சங்க இலக்கியத் தாவரங்கள்/038-150
அவரை
டாலிக்கஸ் லாப்லாப் (Dolichus lablab,Linn.)
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் அவரை மலரையுங் குறிப்பிடுகின்றார் (குறிஞ். 87)
அவரை நீளமாக வளரும் சுற்றுக்கொடி. இதன் பூக்கள் ஊதா (செம்மை), வெளிர் நீலம், வெண்மை ஆகிய நிறங்களை உடையன.
சங்க இலக்கியப் பெயர் | : | அவரை |
தாவரப் பெயர் | : | டாலிக்கஸ் லாப்லாப் (Dolichus lablab,Linn.) |
இந்நாளில் அவரையில் பல வேறுபட்ட வகைகள் கலப்பு முறையில் உண்டாக்கப்பட்டுள்ளன. இவையனைத்திலும் உண்டாகும் அவரைக்காய்கள் கறிக்கு அமையும்.
அவரை
இலக்கியம்
குறிஞ்சிப்பாட்டில் கபிலர்,
“அடும்பர் ஆத்தி நெடுங்கொடி அவரை”.
- குறிஞ். 87
என்று ‘அவரை’யைக் குறிப்பிடுகின்றார். ‘அவரை’ நீண்டு வளரும் ஒரு கொடி. தினையரிந்த புனத்தில் மறுவிளைவிற்காக ‘அவரை’ விதைக்கப்படும் போலும். தினைத்தாளில் அவரைக் கொடி படர்ந்து பனி பெய்யும் முன் பனிக் காலத்தில் பூக்கும் என்று கடுவன் மள்ளன் கூறுவர்.
“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அற் சிரம்”-குறுந். 82:4-6
‘அற்சிர அரை நாளில்’ அவரை பூக்குமெனக் கீரன் எயிற்றியனார் காட்டினார். இதன் மலர் பவளம் போன்ற செம்மை நிறமானதென்றும், இதன் வடிவமைப்பு கிளியின் மூக்குப் போன்று வளைவானது என்றும், இக்கொடி புதரில் ஏறிப் படரும் என்றும் புலவர்கள் கூறுவர்.
“அவரைப் பைம்பூப் பயில அகல்வயல்
.... .... .... .... .... .... .....
இதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்”
-அகநா. 294 : 9-11
“பைந்நனை அவரை பவழங் கோப்பவும்”-சிறுபா. 164
“பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரை
கிளிவாய் ஒப்பின ஒளிவிடு பன்மலர்”-குறுந். 240
இதனைக் கொண்டு அவரையைக் ‘கிளிமூக்கு மலர்’ என்பார் கோவை இளஞ்சேரனார்.[1] அவரையில் வெளிர் நீலமான நீலமணி போன்ற பூவுடைய கொடியுமொன்றுண்டு என்பர் மாங்குடி மருதனார்.
“மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்”-மதுரை. 292-293
அவரை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே-ரோசேலீஸ். அகவிதழ் இணையாதவை. |
தாவரக் குடும்பம் | : | பாப்பிலியோனேட்டே (Papilionatae) |
தாவரப் பேரினப் பெயர் | : | டாலிகஸ் (Dolichus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | லாப்லாப் (lablab) |
சங்க இலக்கியப் பெயர் | : | அவரை |
உலக வழக்குப் பெயர் | : | அவரை |
தாவர இயல்பு | : | நீண்டு வளரும் சுற்றுக் கொடி. |
இலை | : | மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. சிற்றிலைகள் அகன்ற ‘டெல்டாயிட்’ வடிவானவை. இலைச் செதில்கள் அடி ஒட்டியவை. |
மஞ்சரி | : | நீளமான நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்திலும், கொடி நுனியிலும் உண்டாகும். |
மலர் | : | இணரில் 7-8 மலர்கள் இருக்கும். செந்நிற, வெளிர் நீல நிற, வெண்ணிற மலர்களை உடையது. மலர்களின் வடிவம் இத்தாவரக் குடும்பத்திற்கேற்ப அமைந்திருக்கும். |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழாய் வடிவானது. மேலேயுள்ள 2 புறவிதழ்களின் நுனி, கூம்பு போன்றவை. |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இருபக்க இதழ்கள் ஒரே மாதிரியானவை. இவை சிறகிதழ்கள் எனப்படும். மேற்புறத்தில் உள்ள பெரிய, அகன்ற இதழ் பதாகை எனப்படும். அடியில் உள்ள இரு இதழ்கள் அடியில் ஒட்டிக் கொண்டு படகு போன்றிருக்கும். இவ்விரு இதழ்களும் நுனியில் இணைந்து, உள்வளைவாகக் கிளி மூக்குப் போன்றிருக்கும். |
மகரந்த வட்டம் | : | இரு தொகுதியான (9 - 1) ஒரு படித்தான 10 மகரந்தத் தாள்கள். தாதிழைகள் மெல்லியவை. |
சூலக வட்டம் | : | ஒரு செல் உள்ளது. பல சூல்கள் உண்டாகும். சூல்தண்டு மேற்பகுதியில் தடித்திருக்கும். நுண்மயிர் அடர்ந்திருக்கும். சூல்முடி உருண்டையானது. |
கனி | : | அவரைக்காய் முதிர்ந்து பாட் (Pod) என்ற உலர் கனியாகும். |
விதை | : | தடித்த, சற்றுத் தட்டையான, நீள் முட்டை வடிவான விதைகள் கனியுறையில் ஒட்டியிருக்கும். |
அவரையில் சற்று நீண்ட காயுடைய, தட்டையான அவரைக்கு (typicus) டிபிகஸ் என்றும், சற்றுக் குட்டையான காயுடைய, தட்டையான அவரைக்கு (lignosus) லிக்னோசஸ் என்றும், வகைப் பெயர்களை (varietal names) பிரெயின் (Prain) என்பவர் குறிப்பிடுகின்றார்.
அவரைக்காய் உணவாகப் பயன்படும். அதனால், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. இந்நாளில் அவரையில் பலவேறுபட்ட அவரை வகைகள் கலப்பு முறையில் உண்டாக்கப் பெற்று உள்ளன. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=20 என வாசில் (1962) என்பாரும், பிரிச்சர்டு (1964) என்பாரும், 2n=22 என காவாகாமசென் (1928), சென்; என். கே. மாரிமுத்து (1960), பிர்சித்து (1966) முதலியோரும் கணக்கிட்டனர்.
- ↑ இலக்கியம் ஒரு பூக்காடு: பக்: 685