குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/மலையும் வாழ்வும்
மலையும் வாழ்வும்
திருப்பதி மலைக்குச் செல்வதெனத்
தீர்மா னித்தார், என்தந்தை.
‘என்னையும் அழைத்துச் சென்றிடுவீர்’
என்றே அவரை நான்வேண்ட
‘சரி’என அவரும் கூறினரே.
தந்தையும் நானும் புறப்பட்டோம்.
மலையில் ஏறிச் செல்லுகையில்
மயக்கம் எனக்கு வந்ததுவே.
‘களைப்பொடு மயக்கம் வருகிறது.
காலும் அத்துடன் வலிக்கிறது.
எத்தனை தூரம் இனியும்நாம்
ஏறிட வேண்டும்?’ என்றேனே.
‘இன்னும் கொஞ்சம் தூரம்தான்.
ஏறிடு வா’ யென அழைத்தனரே
வழியினில் உட்கார்ந் துட்கார்ந்து
வங்தோம் மலையின் உச்சிக்கே.
மணிகள் மூன்று ஆயினவே
மலையின் உச்சி அடைந்திடவே.
திவ்விய தரிசனம் செய்தோமே.
தின்றிட உணவும் பெற்றோமே.
பெறுதற் கரிய காட்சியினைப்
பெற்றோம் அன்று வாழ்வினிலே,
மலையைக் கடந்து இறங்கிடவே
மறுநாட் காலை புறப்பட்டோம்.
‘விறுவிறு’ எனவே கீழ்நோக்கி
விரைவில் இறங்கி வந்திட்டோம்.
சிரமம் சிறிதும் இல்லாமல்
சீக்கிர மாக வந்ததனால்,
மலையின் அடியை அடைந்திடவே
மணிகள் இரண்டே ஆயினவே.
அடியில் வந்ததும் தந்தையெனை
அருகில் அழைத்துக் கூறினரே;
‘சென்றிட மலைக்கே மூன்றுமணி
சென்றது ; அத்துடன் சிரமங்கள்
வந்தன, நமது வழியெல்லாம்.
வாழ்வும் அதுபோல் உணர்ந்திடுவாய்.
பெரியோ ரெனவே பெயரெடுக்கப்
பெரிதும் துன்பம் வழிமறைக்கும்.
நாட்கள் பலவும் ஆவதொடு
நம்பித் துன்பம் கடந்திடுவர்.
இறங்குதல் போல எளிதன்று
இம்மண் ணுலகில் பெரியோராய்
ஆவது’ என்றே கூறினரே.
அன்றொரு பாடம் கற்றனனே.