உள்ளடக்கத்துக்குச் செல்

கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 11

விக்கிமூலம் இலிருந்து

11


முதல் பொங்கல், பெரும் பொங்கல் எல்லாம் சுரத்தில்லாமலே கழிந்து போகின்றன. அன்று மாலையே அண்ணியையும் குழந்தைகளையும் அண்ணன் கூட்டிக் கொண்டு போகிறான்.

“நா இவங்கள மட்ராசில விட்டுப் போட்டு வாரம்மா, அப்பா தப்பா நினைக்காதிங்க! தப்பா நினைக்காத மாப்புள” என்று அண்ணன் விடை பெறுகிறான்.

செவந்தி தலையாட்டிக் கொண்டு நிற்கிறாள். போகியன்று, விளைந்த நிலத்தில் அடுப்பு வைத்துப் பானை வைத்துப் புத்தரிசியைப் போட்டு, வீட்டுச் சாமியை நினைத்துப் பொங்கல் வைத்தாளே. அண்ணி, அண்ணன் வந்தார்களா? பெரும் பொங்கல். முன் வாசலில் வைத்து இவள்தான் விரதமிருந்து கும்பிட்டாள். “எங்களுக்கு இதெல்லாம் வழக்கமில்ல. தப்பா நினைச்சிக்காத செவந்தி. திவ்யாவுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்னு மருந்து குடுக்கிறோம். நேரத்துக்கு அதுக்கு பாலு, முட்டைன்னு குடுக்கணும். பொங்கல் வீட்டுக்கு வராமலிருக்கக் கூடாதுன்னு வந்தோம்...” என்றாள். ஒப்புக்கு நின்றாள்.

ரங்கன் குழந்தைகளுக்குப் புதுத்துணி வாங்கி வந்தான். மாப்பிள்ளைக்கும் வேட்டி துண்டு வாங்கி வந்தான். முன்வாசலில் மாலையோடு பொங்கல் வைத்துக் கும்பிட்ட போது, ஏதோ சிறைக் கைதி போல் தோன்றியது. தான்வாங்கி வந்த வாயில் சேலையை அண்ணிக்குக் கொடுக்கலாமா என்று தோன்றியது. பிறகு, அவள் அதைத் தொடக்கூட மாட்டாளோ என்றும் தயங்கிக் கொடுக்கவில்லை. சரோவும் சரவணனும் தான் பொங்கலை ரசித்து அனுபவித்தார்கள். சரோ வாசலில் பெரிய பெரிய கோலம் போட்டாள். கலர் பொடி வாங்கி வந்து தூவினாள்.

பொங்கல் பானை, கரும்பு, மஞ்சட் கொத்து என்று கோலம்...

"மாமா, எபபடி?"

“நல்லா போட்டிருக்கே. உங்கம்மாவுக்கு இந்த மாதிரி ஃபைன்ஆர்ட் வராது. காட்டு மேட்டு வேலதான் செய்வாள்...”

“எனக்குப் பெயின்டிங் பண்ணக்கூட ஆசை. டென்த் முடிச்சப்புறம் என்ன கோர்ஸ் எடுக்கலாம் மாமா?”

“மேல படிக்கப் போறியா? உன்ன உங்கம்மா இப்பவே புருசன் வீட்டுக்கு மூட்டைக்கட்ட ரெடியா வச்சிருப்பாளே?”

"நோ.. அதெல்லாம் நடக்காது. நா பி.இ. படிக்கணும். குறைஞ்ச பட்சம் பாலிடெக்னிக்ல படிச்சிட்டேனும் டிகிரி எடுப்பேன்! மாமா, ரேங்க் வாங்கிட்டா மேல் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமில்ல?” “கிடைக்கும். நீ பரீட்சை எழுதிட்டு மதுரைக்கு வா. விமன்ஸ் பாலிடெக்னிக் இருக்கு. சேரலாம்.”

அவள் முகம் ஒளிருகிறது. மத்தாப்பூக்கட்டினாற் போல். “நிச்சயமாவா மாமா?”

“நிச்சயமா, உன்னோடு நான் ஏன் விளையாடணும்? நல்ல ஸ்கோப். சொந்தத் தொழில் செய்யலாம், வேலையும் கிடைக்கும்..”

“ப்ளஸ் டு படிக்கணும்ன்னாலும் உங்க ஸ்கூலில் இடம் கிடைக்குமா?”

“அதுவும் பார்க்கலாம்.”

“அம்மா என்ன எப்பப் பார்த்தாலும், பொம்புளப்புள்ள படிச்சிட்டு என்ன கிழிக்கப் போறேன்னு இன்ஸ்ல்ட் பண்ணுது. அதக்காகவேணும், நான் படிப்பேன்.”

“படி... உங்கம்மாவுக்கு ஒரு பாடம். . நீ வா, சரோ... பரீட்சைஎழுதிவிட்டு வா.”

இந்தப் பொண்ணைவேறு எதற்குத் தூண்டிவிட வேணும்?

அவளுக்குக் கோபம் கொள்ளாமல் வருகிறது. அவங்கவுங்க அவங்கவுங்க வேலையப் பார்த்திட்டுப் போனா நல்லாயிருக்கும். சமுசாரிக் குடும்பத்துலதா கட்டணும். அதுக்கு மேல எடுப்பு எடுக்க உங்களுக்குச்சத்து இல்ல. என்று முகத்தைக் காட்டி விட்டுப் போகிறாள்.

அவர்கள் கிளம்பிச்செல்வதில் வருத்தமில்லை. அவர்கள் சந்தோஷமாக உறவு கொண்டாடாததோ, எதோ ஒப்புக்கு வந்து போவதோ எதிர்பாராததில்லை. அவள் வருத்தம், கன்னியப்பன் இரண்டு நாட்களிலும் வந்து தலை கூடக் காட்டியிராததுதான். அவனுக்கென்று அவள் வாங்கிக் கொடுத்த கோடி வேட்டியும், சட்டையும் அணிந்து அவன் வரவில்லை. மறுநாள் மாட்டுப் பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புக்கு வர்ணம் அடித்து, அவன்தானே எல்லாம் செய்வான். அவன் ஏன் வரவில்லை?

அவனை இங்கு யாரேனும் ஏதேனும் பேசினார்களா?

மகனும் மருமகளும் குழந்தைகளும் பெரும் பொங்கலன்று மாலையிலேயே பட்டணம் திரும்பிச் செல்வதைத் தெருவே பார்த்தது.

படித்தவர்களுக்கும், கிராமத்திற்கும் வெகு தொலைவு என்று கணக்குப் போட்டது. அண்ணியின் தோற்றம், குழந்தைகளின் அரசகுமாரக் கோலம் ஆகியவற்றை வைத்து, நாலெழுத்துப் படித்து டவுனுக்குப் போனால்தான் வாழ்வு என்று உறுதி செய்தது.

மனசுக்குள் பூனை பிறாண்டுவது போல் ஒவ்வாமை, காலையில் எழுந்து களேபரமாக இருந்த சமையல்கட்டில் இருக்கும் சாமான்களை ஒழித்துப் பின்பக்கம் போடுகிறாள். முதல் நாள் அடுப்பு வைத்த முன் வாசலில் மீண்டும் சாணம் தெளித்துப் பெருக்குகிறாள். சரோவை எழுப்பிக் கோலம் போடச் சொல்லிவிட்டுப் பின்பக்கமாகவே ஏரிக்கரைப் பக்கம் நடக்கிறாள்.

நெல்லு மிசின் புழுங்கல் உலர்த்தும் முற்றம் விழாக் கொண்டாடுகிறது. பக்கத்தில் பெரிய சாலை. காஞ்சிபுரம் பஸ் போகும் சாலை. வயல்கள்... கரண்ட் ஆபீஸ்... அந்தப் பக்கம் உள்ள குடிசைகளில் ஒன்றுதான் கன்னியப்பனும், ஆயாவும் இருக்கும் இடம். வெளியே முற்றம் பச்சென்று தெளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோலமும் புதிதாகப் போட்டிருகிறது. ஆயா எழுந்திருக்கிறாள்.

“கன்னிப்பா. கன்னிப்பா..!”

உள்ளிருந்து அவன் எட்டிப் பாக்கிறான். சட்டென்று வேட்டியை நன்றாக இறுக்கிக் கொண்டு மேல் துண்டுடன் வெளியே வருகிறான்.

“அக்கா நீங்களா?”

“ஆமாம்பா. நீ பொங்கலுக்கு வாராம போயிட்டே?”

அவன் அவளையே நேராகப் பார்க்கவில்லை. “மிசின்காரர் வூட்ட வேலை இருந்திச்சி. போயிட்டே.”

"ஏம்பா கூடவே ஒழச்சிட்டு நம்மூட்டுக்கு வராம போயிட்ட?”

அவன் கால் பெருவிரல் நிலத்தைச் சீண்டுகிறது.

“நம்மூடு இல்லிங்க. உங்கூடு. நீங்களும் நானும் எப்படீங்க சமமாக முடியும்?”

"இதெல்லாம் என்ன கன்னிப்பா, புதுப் பேச்சு?”

"புதுசு இல்லீங்க. பழசுதா. எனக்குத்தா புத்தி குறைவு. நா ஒங்கள அக்கா அக்கான்னு கூட்டாலும் எனக்கு அக்கா ஆக முடியுமா? நீங்க எசமானி. நா பண்ண பாக்குற கூலிக்கார ஆயி அப்பந் தெரியாத அநாத. ஊருச்சோத்தத் தின்னும் கூலிக்கார ஆயா எப்படிங்க ஒண்ணாக முடியும்?” அவனுடைய நெஞ்சுச் சுமையைப் பிளந்து வரும் குரல்...

அவள் சொல்லொணா வேதனைக்காளாகிறாள்.

"ந்தா.. கன்னிப்பா, நீ இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட உன்னயாரு என்ன சொன்னாங்க?”

புரியவில்லை.

யார் என்ன சொல்லி இருப்பார்கள்? அவள் புருசனா? இருக்காதே? அண்ணனா? சரோவா? அப்பாவா? இல்லை.. அம்மாவாகத்தான் இருக்கும்.

அவள்தான் விசச்சொல்லை உதிர்ப்பவள். பல்லில் விசம். உடம்பில் விசம்.

“யாருப்பா சொன்னாங்க... ? கன்னிப்பா?” அவன் அருகில் நகர்ந்து அவன் கையைப் பற்றுகிறாள்.

அவனுக்குச் சிறுபிள்ளை போல் அழுகை வந்துவிடுகிறது.

“யாரப்பா உன் மனசு நோகப் பேசியவர்?”

"இல்லீங்க யாரும் இல்ல. நீங்க வீட்டுக்குப் போங்க. நீங்க இந்தக் குட்சப் பக்கம் வந்தது யாரு கண்ணிலும் பட்டாக்கூட காது மூக்கு வச்சிப் பேசுவாங்க. ஒரு கையகல பூமி சொந்தமில்ல. நாலெழுத்தும் பாக்கல...”

துக்கம் துருத்திக் கொண்டு வருகிறது.

“நீ இப்படில்லாம் பேசுன, நான் வூட்டுக்கே போக மாட்டேன். இங்கே உக்காந்திருப்பே. இல்லேன்னா, ஏங்கூட இப்ப நீ வீட்டுக்கு வா. மாடுகளெல்லாம் குளிப்பாட்டி எல்லாம் வழக்கம் போல நீதா செய்யணும். நீ இல்லாம, வீட்டுல உசுரே இல்லே...”

அவன் சட்டென்று உள்ளே சென்று வருகிறான்.

அவள் வாங்கிக் கொடுத்த சட்டை, வேட்டி, துண்டு பிரிக்கப் படாமலே இருக்கின்றன. அவளிடம் நீட்டுகிறான். “இந்தாங்க. எனக்கு நீங்க குடுக்கற கூலி சரியாப் போச்சி. அதுக்கு மேல இதுக்கெல்லாம் அவசியமில்ல..”

அவள் விக்கித்துப் போகிறாள்.

“கன்னிப்பா, உன்ன யாரு, எது என்ன சொன்னாலும் நீ என்ன மதிக்கலியா? நான் உழைச்சது உனக்கு எடுத்துத் தந்தது. எனக்குக் கூடப் பிறந்தவ இருந்தும் புண்ணியமில்ல. நீதா தம்பிக்கு மேல, புள்ளக்கி மேலன்னு நினைச்சிட்டிருக்கே. உன் உழைப்பு, என் உழைப்பு. இத்தனைக்கு மேல நீ என்ன மதிக்கலேன்னா, இந்த வேட்டி, சட்டையத் தூக்கி எறிஞ்சிடு. எங்கூட்டுக்கு நீ வரவேணாம். இல்ல, என்ன மட்டும் மதிக்கிறேன்னா, இன்னிக்கி வந்து கொட்டில் மாடுங்களுக்குச் செய்நேர்த்தி செஞ்சி பொங்கலுக்கு வந்திடு. கோயிலுக்கு கொண்டு போவம். சாமி கும்பிடுவோம். நீ வரலன்னா அந்த வூட்டுல இன்னிக்கு மாட்டுப் பொங்கலும் இல்ல... நாவார” முகத்தில் சிவ்வென்று இரத்தம் ஏறினாற் போல் இருக்கிறது. வேகுவேகென்று திரும்பி வருகிறாள்.

மாடு கரக்கவில்லை. அது கத்துகிறது. கன்றை அவிழ்த்து விடுகிறாள். உள்ளே வந்து எண்ணெய்க் கிண்ணம், செம்பு, மடிகழுவ நீர் எல்லாம் கொண்டு வருகிறாள்.

“காலங்காத்தால எங்க போயிட்டே? வாசல் கோலம் வைக்கல. எனக்கு முழங்கால் புடிச்சிக்கிச்சி. சரோவ எழுப்ப எழுப்ப எந்திரிக்கல. நீ எங்க போயிருப்பன்னு எனக்குத் தெரியும். அவவ, நாக்கு மேல பல்லுப் போட்டு கண்டதும் பேசுறாளுவ. பொங்கலுக்கு வந்த புள்ள ஒருநேரம் தங்குனதே போதும்ன்னு கெளம்பிப் பூட்டான். நீ என்னதாண்டி நினைச்சிட்டிருக்கிறே?”

செவந்தி பேசவில்லை. பேசாமல் பால் கறக்கிறாள். பால் கறப்பவர் மனம் சரியில்லை என்றால் மாடும் பாலை எக்கிக் கொள்ளும்.

“லச்சுமி! நீயும் எனக்கு விரோதியா? வாணாண்டி" மாட்டைத் தட்டிக் கொடுக்கிறாள். பாலைக் கறந்து உள்ளே கொண்டு வந்து வைக்கிறாள். அம்மா விடுவதாக இல்லை.

"ஏண்டி செவந்தி, நீ என்னதா நினைக்கறடீ? இப்ப நீ எங்க போயிட்டு வார? கூலிக்காரப் பய. அவன் கோவிச்சிட்டா வரலன்னு பாக்கப் போற. கூடப் பொறந்த அண்ண, அண்ணி, அவுங்களப் பாத்துப் போறாமயில சாவுற!”

“தா .... வார்த்தய அளந்து பேசு! ஆருக்குப் போறாம! கன்னிப்பன என்ன சொல்லி வெரட்டின? அந்தப்புள்ள, இந்தக் குடும்பத்துக்கு ஒடம்பச் செருப்பா ஒழக்கிறவ. ஒரு ஒழவோட்டினா கூலி எம்பது ரூபா இந்த வூட்டுக்கு அது எத்தினி ஒழச்சிது? ஒம்பது மூட்ட, காக்காணில. ஒரு பதாரில்ல, கருக்காயில்லன்னு பூரிச்சி போனியே? அது ஆரூ ஒழச்சி வந்தது? ராவோடு தண்ணி பாத்து அடச்சது ஆரு? உம்புள்ளையா, மருமகப் புள்ளயா? இத சுந்தரி பாவம் புருசனில்ல. வெள்ளாம வைக்க வகையில்லாம தருமச்சோறு சாப்புடுது. பூமி நீ குந்திச் சாப்புடக் குடுக்காது. உழச்சித் தின்னத்தான் கொடுக்கும். அந்தப் புள்ள, ஒரு கள்ளம் கபடு தெரியாது. என்ன கேலி பண்ணாலும் தப்பா எடுத்துக்காது. அத்த வெரட்டிட்டே, மனசு நோகப் பேசி!”

“ஆமா வெரட்டித்தா விட்ட அததுக்கு ஒரு வரமுற இருக்கு. எதெது எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும். போ...டி..நேத்து மொளச்ச முசுக்கட்ட, எனக்குப் புத்தி சொல்ல வாரா! அறிவு இருக்காடி உனக்கு? அவ உழவோட்டினா கூலி குடுத்திட்டுப் போ! அதுக்கு மேல அவனுக்கென்ன சரிகக் கோடு போட்ட வேட்டி, சட்ட, துப்பட்டா விளக்குமாறு? அருமயா அண்ணா, அண்ணி, அவம்புள்ளங்க வந்திருக்கு. அதுக்கு ஒரு பார்வயா நல்லது செய்ய உனக்குத் தோணல. என்னமோ பொண்ணக் கட்டின மருமவங் கோவிச்சிட்ட மாதிரி ஒடுறா துடப்பக்கட்ட...”

“ந்தாம்மா, ரொம்பப் பேசாத நா அவனியே மருமகப் புள்ளயா ஆக்கிக்குவே! உன்னப் போல நன்னிக் கொன்ன ஆளில்லே நா! உம்புள்ள, மருமவ என்ன செஞ்சா ஒரு தல முழுவி, வெளக்கேத்தி பொங்கக் கும்புட முடியாதவ எதுக்கு வந்தா? கிராமத்துல இப்படி இருக்கும்னு தெரியுமில்ல? இல்லாட்டி இவரு வந்து பத்தாயிரம் செலவு பண்ணி அம்மா வந்திருக்கத் தோதா குழா போட்டு, மேடப் போட்டு அலமாரி போட்டு கட்றது? நானா வாணாங்கறேன்? அஞ்சு வருசமா கொல்ல மேட்டுல ஒழுங்கா சாகுபடி இல்ல. ஒரு கேவுறு கூட இந்த வருசம் வெதய்க்கல. நாதி இல்ல. இவிரு கலியாணத்துக்குத்தான கிணத்துப் பாசன நிலத்த ஒத்திக்கு வச்ச? அதையேனும் அடச்சாரா, இத்தினி வருசத்துல? அவ நகை போட்டுட்டு மினுக்குறா, ஏன் சொல்லுறதான புள்ளகிட்ட?”

இவளுக்கு ஆற்றாமை பொங்குகிறது. சொற்கள் பொல பொல வென்று வருகின்றன.

ஆனால் அம்மாவோ. ஆம்பிளப் பிள்ளையைப் போல் இவள் பேசுவதா என்று மேலே இருந்து விரட்டுகிறாள்.

"ஏய், நீ இப்படிப் பேசுறதுன்னா, இப்பவே வூட்டவிட்டுத் தனியாப் போய்க்க. பூமி அவனோடது. அவன் போடுவா, அழிப்பா. இன்னைக்குத் தேதில அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவனால சோறு போட முடியும். வித்துப் போட்டு ஊரோட வந்திருங்கன்னுதான் இப்பவும் சொல்லிட்டுப் போச்சி! அப்பாவுக்கும் அங்க வந்தா, நல்ல டாக்டர்ட்ட காட்டி வைத்தியம் பண்ணுறன்னு, வூடு கட்டியிருக்கு. கிரக பிரவேசம்னு வைக்கல. சாங்கியமா பால் காச்சி சாப்பிட்டுட்டு டூசன் பசங்க வரதுக்குத் தோதா தெறந்து விட்டிருக்கு. நீங்க வாங்க. இங்க ஒரு வசதியும் இல்லன்னு சொல்லிட்டுத்தாம் போயிருக்கா...”

மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டாற்போல் இருக்கிறது செவந்திக்கு.

அதுவும் அப்படியா? இப்படி உருவேற்றத்தான் இப்போது பொங்கலுக்கு வந்தார்களா?

அவள் பொட்டில் அடிபட்டாற்போல் நிற்கிறாள்.

சரோ பின்புறம் பல்துலக்கி விட்டு வருகிறாள்.

“கன்னிப்ப வந்து மாடெல்லாம் அவுத்துட்டுப் போறா! தாத்தாவும் கூடப் போவுது...”

குளிர்ச்சியான துளி விழுந்தாற்போல் ஆறுதலாக இருக்கிறது. ஒன்றும் பட்டுக் கொள்ளாமலே அடங்கியவளாக இயங்குகிறாள். மாடுகளைக் குளிப்பாட்டி, வயிறு நிறையத் தீவனம் வைக்கிறார்கள். கொம்புக்கு வர்ணம் பூசி, சலங்கைகளைப் பளபளப்பாக்கிக் கட்டுகிறான். கட்டுத்தறி சுத்தம் செய்து, வீடு முழுதும் மாவிலையும் தென்னங் குருத்துமாகத் தோரணம் கட்டுகிறான். வாயிலில் பொங்கல் வைக்கிறார்கள். ஏர், குந்தாணி, உலக்கை எல்லாமே வாயிலுக்கு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, இலையில் பொங்கலும் காயும், இனிப்பும் படைத்துக் கன்று காலிகளையும், தொழில் செய்யும் கருவிகளையும் கும்பிடுகிறார்கள்.

சரோவும், சுந்தரி குழந்தைகளும் சரவணனும் கரும்பு கடித்துத்துப்புகிறார்கள்.

அலங்கரித்த மாடுகளை எல்லாம் கும்பலாகக் கோயில் முன் ஒட்டிச் செல்கிறார்கள். கொட்டு மேளம் முழங்க மாடுகளுடன் ஏரையும் உழுவது போல் தூக்கிக் கொண்டு கன்னியப்பன் பொழுது சாயும் நேரம் வீட்டின் முன் வந்து வைக்கிறான்.

செவந்தி மனம் துளும்ப, கண் துளும்ப வரவேற்கிறாள்.