குழந்தைப் பாடல்கள்-கவிமணி

விக்கிமூலம் இலிருந்து

சிறுவர் இலக்கியம்[தொகு]

ஆசிரியர்:கவிமணி[தொகு]

மழலை மொழி

1. முத்தந்தா[தொகு]



1. கண்ணே! மணியே! முத்தந் தா!

கட்டிக் கரும்பே முத்தந் தா!

வண்ணக் கிளியே! முத்தந் தா!

வாசக் கொழுந்தே முத்தந் தா!

கவிமணிப் பட்டம்

தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள்,(பச்சையப்பன் கல்லூரி, சென்னை) 24 டிசம்பர் 1940 அன்று, தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கட்குக் கவிமணி எனும் பட்டம் வழங்கினார்.

2.தேனே! பாலே! முத்தந் தா,

தெவிட்டாக் கனியே முத்தந் தா;

மானே! மயிலே! முத்தந் தா,

மடியில் வந்து முத்தந் தா!

2. தாலாட்டு

1. ஆராரோ? ஆராரோ?
ஆரிவரோ? ஆராரோ?

2. மாமணியோ? முத்தோ?
மரகதமோ? மன்னவர்தம்
தாம முடிமீது
தயங்கும் வயிரமதோ?

3. முல்லை நறுமலரோ?
முருகவிழ்க்குந் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
மருக்கொழுந்தோ? சண்பகமோ?

4.தெள்ளமுதம் உண்டு,
தெவிட்டாக் கனிஉண்டு,எம்
உள்ளங் குளிர
உரையாடும் பைங்கிளியோ?

5. கற்கண்டு சீனி
கனியுங் கனிந்தொழுகி
சொற்கொண்டு எமக்குச்
சுகமளிக்கும் பூங்குயிலோ?

6.நெஞ்சிற் கவலையெலாம்
நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி எம்மைப்
போற்றும் இளமதியோ?

7. பல்லக்கில் அம்மான்
பவனி வரும்பொழுது
மெல்ல மடியிருந்து
விளையாடும் பைங்கிளியோ?

8. பூமாலை வாடும், மணம்
பொன்மாலைக் கில்லையென்று
பாமாலை வைத்தீசன்
பாதம்பணிபவளோ?

9. பாலமுதம் உண்டுதமிழ்ப்
பாமாலை பாடி,இந்தத்
தாலம் புகழவரும்
சம்பந்தன் நீதானோ?

10. கொன்றையணிந் தம்பலத்தில்
கூத்தாடும் ஐயனுக்கு
வன்றொண்ட னாக
வளர்ந்தவனும் நீதானோ?


11. கல்லைப் பிசைந்து
கனியாக்குஞ் செந்தமிழின்
சொல்லை மணியாகத்
தொடுத்தவனும் நீதானோ?

12.பூவில் அயனும், இந்தப்
பூமீது வள்ளுவர்தம்
பாவின் நயம்உணரப்
பாலகனாய் வந்தானோ?

13. கம்பன் கவியின்
களியமுதம் உண்டிட,மால்
அம்புவியில், வந்திங்கு
அவதாரம் செய்தானோ?

14. தேவாரப் பாகும்,
திருவாசகத் தேனும்,
நாவார உண்ண எம்மான்
நன்மகவாய் வந்தானோ?

15. ஆக்கம் பெருக
அறம் வளர, நாட்டையெலாம்
காக்கும் பெருமான்
கருணைத் திருவுருவோ?


16. புள்ளி மயிலோடு
புனங்காத்து நிற்கும் அந்த
வள்ளி மணாளன்
மதலையாய் வந்தானோ?

17. ஆயர் பதியில்
அற்புதங்கள் செய்துநின்ற
மாயவனே இங்கெமக்கு
மகவாகி வந்தானோ?

18. நாலாயிரக் கவியின்
நல்லமுதம் உண்டிட, மால்
jபாலாழி நீங்கியொரு
பாலகனாய் வந்தானோ?

19. பெண்கள் சிறுவீட்டைப்
பேணா தழித்து, அவர்தம்
கண்கள் சிவக்க வைக்கும்
கண்ணபிரான் நீதானோ?

20. ஆரடித்தார்நீ அழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு
சீரெடுத்த செல்வச்
சீமான் திருக்குமரா

21. பாலை விரும்பினையோ?
பணிகாரம் வேண்டினையோ?
சோலைப் பசுங்கிளியே!
சுந்தரமே! சொல்லி அழு!

22. சப்பாணி கொட்டித்
தளர்ந்தனையோ? அல்லதுன்றன்
கைப்பாவைக் காகக்
கலங்கி அழுதனையோ?

23. தித்திக்கும் தேனும்
தினைமாவும் கொண்டுன்றன்
அத்தை வருவாள்
அழவேண்டாம், கண்மணியே!

24. மாங்கனியும், நல்ல
வருக்கைப் பலாக்கனியும்
வாங்கியுன் அம்மான்
வருவார், அழவேண்டாம்!

25. கண்ணுறங்கு, கண்ணுறங்கு
கண்மணியே! கண்ணுறங்கு!
ஆராரோ ஆராரோ?
ஆரிவரோ? ஆராரோ?