உள்ளடக்கத்துக்குச் செல்

கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 14

விக்கிமூலம் இலிருந்து

14


“இத பாருங்க செவந்தி அம்மா. உங்க பேரில எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அதனாலதான் இப்ப, நீங்க ஒண்ணரை ஏக்ராவில பயிரிடப் போகும் மணிலாப் பயிருக்கான இடு பொருட்கள் எல்லாம் தந்து உதவுறோம். உங்கப்பா பேரில் நிலம் இருக்கிறது. அவரை அழைத்து வந்து, எல்லாப் ஃபாரத்திலும் ஒப்புப் போட்டுக் கொடுக்கச் சொன்னீங்க. அதில் ஒரு சிக்கலும் இல்ல... ஆனா, அதே போல, இந்த பூமிச் சொந்தக்காரர் வந்து சான்றிதழ், ஃபாரங்களில் நிரப்பி ஒப்புப் போட்டு தரணும். இப்போது நீங்களே விவசாயம் பண்ணறவங்கண்ணு தெரிஞ்சாலும் ரூல், சட்டம் ஒண்ணிருக்கு. நிலம் யார் பேரிலே இருக்குதோ அவங்க பேருக்குத்தான் குடுப்போம்....”

செவந்தி சங்கடப்பட்டு நிற்கிறாள்.

“ஒரு கால் காணிக்கு... முன்ன கொடுத்த மாதிரி கொஞ்சமா, அது கூடக் கொடுக்க மாட்டீங்களா சார்....?”

“எப்படிம்மா கொடுக்க? நீங்க உங்க புருசனக் கூட்டிட்டு வாங்க. இல்லாட்டி உங்க பேரில நிலத்த ரிஜிஸ்தர் பண்ணிக்குங்க...”

கடலைப் பயிருக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்து, ஜிப்சம் எல்லாம் வாங்கி வண்டியில் அப்பாவும் கன்னியப்பனும் போய் விட்டார்கள். தைக் கடைசி. வேர்க் கடலைக்கு நடுவில் ஊடு பயிராகப் பயிறு விதைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது. மண் காய்ந்திருக்கிறது. உழவோட்டிக் கடலையை விதைத்து விட்டு நுண்ணூட்டச் சத்து மணலைக் கலந்து தூவ வேண்டும். ஆட்கள், அப்பாவும், கன்னியப்பனும், இவளும் சாந்தியும்தாம்.

ஆனால், கடலை விதைத்த கையுடன், கால்காணி கொல்லை மேட்டில் நெல் எப்படிப் பயிரிடப் போகிறாள்?

பட்டாளக்காரர் நாற்றங்கால் உழவு ஒட்டி நிலம் தயார் பண்ணுகிறாரே?

ஒரு எட்டு நூறு - ஆயிரம் எப்படியானும் திரட்டி, பயிர் வைக்க வேண்டும். வண்டி சென்ற பிறகு பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்கிறாள். மோட்டார் போட்டு, கரெண்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

அவர் பட்டாளக்காரர். விவரம் அறிந்தவர். எங்கே யாரைப் பார்த்துக் காரியம் சாதிக்க வேண்டும் என்று ஊக்கமாகச் செயல் படுகிறார். கடைசியாக ரங்கனிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

அவள் அண்ணன் விடை பெற்றபோது வீட்டில் இல்லை.

வீட்டில் இப்போது பொருந்தி அவள் வேலை செய்வதில்லை. வெளியே செல்லவும் கடன் ஏற்பாடு பண்ணிப் பயிர் வைக்க முயற்சி செய்வதுமே நேரத்தைத் தின்று விடுகிறது. அம்மா இடை இடையே ஊசியாகக் குத்துவாள். உரைப்பதில்லை.

பஸ் கஜேந்திர விலாஸ் ஒட்டல் முன்பு நிற்கிறது. ஓரெட்டுத்தான் சைக்கிள் கடை. கசகசவென்று புழுதி குறையாத கூட்டம். பிற்பகல் மூன்று மணி இருக்கும்.

யாரோ ஒரு தாடிக்காரருடன் அவன் பேசிக் கொண்டிருக்கிறான். சிவலிங்கம் தான் பங்க்சர் ஒட்டுகிறான். இவளைப் பார்த்து விடுகிறான். “மொதலாளி, அம்மா வந்திருக்கிறாங்க!” என்று எழுந்து செல்கிறான்.

சிவலிங்கத்துக்கு முன் வெகு நாட்களுக்கு சோமயிஜிதான்.

இங்கே இருந்தான். நெளிவு சுளிவு வியாபாரம் கற்றான். புதிய சைக்கிள்கள் தருவித்து விற்பது, பழைய சரக்கு வாணிபம் எல்லாம் அவன் இருந்த போது செழிப்பாக இருந்தது. அவன் பத்துப் படித்தவன். அம்பத்தூரில் எங்கோ கம்பெனியில் மாசம் மூவாயிரம் சம்பாதிக்கிறானாம். கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டான். அந்தப் பெண் பள்ளியில் டீச்சராக இருக்கிறாளாம். பத்திரிகை வைக்க வந்தான். அவன் போகவில்லை. சிவலிங்கம் ஒரு வகையில் உறவுக்காரப் பையன். தொட்டுத் தொடாமல்... நீலவேணிக்கு அண்ணன் பிள்ளை உறவு. எட்டாவது ஃபெயில். இங்கே வேலைக்கிருக்கிறான். ரங்கனுடன் பேசும் ஆள் தாடி வைத்திருக்கிறான். பெரிய பொட்டு, மல் ஜிப்பா, தங்கப்பட்டைக் கடிகாரம், மோதிரம்...

“யாரப்பாஅது?” என்று மெல்லிய குரலில் கேட்கிறாள்.

“அவுருதாம் புரோக்கர் பன்னீரு.”

“முதலாளிக்கிட்டப் போயி, ஒரு நிமிசம் வந்திட்டுப் போகச் சொல்லு...” .

நிற்கிறாள். அவன் ஏதோ சொல்லியனுப்புகிறானே ஒழிய வேண்டுமென்றே திரும்பிப் பார்க்கவில்லை.

சீ இப்படி ஒரு அவமானமா? இந்த ஆளிடம் என்ன கேட்க? விடுவிடென்று வீட்டுக்கு வருகிறாள். முன்பே வண்டியில் இடுபொருட்கள், விதை மூட்டைகள் வந்திருக்கின்றன. வாசல் நடைத்திண்ணையில் அடுக்கியிருக்கிறான்.

செவந்தி உள்ளே சென்று பையில் உள்ள ரசீது, பத்திரங்களைப் பெட்டியில் வைத்துப் பூட்டுகிறாள்.

கிணற்றடியில் சென்று, தண்ணிரை இறைத்து ஊற்றிக் கொண்டு குளிக்கிறாள். சேலையைச் சுற்றிக் கொண்டு வருகையில், அப்பனும் மாப்பிள்ளையும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள்.

“சுடுதெண்ணிகாச்சி வையி” என்று சொல்கிறார் அப்பா. சோறு ஆறி இருக்கிறது. செவந்திதான் சோற்றை வைத்து, சட்டியில் இருந்த காரக் குழம்பை ஏனத்தில் ஊற்றி எடுத்து வருகிறாள்.

“அப்பளப்பூ வறுக்கலாம்னு பார்த்தே. எண்ணெயில்ல...” என்று அம்மா பின்பாட்டுப்பாடுகிறாள்.

“வெறும் சோத்த எப்படித்தின்ன? ஒரு கீரை, அவரை ஒரு எழவும் இல்ல! வரவர வூட்டுல ஏன் வாரோமின்னிருக்கு” என்று கணவன் கோபிக்கிறான். “அவரயில பூச்சி வுழுந்தடிச்சி. அதத்தா நாலு குழம்புல போட்ட. பொறியலுக்குப் பத்தாது. அதுல மாடு வாய் வச்சிடிச்சி. பத்தாத்ததுக்கு சோப்புத் தண்ணியெல்லாம் ஊத்துறீங்க...?” என்று அம்மா சொல்கிறாள்.

“ஆமா, நா சோப்புத் தண்ணிய ஊத்துர. மாட்டே அவத்து வுட்டே. ஏ, நெதியும் மெயின் ரோடுலந்து வராரு. முட்டக் கோசு, தக்காளி, உருளைக்கிழங்கு வாங்கியாரது! நீங்க வாங்கி வந்து நா ஆக்கிப் போடுறது தட்டுக் கெட்டுப் போச்சி!”

“தா, செவுந்தி அநாசியமா என்னிய வம்புக்கிழுக்காத? உங்கண்ணெஈரலு, தொடன்னு வாங்கியாந்தானே? ஆக்கிப் போட்டுக் கழிச்சுட்ட? உனுக்குக் கண்டவங்க கூட ஊர் சுத்தறதும் பேசுறதும், புருச சரியில்லன்னு சொல்லுறதும் சரியாப் போயிடுது...”

“ந்தாங்க! நீங்க மச்சான் ஒறவு புதுசுன்னா வச்சிக்குங்க! மச்சானுக்காகப் புதுசா அதெல்லாமும் சாப்புடக் கத்துட்டிருக்கிறீங்கன்னு நான் கண்டனா?” என்று நொடிக்கிறாள்.

“அட ஏம்பா, இப்படிச் சின்ன புள்ளகளப் போல சண்ட போடுறீங்க? கட்டிக் குடுக்கற வயசில பொண்ணு நிக்கிது. ஒருத்திர ஒருத்தர் அனுசரிச்சிப் போங்கப்பா. செவந்தி சொல்றதும் நாயந்தா. அது என்ன சொல்லுது? இப்ப மூணு மூட்ட எடுக்கற எடத்துல ஒம்பது மூட்ட எடுத்தமே, இது போல்ப் பயிரு செய்யணும்னு ஆசப்படுது. நாயந்தான? நீ கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமில்ல?”

“மாமா, அது மட்டும் பேசாதீங்க இந்த வெவசாயம்லாம் சூது. நெல்லா வெளஞ்சிருக்கும் திடீர்னு மழை கொட்டி நட்டமாப்பூடும். போனவருசம் முத்து நாயக்கர் பண்ணையில, பத்தேக்கரும் மழ பெஞ்சி அறுத்துக்கறதுக்கு முந்தி ஊறி... பல்லு மொளச்சிப் பாழாப் போச்சி. மறுபடி மண்ணச் சரியாக்க அம்பதாயிரம் செலவு பண்ணாரு. நா ஏற்கனவே கடன் வாங்கி, வித்து வேபாரம் பண்ணுற. நெலத்தில இவங்கள நம்பிக் கடன் வாங்க சம்மதிக்க மாட்ட? ஆளவுடுங்க!” அத்துடன் நிற்கவில்லை. “பேச்சுக்குப் பேச்சு, இது இந்த வூட்டில நா எதுமே செய்யில போலயும், இவதா வேல செய்யறா போலும் பேசறது சரியில்லை. எங்கேந்தோ வார சில்வானமெல்லாம் அலட்சியமாகப் பாக்குதுங்க. காலம, எதிர்த்த எலக்ட்ரிக் சாப்புல ஒரு மீசைக்காரர் வந்து நின்னாப்பல. அவர் மெனக்கெட்டு வந்து, நீங்கதா, செவுந்தியம்மா புருசனா...? என்னு கேட்டாரு. எனக்கு எப்படியோ இருந்திச்சீ.”

‘ஒ இதுதானா விசயம்?’ என்று மனசுக்குள் சிரித்துக் கொள்கிறாள்.

‘ரங்கா' சைக்கிள் மார்ட் வாசலில் வந்து நின்று ‘செவந்தியம்மா புருசரா' என்று கேட்க மீசைக்காரருக்கு என்ன தைரியம்?

“ஆமா, நானுந்தா கேக்குற. அது பயிர் பண்ண ஆசப்படுது நாயந்தான? அவவ பொஞ்சாதி பேச்சக் கேட்டு ஆடுறா. இவன் ஸ்கூல், டியூசன்னு மாசம் அஞ்சாயிரம், ஆறாயிரம் சம்பாதிக்கிறான்னு கேள்வி. வூடு கட்டியாச்சி. மாமியா வூட்டில அந்தஸ்துகாரங்க. துபாயி, அமெரிக்கான்னு மச்சாங்க இருக்காங்கன்னு சொல்லுறா. ஏ. நாம வந்து தங்கணுமின்னா வசதி செய்யணும்னா நாம பூமியை வித்துச் செய்யனுமா? தென்ன மரத்தோட வச்ச பூமி நம்ம கைக்கு வாரதக்கில்ல. இவம் படிப்பு, கலியாணம்... பத்து சவரன் தாலிச் சங்கிலி, சீலை எல்லாம் இவனா வாங்கினா? நம்ம கண்ணுமின்ன, நம்ம புள்ள ஒண்ணுமில்லாம நிக்கிது. இப்ப இன்னும் மூணு நாலு வருசம் போனா, அந்த புள்ளக்கி ஒரு கலியாணம்காச்சி செய்யத் தாவல? அது மனுசியானதுக்கு மாமங்காரன் என்ன செஞ்சா? கவுரதியா, ரெண்டு சவரன், ஒரு வளவி பண்ணிப்போட்டானா? பூன்னு ஒரு மோதிரம். அதுல பார்வையா ஒரு கல்லு கூட இல்ல. போலிப்பட்டுல ஒரு பாவாடை. ஏ, ஒரு நல்ல சீலைதா எடுத்தா என்ன? நா அப்பவே தெரிஞ்சிட்டே அவனால நமக்குப் பிரோசனம் இல்ல. கடசி காலத்துல பொண்ணுதா நமக்குத் கஞ்சியூத்துவா, புள்ள புள்ளங்கறதெல்லாம் சும்மான்னு".

ஒடிச் சென்று அப்பனைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. அப்பனுக்கே உணர்ச்சி வசப்பட்டதில் தொண்டை கம்முகிறது. அவள் அவசரமாக அடுப்பில் சூடு பண்ணிய வெந்நீரைக் கொண்டு வருகிறாள்.

“இந்தாங்கப்பா, சுடுதண்ணி...” அம்மாவுக்கு இது ரசிக்குமா?

"எதுக்கு இப்ப அதும் இதும் பேசணும்? இருக்கிறது அது ஒண்ணு. ஆயிரம் சொன்னாலும் தலை சாஞ்சா அவந்தா வரணும். அத்தப் பகச்சிக்க முடியுமா?” என்று முணுமுணுக்கிறாள்.

சாப்பாடு முடிந்து சைக்கிளில் ஏறிக் கொண்டு அவன் போகிறான். செவந்தியும் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சாமான்களைக் கழுவி வைக்கிறாள்.

கடலை வித்து, ஜி.ஆர்.ஐ. என்று கொடுத்திருக்கிறார்கள். இதை இரவு திரம் மருந்து கலந்து குலுக்கி வைக்கவேண்டும். ஊடு பயிர் என்று பயிறு விதை வாங்கி இருக்கிறாள். இதற்கு ரைசோபியம் என்ற நுண்ணூட்டச்சத்து சேர்க்க வேண்டும்... சோறு வடித்து ஆற வைத்த கஞ்சியில் அந்தப் பொட்டலத்தைக் கரைக்கிறாள். அதில் விதைகளைப் போட்டுக்கலக்கி வைக்கிறாள். அந்த மேடையையே சுத்தமாக துடைத்து, விதைகளை உலர்த்துகிறாள்.

பொழுது நன்றாக இறங்கி விட்டது. சரோவும் சரவணனும் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் அப்பா ஒட்டலில் இருந்து ஏதோ காரசாமான் பொட்டலமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

செவந்தி ஒர் உறுதியுடன் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். குறுக்கு வழியாகச்செல்லியம்மன் கோயில் பக்கம் சாலை கடந்து இவர்கள் பூமிப் பக்கம் வருகிறாள்.

கிணற்றுப் பக்கம் பளிச்சென்று விளக்கு எரிகிறது. பம்ப் செட் ஓடித் தண்ணிர் கொட்டுகிறது... பெரியவர், அவருடைய மகள் போலிருக்கிறது. அவளும் இருக்கிறாள். சடையன் இருக்கிறான். நல்ல நேரம். வீடு வரை போக வேண்டியில்லை. பம்ப் ரூமொன்று கட்டியிருக்கிறார்கள். எவ்வளவு விரைவில் வேலை நடக்கிறது?

“அடேடே... செவந்திம்மா! வாங்க! உங்கள நினைச்சிட்டேன். இப்பதா தண்ணி கொட்டுது பாருங்க! நூறு வயசு உங்களுக்கு. போனது போக...”

“அவ்வளவெல்லாம் வாணாங்க! லோலுப்பட வேணும்...”

“அதுதான் சொகம் செவுந்தியம்மா! இதுதா எம் மருமக, மக எல்லாம் லச்சுமி... அதா என் தங்கச்சி சொர்ணம்மா...”

ஒரு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். “வணக்கம்மா...”

“இந்த நிலத்துச் சொந்தக்காரங்க... இவங்க சொல்லித்தா மண் பரிசோதனைக்கு அனுப்பின. இன்னைக்குக் கேட்டு வாங்கிட்டே. ஏரி வண்டல். சாண எரு போடுங்க போதும்னாரு. நீங்க உங்க ரிசல்ட் வாங்கிட்டீங்களா?”

“இனித்தா வாங்கணும் ஐயா...” எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. நெஞ்சில் வார்த்தைகள் சிக்கிக் கொள்கின்றன.

“நா உங்களப் பாக்கத்தா வந்தேங்க. நீங்க காலம இவங்க கடைப்பக்கம் போயிருந்தீங்களாம், சொன்னாங்க...”

சிரித்துக் கொண்டே மீசையைத் திருகிக் கொள்கிறார்."எம் பேரு ராமையா, உங்க பூமிக்குப் பக்கத்துல கிணறு தோண்டிப் பயிர் பண்ணப் போறேன். செவுந்தியம்மா சொன்னாங்க ‘எங்க வூட்டுக்காரர்தா சைகிள் மார்ட் வச்சிருக்கிறார்னு’ன்னு. நானே சிநேகம் பண்ணிட்டே. சரிதானே, செவுந்தியம்மா?”

“அதான் சொன்னாங்க.."

“இதா வீடு இருக்கு வாங்க பேசிக்கலாம். லச்சுமி, புள்ளையக் கூட்டிட்டுப் போங்க. பனி இருக்கு. இன்னும் போகலாம்...” அவர்களைப் போகச் சொல்கிறார். பம்ப்பை

நிறுத்தி அறைக் கதவைப் பூட்டுகிறார். பிறகு இருவரும் நடக்கிறார்கள்.

“ஐயா, உங்க கிட்ட ... எப்படி கேக்கிறதுன்னு தெரியல. ஆனா என்னமோ ஒண்ணு கேக்கலாம்னு தயிரியம் சொல்லுது. பாங்க்காரரு கடன் குடுக்க மாட்டே. வூட்டுக்காரரு கையெழுத்துப் போடணுங்கறாரு.. ஆனா எனக்குள்ள ஒரு காக்காணினாலும் இங்கே போடணும்ன்னு இருக்கு. நீங்க ஒரு உதவி மட்டும் செஞ்சா...”

“சொல்லுங்க செவுந்திம்மா...”

“எனக்கு ஓராயிரம் ரூபா கடனா குடுத்து உதவி செய்யணும். நா நிச்சியமா உழச்சி, முதலெடுத்து உங்கக் கடன எம்புட்டு வட்டி போடுறீங்களோ, அப்படிக் குடுத்திடறேன்...” .

வானில் இருள் பரவி நட்சத்திரங்கள் பூத்து விட்டன.

அவளுக்கு அவள் குரல் அந்நியமாகத் தெரிகிறது.

“செவுந்தியம்மா, வெள்ளிக் கிழம நா வார, உங்க வூட்டுக்கு. வூடு எங்க சொன்னீங்க?”

“கீழத் தெரு கோடி வூடு. அடுத்து ஒரு குட்டிச் சுவரு. எட்டினாப்புல சாவடி, இருக்கும்...”

“சரி. இப்ப வூட்டுக்கு வந்து ஒரு வா காபி சாப்பிட்டுப் போங்க.”

“இருட்டிப் போச்சையா...”

“பரவாயில்ல. ரோட்டு வர கொண்டாந்து வுடுறே!”

அவர்கள் நடக்கிறார்கள்.