உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/நாயின் நன்றி

விக்கிமூலம் இலிருந்து

நாயின் நன்றி



பணத்தில் மிக்க ஒருவரது
பையன் ஒருநாய் வளர்த்தனனே.
குணத்தில் மிக்கது அந்நாயும்.
குற்றம் எதுவும் செய்யாதாம்!

நாயைக் கண்டால் தந்தைக்கு
நஞ்சைக் கண்டது போலேயாம்.
வாயை விட்டுக் கோபமுடன்
வார்த்தை கூறி வைதிடுவார்.

“சோற்றுக் கில்லா நாளையிலே
சோறு போட்டு இந்நாயைப்
போற்று கின்றாய். உன்போலப்
புத்தி கெட்டவன் எவன் இருப்பான்”

என்றே தந்தையும் கூறிடுவார்.
என்னே செய்வான் பையனுமே.
நன்றி உள்ள அந்நாயோ
நகரா தங்கே இருந்ததுவே.


உற்சவம் ஒன்று பக்கத்து
ஊரில் நடந்தது கண்டிடவே
உற்சா கத்துடன் எல்லாரும்
ஒன்றாய்க் கூடிச் சென்றனரே.

தள்ளா வயது ஆனதனால்,
தந்தை மட்டும் போகவில்லை.
கள்ளன் ஒருவன் இரவினிலே
கதவை உடைத்தே உள்சென்றான்.

பந்தம் ஒன்றை வாயினிலே
பலமாய் வைத்துத் தூணூடனே
தந்தை தன்னைக் கட்டியபின்
தங்கம், வெள்ளி திருடினனே.

சட்டென அங்கே நாய்வந்து,
தாக்கிய தந்தத் திருடனையே!
வெட்டிய காயம் போலவேதான்
மேலெலாம் புண்கள் ஆயினவே!

குரைத்திடும் சத்தம் கேட்டதுமே
கூடியே ஊரார் வந்தனரே.
விறைப்புடன் ஓடிய திருடனையே
விரட்டிப் பிடித்தே உதைத்தனரே.


தன்னுடை உயிரும் தப்பியதே,
தங்கம், வெள்ளி, நகையுடனே.
நன்றி மிகவும் உள்ளதென
நாயைப் புகழ்ந்தார், தந்தையுமே.

மனமகிழ் வுடனே அந்நாயை
மகனினும் மேலாய்ப் போற்றினரே.
தினமும் சோறு வைத்தனரே,
தின்றிடல் கண்டு மகிழ்ந்தனரே.