உள்ளடக்கத்துக்குச் செல்

குமண வள்ளல்/வாள் தந்த வளம்

விக்கிமூலம் இலிருந்து

8. வாள் தந்த வளம்

ளங் குமணன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டான். நாடு முழுவதும் இப்போது அவனுடையது ஆகிவிட்டது. நாட்டில் உள்ள மக்கள் அவனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் அவர்களை ஆளும் உரிமையைப் பெற்றுவிட்டான். அவனுடைய போக்குக்கு ஏற்பப் பேசி அவன் தீய எண்ணங்களுக்கு உரமூட்டித் துணை நிற்கும் நண்பர் பலர் சேர்ந்தனர். புலவர்கள் ஒவ்வொரு நாளும் வந்து அளவளாவியதால் எப்போதும் தமிழ் ஓசை கேட்ட அந்த அரண்மனையில் இப்போது தமிழ்ப் புலவர்களின் காட்சி அரிதாகிவிட்டது.

மக்கள் அவனுடைய இழிகுணத்தை எண்ணி வெறுத்தனர். அவன் உண்டு, அவனுடைய நண்பர்கள் உண்டு; அவர்களோடு பேசிப் பேசிக் காலம் கழித்தான். எங்கும் போவதில்லை.

அவனும் அவன் நண்பர்களும் பேச என்ன இருக்கிறது? நல்ல செயல்களைப்பற்றி எண்ணும் உள்ளங்களானால் எத்தனையோ நினைக்கலாம்; செய்யலாம். கொடுமனக் கசடருக்குத் தோன்றுவன யாவும் பிறருக்குத் தீங்கு உண்டாக்கும் நினைவாகவே இருக்கும்.

அவர்கள் கூடிக்கூடிப் பேசினர்கள், "என்னுடைய அண்ணன் காட்டில் இருக்கிறானே; அவன் மறுபடியும் நாட்டுக்கு வந்து ஆட்சியைப் பெற முயன்றாலும் முயலலாமோ?’ ......இப்படி ஓர் ஐய வினாவை இளங்குமணன் எழுப்பினான்.

"ஆசை யாரை விட்டது? அப்படிச் செய்யவும் கூடும்” என்று அவனுடைய நண்பன் ஒருவன் கூறினான்.

"தானே எல்லாவற்றையும் கொடுத்து விட்டுப் போனவன், திரும்பி வர எண்ணுவதற்கு இடம் இல்லை” என்றான் இளங்குமணன்.

"அப்படி எண்ணக்கூடாது. அந்தச் சமயத்தில் அவரிடம் போதிய படை இல்லை. போரிட்டால் நிச்சயமாகத் தோல்வி உண்டாகும் என்பதைத் தெரிந்துகொண்டார். போரில் ஒருகால் தாம் உயிர் இழந்தாலும் இழக்கலாம் என்ற அச்சமும் உண்டாகியிருக்கும். அதனால் தாமே வலியக் கொடுத்துவிட்டார். நெடுநாள் ஆட்சி புரிந்த பற்று விடுமா? காட்டில் இருந்தபடியே சூழ்ச்சி செய்து வேறு மன்னன் யாருடனுவது சேர்ந்துகொண்டு இந்த நாட்டின்மேற் படையெடுத்து வந்தாலும் வரலாம்." ...இப்படி ஒருவன் சொன்னான்.

அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான் இளங் குமணன்.

"அப்படியும் நடக்கலாம். அதற்கு ஏற்ற பாதுகாப்பை நாம் செய்துகொள்ளத்தான் வேண்டும்" என்று அவன் தெரிவித்ததை மற்ற நண்பர்கள் ஆதரித்தார்கள்.

"இந்த நாடு முழுவதும் தங்களுக்கு உரியதாகிவிட்ட பிறகு படையைப்பற்றிய கவனம் நமக்குக் குறைந்துவிட்டது. மீட்டும் நம் படைப்பலத்தை மிகுதியாக்கி, எந்தச் சமயத்தில் யார் எதிர்த்தாலும் போரிட ஆயத்தமாக இருக்க வேண்டும். நாட்டின் ஒரு பகுதியை ஆண்டபோதே, தங்கள் தமையனார் கண்டு அஞ்சும் படையைக் குவிக்க முடிந்தது. நாடு முழுவதும் நம் கைவசப்பட்ட இப்போது முயன்றால் எளிதில் பெரிய படையைச் சேர்த்துவிடலாம். நம்முடைய அரண்களையும் பலப்படுத்த வேண்டும்” என்பது ஒருவனுடைய யோசனை.

“இவ்வளவு காரியத்தையும் விரைவாகச் செய்ய முடியாது. சில காலமாவது ஆகும். இந்த நாட்டில் உள்ளவர்கள் பழைய ஒட்டுறவை இன்னும் மறக்கவில்லை. அண்ணனிடம் வைத்திருக்கும் பாசம் போவதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஆதலின், படையைப் பெருக்குவது, அரண்களை வலியுறச் செய்வது என்ற பெரிய காரியங்களைச் செய்யாமலே ஏதாவது குறுக்கு வழியைக் கண்டுபிடித்தால் நலமாக இருக்கும்” என்று மற்றொருவன் சொன்னான்.

“குறுக்கு வழி என்ன இருக்கிறது? என் அண்ணன் இறந்தொழிந்தால்தான் இத்தகைய அச்சத்துக்கு இடம் இல்லாமல் போகும். அவனைத் தொலைப்பதற்கு வழி ஏதாவது இருந்தால் கவனிக்கலாம்” என்று வன்கண்ணனாகிய இளங்குமணன் கூறியபோது அவனுடைய நண்பர்களே சிறிது நடுங்கினார்கள்.

மறுபடியும் நெடு நேரம் யோசித்தார்கள். “நாம் நம் கையால் கொல்வதைவிட யாரையாவது கொல்லும்படி ஏவலாம்” என்ற முடிவுக்கு வந்தான் அந்தக் கொடுங்கோலன்.

“யார் அதைச் செய்வார்கள்? அவரைத் தீய எண்ணத்தோடு அணுகும் துணிவு யாருக்கும் வராது” என்று ஒருவன் கூறினான்.

“ஏன் வராது? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். அவனுடைய தலையைக் கொண்டு வருகிறவர்களுக்கு நூறாயிரம் பொன், கோடி பொன் என்று கொடுப்பதாக இருந்தால் நாளைக்கே நம் காலில் அவன் தலை வந்து உருளும்” என்று இளங் குமணன் சொன்னன்.

அந்தப் பேய்ச் சபையில், குமணன் தலையைக் கொணர்பவருக்கு நூறாயிரம் பொன் கொடுப்பதென்று தீர்மானமாயிற்று. இந்தச் செய்தியைத் தூதுவர்கள் மூலம் பரப்புவதென்றும் முடிவு செய்தனர்.

செய்தி பரவியது. மக்கள் துடித்தனர். “அவன் தலையைக் கேட்கும் இந்தப் பாவியின் தலையை உருளச் செய்வோம்” என்று கோபத்தால் குதித்தனர் பலர். படை வீரர்களைக் கொண்டு அத்தகையவர்களை அடக்கினான் இளங் குமணன். நல்லோர், ‘இனி இங்கே இருப்பது தகாது’ என்று எண்ணிவேற்று நாட்டுக்குப் போய் வாழத் தலைப்பட்டனர். ‘மாபாவி! அசுரன்! பேய்! கொலைகாரன்!’ என்ற விருதுப் பெயர்களை மக்கள் தம் மன்னனுக்குச் சூட்டினர்.

காட்டில் குமணன் துறவு வாழ்க்கை வாழ்ந்தான். அங்கும் அவனைப் பார்க்க மக்கள் வந்தனர். புலவர்களும் வந்தார்கள். செல்வர் அவனை அறியாமலே அவனுக்கு வேண்டிய பொருள்களை வைத்துச் சென்றனர். தனக்கு நாடாட்சி இல்லாமற் போய்விட்டதே என்று அவன் வருந்தவில்லை. நல்ல உணவு உண்டு பஞ்சணையில் படுத்து உறங்கவில்லையே என்றும் கவலைப்படவில்லை. புலவர்களோடு பழகி அவர்களுக்குத் தக்க வண்ணம் பரிசில் வழங்கி இன்பமுற வழியில்லையே என்றுதான் அவன் வருந்தினான்.

யாரேனும் புலவர்கள் வருவார்கள். பெருஞ் சித்திரனார் தேடி வந்து பேசிச் சென்றார். புலவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடன் பேசி இன்புறுவதைக் காட்டிலும், ‘இவர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிருேமே!’ என்ற வருத்தமே மிகுதியாக உண்டாகும். அந்த நிலையிலும் தன்னிடம் ஏதாவது இருந்தால் அதை வற்புறுத்திப் புலவர்களிடம் கொடுத்துவிடுவான்.

நாட்டிலுள்ள மக்களிற் சிலர் அவனிடம் வந்து அழுதார்கள். இளங் குமணன் தமக்கு ஏதேனும் தீங்கு புரிவான் என்ற அச்சத்தால் அவர்கள் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். ஒரு நாள் அங்கே வந்த ஒருவர், குமணன் தலையைக் கொண்டு வருபவர்களுக்குப் பரிசு தருவதாக இளங் குமணன் அறிவித்திருக்கும் செய்தியைச் சொல்லி, “இந்த மாபாவி இன்னும் வாழ்கிறானே! கடவுள் இதையும் பார்த்துக்கொண்டிருக்கிறாரே! அறம் இருக்கிறதா, செத்துப் போய் விட்டதா?” என்று புலம்பினார்.

குமணன் அதைக் கேட்டு வருந்தவில்லை. அவன் வரவரத் துறவுள்ளம் பெற்று வந்தான். “அப்படியா சொல்லியிருக்கிறான்? அதுவும் நல்லதுதான். இந்த உடம்பு எதற்கும் உதவாதது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதில் ஓர் உறுப்பாகிய என் தலைக்கு விலை கொடுப்பதாகச் செல்லுகிறானா? நல்லது. இந்தத் தலை ஒரு வறியனுடைய துன்பத்தைப் போக்குமானல், அவன் சொன்னதைப் பாராட்டுகிறேன். இறைவன் திருவருளானையின்படியே எல்லாம் நடக்கும்” என்று அமைதியாகப் பேசினான் அவன்.

சோழ நாட்டில் ஆவூர் என்பது ஓரூர். அங்கே மூலங்கிழார் என்ற தமிழ்ப்புலவர் ஒருவர் வாழ்ந்தார். அவருடைய புதல்வராகிய பெருந்தலைச் சாத்தனார் என்பவரும் தமிழ்ப் புலமை உடையவரே. அவருடைய இயற்பெயர் சாத்தனார் என்பது. அவர் தலை சற்றே பெரிதாக இருந்தமையால் பெருந்தலைச் சாத்தனார் என்று அவரை வழங்கி வந்தனர். அவருடைய தந்தையார் இறந்துவிட்டார். சாத்தனாருக்குப் பெரிய குடும்பம். குடும்பத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற இயலாமல் திண்டாடினர். வறுமைப் பிணியால் அவர் பட்ட வேதனை சொல்லும் தரம் அன்று.

அவர் எங்கே போனாலும் அவருடைய துரதிருஷ்டம் தொடர்ந்து சென்றது. கோடைக்கானலில் கடிய நெடுவேட்டுவன் என்ற ஒரு செல்வன் வாழ்ந்தான். அவனிடம் போய் ஏதாவது பெற்று வரலாம் என்று சாத்தனார் போனார். அவனை எளிதிலே காண முடியவில்லை. கண்டும் உடனே பரிசில் பெற இயலவில்லை. பல காலம் காத்திருந்த பிறகே அவன் கொடுத்ததைப் பெற்று வந்தார். கடற்கரையிலுள்ள ஊர் ஒன்றில் மூவன் என்ற உபகாரி வாழ்ந்திருந்தான். புலவர்களுக்கு உதவி புரிகிறவன் அவன் என்பதைக் கேள்வியுற்றார் பெருந்தலைச் சாத்தனார். அவன் நல்லவன் தான். ஆனாலும் அவர் சென்ற வேளை சரியாக இல்லை. அவனிடம் பரிசில் கிடைக்க நெடுங்காலம் ஆயிற்று. தம்முடைய கோபத்தைக் காட்டிப் பாடிய பிறகே அந்தப் பரிசிலும் கிடைத்தது. [1] மறுபடியும் அவர்களிடம் போக மனம் வருமா? மானம்  Invalid template invocation→ மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று இருந்துவிட்டார்.

மானத்துக்கு முதல் பகை வறுமை என்பதை அவர் தம் வாழ்க்கையில் உணர்ந்தார். வறுமை மறுபடியும் அவரை முடுக்கித் துரத்தியது. எங்கே போவது? குமணன் புலவர்களை மதித்துக் கொடுப்பவன் என்று யாரோ சொன்னார்கள். சொன்னவருக்குக் குமணன் இப்போது எந்த நிலையில் இருக்கிறான் என்ற செய்தி தெரியாது. சோழ நாட்டளவும் இன்னும் குமணனுடைய காட்டு வாழ்க்கையைப் பற்றிய செய்தி எட்டவில்லை.

பெருந்தலைச் சாத்தனார் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார். குமணனது நாட்டை அடைவதற்கு முன்பே அவன் காட்டில் மறைந்து வாழ்கிறான் என்று கேள்வியுற்றர். அவர் மனநிலை எப்படி இருக்கும்! ‘நம்முடைய ஊழ்வினையை நொந்துகொள்ளாமல் யாரை நோவது?’ என்று வருந்தினர். இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே. அவனைப் பார்த்துவிட்டாவது போகலாம். அவனைப் பெரிய வள்ளல் என்று பல பேர் சொன்னார்களே. அவன் காட்டில் வாழ்ந்தாலும் அங்கும் சில பொருள்களை வைத்திருந்தால் தானே வாழ முடியும்? நான் போய்க் கேட்கிறேன். நல்லவர்களிடம் எத்தனை கெஞ்சிக் கேட்டாலும் தவறு இல்லை. அவன் கொடுப்பதைக் கொடுக்கட்டும்; பெற்று வரலாம் என்று ஒரு நினைவு அவருக்கு உண்டாயிற்று. அவர் எவ்வளவோ இடங்களுக்குப் போய்ப் போய்ச் சலிப்படைந்தவர். இங்கும் சென்று பார்த்துவிடலாம் என்று எண்ணினர். ஒன்றும் இல்லை என்று சொல்லக்கூடும். அப்போது, போனபடியே வெறுங்கையோடே திரும்பி வந்துவிடலாம். அப்படி வருவது நமக்குப் புதிதல்லவே!’ என்று மனத்துக்குள் ஆறுதல் செய்துகொண்டார்.

எப்படியோ குமணன் இருந்த காட்டைக் கண்டுபிடித்து அவன் இருந்த இடத்தை அடைந்தார். அரண்மனையில் வாழ்ந்தவன் சிறு குடிசையில் வாழ்ந்தான். அவனைக் கண்டு வணங்கினர் புலவர். “நான் ஆவூர் மூலங்கிழாருடைய மகன்; சாத்தன் என்று பெயர்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆவூர் மூலங்கிழாரைப்பற்றிக் குமணன் கேள்வியுற்றிருந்தான். “அப்படியா? நான் உங்களைப் பார்த்ததில்லை. நான் காட்டில் வாழ்ந்தாலும் தமிழ்த் தாய் எனக்கு அருள் செய்வதை மறக்கவில்லை. உங்களைப் போன்ற புலவர்களை அவ்வப்போது அனுப்புகிறாள்” என்றான்.

“தங்களைக் காணவேண்டுமென்று முதிரத்துக்குப் போனேன். தாங்கள் இங்கிருப்பதாகத் தெரிந்து இங்கே ஓடி வந்தேன். என் துரதிருஷ்டம் எங்கே போனாலும் என்னைத் துரத்தி வருகிறது. தங்களை முன்பே பார்த்துப் பழகியிருந்தால் என் கலி தீர்ந்திருக்கும். என்ன செய்வது? அவரவர்களுக்குக் கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்?”

“நீங்கள் இவ்வளவு தூரம் வருந்துவதைக் கண்டால் உங்களுக்கு ஏதோ துன்பம் இருப்பதாகத் தோன்றுகிறது” என்று அன்புடன் குமணன் கூறவே, புலவருக்கு அடக்க முடியாத் துயரம் உண்டாகிவிட்டது தம்முடைய வறுமை நிலையைச் சொல்ல அது ஏற்ற சமயம் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட அவரால் முடியவில்லை. கீழே விழுந்த குழந்தையைத் தாய் தேற்ற வந்தால் ஓவென்று அழுவதுபோல, அவர் தம் வறுமை யைப்பற்றிக் கூறிப் புலம்பத் தொடங்கிவிட்டார்.

“எனக்கு ஏதோ துன்பம் இருப்பதாகத் தாங்கள் உய்த்துணர்ந்து சொன்னீர்கள். துன்பம் என்பதற்கு ஒரு வடிவம் உண்டென்றால் அது நான்தான். ஒன்றா, இரண்டா, பல பல துன்பங்கள்.”

“அவ்வளவு தூரம் சோர்வடையாதீர்கள். உலகில் பிறந்தவர்கள் துன்பம் அடைவது இயற்கை. அதற்காக மனம் தளரலாமா? அப்படி என்ன துன்பம் வந்து விட்டது உங்களுக்கு?”

“அப்படிக் கேளுங்கள்; சொல்கிறேன். என் குடிசையில் அடுப்பு மூட்டி எத்தனையோ நாட்கள் ஆயின. போட்ட அன்று எப்படி இருந்ததோ, அப்படியே அது தேயாமல் இருக்கிறது. அதன் மேல் பாத்திரங்களை ஏற்றி இறக்கினால்தானே தேயும்? அதற்குள் நெருப்புக் கொழுந்துவிட்டு எரியவில்லை. காளான் முளைத்திருக்கிறது. என் மனைவி எலும்பும் தோலுமாய் இருக்கிறாள். போதாக்குறைக்கு ஒரு குழந்தை வேறு. அதற்குப் பால் கொடுக்க அவள் உடம்பில் என்ன இருக்கிறது? குழந்தை பசியால் அழ அழ அவளால் பொறுக்க முடியவில்லை. அவளுக்கும் துயரம் பொங்குகிறது; அழுகிறாள். இந்த அவல வாழ்க்கையில் எத்தனை நாளைக்குத் திண்டாடுகிறது? தங்களைப் பார்த்துவிட்டுக் கிடைத்ததைப் பெற்றுப் போகலாம் என்று வந்தேன். என்னுடைய நிலையை அப்படியே எடுத்துச் சொல்வது அரிது. தங்களை வற்புறுத்தி எதையாவது பெற்றுப் போனாலன்றி எனக்கு ஆறுதல் உண்டாகாது.” [2] பெருந்தலைச் சாத்தனார் கண்ணை அவருடைய வறுமை திரைபோட்டு மறைத்தது. இல்லையானால் குமணன் இருந்த நிலை கண்டும் இப்படிச் சொல்லத் துணிவாரா?

குமணன், புலவர் அறியாமையுடையவர் என்று எள்ளி நகைக்கவில்லை. அவருடைய வறுமை அவரை எத்தகைய பாடு படுத்துகிறதென்பதை உணர்ந்தான். ‘இவருக்கு ஒன்றும் கொடுக்க முடியாமல் இருப்பதை விட உயிரையே துறந்துவிடலாம்’ என்றே அவனுக்குத் தோன்றியது.

“புலவர் பெருமானே, உங்கள் நிலையைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். இப்படிச் சொல்வதனால் உங்கள் வறுமை எள்ளளவும் குறையப் போவதில்லை. நான் என்ன செய்வேன்! நாட்டை இழந்தது பெரிய துன்பமாக எனக்குத் தோன்றவில்லை. என்னிடம் ஒரு புலவர் வந்து ஒன்றும் பெறாமல் போவது இருக்கிறதே, அதைக் காட்டிலும் கடுமையான துன்பமே இல்லை. அப்படிச் செல்லுவதைப் பார்த்துக் கொண்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா?” குமணன் சற்றுப் பேச்சை நிறுத்தினான். அவன் உள்ளம் வேதனையினால் சாம்பியது. கண்ணில் நீர் முட்டியது. சற்றே திரும்பித் துடைத்துக்கொண்டான். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு கனைத்துக் கொண்டான்.

“நான் ஒன்று சொல்கிறேன். அதைத் தாங்கள் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். என் நாட்டை விட்டு வந்தபோது என் உடம்பையும் உடையையும் உடன்கொண்டு வந்தேன். அந்த உடையோடு இதோ இந்த வாளையும் கொண்டுவந்தேன். இது ஒன்றுதான் இப்போது என் கையில் உள்ள பொருள். காட்டுவாழ்க்கையில் பாதுகாப்புக்காக இருக்கட்டும் என்று கொண்டு வந்தேன். இதைத் தருகிறேன். இதைக் கொண்டு நீங்கள் பெரிய ஊதியத்தைப் பெற வழி இருக்கிறது” என்று சொல்லித் தன் உடைவாளை உறையினின்றும் உருவி நீட்டினான்.

“நான் இதைக் கொண்டு போய் என்ன செய்வேன்? இதை விற்றால் என்ன விலை தருவார்கள் என்று எனக்குத் தெரியாதே!” என்றார் புலவர்.

“இதை வாங்கிக்கொள்ளுங்கள். நான் வழி சொல்லுகிறேன். ஆனல் நீங்கள் நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். அதனால் உங்களுக்கும் நன்மை உண்டு. எனக்கும் இப்போது இருக்கும் அவலநிலை நீங்கும்.”

குமணன் எதை நினைந்து இப்படிச் சொல்கிறான் என்று புலவருக்கு விளங்கவில்லை. அந்த வாளைக் கையில் வாங்கிக்கொண்டார்.

“என் தம்பி ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறான். அவன் சொன்னதைச் செய்பவர்களுக்கு நூறாயிரம் பொன் கொடுப்பதாக உறுதி மொழி அளித்திருக்கிறான். நீங்கள் அந்தப் பரிசைப் பெறலாம். அவன் சொன்னபடி செய்வீர்களா?”

பெருந்தலைச் சாத்தனாருக்கு அந்தச் செய்தி தெரியாது. ஆதலால் ஒன்றும் விளங்காமல் விழித்தார்.

“என் தலையைக் கொண்டு வருகிறவருக்கு நூறாயிரம் பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறான் என் தம்பி. இந்த வாளினால் என் தலையைக் கொய்து சென்று அவனிடம் காட்டுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் பொன் பல காலத்துக்கு வறுமையைத் தலை காட்டாமல் அடித்துவிடும்.”

“என்ன!” என்று இடி விழுந்தவரைப் போலக் கூவினார் புலவர்.

“உங்களுக்கு இந்தச் செய்தி தெரியாதா? அல்லது இதைச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறீர்களா? என் நாற்ற உடம்பில் ஒரு பகுதியினால் ஒரு புலவர் சுகப்படப் போகிறார் என்ற திருப்தியோடு நான் உயிர் விடுவேன். ஆதலால், நீங்கள் தயங்கவேண்டாம். நான் சொன்னபடி செய்யுங்கள்.”

புலவருக்குக் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. “மன்னர் பிரானே, போதும் உங்கள் பரிசுப் பேச்சு, என்னைக் கொலைகாரனாக்குவது கிடக்கட்டும். அப்படி ஒரு கொடுஞ் செயல் நிகழ்ந்தால் கடல் கரையை உடைத்துக்கொண்டு உலகையே விழுங்கிவிடாதா? பூமி வெடித்துப் போகாதா?” அவர் அழத் தொடங்கி விட்டார். குமணனுக்கும் ஒன்றும் தோன்றவில்லை; பேசவும் இயலவில்லை.

சிறிது நேரம் ஆயிற்று. புலவர் நிமிர்ந்தார். அவர் மனத்துக்குள் ஏதோ ஒன்று செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தோற்றியது.

“சரி; இந்த வாளைப் பயன்படுத்திக்கொள்ள எனக்குத் தெரியும். ஆனல் வெறும் வாள் போதாது. அந்த உறையையும் தாருங்கள்” என்று கேட்டார் பெருஞ்சித்திசரனார்.

ஏனென்று கேளாமல் அறத்தின் உருவாகிய அண்ணல் அதை அவிழ்த்து அளித்தான்.

“கடவுள் தங்களைக் காப்பாற்றட்டும். தாங்கள் செய்த தர்மம் தங்கள் தலையைக் காக்கும் என்ற துணிவுடன் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, வாளை உறையில் போட்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டார் சாத்தனார். அவர் ஏன் அப்படி விரைந்து போகிறார் என்பதைக் குமணனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

சாத்தனார் முதிரத்துக்குப் போனார். இளங் குமணனைப் பார்க்க வேண்டுமென்று வாளை மறைத்துக்கொண்டு போனார். “அரசனிடம் மிகவும் இரகசியமான செய்தியைச் சொல்லவேண்டும்” என்று காவலரிடம் சொல்லி அரண்மனைக்குள் புகுந்தார். ஒரு காவலன் அவரை இளங் குமணனுக்கு முன் கொண்டு போய் நிறுத்தினான்.

“நீர் யார்? எங்கே வந்தீர்?” என்று கேட்டான் அரசன்.

புலவர் விடையொன்றும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த வாளை உறையோடு எடுத்தார். “இதைப் பாருங்கள்; இது யாருடையதென்று தெரிகிறதா?” என்று அதைக் காட்டிக் கேட்டார்.

இளங் குமணன் அதைக் கூர்ந்து நோக்கினான். குமணனுடைய வாள்! “அண்ணாவின் வாளா?” என்று கேட்டான்.

“ஆம்!” என்று புலவர் கூறக் கேட்டவுடனே அவன், “அவனைக் கொன்றுவிட்டீரா?” என்று கூவினான். அவன் உள்ளத்திற்குள் மறைந்திருந்த பாசம் வெடித்துக்கொண்டு கிளம்பியது. புலவர் சற்று வேடிக்கை பார்க்கவேண்டுமென்று பேசாமல் நின்றார்.

“என் அண்ணாவைக் கொன்று இதை எடுத்துக் கொண்டு வந்தீரா? ஐயோ தெய்வமே இப்படியா ஆயிற்று? அண்ணா.... அண்ணா.... என் அண்ணா.... கடைசியில் என்னால் உன் உயிருக்குக் கேடு வந்ததா?” ....அவன் புலம்பினான். தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழி பொய்யாகுமா?

புலவர் இப்போது மெல்லப் பேசத் தொடங்கினார். “அரசே, நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள். நான் தங்கள் தமையனரைக் கொல்ல வில்லை.”

"என்ன? கொல்லவில்லையா? அப்படியானால் இந்த வாள் எவ்வாறு உம்மிடம் வந்தது?" என்று அலறிக்கொண்டு கேட்டான் இளங்குமணன்.

“அவர் உயிரோடுதான் இருக்கிறார். நான் சொல்வதை நிதானமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்கிறேன். என்ன நடந்தாலும் சரி, இதைச் சொல்லிவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்கிறது என்று ஓடி வந்திருக்கிறேன். சொல்லட்டுமா?”

“சொல்லும்” என்று பெருமூச்சு விட்டான் இளங் குமணன். அவனுக்கு உண்டான அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை.

“உலகத்தில் எதுவும் நிலைத்து நிற்பதில்லை. எதுவும் மன்னாத உலகம் இது. இங்கே சிலர் இறந்தும் இறவாமல் வாழ்கிறாகள். புகழ் ஒன்றுதான் நிற்குமென்பதை அறிந்த சில நல்லோர் அதை இங்கே நிறுவிவிட்டு மாய்ந்து போனார்கள். எவ்வளவோ உயர்ந்த செல்வம் பெற்றவர்களுங்கூட, வறுமை காரணமாகத் தம்மிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் செல்வத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து இறந்து போகிறார்கள். அவர்களை உலகம் நினைப்பதில்லை. வரிசையாக முன்பு வாழ்ந்த பெரு மக்களை எடுத்துச் சொல்லும்போது அத்தகையவர்களின் பெயர்கள் அவ்வரிசையில் வருவதில்லை.”

“இதற்கும் நீர் சொல்ல வந்ததற்கும் என்ன சம்பந்தம்?”

“சொல்கிறேன், பொறுமையோடு கேட்க வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து தம்மைப் பாடி வந்தவர்களுக்கு யானை கேட்டாலும் கொடுத்துத் தாம் உள்ளபோதே தம் புகழைப் பரவும்படி செய்தவர் குமண வள்ளல். அவர் காட்டில் இருப்பதை அறிந்து நான் அவர் புகழைப் பாடிச் சென்றேன். அவரிடம் எனக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை. ஐயோ! நான் நாடு இழந்ததை விட, என்னிடம் வந்த புலவன் ஒன்றும் பெறாமல் வாடிச் செல்வதைப் பார்ப்பது பெரிய துன்பமாக இருக்கிறதே! என்று வருந்தினார். பிறகு இந்த வாளைக் கொடுத்து, இதனால் என் தலையைக் கொய்து, என் தம்பியிடம் ஈந்தால் நிறையப் பொன் கிடைக்கும்” என்று கூறினார். [3]பொன்னைக் கொடுத்தும், பொருளைக் கொடுத்தும், அணியைக் கொடுத்தும், ஆடையைக் கொடுத்தும், குதிரையைக் கொடுத்தும், யானையைக் கொடுத்தும் புகழை மொண்டு கொண்ட அண்ணல் எல்லாவற்றினும் அரியதாகிய தம் உயிரையே கொடுக்க இப்போது முன் வந்தார். அதைக் கண்டபோது என் உள்ளம் உருகிவிட்டது. அவருடன் பிறந்து ஒன்றாக உண்டு ஒன்றாக வாழ்ந்த தங்களுக்கா இந்தக் கல் நெஞ்சம் வந்தது என்று எண்ணிப் பார்த்தேன். அவர் கையில் இந்த வாள் இருந்தால் வேறு யாருக்கேனும் தாமே கொய்து தந்தாலும் தருவார் என்றுதான் இதை உறையுடன் கேட்டேன்; கொடுத்துவிட்டார். இனி இவர் தற்கொலை செய்து கொள்ள வழியில்லை என்ற மகிழ்ச்சியோடு இங்கே ஓடி வந்தேன். இத்தகைய பெரிய உள்ளம் படைத்த தர்ம தேவதையை அண்ணனாகப் பெற்ற தங்களுக்கு ஏன் அவர் அருமை தெரியவில்லை என்று கேட்டு விட்டுப் போக வந்தேன். சொல்வதைச் சொல்லி விட்டேன். இந்தாருங்கள், இந்த வாள். இதைக் கொண்டு என்னை ஒறுக்க எண்ணினாலும் நான் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.”

வாளை இளங் குமணன் தன் கையில் வாங்கிக் கொண்டான், கண்ணில் ஒற்றிக்கொண்டான். அவன் உள்ளத்துக்குள் ஏழு கடல்களும் குமுறிக்கொண்டிருந்தன. “புலவரே!” என்று மெல்லப் பேசத் தொடங்கினன். வார்த்தைகள் தொடர்ந்து வெளி வரவில்லை.

தன் அண்ணன் கொலை செய்யப்படவில்லை என்பது தெரிந்த பிறகு அவன் நிதானத்துக்கு வந்தாலும், அவன் உள்ளம் அவனைச் சுட்டது. புலவர் கூறிய உருக்கமான நிகழ்ச்சி அவனையும் பாகாய், உருக்கி விட்டது.

“புலவரே, எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்.”

“என்ன?”

“என் அண்ணாவின் காலில் என் தலையை வீழ்த்த எண்ணுகிறேன். நீங்கள் வழிகாட்டுவீர்களா?”

“என்ன!”—புலவர் வியப்பில் மூழ்கினர். “ஆம், இந்தப் பாவி அவரை அணுகிக் காலில் விழுந்து கதறித் துடிதுடித்தாலன்றிப் பாவம் தீராது. வாருங்கள், போகலாம்.”

புலவர் இத்தனை விரைவில் நன்மை உண்டாகுமென்று எதிர்பார்க்கவில்லை. இளங்குமணனை அழைத்துக்கொண்டு சென்றார் அண்ணனும் தம்பியும் கூடினர். தம்பி அழுது புரண்டான். கன்னத்தில் அறைந்துகொண்டான். மன்னிக்க வேண்டுமென்று கதறினான்.

சாந்தமும் அன்பும் நிறைந்த குமணன், “தம்பி, வருந்தாதே! நீ என்னை இராமபிரானாகச் செய்து விட்டாய். அவர் சிலகாலம் காட்டில் வாழ்ந்து மீண்டும் நாட்டுக்கு வந்தார். நானும் அப்படியே இருக்கிறேன்” என்று கூறினான்.

அண்ணா. நீங்கள் இராமபிரானுக்கு ஒப்பானவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. நீங்கள் எங்கே இருந்தாலும் அது அயோத்திதான். ஆனால் இந்தப் பாவி பரதனாக நடந்துகொள்ளவில்லையே! என்று மறுபடியும் அழுதான் தம்பி.

மீட்டும் குமணன் தன் நாட்டை அடைந்தான். கார் பெற்ற தோகை போலவும் கண் பெற்ற வாண் முகம் போலவும் நீர் பெற்று உயர்ந்த நிறைபுலம் போலவும் நாட்டு மக்கள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர். குமணன் பெயரளவில் அரசனாக இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பில் பெரும் பகுதியைத் தன் தம்பியிடமே கொடுத்துவிட்டான். அவன் கை வாள் தம்பியிடமே இருந்தது. கொடுத்ததை மீண்டும் வாங்கிக்கொள்ளக்கூடாது அல்லவா?



கி.வா. ஜகந்நாதன் எழுதியவை



பாரி வேள் :

ரூ. 1 2 0


“.............கபிலர் பாடல்களுக்கு விளக்கம் தந்து பாரியின் பெருமையை விளக்குமிடம் அழகாக அமைந்துள்ளது."

தினமணி : 6-2-55


கோவூர்கிழார்:

ரூ. 1 2 0


“.........சங்கப் புலவர்களின் வரலாறுகளே இவ்வாறு அமைத்துத் தருதல் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் செய்யும் மாபெரும் உண்மைப் பணியாகும்."

பாரத தேவி : 18-1-54


எல்லாம் தமிழ் :

ரூ. 1 2 0


".......ஆசிரியர் இப்பணியைக் கலைச் சுவையுடனும் மிகுந்த திறமையுடனும் செய்திருக்கிறர். தமிழ் மாண வர்க்கும் தமிழன்பர்களுக்கும் மிகவும் உபயோகமான நூல்.”

சுதேசமித்திரன் : 19-12-50


தமிழின் வெற்றி :

ரூ. 1, 4 0


"..........பாமரரும் நயக்கும் வகையில் இத்தகைய இலக்கிய வெளியீடுகளால் இலக்கிய அமுதை வாரித் தரும் அறிஞர்களைப் போற்றவேண்டியது தமிழ் மக்கள் கடமையாகும்."

ஈழகேசரி : 4-1-53


கரிகால் வளவன் :

ரூ. 1. 4. 0


".........ஒரு பேரரசனுடைய வரலாற்றைப் பல நூல்கள் ஆராய்ந்து, வேண்டிய விவரங்களைச் சேகரித்துத் இவ்வாறு அளித்துள்ள ஆசிரியர் முயற்சி பாராட்டக் தக்கது.”

வீரகேசரி: 4-1 53



அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
தேனாம்பேட்டை : : சென்னை-18


Approved by the Text Book Committee for class use Non-detailed
vide Gazette Page 25 supplement to Part I B
Fort St. George dated 4-4-56.

  1. புறநானூறு, 205. † புறநானூறு, 909
  2. புறநானூறு , 164.
  3. புறநானூறு , 165.