குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/ஏமாற்றம்
ஏமாற்றம்
ஒருநாள் இரவு படித்திடவே
உட்கார்ந் தேன்நான் தங்கையுடன்
‘கடகட’ எனவே ஒருசத்தம்
கதவி லிருந்து வந்ததுவே.
‘யாரது?’ என்றே நான்கேட்டேன்.
யாரும் ‘நான்தான்’ எனவில்லை !
திரும்பப் பதிலே வரவில்லை.
திருடன் எனவே எண்ணிவிட்டேன்
பயத்தால் என்னுடல் நடுங்கியது.
பார்த்தனள் தங்கை; சிரித்தனனே.
‘ஐயோ! அச்சம் கொள்கின்றாய்.
ஆணோ நீதான்? எனக்கேட்டாள்
எழுந்தேன் விரைவாய், இடம்விட்டே.
எடுத்தேன். தடியைக் கைதனிலே
சென்றேன் அந்தக் கதவோரம்,
சிறிதும் அச்சம் இல்லாமல்.
‘மிரட்டிச் சென்ற அச்சத்தம்
மீண்டும் வந்தால் உடனேயே,
தட்டிய அந்தத் திருடனைநான்
தடியால் அடிப்பேன்’ எனுமுன்னே
‘கடகட’ எனவே மறுபடியும்
கதவில் சத்தம் எழுந்ததுவே.
‘பட்’டெனக் கதவைத் திறந்தேன்நான்.
பார்த்தேன் எல்லாப் பக்கமுமே.
யாரையும்அங்கே காணோமே!
‘யார் அவர்?’ என்றே நான்கேட்டேன்.
இதனைக் கண்ட தங்கையுமே
‘இடிஇடி’ எனவே சிரித்தனளே.
‘கதவைத் தட்டிச் சென்றதுவே
கண்ணில் தோன்றாக் காற்றுத்தான்!
அடித்திடும் காற்றை அடிப்பதற்கோ
அத்தனை வீரம்?’ என்றனளே!