உள்ளடக்கத்துக்குச் செல்

கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 24

விக்கிமூலம் இலிருந்து

24


ரும்பாயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா.

செவந்தியின் குடும்பத்துக்கு இந்த விழா, குடும்ப உறவுகளை புதுப்பிக்கப்படும் ஒரு விழாவாகப் பொலிகிறது.

முருகனும் அண்ணி சுகந்தாவும் இரண்டு பிள்ளைகளுடன் முதல் நாளே வந்து இறங்குகிறார்கள்.

இந்த வீட்டில் இப்போது நல்ல கழிப்பறை வசதி இருக்கிறது. முன்புறம் விரிவாக்கி கழி போட்டு படியை உயர்த்தி பார்வையாகக் கட்டி இருக்கிறார்கள். அன்று பார்த்த அண்ணன் அண்ணியா!

பழைய கறுத்த உதடுகளும்‌ டம்பப்‌ பேச்சும்‌ திமிரான பார்வையும்‌ போய்‌ விட்டன. உடல்‌ மெலிந்து போயிருக்‌கிறது. குண்டான கன்னங்களும்‌ ஒட்டிப்‌ போயிருக்கின்றன.மூன்‌ முடி வழுக்கை விழுந்திருக்கிறது என்றாலும்‌ இணக்கமான பரிவு வேண்டிய பார்வை. அவன்‌ மேல்‌ இரக்கத்தைத்‌ தோற்றுவிக்கிறது.

பட்டும்‌ பகட்டும்‌ கர்வமுமாக வந்த அந்த அண்ணியா?

அவளுடைய கர்வமும்‌ பெருமையும்‌ புண்ணில்‌ காய்ந்த பொருக்குகள்‌ போல்‌ உதிர்ந்துவிட்டன. அந்த வயிரங்கள்‌ காதுகளில்‌ இல்லை. கழுத்தில்‌ வெறும்‌ மஞ்சட்‌ சரடுதான்‌ இருக்கிறது. கைகள்‌ இரண்டிலும்‌ கண்ணாடி வளையல்கள்‌...

வந்திறங்கியதும்‌ வாய்‌ நிறைய “அக்கா சவுக்கியமா? சரோ எப்படி இருக்கே! உங்கள எல்லாம்‌ மறுபடி பார்த்து நல்லபடியா சாமி கும்பிட வேணும்னு ஓரே தாபமாப்‌ போயிடுச்சு” என்று கைகளைப்‌ பற்றிக்‌ கொள்கிறாள்‌. கண்கள்‌ தளும்புகின்றன.

திவ்யாவும்‌ கார்த்திக்கும்‌ “சரோ அக்கா, சரவணன்‌ அன்ணா” என்று ஒட்டிக்‌ கொள்கிறார்கள்‌. இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறார்கள்‌.. அண்ணி அண்ணனை ஏதோ கைப்பிள்ளையைப்‌ பராமரிப்பது போல்‌ பாவிக்கிறாள்‌.

அவனுக்குப்‌ பல்விளக்க புருசும்‌ பேஸ்ட்டும்‌ எடுத்துக்‌ கொடுப்பதில்‌ இருந்து, இட்டிலியை ஆறவைத்து மிளகாய்‌ பொடி இல்லாமல்‌ தயிர்‌ ஊற்றி வைப்பதும்‌, பாலைக்காய்ச்சி ஆற வைத்துக்‌ கொடுப்பதுமாகக்‌ கவனிக்கிறாள்‌.

அவளே அடுப்படிக்கு வந்து புகையடுப்பில்‌ அவனுக்கு தக்காளி பருப்பு ரசம்‌ வைக்கிறாள்‌.

சில சமயங்களில்‌ செவந்திக்கு எல்லோரும்‌ கண்ணாமூச்சி ஆடுவது போல்‌ தோன்றுகிறது.

“ராசா மாதிரி இருந்த பிள்ளை. உருகி உக்கிப்‌ போயிட்டா. அந்தப்‌ பாவி என்ன சாபமிட்டாளோ...” என்று அம்மா ஊடே கடித்துத்‌ துப்புவது மாறவில்லை. கன்னியப்பனின் ஆயாவைப்போல் திருந்தாத சன்மங்கள். தெருக்காரர்.அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பார்களா?

வெறும் வாயையே மெல்லுபவர் ஆயிற்றே?

ஆனாலும் சரோவின் வாய்க்கும் கண்டிப்புக்கும் சிறிது பலன் இருக்கத்தான் செய்கிறது.

“சரோ, விவசாயம் பால் சொசைட்டி இதோட சரியா? படிச்ச படிப்புக்கு மேலே திட்டம் உண்டா” என்று முருகன் கேட்கிறான்.

“இருக்கு மாமா பவர்டில்லர் வாங்கணும். விவசாயம் பூரா எங் கையில்” என்கிறாள் உற்சாகமாக...

“உன்னைப் போல் மெக்கானிக்கல் லைன் படிச்ச பையனுக்கு பேப்பரில் விளம்பரம் செய்வோம். இரண்டு பேருமாக சேர்ந்து ஏதேனும் தொழில் ஆரம்பிக்கலாம்.”

"மாப்பிள்ளைக்குப் பேப்பரில் விளம்பரமா?” என்று செவந்தி மலைக்கிறாள். காலம் எவ்வளவு மாறிவிட்டது!

அன்று குடமுழுக்கு விழா. கோயில் வளைவே மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது. ஒரு புறம் தீ வளர்த்து வேள்வி நடக்கிறது.

ஊரின் பெரிய தலைகள், வாணிபம் செய்வோர், உழைப்பாளிகள்... பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று காலையிலேயே எல்லோரும் குழுமியிருக்கின்றனர்.

பந்தல் போதாமல், மஞ்சளும் நீலமும் சிவப்புமாகப் பட்டை போட்ட சாமியானா என்ற நிழல் வசதியும் செய்திருக்கிறார்கள். செவந்தியின் குடும்பத்தினர் அதிகாலையிலேயே நீராடித் தூய்மை பெற்று, தேங்காய் பழம், பூ வெற்றிலைப் பாக்கு கர்ப்பூரம் ஆகிய பூசனைப் பொருட்களுடன் கோயில் வளைவுக்கு வந்து விட்டார்கள். ஒலி பெருக்கி பக்திப்பாடல்களை இடைவிடாமல் ஒலி பெருக்கிக்கொண்டிருக்கிறது. இவர்கள் வேள்விச் சாலைப்பக்கம் சென்று வணங்கி வலம் வந்து கருப்ப கிரகத்தில் அம்மனைத் தரிசித்துக் கொண்டு வெளியே வந்து சாமியானாவில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அண்ணனும் அண்ணியும் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்ததைப் பார்த்த பின் செவந்தி எழுந்திருக்கிறாள். சரோ, சரவணன் ரங்கன் மூவரும் கூட்டத்தில் கலந்து போகிறார்கள்.

பட்டாளத்தார்.... கன்னியப்பன் குடும்பம். கன்னியப்பன் சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்துக் கொண்டு இடுப்பில்துண்டுக்கட்டித் திறந்த மார்புடன் பூசைப் பொருட்கள் உள்ள தூக்குக் கூடையை வைத்திருக்கிறான். லட்சமி ஒரு குழந்தையையும் அவள் அம்மா ஒரு குழந்தையையும் வைத்திருக்கிறார்கள்.

அனிதா பாட்டனாரின் கையைப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.

"அம்மா... டி.வி. எடுக்கிறாங்க! நாம விழுவோமா?” என்று கார்த்திக் ஓடி வந்து கேட்கிறான்.

இரண்டு பெரிய பலூன்களை வாங்கிக் கொண்டு சரோ வருகிறாள்.

“இந்தாங்க. இந்தா திவ்யா பலூனை வச்சிட்டுக் காட்டுங்க! டி.வி.காரர்கிட்டச் சொல்லிருக்கே. விழுவீங்க.”

"எதுக்கு சரோ இப்ப? உடச்சிடுவாங்க.”

அண்ணி அண்ணனுக்கே நேரம் தவறாமல் பழச்சாறும் மாத்திரையும் எடுத்துக் கொடுக்கிறாள்.

“உடய்க்கிறத்துக்குத்தான வாங்குறது?”

செவந்தி எதிலும் ஒட்டாமல் கூட்டத்தில் பார்வையில் துழாவுகிறாள். சின்னம்மாவுக்குக் கும்பாபிசேகப் பத்திரிகை வைத்துக் கடிதமும் கொடுத்து அனுப்பியிருந்தாள். குடும்பத்துடன் வரவேண்டும் என்று அவளே எழுதியிருந்தாள். பார்க்காதவர்கள், இடையில் வயது கூடி உருமாறியவர்கள், சிநேகிதர்கள், உறவுகள் விசாரணைகள்...

சின்னம்மா இவ்வளவு வைராக்கியமாக இருப்பாளா?

எல்லோரும் சரேலென்று எழுந்து நிற்கிறார்கள். ஒரு பேரலை வந்தாற்போல் கூட்டத்தில் ஆரவாரம்.

சாமியார் குருக்களையா பூசாரி சங்கரலிங்கம் எல்லோரும் கும்பங்களுடன் மூங்கில் படியில் ஏறுகிறார்கள்.

புனித நீர்க்கலசங்களை சாமியார் வாங்கிக் கும்பத்தில் சொறிகிறார். வெயில் பளபளக்கிறது. அந்தப் புனித நீரைச் சற்று இறங்கி நின்று கொண்டு கூட்டத்தின் மீது வீசித் தெளிக்கிறார்.

கைகளில் ஏந்துபவர்களும் தலை வணங்கி ஏற்பவர்களுமாகச் சூழலே புனிதமாகிறது.

ஆதவனும் தன் கதிர்களை மேகத்துள் முடக்கிக் கொள்கிறான்.

“உங்க மீது விழுந்திச்சா... எங்கமேல விழுந்திச்சி. இந்தாங்க கையில்.. இந்தாங்க" கணவன் குழந்தைகள் பெற்ற புனிதத்தை அண்ணி முகமலர்ந்து செவந்திக்கு நீட்டுகிறாள்.

பிறகு இசைப் பேருரை, பாட்டுக் கச்சேரி எல்லாம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மாலையில் கலைப் பயணக்காரரின் அறிவொளி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லோரும் திரளாகக் குழுமி இருந்து பார்த்துக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்கிறது. செவந்திக்கு எல்லாம் நிறைவாக இருந்தும் நெஞ்சம் தோய்ந்து விடுகிறது.

பிரசாதம் இரண்டு இடங்களில் வழங்குகிறார்கள்.

"மாமா மாமி இங்கே நீங்க இருங்க, நான் உங்களுக்கு பிரசாதம் வாங்கிட்டு வந்து தாரேன்” என்ற சரோ போகிறாள்.

"வாணாம்; நாம அங்க போயித்தான் வாங்கணும்... போகலாமில்ல..” "சரி, அப்ப இந்தக் கூடை, பையெல்லாம் நான் பாத்துக்கறேன். அம்மா நீ தாத்தா எல்லோரும் போங்க... பாட்டி. சேந்து போங்க!” என்று சரோ கூறுகிறாள்.

ஆனால் பாட்டி தனியாக விடுவிடென்று போகிறாள்.

"வூட்டப் பூட்டிட்டு வந்திருக்கு. மாட்டுக்குத் தண்ணி வைக்கணும்...”

பெரிய தவலையில் சர்க்கரைப் பொங்கல்; ஒரு பெரிய கூடையில் இலை போட்டுத் தயிர்சாதம்.

வரிசையில் ஒவ்வொருவராக ரங்கன் விடுகிறான். முதலில் தொன்னைகள் கொடுக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு கரண்டி பிரசாதம் வழங்கப் பெறுகிறது.

இந்த அம்மாவும் வாங்கிட்டுப் போயிருக்கலாமில்ல? சரவணன், திவ்யா, கார்த்திக், அவள்...

“அப்பா எங்கே?”

அப்பாவுக்காக அவள் கூட்டத்தில் ஆராய்கிறாள். ஆராய்ந்தவளாக அந்த சாமியானாவுக்கு வருகிறாள்.

சாந்தி குழந்தைகள் புருசன்..

உட்கர்ந்து சாப்பிடுகிறார்கள். சரோ அவளுடைய தோழிகளுடன்அவசரமாக வெளியேறுகிறாள்.

அண்ணனையும் அண்ணியையும் பார்த்தவாறு அவள் திரும்புகிறாள்.

சின்னம்மா அண்ணனின் பக்கத்தில்..

அதே வெள்ளைச் சேலை... கொடி கொடியாகக் கருப்புக்கரை. மகள் ருக்கு.. ஒரு கிரேப் சேலையும், கனகாம்பரப் பூவுமாக நிற்கிறாள். குச்சிகள் போல் கால்கள் தெரிய பம்மென்ற கவுனணிந்து பாப் முடியுடன் இரண்டு பெண்கள்... நெடுநெடுவென்று ஒட்டிய கன்னங்களும் ஒட்டு மீசையுமாக டீசர்ட் அணிந்த மருமகன். சின்னம்மா முருகனின் கையைத் தன் கையில் வைத்துக் கொண்டு எதோ நெஞ்சு நெகிழப் பேசுகிறாள்.

ருக்குவைப்‌ பக்கத்தில்‌ அழைத்து உட்கார்த்துகிறாள்‌ அண்ணி. டீசர்ட்‌ அணிந்த மருமகன்‌ கை கூப்புகிறான்‌.

சரேலென்று அப்பா நினைவு வருகிறது.

இப்போதும்‌ சின்னம்மா அவரைப்‌ பார்க்காமல்‌ போய்‌ விடுவாளோ? அன்று மாநாட்டில்‌ நழுவ விட்டாற்‌ போல்‌ நழுவ விடக்‌ கூடாது. அவர்‌ இலக்கில்லாமல்‌ கூட்டத்தில்‌ புகுந்து விரிவுரை கேட்கும்‌ கும்பலில்‌ ஆராய்ந்து விரிச்சிட்ட யாகசாலைப்‌ பக்கம்‌ துழாவி, மீண்டும்‌ பிரசாதம்‌ வழங்கும்‌ இன்னோர்‌ இடத்துக்கும்‌ வருகிறாள்‌. அங்கு அறிவொளி இயக்கத்‌ தோழர்களுடன்‌ சரோ பிரசாதம்‌ சாப்பிட்டுக்‌ கொண்டிருக்கிறாள்‌. லலிதா, தேவிகா என்ற பெண்கள்‌ காஞ்சியிலிருந்து வந்திருக்கிறார்கள்‌.

“சரோ! தாத்தா பிரசாதம்‌ வாங்கிட்டாரா? பார்த்தாயா?”

“பார்க்கல. பாட்டிதா எந்திரிச்சி போச்சு. நா வாங்கிக்‌ கொடுத்தேன்‌.”

“சின்னம்மா வந்திருக்காங்க. ருக்குவும்‌ கூட வந்திருக்கு. அவங்க மாமாகிட்டப்‌ பேசிட்டிருக்காங்க. அப்பாதானே பார்க்கணும்ன்னாரு.” அவளாகச்‌ சொல்லிக்‌ கொள்கிறாள்‌. சரோ இதில்‌ எந்த முக்கியத்துவமும்‌ இருப்பதாகப்‌ புரிந்து கொள்ளவில்லை.

சுந்தரி...தன்‌ பிள்ளைகளுடன்‌ பிரசாதம்‌ வாங்கிக்‌ கொண்டு வருகிறாள்‌. பையன்‌ ஒரு பாட்டிலில்‌ தண்ணீரைக்‌ கொண்டு வருகிறான்‌. சாப்‌பிட உட்காருகிறார்கள்‌.

“சுந்தரி? அப்பாவப்‌ பாத்தியா? சின்னம்மா வந்திருக்காங்க. அவர்தான்‌ பார்க்கணும்‌, பேசணும்னு துடிச்சிட்டிருந்தாரு?”

“அதா கிணத்தாண்ட எல்லாருக்கும்‌ தண்ணி எறச்சிக்‌ குடுத்திட்டிருக்காரு. இத இவ அங்கேருந்துதா வாரான்‌. நாங்‌ கொஞ்சம்‌ எரச்சி ஊத்தன. எல்லாம்‌ வெயில்ல தாகம்‌ தாகம்னு வராங்க... பானையில்‌ தண்ணி ஊத்தி வச்சிருந்தாங்க. காலியாயிடிச்சி. செவந்தி! சாயங்காலம்‌ வரைக்கும்‌ இருக்கப்‌ போறியா? நாம வூட்டுக்குப்‌ போயி கொஞ்சம்‌ பாத்திட்டு ஆறுமணிக்கு வந்தாப் பத்தாது? சரோ, அறிவொளி இயக்க நாடகம் எட்டு மணிக்குத் தானே?”

செவந்தி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.ஒரே குறியாக கிணற்றுக் கரைக்கு வருகிறாள்.

"அப்பா ...?"

காதுகளில் பூ... திரும்பியே பாராமல் தண்ணிர் இறைத்துக் குடத்தில் ஊற்றுகிறார்.

அவள் அருகே சென்று அவரைத் தொடுகிறாள்.

“அப்பா நா இறைக்கிறேன். நீங்க பிரசாதம் சாப்புட்டீங்களா?” மேலெல்லாம் வேர்வையா தண்ணிரா என்று தெரியாமல் நனைந்து இருக்கிறது. வேட்டியைத் தார் பாய்ச்சி இருக்கிறார்.

“விடுங்க... நான் இறைச்சி ஊத்தறேன். சின்னம்மா வந்திருக்காங்க. ருக்கு மருமகன் குழந்தைங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க. நாம உக்காந்திருந்தோமே, அந்த இடத்தில் சின்னம்மா அண்ணன் அண்ணி கூட உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க...” உடனே அவர் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் அங்கு ஒடுவார் என்று நினைத்தாளே, அது நடக்கவில்லை.

நிறைந்த குடத்தை எடுப்பவர் தலையில் ஏற்றிவிட்டு நிற்கிறார். “அப்பா! நீங்க போங்க. ஒருவேள அண்ணிக்குப் போல அவங்க அப்படியே பஸ் ஏறிப் போயிடுவாங்களோன்னுதா ஓடி வந்தேன்.”

“தெரியும் செவந்தி. அவங்க வாசல்ல வாரப்பவே பாத்திட்டே உங்கம்மா அதுனாலதா வூட்டுக்கு ஒடிட்டா...”

அவள் வாயடைத்து நிற்கிறாள்.

“அவளுக்குப் பார்க்க இஷ்டமில்லாமதா அன்னைக்கு இந்த எல்லைக்கு வந்திட்டுத் தெருவ மிதிக்காம போனா. எத்தினி நாளானாலும் அந்த நினைப்பு வரத்தா வரும்... நா தூரத்தலேந்து அவ வந்தப்ப பார்த்தேன். அது போதும். எனக்கு இப்ப எந்தக் கிலேசமும் இல்ல. சாமி சொல்லிச்சி. அமைதியாயிருன்னு. இந்த மனசில அமைதியா இருந்தாலே சுத்துப்புறம் நோவு நொடி செடியாத் தாக்கும் விசப்பூச்சி வாராம இருக்கும்னு நா அதுவும் இதுவும் ஏன் நினைக்கணும்.” செவந்தி திகைத்துப் பார்க்கிறாள்.

அவளைப் பாத்து மன்னிப்புக் கேக்காம நெஞ்சு ஆறாதுன்னு கரைந்து போன அப்பனா?

சுருக்கம் விழுந்த இந்த முகத்தில்... இதுதான் தெளிவா?

"செவந்தி, உங்கிட்ட ரங்கன் சொல்லல. ஆனா முருகனுக்கு வந்த நோவு, இரைப்பை புத்துன்னு சொன்னா கெடந்து துடிச்சே. அந்தப் பொண்ணு அவ்வளவு நொடிச்ச பொண்ணு, சொத்து சொகம் நகை நட்டு எல்லாம் தோத்து, சாவித்திரி போல யமங்கிட்ட வாதாடி அவ உசிரை மீட்டிருக்கு. இப்ப நல்லா குணமாயிட்டது. சோதிச்சிச் சொல்லிட்டாங்கன்னாங்க... என்னமோ எல்லாம் அந்தத் தாயின் கிருபைதான்.”

"சாமி சொன்னாங்க. கெட்டவங்கன்னு யாருமே இல்ல. பகை வெறுப்பு பொறாமை பழி எல்லாம் மனிசனே உண்டாக்கிக் கொள்ளும் கசடுகள். மாயைகள். இதெல்லாம் நீக்கிவிட்டா, உள்ளேருந்து தண்ணிர் கரும்பா வரும். எல்லார் மனசிலும் அதாம்மா...” அப்பா அவள் தலையில் பரிவுடன் கையை வைக்கிறார்.

“உனக்கு நல்ல மனசு. அவ மக ருக்குவுக்கும் அந்தப் புள்ளங்களுக்கும் நல்லது செய்யி. படிக்க வையி, நீ செய்வே. இதுக்கு மேல எனக்கு என்னம்மா வோணும்?”

உணர்ச்சி மிகுதியில் நெஞ்சு முட்டுகிறது.

மனம் மிக இலேசாகிறது.

சரேலென்று வானம் மங்க... கோடையிடி முழங்குகிறது. “மழை ... மழை...” என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.

செவந்தி ஏதோ நினைவு வந்தாற்போன்று விடுவிடென்று சாமியானாவை நோக்கி முன்னேறுகிறாள்.

ஆசிரியரின் பிற நூல்களுள் சில

வேருக்கு நீர்

அவள்

சேற்றில் மனிதர்கள்

சுழலில் மிதக்கும் தீபங்கள்

கரிப்பு மணிகள்

கூட்டுக் குஞ்சுகள்

மாறி மாறிப்பின்னும்

கோபுர பொம்மைகள்

தோட்டக்காரி

மண்ணகத்துப் பூந்துளிகள்

ஆண்களோடு பெண்களும்

புயலின்மையம்

கனவு

காலந்தோறும் பெண்

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

மலர்கள்

வளைக்கரம்

பெண்குரல்

ஊசியும் உணர்வும்

எமது ஆசிரியர் - படைப்புகள்

►அகிலன் ►நாவல்
►ராஜம் கிருஷ்ணன் ►சிறுகதை
►நா. பார்த்தசாரதி ►வாழ்வியல் கட்டுரைகள்
►ராகுல்ஜி ►பொது அறிவு, சுயமுன்னேற்றம்
►கண.முத்தையா ►மாணவர், சிறுவர் நூல்கள்
►க. அபிராமி ►கம்ப்யூட்டர் தொலை தொடர்பு
 இதழியல் விளம்பர தொழில்நுட்பம்
►அகிலன் கண்ணன் ►அரசியல், சரித்திரம், சட்டம்
►Dr. பிரேமா ►கலை, இலக்கியம்,
►ஜி.ஜி.ஆர். ►அறிவியல், உடல்நலம்
►மற்றும் பலர் ►திரைக்கதை-வசனம்


தமிழ்ப் புத்தகாலயம்-தாகம்
பு:எண் 34, சாரங்கபாணித் தெரு
தி.நகர் சென்னை - 600 017
☎ 044-28340495, தொலை நகல் :28344528
மின் அஞ்சல் : tamilputhakalayam@yahoo.com
வலைப்பக்கம் : http://expage.com/tamilputhakalayam
http://akilan.50megs.com