உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/மானின் விடுதலை

விக்கிமூலம் இலிருந்து



மானின் விடுதலை

பையன் :
புள்ளி மானே, கோபம்நீ
கொள்வ தேனோ, கூறுவாய் ?

மான் :
கட்ட விழ்த்து விட்டிடு.
காட்டை நோக்கிப் போகிறேன்

பையன் :
ஒருவி னாடி கூடநான்
உன்னை விட்டி ருப்பேனோ ?

மான் :
உடனே நீயும் புறப்படு.
ஒன்றாய்க் காடு செல்லலாம்.



பையன் :
காட்டை நோக்கிப் போகவா ?
கல்லும் முள்ளும் குத்துமே !

அம்மா, அப்பா, பாட்டியை
ஐயோ, விட்டு வருவதா ?

இருட்டிப் போனால் விளக்குமே
இல்லை அந்தக் காட்டிலே,
 
சிங்கம், கரடி, புலியுமே
சீறி வந்து கடிக்குமே !

மான் :
அப்ப டித்தான் எனக்குமே
அதிகக் கஷ்டம் இல்லையோ ?

சுற்றத் தார்கள் வருவரோ ?
துள்ளிச் சுற்ற முடியுமோ ?

ஆசை கொண்ட உணவையும்
அடைந்து தின்னக் கூடுமோ ?
 
கழுத்து நோக என்னையார்
காட்டில் கட்டிப் போடுவார் ?


இதனைக் கேட்ட அவன்மனம்
இளகிப் போச்சு மெத்தவும்.

‘ஐயோ, பாவம், ஐயையோ !
அவிழ்த்து விட்டேன்; ஓடிடு’


என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.

காட்டை நோக்கி மகிழ்வுடன்
காற்றைப் போல ஓடிடும்

மானைக் கண்டு அவனுமே
மகிழ்ச்சி கொள்ள லாயினன்!