருமுறைத் தமிழிலே இன்பம் காணக் கூடி இருக்கின்றோம். இந்த இன்ப வாய்ப்பினை அளிக்கத் திருஉள்ளங் கொண்ட திருப்பெருந்திரு மகாசந்நிதானம் அவர்களின் திருவருளை வந்தித்து வாழ்த்திப் பணிமேற் செல்ல விழைகின்றோம்.

சமய வாழ்க்கை

மக்கட் பிறப்பின், உண்மைப் பயனை எய்த வழி செய்வது சமயமேயாம். ஏன்? சமயச் சார்புடைய வாழ்க்கையே வாழ்க்கையாக மதிக்கப் பெறுகின்றது. மக்களை மிருக வாழ்க்கையிலிருந்து, பூரண மனித வாழ்க்கைக்கு மாற்றி, அருள்தோய்ந்த தெய்வ வாழ்க்கைக்கு உட்படுத்துவது சமயமேயாம். துன்பம் நிறைந்த வாழ்க்கையி


140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


லிருந்து மக்களை இன்ப வாழ்க்கைக்கு இழுத்துச் செல்வதும் சமயமேயாம். சமுதாய உணர்வுடையோர்களாக மக்களை ஆக்குவதும் சமயமேயாம். சமய வாழ்க்கையின் இன்றியமை யாமையை இந்த நாட்டுப் புலவர் பெருமக்களும், ஏனைய நாட்டு அறிவியற் கலைஞர்களும், மிக நன்றாக வற்புறத்தி உள்ளனர். உலகப் பொது மறை தந்த வள்ளுவர், தமது அருமை நூலில் சமய வாழ்க்கையின் இன்றியமையாமையைத் தெள்ளத் தெளியப் பேசியுள்ளார். சிறப்பாகச் சமயச் சார்புடைய வாழ்க்கையே தெளிந்த வாழ்க்கை நிலை என்று கூறிச் சமய வாழ்க்கையின் பெருமையைப் பாராட்டுகின்றார். பழந்தமிழ்ப் பெருநூலாகிய தொல்காப்பியம் &FLDLj வாழ்க்கையை, "அறவெற்றி” என்று பேசுகின்றது. எனவே சமய வாழ்க்கை அன்பு மலிந்த-அருள் நிறைந்த-அறம் தழுவிய வாழ்க்கை என்பது விளங்குகின்றது. சமயச் சார்பற்ற வாழ்க்கை வளமற்றது, பயனற்றது என்று அறிவுடைப் பெரியோர்கள் சொல்லுகின்றனர்.

இந்த நூற்றாண்டின் ஷேக்ஸ்பியர் என்று போற்றப் பெற்ற ஜார்ஜு பெர்னாட்ஷா, சமயச் சார்பற்ற மனிதர்களை, "Men without religion or moral cowards and mostly phycial cowards too"- என்று இழித்துப் பேசுகின்றார்,எனவே வாழ்க்கையை வகைப்படுத்த வளம்படுத்த- அருட்சார் புடையதாக்கச் சமய வாழ்க்கை தேவையான தொன்றேயாம்.

தலையாய சைவத் திருநெறி

இவ்வுலகிலே, மக்கள் என்று அறிவும் உணர்வும், உடையவர்கள் ஆனார்களோ அன்றே சமயமும் தோன்றி வளர்ந்து வளம் பெற்றது. அங்ஙனம், இவ்வுலகமெங்கும் சமயக் கொள்கைகள், அறிவு-உணர்வு நிலைகளுக்கேற்பத் தோன்றி வளர்ந்தன. அங்ஙனம், தமிழகத்திலே தோன்றி வளர்ந்த சமயம் சைவசித்தாந்தத் திருநெறி. இந்த நெறி காலத்தொடுபடாத பழமையை உடையது. மேனாட்டு வரலாற்றறிஞர்களின் அறிவுக்குக் கூட அது மிகப் பழையதொரு நெறியாக-உலகப் பொது நெறியாகக் காட்சி அளிக்கின்றது. சர் ஜான் மார்ஷல் (Sir join Morshal) என்ற GLtrog; "Saivism has a history going back to chalcolithic age or perhaps evenfurther still and it thus takes its place as the mostancient living faith in the world" என்று சைவத்தின் பழமையைப் பேசுகின்றார். சைவம் பழமையால் மட்டுமன்றிக் கொள்கையாலும் மிக உயர்ந்து விளங்குகிறது. சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்த முடிபு என்பதுதான் பொருள். ஏனைய சமயங்களின் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு அவற்றினும் மிக்கு விளங்குகின்ற பெருமையை உடையது சைவம். அதனாலன்றோ, "சைவத்தின் மேற் சமயம் வேறிலை" என்று பாராட்டிப் பேசப் பெற்றுள்ளது. "சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூர்வபட்சங்கள்" என்பது இரத்தினத் திரயம். "அந்தம் வேதாந்தம்; அந்த தரம் சித்தாந்தம்; ஆகலின், அதனைப் பெற்றாரது பெருமை கூறுவார். சிவமென்னும் அந்தர என்றார்" என்பது சிவஞானபாடியம். நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக-இந்தியர் நினைவின் சீர்மைக்குச் சான்றாக-உயர்தர் வாழ்க்கைக்கு எல்லையாக, அணிபெற அமைந்த சமயம், சைவசித்தாந்தச் சமயமேயாம், என்பது உலகறிந்த முடிபு.

முப்பொருள் நிலை

சைவத் திருநெறி, உலகு, உயிர், கடவுள் என்ற முப்பொருள் உண்மையைத் தெளிவாக விளக்குகின்றது. இம் முப்பொருள் நிலையின் ஆய்வுணர்ச்சி, தொல்காப்பியத்திலேயே அமைந்திருக்கின்றது.

"மக்கள் தாமே ஆறறி வுயிரே"

"மாயோன் மேய காடுறை உலகமும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

என வரும் தொல்காப்பிய நூற்பாக்கள், முப்பொருள் தன்மையைத் தெளிவாக விளக்குகின்றன. உயிர் பாச சம்பந்தப்பட்ட உலகினைச் சார்ந்திருப்பதால் உய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. உயிர் உய்வை அடையவுங் கூடும். உயிருக்கு உய்தியைத் தரக்கூடியவன் வரம்பிலாற்றலும், இன்பமும் உடைய கடவுளேயாவான் என்பதும் சைவத்தின் கொள்கை, அங்ஙனம் உயிர் உய்வதற்குரிய வழிகளை-சாதனங்களைச் சைவம், மிகத் தெளிவாகப் பேசுகின்றது. சைவத்தின் சாதனங்கள் அருமையில் எளிமையும், அருள்பயப்பதில் சிறப்பும் கொண்டு, விளங்குகின்றன.

சைவமும் தமிழும்

சைவம் உயிர் தமிழ் உடல். தமிழின் உள்ளீடு சைவமேயாம். சைவத் தமிழென்றே அறிஞர்கள் பேசுவர். சைவத்தை விளக்குகின்ற தமிழ் மறைகளும், சைவம் காட்டுகின்ற இறை இன்பத்தைத் துய்க்க-துணையாகத் தமிழ் மந்திரங்களும் இந்த நாட்டிலே பண்டே இருந்தன என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப"

என்ற தொல்காப்பிய நூற்பாவும், அதற்கு, "தானே என்று. பிரித்துக் காட்டியது தமிழ் மந்திரம் என்பது அறிவித்தற்கு” என்று பேராசிரியர் எழுதிய உரையும், தமிழின் மறைகளும் மந்திரங்களும் இருந்தன என்பதை விளக்குவனவாம்.

"புரையில் பனுவல் நால்வேதம்" எனவும், "நான் மறை முனிவர்" எனவும், "நான்மறை முதல்வர்” எனவும் வரும் புறநானூற்றுப் பகுதிகளும், தமிழ் மறைகளைக் குறிப்பன வேயாம். தேவார திருவாசகங்களிலும் "நான்மறை" "நால்வேதம்’ எனப் பேசப்படுவனவும், தமிழ் மறைகளேயாம். அவைகள், "பண்பொலி நான் மறை' என்றும், "முத்தமிழ் நான் மறை” என்றும் தமிழ் மறைகளைப் பேசுகின்றன. "கொழி தமிழ் மறைப்பாடல்” என்பது மாதவச் சிவஞான முனிவர் வாக்கு.

அத்தமிழ் மறைகள், குமரி கடல் கொள்ளப்பட்ட காலத்து மறைத்தனவாதல் வேண்டும். அங்ஙனம் மறைந்த உருக்கும் தன்மையை உடையன. அருமையில் எளிய அழகுடையவனவாக அமைந்து அருட்டிறம் விளைவிப்பன. இனிய எளிய சொன்னடையில் அமையப் பெற்றன. தண்ணென்ற ஒழுக்கில் தலைசிறந்து விளங்குவன. இம்மையும்-மறுமையும் இன்பம் பயப்பன. நல்ல புத்தங்களைப் பற்றி ஜான் மில்டன் பேசுகின்ற பொழுது, "A good book is the precious life blood of a masterspirit emblamed and treasured upon purpose to a life beyond life" என்று குறிக்கின்றார்.

இங்ஙனம் வாழ்க்கையை உயர்ந்த முறையில் வளம்படுத்த - அருள் நெறிப்படுத்த - இம்மையோடன்றி மறுமையிலும் பயன்தரத் தக்கதாக அமைந்துள்ளவை திருமுறைகள் என்பது அநுபவ உலகறிந்த உண்மை.

திருமுறைகளும் பிற்காலத்துப் புலவர்களும்

தேவாரம் முதலிய திருமுறைகளின் பெருமையையும், பயனையும், பிற்காலப் புலவர் பெருமக்கள் மிக நன்றாகப் பேசியுள்ள்னர் திருமுறைகளைக் கண்டு முறைப்படுத்தி, திருமுறை கண்ட வரலாற்றையுஞ் செய்த நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளின் உயர்பண்பை மிக நன்றாக விளக்கியுள்ளார்கள். ஞான சம்பந்தரது ஞானத் தமிழாகிய தாவாயைத் துணையாகக் கொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்த முடியும் என்று பேசுகின்றார்.

"பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தோற்றோணி கண்டீர்-நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்”

என்பது பாடல், மக்கள் தாம் உய்வதற்கு வழிகாட்டும் குருவாகத் தேவாரத் திருமுறைகளைக் கொள்ளலாம் என்றும், அங்ங்னம் கொண்டொழுகினால், சிவனது, அடிகளைச் சூடும் பேறுபெற்று, பிறவியற்று, பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவர் என்றும் நம்பிகள் கூறகின்றார்.

"உழவாரப்படை கையிலுடையான் வைத்தனதமிழ்
குருவாகக் கொடுசிவனடி சூடத்திரிபவர்
குறுகார்புக் கிடர்படுகுடர் யோனிக்குழியிலே"

என்பது அன்னார் உரை. ஞானத் தவமுனியாக விளங்கி அருண்ஞானப் பாக்களை அருளிய தாயுமான அடிகள் -தேவாரத் திருமுறைகளின் பெருமையை-இனிமைப் பண்பை-இறைவன் உகந்து கேட்கும் இயல்பை மிக அழகாகப் பேசியுள்ளார்கள்.

"தேவரெலாந் தொழச் சிவந்த செந்தாண் முக்கட்
செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக
மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செவிக்கே
மூடனே னியம்பிய சொன்முற்று மோதான்”

என்பது அடிகளது அருமைப்பாடல்

வடமொழி மறைளும் தமிழ் மறைகளும்

வடமொழி மறைகள் இவ்வுலகின் மிகப் பழைய நூல்களாகும். மக்களிடையே சமய வாழ்க்கை தொடங்கப் பெற்ற காலத்திலெழுந்தவை, இருக்கு முதலிய மறைகள். இம்மறைகள் சைவச் சார்புடையன. சைவத்தின் கடவுளாம் சிவபெருமானுடைய பெருமையைப் பலபடக் கூறுவன. இந்த நாட்டில் எழுந்த ஏனைய நூல்களெல்லாம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவேயாம். சிறப்பாகச் சைவ சாத்திரங்களும், திருமுறைகளும் வேதங்களிற் பேசப்பட்டுள்ள செய்திகளை மிகத் தெளிவாக விளக்கு கின்றன. இதனை "வேதம் பசு” என்று வருகின்ற பழம் பாடல் விளக்குகின்றது. திருமுறைகளும், வேதங்களும் பல இடங்களில் ஒரே கருத்தைப் பேசுகின்ற முறையில் ஒத்துள்ளன. இந்த நாட்டில் வேதங்கள் முதல், பிற மதச் சார்புடையவையாகக் கருதப் பெறுகின்ற பகவத் கீதை, பாரதம், இராமாயணம் முதலிய அனைத்தும் சிவபெருமான் முழுமுதற் தலைவன் என்பதையே பேசுகின்றன. ஊழித் தலைவனாகச் சிவபெருமான் விளங்குகின்றான் என்பதை,

"பெருங்கடன் மூடிப் பிரளயங்கொண்டு பரமனும்போ
யிருங்கடன் மூடியிறக்கு பிறந்தான்் களேபரமுங்
கருங்கடல் வண்ணன்களே பரமுங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின்றெம் மிறைநல் வீணை வாசிக்குமே”

என்று நாவுக்கரசர் பேசுகின்றார். இக்கருத்தினை, இருக்கு வேதச் சொற்றொடர்கள் விளக்குகின்றன. இது போகப் பல கோடியான கருத்தொப்புமைகள் இருப்பினும் விரிவஞ்சி விடுகின்றனம்.

அருண்மொழிகளுள் சில

திருமுறைகள் சைவப் பக்தியைப் பற்றிப் பேசுகின்றன. அன்பே அன்பே என்று அழுது அரற்றுகின்ற அன்பு நிலையைக் காட்டுகின்றன. சைவ சாத்திரங்களில் பேசப்படுகின்ற நெறிமுறைகளை இலக்கியம் போலிருந்து விளக்குவன. உயிர்களைத் துன்பத் தொடக்குக்குட்படுத்துவன ஐம்புலன்களே. அழிவிலின்ப நுகர்வுக்குத் தடையா யிருப்பனவும் அவையேயாம். அதனாலன்றோ 'வஞ்சப் புலனைந்து', "ஐம்புலக் களிறு” என்றெல்லாம் அறிஞர்கள் இழித்துப் பேசுகின்றனர். இந்த ஐம்புல நுகர்ச்சியினை அடக்கி ஆளுதலைப் "பேராண்மை” என்று பாராட்டுகின்றார் வள்ளுவர். ஞான உணர்வு நிகழ வொட்டாத வண்ணம் தடைசெய்வன இவ்வைம்புலன்கள். ஒரோ வழி உறுதியை நாடுகின்ற நிலை உள்ளத்திற்கு வரும் பொழுது, இப்புலன்களின் ஆற்றல் மிக்கு நின்று, அந்த ஞான உணர்ச்சியினை அடக்குகின்றது என்று அநுபவ உள்ளத்த வர்கள் பேசுகின்றனர். இறைவனே தாயும் தந்தையும். அவனே எல்லா உயிர்களுக்கும் இன்பம் செய்பவன் என்றெல்லாம் கருதி, அன்பு செய்ய எண்ணுகின்றது உள்ளம். ஆனால் உடலில் வாழும் ஐவர் ஒன்றி இருந்து நினைக்கவெட்டாது இன்னல் விளைவிக்கின்றனரே என்று அஞ்சுகின்றேன் என்று ஞானசம்பந்தர் பாடுகின்றார்.

"தாயுநீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயுநின் பாலன்பு செய்வானா தரிக்கின்ற துள்ளம்
ஆயமாய காயந்தன் னுளைவர்நின் றொன்ற லொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே!”

என்பது பாடல். இக்கருத்தினையே அப்பரடிகளும்,

"மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவு யரத்துரண்டி
உய்வதோர் உபாயம்பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர்சாலச்
செய்வதொன் தறியமாட்டேன் திருப்புக லூரரீைரே"

என்பர். இந்த ஐம்புலச் சேட்டைகள் அடியோடு அடங்குதற்கும், உண்மை ஞான உணர்வு தடையின்றி நிகழ்ந்து, திருவருளின்பத்தைத் துய்த்தற்கும் சாதனமாயிருப்பது சிவனடியாருடைய இணக்கமும் வழிபாடும் என்பது சைவத்தின் சிறந்த கொள்கை, சிவபத்தர்களுக்கு அன்பு செய்து, மனம் சொல் செய்கைகளான் அவர்வழி நிற்பாருக்கு உலகியல் உணர்வு மாறிச் சிவாநுபூதியுணர்வே மேம்பட்டு நிகழும். அஃது அங்ங்னம் நிகழவே, உடலுள்ள அளவும் நிற்பனவாய பிராரத்த வினைகள் அவர்க்கு நுகர்ச்சியாதல் செல்லாமையின், அவை வாதிக்கமாட்டா; எனவே வீட்டுணர்வை நிலைநிறுத்துவது சிவனடியாருடைய வழிபாடேயாம். அது மாத்திரமன்றிச் சிவனடியாரல்லாதாருடைய இணக்கம் அறவே நீங்கவும் வேண்டும். இக்கருத்தினை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார்,

"மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ்
சிறப்பிலார் தந்திறத்துச் சேர்வை-யறப்பித்துப்
பத்த ரினத்தாய்ப்பர னுணர்வினா லுணரு
மெய்த்தவரை மேவா வினை"

என்று கூறி விளக்குகின்றார். இக்கருத்தினை அப்பரடிகள்,

"உரைதளர்க் துடலார் நடுங்காமுனம்
நரைவிடை யுடையா னிடம் நல்லமே
பரவுமின் பணிமின் பணிவாரோடே
விரவுமின் விரவாரை விடுமினே"

என்று அழகுறக் கூறுகின்றார். சிவனடியார்களை வழி படாதவர்கள் என்னுடையரேனும் மதித்தற்குரியரல்லர் என்பது நக்கீரர் கருத்து.

"பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ-இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்"

என்பது சுக்கிரருடைய நற்றமிழ்ப் பாடல். இன்னோ ரன்ன பல அரிய கருத்துக்களைத் திருமுறைகளில் கண்டு மகிழலாம்.

திருமுறைகளின் பயன்

திருமுறைகளின் பயனை, திருமுறைகள் எழுந்த வரலாற்றைக் கொண்டே உணர முடிகின்றது. திருமுறைகள் பல சந்தர்ப்பங்களில் இன்னல்களை நீக்கி இன்பந்தர எழுந்தனவாம். அன்று அப்பாடல்கள் செய்த நன்மைகளை, இன்றும் உணர்ந்து ஒதுகின்றவர்களுக்குக் கொடுத்தே வருகின்றன. அஃதோடன்றி, திருமுறைகளின் பயனை சிறப்பாகத் தேவாரங்களின் பயனை அவற்றை அருளிய நாயன்மார்களே அறுதியிட்டு உரைத்துள்ளனர். சிவஞானச் செம்மலாராகிய ஞானசம்பந்தப் பெருந்தகையாரது அருட்பாக்களைப் பயில்வோர், நோயினின்று விடுபெறுவர். சிவகதிப் பெருவாழ்வும் பெறுவர் என்பதை,

"ஞான சம்பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே"

- எனவும்,

"கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன்சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே' எனவும்,

"அந்திவண்ணன், தன்னை அழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வரே"

எனவும், வரும் ஞானசம்பந்தரது அருண் மொழிகள் விளக்குகின்றன. ஞானசம்பந்தரது அருட்டாக்களைப் பயிலுகின்றவர்கள் இம்மை வாழ்வுக்குரிய அனைத்தும் பெற்றுத் திருவருள் இன்பமும் பெறுவர் என்பதை,

"சினமவிகரியுரி செய்தசிவனுறை தருதிருமிழலையைமிகு
தனமனச்சிரபுர நகரிறை தமிழ்விரகன துரை யொருபதும்
மனமகிழ்வொடு பயில்பவ ரெழின்மலர் மகள்கலைமகள் சயமகள்
இனமலிபுகழ் மகள் இசைதர இருநிலனிடை இனிதமர்வரே”

என்ற அருட்பாடல் வலியுறுத்துகின்றது. திருமுறைப் பாக்களை விரும்பிப் பயில்பவர்கள் மக்களின் மேலாயவர் என்பதை ஆளுடைய நம்பிகள்,

"கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை விரும்
புவார் மேலையார் மேலையார் மேலாரே”

என்றருளி விளக்கியுள்ளார்கள்.

போற்ற வேண்டிய கடமைப்பாடு

இத்தகு திருமுறைகளைப் போற்றிக் காத்துப் பயின்று இன்பப் பெருவாழ்வைப் பெறவேண்டுவது சைவத் தமிழ் மக்களது கடமைப்பாடு. அங்ங்னம் போற்றுவதால் நமது நாட்டு அருட்செல்வத்தைக் காப்பாற்றிய பெருமையை அடைவதோடன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய தொரு பயனையும் முன்னேற்றத்தையும் அடைகின்றோம்.

உயர்ந்த வாழ்க்கையை உடையராய் இருந்த சான்றோர்களது வாழ்க்கையையும் அவர்களது அருமைத் திருவாக்கு களையும் பயில்வதனால் நாம் உயர்கின்றோம். "சான்றோர் தம் வாழ்க்கை நிலை, நாமும் நம்முடைய வாழ்க்கை நிலையை இறப்ப உயர்ந்ததாகச் செய்து கொள்ளுதல் கூடும் என்பதை நினைப்பூட்டுகின்றது” எனவும், "வாழ்க்கையில் வழியற்றுக் கலங்கும் மக்களை, அது நல்வழியிற் செலுத்தும் இயல்புடையது” எனவும் வரும் Longfellow என்ற மேனாட்டுப் புலவரின் பொருளுரைகள் சிந்தித்துணரத் தக்கன. அந்த அடிப்படையில் திருமுறை ஆசிரியப் பெரு மக்களது வாழ்க்கை வரலாறுகளும், அவர்களது அருண் மொழிகளும் மக்களை உயர்த்துவனவாம்.

மக்களை அறத்துறையில் ஆற்றுப்படுத்தி அருள்நெறி நின்றொழுகச் செய்வனவாம் இத்தகு திருமறைகளை நாம் போற்றிப் பாராட்டாது வாளா இருந்து மக்களது மனத்திலே இடம் பெறாத நிலைக்கு விடுவோமானால் நாம் அருளறத்தையே சிதைத்தவர்கள் ஆவோம். திருமுறைகளின் பயிற்சி மக்களிடையே பெருகி அமைந்து, அதனாலாய அற உணர்ச்சியும், அருளுணர்ச்சியும் இல்லையானால் இவ்வுலகில் திருமறைகளுக்கு எந்த நிலையைச் சொல்வது? பெரும்பான்மையும் மறைந்தது போலத்தான்ே! ஜான் மில்டன் என்ற பெரும்புலவர், நல்ல புத்தகங்களை அழிப்பது நன்மையையே அழிப்பதாகும்; அச்செயல் நல்ல மனிதர்களைக் கொல்வதைவிடக் கொடியதொரு செயலுமாம் என்று கூறுகின்றார். "As good almost kill a man as kill a good book; who kills a man kills a responsible creature, god's image; but he who destroys a good book kills reason itself" என்பது அன்னாரின் தெருளுரை. எனவே திருமுறைகளைப் போற்றிப் பரப்புகின்ற அருட் பணியை நாம் செய்யவில்லையானால் அருட்பெருமக்கள் கண்டு, நால்வர்களின் நல்லருள் உணர்ச்சியால் வளர்க்கப் பெற்ற அருளறத்தை அழித்தவர்களாவோம். அத்தகையதொரு கொடிய தீங்கு நம்மை வந்து சாராவண்ணம் நாமே காத்துக்கொள்வோமாக.

தொகுப்புரை

இன்று உங்கள் நினைவிற்கு கொண்டு வந்த கருத்துக்களைத் தொகுத்துக் கூறி அமைய விரும்புகின்றோம். தமிழகத்தின் தனி நெறி பெருநெறி திருநெறி சைவ சித்தாந்தத் திருநெறியேயாம். அது முடிந்த முடிபாகக் கருத்துலகக்குக் காட்சி அளிக்கின்றது. ஏனைய சமயங்களும் மக்கள் நலம் கருதுகின்ற இயக்கங்களும், மக்களை மக்களாகவே கருதி அன்பு செய் என்று சொல்ல, சைவம், மக்களை-மனநலம் சிறந்த மக்களை-அருளறம் பூண்ட பெருமக்களைக் கடவுளாகவே எண்ணி அன்பு செய் என்று சொல்கிறது. ஆண்டவன் அருளற நெறிவழி நிற்பவர்கள் அரனோடொப்பர். அப்பெருமக்களைச் சாருவதனால்-வழிபடுவ தனால் பல்வளமுற்று அழிவிலின்பத்தையும் பெற்று வாழ முடியும் என்பது சைவத்தின் கொள்கை. தேவாரத் திருமுறைகளை உள்ளன்புடன் ஓதி அனுபவிப்பவர்கள் ஒதக் கேட்பவர்கள் இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று இனிது வாழ்வார்கள் என்பன போலச் சில செய்திகளைச் சிந்தித்தோம்.

முடிப்புரை

மெய்யன்புடையீர், தமிழகத்தின் தனிச் சொத்து தெய்வத் திருமுறைகள். திருமுறைகள் உணர்த்தும் அருள றத்தை மக்களிடையே பரப்புதல் பெரும் பணியாகும் -இன்றைய சூழ்நிலைக்குத் தேவையான தொரு பணியுமாகும். சைவத் தமிழன்பர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பணியைச் செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள். கடமையை உணர்ந்து பணியில் இறங்குவோமாக அத்தகையதொரு பணியை அகனமர்ந்த அருளுணர்வுடன் இயன்ற போதெல்லாம் செய்துவரும் அருட்குருமூர்த்திகளின் அடி இணைகளுக்கு உள்ளந் தோய்ந்த-நன்றி கலந்த வணக்கத்தை உரிய தாக்குகின்றோம்.

              வளர்க சைவம்!
              மல்குக திருமுறை வளம்!!