குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/உடற் கல்வியும் ஒரு கல்வியே!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1. உடற்கல்வியும் ஒரு கல்வியே!

முதன்மையும் முக்கியமும்

இந்திய நாட்டின் கலாசாரத்தில், மரபுகளில், பழக்க வழக்கங்களில், உடற்கல்வி ஒரு முக்கியமான இடத்தையே வகித்து வந்திருக்கிறது. வகித்தும் வருகிறது.

வரலாறுக்கு முற்பட்ட காலத்தலிருந்தே, உடற்கல்வியும், உடல் இயக்கப் பழக்க வழக்கங்களும், இந்தியர்களின் வாழ்க்கையில், வாழ்வோடு வாழ்வாகவே, பின்னிப் பிணைந்து இருந்தன. இருக்கின்றன. இனியும் இருக்கும்.

ஆகவே, உடற்கல்வி என்பது, நம் நாட்டிற்குப் புதிதல்ல... நமக்கு புதிதல்ல.

என்றாலும், பல்வேறு சூழ்நிலைகள், பலம் கொடுக்கின்ற பாதைகளை மறித்த இக்கட்டான பாழ்நிலைகள் எல்லாம், நமது பாரம்பரியத்தை, சற்றே திசை மாற்றித் திருப்பி விட்டன. அதாவது, இந்த உடற்கல்வித் துறையில் தான் விருப்பத்திற்கு மாறான பல திருப்பங்கள் ஏற்பட்டன.

மக்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகள் மிகுதியாகப் போய், முதுகிலேறி அமர்ந்து கொண்டு, அழுத்திக் கொண்டு, முரண்டு பிடித்த காரணத்தால், உடல் பற்றிய உணர்வும், சற்றே இடம் மாறிப் போயின. தடம் மாறிப்போயின.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, சுகந்தரும் உடற்கல்வியை, ஒரு தேசியக் கொள்கையாக உருவாக்கிக் கொண்டு, செழுமையும், முழுமையும் பெறத்தக்க அளவில், முக்கியத்துவம் அளித்தனர், நமது நெடுநோக்குள்ள தலைவர்கள்.

போதுமான அறிவையும், தெளிவையும் அளிக்கிற பொதுக் கல்விக்கு இணையாக உடற்கல்வியும் வேண்டும் என்று அறிவார்ந்த மக்கள் விரும்பினள். குரல் கொடுத்தனர். உரிய இடத்தை வழங்க வேண்டும் என்று வேட்கையுடன், உற்சாகமாக ஈடுபட்டனர், பாடுபட்டனர்.

அதன் விளைவே, பள்ளிகளில், உடற்கல்விப் பாடத்திட்டம், கட்டாய உடற்கல்விப் பாடம் என்ற பெயரில், இடம் பெற்றன. இடம் பெற்ற விதம் எடுப்பாக இருந்ததே தவிர, பிடுக்காக செயல்படவில்லை என்ற நிலை, இன்றும் தொடர்ந்து வருகிறது.

என்றாலும், உடற்கல்வியின் அவசியம் பற்றிய அறிவும் தெளிவும், இன்று மக்களிடையே மிகுதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.

ஆரம்பப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு 6 முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு, கட்டாயமாக உடற்கல்விப் படிப்பும், உடற்பயிற்சித் தொகுப்பும், விளையாட்டு நடப்பும், வேண்டும் என்று, தலைவர்கள் விரும்பினர்.

அதற்கான ஆக்கபூர்வமான வழிகளில் திட்டங்கள் நீட்டினர். சட்டங்களும் செய்தனர். எண்ணிய யாவும், திண்ணமாக நடைபெற உதவினர்.

அந்த நன்னோக்கினை, நடைமுறைப்படுத்த உதவுகின்ற முறையில், விளக்கங்களும், விவரங்களும், செயல்முறைப்படுத்தும் சீரிய விதங்களும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

உடற்கல்வியின் நோக்கங்கள் :

உடற்கல்வியின் நோக்கமாவது-குழந்தைகளின் உடல் தரத்தை, உடல் பலத்தை வளர்த்து விடுவது; உள நலத்தை, உள வளத்தை, உள வலிமையை மிகுதிப்படுத்தி விடுவது, உணர்வுகளை ஒரு சீராக்கி, நேராக்கி, நேரிய பாதையில் நடத்த விடுவது. நடத்தி விடுவதாகவும் அது அமைந்திருக்கிறது.

அதையே நாம் உடற்கல்வி உடலை கூராக்குகிறது. வாழ்வை சீராக்குகிறது என்று கூறலாம்.

இனி, உடற்கல்வியானது, குழந்தைகளின் நல்ல வாழ்வுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

1. 1. உடல் நலம், நிமிர்ந்து நிற்கும் அழகான தோரணை; செம்மாந்த நடை, இந்த இனிய நிலையை ஏற்படுத்தி, செழுமைப் படுத்துகிறது.

1. 2. உடல் தரத்தை, திறத்தை அதிகப்படுத்துகிறது.

1. 3. குழந்தைகள் தங்களுடைய இதமான நடைமுறைகளையும், எழிலாகச் செய்கிற செயல் முறைகளையும், விரும்பியவாறு மேன்மையுடன் செய்து கொண்டு, சந்தோஷப்பட உதவுகிறது.

1. 4. உணவு உண்ணும் முறையில், உறங்கும் முறையில், உடற்பயிற்சி முறையில், சுகாதாரமான பழக்க வழக்கங்களை உண்டாக்குகிறது.

1. 5. குழந்தைகள் தங்களுக்குரிய உடல் குறைகளை (Defects) உணரச் செய்து, அவற்றை நிவர்த்திக்கின்ற முறைகளைக் கற்றுக் கொண்டு நிவாரணம் பெற உதவுகிறது. 1. 6. தங்களுக்குரிய திறமைகளைப் புரிந்து கொண்டு, தடுத்து நிற்கும் குறைகளைத் தவிர்த்துக்கொண்டு, நரம்பும் தசைகளும் இணைந்து செயல்படுத்தும் காரியங்களை, நல்ல விதமாகக் கற்றுத்தருகிறது.

1. 7. குழந்தைகளுக்கு இடையே கொப்புளித்து எழும்புகிற குழு ஒற்றுமை, கூட்டுணர்வுப் பண்பு, நீதி நியாயம் அறிந்து நடந்து கொள்கிற நேர்மைப் பண்பு, நல்ல விளையாட்டுக் குணங்கள், போன்ற குணங்களை, வளர்த்து விடுகிறது.

1. 8. கூடிப் பழகும் குணங்களுக்கு அடிப்படையாக உள்ள தனிப்பட்ட குணங்களான, அடக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு உணர்வு, வீரம், தியாகம், மற்றவர்களை மதித்தல், தன்னம்பிக்கை போன்றவற்றையும் மிகுதியாக வளர்த்து விடுகிறது.

1. 9. தமது பொறுப்புணர்தல்; கடமைகளைப் புரிந்து கொள்ளுதல்; சுய பலம் அறிதல்; சில தியாகங்களை மேற்கொள்ள முயலுதல்; பிறருக்கு உதவுதல், வழிகாட்டுதல், போன்ற உயர்ந்த குணங்களை வளர்த்து விடுகிறது.

1. 10. சதா காலமும் நினைத்த இடமெல்லாம் அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல், ஓய்வு நேரத்தை ஒழுங்கான முறையில் அனுபவித்தல், அதன் மூலம் உற்சாகம் பெறுதல்; தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உதவியாக வாழுதல் போன்ற பண்பாற்றல்களைப் பெருக்கி விடுகிறது. 1. 11 திடமான குழந்தைகளே , தரமான குடிமக்களாக உருவாக முடியும். தன்னைக் காத்துக் கொள்ளத் தெரிந்த குழந்தைகளே, தகுதியுள்ள மக்களாகவும், தலைவர்களாகவும் பிற்காலத்தில் விளங்க முடியும். அப்படிப்பட்ட வாழ்வுக்குரிய தற்காப்பு உணர்வுடன், தற்காப்புக்கலைகளைக் கற்றுக்கொள்ளவும் துணைபுரிகிறது.

1. 12. இப்படிப்பட்ட ஏற்றமிகு குணாதிசயங்களை வளர்த்துவிட்டு, வீட்டிற்கும், நாட்டிற்கும் வளமான பணியாற்றுகிற வாய்ப்பு, வசதிகளை அளித்து, பலமிக்கத் தாய் நாட்டை, புகழ்மிக்கதாகவும் உருவாக்கி வரும் மேன்மையை வழங்குகிறது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf