குமண வள்ளல்/யானைப் பரிசில்
6. யானைப் பரிசில்
பெருஞ்சித்திரனார் வெளிமானூரை விட்டுப் புறப்பட்டவர் தம் ஊருக்குக்கூடப் போகவில்லை. நேரே குமணனது ஊரை அடைந்தார். அங்கே சென்றாலே அவருக்குப் புதிய ஊக்கம் உண்டாகும். அவரைக் கண்டவுடன் அன்போடு வரவேற்கும் கரங்கள் அங்கே இருந்தன. அன்பு கனியப் பார்க்கும் குளிர்ந்த கண்கள் இருந்தன. முன்மொழி புகன்று நயங்காட்டும் வாய்கள் இருந்தன. நல்ல நெஞ்சங்கள் இருந்தன. அதனால் முதிரத்தின் காற்றுப் படும் எல்லைக்குள்ளே வரும் போதே அவருக்கு உள்ளம் குளிர்ந்தது. உலகிலுள்ள எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்கி நிற்பவை. புலவர்களோ வரிசை அறிந்து பாராட்டி அன்பு செய்பவர்களுக்காக ஏங்கி நிற்பவர்கள். வரிசை அறியாதவர்களையும் அன்பு இல்லாதவர்களையும் காணும்போது அந்த ஏக்கம் அவர்களுக்கு அதிகமாகிறது. அந்த நிலையில் தான் இப்போது பெருஞ்சித்திரனார் இருந்தார்.
வழக்கம்போலக் குமணன் தாயைக் கண்ட குழந்தை போலக் களிக் கூத்தாடினான். “வீட்டில் யாவரும் சுகமாக இருக்கிறார்களா?” என்று கேட்டான்.
“மன்னர் பிரானுடைய அருளால் யாவரும் சுகந்தான்!” என்று விடையிறுத்தார் புலவர்.
பிரிந்தவர் கூடினார்கள்; பேசினார்கள். அன்பு பொங்கப் பொங்கப் பேசினார்கள். புலவர்களின் நிலையைப்பற்றியும், உத்தமமான கொடையாளிகளைப் பற்றியும் மாறி மாறிப் பேசினார்கள். விருந்துண்ணுவது, புறத்தே சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவது, தமிழின்பம் நுகர்வது, மனங் கலந்து பேசி மகிழ்வது, குமணனைக் காண வரும் பிற புலவர்களோடு பேசிக் களிப்பது—இப்படியாக ஒவ்வொரு நாளும் பெருஞ்சித்திரனாருக்கு இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது.
ஆயினும், இளவெளிமானுக்குச் சூடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் புலவர் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. குமண வள்ளலிடம் யானையைப் பெற்றுக்கொண்டு போய், “இதோ பார், நான் பெற்ற பரிசிலை” என்று அவனுக்குக் காட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதை நிறைவேற்றிக்கொள்ளும் செவ்வியை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் மாலை நேரத்தில் காலாரக் குமணனும் புலவரும் முதிரமலைப் பக்கத்திற்குச் சென்று உலாத்திக் கொண்டிருந்தார்கள். பேச்சுக்கு நடுவிலே கங்கை வந்தது. அது எந்தக் காலத்திலும் வற்றாமல் இருப்பது என்று குமணன் சொன்னான். புலவர் அது கேட்டு, “நான் அந்தக் கங்கையைக் கண்டதில்லை. ஆனால் என்றும் வற்றாத வேறு ஒரு கங்கையைக் கண்டிருக்கிறேன்” என்றார்.
“காவிரியைச் சொல்கிறீர்களோ?
“இல்லை; இல்லை. மேகங்கள் எல்லாம் சமுத்திரத்திலுள்ள தண்ணீரை முகந்துகொண்டு மலை முகடுகளிற் கூடி நிறைய மழை பெய்கின்றன, மாரிக் காலத்தில் கோடை வந்தால் அந்த மழை மாறி விடுகிறது. கதிரவன் தன் வெம்மைக் கதிர்களை வீச, மக்கள் வெப்பத்தால் நலிகிறார்கள். பல ஆறுகள் தண்னீர் இன்றி வறண்டு போகின்றன. அப்படி மழை மாறினாலும் பிற ஆறுகள் வறண்டு போனாலும் மக்கள் யாவரும் ஒருங்கே சென்று உண்ணும்படியாக இருகரையையும் தொட்டுக்கொண்டு நீர் நிரம்பிச் செல்லும் கங்கையைப்போல—”
குமணன் அதுவரையில் புலவர் ஏதோ ஆற்றைச் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தவன், கங்கையை உவமையாக்கி எதையோ சொல்ல வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டான்.
“கங்கையைப் போல வேறு ஆறு ஒன்று இருக்கிறது என்று சொல்லப் போகிறீர்களா? அல்லது—” குமணன் பேச்சை முடிக்கவில்லை; புன்முறுவல் பூத்தான்.
புலவரும் புன்னகை செய்தபடியே கூறலானார், “ஆம்; நான் உயிரற்ற ஆற்றைச் சொல்ல வரவில்லை. ஆற்று நீரைவிட மக்களைக் காப்பாற்றும். நல்லவர் நீர்மை சிறந்தது. வள்ளல்களுடைய தண்ணளி இல்லாவிட்டால் உலகம் உய்யாது. கங்கை கோடையிலும் நிரம்பிச் சென்று பயன் தருவதுபோல, என்னைப் போன்ற புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறு இடங்களில் எந்த விதமான உதவியும் கிடைக்காமல் இருந்தாலும், வேண்டியவற்றை, எங்களுக்கு நிரம்பத் தரும் வள்ளன்மை இங்கே மன்னர் பெருமானிடம் இருக்கிறது.”
“கடைசியில் கங்கையைப்பற்றிய பேச்சு இப்படி வந்துதான் முடிய வேண்டுமா?”
“கங்கையானாலும் எந்த ஆறானாலும் கடலிலே போய்ச் சேர வேண்டும். அப்படியே நாங்கள் எதைப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ் இங்கே வந்து தான் நிற்கும்.” “நீங்கள் பேசுவதைப் பார்த்தால் ஊருக்குப் போக அடிகோலுகிறதாக நினைக்கிறேன். உங்களுக்கு இப்போது என்ன குறை வந்துவிட்டது? திடீரென்று கங்கையை உவமையாக்கி என்னைப் புகழ்கிறீர்களே!”
“பைத்தியக்கார ஆசை ஒன்று என் நெஞ்சில் உதித்தது. அதைச் சொல்லலாமா, கூடாதா என்ற அச்சம் தோன்றுகிறது.”
“இவ்வளவு நாள் பழகியும் என்னிடம் சொல்வதற்கு என்ன தடை?”
“நான் எங்காவது சென்று தங்கினால் ஒரு வாரம் வரையில் என்னைப்பற்றி என் குடும்பத்தினர் அதிகமாகக் கவலைப்பட மாட்டார்கள். அதற்குப் பிறகு என் மனைவி ஒவ்வொரு நாளும் என் வரவை எதிர்நோக்கிக் கொண்டே இருப்பாள். வழிமேல் விழி வைத்துப் பார்த்து, வராவிட்டால் சிறிது சோர்வு அடைவாள்.”
“இப்போதே புறப்பட்டுப் போகவேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?”
“இல்லை; இல்லை. என் ஆசையை அல்லவா சொல்ல வந்தேன்? நான் இங்கிருந்து ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் கொண்டு போகும்போது அவள் மிக்க ஆர்வத்தோடு அவற்றைப் பார்த்துப் பிரமிப்பை அடைவாள்; மன்னர் பெருமானை நன்றியறிவுடன் வாழ்த்துவாள். இவ்விடத்துப் பழக்கம் எனக்கு ஏற்பட்ட பிறகு ஒரு முறைக்கு ஒரு முறை நான் கொண்டு செல்லும் பொருள்கள் மிகுதியாவதை அவள் கண்டு களிக்கிறாள். இத்தகைய பொருட் குவியல்களை அவள் எங்கே பார்த்திருக்கிறாள்? இந்த முறை நான் திரும்பிப் போகும்போது அவள் வியப்பினால் மூர்ச்சை போடும்படி ஒரு காரியம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”
“ஆசை, ஆசை என்று சொல்கிறீர்களே அன்றி, இன்னது வேண்டும் என்று சொல்லவில்லையே!”
“சொல்கிறேன். நான் வரும் வழியை நோக்கி நோக்கிக் கண் மங்கிய அவள் முன் போய் நான் நிற்க வேண்டும். மன்னர்பிரான் வழங்கும் செல்வங்களோடு செல்வது மாத்திரம் அன்று; பனையைப் போன்ற துதிக்கையையும் முத்து உண்டாகும்படி முற்றிய தந்தத்தையும் மலையைப் போன்ற தோற்றத்தையும் உடைய யானையை முகபடாம் முதலியவற்றால் அலங்காரம் செய்து, இருபுறமும் மணிகள் ஒலிக்க, நான் ஏறிச் செம்மாப்புடன் சென்று நிற்கவேண்டும்.”
குமணன் அதைக் கேட்டு நகைத்தான்.
“இந்தப் புலவனுக்குள்ள பேராசை எவ்வளவு என்று எண்ணவேண்டாம். வறுமை யொன்றுதான் என்னிடம் உள்ள ஆற்றல். அது கழுத்தைப் பிடித்துத் தள்ள இங்கே வந்து அரசர் பிரானுடைய வள்ளன்மையைப் புகழ்ந்து பாடுகிறேன். கவிதையாற்றலில் நான் சிறந்தவனோ, அல்லனோ அறியேன். எப்படி இருந்தாலும் என்னுடைய திறமையை நோக்குவதானால் என் ஆசை பேராசையாகவே தோன்றும். ஆனால் ஒன்றை விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் சிறுமையை மன்னர் பிரான் நினைக்கக்கூடாது. தம்முடைய பெருமையை நினைந்து அதற்கு ஏற்ற வகையில் அளிக்கலாம் அல்லவா? மற்றப் பொருள்களை எல்லோரும் வழங்குகிறார்கள், அவர்கள் அனைவரினும் மேம்பட்ட சிறப்பு உடையவர் முதிரமலைத் தலைவர் என்று புலவர்கள் பாடுகிறார்கள். ஆதலால் அந்தப் பெருமைக்கு ஏற்ற வகையில் மன்னர்பிரானது கொடை இருக்கவேண்டாமா? என்னை அளவிட்டு நோக்காமல் அரசர்பிரான் தம்மை அளவிட்டுப் பார்த்தால் நான் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்பது புலப்படும்.”
“இத்தனை பேச்சு எதற்கு? உங்களுக்குப் பேராசை என்று நான் சொன்னேனா? போயும் போயும் யானையைத்தானே கேட்கிறீர்கள்? இது ஒரு பெரிய பொருளா? என் நாட்டையே கேட்டாலும் கொடுத்து விடுவேனே! உங்கள் புலமையை அளவிட உங்களுக்குத் தகுதி இல்லை. உங்களுக்கு யானையின் மேல் ஆசை உண்டென்று தெரிந்திருந்தால் முன்பே தந்திருப்பேனே! அதைக் கொண்டு போய்க் கட்டிப் போட்டுத் தீனி போடவேண்டுமே! இப்போது உங்களுக்கு எத்தனை யானை வேண்டும்?”
“ஒன்றை நான் கொண்டு போய்க் காப்பாற்றினால் போதாதா?”
“அப்படியே தருகிறேன். அதைப் பாதுகாக்க ஆளும் பொருளும் தருகிறேன்.”
புலவர் அதைக் கேட்டுப் பெற்ற மகிழ்ச்சியை அளவிட முடியுமா? ‘யானை, அதற்கு ஆள், அதை வளர்க்கப் பொருள்! அடே அப்பா! வள்ளன்மையின் பெருமைதான் என்னே!’ என்று வியந்தார்.
“நான் யானையின் மேல் போகும்போது கண்டவர்கள் யானை ஏது என்று கேட்பார்கள். நான் மன்னர்பிரான் வழங்கியதாகச் சொல்வேன். மற்றப் புலவர்களிடமும் சொல்வேன். எல்லோரும் சேர்ந்து மன்னர் பெருமானை வாழ்த்துவோம். அதுமட்டும் அன்று; மற்றொரு பயனும் உண்டு.”
“என்ன அது?” என்று கேட்டான் குமணன்.
“புலவனுக்கு முதிரமலைத் தலைவர் யானை கொடுத்தார் என்ற செய்தி மற்ற அரசர் காதிலும் விழும். பணத்தைப் பூதம் போலக் காக்கின்ற வேந்தர்களும், புலவர்கள் வந்தால் பிச்சை யிடுவதுபோலச் சிறிது கொடுத்தனுப்புகிற அரசர்களும் இருக்கிறார்கள். அவர்களெல்லோரும் நாணும்படியாக நான் போவேன். ‘குமண வள்ளல் யானை தந்தார்; அதைப் பெற்ற புலவர் அதோ போகிறார்’ என்று நாலுபேர் மதிப்போடு சொல்லப் பெருமிதத்தோடு செல்வேன்.”
குழந்தை உள்ளத்தோடு புலவர் பேசினர். அதைக் கேட்கக் கேட்கக் குமணன் மகிழ்ச்சி அடைந்தான். தன் குழந்தை அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதைத் தந்தை கேட்டு மகிழ்வதில்லையா?
“எப்போது புறப்பட எண்ணியிருக்கிறீர்கள்?”
“மன்னர்பிரான் மனமுவந்து விடை கொடுக்கும் போது.”
“உங்களுக்கு வீட்டு நினைவு வந்துவிட்ட பிறகு உங்களை நிறுத்திவைப்பது பாவம். நீங்கள் நாளைக்கே யானையுடன் புறப்படலாம்.”
புலவர் களி பொங்க நின்றார். தம் கருத்தையெல்லாம் பாடல் வடிவத்தில் வடித்துச் சொன்னர்.[1]
மறுநாளே யானை ஒன்றை அலங்காரம் செய்து, அதன்மேல் புலவரை ஏற்றி, ஒரு பாகனையும் அனுப்பினான் குமணன். வழக்கப்படி பல வண்டிகளில் பரிசுப் பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் நிரப்பிப் பின் செல்லும்படி ஏற்பாடு செய்தான். புலவர் யானையின் மேல் ஏறிக்கொண்டார். தாம் நினைந்தபடியே காரியம் நிறைவேறுவதை எண்ணி எண்ணி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார். யானை புறப்பட்டது. குமணன் அவர் தம்முடைய ஊருக்குச் செல்லுகிறார் என்றுதான் நினைத்தான்.
இளவெளிமானுக்கு முன்னே சென்று, தாம் யானைப் பரிசில் பெற்றதைச் சொல்லவேண்டும் என்பதே புலவருடைய அவா. ஆதலின் நேரே யானையை வெளிமானூர்க்கு ஓட்டச் சொன்னார். அதன் வழியாகவும் புலவருடைய ஊருக்குப் போகலாம்.
யானையும் வண்டிகளும் வெளிமானூர் எல்லையை அடைந்தவுடன் புலவர் வண்டிகளை அங்கே நிறுத்தச் சொன்னார். யானையை மாத்திரம் ஊருக்குள் ஓட்டிச் செல்லச் செய்தார். ஊரில் அரண்மனையைச் சார்ந்த ஓரிடத்தில் வெளிமான் பிறந்த குலத்தினருக்கு உரிய காவல் மரம் நின்றது. தமிழ் நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் தங்கள் குலத்துக்கு அடையாளமாக மாலை, கொடி முதலியவற்றைத் தனித் தனியே வைத்திருந்தார்கள். அத்தகைய அடையாளங்களுள் ஒன்று காவல் மரம். கோயிலில் தலத்துக்குரிய மரம் இருப்பதுபோல அரச குலத்துக்குக் காவல் மரம் இருந்தது. அதை அரசர்கள் கண்ணைப் போலப் பாதுகாத்தார்கள். பகைவரோடு போர் புரியும் போது மன்னர்கள் அப்பகைவர்களுக்குரிய காவல் மரத்தை வெட்டிவிடுவார்கள். அதிலிருந்து போர் மூளுவதும் உண்டு. தோற்ற மன்னர்களுடைய காவல் மரத்தை வெட்டி வெற்றி முரசு செய்ய அதைப் பயன்படுத்திக்கொள்வது பழங்கால மன்னர்களுக்கு வழக்கமாக இருந்தது.வெளிமானூரில் அந்நாட்டுச் சிற்றரசனுக்குரிய காவல் மரம் தக்க பாதுகாப்பில் இருந்தது. அதைச் சுற்றிக் காவலர் நின்றுகொண்டிருந்தனர். பெருஞ்சித்திரனார் யானையை ஓட்டிச் சென்று அந்தக் காவல் மரத்தில் கட்டும்படி செய்தார்; அவர் புலவராதலின் காவலாளர்கள் அவரைத் தடுக்கவில்லை, வெளிமான் வாழ்ந்திருந்த காலத்தில் அவர் அந்த ஊருக்கு வந்து பழகினவர் அல்லவா?
யானையைக் காவல் மரத்தில் கட்டிவிட்டு, பாகனை அங்கே நின்று பார்த்துக்கொள்ளுமாறு சொன்னார். அப்பால் அவர் நேரே அரசனுடைய மாளிகையிற் புகுந்தார். இளவெளிமான் ஓரிடத்தில் அமர்ந்திருந்தான். அவனைப் புலவர் அணுகினார்.
“நான் அளித்த பரிசில் வேண்டாம் என்று ஓடினீரே! மறுபடியும் ஏன் வந்தீர்? கிடைத்த மட்டும் லாபம் என்ற அறிவு இப்போது வந்துவிட்டதோ?” என்று அந்தப் பண்பிலி கேட்டான்.
புலவருக்கு வரும் போதே ஆத்திரம் இருந்தது. அவன் கூறியதைக் கேட்டவுடன் கோபம் மூண்டது.
“நான் உங்களிடம் பரிசில் வாங்க வரவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு உலகம் விரிந்திருக்கிறது, காப்பாற்றுவோர் பலர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றேனே; அதை மெய்ப்பிக்க வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.
“உமக்கு இப்போது என்ன பாக்கியம் கிடைத்து விட்டது?” என்று அவன் அலட்சியமாகக் கேட்டான்.
“உலகத்தில் புலமை பெற்ற எங்களைப்போன்ற இரவலர் பலர் இருக்கிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்துப் போற்றும் புரவலர்களும் பலர் இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் இரவலர்களைக் காப்பாற்றும் புரவலர் ஆகமாட்டீர்கள். உங்கள் உதவி இல்லா விட்டால் புலவர்களைக் காப்பாற்றுவார் இல்லாமற் போகவில்லை. இப்போது, நல்ல வள்ளல்களிடம் சென்று வேண்டிய பொருளைக் கேட்கும் இரவலர் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்; அந்த இரவலர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் கொடையாளர். இருப்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நான் ஒரு பரிசில் பெற்று வந்திருக்கிறேன். அதை வந்து உங்கள் கண்ணால் பாருங்கள். உங்கள் காவல் மரம் தளரும்படி நான் பெற்ற பரிசிலாகிய நெடுநல் யானையை அதில் கட்டி விட்டு வந்திருக்கிறேன். அதை வந்து பார்த்த பிறகாவது இரவலருடைய பெருமையையும் புரவலருடைய இயல்பையும் தெரிந்துகொள்ளுங்கள். சரி, உங்களிடம் நின்று பேசுவதில் பயன் ஒன்றும் இல்லை. அரசரே! போய் வருகிறேன்.” என்று சொல்லி ஒரு பாடல் எழுதிய ஓலையையும் அவனிடம் கொடுத்து விட்டு வேகமாய்த் திரும்பினார், தம் யானையைக் காவல் மரத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு ஊர் எல்லையை அணுகி, அங்கிருந்த வண்டிகளுடன் புறப்பட்டு விரைவாக ஊர் போய்ச் சேர்ந்தார்.
இளவெளிமான் புலவர் மிடுக்குடன் பேசிவிட்டுச் சென்றதைக் கண்டு செயலிழந்து இருந்தான். அவருடைய நெஞ்சத் திண்மை அவனை அப்படி ஆக்கிவிட்டது. அவர் வந்து படபடவென்று பேசிவிட்டுப் போனது ஒரு வேளை கனவாக இருக்குமோ என்று கூட அவனுக்கு ஐயம் உண்டாயிற்று. ஆயினும் பெருஞ்சித்திரனார் விட்டுச் சென்ற ஓலை முன்னே கிடந்தது. அதை மெல்லக் கையில் எடுத்துப் படித்தான்.
இரவலர் புரவலே நீயும் அல்ல:
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி, இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின்ஊர்க்
கடிமரம் வருந்தத் தத்துயாம் பிணித்த
நெடுதல் யானைஎம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.
[நீயும் இரவலர்களாகிய புலவர் முதலியவர்களைப் பாதுகாக்கும் தன்மை உடையாய் அல்லே; இரவலர்களும் உன்னேயன்றி வேறு புரவலர்கள் இல்லே என்று இருப்பவர்களும் அல்லர்; இப்போது இரவலர்கள் இருப்பதையும் பார்; இரவலர்க்கு ஈபவர்கள் இருப்பதையும் காண்பாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரத்தில் கொண்டு வந்து யாம் கட்டியிருக்கும் உயர்ந்த கல்ல யானே யாம் பெற்ற பரிசில்; விரைவான குதிரையுடைய அரசனே! நான் போகிறேன்.]
பாட்டைப் படிக்கப் படிக்க இளவெளிமானுக்குக் கோபமும், நாணமும், இரக்கமும் மாறி மாறி உண்டாயின. புலவருடைய பெருமைக்குமுன் மன்னன் பெருமை எம்மாத்திரம்? செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்புப் பெறுகிறவர்கள் புலவர்கள். அவர்கள் பெருமையை மன்னர்கள் அறிந்து போற்றினால் அவர்களால் புகழ் பெறுவார்கள். இல்லையானால் மணம் இல்லாத மலரைப்போல வாழ்வார்கள்.
இளவெளிமான் பின்பு, தன் காவல் மரத்தில் புலவர் யானையைக் கொண்டுவந்து கட்டியிருந்தார் என்ற செய்தியைக் காவலரும் கூறத் தெரிந்துகொண்டான்.“நீங்கள் ஏன் அப்போதே வந்து சொல்லவில்லை?” என்று கேட்டான். “பகையரசராக இருந்தால் உடனே வந்து சொல்லியிருப்போம். அதனை அணுகவே விடமாட்டோம். புலவர் பகைவர் அல்லவே! அவர் தவறாக ஏதும் செய்யமாட்டார். அதனால் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை” என்றார்கள் அவர்கள்.
‘இவர்களுக்குத் தெரிந்த அளவுகூட உனக்குத் தெரியவில்லையே! உன் அடி நிழலில் வாழும் இவர்களுக்கே புலவர்களிடம் மதிப்பு இருக்குமானால் உலகத்தில் மிகுதியான மதிப்பு இருப்பது என்ன வியப்பு? இதை நீ உணரவில்லையே!’ என்று அவன் நெஞ்சம் குத்திக் காட்டியது.
ஊர் சென்ற பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் எல்லாக் கதையையும் சொன்னார். ஊரே அவர் தைரியத்தையும் பெருமையையும் அறிந்து பாராட்டியது.
பெருஞ்சித்திரனார் அடுத்த முறை குமணனிடம் சென்றபொழுது யானையைத் தாம் கேட்டதற்குக் காரணத்தையும், நடந்த நிகழ்ச்சியையும் சொல்லித் தாம் பாடிய பாடலையும் சொன்னார். “வீரமும் படைப் பலமும் உடைய மன்னர்களால் செய்ய இயலாத செயலை நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்களிடம் வாளையும் வேலையும் விட அஞ்சுவதற்குரிய கவிதை இருக்கிறது. அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று குமணன் கொண்டாடினான்.
“கவிதை இருப்பது மட்டும் போதாது. அதை அறிந்து சுவைத்துப் புலவரைப் புரக்கும் புரவலர்களும் இருப்பதனால் தான் எங்களுக்கு இத்தகைய வீரம் உண்டாகிறது” என்று சொல்லிப் புலவர் குறிப்பாகக் குமணனைப் புகழ்ந்தார்.
- ↑ புறநானூறு, 161.