குற்றால வளம்/அஞ்சாமை

விக்கிமூலம் இலிருந்து

அஞ்சாமை


அச்சமென்பது பயம். அஞ்சாமை அதன் எதிர்மறை. இதற்குப் பயப்படாமை என்பது பொருள். "இவ் அஞ்சாமை கொள்ள தக்கதா? இதனால் என்ன பயன்?" என்று ஆராயலாம்.


இவ்வுலகில் மானமுள்ள வாழ்க்கை வாழ விரும்பும் மக்கள், அஞ்சாமையை ஆபரணமாகப் பூண்டாலன்றி அமையாது. அஞ்சாமை பூணும் மக்களாற்றான் ஒல்லுமாறு அறம் வளர்க்க முடியும். மறம் வளர்க்கவும் அஞ்சாமை உதவும், ஆதலின் அஞ்சாமை வேண்டாமென்று கூறல் ஆமோ? அது தவறு. மக்கள் உயிர் வாழ்வதற்குப் பெருக் துணைக் காரணமாகிய தீ, மக்கட்குப்பெருங் துன்பத்தையும் தரக் காண்கின்றோமல்லவா? அங்ஙனமே வாழ்க்கைக்கு இன்றியமையாத நீர், காற்று முதலியன மக்களை அழிப்பதையும் காணவில்லையோ? ஆதலின் அத் தீ, நீர், காற்று ஆகியவற்றை மக்கள் விலக்குகின்றனரோ? இவையின்றி இமைப்பொழுதேனும் வாழ முடியுமா? இவைகள் அழிவிற்குங் காரணமாக விருப்பதால் இவை கூடாவென நீக்கினால் நீக்கிய, கணமே இறந்து படுவதைத் தவிர வேறென்? இப்பொருள்களை மக்கள் இடைவிடாது கைக் கொண்டொழுகுகின்றனரன்றோ? இவ்வாறே அஞ்சாமையும் கொள்ளத்தக்கது. ஒருவனை மறம்புரியத் தூண்டுவது அஞ்சாமை என்று கூறிவிட முடியாது. அவனுடைய தீய உளம் தூண்டுகிறது. தீயஉளத்தன் அஞ்சாமை பெற்றிருப்பானானால் அஞ்சாது மறஞ் செய்வான். நல்லுளத்தன் அஞ்சாமை பெற்றிருப்பானானால் அஞ்சாது அறஞ் செய்வான். எனவே, இவ்வஞ்சாமை எவன் பால் அணுகினும் அவன் செயல் வளரும். ஆதலின் அஞ்சாமை பெறாதிருப்பானானால் அவன் உளம் தீயதாயினும் அஞ்சி அத் தீமை புரியா தொழிவான் என்பது கொண்டு அஞ்சாமை தள்ளத் தக்கது என்று கூறுதல் தவறு. உளம் எவனுக்கும் தீயதாக விருத்தல் ஆகாது. உளம் அவ்வாறிருக்குமானால் செயல் எப்பொழுதேனும் வந்துவிடும். அவ் உளத்தைப் போக்க முயல வேண்டும். அது வேறு பொருள். தீய உளம் பெற்றவன் ஒருவனும் இவ்வுலகில் இருத்தல் ஆகாதென்ப தன்றோ பெரியோர் கொள்கை.


எல்லோரும் நன்மனம் பெற்றிருத்தல் வேண்டும். அவர் அஞ்சாமையை அணியாகப் பூண்டிருத்தல் வேண்டும். நல்லவர் பலர் இவ்வுலகில் அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கடன் மறந்து கிடக்கிறார். அவருள் அறிஞரும் பல்லோர் இருக்கக் காண்கின்றோம். உலகப் பொருள்களையும் உலகப் போக்கையும் நன்றாக் அறிந்திருக்கின்றார்; தாம் செய்யவேண்டிய கடமையையும் உணர்ந்திருக்கின்றார். ஆனால் மனத்தொடு பெருந்தத் தாங் கொண்டிருக்கும்

உண்மைக் கொள்கைவழி கடனாற்ற வருகின்றாரில்லை. இதற்கு என்ன காரணம் என ஆராயுங்கால் அச்சமென்றே கிடைக்கின்றது. அவ்வன்பரும் இதனை ஏற்றுக்கொள்கின்றார். அது கூடாது. கடனை உணர்த்தும், அச்சத்தால், நல்லறமாகிய கடனிறுக்கத் தவறுவோர் எத்துணை அறிவு படைத்திருந்த போழ்தினும் அறியாமை யுடையவர்களென்றே அஞ்சாது கூற வேண்டியிருக்கிறது. ஏன்? அஞ்சாமை கூற வந்த நான் அஞ்சாமை கூறுமிடத்திலேயே உண்மை கூற அஞ்சுதல் ஆகாதன்றோ? அஞ்சாமையை அணியாகப் பூணுவோரே. உண்மையான அறிவு கைவரப் பெற்றவர் என்பதை நடு நிலையோடு ஆராயும் எவரும் மறுக்க மாட்டார் அஞ்சுவதேன்? எதற்காக அஞ்சுதல் வேண்டும்? அஞ்சியாவதென்? அஞ்சுவதால் விளையும் நலனென்? உயிர் அழிவற்றது; உடல் அழிவுள்ளது. அழிவற்றதைஎவராலும் அழிக்க முடியாது; அழிவுள்ளதை எவராலும் காக்க முடியாது. உறற்பால யார்க்கும் உறும். மரணத்திற்கு மேல் ஒருவனுக்கு என்ன வரும்? அதுவே வரட்டுமே! ஏன் அஞ்சுதல் வேண்டும்? அஞ்சுவதால் அதைத் தடுக்கமுடியுமோ? அது வந்து தான் தீர்கிறது. மாளா மனிதரைக் கண்டோமில்லை. எண்ணற்றார் பிறக்கின்றார்; இறக்கின்றார். அஞ்சாமை கொண்டாரும் இறந்தே போகின்றார்; அச்சங் கொண்டாரும் மாண்டழிகின்றார். மரணம் எல்லோர்க்கும் நிச்சயம். அங்ஙனமாக, ஏன் அஞ்சாமை பொருந்தும் நல்  வாழ்க்கை வாழ்ந்து மாள்தல் ஆகாது? பேடி வாழ்க்கை வாழ்பவனும் முடிவில் மாண்டே போகிறான். வீர வாழ்க்கை வாழ்பவனும் அங்ஙனமே ஆகின்றான். அவ்வாறாக, அந்தோ! எதன் பொருட்டு மக்கள் அச்ச வாழ்க்கை பேடி வாழ்க்கை வாழ்கின்றனர்? இதனை எண்ணும்பொழுது எனக்குப் பெரு வருத்தமாக விருக்கின்றது. எவ்வறி விருந்தும் என் பயன்? இம் மெய்யறிவன்றோ வேண்டும். இம் மெய்யறிவை நன்மக்கள் பெற்றல் இன்றே அறச் செல்வி வையகத்தில் தனிப்பெருந் தாண்டவம் புரிவாளன்றோ?


ஆ! ஹா!! விரைவில் அழிவுறும் உடல் வாழ்வை நம்பியன்றோ மக்கள் உண்மை ஓராது அச்ச வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டனர். மக்களாய்ப் பிறந்தோர் கடன் உலகில் உள்ள மறங் களைந்து அறம் வளர்ப்பான், தொண்டு புரிதலன்றோ? அத்தொண்டின் இடையே தடுப்பவர் பொருட்டு அச்சங்கொள்தல் ஆகுமோ? அவ்வாறு கொண்டால் கடன் எங்ஙனம் நிறைவேறும்? எதற்கும் அஞ்சாது பண்டு கடனிறுத்த நமது முன்னோர்கள் காதை காம் கடனாற்ற நமக்குச் சான்றாக விருக்கின்றதன்றோ? நாம் அதனையும் மறக்கலாமா? எத்துணேயோ பல ஆண்டுகட்கு முன்னர் உயிர் வாழ்ந்த பலரைப்பற்றி நாம் இன்று பேசிப் புகழ்கின்றோம். அது எதனால்? அவர்கள் அஞ்சாமை கொண்டு தங்கடனிறுத்ததனாலன்றோ? அச்சங்கொண்டு  கடன் மறந்து வாழ்ந்து மாண்ட பல்லோர் நினைவு நமக்கு வருகிறதோ? இல்லையே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களைக்கூட நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை நினைக்கும்படி நம்மைத் துண்டுவது எது? அவர் வீரவாழ்க்கை-அஞ்சாமைவாழ்க்கை யன்றோ? அவர்கள் உடல் போயினும் புகழ் போகவில்லை. அது இவ்வுலக முள்ளளவும் மதி இரவி உள்ளளவும் அழியாது. இராமபிரான் என்றொரு வீரன் வாழ்ந்தான் இப்பெரு நாட்டில் என்பதை நாம் அறிவோம். அவன் எத் துணை ஆண்டுகட்கு முன்னிருந்தவன்! அப் பெரியோனைப்பற்றி நாம் இன்னும் பேசுகின்றோம்; அவன் சரித்திரத்தை நாம் படிக்கின்றோம்! வீரர்கட்குச் சரிதம் எழுதி வைப்பது அவ்வாறு அனைவரும் வாழவேண்டுமென்பதற்காகவல்லவா? இராமன் எவ்வாறு வாழ்ந்தான்? அவனுக்கு அச்சமென்பது கனவினும் உண்டோ? அவன் கடமையின் பொருட்டுக் துய்த்த துன்பங்கள் கொஞ்சமோ? சக்ரவர்த்தி திருமகனாகிய அவன், தன்னிலும் சிறிய இரண்டு பேரோடு கடுங்கானில் தனிவாழ்ந்தானன்றோ? அவனச்சங் கொண்டிருப்பனேல் புகழ் பெற்றிருக்க முடியுமோ?


அருச்சுனனைப்பற்றி - வீமனப்பற்றி நன்றாக அறிகிறோம். பாரதம் இராமாயணம் எல்லோருக்கும் தெரியுமாதலின் இவற்றைக் குறிப்பிடுகிறேன். இன்னும் அஞ்சாமை  தாங்கிய வீரர்கள் எண்ணற்றர் சரிதங்கள் உலகில் இலங்குகின்றன. எல்லாவற்றையும் காட்டுதல் முடியாது.


அப்பர் சுவாமிகள் இருந்தார்கள். அவர் அஞ்சா நெஞ்சுடை வீரான்றோ? அவர் காதையில்-அப்பெரியார் பாக்களில் அஞ்சாமை வழிந்தோடுகின்றது. அவர் படைகொண்டவரல்லர்; அஞ்சா உளங்கொண்டவரே, அஞ்சாமைக்குப் படை வேண்டாம்; பலமான உடல் வேண்டாம்; வலிய உளமே வேண்டும். அப் பெரியார், திருப்பாட்டுக்கள் அவர் அஞ்சாமையை உணர்த்தும். திருநாவுக்கரசடிகளின் "நாமார்க்குங் குடியல்லோம்" ஆதி பாக்களின் பொருளை நன்றாக உளத்தில் பதித்து வைத்துக் கொள்தல் வேண்டும். அஞ்சாமைக்கு இற்றைக்குச் சில்லாண்டு முன்னர் உடல்நீத்த தமிழருங் கவியாகிய பாரதியார் பாடிய சிலவற்றைக் கீழே தருகிறேன்:


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணி நம்மைத் தூறுசெய்தபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சை கொண்ட பொருளெலா மிமுந்து விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.



கச்சணித்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்பரூட்டுபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடித்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,


இவைகளின் பொருளைச் சி ந் தி த் து ப் பார்க்க! அஞ்சாமை வாழ்க்கையே நல்ல வாழ்க்கை.


கேவலம் தள்ளத்தக்க அச்சத்தை அணியாய்ப்பூண்டு, மானமற்ற வாழ்க்கை வாழ்வதினும் இன்றே இறந்து படுதல் நன்று.


"மானம் படவரின் வாழாமை முன்னினிது" அன்றோ?
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"
"இனிவரின் வாழாத மான முடையார்
ஒளிதொழு தேத்து முலகு”
"மருத்தோமற் றூனோம்பும் வாழ்க்கை
பெருந்தகைமை, பீடழிய வந்த விடத்து"
"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்
அந்நிலையே, கெட்டா னெனப்படுதல் நன்று"


என்பன போன்ற வள்ளுவனார் வாய் மொழியை மக்கள் மறத்தலாகாது. அச்சமேலீட்டினாலேயே மக்கள் மானத்தை இழக்கின்றனர்; பிற எல்லாவற்றையும் இழக்கின்றனர். இது தவறு! தவறு!! பெருந்தவறு!!! "மலை மிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர்-நில மிசைத், துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப் பட்டாரல்லால், எஞ்சினார் இவ்வுலகத் தில்"


இறந்து என்றேனும் படுவது திண்ணம் என்பது மறுக்க முடியா ஒன்று. இது எல்லோரும் அறிந்ததே. எனினும் மக்கள் நடை முறையில் இதனை மறந்து விடுகின்றார். இதனை மறவாது எண்ணிக் காரியங்களை ஆற்றுதல் வேண்டும். மக்கள் முதலில் கையாள வேண்டுவது மானம். அதன்பொருட்டு இந்நிலையிலா உடலைவிடச் சிறிதும் அஞ்சுதல் ஆகாது.




"https://ta.wikisource.org/w/index.php?title=குற்றால_வளம்/அஞ்சாமை&oldid=1534951" இலிருந்து மீள்விக்கப்பட்டது