உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றால வளம்/தீண்டத்தகாதார் யார்?

விக்கிமூலம் இலிருந்து
தீண்டத்தகாதார் யார்?


தீண்டத்தகாதார் யார் என்பதைப்பற்றி ஈண்டு ஆராயலாம். தீண்டத்தகாகார் எனப் பிறப்புப்பற்றி ஒரு பிரிவார் ஹிந்துக்களுள் பெரும்பாலாரால் ஒதுக்கப்படுகின்றனர். அது பிழையென்றும் பிறப்பினால் தீண்டத்தகாதார் உண்டு என்று உரைத்தல் பேதைமை என்றும் பேசும் கொள்கைகொண்ட ஒரு கூட்டத்தார் இந்நாள் நம் நாட்டில் பெருகிவருகின்றார், காந்தியடிகள் கோலிய ஒத்துழையாமைக் திட்டத்திலும் தீண்டாமை விலக்கு ஒரு முக்கியமான உறுப்பாக அமைக்கப்பெற்றது. அத் தீண்டாமை விலக்கு என்பது பிறப்பினால் ஒரு பிரிவார் தீண்டத்தகாதாராகக் கொள்ளப்படும் பொருளற்ற காரியத்தை நிறுத்துதல் என்ற பொருள்கொண்டே தெடங்கப்பட்டது.


"தீண்டாமையை விலக்குதல் என்றால் தீண்டத்தகாதாராக யாருமே கொள்ளப்படக் கூடாதன்றோ? அங்ஙனமாக, 'தீண்டத்தகாதார் யார்?' என்ற வினா எழவேண்டுவதென்னை? தீண்டத்தகாதார் யார் என்ற வினாவிலிருந்தே தீண்டத்தகாதாரும் உளரென்று கிடைக்கின்றதே. இது தீண்டாமை விலக்கிற்கு முரணன்றோ?" என்று எவரும் வினவலாம். தீண்டத்தகாகார்எவரும் இல்லையென்பது என் கருத்தன்று. தீண்டத்தகாதார் உள்ர். தீண்டாமை  விலக்கு என்ற கொள்கை எனக்கு உடன்பாடல்ல வென்று இது கொண்டு யாரும் கூறிவிட வேண்டாம். அக்கொள்கையை அதி தீவிரமாக வலியுறுத்துவோர் கூட்டத்துள் நானும் சேர்ந்தவனே. தீண்டாமை விலக்கு என்பதற்கு இப பொழுது தீண்டத்தகாதாராகக் கொள்ளப்படும் மூடக்கொள்கையை விலக்கல் என்பதே பொருள். அதுவேயன்றித் தீண்டத்தகாத செயல்புரியும் ஒருவரை விலக்குவதில் என்னே பிழை.


இந்நாள் இந்து சமூகத்தினரால் தீண்டத் தகாதாராக யார் கொள்ளப்படுகிறார்? வழிவழியாக வரும் ஒரு கூட்டத்தார். பிறப்புப்பற்றி ஒரு வகையாரைத் தீண்டத் தகாதாராகக் கொள்ளப்படுவதற்கு என்ன நியாயம்? விவாத முறையில் அறிவு உலகம் ஏற்றுக்கொள்ளக் தக்கவாறு எவரும் இன்னோரன்ன மூட வழக்கங்கட்கு எவ்விதக் காரணங்களும் இயம்ப முடியாதென்பது உறுதி. ஒருவருக்குப் பிறந்த குற்றத்திற்காக, தீண்டத் தகாதவரென்றால் பெரும் பேதைமை. அக்கொள்கையுடையார் வாதங்கள் அறிவு வழியே செல்லா. அவர், சாத்திரங்கள் சாற்றுகின்றனவென்றும் பிறவும் கழறுவர். சாத்திரங்களைப் புரட்டினால் அவை பலப்பல சாற்றும், அவர் கொள்கையை மறுத்துத் தூக்கியெறிய அவர் கொள்ளும் அச்சாத்திரங்களுள் எண்ணற்ற சான்றுகள் உள. அக்குப்பைகள் கிடக்க. ஈண்டு அவற்றில் புகவேண்டாம்.

 எல்லாக் கொள்கையையும் பலப் பலர் பல மாதிரி பகர்ந்திருப்பர். பிறர் துணைகொண்டே உயிர் வாழ்தல் என்றும் முடியாத காரியம். எவர் என்ன இயம்பியிருந்தால் என்ன? எல்லோரும் நம்போன்ற மனிதர்கள்தாம்? ஒவ்வொருவருக்கும் சொந்த அறிவுண்டு. "அவர் சொல்லியிருக்கிறார்; இவர் சொல்லியிருக்கிறார்" என்பதைக் காட்டிலும் "நான் சொல்லுகிறேன்; நீ காரணங்காட்டி முடிந்தால் மறு" என்று மொழிவதே சிறப்புடைத்து. கண் கூடாகக் காரணத்தோடு மறுக்க முடியவில்லை யானால் தப்பித்துக் கொள்வதற்காக அவரையும் இவரையும் எடுத்தாண்டால் அதற்கு உடன்பட்டு யாரே, கொள்கையை விடப் போகிறார்? அறிஞர் இப்பூச்சாண்டிகட்கெல்லாம் சிறிதும் அஞ்சப்போவதில்லை யென்பதில் எனக்கு ஐயமில்லை.


"அநியாயமாக ஒரு பெரும் வகுப்பாரைத் தீண்டத்தகாதாரென ஏன் ஐயா ஒதுக்குகின்றீகள்?" என்றால் அதற்குக் காரணம் கூறுதல் வேண்டாவோ? காரணங் கூற அறியாது வீணாக ஒரு வகுப்பாரைத் தீண்டத்தகாதாரென்று எவர் சாற்றுகின்றாரோ அவரே தீண்டத்தகாதாரென நாம் ஒதுக்கவேண்டும். "ஒரு காரணமுமின்றித் தொடக்கத்தில் இப்பெரும் வகுப்பார் தீண்டத்தகாதார் என ஒதுக்கப்பட்டிருப்பாரா?" என்று கேட்கலாம். காரணம் இல்லையென்று இயம்பமுடியாது. நானும் இல்லையென்று செப்பவில்லை. காரணம் உண்டு. அதனைக் கண்டறியும் அறிவிழந்து இன்னும் இவ்வகுப்பாரையெல்லாம் பொருள் இன்றிக் தீண்டத்தகாதார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு பகுதியார். ஆராய்ச்சி உலகில் நுழைந்தால் இம்மூட எண்ணத்தை விட்டொழியாதிருக்க முடியாது.


ஜாதி என்பது பெரிய மாயையாக இந்தியாவை ஆட்டுகின்றது. ஜாதிகளின் உண்மையறியாமையாலேயே மக்கள் மயங்கி அழிகின்றார். இறைவன் என்ற ஒருவன் மக்களைப் படைக்கும்பொழுது, நீ இன்ன ஜாதி, நீ இன்ன ஜாதி எனப் படைத்தான் என்றால் எவ்வளவு அறியாமை! அவ்வாறானால் மக்கட் ஜாதிக்குள்ளே இறைவன் தான் வேறுபடுத்திப் படைத்த ஒவ்வொரு பிரிவுக்கும் உருவத்தில் அடையாளங்கள் ஏதேனும் வைத்திருக்கின்றானோ? பார்ப்பான் என்பவனுக்கு நான்கு. கைகளும் அரசன் என்பவனுக்கு மூன்று. கைகளும் வணிகன் என்பவனுக்கு இரண்டு கைகளும் வேளாளன் என்பவனுக்கு ஒரு கையும் தீண்டத்தகாதவன் என்பவனுக்குக் கையில்லாமலும் செய்தோ அன்றி வேறு எந்த வேறுபாடாவது தோன்றும்படியாகவோ படைக்கின்றானோ?


பார்ப்பான் என்பவனுக்கும் பறையன் என்பவனுக்கும் மற்றையோனுக்கும் உருவத்தில் எவ்வித வேறுபாடும் காணவில்லை;  உணர்ச்சியிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை; செயலிலும் எந்த மாறுபாடும் இல்லை. மனிதர்கள் என்ற ஒரே நிலைமையைத் தவிர எந்த மாறு பாடும் காணப்படா நிலையில்-பலவேறு ஜாதியென்று பகரப்படுவோருள்ளும் எல்லா வகையான கூட்டுறவும் நிகழும் நிலையில், பிறப்பில் ஜாதியாகப் பிரித்து படைக்கப்பட்டது என்ற பெரும் பேதைமைக்கு என்னே பொருள்? எனவே தீண்டத்தகாதார் எனப் பிறப்பிலேயே எவரும் படைக்கப்படவில்லை. ஆனால் இன்று பிறப்பினால் ஒரு வகுப்பார் தீண்டத்தகாதார் என ஏன் கொள்ளப்படுகிறார்? மற்ற ஜாதிகள் கொள்ளப்படும் அறியாமைக் கொள்கை போலவே தீண்டத்தகாதாரும் கொள்ளப்படுகிறார். இடைக்கால மக்கள் அறியாமையால் நிகழ்ந்த கேடுகளுள் இதுவும் ஒன்று.


மக்கள் உயர்வு தாழ்வு எல்லாம் செயல் பற்றியேயன்றிப் பிற எதுபற்றியும் அன்று. தீண்டத்தகாத செயலை எவர் செய்கின்றாரோ அவர் அச்செயலைக் கையாளும் வரையும் தீண்டத்தகாதாரே யாவர். பண்டைநாள் தீண்டத்தகாத செயல் செய்தோர் அச்செயல் திருந்த வேண்டி உயர்ந்த மக்களால் தீண்டத்தகாதாராக ஒதுக்கிவைக்கப்பட்டார். ஒரேமக்கட்குழுவிலேயே ஒரு சிலர் இழித்த செயல் செய்தால் அச்செயல் காரணமாக அவர் இழிவுபடுத்தப் படுவதென்பது ஒன்று இருக்குமானால் தவறிய அவர்நாணமுற்று அச்செயல்விடுத்து நல்வழிப்  படுதல்கூடும். இந்நல்நோக்கங் கொண்டே தொடக்கத்தில் தீண்டாமையும் பிறவும் கையாளப்பட்டிருத்தல் வேண்டும். அதனால் பலர் திருந்தி வந்திருத்தலுங் கூடும். அதற்கும் திருந்தாது அவ் இழி செயலிலே நின்றோர் ஆயுள் வரையும் தீண்டத் தகாதாராகவே இருந்து மாண்டுபட்டிருப்பர். அவர் வழிவழிவந்த அனைவரும் தீண்டத்தகாதார் என்று கொள்வது போன்ற அறியாமை என்னிருக்கிறது! நாளடைவில் அவர் பரம்பரையாரெல்லாம் தீண்டத்தகாதாராகக் கொள்ளப்பட்டு விட்டார். தகப்பன் யோக்கினானால் மகன் யோக்கியனென்றும் தகப்பன் அயோக்கினனனானால் மகனும் அவ்வாறே யென்றும் தீர்மானிக்க முடியுமா? உலகத்திய நடைமுறை அப்படி யிருக்கிறதோ? இது, தெரிந்துகொள்ளமுடியாத தேவலோகத்துச் செய்தியல்லவே! கண்ணுக்குத் தெரியும் நாம் வாழுகின்ற இப்பாக்த பேருலகில் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காணக்கூடிய ஒன்றன்றோ இது. இதற்குச் செய்யுட் சான்றும் சாத்திர மேற்கோளும் வேண்டாமே. வேறு முறையில் வேண்டுமானால் இதற்கு வாதிக்கலாம். அது எனக்குத் தெரியும். அவ்விவாதம் ஈண்டு வேண்டாம். அதன்முடிவும் என் கொள்கைக்குப் பெரிதும் துணைபுரிவது என்பதைப் பேரறிவுள்ளோர் ஆராயிற் காண்பர்.


ஒவ்வொருவனுக்கும் தனித்தனியே அறிவுண்டு; குணமுண்டு செயல் செய்யும் ஆற்றல்  தனித்தனியே உண்டு. தகப்பன் நல்ல செயல் செய்திருக்க, தீய செயல்புரியும் மக்கள் உண்டு. தீய செயல் செய்தோன் மக்களில் நல்லனவே புரிவோர் உளர். தகப்பனைக்கொண்டு மகனுக்குப் பெருமை கொடுப்பதானால் நல்லவன் கெட்டவனாகவும் கெட்டவன் நல்லவனாகவும் கொள்ளப்பட்டு விடுவான். பெருமையும் சிறுமையும் தன் செயலைப் பொறுத்ததன்றித் தகப்பன் செயலைப் பொறுத்ததன்று. எனவே பரம்பரை காரணமாக ஜாதி கொள்ளப்பட்டுத் தீண்டத்தகாதார் என வீணாக ஒரு பெருங் கூட்டத்தார் ஒதுக்கப்படுதற்குப் பொருள் சிறிதும் இல்லையென்று எத்துணை முறை வேண்டுமானாலும் அறுதியிட்டு நிரூபிக்க முடியும். நல்லறிவும் நடுவுநிலைமையும் உள்ளார் அம்மூடக் கொள்கையை அடியோடு வெறுப்பர் என்பதில் தடையில்லை. ஆகவே அம்முறையில் பிறப்புப்பற்றித் தீண்டத்தகாதாரில்லை; இல்லை; முக் காலும் இல்லை.


பின்னை, வேறுவகையில் தீண்டத்தகாதாருளரோ? உளர்; உளர்; செயல்பற்றித் தீண்டத்தகாதார் உளர். எவர் இழிந்தசெயல் செய்கின்றாரோ அவர் தீண்டத்தகாதார். இந்நாள் தீண்டத் தகாதாரென்று ஒதுக்கப்படுவோர் பரம்பரை யிருந்த முன்னோரெனக் கொள்வோர் எவைபற்றித் தீண்டத் தகாதாராக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்? புன் புலால் உண்டமையாலும் பொய்  புகன்றமையாலும் புறந்துய்மையற்றுக் கிடந்தமையாலும் அன்ன பிற செய்தமையாலுமே அவர் ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இன்றும் அவை புரிவோரைத் தீண்டத்தகாதராக ஒதுக்கலாம். வேறு பல இழிந்த செயல் ஆற்றுவோரையும் தீண்டத் தகாதாராகக் கொள்ளலாம்.


தீண்டத்தகாதார் யார்? புலாலுண்போர் தீண்டத்தகாதார்! பொய் பேசுவோர் தீண்டத் தகாதரர்! வஞ்சகம் செய்வோர் தீண்டத் தகாதார்! கொலை செய்வோர் தீண்டத்தகாதார்!. கள்ளருந்துவோர் தீண்டத்தகாதார்! காமம் நுகர்வோர் தீண்டத்தகாதார்! வரம்பு கடந்த செயல் என்னென்ன உண்டோ அவை செய்வோர் அனைவரும் தீண்டத்தகாதார்! வாளா ஒரு பெருங் கூட்டத்தாரைத் தீண்டத் தகாதார் எனப் பொருளின்றிப் புகலும் தீயோர்கள் எல்லோரையும்விடக் கொடிய தீண்டத்தகாதார்!!