குறுந்தொகை 61 முதல் 70 முடிய

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


பாடல்: 61 (தச்சன்)[தொகு]

 • திணை - மருதம்
தலைவி கூற்று
தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉ மிளையோர் போல
உற்றின் புறேஎ மாயினு நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றெனெஞ் செறிந்தன வளையே.

என்பது, தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.

தும்பிசேர் கீரன்.

செய்தி[தொகு]

பாங்கன் முதலானோர் தலைமகனின் வாயில்கள். இவர்களிடம் தோழி தலைவிக்கும் தலைமகனுக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறாள்.

தச்சன் செய்து தந்த நடைவண்டியில் சிறுவர்கள் ஏறிச் சென்று இன்புறாவிட்டாலும் அதனை இழுத்துச் சென்று இன்புறுவர். அதுபோலத் தலைவியானவள் தலைவனின் நட்பைத் தழுவி இன்புறாவிட்டாலும் முன்பே கொண்ட உறவை எண்ணி இன்பம் காண்கிறாள்.

பாடல்: 62 (கோடலெதிர்)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தலைவன் கூற்று
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே.
என்பது, தலைமகன் இடந்தலைப்பாட்டின்கட் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது.
பாடியவர்
சிறைக்குடியாந்தையார்.

செய்தி[தொகு]

தலைவன் தலைவியிடம் பெற்ற இன்பத்தை எண்ணி மகிழ்கிறான்.

கோடல் என்னும் வெண்காந்தள், முல்லை, குவளை ஆகிய பூக்கள் விரவி வர மென்மையாகத் தொடுத்த கதம்ப மாலை போன்ற மணம் கொண்டது அவள் மேனி. அத்துடன் மாந்தளிர் போன்ற மென்மையும் கொண்டது. அதனால் தழுவுவதற்கு இன்பமானது.

பாடல்: 63 (ஈதலுந்)[தொகு]

 • திணை - பாலை
தலைவன் கூற்று
ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.

என்பது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

பாடியவர்
உகாய்க்குடிகிழார்.

செய்தி[தொகு]

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேட நினைக்கும் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்.

பொருள் இல்லாதவர் வாழ்க்கையைத் துய்க்க முடியாது. பிறர் வாழ உதவவும் முடியாது. நெஞ்சே! இதனை எண்ணிப் பொருள் தேட எண்ணுகிறாய். நன்று. அந்தச் செயலுக்கு என்னவளும் உடன் வருவாளா, அல்லது என்னை மட்டும் கொண்டு செல்வாயா?

அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியாத நிலை இது.

பாடல்: 64 (பல்லா)[தொகு]

 • திணை - முல்லை
தலைவி கூற்று
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்ற நோக்கி மாலை
மடக்கட் குழவி யணவந் தன்ன
நோயே மாகுத லறிந்தும்
சேயர் தோழி சேய்நாட் டோரே.

என்பது, பிரிவிடை யாற்றாமை கண்டு, வருவரெனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
கருவூர்க்கதப்பிள்ளை.

செய்தி[தொகு]

பசுக்கள் பல நெடுந்தொலைவு சென்று மேய்ந்துவிட்டு தாம் அடையவேண்டிய மன்றத்துக்கு மாலை வேலையில் மீளும். அதன் வரவுக்காக அதன் கன்றுகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும். கன்றுக்குட்டி போல நான் பிரிவு நோயில் வருந்திக்கொண்டிருக்கிறேன். பசு மாலையில் திரும்புவது போல அவர் வரவில்லை. தொலைதூரத்தில் உள்ள நாட்டில் இருக்கிறார் என்று தலைவியும், தோழியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். (பசு மீள்வது போல அவர் வருவார் என்பது தோழியின் ஆறுதல் மொழி)

பாடல்: 65 (வன்பரற்)[தொகு]

 • திணை - முல்லை
தலைவி கூற்று
வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே.

என்றது, பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

பாடியவர்
கோவூர் கிழார்.

செய்தி[தொகு]

வலிய கூழாங்கற்களிலும், மணல் அறலிலும் ஓடும் ஆற்றுநீரைப் பருகிய இரலைமான் தன் பெண் இரலையோடு கூடி இன்பத்துடன் சுழன்று சுழன்று விளையாடும்படி தளிமழை பொழியும் கார்மேகம் வந்து உலாவுகிறது. அவர் இன்னும் மீளவில்லை. வருந்தி நொந்து இருந்தாயா என்று கேட்டு என்னைத் தேற்றுவார் இல்லை. - தலைவி தன் தோழியிடம் இவ்வாறு ஏங்குகிறாள்.

பாடல்: 66 (மடவமன்ற)[தொகு]

 • திணை - முல்லை
தோழி கூற்று
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.

என்றது, பருவங்கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்புறீஇயது.

பாடியவர்
கோவதத்தன் (கோவர்த்தனார் என்றும் சில பதிப்புகளில் உள்ளது)

செய்தி[தொகு]

கொன்றைப்பூ கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்குகிறது. மாரிக்காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை என்று தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள். தோழி தலைவியைத் தேற்றுவதற்காகச் சொல்கிறாள். (பருவம் இல்லாதபோது சில சமையங்களில் திடீர்மழை பெய்வதுண்டு. இதனை வம்பமாரி என்பர்) வம்பமாரியைப் பார்த்த கொன்றைமரங்கள் இதனைக் கார்காலம் என்று எண்ணிக்கொண்டு பூத்துள்ளன. அவை மடவ (=அறியாத்தனம் கொண்டவை) என்கிறாள்.

பாடல்: 67 (உள்ளார்)[தொகு]

 • திணை - பாலை
தலைவி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல வொருகாழ் ஏய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.
என்பது, பிரிவிடை யாற்றாது தலைமகள் தோழிக்கு உரைத்தது.
பாடியவர்
அள்ளூர் நன்முல்லை.

செய்தி[தொகு]

வேப்பம்பழம் பழுத்துவிட்டது. (வேனில் காலம் வந்துவிட்டது.) இன்னும் அவர் திரும்பவில்லை என்று சொல்லித் தோழி கலங்குகிறாள்.

உவமை[தொகு]

கிளி வேப்பம்பழத்தைத் தன் வளைந்த வாயிலே கொண்டுள்ளது. இது ஊசியின் நுனியில் நூலில் கோப்பதற்காகப் பொன் குத்துக்களை வைப்பது போன்று உள்ளதாம். (வேப்பம்பழம் பொன்முத்துக்களுக்கு உவமை)

பாடல்: 68 (பூழ்க்காலன்ன)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தலைவி கூற்று
பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.
என்பது, பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது.
பாடியவர்
அள்ளூர் நன்முல்லை.

செய்தி[தொகு]

பனிக்காலத்தில் உழுந்தங்காய்களை உழைமான் இனம் கவர்ந்து மேய்கின்றன. (அவர் சொன்ன பனிக்காலம் வந்துவிட்டது. மான்களைப் போல என்னை மேய) அவர் இன்னும் வரவில்லையே என்று எண்ணித் தலைவி உள்ளம் மெலிகிறாள்.

உழுந்து[தொகு]

உழுந்தின் முற்றிய காய்களிலும், நெற்றுகளிலும் மெல்லிய பொசுங்க மயிர் போன்று தோன்றும் கால்கள் இருக்கும்.

பாடல்: 69 (கருங்கட்)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தோழி கூற்று
கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

என்பது, தோழி இரவுக்குறி மறுத்தது.

பாடியவர்
கடுந்தோட் கரவீரன்.

செய்தி[தொகு]

தோழி தலைவனை இரவில் வரவேண்டாம் என்று தடுபதற்காக அவன் நாட்டுக் குரங்குகளின் இயல்பை இறைச்சிப் பொருளாகக் காட்டி நயமாகத் தெரிவிக்கிறாள்.

 • கருங்கண் தாக் கலை = கண்ணில் கரும்புள்ளி விழுந்ததால் பார்வை மங்கிய நிலையில் தாவும் ஆண்குரங்கு

கருங்கண் குரங்குக் கலை தன் மந்தியிடம் தாவும்போது கீழே விழுந்து இறந்துபோயிற்று. அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்குரங்கு தனித்துக் கைம்மை வாழ்க்கை வாழ விருப்பமில்லாமல் உயர்ந்த மலைப்பாறை அடுக்கின்மீது ஏறிப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நாட்டை உடையவன் தலைவன். (தலைவன் இரவில் வந்து அவன் வரும்போது அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் தலைவி கைம்மை காத்து வாழாமல் தன்னை மாய்த்துக்கொள்வாள். எனவே இரவில் வரவேண்டாம் என்கிறாள் தோழி.

பாடல்: 70 (ஒடுங்கீ)[தொகு]

 • திணை - குறிஞ்சி
தலைவன் கூற்று
ஒடுங்கீரோதி யொண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே
இனைய ளென்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.

என்பது, புணர்ந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பாடியவர்
ஓரம்போகியார்.
மேற்கோளாட்சி
இளம்பூரணர்: தொல்காப்பியம் களவியல் நூற்பா, 11 - 'புணர்ச்சியால் தலைவன் மகிழ்ந்தது'.
நச்சினார்க்கினியர்: தொல். களவு. நூ. 11 - 'இடந்தலைப்பாட்டின்கண் தலைவன் புணர்ச்சியின் மகிழ்ந்தது'.

-செய்தி[தொகு]

தலைவன் தலைவியைப் புணர்ந்த இன்பம் எத்தகையது என எண்ணிப் பார்க்கிறான்.

அவள் இத்தகையவள் என்று புனைந்துகூடக் கூறமுடியவில்லை. அவள் சில சொற்களே பேசுகிறாள். அவளைத் தழுவும்போது மெத்தை போல் மெல்லியல் ஆகிவிடுகிறாள்.

அவளது தலைமயில் படிந்துள்ளது. நெற்றியில் ஒளி வீசுகிறது. இவள் என்னைப் பெரிதும் வருத்துகிறாள் ('ஆரணங்கினள்')