உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/என்ன நடக்குமோ?

விக்கிமூலம் இலிருந்து

என்ன நடக்குமோ?


ஐந்து பூனைக் குட்டிகள்

அணி வகுத்துச் சென்றன.
வெய்யில் கொளுத்தும் வேளையில்
வேக மாகப் போயின.

கடுக டுத்த முகத்துடன்
காலை எட்டிப் போட்டன.
படை யெடுக்கும் வீரர்போல்
பாய்ந்து பாய்ந்து சென்றன.

வேலைப் போல இருக்குமாம்
மிகவும் கூர்மை யாகவே
காலில் உள்ள நகங்களைக்
காட்டிக் கொண்டே சென்றன.

மீசை துடித்து நிற்கவே,
வியர்வை நன்கு சொட்டவே,
தூசி எங்கும் பறக்கவே
துரித மாகச் சென்றன!


கண்கள் இரண்டும் சிவக்கவே,
காதும் நிமிர்ந்து நிற்கவே,
என்ன கோபம், கோபமோ !
எங்கே அவைகள் போகுமோ ?

சீன வெடியைக் கொளுத்தியே
சின்னப் பூனைக் குட்டிமேல்
சீனு போட்டு விட்டதால்
தேம்பித் தேம்பி அழுததாம்.

அண்ணன் மாரி டத்திலே
அழுது கொண்டே வந்ததாம்;
கண்ணீர் வழிய நடந்ததைக்
கலக்கத் தோடே சொன்னதாம் !

கேட்ட வுடனே அண்ணன்மார்
கிளம்பி விட்டார்; சீனுவின்
வீட்டைத் தேடிச் செல்கிறார்.
மேலே என்ன நடக்குமோ ?