சங்க இலக்கியத் தாவரங்கள்/006-150

விக்கிமூலம் இலிருந்து
 

நெய்தல்-கருங்குவளை
நிம்பேயா வயலேசியா
(Nymphaea violacea, Lehm.)

‘வருணன் மேய பெருமணல் உலகம்’ எனப்படும் நெய்தல் நிலம் கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகும். கடலைச் சார்ந்த உப்பங்கழியிலும் நன்னீர் நிலைகளிலும் வளரும் நெய்தற் கொடி.“காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்” (குறிஞ். 84) எனக் கபிலர் கூறும் நெய்தலுக்குக் கருங்குவளை என்று பொருள் கண்டார் நச்சினார்க்கினியர். நெய்தல் நிலத்துச் சுனை மலராகிய நெய்தலைப் புலவர் பெருமக்கள் வியந்து கூறுவர். நெய்தல் ‘அல்லி’ இனத்தைச் சார்ந்தது.

நெய்தல் நிலத்தின் இயல்புகளை மாங்குடி மருதனார் விளக்கிக் கூறுகின்றார். (மது. கா. 315-326)

சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கருங்குவளை, கருநெய்தல்
உலக வழக்குப் பெயர் : நெய்தல், குவளை, நீலம். நீலோற்பலம், பானல், காவி. சிந்திவாரம், நீலப்பூ
தாவரப் பெயர் : நிம்பேயா வயலேசியா
(Nymphaea violacea)

நெய்தல்-கருங்குவளை இலக்கியம்

தமிழ் நிலம் மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி என நான்கு வகைப்படும். முல்லையும் குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து இயைந்த நிலத்தைப் பாலை என்பர். நெய்தல் நிலமென்பது கடலும், கடலைச் சார்ந்த இடமுமாம். மற்று நெய்தல் ஒழுக்கமாவது இரங்கலும், இரங்கல் நிமித்தமும் பற்றியது. கடலைச் சார்ந்த கழியிலும், நல்ல நீர் நிலைகளிலும் நெய்தற் கொடி வளரும். இதனையுட்கொண்டு போலும் இந்நிலத்தை நெய்தல் என்றனர். இக்கருத்து செந்தமிழில் நிலவியுள்ளது. பண்டைத் தமிழ்ப்புலவர்கள் இந்நெய்தற் கொடி, இதன் பெயரால் அமைந்த நிலம், ஒழுக்கம், பறை முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

சங்க இலக்கியத்துள் நெய்தலைப் பற்றிய பாடல்கள் பல உள. அகநானூற்றில் பத்துப் பத்தான எண்களைக் கொண்ட 40 பாடல்களும், கலித்தொகையில் 33 பாடல்களும், நெய்தற் கலிப் பாக்களும், ஐங்குறு நூற்றில் நெய்தல் பற்றிய 100 பாக்களும் திணை மாலை நூற்றைம்பதில் 31 பாக்களும் உள்ளன. இவையன்றிக் குறுந்தொகை, நற்றிணை, திணைமொழி ஐம்பது முதலியவற்றிலும் நெய்தல் திணையைப் பற்றிய பாக்கள் மலிந்துள்ளன.

அன்றி நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்னும் பேரெண்களைப் பரிபாடல் (2:12-15) கூறும். இவற்றை விளக்குதல் வேண்டப்படுகின்றது. நூறு நூறாயிரம் என்பது ஒரு கோடி ஆகும். கோடி எண் மடங்கு கொண்டது-அதாவது கோடி கோடி சங்கமென்று கூறும் பிங்கலம். சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்.

கோடி எண் மடங்கு கொண்டது = சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது = விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது = ஆம்பல்
ஆம்பல் எண் மடங்கு கொண்டது = கமலம்
கமலம் எண் மடங்கு கொண்டது = குவளை
குவளை எண் மடங்கு கொண்டது = நெய்தல் = 101835008
நெய்தல் எண் மடங்கு கொண்டது = வெள்ளம்

உலகம் தோன்றி மறையுங் காலத்தை ஊழி என்பர். எனவே, ஊழி என்பது பன்னெடுங்காலமாகும். இவற்றைக் கீரந்தையார் கூறுவர்:

“....  ....  ....  .... அவற்றிற்கும்
 உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
 நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
 மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
 செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை”

-பரி. 2 : 12-15

இப்பேரெண்களைக் குறிக்கும் பெயர்களைப் பரிபாடலில் கூறிய வண்ணம் ஒழுங்குபடுத்தித் தமது யாழ்நூலில் ஈழந்தந்த முனிவர் விபுலாநந்த அடிகள் மேற்கண்ட வண்ணம் விளக்கியுள்ளார்கள். மேலும்

“ஐ, அம், பல் எனவரூஉம் இறுதி
 அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்”

-தொல் எழுத்து : 8-98
என்னும் தொல்காப்பிய நூற்பா ஐ என்னும் விகுதியைக் கொண்ட தாமரை (பதுமம்), அம் என்னும் விகுதியைக் கொண்ட சங்கம், விந்தம் வெள்ளம், பல் என்னும் விகுதியைக் கொண்ட ஆம்பல் முதலான எண்ணுப் பெயர்களைக் கூறுகின்றது.

திருமாலின் கைகளின் பெருமையை அதன் எண்ணிக்கைப் பெருக்கில் காட்ட முனையும் கடுவன் இளவெயினனார் ‘பல அடுக்கல் ஆம்பல்’ என்றார்.

“நூறாயிரம் கை ஆறறி கடவுள்
 அனைத்தும் அல்லபல அடுக்கல் ஆம்பல்
 இனைத்துள என எண்வரம்பு அறியா யாக்கையை”

-பரி. 3. 43-45
செல்வக்கடுங்கோ வாழியாதனைப் புலன் அழுக்கற்ற அந்தணாளனாகிய கபிலர் “ஆயிரம் ஆம்பல் ஊழி வாழ்க” என்று வாழ்த்துவாராயினர்.

ஊழியாவது உலகம் தோன்றி மறையுங்காலமென்ப ‘576 ஊழி கொண்டது ஓர் ஆம்பல்’ என்பர் கோவை இளஞ்சேரனார்[1]. ஆம்பல்ஆம்பல் ஒரு கமலம் என்னை? ஆம்பல் எண் மடங்கு கொண்டது ஒரு கமலமாதலின் என்க. ஆம்பல்8

நெய்தல் என்னும் நீர்க்கொடி, தாமரை, ஆம்பல், குவளை, நீலம், கொட்டி முதலியவற்றுடன் சேர்ந்தும் தனித்தும் நன்னீர் நிலைகளிலும் சிற்றருவிகளிலும் உப்பங்கழியிலும் வளரும் இயல்பிற்று. பகைவர்களால் அழிக்கப்பட்ட நெல் வயல்களிலும் நெய்தல் வளர்வதுண்டு. வடித்தெடுத்த வேலின் இலை வடிவான பசிய இலைகளை உடையது. இவ்விலைகள் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சேற்றில் புதைந்திருக்கும். இதற்கு அடிமட்டத் தண்டு என்று பெயர். நீண்ட இலைக் காம்புகளினால் மேல் எழும்பி இலைகள் நீரில் மிதக்கும். விழாக் காலத்து விழவணி மகளிர் இதனுடைய இலைகளைத் தனித்தும் ஆம்பல் இலைகளுடன் சேர்த்தும் தழையணி செய்வர். நெய்தல் மலரை மகளிரின் கண்களுக்கு உவமிப்பர். மலரில் நறுமணமுண்டு. கழியிடத்துப் பூக்கும் நெய்தல் மலரை மகளிர் கொய்து சூடிக் கொள்வர். கரும்பின் பாகை அடுகையினாலே உண்டாகும் புகை பட்டு நெய்தல் மலர் வாடிப் போகும் என்றுரைக்கும் பட்டினப்பாலை, நெய்தல்கொடி தாமரையுடனும், குவளையுடனும் வளரும் என்ப.

“சிறுபாசடைய செப்பு ஊர் நெய்தல்
 தெண்ணீர் மலரின்...............”
-நற். 23 : 7-8

“கொடுங் கழிநிவந்த நெடுங்கால் நெய்தல்
 அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ”
-நற். 96 : 7-8

“ஒள்நுதல் மகளிர் ஓங்கு கழிக்குற்ற
 கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல்”
-நற். 283 : 1-2

“கானல் அம்பெருந் துறைக்கவினி மாநீர்ப்
 பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
 விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்”

-அகநா. 70. 10-12

“கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
 சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்”

-புறநா. 61. 1-2

“மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்”-பதிற். 64. 16

“அருவி யாணர் அகன்கண் செறுவின்
 அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
 செறுவினை மகளிர் மலிந்த வெக்கை”
-பதிற். 71. 1-3

“வள்ளிதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து
 மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி”
-பதிற். 78. 4-5

“நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
 பூச்சாம்பும் புலத்து ஆங்கண்”
-பட்டின. 11-12

“மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி”

-பட்டின. 241

“கள் கமழும் நறு நெய்தல்”-மதுரைக். 250

“வாழை வள்ளி நீள்நறு நெய்தல்”-குறிஞ். 79

“...வெண்காற் செறுவில்
 மைஎன விரிந்த நீள் நறுநெய்தல்”
-மலைபடு. 123-124


நெய்தல் மலர் கருநீல நிறமும் நறுமணமும் உள்ளது. அகன்று நீண்ட இதழ்களை உடையது. பூ நீலமணி போன்றதெனவும், கண் போன்றதெனவும் நெடுநேரம் சுனையாடிக் கயம் மூழ்கும் மகளிரின் உள்ளகம் சிவந்த கண்களைப் போன்றதெனவும் கூறுவர்.


“நீள்நறு நெய்தல்”-நற். 382, புறநா. 144

“மணிமருள் நெய்தல்”-மதுரை. 282

“கணைத்த நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 150

“மணிக்கலந் தன்ன மாஇதழ் நெய்தல்”-பதிற். 30

“சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 220

“பாசடை கிவந்த கணைக்கால் நெய்தல்
 கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்”
-குறுந். 9

நற்றிணையில் ஒரு காட்சி :

திருமணத்தை இடை வைத்துப் பொருள் தேடச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வரவில்லை. அதனால் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். தலைவன் வரைவொடு வருகின்ற குறிப்பறிந்த தோழி தலைவியை நோக்கி, “நமது கழியின் கண்ணே தலைவன் நிதியுடன் வருகின்ற தேரின் ஒலியைக் கேட்பாயாக” என்று சொல்கின்றாள். இதனை நற்றிணைப் புலவர் நெய்தல் திணையின் ஒரு காட்சியாகச் சித்திரிக்கின்றார். உப்பங்கழியில் (Back water) நீர் தேங்கி நிற்கிறது. நீர் தண்மையாக உள்ளது. அதில் சுறா மீன்கள் மலிந்துள்ளன. உப்பங்கழியின் கரையோரத்திலே புன்னை மரமும் பூத்திருக்கின்றது. புன்னையின் பூக்கள் தமது பொன்னிறமான தாதுக்களை நெய்தல் மலர் மேல் நிலவும் படியாகத் தூவுகின்றன. இக்கானலிடத்தே வீழ் ஊன்றிய அடியை உடைய தாழையின் மலர் மணம் கமழ்கின்றது. இங்ஙனமாக இயற்கையன்னை எழில் குலுங்கும் கானல். இந்த இயற்கையுண்மையைக் கூறுமிடத்து இப்பொருள்பட இதனைக் கூறுகின்றார். கழியில் கோட்சுறா வழங்குமென்பது தலைவியின் களவொழுக்கம் சேரியில் அலராகின்றதையும், அக்கழியினிடத்தே பூத்த நெய்தல் மலர் நிறையும்படியாகப் புன்னை மரம் தனது நுண்ணிய பொன்னிறத் தாதை உகுக்கும் என்பது - ‘சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற் பொருட்டுக் கொடாநிற்பன்’ என்பதும், ‘தாழம்பூவின் மணம் கானல் எங்கும் கமழும் என்பது - அவன் வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படும்’ என்பதும் இறைச்சிப் பொருளாக இப்பாட்டில் காணப்படுகின்றன.

“கோட்சுறா வழங்கும் வான்கேழ் இருங்கழி
 மணிஏர் நெய்தல் மாமலர் நிறையப்
 பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்
 வீழ்த்தாள் தாழைப் பூங்கமழ் கானம்”
-நற். 78

நெய்தல் விடியற்காலையில் மலரும் எனவும், அதில் தேன் மிகுந்திருக்குமெனவும், அதில் வண்டினம் மொய்க்குமெனவும், அதனை நாரை உண்பதும், எருமை மேய்வதும் உண்டு எனவும், மாலையில் இம்மலர் கூம்பும் எனவும் புலவர் பெருமக்கள் கூறுப. நீலமான நெய்தற் பூவிதழ்களுடன் அடம்பின் (அடம்பு) செவ்விய பூக்களை விரவித் தொடுத்து மகளிர் கூந்தலில் அணிவர். இதன் நறிய மலர்களைச் செருந்திப் பூக்களுடன் விரவி மாலையாகப் புனைந்து ஆடவரும் அணிவர். நெய்தற் பூவின் புறவிதழ்களை ஒடித்து மாலை கட்டிச் சூடுதலுக்கு ‘நெய்தல் நெறித்தல்’ என்று பெயர்.

“------------------ தண்புலர்
 வைகுறு விடியல் போகிய எருமை
 நெய்தலம் புதுமலர் மாந்தும்”
-அகம். 100 : 15-17

“முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
 கட்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
 கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
 அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

-திருமுரு. 73-76

“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
 நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்”

-குறுந். 401. 1-2

“நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
 கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்”
-ஐங்குறு. 182

“வள்இதழ் நெய்தல் கூம்பப்புள் உடன்
 கமழ்பூம் பொதும்பர்க் கட்சிசேர
 செல்சுடர் மழுங்க.........”
-நற். 117. 3-5

நீல நிறமுள்ள பெரிய நெய்தல் மலர் பல்லாற்றானும் செங்கழுநீர்ப் பூவைப் போன்றது. இதழ் வளவியதாய் அகன்று இருக்கும். நறுமணத்துடன் தேன் சுரக்கும் இயல்பிற்று. புறவிதழ்களின் உட்புறம் நீலமானது. வெளிப்புறம் சற்றுப் பசிய நிறமானது. நெய்தல் முகையில் இவை திருகு அமைப்பில் அகவிதழ்களை மூடிக் கொண்டிருக்கும் இதனை நெய்தல் மூக்கு என்பர் (நற். 372). முகை அவிழ வேண்டுமெனின் புறவிதழின் திருகமைப்பு பிரிதல் வேண்டும். புறவிதழ் விரிந்தால் அகவிதழ்கள் மலரும். இவை விரிந்தால்தான் சுரும்பின் இனம் இவற்றின் அடியில் பிலிற்றும் தேனை நுகர்தல் கூடும். இதன் நறுந்தேனைச் சுரும்பு உண்ணுதற்குப் பெரியதும் தண்ணிதுமான நெய்தல் மலரும் என்பர்.

“சுரும்புண மலர்ந்த பெருந்தண் நெய்தல்”

-அகநா. 290-14
சாகுந்தல நாடகத்தின் தொடக்கத்திலே அதன் ஆசிரியர் பாடினி வாயிலாக இயற்கை எழிலைப் புலப்படுத்துகின்றார். ஆசிரியர் மறைமலை அடிகளார் அச்சுலோகத்தைத் தமிழ்ச் செய்யுளாக மொழி பெயர்க்கின்றார். மலர் முகிழ் விரிதற்கு வரிவண்டு முத்தமிடும் என்கிறார்.

“விரியும் மணம்அவிழ்க்கும் மலர்முகிழ் மேல்எல்லாம்
 கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்”

நெய்தல் மலரோ சுரும்பு மது நுகரும் பொருட்டு, விரிந்து மணம் பரப்பும் என்பர் அகநானூற்றுப் புலவர். நெய்தற்பூ, மட்டும் கபிலரால் ‘நீள் நறுநெய்தல்’ எனவும் ‘கட்கமழ் நெய்தல்’ எனவும் குறிஞ்சிப் பாட்டில் சிறப்பாகப் பாடப் பெறும்.

நெய்தல் என்பது எது என்று இந்நாளில் தாவர நூற் புலவர்களும், தமிழ் நூற் புலவர்களும் பெரும்பூசலிடுகின்றனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதனை அன்றைக்கே தெளிவுபடுத்தியுள்ளார். அவர் ‘நீள் நறு நெய்தல்’ என்ற குறிஞ்சிப் பாட்டு அடிக்கு (79) நீண்ட நறிய நெய்தற் பூ என்று கூறினாராயினும், ‘கட்கமழ் நெய்தல்’ என்றவிடத்து (குறிஞ். 84) தேன் நாறுங் கருங்குவளை என்று உரை கூறினார். மேலும் அவரே ‘தண்கயக்குவளை’ (குறிஞ். 63) என்றவிடத்து ‘குளிர்ந்த குளத்திற் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை வகுத்தார். ஆகவே நெய்தல் என்பது கருங்குவளை எனவும், குவளை என்பது செங்கழுநீர் எனவும் எளிதில் அறியலாம். இதனை அறியாத விரிவிலா அறிவினர் வாய்க்கு வந்தவாறு உரை எழுதிக் குழப்பி விட்டனர். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இங்ஙனம் உரை கூறியதற்கு மூலமில்லாமலில்லை. ‘சிறுகரு நெய்தல்’ என்ற பேயனார் கூற்று (அகநா. 230-2) மீள நினைதற்பாலது. கபிலர் நெய்தலையும் குவளையையும் தனித்தனிப் பிரித்துப் பேசுவர். அன்றி நீலப்பூ ஒன்றும் இவற்றுடன் இணைத்துப் பேசப்படுகின்றது.

“கட்கமழும் நறுநெய்தல்
 வள்ளிதழ் அவிழ் நீலம்”
-மதுரைக். 250, 251

என மாங்குடி மருதனார் பாடுதலின் நெய்தல் வேறு, நீலம் வேறு என்பதாயிற்று.

“தண் கயக் குவளை”-குறிஞ். 63

“நீள்நறு நெய்தல்”-குறிஞ். 79 எனக் கபிலரும்,

“மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி”-பட்டின. 241

எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் கூறுதலின் நெய்தல் வேறு, குவளை வேறு என்பதாயிற்று.

“அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி”

-பெரும்பா. 293
எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுதலின் குவளை வேறு, நீலம் வேறு என்பதாயிற்று.

“பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்”-ஐங்கு. 2

என ஓரம்போகியார் பாடுதலின் நீலம் வேறு, நெய்தல் வேறு என்பதோடன்றி நீலம், கருங்குவளை ஆகாமையும் புலனாகும். ‘அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி’ என்ற இப் பெரும் பாணாற்றுப்படை அடிக்கு நச்சினார்க்கினியர் “சாதிலிங்கம் போன்ற இதழை உடைய குவளையொடு நீலப்பூவும் வளர்ந்து” எனக் குவளையைச் செங்குவளையாக்கி உரை கூறியதற்குக் காரணம், உருத்திரங்கண்ணனார் அதனை அரக்கிதழ்க்குவளை என்றதேயாம். மேலும் ‘நீலப்பைஞ்சுனை’ (திருமுருகு. 253) என்பதற்கு நச்சினார்க்கினியர், தருப்பை வளர்ந்த பசிய சுனை என்றாராயினும், பத்துப்பாட்டின் பழைய உரையாசிரியர் ‘நீலோற்பல முதலாகவுள்ள’ என்பதும் உணரற்பாற்று. எனினும் ‘வள்ளிதழ் அவிழ் நீலம்’ (மதுரைக். 251) என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பெருமை உடைய இதழ் விரிந்த நீலப்பூ’ என்றே உரை கூறி, ‘மாயிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி’ (பட்டி. 241) என்ற அடியைக் குவளையொடு ‘மாயிதழ் நெய்தலும் மயங்கி’ எனக் கொண்டு கூட்டி, ‘குவளையொடெ பெருமை உடைய இதழ்களை உடைய நெய்தலும்’ என உரை வகுத்துள்ளார். எனவே நச்சினார்க்கினியர் நெய்தலைக் கருங்குவளை எனவும், குவளையைச் செங்குவளை எனவும் கொண்டதோடன்றி நீலமென்பது நீலப்பூ எனக் குறிப்பதுடன் நெய்தற் பூவை, ‘வள்ளிதழ் நெய்தல்’ எனப் பலரும் பாடுமாறு கண்டு பெருமை உடைய இதழ்களை உடையதாகவே கருதுகின்றார் என்பதும் விளங்கும்.

இருப்பினும், பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியர் (1950) பக். 365 பின்வரும் குறிப்பெழுதுகின்றார்:

“பெருமை உடைய நீலம் நெய்தல் என்னும் இருவகை மலர்களுள், நீலம் சிறப்புடையதாகலின் இவ்வாறு உரை எழுதினார். பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் என்றதற்கு (ஐங்கு. 2-4) அதன் உரையாசிரியர் சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரனென்றது” என்று எழுதியிருத்தல் இதனை வலியுறுத்தும். இக்குறிப்பினை உற்று நோக்கினால் ஐங்குறுநூற்று உரையாசிரியர் நீலம் என்பதற்குக் கருங்குவளை எனப் பொருள் கொண்டதோடமையாமல் ‘சிறப்புடைய கருங்குவளையுடன் சிறப்பில்லாத நெய்தல்’ எனவும் சிறப்புரை செய்துள்ளார் என்பது போதரும். ஆதலின் பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியரும், ஐங்குறுநூற்று உரையாசிரியரும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இம்மலர்ப் பெயர்களுக்கு எழுதியுள்ள உண்மை உரையினை எங்ஙனம் அறியாராயினர் என்பதுதான் விளங்கவில்லை.

ஆகவே குவளை என்பது செங்குவளை எனவும், நீலோற்பலமெனவும், செங்கழுநீர்ப்பூ எனவும் வழங்கியுள்ளமை அறியலாம். தில்லையம்பதியிலே கோயில் கொண்டுள்ள அம்மை சிவகாம சுந்தரியின் திருக்கரத்தில் சற்று விரிந்த நீலோற்பல மலர் உள்ளது. இதன் அகவிதழ்கள் புறத்தில் நீலமாகவும் அகத்தில் சிவப்பு நிறமாகவும் இருக்கும். புறவிதழ்கள் கருஞ்சிவப்பாக இருக்கும். கருங்குவளை என்பதுதான் நெய்தல் மலர். இதன் அகவிதழ்கள் கருநீல நிறமானவை. இதனுடைய புறவிதழ்களின் உட்புறம் கருநீலமாக இருக்குமாயினும் வெளிப்புறம் பசு நீலமாக இருக்கும். செங்குவளை, கருங்குவளை, ஆம்பல் எனப்படும் பல வண்ண அல்லிப் பூக்கள் அனைத்தும் தாவரவியலில் (Nymphaea) நிம்பேயா என்னும் (Genus) பேரினத்தைச் சேர்ந்தவை. இவற்றின் இனப் பெயர்கள் (species) வேறுபடும்.

தாவரவியல் கருங்குவளையாகிய நெய்தலை (Nymphaea violacea) நிம்பேயா வயலேசியா எனவும், செங்குவளையாகிய நீலோற்பலத்தை (Nymphaea stellata) நிம்பேயா ஸ்டெல்லேட்டா எனவும், நீலம் என்பதனை (Nymphaea blue) நிம்பேயா புளு எனவும் அல்லியாகிய ஆம்பலை (Nymphaea pubescens) (வெள்ளை அல்லி) நிம்பேயா பூபசென்ஸ் எனவும், செந்நிறமான அரக்காம்பலை (Nymphaea rubra) நிம்பேயா ரூப்ரா எனவும், நீல அல்லியை (Nymphaea ampla) நிம்பேயா ஆம்பிளா எனவும் குறிப்பிடுவர். இவையனைத்தும் (Nymphaeaceae) நிம்பயேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை.

மற்று, ஒரு சிலர் நிறத்தை மட்டுங் கொண்டு நீல அல்லியை கருங்குவளை என்றோ நெய்தலென்றோ நீலமென்றோ கருதுவதற்கு இடமுண்டு. ஆனால், இவைகளின் இலை வடிவம் வேறுபடுதலின் அங்ஙனம் கொள்ளுதல் கூடாது. செங்குவளையின் இலை அல்லியின் இலையைப் பெரிதும் ஒத்திருக்கும். அல்லியிலை வட்ட வடிவானது. செங்குவளையின் இலை ஏறக்குறைய முட்டை வடிவானது. கருங்குவளையின் இலை முக்கோணமாக நீள்முட்டை வடிவம் அல்லது அகன்ற வேல்முனை வடிவானது; செங்குவளை, அல்லி இவற்றின் இலைகளைப் போலவே அடியில் பிளவுபட்டிருக்கும்; சற்றுச் சிறியதாக இருக்கும் இலைக்காம்பு இவற்றின் இலையின் அடி ஒட்டியது; இலைகளும் பூக்களும் நீண்ட காம்புகளை உடையன. இலைகள் நீரில் மிதக்கும். இம்மூன்று இனமான நீர்க்கொடிகளையும் இவற்றின் இலை வடிவைக் கொண்டுதான் வேறுபடுத்த முடியும்.

நெய்தல் இலையை வடித்தெடுத்த வேல் இலைக்கு உவமித்துப் பாடுகின்றார் அகநானூற்றுப் புலவர் குடவாயிற் கீரத்தனார். இப்பாட்டு இல்லையெனின் நெய்தலின் தாவரவியற் பெயரைக் கண்டு சொல்ல முடியாது போகும்.

“நெய்தல் உருவின்ஐது இலங்கு அகல்இலை
 தொடையமை பீலி பொலிந்த கடிகை
 மடைஅமை திண் சுரை மாக்காழ்வேலொடு”

-அகநா. 119: 11-13

இதனுள் கூறிய நெய்தல் இலையின் வடிவம் தாவரவியல் நூல் விவரிக்கும் இதன் வடிவத்துடன் ஒத்துள்ளமை மகிழ்தற்குரியது. மலர் நீலநிறமாகவும், மையுண்ட கண் போன்றுமிருக்கும். நறுமணம் உடையது.

“நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த”-நற். 382:2
“சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 230:2
“நீல்நறு நெய்தலின் பொலிந்த உண்கண்”-புற. 244


மேலும் இதன் மலர் விரியும் போது நறுமணம் வெளிப்படும். இதழ்களுக்கு அடியில் உட்புறமாகத் தேன் சுரப்பிகள் உள்ளன. இதன் தேனும் நறுமணமுடையது. ஆதலின் ‘கட்கமழ் நறுநெய்தல்’ எனப் புலவர் பாடுவர். இதன் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட சுரும்பு நெய்தலின் மதுவையும் மகரந்தத்தையும் உண்டு மகிழும்.

நெய்தல் நிலம்

பாண்டியன் நாடு ஐவகை நிலங்களும் அமையப் பெற்றது. இவற்றை விவரிக்கும் மதுரைக் காஞ்சி நெய்தல் நிலத்தின் பொதுவியல்புகளைக் (314-325) கூறுகின்றது.

பெருநீர் ஓச்சுநர் தமது நாவாயின் கண்ணே கடல் தந்த முத்துக்களையும், விளங்கும் வளையல்களையும், உப்பு, புளி, மீன் உணங்கல் முதலாய பலவாய் வேறுபட்ட பண்டங்களையும் ஏற்றியுள்ளனர். யவனம் முதலிய தேயத்தினின்றும் கொண்டு வந்த குதிரைகளும் அவற்றுள் உள்ளன. இவ்விடத்துண்டாகிய பேரணிகலன்களையும் பிறவற்றையும் ஆண்டுச் செலுத்துதற்கு இப்பரிகள் வேண்டப்படும். இவை நாள் தோறும் நிகழும் நடைமுறை. இவை மிகுகையினாலே நெய்தல் நிலப் பாங்கு வளம் பல பயிலப்பட்டு உள்ளது என்பர் மாங்குடி மருதனார்.

நெய்தல் (கருங்குவளை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பயேசீ (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : வயலேசியா (violacea, )
தாவர இயல்பு : நீர் வாழ் செடி, பல பருவ நீர்த் தாவரம்
தாவர வளரியல்பு : நன்னீரிலும், கழிநீரிலும், உப்பங் கழியிலும் பல்லாண்டு வாழும் நீர்ச் செடி

நெய்தல்-கருங்குவளை
(Nymphaea violacea,)

வேர்த் தொகுதி : சேற்றில் புதைந்துள்ள அடிமட்டத் தண்டு (கிழங்கு) நீர் நிரம்பும் போது தளிர் விட்டு வளரும். நீரின் மேலே இலை, அரும்பு, மலர் முதலியவை காணப்படும். நீர் வற்றிய போது இவை அழிந்து போனாலும் கிழங்கு (அடி மட்டத் தண்டு) அழியாது இருக்கும்.
இலை : கிழங்கிலிருந்து உண்டாகும். இலைக் காம்பினால் இணைந்த நீள் முக்கோண வடிவான அகன்ற வேல் இலை போன்ற பசிய இலைகள் நீரில் மிதந்து காணப்படும். இவ்விலை அல்லியின் இலையைப் போலவே அடியில் நீண்ட பிளவுற்றிருக்கும் (அல்லியிலை வட்ட வடிவானது).
இலைக் காம்பு : நீளமானது, நீரளவிற்கும் நீளும் இயல்பிற்று.
இலை விளிம்பு : கூரிய சிறு பற்களை உடையது. பற்கள் இடையீடுபட்டவை.
இலைப் பரப்பு : இருபுறமும் உரோமங்களற்றவை.
மலர் : ஒழுங்கானவை. இருபாலானவை. நீண்ட மலர்க்காம்பின் நுனியில் தனி மலராக வளரும். மலர்க்காம்பு இலைக் கோணத்தில் உண்டாகும். நீலமும் கரு நீலமான மலர்.
புல்லி வட்டம் : 3-4 புல்லி இதழ்கள். புறத்தில் கரும் பசிய நிறமானது. உட்புறம் வெளிர் நீலமானது. திருகு அமைப்பானது.
அல்லி வட்டம் : 8-10 நீண்ட வளவிய அகவிதழ்களை உடையது. நீலமும் கருநீலமுமான நிறமான அகவிதழ்கள். சுற்றடுக்காக அமைந்துள்ளன. உள்ளடுக்குகள் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் நிலையில் உள்ளன.
மகரந்தத் தாள்கள் : எண்ணற்ற இதழ் போன்ற மகரந்தத் தாள்களுடன் சிறிய, உள்நோக்கி அமைந்த மகரந்தப் பைகளைக் கொண்டிருக்கும். 3 சூலிலைகள் இணைந்து பல அறைகள் கொண்ட சூற்பையாக இருக்கும்.
சூல்கள் : அதிகமானவை, அனட்ரோபஸ் வகையிலானவை

இது நீலோற்பலம் என்று கருதப்பட்டுத் தில்லைக் கோயிற் புறத்திலுள்ள குட்டையில் வளர்க்கப்பட்டிருந்தது. நீலோற்பல மலரின் அகவிதழ்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும், புறவிதழ்கள் கருஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். மேலும், இது செங்கழுநீர் எனவும் குவளை எனவும் வழங்கப்படும். இதனைப் பற்றிய விளக்கங்களைக் குவளை என்ற தலைப்பில் காணலாம்.


  1. இலக்கியம் ஒரு பூக்காடு: பக் 176