உள்ளடக்கத்துக்குச் செல்

குறுந்தொகை 341 முதல் 360 முடிய

விக்கிமூலம் இலிருந்து

பாடிய புலவர் மாவளத்தன். இந்தப் பாடல் பாலைத் திணையைச் சேர்ந்தது.

பாடல்

[தொகு]

தாமே செல்ப ஆயின் கானத்துப்
புலந்தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்
இதழ் அழித்து ஊறும் கண்பனி மதர் எழில்
பூண் அக வன முலை நனைத்தலும்
காணார் கொல்லோ மாணிழை நமரே.

பாடல் தரும் செய்தி

[தொகு]

காட்டில் யானை தூங்கும்போது அதன் தந்தங்களின் மேல் ஏறி முல்லைக் கொடி படரும். யானை எழுந்து போகும்பாது கொடியின் இதழ் அறுந்து விழும். அப்போது முல்லை மொட்டுகள் உதிரும். உதிரும் அந்த முல்லை மொட்டுகள் போல என் கண்களிலிருந்து துளிகள் விழுகின்றன. அவை என் கண்ணிமைகளை அழித்துக்கொண்டு ஊற்றெடுக்கும் கண்ணீர். அவை பூண் அணிந்த என் வனப்புள்ள முலையை நனைக்கும். இதனைப் பார்த்துமா அவர் என்னைப் பிரிய நினைக்கிறார்? - என்கிறாள் தலைவி.

இந்தப் பாடலைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

பாடல்

[தொகு]

நெடுநீர் ஆம்பல் அடைப் புறத்து அன்ன
கொடு மென் சிறைய கூர் உகிர்ப் பறவை
அகலிலைப் பலவின் சாரல் முன்னிப்
பகலுறை முதுமரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன் தோழி அவர்க் காணா ஊங்கே.

  • திணை - பாலை

பாடல் தரும் செய்தி

[தொகு]

வௌவாலின் சிறகுகள் ஆம்பல் இலையின் பின்புறம் போல இருக்கும். வௌவால் கூர்மையான நகங்களைக் கொண்டது. பகலில் அவை தங்கியிருந்த முதிர்ந்த மரங்களைப் பறவை இல்லாமல் புலம்பும்படி விட்டுவிட்டு மலைச் சாரலில் பழுத்திருக்கும் பலா மரங்களை நோக்கிச் செல்லும். மாலை நேரத்தில் செல்லும். அவரைக் காணாத போதுதான் அந்த மாலைப் பொழுதின் துன்பம் எனக்குத் தெரியவருகிறது - இவ்வாறு தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.