சங்க இலக்கியத் தாவரங்கள்/024-150

விக்கிமூலம் இலிருந்து
 

கூவிளம்-வில்வம்
ஈகிள் மார்மிலோஸ் (Aegle marmelos,Corrn.)

‘கூவிளம்’ என்று கபிலர் (குறிஞ் 65) கூறிய சொல்லுக்கு நச்சினார்க்கினியர் ‘வில்வப்பூ’ என்று உரை கண்டார். இதுவே ‘வில்வம்’ என்று வழங்கப்படுகிறது. “யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை” என்பதற்கியைய சிவபெருமானுக்கு அருச்சனை புரிதற்கு இதன் இலைகளைச் சூட்டுவர்.

மேலும் யாப்பிலக்கணத்தில் ‘கூவிளம்’, ‘கூவிளந்தண் பூ’ என்பன ஈரசை, நான்கசைச் சீர்களுக்கு முறையே வாய்பாடாகும்.

சங்க இலக்கியப் பெயர் : கூவிளம்
பிற்கால இலக்கியப் பெயர் : வில்வம்
உலக வழக்குப் பெயர் : வில்வம்
ஆங்கிலப் பெயர் : பீல்மரம்
தாவரப் பெயர் : ஈகிள் மார்மிலோஸ்
(Aegle marmelos,Corrn.)

கூவிளம்-வில்வம் இலக்கியம்

வில்வ மரம் என வழங்கப்படும் மரத்தைச் சங்க இலக்கியம் கூவிளம் என்று கூறும்.

“உரிதுநாறு அவிழ் கொத்து உந்தூழ் கூவிளம்-குறிஞ்: 65

என்ற அடியில் உள்ள கூவிளம் என்பதற்கு நச்சினார்க்கினியர் வில்வப் பூ என்று உரை கூறியுள்ளார். நற்றிணைப் பாட்டில் (12) காணப்படும் ‘விளாம்பழம் கமழும் என்றது விளாம்பழத்தைக் குறிக்கும். அந்த ‘விளம்’ என்ற சொல்லுடன் ‘கூ’ என்ற எழுத்தைக் கூட்டிக் ‘கூவிளம்’ என்ற சொல் வில்வ மரத்தைக் குறிக்கிறது. விளமும் கூவிளமும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

சிவ பரம்பொருளுக்கு ஒரு பச்சிலை என்று கூவிளத்தின் இலைகளைக் கொண்டு வழிபடுவர். தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வில்வத்தின் இலைகளைத் தொடுத்த கண்ணியைப் பொன்னால் செய்து அணுக்கத் திருவறையில் அருவுருவாகிய ஆண்டவனுக்குச் சூட்டியுள்ளனர்.

சுந்தரர் இதனைச் சிவபிரான் சூடும் மலராகப் பாடியுள்ளார்.[1] எழு பெரும் வள்ளல்களில் ஒருவரான ‘எழினி’ என்பான், குதிரை மலைக்குத் தலைவன். அவன் தன் அடையாளப் பூவாக இதனைச் சூடினான் என்பர்.

“ஊரனது ஏந்திய குதிரைக் கூர்வேல்
 கூவிளங்கண்ணிக் கொடும் பூண் எழினி”

-புறநா: 158 : 8-9


மேலும், ஒரு தலைமகன் காட்டு மல்லிகை மலருடன் சேர்த்துத் தொடுத்த கண்ணியைச் சூடி வருகுவன் என்பார் பெருங்குன்றூர்க் கிழார்.

“பெருவரை கீழல் வருகுவன் குளவியொடு
 கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும்
 முயங்கல் பெருகுவன் அல்லன்”
-நற்: 119 : 8-10

அன்றியும், பகைவரது தலைகளாகிய அடுப்பில், கூவிள மரத்தின் விறகைக் கொண்டு எரிப்பர் என்று புறநானூறு கூறுகின்றது.

“பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பில்
 கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்”

-புறநா: 372 : 5-6


கூவிளம்—வில்வம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே
தாவரக் குடும்பம் : ரூட்டேசி

கூவிளம்
(Aegle marmelos)

தாவரப் பேரினப் பெயர் : ஈகிள்
தாவரச் சிற்றினப் பெயர் : மார்மிலோஸ்
தாவர இயல்பு : சிறிய முட்களுடன் கூடிய மரம். 10-20 மீ. வரை உயர்ந்து வளரும் வலிய மரம்
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : மாற்றடுக்குக் கூட்டிலை. 3 சிற்றிலைகள் சவ்வு போன்றிருக்கும். சற்றே அரவட்ட பற்களுடனும், உரோமம் அடர்ந்தும் அல்லது இல்லாமலும் இருக்கும்
மஞ்சரி : கலப்புப் பூந்துணர், இலைக் கோணங்களில் உண்டாகும்
மலர்கள் : இரு பாலானவை, வெண்மை நிறமானவை
புல்லி வட்டம் : 4-5 சிறிய மடல்கள், முதிர்ந்தவுடன் உதிர்வன
அல்லி வட்டம் : 4-5 அல்லியிதழ்கள் பிரிந்தவை. நீள் சதுரமானவை. விரிந்திருக்கும் திருகு இதழமைப்பு உடையது
வட்டத் தண்டு : தெளிவற்றது
மகரந்த வட்டம் : எண்ணற்ற 30-60 மகரந்தத் தாள்கள் வட்டத் தண்டினைச் சுற்றிச் செருகப்பட்டிருக்கும்
மகரந்தத் தாள்கள் : மெல்லியவை. சீரானவை. மகரந்தப் பைகள் நேராகவும், நீண்டும் காணப்படும்
சூலக வட்டம் : சூற்பை முட்டை வடிவமானது. 8-20 அறைகளுடனும் தடித்த வட்ட அச்சினைச் சுற்றியுமிருக்கும்.
சூல் தண்டு : குட்டையானது; சூல்முடி நீள் சதுரமானது சுருட்டு வடிவமானது; முதிர்ந்தவுடன் உதிர்ந்து விடும்
சூல் : எண்ணற்றவை; இரண்டு அடுக்குகளில் காணப்படும்
கனி : காய் முதிர்ந்து கனியாகும். உருண்டை வடிவானது. ஒற்றை அறையையுடைய சதைக்கனி; புறத்தோலாகிய ஓடு சுரசுரப்பானது; மரக்கட்டை போன்றது
விதை : நீள் சதுரமானவை; சதையில் அமுங்கியிருக்கும் முளை சூழ் தசையில்லை. வித்திலைகள் தடிப்பாயும், சதைப்பற்றுடனும் காணப்படும்.

இதன் கனி மருந்துக்குப் பயன்படும்


  1. நாறு கூவிள நாகுவெண் மதியத்தொடு
     ஆறுசூடும் அமரர் பிரான்-சுந். தேவா: காய்: 3