சங்க இலக்கியத் தாவரங்கள்/035-150
கருவிளை–செருவிளை
கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, Linn.)
“எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை” (குறிஞ். 68) என்பது கபிலர் வாக்கு.
- கருவிளை என்பது கருங்காக்கணம்;
- செருவிளை என்பது வெண்காக்கணம்.
இவையிரண்டும் வெவ்வேறு கொடிகள். கருநீலப்பூக்களை உடைமையின் ‘கருவிளை’ எனவும், வெண்ணிறப் பூக்களை உடைமையின் (அதற்கு எதிரான) ‘செருவிளை’ எனவும் வழங்கப்பட்டன. இவற்றுள் கருவிளையின் மலரைக் காதலர் பிரிந்த மகளிரின் நீர் வாரும் கண்களுக்கு உவமை கூறினார் கீரன் எயிற்றியனார். ‘கடிதடங்காக்கணமே’ என்று கருவிளை மலரைப் பெண் குறிக்குப் பிற்காலப் புலவர்கள் கூறுவது போலத் தாவரவியலிலும் இம்மலர் இக்குறியின் உள்ளுறுப்பை ஒத்தது என்னும் பொருள் தோன்ற, இதற்குக் ‘கிளைடோரியா என்ற பேரினப்பெயர் வகுத்தனர்!
கருவிளையும், ⟨செருவிளையும் தாவரவியலில் ஒரே சிற்றினப் பெயரால் குறிப்பிடப்படுகின்றன.⟩
சங்க இலக்கியப் பெயர் | : |
|
பிற்கால இலக்கியப் பெயர் | : |
|
உலக வழக்குப் பெயர் | : |
|
தாவரப் பெயர் | : | கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, Linn.) |
கருவிளை
(Clitoria ternatea)
கருவிளை–செருவிளை இலக்கியம்
கபிலர் தமது குறிஞ்சிப்பாட்டில் அமைத்த பூப்பந்தலில்,
“எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை”-குறிஞ் 68
என்று இவ்விரு மலர்களையுங் குறிப்பிடுகின்றார். இவற்றுள் ‘செருவிளை’ என்பது வெண்காக்கணம்; ‘கருவிளை’ என்பது கருங்காக்கணம். இரண்டும் சிறு கொடிகள். சங்க இலக்கியங்களில் கருவிளை மலர் மிகுத்துப் பேசப்படுகின்றது. செருவிளை மலரைக் குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காண முடிகின்றது. செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர். இப்பூ மிக அழகானது.
“மணிகண் டன்ன மாநிறக் கருவிளை
ஒண்பூந் தோன்றியொடு தண்புதல் அணிய”-நற். 221 : 1-2
“தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர்
ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர”-நற். 262 : 1-2
என்ற விடங்களில் பின்னத்தூரார் கருவிளை என்பதற்குக் கருங் காக்கணம் என்று உரை கூறுவர். ‘செருவிளை’ என்பதை வெண் காக்கணம்.என்ற நச்சினார்க்கினியர் ‘கருவிளை’ என்பதைக் கருங் காக்கணம் என்று கூறாமல் ‘கருவிளம் பூ’ என்று குறிப்பிட்டது சற்று மயக்கந் தருவதாக உள்ளது. பொதுவாக, யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகக் கொள்ளுவதோடு, கருவிளாவாகிய விளாவையுங் குறிக்கும் என்பர். ‘விளம்பழங்கமழும்’ (நற். 12 : 1) என்பது கருவிளங்கனியாமாறுங் காண்க.
கருவிளை என்னுங்கொடி, தண்ணிய புதல்தொறும் மலர்ந்து அழகு செய்யுமென்பதையும், கண் போன்ற கரிய மலர்களை உடைய கருங்காக்கணக் கொடி வாடைக் காற்று வீசுதலின் கூத்தாடுகின்ற மயிலின் பீலி போன்று ஆடா நிற்கும் என்பதையும் முன்னர்க் கண்டோம். மேலும், கருவிளாவின் மலர் கண் போன்றதன்று. ‘கருவிளா’ என்பது மரம்; கருவிளங்கனி, கூவிளங்கனி போன்றது. (இதன் விரிவைக் ‘கூவிளம்–கருவிளம்’ என்ற தலைப்பில் காணலாம்) அன்றியும்,
“காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலர”-அகநா. 294 : 4-5
செருவிளை
(Clitoria ternatea)
என்னுமாறு, கருங்காக்கணம்பூ பெரிதும் நீர்ப்பசை உடையதாகவும் காதலனைப் பிரிந்த மகளிரின் கண் போன்று நீரைச் சொரிந்து கொண்டு இருக்கும் என மிக நன்றாக உவமித்தார் கீரன் எயிற்றியனார். மேலும்,
“கண்ணெனக் கருவிளை மலர”-ஐங். 464
“கருவிளை கண்போன் மாமலர்”-நற். 262
“கருவிளை கண்போற் பூத்தன”[1]
என்பன காண்க.
கருவிளைக்கு மாறுபட்ட நிறங்கொண்ட வெண்மைப் பூ வெண்காக்கணம் எனப்பட்டது. ‘செரு’ என்றால் ‘மாறுபாடு’ என்று பொருள். கருமைக்கு மாறுபட்ட வெண்மை நிறமான ‘காக்கணம்’ செருவிளை எனப்பட்டது. புட்பவிதி நூலார் இவற்றை
“கருமுகைக் கருங்காக் கொன்றை
முருகாரும் வெண்காக் கொன்றை”[2]
என்றனர். ஆண்டாள் கருவிளையைக் கார்க்கோடப்பூ என்று அழைக்கின்றாள்.
தாவரவியலில் இக்கொடிகள் பாப்பிலியோனேட்டே (Papilionatae) என்ற தாவரத் துணைக் குடும்பத்தைச் சார்ந்தவை ஆகும். இத்துணைக் குடும்பத்தில் பத்துப் பிரிவுகள் (டிரைப்-Tribe) உள்ளன இவற்றுள் எட்டாவது பிரிவில் 5 துணைப்பிரிவுகள் காணப்படும். நான்காம் துணைப் பிரிவு யூபேசியோலியே (Eபphaeseoleae) எனப் படும். இதில் 6 பேரினங்கள் பேசப்படும். இவற்றுள் முதலாவது கிளைடோரியா (Clitoria) என்பது. இப்பேரினத்தில் 27 சிற்றினங்கள் உள்ளன என்பர். இவற்றுள் ஒன்று கருவிளை. இதனைக் கிளைடோரியா டர்னாட்டியா (Clitoria turnatea, L.) என்றழைப்பர். இம்மலரின் நிறம் கருநீலம்.
கருவிளை—செருவிளை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflorae) |
தாவரக் குடும்பம் | : | பாப்லியோனேட்டே (Papilionatae) |
தாவரப் பேரினப் பெயர் | : | கிளைட்டோரியா (Clitoria) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | டர்னாட்டியா (turnatea) |
சங்க இலக்கியப் பெயர் | : | கருவிளை, செருவிளை |
ஆங்கிலப் பெயர் | : | மஸ்ஸெல் ஷெல் கிரீப்பர் (Musael-shell creeper) |
தாவர இயல்பு | : | கொடி. மெல்லிய கம்பி போன்ற சுற்றுக் கொடி 100 செ.மீ. முதல் 150 செ. மீ. நீளமாகவும், சுற்றிப் படர்ந்தும் வளரும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | 5-9 சிற்றிலை கொண்ட கூட்டிலை. இலைக் காம்பு 5 செ.மீ. முதல் 7 செ.மீ. நீளமானது. இலையடிச் செதிலுண்டு. நிலையானவை. |
சிற்றிலை | : | 3 செ. மீ. முதல் 5 செ. மீ. X 2-2.5 வரை. நுனிச் சிற்றிலை 4 முதல் 5 செ.மீ. வரை. சிற்றிலைக் காம்பு 2 மி. மீ நீளமானது. |
மலர் | : | கரு நீல நிறமானது; மிக அழகானது. இலைக் கக்கத்தில் தோன்றுவது 3-3.5 செ. மீ. வரை நீளமானது. பூவடிச் செதில்களும், பூவடிச் சிறு செதில்களும் நிலைத்து உள்ளன. |
புல்லி வட்டம் | : | குழல் வடிவானது; மேற்புறத்து இரு புல்லி பற்கள் கூம்பு போன்றவை. அடிப் புறத்தில் மூன்று பற்கள் உள. பசுமையானவை. |
அல்லி வட்டம் | : | 5 இதழ்களால் ஆனது. பதாகை இதழ். நேராகவும், அகன்றுமிருக்கும். அடியில் ஆரஞ்சு நிறமாயிருக்கும். பக்கத்து இரு சிறகு இதழ்கள் (falcate oblong) அடியில் இணைந்திருக்கும். அடியிதழ்கள் இணைந்து உள் வளைந்திருக்கும். கரு நீல மலர் கருவிளை, வெண்மையான |
மலர் உடையது செருவிளை. இதன் பதாகையிதழ் 4 செ.மீ. X 4 செ. மீ. இதன் குறுகிய அடியில் உட்புறத்தில் மஞ்சள் நிறமானது. இதில் கையன்ன நரம்புகள் மேல் நோக்கி எழும். இதன் இரு சிறகிதழ்கள் 2 செ.மீ. X 1 செ.மீ. ஒட்டினாற் போலிருக்கும் . இவற்றினுள் கீழிதழ்கள் இரண்டும் இணைந்து மகரந்த வட்டத்தை மூடியிருக்கும். | ||
மகரந்த வட்டம் | : | இரு தொகுதியாக இருக்கும் |
சூலக வட்டம் | : | ஓரறைச் சூலகம். பல சூல்கள். சூல் தண்டு உள்வளைந்திருக்கும். நுனியில் நுண் மயிரிழைகள் காணப்படும். |
கனி | : | நீண்ட தட்டையான வெடிகனி. பல விதைகளை உடையது. |
நீல மலர்களை உடையவை கருவிளை ஆகும். வெண்ணிற அல்லி இதழ்களை உடைய மலர்களைத் தரும் கொடி செருவிளை எனப்படும். இவையிரண்டையும், தாவரவியலில் ஒரே டர்னாட்டியா இனத்தில் அடக்குவர். எனினும், வெண்ணிறப் பூக்களையுடைய செருவிளை, கருவிளையினின்றும் வேறுபட்ட ஒரு வகை (variety) என்று கருதப்படுகிறது.
வெண்காக்கணமாகிய செருவிளைக்கும் தாவரவியலில் இப்பெயரே வழங்கும். செருவிளையும் புதர்களில் ஏறிப் படரும் கொடியே. எனினும், இதில் உண்டாகும் மலரின் நிறம் வெண்மையானது. சங்க இலக்கியங்களில் ‘செருவிளை’ என்ற பெயர், குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணப்படுகிறது. இக்கொடி கருவிளையுடன் சேர்ந்தும், தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் ஏறிப் படரும் சுற்றுக் கொடி. மேலும், கருவிளையைப் போன்று இது மிகுந்து காணப்படுவதில்லை.
பொதுவாக கிளைடோரியா என்ற இப்பேரினம் வெப்ப நாடுகளில் வளர்கிறது என்றும், அதிலும் மேலை நாடுகளில் மிகுத்துக் காணப்படும் என்றும் கூறுப. கருவிளையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என்று ஹீசாப், கப்ரமேனோ (1932), ஜகாப் (1940), ஃபிராம் லெவிவெல்டு (1953), சரோஜா (1961), ஹிபாட்டா (1962, 1983) முதலியோர் கூறுவர்.
இது காறும், செருவிளையைத் தனித்துப் பிரித்து ஆய்ந்தார் எவருமிலர் என்று தெரிகிறது.