கேரக்டர்/‘ஏமாளி’ ஏகாம்பரம்
‘ஏமாளி’ ஏகாம்பரம்
"ஏய் ஏகாம்பரம்! நாளைக்கு மார்னிங் மெட்ராஸுக்குப் புறப்படணும். மறந்துடப் போறே! ஓட்டல் ஏஷியாடிக்கிவே ரூம் புக் செஞ்சுக்கலாம். ஒரு வாரத்துக்குள்ளே மாம்பலத்திலே ஒரு தனி பங்களா பிடிச்சு போர்டை மாட்டிடுவோம். என்னடா முழிக்கிறே? பழி!" இது ஏகாம்பரத்தின் நண்பன் மயில்சாமி.
"எனக்கென்னமோ பயமாயிருக்குடா. சினிமா பிஸினஸ் எனக்குப் பழக்கமில்லையேன்னு யோசிக்கிறேன்" என்றான் ஏகாம்பரம்.
"அதுக்குத்தான் நான் இருக்கேனேடா! உனக்கென்ன பயம்? தைரியமாப் புறப்பட்டு வாடா..."
"பணத்துக்கு என்னடா செய்யறது?"
"மெட்ராஸிலே லாரி விற்ற பணம் முப்பதாயிரம் வரணும்னு சொன்னயே. அதை வசூல் செஞ்சுக்கறது. உன் பெரியப்பா கிட்டேயிருந்து இப்போதைக்கு ஓர் இரண்டாயிரம் வாங்கிக்கோ. மெட்ராசுக்குப் போனதும் லாரிப் பணத்தை வசூல் செய்துக்குவோம். ஒரு படத்துக்குப் பூஜையைப் போட்டு,ஆறாயிரம் அடிவரைக்கும் எடுத்துட்டா அப்புறம் நாலு டிஸ்ட்ரிபியூடர்களைப் பிடிச்சுப் பணம் பண்ணிடலாம்டா..."
"ஏண்டா,முப்பதாயிரம் போதுமாடா?"
"அடேயப்பா! அதை வெச்சுக்கிட்டு அசுவமேத யாகமே செய்யலாம். மெட்ராஸிலே படம் எடுக்கிறவங்களெல்லாம் முதல் வெச்சுகிட்டா ஆரம்பிக்கிறாங்க? எல்லாம் வெறுங்கையை முழம் போடறவங்கதாண்டா அதிகம்!"
"ஏண்டா! போடற பணம் திரும்பி வருமான்னு பயமாயிருக்குடா!"
"நீ ஒரு பத்தாம் பசலிடா! கவலைப்படாதே! பிலிம் பிஸினெஸ்லேதாண்டா லாபமே அதிகம்!"
"நல்ல கதையா வேணுமே?"
"ஸ்டோரிக்கு என்னடா பஞ்சம்! தஞ்சாவூர் நஞ்சுண்டா ராவ் இல்லே? அதாண்டா டி.என். ராவ்! அவன்கிட்டே அரை டஜன் ஸ்டோரி இருக்குது. அவனுக்கு இருபத்தைந்து ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தா அரை டஜனையும் நம்கிட்டே கொடுத்துடுவான். நல்லதா ஒண்ணு செலக்ட் பண்ணிக்கிட்டாப் போச்சு!"
"சே பாவம்!எழுத்தாளர்களை ஏமாத்தக்கூடாதுடா!"
"சரி; அப்ப அட்வான்ஸை அம்பதாக் கொடு."
"ஹீரோயின் யாரு?"
"அவதாண்டா, மிஸ் ஹேமலதா. அவளை நீ பார்த்ததில்லையே...?
"அது யாருடா ஹேமலதா? பேரையே கேள்விப்பட்டதில்லையே!"
"பெரிய ஸ்டாருடா. கண்ணம்மா பேட்டையிலேதான் இருக்கா. ரெண்டு மூணு படத்திலே குரூப் டான்ஸிலே வத்திருக்கா.""மயில்சாமி! ஹேமலதாவோடு நான் எப்படிடா பேசறது. வெட்கமாயிருக்குமே?"
"மண்டு மண்டு! புரொட்யூஸர்னா அவளே வந்து பேசுவாடா!"
மறுநாளே ஏகாம்பரம் தன் பெரியப்பாவிடம் ரூபாய் இரண்டாயிரத்தை வாங்கிக்கொண்டு நண்பனுடன் சென்னைக்குப் புறப்பட்டான். லாரிப் பணத்தை வசூல் செய்து மாம்பலத்தில் ஒரு வீட்டைப் பிடித்து அட்வான்ஸ் கொடுத்து ஏகாம்பரம் பிக்சர்ஸ் என்று போர்டையும் போட்டான். ஏகாம்பரந்தான் டிரொட்யூஸர்! மயில்சாமிதான் புரொடக்ஷன் மானேஜர்! அவ்வளவுதான். மயில்சாமி சொன்ன போதெல்லாம் பணத்தை எடுத்தெடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஏகாம்பரம்.
"ஏகாம்பரம்! இனிமே நீ இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. ஸில்க் ஜிப்பா, கழுத்திலே செயின், கையிலே சிகரெட் டப்பா. இதெல்லாந்தான் புரொட்யூஸருக்கு லட்சணம்."
டேய் டேய் எனக்குச் சிகரெட் மட்டும் வேண்டாம்டா!"
"கண்ட்ரி! அது இல்லாட்டா இந்த பீல்டே உன்னை மதிக்காது."
மறுநாள் காலையில் மயில்சாமியும் ஏகாம்பரமும் பேபி டாக்ஸி ஒன்றை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போட்டனர். பல இடங்களுக்குப் போய்ச் சுற்றி அலைந்துவிட்டுக் கடைசியாகக் கண்ணம்மாப்பேட்டையை அடைந்தனர்.
மிஸ் ஹேமலதா ஏகாம்பரத்தின் எதிரில் வந்து நின்று வணங்கிவிட்டு மயில்சாமியைப் பார்த்து, "வாங்க அண்ணாச்சி!" என்றாள். அவள் புன்னகையில் மயங்கிய ஏகாம்பரம் ரூபாய் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து அவளை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துகொண்டான்.
வசனகர்த்தா டி. என். ராவுக்கு ஐம்பது ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து 'அத்தைக்கு மீசை முளைத்தால்?' என்னும் ஒரு சமூகக் கதையை விலைக்கு வாங்கினான். அந்தத் தலைப்பு சரியில்லை என்பதற்காக 'வீட்டுக்கு ஒரு அத்தை!' என்று அதன் பெயரை மாற்றினான் மயில்சாமி. அதுவும் சரி யில்லை என்று 'அத்தையின் வீடு' என்று மறுபடியும் அந்தப் பெயரை மாற்றிவிட்டார் டைரக்டர்.
படத்துக்குப் பூஜை போட்டாயிற்று. ஐயாயிரம் ரூபாயில் ஸெகண்ட் ஹாண்ட் கார் ஒன்றும் விலைக்கு வாங்கியாயிற்று. இதற்குள் ரூபாய் இருபத்தைந்தாயிரம் அவுட்டாயிற்று. ஏகாம்பரத்தின்' கையிலிருந்த பணமெல்லாம் கரைந்து விடவே மயில்சாமியைப் பார்த்து, "பணத்துக்கு என்னடா செய்வது?" என்று கேட்டான் ஏகாம்பரம்.
"கிண்டியிலே வாங்கித் தரேன் வாடா” என்று சொல்லி அவனை ரேஸுக்கு அழைத்துச் சென்றான் மயில்சாமி. ரேஸில் மேலும் இரண்டாயிரத்தைத் தொலைத்ததுதான் மிச்சம்.
ஏகாம்பரத்தின் பணம் அடியோடு தீர்ந்துவிட்டது என்று தெரிந்ததும் மயில்சாமி மாயமாய் மறைந்து விட்டான்.
'அத்தையின் வீடு' எடுக்கப்போன ஏகாம்பரம் ஹேமலதாவின் வீடே கதியாகிவிட்டான். அதுமட்டுமல்ல. அவளையே அவன் ரிஜஸ்தா விவாகம் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.
இப்போது ஹேமலதா ஷூட்டிங்குக்குப் போகும் போதெல்லாம் பாவம், ஏகாம்பரமும் கூடவே போய்க் கொண்டிருக்கிறான். ஒருவேளை என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு ஸ்டூடியோவில் தன்னைப் போன்ற ஓர் ஏமாளியுடன் மயில்சாமியைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் தான்.