உள்ளடக்கத்துக்குச் செல்

கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 4

விக்கிமூலம் இலிருந்து

4


அவர்களை வாயில் வரை வழியனுப்பிவிட்டு, செவந்தி உள்ளே வருகிறாள். சுந்தரி சும்மாயிருக்கக் கூடாதா?

“ஏக்கா அவருதாம் வூட்டுக்காரரா? போட்டோக் கடையில் பாத்திருக்கிற. எங்க பெரிம்மா பொண்ணு மல்லிகா போன வருசம் பூ முடிச்சிட்டு இவரு கடயிலதா போட்டோ எடுத்தாங்க... பாத்தா காலனி ஆளுங்கன்னு சொல்ல முடியுமா? எல்லாம் ரொம்ப மதிப்பாயிட்டாக. அவுங்களுக்கு சர்க்கார் வூடு பட்டா குடுத்திருக்கு. குழாபோட்டு குடுத்திருக்காங்க...”

இவள் எதோ மனசில் எந்த வேற்றுமையும் இல்லாமல்தான் இதைச் சொல்கிறாள் என்பதைச் செவந்தி அறிவாள். ஆனால் அம்மா, இதை விசுக்கென்று பற்றிக் கொள்கிறாள்.

“ஏண்டி வந்தவங்க காலனி ஆளுங்களா?”

“ஆமா அதனால என்ன? அவங்களும் நம்மப்போலதா. இந்த மாதிரி எல்லாம் பேசுறது தப்பு” என்று செவந்தி கோடு கிழிக்கிறாள்.

“அவதா எவ்வளவு ஒத்தாசைபண்ணுனா! நல்லாபடிச்சவ. ஆனா கொஞ்சம் கூடக் கருவம் இல்ல. ஒராள் வேலை பண்ணுனா அன்னிக்கு. இப்ப நாம் போயி உதவாட்டி அது மனிச சன்மத்துக்கு அழகில்ல".

“ஏ வாய அடிச்சிருவீங்க இந்தூட்டுல” மூசுமூசென்று அழத்தொடங்குகிறாள்.

ரங்கனும் வரும்போது சந்தோசமாக இல்லை.

“சோறு வையி. எனக்கு ஒரே பசி. சாமி இங்க உக்காந்து சாப்புடும் எல்லாரும் சாப்பிடுவோம்னு பாத்தா, தூக்கெடுத்து வசூல் பண்ணிட்டுப் போவுது சீ. நம்ம கோயில் சாமி, நிசமாலும் சாமி” என்று அலுத்துக் கொள்கிறான்.

சுந்தரிதான் அவனுக்கு இலை போடுகிறாள்.

“நீங்கல்லாம் சாப்பிட்டிங்களா?”

“ஆமா, எனக்குப் பசிபிச்சிட்டுப் போச்சி! காலமேந்து நிக்க நேரமில்லாம எல்லாம் செஞ்சி, ஆற அமர உக்காந்து சோறு தின்னக்கூடக் குடுத்து வய்க்கல. இந்தச் சாமி எங்கேந்து வந்திருச்சி இப்ப?” “அதென்னவோ, உங்கம்மாளக் கேளு! பூங்காவனப் பெரிம்மா சொன்னாங்களா, வேலுவும் தர்ம ராசுவும் குதிச்சாங்க. வரதராசன் வூட்ல பூசை வச்சாங்க. அவரு வந்திட்டுப் போனா, ஒடனே நல்லதெல்லாம் நடக்குதாம். கலியாணம் ஆகாம நின்னவங்களுக்கு மூணே நாளில் கலியாணம், வேல கிடைக்காதவங்களுக்கு வேல, கடன் இருந்தா எப்பிடியோ அடயுது. என்னெல்லாம் சொன்னாங்க. உங்கம்மா இப்பிடிப் போயி இந்தச் சேதியெல்லாம் கொண்டிட்டு வந்து பத்து நாளா குடஞ்சி தள்ளிட்டா. ஆக, நம்ம கைவுட்டு அஞ்சுக்குக் குளோசு. தாயத்து வச்சிருக்கிறே, விளக்குப் பக்கத்தில. கட்டிக்கிறவங்க கட்டிக்குங்க!”

“நம்பிக்கை இல்லேன்னா, எதுவும் வராது. நம்பணும். நாலு பேர் நடந்ததத்தான சொல்வாங்க. இவர முன்னபின்ன தெரியுமா? பொம்பிளைதோசம்னு பார்த்ததும் சொல்லிடல? நீங்க நம்ப மாட்டீங்க. எந்தச்சேரி ஆளுங்களும் உள்ள வந்து சொல்லுறத நம்புவீங்க? வக்கீல் வூட்ல பூசை பண்ணாராம். ஒரு மாசம் அந்தப் பூ வாடவே இல்லையாம்".

“இப்பதான சாமி இங்க வந்திருக்கு, இமயமலையவுட்டு? எப்படிப் பாட்டி ஒரு மாசம் பூ வாடல? இமயத்திலேந்து கொண்டுட்டு வந்த பூவா?” என்று சந்தடி சாக்கில் சரோகிண்டி விட்டுப் போகிறாள்.

அப்பாவுக்கு இருமல் தொடங்குகிறது.

சங்கிலித் தொடராக, இழுத்து இழுத்துக் கண்கள் செருகி மீண்டு திணற இருமல்.

செவந்தி பக்கத்தில் உட்கார்ந்து நீவி விடுகிறாள். “என்னப்பா..... அப்பா?...ந்தாம்மா வெந்நீ போட்டு வச்சிருந்தே. கொஞ்சம் கொண்டா.....”

வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் செய்கிறாள். பக்கத்தில் மின் விசிறியை இழுத்து வைக்கிறாள். "வேத்துக் கொட்டுது...” தன் சோலைத் தலைப்பால் மேனியைத் துடைக்கிறாள். சிறிது ஆசுவாசமடைகிறார்.

“அந்தச் சக்களத்தி நினைச்சிட்டிருப்பா” என்று அம்மா முணுமுணுத்துக் கையை நெறிக்கிறாள்.

“யம்மா, நீ எந்திரிச்சிப் போ, இங்கேந்து போயி ரெண்டு வேலயப் பாரு மாடு கத்துது. அதுக்கு ரெண்டு வைக்கோல் அள்ளிப் போடநாதியில்ல. நாஇன்னக்கி இந்த லோலுப்பட்டதில கழனிப் பக்கம் போகல.....?”

“யக்கோ...” என்று கன்னியப்பன் குரல் கொடுக்கிறான்.

“புல்லறுத்திட்டு வந்தே..... சாமி வந்தாராமில்ல? எனக்குப் பாயசம் இல்லையாக்கா?”

"உனக்கு இல்லாமயா? வா, வா! சுந்தரி! பாயசம் இருக்கா?"

“இருக்கு. ...”

“குடு.... கன்னிப்பன மறந்தே போயிட்டமே அவ இல்லேன்னா இந்த வூட்டுல சோத்துல கை வைக்கத் தெம்பிருக்காது”.

அம்மா உறுத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு எழுந்து போகிறாள்.

“இந்தாளப்பத்தி என்னெல்லாம் சொன்னாங்க தெரியுமா? வெள்ளக்காரங்கல்லாம் வந்து அருள் வாங்கிட்டுப் போறாங்களாம் ஆஸ்திரேலியாவிலேந்து ரெண்டு பேர் வந்தாங்களாம். ஊருல அந்தப் பொம்புள புள்ளியங்கள வுட்டுப்போட்டு வந்திருக்காம். புள்ளக்கு உடம்புசரில்லன்னு போன் வந்திச்சாம். இங்கே வேல முடியலியாம். சாமிகிட்ட நின்னு, சாமின்னு வேண்டிட்டு நின்னிச்சாம். அடுத்த நிமிசம் அவுங்க இங்க இல்லையாம்! நின்னிட்டிருக்கிற புருசனுக்கு, அவ அவவூட்டல ஆஸ்திரேலியாவுல புள்ள கிட்ட உட்காந்திருப்பது தெரிஞ்சிச்சாம்....”

“எல்லாம் ரீல். யாரோ இமாலயத்திலேந்து சுத்தி வுடுறாங்க. இங்க கரும்பாக்கத்துக் கீழத் தெருவுல, செங்கோலுப் பாட்டி காதுல வந்து வுழுது!" என்று செவந்திக்குக் கேட்கத் தோன்றுகிறது.

அரும்பு மீசையைச் செல்லமாகத் தடவிக் கொண்டு முற்றத்தில் நிற்கும் கன்னியப்பனையும் பார்க்கிறாள். நல்ல உழைப்பினால் உரமேறிய உடல். வெள்ளை உள்ளம். இவனுக்குச் சரோவைக் கட்டினால் ஒத்து இருப்பானே?

"கன்னிப்பா! உனுக்குப் பெரிய எடத்துலந்து பொண்ணு வருதாம். உன் ஆயா, எப்பய்யா கலியாணம் கட்டிப்பா, அவன் கட்டி, ஒரு பேரப்புள்ளயப் பாத்திட்டுச் சாவணும்னு சாமி கிட்டப் புலம்பிச்சி. கவலப்படாதீங்க. கலியாணம் வருது, பெரிய எடத்துப் பொண்ணுன்னாரு....”

“பெரிய எடம்னா மாடி வூடா. உக்காந்தா பெரி.... எடத்த அடச்சிக்கிற எடத்துப் பொண்ணா?” சரோவின் கிண்டலுக்கும் அவன் வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறான்.

“அதென்னமோ தெரியாது, கன்னிப்பா, உன் கல்யாணத்துல எனக்கு பெரீ..... எல போட்டுப் பெரீ... சோறு போடணும்" என்று சரோ மேலும் நீட்டவே, கன்னியப்பன் மகிழ்ந்து போகிறான்.

“உனுக்கு இல்லாமயா சரோ? உனுக்குத்தான்முக்கியமாப் போடுவ....”

உள்ளே வரும் பாட்டி பட்டென்று வெட்டுகிறாள். "போதும், ஒரு வரமுற இல்லாத பேச்சி. பாயசம் குடிச்சாச்சில்ல? எடத்தக் காலி பண்ணிட்டுப் போ!"

“அவம் மேல ஏனிப்பக் காயுற? சிறுசுங்க கேலியும் கிண்டலுமா பேசிட்டுப் போவுதுங்க! நீ முதல்ல எந்திரிச்சிப் போ” என்று செவந்தி விரட்டுகிறாள்.

இந்த அம்மா, அப்பனை விட்டு அங்கே இங்கே நகருவதில்லை. அவர் வெளியே போனால், இவளும் சேலைத் தலைப்பை உதறிக் கொண்டு அங்கே இங்கே வம்பு பேச, டி.வி பார்க்க என்று கிளம்பி விடுவாள். வீட்டில் வணங்கி ஒரு வேலை பொறுப்புடன் செய்தாள் என்பதில்லை. அந்தக் காலத்தில், செவந்தி சிறியவளாக இருக்கையில், ஆண் பாடு பெண் பாடு என்று உழைத்தவள் சின்னம்மாதான். அம்மாவுக்கும் அவளுக்கும் ஆறேழு வயசோ மேலேயோ வித்தியாசமிருக்கும்.

பாட்டி சாகும் போது, சின்னாத்தாளுக்கு ஒரு வயசோ ஒன்றரை வயசோதானாம். அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் இடையில் மூன்றோ, நான்கோ குறைப் பிரசவங்களும் ஒரு முழுப் பிள்ளையும் வந்து நலிந்து போன பிறகு இவள் பிறந்தாளாம்.

பாட்டன் அந்தக் காலத்தில் வேறு கல்யாணம் கட்டாமல் இரண்டையும் தாயுமாக நின்று வளர்த்தாராம். சின்னம்மாவைத் தோளில் சுமந்து கொண்டு கழனிக்கரைக்குப் போவாராம்.

பாட்டனாரைச் செவந்திக்குத் தெரியும். அவளைத் தோள் மீது சுமந்து கொண்டு காஞ்சிபுரம் தேர்திருவிழாவுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். பொரி கடலை மிட்டாய் வாங்கித் தந்திருக்கிறார். யானை காட்டி, அதன் துதிக்கையை தலையில் வைத்து ஆசி வழங்கப் பண்ணுவார். காசு கொடுக்கச் சொல்லுவார். பெருமாள் கோயிலில் பல்லி தொட்டுக் கும்பிடத்தூக்கிப் பிடிப்பார்.

அவளுக்கு நினைவு தெரிந்த வயசில்தான் சின்னம்மா ராசாத்திக்குக் கல்யாணம் நடந்தது. கோயிலில்தான் நடந்தது. பெரிய பெரிய அதிரசம் பணியாரம் சுட்டு நடுக்கூடத்தில் வைத்திருந்தார்கள். சின்னம்மா அம்மாவைப் போல் உயரமில்லை. வெளுப்புமில்லை. ஆனால் குருவி போல் சுறுசுறுப்பாக உட்கார்ந்து செவந்தி பார்த்ததாக நினைவில்லை. ஆடு வளர்த்தாள். கோழி வளர்த்தாள். பாட்டன் சந்தையில் கொண்டு கோழி விற்றோ, ஆடு விற்றோ அவளுக்குக் காலில் முத்துக் கொலுசு வாங்கி வந்தது நினைவிருக்கிறது.

செவந்தியின் மீது சின்னம்மாவுக்கு நிறைய ஆசை. அவள் பள்ளிக்கூடம் போக இரட்டைப்பின்னல் போட்டுக் கட்டி விடுவாள். முருகன் அம்மா பிள்ளை. அவனுக்குச் சின்னம்மாவிடம் ஒட்டுதல் இல்லை. இவள் ஸி.எஸ்.ஐ. பள்ளியில்

படிக்கச் செல்கையில் சின்னம்மா அவளை அதுவரையிலும் கொண்டுவிட்டு கொல்லைமேட்டுப் பூமியைப் பார்க்கப் போவாள். ஒரு நாள் மழை வந்து விட்டது. முருகனிடம் குடையைக் கொடுத்துவிட்டு இவளைத் தூக்கிக் கொண்டு வந்தாள். செல்லியம்மன் கோயில் பக்கம் வருமுன் மழை கொட்டு கொட்டென்று தீர்த்து விட்டது. கோயிலில் ஏறிக் காத்திருந்தார்கள். அடுத்த நாள்முருகனுக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அம்மா சின்னம்மாவைத் திட்டித் தீர்த்தாள்.

அப்போது சின்னம்மாவுக்குப் புருசன் இருந்தான். கல்யாணமான ஆறுமாசத்துக்குள் வண்டியில் மூட்டை ஏற்றிக் கொண்டு அவன் இரவில் சென்ற போது, எதிரே வந்த லாரி கண்டு மிரண்டு மாடுகள் சாய, வண்டி குடை கவிழ்ந்து அவனுக்குக் கால் உடைந்து விட்டது. அது சரியாகவே இல்லை. அவனுக்குச் சொந்த பந்தம் என்று மனிதர்கள் இல்லை. நிலம் துண்டுபடக் கூடாது. இரண்டு பெண்களும் மருமகன்களும் ஒன்றாக உழைத்துச்சாப்பிடவேண்டும் என்று பாட்டன் நினைத்திருந்தார். ஆனால் அவனுக்கு விபத்து நேர்ந்து, ஊனமாய், சோற்றுக்குப் பாரமாக உட்கார்ந்தான் என்பதால் சின்னம்மாஅம்மாவுக்குத் தரம்தாழ்ந்து போனாள்.

அத்தைமகனான தன் புருசன் உரிமைக்காரன்; உழைக்கிறான். அதுமட்டுமில்லை, தான் முதலில் ஒர் ஆண் பிள்ளையைப் பெற்றிருக்கிறோம் என்ற கருவம் அவளுக்கு உண்டு. இப்போதுதான் செவந்திக்கு இதெல்லாம் நன்றாகப் புரிகிறது. அம்மா வெளி வேலைக்குப் போனதே இல்லை. வீட்டு வேலையும் செய்ய மாட்டாள். அதுவும் சின்னம்மா புருஷனை இழந்த பிறகு, அவள்தான் முழு நேர வேலைகளையும் செய்தாள். அம்மா, இழை சிலும்பாமல், சேலை கசங்காமல், வெற்றிலை வாய் மாறாமல், குந்தி இருந்து வம்பளப்பாள்.

அந்தப் புருசன் மூன்று நாள் காய்ச்சல் வந்து இறந்து போனார். அப்போது சின்னம்மா முழுகாமல் இருந்தாள். சின்னம்மாவைச் சுற்றி வந்து எல்லோரும் மாரடித்து அழுதபோது, விவரம் புரியாமல் அவளும் கோவென்று அழுதாள். பெரியசாமி மாமன் அவளையும் முருகனையும்

ஒட்டலுக்குக் கூட்டிச் சென்று இட்டிலியும் காபியும் வாங்கிக் கொடுத்து அவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டதும் நினைவு இருக்கிறது.

பிறகு, சின்னம்மாவின் இந்த வடிவம்....

இளைத்துத்துரும்பாக... நெற்றிப் பொட்டும் மூக்குத்தித் திருகாணிகளும் இல்லாமல், கன்னம் ஒட்டி..... சாயம் மங்கிய ஒரு சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, முந்தியை இடுப்பைச் சுற்றி வரிந்து செருகி இருப்பாள்.

காதில் முன்பிருந்த தோடுகள் இல்லை. தேய்ந்த சிவப்புக்கல் திருகு ஒன்று ஒட்டை தெரியாமல் மறைத்தது. வளையமோ மாலையோ எதுவும் கிடையாது. எப்போதுமே வேலை செய்தவள் அவள்தானே!

வீடு பெருக்கி, மாவாட்டி.... மாட்டுக் கொட்டில் சுத்தம் செய்து, தண்ணிர் இறைத்து, சாணி தட்டி, சோறாக்கி... ஓயாமல் வேலை. கழனிக்குப் போவாள்.

கல்யாணத்துக்கு முன் அவள் வளர்த்த ஆடுகளை விற்றுத் தான் பாட்டனார் அந்தக் கொல்லை மேட்டுப் பூமியை வாங்கினாராம். அதை ஓட்டிப் போக ஆள் வந்த போது, “அப்பா எனக்கும் அக்காவைப் போல் நாலு சவரனில் செயின் வாங்க வேணும்” என்றாளாம்.

ஆனால் செயின் வாங்காமல், பூமி வாங்கி, தன் மூத்த மருமகன் செவந்தியின் அப்பா பேரில் எழுதி வைத்தார். பிறகு தான் சின்னம்மாவுக்குக் கல்யாணம் ஆயிற்று; வாழ்வும் போயிற்று.

பாட்டன் இறந்த போது, வயிறும் பிள்ளையுமாக இருந்த சின்னம்மா இதெல்லாம் சொல்லி அழுதாள்.

அவர் போன பிறகு, சின்னம்மாவுக்கு நாதியே இல்லை என்றாயிற்று.