சங்ககாலத் தமிழ் மக்கள்-3/தமிழர் வாழ்வியல்
தமிழர் வாழ்வியல்
சங்ககாலத் தமிழகத்தின் அரசியல், உரிமை வாழ்வினை வளர்த்தற்குரிய வேலியாய் விளங்கியது. அதனால், அக்காலத் தமிழ் மக்கள் பசியும் பிணியுமற்று, நல்வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையின் சிறப்பியல்புகளை ஒரு சிறிது நோக்குவோமாக:
மக்களது நல்லறிவின் பயனாய் அமைவது ஒழுக்கமாகும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ச்சி அடைதற்குக் காரணமாகிய ஒழுக்கவுணர்வுடைய மக்கள் ‘உயர் திணை’ எனச் சிறப்பிக்கப் பெற்றார்கள். அவ்வொழுக்கவுணர்ச்சியில்லாத ஏனைய உயிர்களும் உயிரல் பொருள்களும் ‘அஃறிணை’ என வழங்கப் பெற்றன. உலகப் பொருள்களையெல்லாம் உயர்திணை அஃறிணையென இரண்டாக வகுத்தலும் ; ‘ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல’ என ஐம்பாலாகப் பகுத்து வழங்குதலும் தமிழ் மொழியிலன்றி வேறு எம்மொழியிலும் காணப்படாத சிறப்பியல்புகளாம்.
விலங்கு முதலிய தாழ்ந்த உயிர்களினின்றும் மக்களைப் பிரித்து உயர்திணையாக உயர்த்துவது மனவுணர்வின்பாற்பட்ட நல்லொழுக்கமே. ஒழுக்கம் மேன்மேலும் உயர்வைத் தருதலால், அதனை உயிரிலும் சிறந்ததாகப் போற்றுதல் வேண்டுமெனத் தமிழ்ச் சான்றோர் அறிவுறுத்துவாராயினர். ஒழுக்கமில்லாதார், மக்கள் வடிவிற் காணப்பட்டாலும், மாக்கள் (விலங்குகள்) என்றே இழித்துரைக்கப்படுவர்.
பண்டைத் தமிழர் மாந்தர் எல்லாரையும் ஒரு குலத்தவராகவே மதித்துப் போற்றினர். ஒத்த அறிவும்
செயலும் உடைய மக்களைப் பல்வேறு சாதியினராகப் பிரித்து வேறுபாடு கற்பிக்கும் இருநிலை, சங்ககாலத் தமிழரிடையே காணப்படாததொன்றாம. ‘மக்கள் செய்யுங் தொழில் வேற்றுமை காரணமாகவே அவர்களிடையே உயர்வு தாழ்வுகள் உண்டாகும்’, என்பது தமிழர் துணிபு.
தமிழ் மக்களுடைய பழைய இலக்கண நூலாய் விளங்குவது தொல்காப்பியம். அந்நூல் மக்கள் வாழ்க்கையினை ‘அகம், புறம்’ என இருவகையாகப் பகுத்து விளக்குகின்றது. ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் கலந்து வாழும் குடும்பவாழ்வினை அகவாழ்வென்றும், இங்ங்ணம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றி வாழ்தற்குரிய அரசியல் வாழ்வினைப் புறவாழ்வென்றும் வகுத்துரைத்தல் தமிழர் மரபாகும்.
‘அறம், பொருள், இன்பம்’ என்னும் இம்மூன்று பொருள்களையும் ‘மும்முதற்பொருள்’ எனத் தமிழர் பாராட்டிப் போற்றுவர். எல்லாவுயிர்களாலும் விரும்பப்படுவது இன்பம். அவ்வின்பத்திற்குக் காரணமாக மக்களால் ஈட்டப் பெறுவது பொருள்; நடுவு நிலையில் நின்று அப்பொருளையீட்டுதற்குரிய ஒழுங்கு முறை அறம். அறத்தினாற் பொருள் செய்து அப்பொருளால் இன்பம் நுகர்தல் மக்கள் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை ஆசிரியர் திருவள்ளுவனார் அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என முப்பால்களாக வகுத்து விளக்குகின்றார்.
அகவொழுக்கத்தை ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகையாக விரித்து விளக்குவர். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இருவர், இல்லிருந்து நல்லறஞ்செய்தற்கு இன்றியமையாக அன்பின் வழிப்பட்ட உள்ளத்துணர்ச்சியே ஐந்திணை
எனப்படும். தலைவன் தலைவி என்னுமிருவரும் தம்முட்கூடி மகிழ்தலும், உலகியற்கடமை நோக்கித் தலைவன் சில நாள் தலைவியைப் பிரிந்து செல்லுதலும், பிரிந்த தலைவன் குறித்த நாளளவும் தலைவி அப்பிரிவுத்துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும், கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் ஆற்றாமை மிக்கு மனைவி இரங்குதலும், பின் அவன் வந்த போது அன்பினாற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக இவ்வகத்திணையினை விரித்துரைப்பர். இவ்வைந்து ஒழுகலாறுகளையும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பெயரிட்டு வழங்குவர்.
மேற்கூறிய அன்பினைந்திணையாகிய அகவொழுக்கம் ‘களவு, கற்பு’ என இரு வகைப்படும். உருவும் திருவும் உணர்வும் முதலியவற்றால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, அன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய், உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல் களவாகும். ‘மறைவில் நிகழும் ஒழுகலாறு’ என்ற கருத்திலேயே ‘களவு’ என்னும் சொல் வழங்குகின்றது. இங்ஙனம் மறைந்தொழுகுதலைத் தவிர்ந்து, பெற்றோர் உடன்பாடு பெற்று, இருவரும் உலகத்தார் அறிய மணஞ்செய்து கொண்டு மனையறஞ்செய்தலே ‘கற்பு’ எனப்படும்.
கணவன் மனைவி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற்கூடி வாழ்தலில் விருப்புடையராக, மற்றவர் அவர் உறவில் விருப்பின்றி ஒழுகுவது கைக்கிளையாகும். கைக்கிளையென்பது, ஒருதலைக்காமம். ஒருவனும் ஒருத்தியும், தம்முள் அன்பில்லாதவராய் இருந்தும், கணவனும் மனைவியுமெனப் பிறராற்பிணக்கப்பட்டு, அன்பின்றிக் குடும்பம் நடத்துதல் பெருக்திணையாகும். இவ்வாறு
பொருத்தமில்லாத உறவு உலகியலிற்பெரும்பான்மையாகக் காணப்படுதலான், இதனைப் பெருந்திணை என்ற பெயரால் வழங்குவாராயினர்.பொன்னும் பொருளும் பிறவளங்களும் ஆகியவற்றை விரும்பி ஒருவரையொருவர் மணத்தற்கு ஒருப்படுதல் பொது மக்களின் இயல்பாகும். மணற்கேணியினைத் தோண்டத் தோண்ட நீர் ஊறுவது போலக் கணவனும் மனைவியும் எனப் பன்னாள் பழகப் பழகச் சிறப்புடைய அன்பு தோன்றிப் பெருகுதல் இப்பொது வாழ்வின் பயனாகும். கணவனும் மனைவியுமாகப் பல பிறவிகளிலும் ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடையாரிருவர், மீண்டும் பிறந்து வளர்ந்து, நல்லூழின் செயலால் ஓரிடத்து எதிர்ப்படுவராயின், அன்பினால் நிறைந்த அவ்விருவடைய நெஞ்சமும் செம்மண் நிலத்திற்பெய்த மழை நீரைப் போலக் கலந்து ஒன்றாகும் இயல்புடையனவாம். ஒருவரையொருவர் முன் கண்டு பழகாத நிலையிலும் அவர்கள் உள்ளத்திற் பண்டைப் பிறப்பிற்பெருகித் தேங்கியிருந்த அன்பு வெள்ளம், அவ்விருவரும் ஒருவரையொருவர் கண்ட அளவிலேயே நாணமும் நிறையுமாகிய அணைகளைக் கடந்து, நிலமும் குலமுமாகிய தடைகளை அழித்து ஒன்றாகும் இயல்பே இயற்கைப் புணர்ச்சி எனத் தமிழ் மக்களாற் சிறப்பித்து உரைக்கப்படுவதாம். இவ்வாறு முதற்காட்சியிலேயே அன்பின் தொடர்புணர்ந்து, ஒருவரையொருவர் இன்றியமையாதொழுகும் இயல்புடையாரை நல்வாழ்விற்சிறந்த தலைமக்கள் எனத் தமிழ் மக்கள் பாராட்டிப் போற்றினார்கள். இத்தகைய தலைமக்களது ஒழுகலாறே சங்க இலக்கியங்களில் விரிவாக விளக்கப் பெறுகின்றது.
ஒருவர் வாழ்வில் மற்றவர் குறுக்கிட்டுப் பூசல் விளைக்கும் குழப்பநிலையைத் தடுத்து, மக்களுள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பிய குற்றமற்ற இன்பங்களை அடைதற்கு மேற்கொள்ளும் செயல் முறைகளே ‘புறத்தினை' எனப் போற்றப் பெறுவன. இப்புறவொழுக்கங்களை மேற்கொள்ளுதற்குரிய வரம்பு, ‘அரசியல்’ எனப்படும். இவ்வரசியல் வாழ்வில் நன்கு மதிக்கத் தக்க தலைவன், மன்னனாவான். மன்னனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாகிய கல்வி, வீரம், புகழ், கொடை என்னும் பெருமிதப் பண்பாடுகள் எல்லாம் நாட்டு மக்களுக்கும் இன்றியமையாதனவாம்.
நடுவு நிலையில் கின்று நாட்டினையாண்ட அரசன் மக்களால் இறைவனாக மதித்து வழிபடப் பெற்றான். கொடியவர்களால் துன்புறுத்தப்பட்டாரும், வறுமையால் வாட்டமுற்றாரும் ஆகிய பலரும் தம் குறைகளைச் சொல்லி நலம் பெறுதற்கு ஏற்ற முறையில் காட்சிக்கு எளியாகவும் இன்சொல்லுடையராகவும் பண்டைக் தமிழ் வேந்தர் விளங்கினர். அவர்கள் அரசியற்பாதுகாப்புக்காக நாட்டு மக்களிடமிருந்து பெறும் பொருள், விளைவதில் ஆறிலொன்றாகிய நிலவரியேயாகும். அதுவன்றி, நாடு காவலுக்கென மக்கள் தரும் சிறு தொகை ‘புரவு வரி’ என வழங்கப் பெறுவதாகும். வாணிபம் செய்பவர்பாற்பெறும் சுங்கப் பொருளும் பகைவர் தந்த திறைப் பொருளும் அரசாங்கத்திற்குரியனவாம். இப்பொருள்கள் நாட்டின் காவலுக்குரிய படைகளுக்கும், அரண் முதலிய பிற சாதனங்களுக்கும், நீர் நிலை பெருக்கல், பெருவழியமைத்தல், மன்றங்களில் நீதி வழங்கல், இளமரச் சோலை அமைத்தல் முதலிய
பொதுநல வளர்ச்சிக்கும் பயன்படுத்தப் பெற்றன. அரசனது செல்வம் அறனும் பொருளும் இன்பமும் என்ற மூன்று பொருளையும் நாட்டில் வளர்த்தற்கு உரியது.
அரசியற்கு உறுதி கூறும் இயற்றமிழ் வல்ல புலவர்களும், இசையால் மக்களுடைய மனமாசு கழுவி மகிழ்விக்கும் இசைத்தமிழ் வல்ல பாணர்களும், உழைத்து அலுத்த மக்களுக்கு உயர்க்க கதைகளை நடித்துக் காட்டி அவர்களை ஊக்கும் நாடகத்தமிழில் வல்ல பொருநர், கூத்தர், விறலி என்பாரும் தம் சிறந்த புலமைத் திறத்தால் மக்களால் வரிசை தந்து நன்கு மதிக்கும் உயர்ந்த பரிசுடையராதலின், இவர்களைப் ‘பரிசிலர்’ என்ற பெயரால் தமிழர் பாராட்டிப் போற்றுவாராயினர். பிணி முதலிய காரணங்களால் எத்தகைய தொழிலும் செய்து வாழ்தற்குரிய வசதி பெறாது வறுமையால் வாட்டமுற்றுப் பிறர்பால் இரந்துண்டு வாழும் எளியவர், ‘இரவலர்’ என்ற பெயரால் வழங்கப்படுவர். பகைவர் தந்த திறைப்பொருளைக் கலைச் செல்வராகிய பரிசிலர்க்கும் ஆற்றலற்ற எளியோராகிய இரவலர்க்கும் வரையாது கொடுத்தளித்தலைத் தமிழ்வேந்தர் தம் சிறப்பியல்பாகக் கொண்டிருந்தனர். பரிசிலர் தமக்குரிய கலைத்திறத்தில் திறமை பெற்று வந்தாலும், திறமையின்றி வந்தாலும், வறுமையான் வந்த அவர்தம் பசித் துன்பத்தை உணர்ந்து அருளுடன் பரிசில் தந்து பாராட்டுதல் தமிழ் வேந்தர்களின் கடமையாகக் கருதப்பட்டது.
தீயாரை ஒறுத்தலும், நடுவு நிலைமையுடையார்க்கு அருள் புரிதலும் ஆகிய நீதி முறையில் சோம்பலின்றித் தமிழ் வேந்தர் இடைவிடாதுழைப்பாராயினர். அதனால், மாந்தர் எல்லாராலும் வெறுப்பின்றிக் கண்டு போற்றும் இறைமை (தெய்வ)த் தன்மையுடையவராக வேந்தர் நன்கு
மதிக்கப் பெற்றனர். நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று கருதித் தம் மனம் போனபடி முறை பிறழ்ந்து நடக்கும் சிற்றினத்தாரைத் தம் ஆட்சிக் குழுவினின்றும் விலக்கினர் : நம் நாட்டிற்கெனப் போர்க்களத்தில் உயிர் வழங்குமியல்பினராகிய படை வீரர்களை வறுமையகற்றித் தம்மைப்போலப் பரிசிலர்க்கு வழங்கும் வண்மையுடையவராகப் பெரும் பொருள் தந்த ஆதரித்தனர். அதனால், அவ்வீரர்கள் போர் என்று கேட்பின் பகைவர் நாடுகள் எவ்வளவு தூரமாயிருந்தாலும் விரைந்து சென்று போரில் வெற்றி தந்தார்கள். போரில்லாது சும்மா இருத்தலில் வெறுப்படைந்த வீரர்கள், ‘எங்கள் வேந்தன் எங்களைப் போருக்கு எவாதிருத்தலால் யாங்கள் எங்களுக்குள்ளேயே போர் செய்து சாவேம்!’ எனக் கருதி நண்புடையர்களாகிய தங்களுள்ளே போர் செய்ய எண்ணுதலும் உண்டு. இவ்வாறு போரில் விருப்பமுடைய படைவீரர்களையுடைய தமிழரசர்கள் தாங்கள் எண்ணியபடியே தங்கள் நாட்டை வளம்படுத்தி உருவாக்கும் ஆற்றல் பெற்று விளங்கினார்கள். பெரு வெள்ளத்தால் உண்டாகும் பூசல் அல்லது மக்கள் ஐயோ என முறையிடும் பூசல்-நேராதபடி தம் நாட்டு மக்கள் அமைதியாக வாழும் வண்ணம் முறை செய்தார்கள். புலி தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல வேந்தர்களும் தங்கள் குடிமக்களைப் போற்றிப் பாதுகாத்தார்கள். ‘கொல்லுந் தன்மையுடைய யானைகளும், மனஞ் செருக்குற்ற குதிரைகளும், நெடுங்கொடியுடைய பெரிய தேர்களும், உள்ளத் திண்மை படைத்த போர் வீரர்களும் எனும் நாற் பெரும்படைகளால் வேந்தர் சிறப்புற்றிருப்பினும், அறநெறியை முதலாகக் கொண்டு நிகழ்வதே அரசரது வெற்றி யாகும்’, என்ற கருத்தினைப் புலவர்கள் வேந்தர்க்கு
அறிவுறுத்தினார்கள். தமக்குரியார் என்று கருதி அவர் செய்யும் கொடுங் தொழிலைப் பொறுத்து முறை பிறழாமலும், அயலார் என்று கருதி அவர்களுடைய நற்குணங்களைக் கெடாமலும், ஞாயிற்றையொத்த வீரமும் திங்களையொத்த அருளாற்குளிர்ந்த மென்மையும் மழையைப் போன்ற பெருவண்மையும் உடையவர்களாகி, வறுமை என்பதே தம் நாட்டில் இல்லையாக நெடுங்காலம் அரசு புரிந்தார்கள்.
தமிழ் வேந்தர் எல்லாரும் மக்களுக்குக் கண் என்று போற்றப்பெற்ற கல்வித் துறையிற் சிறந்த பயிற்சியுடையவராய் விளங்கினர். அறநூற்றுறையிலும், அவ்வறத்தின் வழிப்பட்ட அரசியல் நூலிலும், போர்த்துறையிலும் நிரம்பிய பயிற்சியுடையவராய் விளங்கினர். அரசியற் கல்வியிலன்றி இலக்கியத் துறையிலும் நிரம்பிய அறிவுடையராய்ச் செய்யுள் பாடும் சிறப்பமைந்த செந்தமிழ்ப் புலவராயும் விளங்கினர் என்பது பண்டைத் தமிழ் வேந்தர்கள் பாடியனவாயுள்ள சங்கச் செய்யுட்களால் இனிது புலனாம். வேந்தராற் பாடப்பெற்ற செய்யுட்களெல்லாம் அவர்தம் உள்ளத்திலமைந்த விழுமிய எண்ணங்களை வெளிப்படுத்தி நாட்டு மக்களை உயர்த்தும் நலமுடையனவாய்த் திகழ்கின்றன. தமிழ வேந்தர் சிறந்த கல்வியுடையராகவே, அவர் தம் கல்வி அவரால் ஆளப்பெறும் நாட்டு மக்கள் எல்லாருக்கும் பயன்படுவதாயிற்று. ‘ஒரு நாட்டு அரசியலுக்கு இன்றியமையாது வேண்டப் பெறுவது கல்வியே,’ என்பதனைத் தமிழ் மக்கள் நெடுங்காலமாய் உணர்ந்திருந்தார்கள். ஆசிரியர் திருவள்ளுவனார் பொருட்பாலில் இறைமாட்சியினை அடுத்து அரசனுக்கு இன்றியமையாத கல்வியினை வற்புறுத்துரைத்தலால், இவ்வுண்மை நன்கு தெளியப்படும். கல்வியுடையார் கருத்தின் வழியே அரசியலும்
நடைபெறுதல் வேண்டும் என அக்காலத் தமிழ் வேந்தர் எண்ணினர். கற்ற தமிழ்ப் புலவர்களைப் போற்றி, அவர்கள் அஞ்சாது கூறும் அறிவுரைகளை வெறுக்காது ஏற்றுக் கொண்டு, தமிழ் மன்னர்கள் தங்கள் தவறுகளைப்போக்கித் திருந்தி வாழ்ந்தார்கள். அரசன் பால் தவறு கண்டவிடத்து அவனை இடித்துரைத்துத் திருத்தும் உரிமை, அந்நாட்டில் வாழும் சான்றோர்களுக்கு உரியதாயிருந்தது. அக்கருத்தினால் அரசியல் வினைக்குழுவில் நாட்டிலுள்ள பெருமக்களுட் சிலரும் இடம் பெற்றிருந்து, குடிமக்களுடைய குறைகளை அவ்வப்போது அறிவித்து வருவாராயினர். ஐம்பெருங்குழுவில் ‘மாசனம்’ எனக் குறிக்கப்பட்டார் இத்கைய சான்றோரேயாவர்.
தமிழ் நாட்டில் தலைநகரங்கள் தோறும் அறங்கூறவையம் (நீதி மன்றம்) அரசர்களால் நிறுவப் பெற்றன. நாட்டிலுள்ள மக்களால் தீர்க்க முடியாத பெரிய வழக்குகளெல்லாம் இத்தகைய அறங்கூறவையத்தில் முடிவு செய்யப்படுவனவாம். இவ்வவையில் நீதி வழங்குதற்குரிய திறம் பெற்ற தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பு வேந்தனைச் சார்ந்ததாகும். அரசர்கள் நடு நின்று நீதி வழங்குதற்குரிய திறனுடையவர்களையே தேர்ந்து நியமித்தல் வழக்கம். இதன்கண் அமர்ந்து நீதி வழங்கும் முதியோர், இவ்வவையில் நுழைவதற்குமுன்னரே தம் உள்ளத்தமைந்த பழைய பகைமையினையும் மாறுபாட்டினையும் நீக்கிப் புகுவர். இத்தகைய நீதி மன்றங்கள் சோழர் தலைநகராகிய உறையூரிலும், பாண்டியர் தலைநகராகிய மதுரையிலும் அரசர் ஆதரவில் நிகழ்ந்தன. இவையேயன்றி, முறை வழங்கும் அவைகள் சிற்றார்களிலும் நிறுவப்பட்டிருந்தன. இவ்வவையின் இயல்பினை எட்டுவகை
நுதலிய அவையம்’ எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவர். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்னும் எட்டு வகைப் பண்புகளாலும் நிரம்பிய தகுதியுடையவர்களே இவ்வவையில் நீதி வழங்கும் பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள்.
ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர், குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதான் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர்மன்றத்தார், அக்கொடியோனை மரத்திற் பிணித்து அவன் தலையிற் சாம்பலைக்கொட்டி அவமானப்படுத்தித் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனார் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அகம். 256) குறிப்பிடுகின்றார். இந்நிகழ்ச்சியால் ஊர்ச் சபையார்க்குத் தம்மூரில் நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ் வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாம். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர் மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர்.
இரவிற் கள்வர் முதலியவர்களால் மக்களுக்குக் தீங்கு நேராதபடி ஊர்தோறும் ஊர் காவலர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நடுவு நிலைமையும் அருட்குணமும் வினையாண்மையுமுடையவர்களையே அரசர்கள் தங்களுக்கு அமைச்சர்களாகத் தேர்ந்துகொண்டார்கள். நடுவு நிலைமையைக் கைவிட்டு நீங்கி, அருளில்லாத அமைச்சன் தான் விரும்பியதைச் சொல்ல, அது கேட்டு மன்னன் முறை பிறழ்ந்து நடப்பானானால், அவனது கொடுங்கோல் ஆட்சியின் வெம்மையினாற் குடிமக்கள் பெரிதும் வெதும்பித்
துன்புறுவர் என்பதனை அக்காலத் தமிழ் வேந்தர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.
தமிழ் வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுளது. நகரங்களின் புறத்தே காவற்காடும், அதனை அடுத்து ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும் அரண்களாகக் கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிருந்து எய்தற்குரிய போர்க்கருவிகள், மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற் சுண்ணாம்புச் சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையுமுடையனவாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர் செய்தற்குரிய அறைகள் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. ‘ஞாயில்’ என்னும் பெயரால் இலக்கியங்களிற் சொல்லப்படுவன இவ்வறைகளேயாம். இவ்வறைகளில் நின்று வீரர்கள் செலுத்தும் அம்புகள் புறத்தே பகைவர் மேற்படும்படியாகவும், வெளியே நின்ற பகைவர் செலுத்துவன உள்ளே புகாதபடியும் உள்ளே அகன்றும் உயர்ந்தும் வெளியே குறுகித் தாழ்ந்தும் அமைந்த துளைகள் மதிலின்கண் அமைக்கப்பட்டன. இவற்றை ‘ஏப்புழை’ என்பர். (ஏ-அம்பு ; புழை - துளை. எப்புழை அம்பு செலுத்தும் துளை) செய்துகொள்ளப்பட்ட இவ்வரண்களேயன்றி, இயற்கையாய் அமைந்த மலைகளையும், காடுகளையும், கடத்தற்கரிய நீர் நிலைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் நாட்டிற்குரிய அரண்களாகக் கருதினார்கள். வேந்தரால் நன்கு மதிக்கப்பட்டு
‘வேள்’ எனவும்,‘அரசு’ எனவும் சிறப்பெய்திய படைத்தலைவர்கள், தங்கள்பாற் பயிற்சி பெற்ற போர் வீரர்களுடன் போருக்குரிய இலக்குகளாகிய மலைப்பக்கங்களில் தங்கி, அந்நிலப் பகுதிகளைக் காவல் புரிந்தார்கள். பிற நாட்டார் தமிழகத்தின்மேற்படையெடுத்து நுழையாக படி அவர்களைத் தடுத்துப் பொருதழித்தற்குரிய படை வீரர், இம்மலைப் பகுதிகளில் வேந்தர்களின் ஆணையால் தங்கியிருந்தனர். பாரியின் முன்னோர் பறம்பு மலையையும், பேகனுடைய முன்னோர் பொதினி மலையையும், நள்ளியின் முன்னோர் தோட்டி மலையையும், ஆய் அண்டிரன் குடியினர் பொதிய மலையையும், காரியின் முன்னோர் முள்ளூர் மலையையும், ஓரியின் முன்னோர் கொல்லி மலையையும், அதியமான் குடியினர் குதிரை மலையையும், நன்னன் முன்னோர் நவிர மலையையும் தமக்குரிய தலைமை இடங்களாகக்கொண்டு படையொடு தங்கினமை உய்த்துணர்தற்கு உரியதாம்.
வேந்தரால் நன்கு மதிக்கப்பெற்ற இப்படைத்தலைவர்கள், வேந்தரது ஆணையால் தாங்கள் தங்கிய நிலப்பகுதிகளின் வருவாயைப் பெற்றுத் தங்களுக்குரிய சிறு நிலப்பகுதிகளை ஆளும் குறு கிலமன்னர்களாய் அமைந்து, மூவேந்தர் ஆணையின்கீழ் அடங்கி வாழ்ந்தார்கள். தமிழ் வேந்தர்க்குப் போர்க்காலங்களில் படைத்துணையாய் நின்று உற்றுழியுதவுவதே இக்குறுநிலமன்னர்களின் கடமையாகும். பெருநில வேந்தராகிய சேர சோழ பாண்டியர்களும், அவர்க்குப் படைத்துனே செய்யும் கடமை மேற்கொண்ட இக்குறுநிலமன்னர்களும் ஒற்றுமை உடையவர்களாய் நின்று தமிழகத்தைக் காவல் புரிந்து வந்தமையால், தமிழர் அரசியல் பிற நாட்டாரால் சிதைக்கப்படாது உரிமையோடு வளர்வதாயிற்று.
தன்கண் வாழ்வார் அனைவரும் பசி நீங்கி வாழ்வதற்கேற்ற குறையாத உணவுகளையுடையதே நாடெனச் சிறப்பிக்கப்படும். இவ்வுணவின் மூலமாக நிலை பெறுவதே உடம்பாகும். அதனால், பசித்தார்க்கு உணவளித்தார், உயிர் கொடுத்தார் எனப் போற்றப் பெறுவர். உணவென்பது நிலத்துடன் கூடிய நீரால் விளைவதாகும். பிற உணவுகளை விளைவித்தற்குக் காரணமாகித் தானும் உணவாய்ப் பயன்படுவது நீராகும்.
ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளிற் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நீர் நிலைகளிற்பாய்ச்சிப் பண்டைத் தமிழ் வேந்தர் நாட்டை வளம்படுத்தினர். சோழர் பெருமானாகிய கரிகால் வளவன் காவிரிக்குக் கரைகட்டி, அதன் நீர் பல கால்கள் வழியாக நாடெங்கும் பாய்தற்குரியதாக வளம்படுத்திய வரலாறு சிறப்பாகக் கருதற்குரியதாம். நெல் முதலிய விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்து இருத்தலாற் பயனில்லையென உணர்ந்த சோழ மன்னர்கள், சிறப்பாகத் தங்கள் நாடு முழுவதும் ஏரி முதலிய நீர் நிலைகளை எங்கும் உண்டாக்கி உணவுப் பொருளை நிறைய விளைவித்து, தங்கள் நாட்டைச் செல்வம் நிறைந்த நாடாக்கி, ‘வளவர் ' என்னும் சிறப்புப் பெயரினைத் தங்களுக்கே உரியதாகப் பெற்றார்கள். ஆற்று வசதியின்றி மழை நீரையே எதிர்பார்த்திருக்கும் நிலப்பகுதிகளிற் பள்ளங்கண்ட இடங்களிலே ஏரிகளை வெட்டியமைத்து, மழை நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, அங்கீரை வேளாண்மைக்குப் பயன்படுத்தினார்கள். உரிய காலத்தில் மழை பெய்யத் தவறினாலும், முன்னர்ப் பெய்து நீர் நிலைகளில் தேங்கிய நீரால் பருவகாலத்தே
பயிர் செய்யும் ஒழுங்கு முறை தமிழ் நாட்டில் நிலைபெற்றிருந்தது.
பாண்டிநாடு மழையினை எதிர்பார்த்துப் பயிர் செய்யும் இயல்புடையதாகும். இவ்வியல்பினையுணர்ந்த குட புலவியனார் என்னும் புலவர், பாண்டியன் நெடுஞ்செழியனையடைந்து, நாடெங்கும் நீர் நிலைகளைப் பெருக்கவேண்டிய இன்றியமையாமையைப் பின் வருமாறு அரசனுக்கு அறிவுறுத்தினர்:
வேந்தே, நீ மறுமையுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினாலும், ஏனைய வேந்தரது தோள் வன்மையைக் நெடுத்து நீ ஒருவனுமே தலைவனாதலை விரும்பினாலும், இவ்வுலகத்தே நல்ல புகழை நிலைநிறுத்த விரும்பினாலும், அவ்விருப்பத்திற்குத் தகுந்த செயல் முறையினைச் சொல்கின்றேன் ; கேட்பாயாக : நீரை இன்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவராவர். உடம்பு அவ்வுணவை முதலாகவுடையதாகும். உணவென்று சொல்லப்படுவது, நிலத்தொடு கூடிய நீர், நீரையும் நிலத்தையும் ஒரிடத்திற் கூட்டினவர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவார்கள். விதைகளை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் நாடு, விரிந்த நிலப்பரப்பை உடையதாயினும், தன்னை ஆளும் அரசனது முயற்சிக்குச் சிறிதும் பயன்படாது. ஆதலால், இதனைக் கடைப்பிடித்துப் பள்ளமாகிய இடங்களிலே விரைந்து நீர் நிலைகளை இயைவித்தவர், மறுமைச் செல்வமும் வெற்றித் திருவும் புகழும் ஆகிய மூன்றனையும் தம் பெயருடன் சேர்த்து நிலைபெறுத்தினாராவர். அவ்வாறு நீர்நிலைகளைத் தோண்டாது சோம்பியிருந்த மன்னர், இவ்வுலகத்துத் தம் பெயரை நிலைபெறுத்துதலில்லை.” என்பது புலவர் கூறிய அறிவுரையாகும்.
இவ்வறிவுரை நீர் நிலை பெருக்குதலின் இன்றியமையாமையை இனிது புலப்படுத்தல் காணலாம்.
வேந்தர் அரசு முறைக்கெனத் தம் குடிமக்களிடம் பெறுதற்குரிய வரிப்பொருளை மக்களது வருவாய் நிலைக்கேற்பப் பெற்று வந்தனர். நாட்டில் மழை முதலியன இன்றிப் பஞ்சம் நேர்ந்த காலத்துத் தாம் பெறுதற்குரிய பொருளை வலிந்து பெறாது, வறுமை நீங்கி நாடு செழித்த காலத்துப் பெற்றுக்கொண்டார்கள். அறிவுடைய வேந்தர் நெறியறிந்து வரி பெறும் முறை இதுவேயாம். இவ்வரிசை முறையினை உணராத அரசியல் அதிகாரிகளால் சில சமயங்களில் மக்களுக்குத் துன்பம் நேர்தலும் உண்டு. அத்துன்பக் காலத்தில் நாட்டிலுள்ள பெருமக்கள் அரசனை அடைந்து, நாட்டு மக்களது நிலைமையினை எடுத்துரைத்து, அரசன் உள்ளத்தை நன்னெறிக்கண் நிறுத்தினார்கள்.
பாண்டியன் அறிவுடை நம்பி ஆட்சியில் வரிசையுணராத அரசியல் அதிகாரிகளுள் சிலரது தூண்டுதலால் மக்களிடத்து அன்பு கெட வரிகொள்ளும் பழக்கம் ஆங்காங்கே தோன்றுவதாயிற்று. அதனையுணர்ந்த பிசிராந்தையார் என்னும் பெரும்புலவர் பாண்டியனை அணுகினார். அறிவுடைய வேந்தன் நெறியறிந்து வரி பெறும் முறையினை மன்னனுக்கு விளங்க அறிவுறுத்தல் வேண்டுமென எண்ணிய அப்புலவர், அறிவுடை நம்பியை நோக்கிப் பின்வருமாறு கூறுவாராயினர்:
“நன்றாக முற்றி விளைந்த நெல்லையறுத்து யானைக்கு நாள்தோறும் இவ்வளவென்று அளவு செய்து கவளமாகக் கொடுத்து வந்தால், ஒருமாவிற் குறைந்த சிறிய நிலத்தின் நெற்கதிரும் ஒரு யானைக்குரிய பல நாளைய உணவாகப்
பயன்படுவதாம். நூறு வேலியளவுள்ள பெருநிலப் பகுதியாயினும், அதன்கண் யானையானது இவ்வாறு முறையாகப் பெறும் கவளத்தை விரும்பாது தானே புகுந்து தனித்து உண்ணத் தொடங்குமானால், யானை வாயின் கண் உணவாய்ப் புகுந்த நெல்லைவிட, அதன் கால்களாற் சிதைவது பெரும்பகுதியாகும். அவ்வாறே அறிவுடைய அரசன் மக்கள்பால் வரிபெறும் முறையை அறிந்து வரிகொள்வானாயின், அவனுடைய நாடு அவனுக்குக் கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்துக் கொடுத்துத் தானும் செல்வச் செழிப்புடையதாய் வளர்ச்சி பெறும். வேந்தன் அறிவின் திண்மை இல்லாதவனாகித் தரம் அறியாத அமைச்சர் முதலிய சுற்றத்துடன் கூடி அன்புகெடக் கொள்ளும் வரிப்பொருளை விரும்பித் தவறு செய்வானாயின், யானை புகுந்த நிலம் அவ் யானைக்கும் நிலைத்த உணவினைத்தாராது தானும் அழிவது போல, அவனும் உண்ணப் பெறான் ; குடிமக்கட்கும் வருத்தம் மிக, நாடு சிதையும்.”
புலவர் கூறிய பொருளுரையினைக் கேட்ட பாண்டியன், நாட்டு மக்கள்பால் பொருள்பெறும் நெறியறிந்து வரிப்பொருளை வாங்கும் அறிவுடைய வேந்தனாய் விளங்கினான். சான்றோர் கூறும் அறநெறியினைக் கடைப்பிடித்தொழுகும் இயல்பினை நன்குணர்ந்த மாந்தர், 'பாண்டியன் அறிவுடை நம்பி’ என அவனைப் பாராட்டிப் போற்றுவாராயினர்.
பாண்டியர் தென்கடற்கரையில் வாழும் நெய்தனில மக்களாகிய பரதவர்களைப் போரிற்பயிற்றித் தமக்குரிய படை வீரர்களாக்கிக் கொண்டார்கள் என மதுரைக்காஞ்சி என்னும் பாட்டுக் கூறும். சேரமன்னர்கள் தளர்ந்த
குடிமக்களுக்குப் போர்ப் பயிற்சி தந்து அவர்களைப் படை வீரர்களாக்கி வெற்றி கொண்டார்களென்பதைப் பதிற்றுப் பத்து என்னும் நூலால் அறியலாம்.
நுகர்தற்குரிய பொருளில்லாமை வறுமையாகும். இவ்வறுமையின் விளைவாக நாட்டிற் பசியும் பிணியும் தோன்றி மக்களை வருத்துவனவாம். பசியினால் விளையும் துன்பத்தினையும் அப்பசிப் பிணியைத் தணித்தற்குரிய வழிதுறைகளையும் தமிழறிஞர்கள் இடைவிடாதாராய்ந்து, பசிப்பிணியை நீக்குதற்குரிய வழி துறைகளை வகுத்துக் கூறியுள்ளார்கள். நற்குடிப் பிறப்பினையும், நல்லொழுக்கத்தாற்பெறும் சிறப்பினையும், கல்வியறிவினையும், பழி பாவங்களுக்கு அஞ்சுதலாகிய நாணத்தினையும், உடம்பின் அழகினையும் சிதைத்தழிப்பது பசி நோயாகும். இவ்வாறு மக்களுடைய உணர்வொழுக்கங்கள் எல்லாவற்றையும் அழித்தல் இப்பசியின் இயல்பாதலின், இஃது ‘அழிபசி’ எனப்பட்டது. இப்பசித் துன்பம் நாட்டில் தோன்றாத படி காத்தல், அரசியலின் முதற்கடமையாகும். மிக்க பசியினால் உடலிற் பிணியும் உள்ளத்திற் பகைமை உணர்ச்சியும் தோன்றுதலியல்பு. பசியும் பிணியும் பகையும் நீங்கி, மக்களெல்லாரும் அன்பினாற்கூடி வாழ்வதற்கேற்ற வளமுடைமையே ஒரு நாட்டின் சிறப்பியல்பாகும். உணவினை நிறைய விளைவிக்கும் ஆற்றல் பெற்றார் உழவராவர். வாழ்க்கைக்கு வேண்டும் ஏனைய பொருள்களெல்லாவற்றையும் இயற்றித் தர வல்லவர் தொழிலாளராவர். தம் முயற்சியால் தம் நாட்டிலுள்ள பொருளைப் பிற நாட்டிற்கு அனுப்பியும், பிற நாட்டிலுள்ளவற்றைத் தம் நாட்டிற் கொண்டு வந்தும், கடல் வழியாகவும் தரைவழியாகவும் வாணிகஞ்செய்து பொருளீட்டுவார் வணிகர்.
மக்கள் தங்கள் உள்ளத்து நடுவு நிலைமையுடன் தங்களுக்குரிய தொழில்களைப் பெருக்கித் திருந்திய வாழ்வு நடத்தற்குரிய நல்லறிவு வழங்கும் அறிவான் நிறைந்த பெரியோர் ‘அறிவர்’ எனப் போற்றப் பெறுவர். இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் தொழில்களிற்றளராது உழைத்து வந்தமையால், தமிழர் வாழ்வு நாகரிக முறையில் நலம் பெற்று வளர்வதாயிற்று.
மக்கள் எல்லாரும் தங்களுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொழில் செய்து வாழ்தற்குரிய முறையில் ஆட்சி முறை நிகழ்தல் வேண்டுமென்பது தமிழறிஞர் உட்கோளாகும். ‘ஒரு தொழிலுமின்றிப் பிறரிடம் கையேந்திப் பிச்சையேற்றுண்பதே ஒரு சிலருடைய தலையெழுத்தாகக் கருதும்படி ஒரு நாட்டின் அரசு முறை அமையுமானால், அம்முறையற்ற செயலை வகுத்தவனாகிய அரசியற்றலைவன் அழிந்தொழிவானாக! [1]’ என வையும் அறிவாற்றல் அக்காலத் தமிழ்ப் புலவர்பால் நிலைபெற்றிருந்தது. தொழிற்றிறமே மக்களது உயிராற்றலாகும். ஒரு தொழிலும் செய்யாத சோம்பர், உயிரற்ற பிணம் போல இழித்துரைக்கப்பட்டனர்.
பயிர்த்தொழிலும், நெசவு தச்சு முதலிய பிற கைத் தொழில்களும், வாணிகமும் ஆகிய இவையே பொருள் வருவாய்க்குரிய தொழில்களாம். உடல் உழைப்பினால் மேற்கொள்ளுதற்குரிய இத்தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் செய்ய விரும்பாது, உள்ளத்துணர்வால் மேற் கொள்ளுதற்குரிய அறிவுத் துறையில் ஈடுபட்டுழைப்பவர் புலவர், பாணர், பொருநர், விறலியர் முதலியோராவர்.
இயற்றமிழ் வல்லவர் புலவர்; இசைத்தமிழ் வல்லவர் பாணர்; ஒருவரையொத்து நடிப்பவர் பொருநர் ; ஒரு வரலாற்றை நடித்துக்காட்டுபவர் கூத்தர் ; உள்ளக்கருத்துக்கள் தம் உடம்பின்கண் நிகழும் மெய்ப்பாடுகளினால் விளங்கித் தோன்றும்வண்ணம் விறல்பட ஆடும் மகளிர் விறலியர். இவர் எல்லாரும் தாம் கற்றுவல்ல கலைத்திறத்தால் மக்களுடைய மனப்பண்புகளை வளர்ப்பதனையே தம்முடைய நோக்கமாகக்கொண்டு வாழ்ந்தனர். மேற்குறித்த புலவர் பாணர் முதலியவர் கலைத்துறையிலே கருத்தைச் செலுத்த வேண்டியிருத்தலால், பொருளீட்டுதற்குரிய மெய்ம்முயற்சியில் ஈடுபட்டு உழைத்தற்குரிய ஆற்றலற்றவராயினர். இவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் வழங்கிப் போற்றுவது மக்களது கடமையாகக் கருதப்பட்டது.
கலைவாணர் தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் முயற்சியிற் கருத்தினைச் செலுத்துவராயின், தமக்குரிய கலைத்துறையில் முழுதும் திறமையடைதல் இயலாது. ஆகவே, தெள்ளிய அறிவினராகிய இக்கலைவாணர்களுக்கும் பொருட்செல்வத்திற்கும் ஒரு சிறிதும் தொடர்பில்லாமையே உலகியலாய் அமைவதாயிற்று. அறிவுச் செல்வத்தை ஈட்டும் ஆர்வத்தால் பொருட்செல்வத்தை நெகிழ விடுதல் புலவர் முதலியோரியல்பாகும். பொருட்செல்வத்தைத் தேடும் முயற்சியால் அறிவுத்துறையிற் கருத்தின்றி ஒழுகுவது பொது மக்கள் இயல்பாகும். இவ்விரு வகையான உலக இயல்பினைத் ‘திருவேறு ; தெள்ளியராதலும் வேறு,’ என வரும் திருக்குறளால் அறிக.
கலைவாணர்களின் கல்வியை மதித்துப் பரிசில் தந்து பாராட்டுதலைத் தமிழ்மக்கள் தங்கள் கடமையாக எண்ணினார்கள். செல்வனொருவனை அடைந்து, எனக்கு ஒரு
பொருளினே ஈவாயாக’ என இரந்து நிற்றல் இழி செயலாகக் கருதப்பட்டது. இரவலர் தம்மைப் பணிந்து வேண்டுதற்கு முன்னரே அவர்தம் உள்ளக்குறிப்பறிந்து வேண்டுவன கொடுத்துச் சிறப்பித்தல் செல்வர்க்குரிய உயர்ந்த செயலாகப் போற்றப்பெற்றது. இல்லையென்று இரப்பார்க்கு ஒரு பொருளையும் கொடாது அனுப்புதல் மிகவும் இழித்ததென அறிஞர் அறிவுறுத்தினர். இரப்பார்க்கு இல்லையென்றுரைக்கும் இழிநிலை தம் வாழ்க்கையில் நேராதபடி தமிழர் பொருளீட்டுதலிற் கருத்தைச் செலுத்தினர்; அருஞ்சுரமும் பெருமலையும் கடலுங் கடந்து வேற்றுமொழி வழங்கும் நாடுகளிற் சென்றும் பெரும் பொருள் தொகுத்தனர்; ‘தம் முன்னோர் தொகுத்து வைத்த பொருளைச் செலவழித்து உண்டுடுத்துச் சோம்பியிருக்கும் உள்ளமுடையார் உயிருடையர் அல்லர்’, என்பது தமிழர் கொள்கை. தம் முயற்சியால் ஈட்டப்பெற்ற பொருளைக்கொண்டே மணஞ்செய்துகொள்ளுதல் தமிழர் வழக்கமாகும். இக்கருத்தினால் திருமணத்தை முன்னிட்டுப் பொருள் தேடச் செல்லுதல், ‘வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிதல்’ எனக் குறிக்கப் பெறுகின்றது. மனைவி மக்கள் முதலியவர்களைப் பிரிந்து கணவன் பொருள் தேடச் செல்லுதலைப் ‘பொருள்வயிற்பிரிவு’ என இல்லறக் கடமைகளுள் ஒன்றாக அகப்பொருள் நூல்கள் சிறப்பித்துரைக்கின்றன.
“உலகினை ஆளும் பெருவேந்தனுக்கும் இரவும் பகலும் உறக்கமின்றி வேட்டை மேற்கொண்டு திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் உணவு நாழி அரிசியே ; உடுத்தற்குரிய ஆடைகள் இரண்டே ; ஏனைய நுகர்ச்சி முறைகள் யாவும் இவ்வாறு ஒத்தனவேயாம்
ஆகவே, ஒருவன் உலகத்தில் மற்றையவரினும் நிறையப் பொருளீட்டியதன் பயனாவது, இல்லையென்றிரப்பார்க்குத் தன்னலங்கருதாமல் கொடுத்து மகிழ்தலேயாம். செல்வத்தை யாமே நுகர்ந்து மகிழ்வேம் எனச் செல்வர் கருதுவாராயின், அதனால் வரும் தவறுகள் பலவாம்.” எனத் தமிழறிஞர் அறிவுறுத்துவாராயினர். அதனால், தமிழ் நாட்டில் வாழும் வேந்தர் முதல் தொழிலாளர் ஈறாக எல்லாரும் தம் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு, கலை வளர்க்கும் பரிசிலர்க்கும் வறுமையால் வாடும் இரவலர்க்கும் இல்லையென்னாது ஈந்து மகிழ்தலையே வாழ்க்கையில் தாம் பெறும் பேரின்பமாகக் கருதினர்.
கலைவாணர் தாம் கற்ற கல்வியினை உணர்ந்து பாராட்டும் நல்லறிவுடைய செல்வர்களை நாடிச் சென்று தம் கலைத் திறத்தால் அவர்களை மகிழ்வித்தனர்; பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவையினைப் போன்று, அருளாற் கனிந்தவுள்ளமுடைய செல்வர்களை அடைந்து, அவர்கள் தம் வரிசையறிந்து தரும் பரிசிற்பொருளைப் பெற்றுக் தம் சுற்றத்தாரைப் பாதுகாத்தனர். தாம் பரிசிலாகப் பெற்ற பொருளை இறுகச் சேர்த்துவைக்குமியல்பு அவர்கள்பால் இல்லை. வறுமையின் கொடுமையினை நன்குணர்ந்த அவர்கள், தம்மைப் போன்று பிறர்படுந் துயர்க்கிரங்கித் தம்பாலுள்ள பொருளை மனம் விரும்பி வழங்கும் இயல்புடையராயிருந்தனர். மக்களது நன்மதிப்பாகிய வரிசை பெறுதலையே வாழ்க்கைப் பேறாகக் கருதி வாழும் புலவர்கள், பிறர்க்கு எத்தகைய தீங்கும் எண்ணாத தூயவுள்ளம் படைத்தவர்களாவர். தாங்கள் கற்று வல்ல கலைத்துறைகளில் மாறுபட்டாரை வென்று தலை நிமிர்ந்து செல்லும்
பெருமிதமுடைமையினையே புலவர்கள் தங்கள் பேறாகக் கருதினார்கள். அதனல், நாடாளும் பெருந்திருவெய்திய வேந்தரையொத்த தலைமையும் அவர்கள்பால் நிலைபெறுவதாயிற்று.
வள்ளல்களால் ஆதரிக்கப்பெற்ற புலவர், பாணர், கூத்தர், பொருநர், விறலியர் என்னுமிவர்கள், தங்களை ஆதரித்த பெருவள்ளல்கள்பால் தாங்கள் பெற்ற பெருஞ் செல்வத்தைத் தங்களைப் போன்ற ஏனைப் பரிசிலர்களும் பெற்று மகிழும்படி அவ்வள்ளல்களிடம் வழி கூறி அனுப்புவார்கள். இப்படி வழி கூறி அனுப்பும் முறை ‘ஆற்றுப் படை’ என வழங்கப் பெறும்.
ஊண், உடை, உறையுள் என்பவற்றை நாடிப் பெறும் முயற்சி, வாழ்க்கையின் முதற்படியாகும். வயிறார உண்டு மகிழ்தலே எல்லாருடைய விருப்பமுமாகும். அருளும் ஆற்றலும் நிரம்பிய பெருவள்ளல்கள் பசியால் துன்புறும் எளியவர்களுக்கு வேண்டும் உணவளித்து அவர்களை ஊக்கத்துடன் உழைக்கும் கல்லுணர்வுடையவர்களாகச் செய்தார்கள். தங்களை அடைந்தவர்களுடைய வயிற்றுப் பசியைத் தணித்தலே இவ்வள்ளல்களின் வாழ்க்கைக் குறிக்கோளாய் அமைந்தது. பரிசிலர் சுற்றத்துப் பசிப் பகையாகி விளங்கிய இவ்வள்ளல்களை நாடாளும் மன்னர்களும் பாராட்டிப் போற்றினர்கள். சோழன் குள முற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவன் ஆட்சியில் சோழநாட்டிலுள்ள சிறுகுடி என்னும் ஊரின் தலைவனாய் விளங்கிய பண்ணன் என்பான், பசியால் வருந்தி வரும் எளியவர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்துப் போற்றி வந்தான். பிறர் வறுமை நோக்கி உதவும் பண்ணனது பேரறச் செயலை வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவன் கேள்வியுற்றான்; பண்ணன் வாழும் சிறுகுடிக்குச் சென்று
அவனுடைய நல்லறச் செயலைப் பாராட்டி மகிழ வேண்டுமென எண்ணித் தானும் ஒரு பரிசிலன்போல அவனுடைய சிறுகுடிக்குப் புறப்பட்டுச் சென்று, அவ்வூரின் எல்லையை அடைந்தான். புது வருவாயையுடையதாகிப் பழுத்தமரத்தின்கண்ணே பறவைக்கூட்டம் ஒலித்தாற்போன்று பண்ணனது மனையிற் பெருந்திரளாகக் கூடியுண்ணும் மக்களின் ஆரவாரம் அவ்வூருக்கு நெடுந்தொலைவிலேயே கேட்டது. மழை பெய்யுங் காலத்தை முன்னறிந்து தம் முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு செல்லும் சிறிய எறும்புகளின் வரிசையைப் போன்று, பண்ணன் வீட்டில் பெரிய சுற்றத்தினருடன் கூடியுண்ட சிறு பிள்ளைகள் அடுத்த வேளைக்குப் பயன்படும்படி தங்கள் கைகளிலே சோற்றுத் திரளைக் கொண்டு செல்லும் அழகிய தோற்றத்தினைக் கிள்ளி வளவன் தன் கண்ணாரக் கண்டான். பண்ணன் இரவலர்பால் வைத்த அருளுடைமையை எண்ணி மனமுருகிய மன்னன்.; “யான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக!” என வாழ்த்தினான் [2]. ஒருவருடைய இயல்புகளையெடுத்து வாழ்த்துவோர், ‘ஆயிரம் வெள்ளம் வாழ்க!’ என்றது போலத் தம் மனம் விரும்பிய அளவு வாழ்த்துதல் உலகியலிற் பெரும்பாலும் நிகழும் வாழ்த்தியல் முறையாம். மக்கள் கருவாய்ப் பதிகின்ற அன்றே அவர்களுக்குரிய வாழ்நாளும் வரையறை செய்யப்பெற்றதாதலின், அதற்கு, இழலும் பல்லாண்டுகள் வாழ்கவென வாழ்த்துதல் பொருந்தாதெனவுணர்ந்த புலவர் சிலர், “ஊழால் நினக்கு வரையறுக்கப்பட்ட நாள் முழுதும் இனிதாக இருப்பாயாக” என வாழ்த்துதலும் உண்டு. இவ்விருவகை
வாழ்த்துக்களிலும் வாழ்த்துவார்க்கு வரும் இழப்பெதுவுமில்லை. ஆனால், பசிப்பிணி மருத்துவனாய் விளங்கிய பண்னனை வாழ்த்தக் கருதிய கிள்ளி வளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ்நாட் பகுதியில் இதுகாறும் கழிந்தனபோக, இனி எஞ்சியிருக்கின்ற நாளையும் பண்ணன் தன் வாழ்நாட்களுடன் சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்தினான். இச்செயல், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாகிய பண்ணனது ஈகைத் திறத்தையும், அவன் அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளமுருகிய வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவனது விரிந்த உள்ளத்தின் உயர்வையும் நன்கு தெளிவிப்பதாகும்) நாட்டிற்கு நலஞ்செய்து வரும் மக்களை அறிந்து பாராட்டுதல் அக்காலத்துத் தமிழ் மன்னர்களின் கடமையாய் அமைந்ததென்பதனை இவ்வரலாறு தெளிவுபடுத்துதல் காண்க.
"இப்பிறப்பிற் செய்த அறங்கள் மறுமைக்குப் பயன் தரும்’, எனக் கருதி அறஞ் செய்யும் முறை ஒரு வகை வாணிகமுறையாகவே கருதப்படுமென்பது அறிவுடையார் கொள்கை. பொருள் கொடுத்து அறத்தைப் பெறும் இந்நோக்கம் உயர்ந்த குறிக்கோளெனக் கருதப்படவில்லை. வறுமையான் வருந்துவார்க்கு வேண்டுவன தந்து ஆதரிப்பதனையே அக்காலத் தமிழ்ச் செல்வர்கள் தங்கள் கடமையாக மேற்கொண்டிருந்தார்கள். குளிரால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை அளித்த பேகனும், தான் படர்தற்குரிய கொழுகொம்பில்லாது தளர்ந்த முல்லைக்கொடி படர்தற்குத் தன் தேரினை வழங்கிய பாரியும், இரவலர்க்குக் குதிரையும் நாடும் கொடுத்தளித்த மலையமான் திருமுடிக்காரியும், தனக்குக்கிடைத்த நீலநிறத்தையுடைய உடையினை ஆலமர் செல்வன் திருமேனிக்கணிந்து வழிபட்ட ஆய் என்பானும்,
யாவரானும் அணுகுதற்கரிய மலையின் உச்சியிலே அமைந்த கருநெல்லியினது அமிழ்தின் தன்மையுடைய பழத்தைத் தானே உண்டு நெடுநாள் வாழ விரும்பாது ஒளவையாரை உண்பித்த அதியமான் நெடுமானஞ்சியும், தம்முள்ளத்து நிகழும் எண்ணங்களை மறையாது கூறி நட்புச் செய்யும் பரிசிலர்க்கு அவர் மனையறம் நிகழ்த்துதற்கு வேண்டும் பொருளை நாடோறும் கொடுத்து மகிழ்ந்த நள்ளியும், தன் நாட்டின் நிலங்களைக் கூத்தர் முதலிய இரவலர்க்குக் கொடுத்து மகிழ்ந்த ஒரியும் ஆகிய இவ்வேழு வள்ளல்களும், நல்லியக்கோடன், நன்னன் முதலிய பிறரும் இரவலர்க்கு அளித்தலாகிய கொடைப் பாரத்தைத் தம்மேற்கொண்டு புலவர் பாடும் புகழுடையவர்களாய் விளங்கினார்கள். அதனால், ‘இல்லோர் செம்மல்’ என்றும், ‘இல்லோர் ஒக்கற் றலைவன்’ என்றும் மக்களால் வழங்கப் பெறும் மாண்பு இத்தகைய செந்தமிழ் வள்ளல்களுக்கே சிறப்பாக உரியதாயிற்று.
பிறரை ஏவும் முறையில் நீண்ட ஆணை மொழிகளைப் பேசுதலும், தாம் விரும்பிய இடங்களுக்கு நினைத்த மாத்திரத்திலே விரைந்து செல்லுதற்குரிய ஊர்திகளை ஏறி நடத்துதலும் செல்வத்தின் சிறப்பென அறிவில்லாதார் எண்ணியொழுகுவர். தம்மையடைந்தார் படும் துன்பத்திற்கு அஞ்சி அவர்கட்கு வேண்டுவன அருளும் இரக்கமுடைமையினையே பண்டைத் தமிழ்ப் புலவர் செல்வமெனப் பாராட்டினர். (நற்றிணை - 210)
மலை, சுரம், காடு, நாடு, கடற்கரை என்னும் நிலப் பகுதிகளுள் ஒன்றிற்பிறந்து, அங்கேயே தங்கியிருந்து வாழ்க்கை நிகழ்த்துபவர்கள் அவ்வந்நில மக்களாவார்கள். குறிஞ்சி நிலத்தவர் வழிபடும் தெய்வம் முருகன்.
மலைவாணர் மலையிலுள்ள மரங்களை அழித்து அங்கே ஐவனம் (மலைநெல்), தினை முதலியவற்றை விதைத்து, அருவி நீர் பாய்ச்சி, விளைவிப்பார்கள். ஆடையின்பொருட்டுப் பருத்தியைப் பயிரிடும் பழக்கமும் மலைவாணர்க்கு உண்டு. தினைப்புனத்திற் கிளி முதலியன புகுந்து உண்ணாதபடி மலைவாணர் மகளிர் குளிர், தட்டை முதலிய கருவிகளைக் கொண்டு ஒட்டிப் பகற்பொழுதில் புனம் காப்பர். தாம் விதைத்த தினை முதலியவற்றை யானை முதலியன உண்ணாதபடி இரவில் பரண்மீதமர்ந்து கவண் கற்களால் ஒட்டிக்காத்தல் குறவருடைய இயல்பாகும். வள்ளிக்கிழங்கு முதலியவற்றை அகழ்ந்தெடுத்தலும், மரத்தின் உச்சியில் தொங்கும் தேனடைகளை அழித்துத் தேனெடுத்தலும், மான் முதலிய விலங்கினங்களை வேட்டையாடுதலும் இம் மலைவாணர்க்குரிய தொழில்களாகும். மழை வேண்டுங் காலத்து நிறையப் பெய்தற்கும், வேண்டாத காலத்துப் பெருமழையைத் தடுத்தற்கும் மலைவாணர் கடவுளை மலர் தூவி வழிபட்டனர்; புதிதாய் விளைந்த தினையைக் கடவுளுக்கு இட்டு வழிபட்ட பின்னர் உண்பர் ; பன்றிகள் உழுத புழுதியின்கண்ணே நல்ல நாட்பார்த்து விதைத்த தினை முற்றி விளைந்ததனை அறுத்து, நல்ல நாளில் புதிதுண்ண வேண்டி மரையாவின் பாலை உலையாக அமைத்துச் சமைத்து, வாழையிலையிலே விருந்தினருடன் உடனமர்ந்து உண்பர். குன்றத்திலே வாழுங் குறவர்கள் மகப்பேறு கருதித் தங்கள் குலமுதலாகிய முருகக் கடவுளை வழிபடுவார்கள். அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டு நிலத்திலே விதைத்த தோரை நெல்லும், ஐவனம் என்னும் நெல்லும், மூங்கில் நெல்லும், மிளகும், அவரையும், வள்ளிக்கிழங்குகளும், பலா வாழை முதலிய பழங்களும் மலைநிலத்திற் பெருக விளைவன.
மலைவாணர் தம் மகளிர் வேறுபாடு தீர முருக பூசை செய்யும் வேலன் என்பானை அழைத்து வெறியாடச் செய்வர். கடம்பமரத்தினை முருகன் விரும்பும் தெய்வ மரமாகக் கொண்டு, அதன் அடியில் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களைப் பூசி, மாலை சாற்றி, நறும்புகை தந்து வழிபடுதலும், அதன் அடியில் இளமகளிர் கைகோத்து நின்று முருகனை வாழ்த்திக் குரவையாடுதலும், அருவி நீரைக் குடித்து முருகன் முன்னர்ச் சூளுரைத்தலும், மலைவாணர் வழக்கங்களாம்.
வேனில் வெப்பத்தால் நீரும் நிழலுமின்றி வளங் குறைந்து மக்கள் இயங்குதற்கரிய வெம்மை மிக்க சுரத்திலே வாழும் எயினர்கள் வழிப் போக்கர்களைத் துன்புறுத்தி அவர்கள் படும் துயர் கண்டு மகிழும் கொடியவர்களாய் இருந்தார்கள். இந்நிலத்தின் வழியாகப் பொருள் தேடச் செல்லும் வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலாகப் போர் வீரர் குழுவினையும் உடனழைத்துப் போதல் மரபு. வணிகர்க்குப் பாதுகாவலாகச் செல்லும் வீரர் படை ‘சாத்து’ என்ற பெயராற் குறிக்கப்பட்டது. இப்படையைச் சார்ந்தவன் ‘சாத்தன்’ என வழங்கப் பெற்றான்.
முல்லை நிலத்து வாழ்வார் இடையர் என வழங்கப் பெறுவர். இங்நிலத்து ஆனிரைகள் மிகுதியாய் உண்மையால், அவற்றைப் பசுமை நிலங்களில் மேய்த்துக் காப்பாற்றும் தொழில் அவர்களுக்கு உரியதாயிற்று. ஆவினை மேய்ப்பார் ‘ஆயர்' என வழங்கப் பெற்றனர். புனத்தை உழுது விளைக்கும் வரகு முதலியன இங்நிலத்தவர்க்குரிய உணவுகளாம். இவர்கள் திருமாலைத் தங்களுக்குரிய தெய்வமாக வழிபட்டார்கள்; வரகுக் கற்றைகளால் மேலே வேயப்பட்டிருக்கும் குடிலில் வாழ்ந்தார்கள் ; தோல்
களையே பாயலாகப் பயன்படுத்துவார்கள் ; சிறு குடிலின் புறத்தே முள்வேலியிட்டுப் பசு முதலியவற்றைக் காவல் செய்வார்கள்; அரிசிச் சோற்றைப் பாலுடனே உண்பார்கள் ; பசுக் கூட்டத்துடனே காட்டில் தங்கித் தீக்கடை கோலாலே துளையிட்டுச் செய்த புல்லாங்குழலையும் குமிழங் கொம்பினை மரல் நாரினாற்கட்டிச் செய்த வில் யாழினையும் இசைத்து மகிழ்வார்கள்.
மருத நிலத்தார் உழவராவர். நிலத்தை ஏரால் உழுது, எருவிட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைக்கும் உழவுத் தொழில் இந்நிலமக்களது தொழிலாகும். இத்தொழில் ஊராண்மையாகிய ஆள்வினைத் திறத்தை வளர்த்தது. சிறிய நிலப் பகுதியில் நிறைந்த உணவுப் பொருள்களை விளைத்து மக்களைப் பசிப் பிணியின்றி வாழச் செய்தது இவ்வுழவேயாம். ஒரு பெண் யானை படுத்திருக்கும் அளவுடைய சிறிய நிலத்தில் ஆண்டொன்றுக்கு ஏழு ஆண் யானைகளை உண்பித்தற்குப் போதுமான நிறைந்த நெல்லை விளைவிக்கும் திறமுடையவராகத் தமிழ் நாட்டில் வாழ்ந்த உழவர்தம் தொழிற்றிறத்திற் சிறந்திருந்தனர். புதுப்புனலாடுதல் இவர்களுக்குச் சிறந்த திருவிழாவாகும்.
நெய்தல் நிலமக்களாகிய பரதவர், கடலிற் படகிற் சென்று மீன் பிடிப்பர் : திமிங்கில்ம் என்னும் பெரிய மீனை எறியுளியால் எறிந்து கொல்வர் ; பிடித்த மீன்களை உலர்த்திப் பக்குவஞ் செய்து விற்பர்; கடல் நீரைப் புன்னிலங்களிற்பாய்ச்சி உப்பு விளைப்பர். நெய்தல் நிலமகளிர் உப்பை விற்று, அதற்கு மாறாக நெல்லை விலையாகப் பெறுவர். உப்பு விற்பார், உமணர் எனப்பட்டனர். கடலில் பெரிய மரக்கலங்களைச் செலுத்தி வெளிநாடு சென்று வாணிகஞ்செய்யும் முறை இந்நெய்தல் நில மக்களால்
வளர்க்கப்பெற்றதேயாம். மீன் பிடிக்கும் சிறு படகுகளிலே சென்று கடலிலே வாழும் இயல்புடைமை கருதி இவர்களைக் கடல் வாழ்நர் என வழங்குதல் வழக்கம். கடலிற் கிடைக்கும் மீன்களையே இன்னார் பெரிதும் உணவாகப் பயன்படுத்துவர். கடலில் மீன் வேட்டையாடுதலையே தொழிலாகக் கொண்ட பரதவர், உவா நாளில் அத்தொழிலிற் செல்லாமல், தத்தம் மகளிரோடு சுறவுக் கோடு நட்டுத் தம் தெய்வத்தை வணங்கிப் புனல் விளையாடி உண்டு மகிழ்வர்.
இவ்வாறு கநிலமக்கள் பலரும் ஒன்று சேர்ந்து தொழில் புரிந்து மகிழும் இவ்வாழ்வு, பின்னர் நாடு முழுதும் ஒரு குடும்பமாக எண்ணும் அரசியல் வாழ்வுக்கு அடிப்படையாயமைந்தமை கருதற்பாலதாம்.
உள் நாட்டு வணிகர்க்குத் தீங்கு நேராதபடி தரைப் படையனுப்பிப் பாதுகாத்தலும், கடலிற்கலஞ் சிதைக்கும் கொள்ளைக்கூட்டத்தாரைக் கடற்படையால் பொரு தழித்தலும் அக்காலத் தமிழ் வேந்தர் காவல் முறையாகும். கடலில் நாவாய் செல்லுதற்குத் துணை செய்யும் காற்றின் பருவநிலையினை நன்குணர்ந்து அக்காற்றின் ஏவலாற் கடலிற் கப்பல்களைச் செலுத்தும் பயிற்சி முறையினைச் சோழர் குடியிற்றோன்றிய மன்னன் ஒருவன் உய்த்துணர்க் தான்.
“நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட உரவோன்.”
என அம்மன்னனைப் புலவரொருவர் போற்றுகின்றார். கடலிற்கப்பலைச் செலுத்துவார், இரவில் துறையறிந்து சேர்தல் கருதிச் சிறந்த துறைமுகங்களில் கப்பலை அழைக்கும் பெரிய விளக்குகள் உயர்ந்த நிலையில்
அமைக்கப்பட்டன. இவ்விளக்கிற்குக் ‘கலங்கரை விளக்கம்’ என்பது பெயர். ‘கப்பலை அழைக்கும் விளக்கு’ என்பது இத்தொடரின் பொருளாம். இத்தகைய கலங்கரை விளக்கங்கள் காவிரிப்பூம்பட்டின்த்திலும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன.
தம் காட்டில் தமக்குப் பயன்பட்டு மிகுந்த பொருளை வெளி நாட்டிற்கனுப்பியும், வெளி நாட்டிலிருந்து தமக்குப் பயன்படும் பொருளை இந்நாட்டிற்குக் கொண்டு வந்தும் வாணிகஞ் செய்தற்கு இக்கடல் வழிப் போக்கு வரவு மிகவும் பயன்படுமுறையினை முதன் முதற்கண்டுணர்ந்தவர்கள் நம் தமிழ்மக்களே. யவனருடைய கப்பல்கள் தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையிலுள்ள முசிறியில் பொன்னை நிறையக் கொண்டு வந்து இறக்கிவிட்டு, மிளகினை நிறைய எற்றிச் சென்றன என ஒரு புலவர் கூறுகின்றார்.
‘காவிரிப்பூம்பட்டினத்தில் பல நாட்டு வணிகரும் ஒருங்கிருந்து வாணிகம் செய்தனர். நீரின் வந்த குதிரைகளும், தரை வழியாய் வந்த மிளகு மூடைகளும், இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள்களும், காழகத்திலிருந்து வந்த பொருள்களும், இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட மணியும் பொன்னும், குடமலையிலிருந்து கொணர்ந்த சந்தனமும் அகிலும், கங்கை நீரால் விளைந்தனவும் காவிரியால் விளைந்தனவுமாகிய பல்வகை உணவுப் பொருள்களும் அந்நகரத்தில் வந்து குவிந்தன,’ எனவும், ‘உலகமாந்தர் ஒரு சேர வந்தாலும் கொடுக்கக் குறைபடாதனவாய் நிறைந்திருந்தன’, எனவும் பட்டினப் பாலை என்னும் பாட்டுக் கூறுகின்றது.
நாட்டில் ஊர்தோறும் திருவிழாக்கள் நிகழும். இவை பெரும்பாலும் ஒவ்வொரு திங்களிலும் நிறைமதி நாளை
ஒட்டி நிகழ்வனவாம். இளவேனிற்காலத்து இன்பவுணர்ச்சியைத் தூண்டுந் தெய்வமாகிய காமனை வழிபட்டு உண்டாடி மகிழ்தல் காமவேள் விழாவாகும். இவ்விழா, ‘வேனில் விழா’ எனக் குறிக்கப் பெற்றது. இவ்விழாவின் போது மகளிரும் மைந்தரும் இளமரச் சோலையிலும் நீர்த்துறையிலும் தங்கி விளையாடி மகிழ்வர். பூக்கள் நிறைந்த பெருந்துறையிலே பகற்பொழுதிலே மைந்தரும் மகளிரும் கூடி ஆடலும் பாடலுங் கண்டும் கேட்டும் இளவேனிற் செவ்வியினை நுகர்ந்து மகிழ்வர் ; இரவில் நிலா முற்றத்திலே வெண்ணிலவின் பயன் துய்த்து இன்துயில் கொள்வர்; காவிரி வையை முதலிய யாறுகளிற் புது வெள்ளம் வருங்காலத்துப் புதுப்புனல் விழாக் கொண்டாடுவது வழக்கம். இவ்விழாவில் புனல் தெய்வத்தை வழிபட்டு நீராடி மகிழ்தல் அரசரது இயல்பாகும். ஆறுகளில் மூங்கிலாற் கட்டப்பெற்ற புணைகளில் மகளிருடன் அமர்ந்து புனல் விளையாடுவர்.
இளவேனிற்காலத்துப் புலவர் பேரவை கூடும். அங்கு எல்லா மக்களும் வந்திருந்து புலவர் நாவிற் பிறந்த இலக்கியச் சுவை நலங்களை நுகர்ந்து மகிழ்வார்கள். இளமாணவர்களைப் போர் முறையில் பயிற்றும் வில்விழா ஊர்தோறும் கொண்டாடப் பெற்றது. முருகனை வணங்கி மக்கள் கொண்டாடும் வெறியாட்டு விழாவும், கொற்றவையை வழிபடும் வெற்றி விழாவும், திருமாலை வணங்கிச் செய்யும் திருவோண விழாவும், கார்த்திகை விளக்கீடும், பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானை வழிபடும் திருவாதிரை விழாவும், தைத்திங்களில் குளநீர் விளையாட்டும், மாசிக் கடலாட்டும், பங்குனி விழாவும் அக்காலத் தமிழ் மக்கள் கொண்டாடிய திங்கள் விழாக்களாம்.
இவையன்றி, அரசர்க்குப் பிறந்த நாள் விழாவும், முடி சூட்டு விழாவும், அறநெறியிற் போர் செய்து துறக்கம் புக்க வீரர்களுக்குக் கல் நிறுத்தி அதன்கண் அவர்தம் பெயரும் வெற்றிப் பெருமையும் எழுதி அவர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் நடுகல் விழாவும், இவ்வாறே கற்புடைப் பெண்டிரை வழிபடும் நடுகல் வழிபாடும் சிறப்புடைத் திருவிழாக்களாக மதிக்கப்பெற்றன.
மலை நாட்டு மக்கள் முருகனையும், முல்லை நிலத்துப் பொதுவர் திருமாலையும், பாலைநிலத்தவர் கொற்றவையையும், மருதநிலத்தவர் வேந்தனையும் (இந்திரன்), நெய்தல் நிலத்தவர் வருணனையும் சிறப்பு முறையில் தம் நிலத்திற்குரிய தெய்வங்களாக விரும்பி வழிபட்டனர். இவ்வாறு நிலவகையால் பல தெய்வங்கள் கொள்ளப்பட்டாலும், ‘வேறு வேறு பெயரால் வழிபடப் பெறும் எல்லாத் தெய்வங்களும் ஒன்றே,’ என்னும் உண்மையினைத் தமிழ் மக்கள் தெளிய விளக்கியுள்ளார்கள்.
“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரின்
எவ்வயி னோயும் நீயே.”
என ஒரு புலவர் திருமாலைப் போற்றுகின்றார்.
ஆற்றிலும், குளத்திலும், நாற்றெருக்கள் கூடுமிடத்தும், இரண்டு மூன்று பெருவழிகள் சந்திக்குமிடத்தும், புதிய பூக்களப்பூத்து மணங்கமழும் கடம்பு ஆல் முதலிய மரங்களின் நிழலிலும், மலைகளிலும், மக்களால் செய்யப்படும் பல திற வழிபாடுகளும் உலகப் பெருமுதல்வனாகிய ஒருவனையே குறித்து நிகழ்வன என்பது தமிழர் உட்கோளாகும். இக்கருத்தினால் நிலந்தோறும் தாம் கற்பித்துக்
கொண்ட பெயர் வகையால் வேறுபடாது, ஆங்காங்கு நிகழும் வழிபாடுகள் எல்லாவற்றிலும் வேற்றுமையின்றிக் கலந்து கொண்டார்கள். நிலமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேரூர்களில் வாழத் தொடங்கிய காலத்து எல்லா நிலத்துக்கும் பொதுவான ஒரு வழிபாட்டு முறை தோன்றுவதாயிற்று.
உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால் ‘இறைவன்’ எனவும், உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்குதலால் ‘இயவுள்’ எனவும் பண்டை அறிஞர் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை விளங்க அறிவுறுத்தினர். இன்னவுரு, இன்னநிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற் பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்துணர்ந்து வழிபடுதல் வேண்டி, வேண்டுதல் வேண்டாமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுகின்ற அச்செம்பொருளைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாக ஊர் மன்றத்திலே தறியினை நிறுத்தி வழிபட்டார்கள். இதனைக் ‘கந்து’ என வழங்குவர். (கந்து - தறி) மரத்தால் அமைந்த இத்தூண், நாகரிகம் பெற்ற காலத்துக் கருங்கல்லால் அமைக்கப்பெற்று, இறைவனைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாகக் கொள்ளப்பட்டது. எல்லா நிலத்தார்க்கும் பொதுவாகிய கந்து வழிபாடே பின்னர்ச் சிவலிங்க வழி பாடாக வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இப்பிறப்பிற்குரியனவாகிய இம்மைச் செல்வமும், வரும் பிறப்பிற்பயன் தருவனவாகிய அறச்செயல்களும், பிறப்பற முயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் உயிர் வாழ்வுக்குரியனவெனத் தமிழ் மக்கள் எண்ணினர்கள். வையத்துள் வாழ்வாங்கு
வாழ்த்தின்புறுவதே இம்மையின்பமாகும். ‘இப்பிறப்பிற் பலர்க்கும் வேண்டுவனவற்றை வரையாது கொடுத்து மகிழ்ந்தும் செயற்கருஞ்செயல் செய்து உயிர்கொடுத்தும் புகழ் கொண்டார், புலவர்பாடும் புகழுடையராய்த் துறக்கவுலகாகிய வானுலகிற் புகுந்து இன்பம் நுகர்வர்’, என்பது தமிழர் துணிபாகும். கணவனும் மனைவியும் அன்பினால் மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்து, நுகரவேண்டிய இன்பங்களையெல்லாம் நன்கு நுகர்ந்து, முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயன். இவ்வாறு ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத்தீர்தல் ‘காமம் நீத்தபால்’ எனச் சிறப்பிக்கப்படும். மிக்க காமத்து வேட்கை நீங்கிய கணவனும் மனைவியும் வீடு பேற்றினை விரும்பிப் பற்றற வாழ்தல் துறவு நிலையாகும். இத்துறவினை ‘அருளொடு புணர்ந்த அகற்சி’ என்பர் தொல்காப்பியர். கணவனை யிழந்த மகளிர் உடனுயிர் நீத்தலும், அவ்வாறு இறவாதவர் தாபதநிலையினராய்க் கைம்மை நோன்பு மேற்கொண்டு உணவினைக் குறைத்துண்டு உயிர்வாழ்தலும் தமிழர் வழக்கமாகும். இவ்வாறே மனைவியை இழந்தவன் தவநிலை மேற்கொண்டு துறவு நெறியில் நிற்றலும் உண்டு. ‘மனைவி மக்களைப் பிரிந்து காடடைதலே துறவு’, என்னும் பிற்காலக் கொள்கை தமிழர்கட்கு உடன்பாடன்றாம். பற்றற முயன்று முழுமுதற் பொருளாகிய செம்பொருளை உண்மையாலுணர்ந்து வழிபட்டுத் தெளிவு பெறுதலே தமிழர் சிறந்தது பயிற்றும் வாழ்க்கை நெறியாகும். இந்நெறியில் ஆடவர் மகளிர் இரு பாலாரும் ஈடுபட்டுப் பிறப்பறுத்தற்குரியரென்பது தமிழரது சமயக்கொள்கையாகும். இவ்வுயர்ந்த நெறியினை விரும்பித் தமிழ் வேந்தர்கள் தங்கள் அரச பதவியை விடுத்துத் துறவுமேற் கொண்டார்கள். இச்செய்தியினைக் ‘கட்டில் நீத்த பால்’
எனத் தொல்காப்பியர் சிறப்பித்துரைப்பர். உலக வாழ்க்கையில் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோள்களை நிலைபெறுத்தல் கருதிய சான்றோர், வடக்கு நோக்கியிருந்து, உண்ணா நிலையினை மேற்கொண்டு, உயிர் விடுவர். இம்முறை ‘வடக்கிருத்தல்’ என வழங்கப்பெறும். வெண்ணிப் போர்க்களத்திற் கரிகால் வளவனுடன் பொருத பெருஞ் சேரலாதன், தன் மார்பிற் சோழன் எய்த அம்பு புறத்தே ஊடுருவிச் சென்றமையால், முதுகில் உண்டாகிய புண்ணினைப் புறப்புண் எனக் கருதி, வடக்கிருந்து உயிர் துறந்தான். சிறந்த பொருளைச் சிந்தித்துக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த பொழுது அவனுடைய உயிர் நண்பராகிய பிசிராந்தையாரும் பொத்தியாரும் அவனுடன் ஒருங்கிருந்து உண்ணாது உயிர் துறந்தமையும், தன்னுடைய உயிர்த்தோழனாகிய பாரி வேளின் பிரிவிற்காற்றாது கபிலர் என்னும் புலவர் பெருமான் வடக்கிருந்து உயிர் துறந்தமையும் தமிழ் மக்களின் சிறந்த மனத்திட்பத்தை இனிது புலப்படுத்துவனவாம்.
‘ஒரு வீட்டிலே சாப்பறையொலிக்க, மற்றொரு வீட்டிலே மனமுரசியம்ப, கணவனைக்கூடிய மகளிர் நறுமணப் பூக்களை அணிந்து மகிழ, கணவனை இழந்த மகளிருடைய கண்கள் துன்பநீர் சொரிய, இவ்வாறு இன்பமும் துன்பமும் ஒவ்வாதபடி இவ்வுலகியல் அமைந்துள்ளது. துன்பத்தையே தனக்குரிய இயல்பாகவுடைய இவ்வுலகினது இயல்பறிந்தார், இவ்வுலகிலிருந்தே நிறைந்த பேரின்பமாகிய வீட்டின்பத்தைத் தரும் இனிய செயல்களை அறிந்து செய்து கொள்வாராக’, என அக்காலப் புலவர் பெருமக்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்
'நீரிற்பலகால் முழுகுதல், நிலத்தில் பாய் முதலியன இன்றிப் படுத்தல், தோல் உடுத்தல், சடை புனைதல், தீயோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ளவற்றை உணவாகக் கொள்ளுதல், கடவுட்பூசை' என்னும் இவ்வெண் வகைச் செயல்களும் தவத்தின்கண் முயல்வார்க்கு உரியனவாக விதிக்கப்பட்டன. மழை, பனி, வெயில் முதலிய இயற்கையின் காரணமாகத் தமக்குற்ற நோய்களைப் பொறுத்துக்கொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமையாகிய அருளுணர்வுடன் வாழ்தலே தவத்தின் இயல்பாகும் என்பார்.
பகலும் இரவும் இடைவிடாது வானத்தை நோக்கியிருந்து, அங்கு நிகழும் வானவில்லும், மின்னலும், விண்மீன் வீழ்வும், கோள் நிலையும் பார்த்து, மழை, பனி, வெயில் என்ற மூவகைக் காலத்தின் இயல்புகளையும் விளங்க அறிவுறுத்தும் வானநூற்புலவன் அறிவனாவான். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தியல்பினையும் கண்ணி (கருதி) உரைக்கும் இவனேக் கணிவன் என வழங்குதல் மரபு.
தமிழ் மூவேந்தரும் தத்தம் நாட்டின் அரசியல் நிகழ்தற்குரிய தலைநகரங்களாகிய பேரூர்களைச் சிறந்த முறையில் அமைத்துக் கொண்டனர் சேரரது தலைநகர் வஞ்சி; பாண்டியரது தலைநகர் மதுரை; சோழரது தலைநகர் உறையூர் காவிரி கடலொடு கலக்குமிடத்தில் கடல் வாணிகத்திற்கேற்ற துறைமுகநகரமாகச் சோழர்களால் அமைக்கப்பட்ட பேரூர் காவிரிப்பூம்பட்டினம். காவிரி கடலொடு கலக்குமிடத்தில் அமைந்தமையால் இதனைப் 'புகார்’ எனவும் வழங்குவர். இந்நகரத்தினை 'மருவூர்ப்பாக்கம்’ 'பட்டினப்பாக்கம்’ என இரு பகுதியாகப் பிரித்திருந் தார்கள். சோழர் வழியினராகிய திரையர் என்பவரால் ஆளப்பெற்ற தொண்டைநாட்டின் தலைநகர் காஞ்சியாகும். அரசர்க்குரிய இத்தலைநகரங்கள் மதில் முதலிய அரண்களுடன் நகர அமைதிக்கேற்ப அரசர் வாழும் உயர்ந்த அரண்மனையினை நடுவே பெற்று, பெருஞ்செல்வர்களும் பல திறப்பட்ட தொழிலாளர்களும் படை வீரர்களும் தங்குதற்குரிய பல்வேறு தெருக்கள் வரிசையாகச் சூழப் பெற்றனவாய்க் கடவுளர் திருக்கோயில்களும் பொது மன்றங்களும் சோலைகளும் வாவிகளும் ஆகியவற்றைத் தம்மகத்தே கொண்டு விளங்கின. இந்நகரங்களில் மக்கள் உடல் நலத்துடன் வாழ்தற்கேற்றபடி அழுக்கு நீரினை வெளியே கொண்டு செல்லும் கால்வாய்கள் நிலத்தின்கண்ணே மறைவாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அமைக்கப்பெற்ற கால்வாயினைக் 'கரந்து படை' என வழங்குவர்.
'தாமரைப் பூவினேயொத்த அமைப்புடையதாய் மதுரை நகரம் விளங்கியது. அப்பூவிலுள்ள இதழ்கள் அடுக்கடுக்காகச் சூழ்ந்திருத்தல்போல, மதுரை நகரத்தின் தெருக்கள் பல்வேறு வரிசைகளாய்ச் சூழ அமைக்கப்பட்டன. தாமரையின் நடுவேயமைந்த பொகுட்டினைப் போன்று பாண்டியனது அரண்மனை மதுரையின் நடுவே சிறந்து தோன்றியது. அவ்வூரில் வாழும் தமிழ் மக்கள் தாமரை மலரிலுள்ள மகரந்தப் பொடியினைப் போன்று தேனின் இன்சுவையும் நறுமணமும் உடையவர்களாய் விளங்கினர்கள். அங்கு வாழும் தமிழ் மக்களது புகழ், மணத்தால் ஈர்க்கப்பட்டு அந்நகத்தையடைந்த புலவர் பாணர் முதலியோர், தாமரையின் மணத்தால் தேனுண்ண வந்த வண்டினத்தையொத்து விளங்கினர்,' எனப் பாரி. பாடல் என்னும் நூலில் ஒரு புலவர் மதுரை நகரத்தின் இயல்பினை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
இந்நகரங்களில் வாழும் பெருஞ்செல்வர்கள், கடல் வழியாகவும் தரை வழியாகவும் வாணிகஞ் செய்து பெரும்பொருளீட்டி, 'மன்னர் பின்னோர்' என அரசனுடன் அடுத்துப் பாராட்டப் பெறும் சிறப்புடையவர்களாய்த் திகழ்ந்தார்கள். வடித்த கஞ்சி ஆறுபோலச் செல்லும் பெருஞ்சோற்று அறச்சாலைகள் இந்நகரங்களில் அமைந்து, ஏழை மக்களின் பசியை அகற்றின. உலகத்திலுள்ள பல்வேறு உணவுப் பொருள்களும் பொன்னும், நவமணிகளும், பட்டினும் பருத்தியிழையினும் நெய்த மெல்லிய ஆடைகளும், வாழ்க்கைக்குத் தேவையான பிற பொருள்களும் விற்றற்குரிய ஆவண வீதிகள் (கடை வீதிகள்) இந்நகரங்களில் மிகுந்திருந்தன. கடை வீதிகளில் விற்கும் பொருளையும் விலையையும் குறித்துக் கொடிகள் கட்டப்பட்டன. வாணிபங் கருதி இக்காட்டிற் குடியேறிய யவனர் முதலிய வெளிநாட்டு வணிகர், வேற்றுமையின்றிக் கலந்திருந்து இந்நகரங்களில் தத்தம் தொழில் செய்து வாழ்ந்தனர்.
பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கும், அறுமுகச் செவ்வேளாகிய முருகனுக்கும், நீலமேனி நெடியோனகிய திருமாலுக்கும், வெள்ளிய சங்கின் நிறத்தையுடைய வாலியோனாகிய பலதேவனுக்கும் உரிய திருக்கோயில்கள் இந்நகரங்களில் அமைந்திருந்தன. இவையன்றிக் கொற்றவை கோயிலும், காமவேள் கோட்டமும், சாத்தன் கோயிலும், சமணப்பள்ளியும், போதி அறவோன வழிபடுதற்குரிய புத்த விகாரமும், இந்திரன் கோயிலும், காவற்பூதங்களின் கோயில்களும், இத்தலை நகரங்களில் அமைக்கப்பட்டன. இந்நகரத்தில் நிகழும் திருவிழாக்களில் பல சமய அறிஞர்களும் கலந்துகொண்டு, தம் சமய நுண்பொருள்களை இகலின்றி விரித்துரைத்தார்கள். நகரமக்கள் தங்களிடையே சமயப் பிணக்குத் தோன்றாதபடி எல்லாரிடத்தும் கருத்து வேற்றுமையின்றி அன்பினாற் கலந்து பழகினார்கள்.
பெருஞ்செல்வர்கள் எழு நிலை மாடங்களில் இனிது வாழ்ந்து வந்தார்கள்; சுவைக்கினிதாகிய அடிசிலை இரவலர்க்களித்துத் தாமும் உண்டு மகிழ்ந்தனர்; நிலாப்பயன் நுகரும் நெடுநிலா முற்றமும், தென்றல் வீசும் வேனிற்பள்ளியும், கூதிர்க் காலத்து வாடை புகாத கூதிர்ப்பள்ளியும் ஆகிய வாழ்க்கைச் சூழல்களைத் தம் மனையின்கண்ணே நன்கு அமைத்துப் பருவ நிலைகளுக்கேற்ற உறையுளும் உணவும் பிற வசதிகளையும் அமைத்துக்கொண்டு, தம் ஆள்வினைத் திறத்தால் இவ்வுலகத்தை இன்பமே நுகரும் தேவருலகாக மாற்றிவிட்டனர்.
தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப்போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்கு வரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து, அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படை மறவர்களை நிறுவிக் காத்தனர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி, 'கவலை’ எனப்படும். இவ்வாறு பல வழிகள் கூடிய நெறியிற்செல்வார் தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னது எனத் தெரிந்துகொள்ள இயலாது மயங்குத லியல்பு. வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்ப்படுதலாகாதென் றெண்ணிப் பண்டைத் தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசை காட்டும் கல்லை நிறுத்தி, அக்கல்லிலே அவ்வழி செல்லும் ஊர்ப்பெயரையும் எழுதியிருந்தனர். ஆங்கே பலவூர்க்குச் செல்வாரும் சிறிது நேரம் இளைப்பாறுதல் இயல்பாதலின், அவர் வழிபடுதற்குரிய கடவுள் அம்பலம் அமைக்கப் பெற்றது.
“செல்லுந் தே எத்துப் பெயர்மருங்கு அறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த
கடவு ளோங்கிய காடேசு கவலை."[3]
எனப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் கூறுவதனால் இவ்வுண்மை தெளியலாம்.
கடத்தற்கரிய பேராறுகளை எளியோரும் கடந்து செல்லுதல் கருதி, எல்லாரிடமும் கூலி பெறாது அறங்கருதி நீர்த்துறைகளில் ஓடங்கள் செலுத்தப் பெற்றன. 'அறத்துறை அம்பி' எனப் புறநானூற்றிற் குறிக்கப்படுவது (புறம். 381) இத்தரும ஓடமேயாகும்.
ஒரு நிலத்து மக்கள், தங்கள் நிலத்திற்கிடைக்கும் பொருள்களை மற்றவரிடம் கொடுத்து, அவர்கள்பால் உள்ளவற்றைப் பண்டமாற்று முறையில் வாங்கினார்கள்.
இளம்பருவத்து ஆடவர்களும் மகளிரும் தங்கள் உடல் அமைதிக்கேற்றபடி நன்றாக விளையாடினார்கள். இளைஞர்கள் விளையாடாது சோம்பியிருத்தல் அவர்களுடைய உடல் வளர்ச்சியினையும் உள்ளத் திண்மையினையும் சிதைக்கும் எனப் பெற்றோர் அறிவுறுத்தினர்.
இறந்தார் உடம்பினைத் தாழியிற்கவித்துப் புதைத்தலும், விறகிட்டு எரித்தலும் ஆகிய இரு வகைப் பழக்கங்களும் தமிழரிடையே நிலவின. வீரர்கள் போர்க்களத்தில்
உயிர் துறத்தலையே தங்களுக்குரிய சிறப்பாக மதித்தார்கள். அரசர் போர்க்களத்தில் சாவாமல் நோயினால் முதிர்ந்து இறந்தனராயினும், அவர் உடம்பினை வாளாற் பிளந்து பின்னரே அடக்கம் செய்வது வழக்கம். இதனால் தமிழர்கள் போர்த்துறையிற் கொண்ட பெருவிருப்பமும் அவர்களுடைய மறவுணர்ச்சியும் நன்கு புலனாதல் காணலாம்.
சங்ககாலத் தமிழர் அறிவு, ஆண்மை, பொருள், படை என்னும் நான்கு திறத்திலும் வன்மை பெற்றிருந்தனர்; தமது கல்வித்திறத்தால் அறிவை வளர்த்தனர்; படைத்திறத்தால் ஆண்மை பெற்றனர்; உழவு வாணிகம் முதலிய தொழில்களாற் பொருள் பெறும் வழி துறைகளைப் பெருக்கினர்; அறிவும் ஆண்மையும் உடையாரைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் துணைபெற்று நாட்டினைக் காத்து, அரசியலை வளர்த்தனர்; நண்பின் திறத்தால் உலகினர் எல்லாரையும் தம் சுற்றமாகக் கருதி, அன்பினை வளர்த்தனர்; அறனாற்றி மூத்த அறிவுடையராய், இறைவனை வழிபட்டு, எல்லார்க்கும் நல்லனவே செய்து மகிழ்ந்தனர்.