குறுந்தொகை/71 முதல் 80 முடிய

விக்கிமூலம் இல் இருந்து
(குறுந்தொகை 71 முதல் 80 முடிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பாடல்: 71 (மருந்தெனின்)[தொகு]

 • திணை - பாலை
தலைவன் கூற்று
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே // மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் // அரு்ம்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலைப்
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் // பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே. // கல்கெழு கானவர் நல்குறு மகளே.
என்பது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லி்ச் செலவழுங்கியது.
(செலவழுங்கல்= செல்லுதலைத் தவிர்த்தல்; கடைக்கூட்டிய= (செல்லத்) துணிந்த)
பாடியவர்
கருவூர் ஓதஞானி.

செய்தி[தொகு]

பொருள் தேடப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தலைவியிடம் தான் துய்த்த இன்பத்தை எண்ணிப் பார்த்துத் தான் பிரிந்தசெல்ல உண்ணியதைக் கைவிட்டு விடுகிறான்.

பாடல்: 72 (பூவொத்தலமருந்)[தொகு]

 • திணை - குறிஞ்சி

தலைவன் கூற்று

பூவொத் தலமருந் தகைய வேவொத் // // பூ ஒத்து அலமருந் தகைய ஏ ஒத்து
தெல்லாரு மறிய நோய்செய் தனவே // // எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தேமொழித் திரண்ட மெண்றோண் மாமலைப் // // தே மொழித் திரண்ட மெல் தோள் மா மலைப்
பரீஇ வித்திய வேனற் // // பரீஇ வித்திய ஏனல்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே. // // குரீஇ ஓப்புவாள் பெரு மழைக் கண்ணே.
என்பது, தலைமகன் தன்வேறுபாடு கண்டு வினாய பாங்கற்கு உரைத்தது.

(வினாய= கேள்வி கேட்ட; பாங்கன்= தோழன்)

பாடியவர்
மள்ளனார்.

செய்தி[தொகு]

தலைவியைத் துய்த்த பின் தலைவனின் நடத்தையில் மாறுபாட்டைக் காண்கிறான் அவனது பாங்கன். மாறுபாட்டுக்குக் காரணம் வினவுகிறான். தினைப்புனத்தில் குருவி ஓட்டுவளின் பூ போன்ற கண் என்னை அம்பு போலக் குத்தி நோய் உண்டாக்கிவிட்டது என்கிறான் தலைவன்.

 • ஏ = அம்பு பூப் போன்ற கண் அம்பு போலக் குத்தியது விந்தை என்கிறான் தலைவன்.

பாடல்: 73 (மகிழ்நன்)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தோழி கூற்று
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ // // மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன் // // அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று ஞாட்பிற் போகிய // // நறு மா கொன்று ஞாட்பில் போகிய
ஒன்றுமொழி்க் கோசர் போல // // ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. // // வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
என்பது, பகற்குறி மறுத்து, இரவு்க்குறி நேர்ந்து அதுவும் மறுத்தமைப்படத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாடியவர்
பரணர்

செய்தி[தொகு]

தலைவன் தலைவியை நாடி வருகிறான். இரவில் வந்தவனைப் பகலில் வா எனத் தலைவியும் தோழியும் கூறுகின்றனர். பின் அவன் பகலில் வந்தபோது இரவில் வா என்கின்றனர். இது வேண்டாத சாக்குப்போக்கு. தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையவேண்டும் என்பதற்காகச் செய்யும் சூழ்ச்சி. இவ்வாறு சூழ்ச்சி செய்பவள் தோழி. இது கோசரின் துணை கொண்டு நன்னனைக் கொன்றது போன்ற சூழ்ச்சி.

வரலாறு[தொகு]

சங்ககாலத்து நன்னனைப் பற்றியும், அவனோடு தொடர்புடைய மிஞிலி போன்றவர்கள் பற்றியும் கூறும் பாடல்கள் 34 உள்ளன. அவர்களின் காவல்மரம், தலைநகரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுத்தும் பகுத்தும் பார்க்கும்போது ஆறு காலவழியினர் காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மா மரத்தைக் காவல்மரமாக உடையவன்ம் இந்தப் பாடலில் கூறப்படுபவனுமாகிய இந்த நன்னனைத் தவிரப் பிற நன்னன்மார் அனைவரும் வள்ளல்கள். நல்லவர்கள்.

 • இந்தப் பாடலில் சுட்டப்படும் நன்னன் கொடுமைக்காரன். இவனது காவல்மரம் மாமரம். இதன் காய் ஒன்று ஆற்றில் மிதந்துவந்தது. அது அரசன் நன்னனுடையது என்று அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த பெண் ஒருத்தி எடுத்துத் தின்றுவிட்டாள். இந்தப் பிழைக்காக அரசன் நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான். அவள் 'ஒன்றுமொழிக் கோசர்' குடிப்பெண். அவளது உறவினர்கள் அவளை விடுவிக்கும்படியும், அவள் செய்த பிழைக்காக 99 களிறுகளும், அவள் நிறையின் அளவு பொன்னும் தண்டமாகத் தருவதாகவும் நன்னனிடம் முறையிட்டுக்கொண்டனர். அரசன் நன்னன் ஏற்கவில்லை. கொலைதண்டனையை நிறைவேற்றினான். (குறுந்தொகை 292)
 • ஆய் எயினன் என்பவன் வேளிர்குடிக் குறுநில மன்னன். பறவைகளைக்கூடப் பேணி வளர்த்த வள்ளல். அவனைக் கோசர்குடித் தலைவன் மிஞிலி என்பவன் போரில் கொன்றான். தன் குடியைச் சர்ந்த தலைவன் ஒருவன் கொல்லப்பட்டதற்காக நன்னன் மனம் இளகவில்லை. (அகம் 208)
 • கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் பணும்பூண் சென்னி என்னும் சோழ வேந்தனின் படைத்தலைவன் பழையன் என்பவனைக் கொன்ற எழுவர் கூட்டணியில் இவனும் ஒருவன் (அகம் 44)
 • சோழ அரசன் சென்னி தானே படையுடன் வந்து நேரில் தாக்கியபோது காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான் (அகம் 392)
 • கடையெழு வள்ளல்களில் ஒருவனும், பறவைகளுக்குப் புகலிடம் தந்தவனுமாகிய அதிகனைக் கொல்லக் கோசர்குடி மிஞிலிக்கு உதவியவன் இவன் (அகம் 208)
 • கோசர்கள் தம் குடியைச் சேர்ந்த படைத்தலைவன் மிஞிலியிடம் பெண்கொலை புரிந்த நன்னனின் கொடுமையைச் சொல்லி முறையிட்டுக்கொண்டனர். மிஞிலி நன்னனோடு போரிட்டு நன்னனைக் கொன்றான். (இந்தப் பாடல்)

பாடல்: 74 (விட்டகுதிரை)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தோழி கூற்று
விட்ட குதிரை விசைப்பி னன்ன // // விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் // // விசும்பு தோய் பசும் கழைக் குன்ற நாடன்
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும் // // யாம் தன் படர்ந்தமை அறியான் தானும்
வேனி லானேறு போலச் // // வேனில் ஆன் ஏறு போலச்
சாயின னென்பநம் மாணல நயந்தே. // // சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே
என்பது, தோழி தலைமகன் குறை மறாதவாற்றாற் கூறியது.
(குறை= தான் குறித்த இடத்திற்கு வரவேண்டுதல்; மறாதவாற்றால்= மறுக்கமுடியாத நிலையால்; கூறியது= தலைவிக்குக் கூறியது)
பாடியவர்
விட்டகுதிரையார்

செய்தி[தொகு]

கடிவாளத்தைக் கைவிட்ட குதிரை போலத் தலைவன் தலைவியிடம் பாய்ந்து வருகிறான். யானை மூங்கிலை வளைத்து அதன் இலைகளை உண்பதற்காக உருவிக்கொண்டு மூங்கிலை விட்டவுடன் அது வானை நோக்கி விசும்பி உயர்வது போல யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் நில்லாமல் விசும்பிக்கொண்டு தலைவியிடம் வருகிறான். வேனில் காலத்தில் ஆனேறு(பொலிகாளை) பசுவை உரசிக்கொண்டு சாய்வது போலத் தலைவியிடம் வருகிறான். (அவன் குறையை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்கிறாள் தோழி)

பாடல்: 75 (நீகண்டனையோ)[தொகு]

 • திணை - மருதம்
தலைவி கூற்று
நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ // // நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ // // ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும் // // வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர் // // பொன் மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. // // யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே.
என்பது தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது.
பாடியவர்
படுமரத்து மோசிகீரனார்.

செய்தி[தொகு]

வெள்ளைக் கொம்புகளை உடைய யானை சோணை(யமுனை) ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கிறது. அது பாடலி நகருக்கு வந்துவிட்டது என்பது போல யார் சொல்லக் கேட்டாய்? (தலைவன் பரத்தையோடு நீராடிக்கொண்டிருக்கிறான்) அவன் வருகிறான் என்கிறாய். நீ பார்த்தாயா? இல்லை பார்த்தவர்கள் சொல்லக் கேட்டாயா?

பாடல்: 76 (காந்தள்வேலி)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தலைவி கூற்று
காந்தள் வேலி யோங்குமலை நன்னாட்டுச் // // காந்தள் வேலி ஓஙுகு மலை நல்நாட்டுச்
செல்ப வென்பவோ கல்வரை மார்பர் // // செல்ப என்பவோ கல் வரை மார்பர்
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை // // சிலம்பின் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத் // // பெரும் களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூக்குங் // // தண் வரல் வாடை தூக்கும்
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே. // // கடும் பனி அச்சிரம் நடுங்கு அஞர் உறவே.
என்பது, பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு, அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.
பாடியவர்
கி்ள்ளிமங்கலங் கிழார்.

செய்தி[தொகு]

 • அற்சிரம் = பனிக்காலம்

காந்தள் பூக்கள் வேலியெல்லாம் பூத்துக் கிடக்கும் மலைவழியில், பாறாங்கல்லைப் போல செஞ்சம் கொண்ட அவர் செல்கிறார் என்கிறாய். வாடைக்காலத்தில் குளிரில் நடுங்கும் யானை சேப்பங்கிழங்கின் இலை போல அகன்றிருக்கும் தன் காதுகளால் தன் தாதின் துளையைப் பொத்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர் அங்குக் கடுமையாக இருக்குமே! அக் குளிரில் நடுங்குவார் அல்லவா? (அப்படிப்பட்ட வருத்தத்துடன் அவர் ஏன் செல்லவேண்டும்?)

பொருள் தேடச் செல்ல உள்ளார் என்ற தோழியிடம் தலைவி இவ்வாறு கூறுகிறாள்.

பாடல்: 77 (அம்மவாழி)[தொகு]

 • திணை - பாலை
தலைவி கூற்று
அம்ம வாழி தோழி யாவதும் // // அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத் // // தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை // // உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் // // நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானஞ் சென்றோர்க் // // அரிய கானம் சென்றோர்க்கு
கெளிய வாகிய தடமென் றோளே. // // எளிய ஆகிய தட மெல் தோளே.
என்பது, பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
மதுரை மருதன் இளநாகனார்

செய்தி[தொகு]

பாலை நிலத்தில் செல்லும்போது வெயிலின் வெம்மையைத் தணிக்கவேண்டியும், இரவில் பதுங்கிக்கொளவதற்காகவும் அவ் வழியில் புதிதாகச் செல்வோர் மேட்டுநிலப் பகுதியில் உயர்ந்த மரங்களில் பதுக்கைகள் அமைத்துக்கொள்வர். அந்தப் பதுக்கைகள் யானைக்கு நிழலாகவும் பயன்படும். (என்னையும் அழைத்துச் சென்றால் என் தோள் அவருக்கு (யானைக்குப் பதுக்கை நிழல் போல) இன்பம் தருமல்லவா? - என்கிறாள் தலைவி தோழியிடம்.

பாடல்: 78 (பெருவரை)[தொகு]

 • திணை - குறிஞ்சி
பாங்கன் கூற்று
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி // // பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச் // // முது வாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப // // சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும் // // நோதக்கு அன்றே காமம் யாவதும்
நன்றென வுணரார் மாட்டும் // // நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே. // // சென்றே நிற்கும் பெரும் பேதமைத்தே.
என்பது, பாங்கன் தலைமகற்குச் சொல்லியது.
பாடியவர்
நக்கீரனார்

செய்தி[தொகு]

இந்தப் பாடலில் காமஉணர்வு ஓர் உயிரினமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. காமம் நன்று என்று உணராதவர்களிடத்திலும் சென்று தங்கிக்கொள்ளும் தனமை கொண்டது. தன்னை வரவேற்கா1தவர்களிடம் சென்று தங்குவது பேதைமைதானே? அறியாதவர்கள் செய்யும் தவற்றினைப் பொருட்படுத்தலாமா? பொறுத்துக்கொள்ள வேண்டுமல்லவா? எனவே காமத்தைப் பொறுத்துகொள்ள வேண்டும். (காமம் துன்புறுத்துகிறதே என்று வருந்தக்கூடாது) - தன் காதலியை எண்ணி எண்ணி மனவேதனைப்படும் தன் தலைவனிடம் பாங்கன் இவ்வாறு சொல்கிறான்.

மலையில் அருவி கோடியர் முரசு முழக்குவதுபோலக் கொட்டும். பின்பு அது சிலம்பு என்னும் மலைக்காடுகளில் பாயும். இத்தகைய நாட்டுக்குத் தலைவன் என்று தலைவனைப் பாங்கன் விளிக்கிறான். (இது காமம் அருவி போன்றது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்)

பாடல்: 79 (கானயானை)[தொகு]

 • திணை - பாலை
தலைவி கூற்று
கான யானை தோனயந் துண்ட // // கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை // // பொரி தாள் ஓமை வளி பொரு நெடு சினை
அலங்க லுலுவை யேறி யொய்யெனப் // // அலங்கல் உலுவை ஏறி ஒய் என
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் // // புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்த நண்ணிய வங்கடிச் சீறூர்ச் // // அத்தம் நண்ணிய அம் கடி சிறு ஊர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் // // சேந்தனர் கொல்லோ தாமே யாம் தமக்கு
கொல்லே மென்ற தப்பற் // // ஒல்லேம் என்ற தப்பல்
சொல்லா தகறல் வல்லு வோரே. // // சொல்லாது அகறல் வல்லுவோரே.
என்பது, பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்
குடவாயிற் கீரத்தனார்.

செய்தி[தொகு]

அவர் சொல்லாமல் சென்றுவிட்டாரே என்று தன் தோழியிடம் சொல்லித் தலைவி கவலைப்படுகிறாள். அவர் காட்டுவழியைப் பற்றி எண்ணியதால் இந்தக் கவலை.

உழுவைப்புலி காட்டுயானையின் தோலை விருப்பத்துடன் தின்றுவிட்டுப் பொரிந்துகிடக்கும் செதில்களையுடைய ஓமை மரத்தின் கிளையின்மீது ஏறி அமர்ந்துகொண்டு தன் பெண்புலியை அழைக்கக் குரல் கொடுக்கும் காட்டுவழி ஆயிற்றே அவர் சென்ற வழி என்று எண்ணுகிறாள்.

பாடல்: 80 (கூந்தலாம்பன்)[தொகு]

 • புலவர் - ஔவையார்
 • திணை - மருதம்
பரத்தை கூற்று
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சி // // கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி // // பெரும் புனல் வந்த இரு துறை விரும்பி
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ // // யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் // // அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்
நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி // // நுகம் படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக் // // முனை ஆன் பெரு நிரை போலக்
கிளையொடுங் காக்கதற் கொழுநன் மார்பே. // // கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே.

என்பது, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.

செய்தி[தொகு]

பரத்தை தலைவியோடு சேர்ந்து வாழ்பவர்கள் கேட்கும்படி கூறுகிறாள். (சவால் விடுகிறாள்)

கூந்தல் போல் கொடி படர்ந்து ஆம்பல் பூத்துக் கிடக்கும் ஆற்றில் வெருவெள்ளம் வருகிறது. அங்கு நானும் தலைமகனும் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறோம். அவளுக்கு(தலைவிக்கு) அச்சம் இருந்தால் தன் கணவனை அவளது சுற்றத்தாரெல்லாம் கூடிக் என்னுடன் நீராட வராமல் காத்துக்கொள்ளட்டும்.

தலைவி எவ்வாறு தலைவனைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும்போது எழினி வரலாறு கூறப்படுகிறது.

எழினி[தொகு]

கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் மகன் எழினி. இனும் தந்தையைப் போலவே கொடையாளி. இவன் தன் வேல் கொண்டு தாக்கி வெல்லும் திறமை மிக்கவன். போரில் கவர்ந்துவந்த ஆனிரைகளை இவன் பெரிதும் போற்றிக் காப்பாற்றிவந்தான். - அவனைப்போலத் தலைவனைக் காப்பாற்றிக்கொள்ளட்டும் என்பது பரத்தை விடும் சவால்.