சங்க இலக்கியத் தாவரங்கள்/015-150
பசும்பிடி
கார்சீனியா ஸ்பைகேட்டா (Garcinia spicata,,HK f.)
குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் ‘பசும் பிடி’ என்பதற்குப் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். இது ஒரு மரம் எனவும். ‘பெருவாய் மலர்’ உடையது எனவும், இதன் கொழுந்து மணமுள்ளது எனவும்தான் அறிய முடிகிறது. இதனைக் கொண்டு இதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் கணிக்க இயலவில்லை. ஆயினும், இதனைப் ‘பச்சிலை’ எனக் கொண்டு கலைக் களஞ்சியம் இதற்குக் கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்னும் தாவரப் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. அதனால் இதன் இப்போதைய பெயரான கார்சீனியா ஸ்பைகேட்டா என்ற பெயரைச்சூட்டி இதற்கு விளக்கவுரை வரைதும்.
சங்க இலக்கியப் பெயர் | : | பசும்பிடி |
பிற்கால இலக்கியப் பெயர் | : | பச்சிலைப்பூ |
தாவரப் பெயர் | : | கார்சீனியா ஸ்பைகேட்டா (Garcinia spicata) |
பசும்பிடி இலக்கியம்
“பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” என்றார் கபிலர் (குறிஞ். 70). இதில் உள்ள ‘பசும் பிடி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார்.
‘பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்’ என்பது பரிபாடல் (19: 75). இதற்குப் பரிமேலழகர் ‘பச்சிலையது இளைய கொழுந்து’ என்று உரை கண்டார்.
“கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து”
என்னும் பதிற்றுப்பத்து (81 : 24-25)
“பச்சிலை மரம் தமாலம் பசும்பிடி என்னும் பேரே”
என்று கூறும் சூடாமணி நிகண்டு.[1]
பசும்பிடி என்பதற்குப் பச்சிலை என்றும், பச்சிலை என்பது கார்சீனியா ஸாந்தோகைமஸ் என்றும் கலைக்களஞ்சியம்[2] குறிப்பிடுகின்றது. ஆதலின் இம்மரத்தின் இப்போதைய தாவரப் பெயருடன் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
இவற்றால் அறியக் கூடியவை :
- பசும்பிடி என்பது ஓர் மரம்
- பசும்பிடி என்பது பச்சிலை எனப்பட்டது.
- இதன் கொழுந்து நறுமணம் உள்ளது.
- இதன் மிகுமணத்தால் இதன்பூ ‘இலைமறை பூவாயிற்று’ போலும். இதன் முன்னைய தாவரப் பெயர் ஸாந்தோ கைமஸ் ஒவாலிபோலியஸ் (Xanthochymus ovalifolius) என்பது. இப்போது (Garcenia spicata, HK. f.) கார்சீனியா ஸ்பைகேடா என்று மாற்றப்பட்டு உள்ளதென்பர் காம்பிள் (Vol. 1: p. 53).
இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.
பசும்பிடி தாவர அறிவியல்
|
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை |
தாவரக் குடும்பம் | : | கட்டிபெரே (Guttiferae) |
தாவரப் பேரினப் பெயர் | : | கார்சீனியா (Garcinia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஸ்பைகேட்டா (spicata) |
உலக வழக்குப் பெயர் | : | கொக்கோட்டை என்பர் காம்பிள் |
தாவர இயல்பு | : | மரம், பெரும்பாலும் இதில் மஞ்சள் நிறமான கசிவு நீர் காணப்படும். |
இலை | : | தனியிலை, தோல் போல் தடித்தது. |
மஞ்சரி | : | நுனி வளராப் பூநதுணர் அல்லது கலப்பு மஞ்சரி |
மலர் | : | 2 அங்குலம் முதல் 3 அங்குலம் வரை அகலமானது. வெப்ப நாளில் மலரும். |
புல்லி வட்டம் | : | 4-5 புறவிதழ்கள் |
அல்லி வட்டம் | : | 4-5 அகவிதழ்கள் |
மகரந்த வட்டம் | : | பல தாதிழைகள் |
சூலக வட்டம் | : | 2-12 செல்களை உடையது. சூல்முடி அகன்றது. வழவழப்பானது. |
கனி | : | பெர்ரி என்ற சதைக்கனி |
இம்மரம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தென்னார்க்காடு, புதுக்கோட்டை முதலிய மாவட்டங்களிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் தென் கன்னடம் முதல் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள மலைப்பகுதிகளில் வளரும். இதன் அடிமரம் மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. மிகவும் வன்மை உடையது. கட்டிட வேலைக்குகந்தது.