சங்க இலக்கியத் தாவரங்கள்/040-150

விக்கிமூலம் இலிருந்து
 

வேங்கை
டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
(Pterocarpus marsupium,Roxb.)

சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும் மிக உயரமாக வளரும் பெரும் மரம் வேங்கை. மஞ்சள் நிறமான பூக்கள் எரிகொப்பு விட்டாற் போன்ற செம்மையும் மஞ்சளும் கலந்த பொன்னிறமாகத் தோன்றும். இம்மரம் பூத்த பொழுதில் வேங்கை வரிப் புலியை ஒத்துத் தோற்றம் அளிப்பதால் மகளிர் இதனைப் ‘புலி, புலி’ என்று ஆரவாரம் செய்து கூச்சலிடுவர்.

இம்மரம் மகளிர் போடும் ‘ஏமப்பூசலை’க் கேட்டு வளைந்து கொடுக்கும் என்ற கருத்து உண்டு. இதில் ஏதோ ஓர் உண்மை புதைந்துள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : வேங்கை
தாவரப் பெயர் : டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
(Pterocarpus marsupium,Roxb.)

வேங்கை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் வேங்கை மரத்தைப் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘ஓங்குநிலை வேங்கை’ எனவும், ‘பெருவரை வேங்கை’ எனவும், ‘கருங்கால் வேங்கை’ எனவும் பேசப்படும் இம்மரம், மலைப்பாங்கில் பரவிக் கிளைத்துத் தழைத்து வளரும். நல்ல நிழல் தரும். இதன் நிழலில் மகளிர் விளையாடுவர். குறவர் குரவைக் கூத்தாடுவர். மகளிர் மூங்கிற் குழாயிற் புளித்த தேறலைப் பருகிக் குரவை அயர்வர் என்பர் புலவர் பெருமக்கள்.

“வாங்கமைப் பழுகிய தேறல் மகிழ்ந்து
 வேங்கை முன்றிற் குரவை அயரும்
-புறநா. 129 : 2-3

“. . . . . . . . . . . . . . . . . . . . பெருமலை
 வாங்கமைப் பழுகிய நறவு உண்டு
 வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே”
-நற்: 279 : 8-10

கணவனை இழந்த கண்ணகி அணு அணுவாகப் பிரியும் உயிருடன் தவித்து நிற்கிறாள். அவளுக்கு நறுஞ்சினை வேங்கை நலங்கிளர் கொழுநிழல் தந்தது என்பர் இளங்கோவடிகள்.[1]

கரிய அடி மரத்தை உடைய வேங்கை மரம் இணரூழத்து மலரும். இணரில் உள்ள அரும்புகள் நன்கு விரிந்து மலரும். மூன்று புலவர்கள், ஓரெழுத்தும் மாற்றமின்றி ஒரே தொடராகக் கூறுகின்றனர். இதன் அரும்புகள் ஒரு சேரப் பூத்தலின்,

“அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை”
1. கபிலர்: புறநா. 202 : 18
2. பெருங்குன்றூர்க்கிழார்: நற். 112 : 2
3. கொல்லன் அழிசி: குறுந். 26 : 1

இதன் இணரை, இதனுடைய அழகை, புலப்படுத்திப் புலவர் பலவாறு கூறுவர்.

“மெல்லிணர் வேங்கை”-பதிற். 14 : 11
“வேங்கை ஒள்ளிணர்”-புறநா. 265 : 2
“விரிஇணர் வேங்கை”-அகநா. 38 : 1
“பொன்னிணர் வேங்கை”-நற். 151 : 9

வேங்கையின் மலர் சற்றுச் செம்மை கலந்த மஞ்சள் நிறமானது. எனினும், புலவர்கள் இதனைச் செந்நிற மலர் என்று கூறுவர்.

“கருங்கால் வேங்கைச் செவ்வீ”-நற். 222 : 1
“கருங்கால் வேங்கைச் செம்பூ”-அகநா. 345 : 8
“செவ்வீ வேங்கைப்பூவின் அன்ன”-மலைபடு. 434

எனினும் கீரந்தையார் இதனை எரி கப்புவிட்டாற் போன்ற நிறமுடைய தென்பர்.

“எரிஅகைந் தன்ன வீததை இணர
 வேங்கையம் படுசினை”
-நற். 379 : 2-3

வேங்கை மலரின் செம்மை கலந்த மஞ்சள் நிறத்தைப் பொன்னிறமென்று புலவர்கள் பாடுவர்.

“புலவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ”-ஐங். 217 : 1

“அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப்
 பொன்மருள் நறுவீ”
நற். 257 : 5-6

மலரின் அகவிதழ்களே இந்நிறமுடையன. இதன் புறவிதழ்கள் ‘தகடு’ எனப்படும். இவை சற்றுக் கரிய நிறமானவை என்பர் புலவர்.

“கருங்கால் வேங்கை மாதகட்டு ஒள்வீ”-ஐங். 219 : 1

“அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
 மாதகட்டு ஒள்வீ”
-புறநா. 202 : 18-19

“கார்அரும்பு அவிந்த கணிவாய் வேங்கை”-நற். 373 : 6

புறநானூற்றுப் பழைய உரைகாரரும் மேற்கண்ட அடிகட்கு, ‘வேங்கையினது கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூ’ என்றார். இதன் இணரில் முழுதும் அலராது உள்ள முகைகள் செந்நெல் போன்று காட்சி தருமென்பர் அவ்வையார்.

“அகடுநனை வேங்கைவீ கண்டன்ன
 பகடுதரு செங்நெல்”/b>-புறநா. 390: 21-22

இளமங்கையர்க்கு இன்பப் பூரிப்பால் மார்பிடங்களில் படரும் அழகுத் தேமையைப் புலவர்கள் ‘சுணங்கு’ என்பர். இச்சுணங்கிற்கு வேங்கைப்பூ உவமையாகவும், பெருவழக்காகவும் அமைந்தது.

“பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
 நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை”

-அகநா. 319  : 8-9


வேங்கை நன்னாள் கூறி மலரும் பருவம் கார்ப் பருவமாகும்; அதிலும், முழு நிலவுக் காலத்தில் பூக்கும் என்பர் கபிலர்.

“நல்நாள் வேங்கைவீ நற்களம் வரிப்பக
 கார்தலை மணந்த”
-அகநா. 133 : 4-5

“பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன
 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே”
-அகநா. 2:15-17

பின்வரும் அகநானூற்றுப் பாடலில் ஒரு சுவையான சொற்றொடர் வேங்கை மலரும் காலத்தைக் குறிக்கும் தொடர்பில் உள்ளது. கார்காலம் தொடங்கு முன் வருவேன் எனறு சொல்லிச் சென்றவன், ‘கார் காலத்தை அறிவிக்க வேங்கை மலர்வதை எண்ணி நின்னை வரைந்து கொள்ள வருவான்’ என்று தோழி தலைவியிடம் கூறுகின்றாள்.

“வருமே தோழி நன்மலைநாடன்
 வேங்கை விரிவிடம் நோக்கி
 வீங்கிறை பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே”

-அகநா 232 : 6-7


இப்பாடலில் வரும் ‘வேங்கை விரிவிடம்’ என்ற சொற்றொடர் தொல்காப்பிய உரையாசிரியர்களைக் கவாந்துள்ளது. வேங்கை விரி இடம் என்பதில் இடம் என்பது வினை நிகழ் இடமன்று. சேனாவரையர் இதற்குக் ‘காலமாகிய இடம்’ என்றார் (தொல். சொல். 81-உரை). நச்சினார்க்கினியரும் ‘வேங்கை அலர்கின்ற காலத்தைப் பார்த்து’ என்று உரை கூறினார். இதனை இடமாகக் கொண்டால், இங்கு வதுவை மணம் நிகழும் என்று கொள்ள நேரும். வதுவை மணம் இல்லத்தே நிகழ்வதாகலின், இது பொருந்தாது. இதில் வரும் ‘வரைந்தனன் கொளற்கு’ என்றது. ‘வரைநது எனது தோளைத் தழுவிக் கொள்வதற்கு’ என்ற பொருளாகும். எனவே, வேங்கை மலரும் நாள், காலத் தொடக்கமாகி, அது திருமணத்திற்கு நாளை அறிவிக்கும் அறிவிப்பாகும் என்று கூறுவர் கோவை இளஞ்சேரனார்![2]

வேங்கை மரத்தின் கரிய நிறமுள்ள கிளைகளில் மஞ்சளும், மங்கிய செம்மையுமான நிறமுள்ள மலர்கள் கொத்தாகப் பூக்கும். பூக்கள் வரிப் புலியைப் போலத் தோன்றும். இதன் பூக்களைக் குறவர் மகளிர் கொய்து கூந்தலிற் சூடிக் கொள்வர். ‘வேங்கை மரம் மிக உயரமானது. அதன் மேல் ஏறிப் பூக்கொய்தல் அத்துணை எளிதன்று. ‘வேங்கை மரக்காட்டில் யானைகள் பொருகின்றன. பக்கத்தில் இருந்த வேங்கை மரம் சாய்கின்றது. அதில் பூத்திருந்த பூக்களை, அதன் மேலேறாமலே, குறவர் மகளிர் நிலத்திலிருந்து கொய்து சூட்டிக் கொள்வார்’ என்பதுபட ஒரு குறுந் தொகையுண்டு.

வரைவிடை வைத்துத் தலைமகன் பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்ற தோழிக்கு, அவள் ‘யான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும், நொதுமலர் வரையப் புகுவரேல் என் செய்வதென்று ஆற்றேனாயினேன்’ என்றது இப்பாடல்.

“ஒன்றே னல்லேன் ஒன்றுவன் குன்றத்துப்
 பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
 குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
 நின்றுகொய மலரும் நாடனொடு
 ஒன்றேன் தோழி ஒன்றனானே”
-குறுந். 208

இப்பாடலுக்கு இளம்பூரணர் இறைச்சிப் பொருள் கூறுகின்றார். (தொல். பொ. 34) “வரை வெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என்னெனக் கவன்ற தோழிக்கு, உடன் போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியது. ஆதலின் இதனுள், பொருகளிறு என்றமையால் தலைமகள் தமர், வரைவிற்கு உடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்டனர் என்பது தோன்றுகிறது. பொருகளிறு மிதித்த வேங்கை, என்றதனால் பொருகின்ற இரண்டு களிற்றினும் மிதிப்பது ஒன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை அவமதித்தவாறு காட்டிற்று. வேங்கை நின்று கொய்ய மலருமென்றதனால், முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனால், பண்டு நமக்கு அரியனான தலைமகன் தன்னை அவமதிக்கவும் நமக்கு எளியனாகி அருள் செய்கிறானெனப் பொருள் கிடந்தவாறு காண்க. மிதியுண்டு வீழ்ந்த வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற் போல யானும் உளனாயினேன் என்றமையின் மெய்யுவமை போலியாயிற்று”.

நக்கினார்க்கினியர் இப்பாடலில் வரும் உவமையை உள்ளுறை உவமமாக்கிப் பொருள் கூறுகின்றார் (தொல்: அகத். 47)

‘இக்குறுந்தொகை பிறிதொன்றன் பொருட்டுப் பொருகின்ற யானையால், மிதிப்புண்ட வேங்கை நசையற வுணங்காது மலர் கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடன் என்றதனானே, தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் எம்மை இறந்து பாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினான் எனவும், அதனானே நாமும் உயிர் தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க’.

ஆதலின் ஒரே குறுந்தொகைக்கு இரு பெரும் உரையாசிரியர்கள் இறைச்சிப் பொருளும், உள்ளுறை உவமப் பொருளும் கூறியுள்ளமை நுண்ணிதின் உணர்ந்து மகிழ்தற்பாலது. ஓங்கி வளர்ந்த வேங்கை மரத்தின் மேலேறிப் பூக்கொய்தல் உண்டெனினும், பூத்த வேங்கையின் அடியிலே நின்று கொண்டு மகளிர், “புலி, புலி” என்று பூசலிடுவதைப் புலவர் பெருமக்கள் கூறுவாறாயினர்.

“கருங்கால் வேங்கை இறுஞ்சினைப் பொங்கர்
 நறும்பூக் கொய்யும் பூசல்”
-மது. 296

“மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி
 ஏறாது இட்ட ஏமப்பூசல்”
-குறுந் 241 : 4-5

பூத்த வேங்கையைப் பார்த்துப் “புலி, புலி” என்று கூச்சலிடுகின்றாள் ஒருத்தி. ஊர் மனைகளில் இவ்வோலம் எட்டிற்று. ஆக்களை அடித்துச் செல்லப் புலி வந்ததென ஆடவர், வில்லும் கையுமாக ஓடோடி வந்தனர். புலியைக் காணவில்லை. கிலி கொண்ட குறமகளைக் கண்டு, “புலி எங்கே” என்று உசாவினர். அவள் “வேங்கைப்பூ வேண்டும்” என்றனள்.

“கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
 பொன்நேர்ப் புதுமலர் வேண்டிய குறமகள்
 இன்னா இசைய பூசல் பயிற்றலின்
 ஏகல் அடுக்கத்து இருள்அளைச் சிலம்பின்
 ஆகொள் வயப்புலி ஆகும் அஃதுஎனத்
 தம்மலை கெழுசீறூர் புலம்ப கல்லெனச்
 சிலையுடை இடத்தர் போதரும் நாடன்”
-அகநா 52: 2-8

மேலும் இப்பூசலைத் தங்கால் முடக்கொற்றனாரும், பெருங் கௌசிகனாரும் கூறுவதையுங் காண்போம்.

“ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
 புலிபுலி என்னும் பூசல் தோன்ற”
-அகநா. 48 : 6-7



“தலைநாள் பூத்த பொன்னிணர் வேங்கை
 மலைமார் இடூஉம் ஏமப்பூசல்”
-மலைப. 305-306

மலைபடுகடாத்தின் இச்சீரடிகட்கு உரை வகுத்த ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘முதல் நாளிலே பூத்த பொன் போலும் கொத்தினை உடைய வேங்கைப் பூவைச் சூடுதற்கு மகளிர் “புலி புலி” என்று கூப்பிடும் ஏமத்தை உடைய ஆரவாரமும் எனவும், ‘வேங்கை வளைந்து பூவைக் கொடுத்தலின் அச்சந்தீர்த்த பூசல்’ என்றார்’ எனவும் உரை கூறியுள்ளார்.

மகளிர், பூத்த வேங்கையினடியில் நின்று “புலி புலி” என்று பூசலிடும் போது அவர்கள் பூக்கொய்தற்கு வேங்கை மரம் தாழ்ந்து கொடுக்கும் என்ற பழங் கருத்தைச் சங்க நூல்களில் வரும் ‘ஏமப் பூசல்’ என்பதற்குப் பொருள் கூறும் வாயிலாக நச்சினார்க்கினியர் முதன் முதலாகக் கூறியுள்ளமை வியந்து போற்றுதற்குரித்து.

‘வேங்கை’ என்ற சொல் வேங்கை மரத்திற்கே உரியதென்பதையும், வேங்கை பூத்திருப்பதை வேங்கை மரம் புலியைப் பெற்றெடுத்ததாகவே கூறுவதையும் செங்கண்ணார் பாடலிற் காணலாம்.

“வேங்கையும் புலி ஈன்றன”-நற். 389 : 1

வேங்கை மலர்கள் குறவர் சிறு குடிலில் வரிவரியாக உதிர்ந்து படிந்திருக்கின்றன. அதனைப் பார்த்த ஒரு யானை, புலி என்று அஞ்சியதாம். (அகநா. 12 : 9-11)

வேங்கை மரத்தடியில் சற்று நீண்ட கரும்பாறைகள் கிடக்கின்றன. அவற்றின் மேல் வேங்கை இணர்கள் விழுந்து கிடக்கின்றன. இக்காட்சியைக் கபிலர் பாடுகிறார்.

“அரும்பு அற மலாந்த கருங்கால் வேங்கை
 மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
 இரும்புலி வரிப்புறங் கடுக்கும்”
-புறநா. 202 : 18-20

யானை வேங்கையின் தழையையும், பூவையும் உணவாகக் கொள்ளும். தான் உண்பதோடு நில்லாமல், தன் கன்றோடு பெண் யானையையும் தழுவி அழைத்துச் சென்று, வேங்கையின் பெரிய கிளையை முறித்து, அதில் பூத்த பொன் போன்ற பூங்கொத்துக்களைக் கவனமாக ஊட்டும் என்பர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. (நற். 202 : 3-6)

வேங்கைப் பூவை வண்டுணா மலர் என்று கூறும் பிங்கலம். எனினும், வண்டுபடு வேங்கையின் மலரைக் கண்ணியாகச் சூடி வருகிறான் தலைவன் என்று கூறும் அகநானூறு.

“விரியினர் வேங்கை வண்டுபடு கண்ணியன்”
-அகநா. 38 : 1


கருங்களிறு ஒன்று வேங்கை மரத்தடியில் புலியுடன் பொருது வென்றது. தனது எய்ப்பு நீங்கத் தன் துதிக்கையைத் தூக்கிப் பெருமூச்சு விட்டது. இம்மூச்சுக் காற்றால் வேங்கைப் பூக்கள் சிதறிப் பாய்ந்தன. இக்காட்சி, கொல்லன் ஊது உலையில் பிதிர்ந்து எழும் நெருப்புப் பொறி பாய்வது போன்று இருந்தது. பாய்ந்த பொறிகள் பக்கத்திலிருந்த கரும்புதரில் படிந்த காட்சியோ, மின்மினிப் பூச்சிகள் தாவிப் பறந்ததை ஒத்திருந்தது என்று சித்திரம் செய்கின்றார் அகநானூற்றில் கண்ணனார் எனும் புலவர்:

“புலிப்பகை வென்ற புன்கூர் யானை
 கல்லகச் சிலம்பில் கையெடுத் துயிர்ப்பின்
 நல்லிணர் வேங்கை நறுவீ, கொல்லன்
 குருகு ஊதுமிதி உலைப்பிதிர்விற் பொங்கிச்
 சிறுபல் மின்மினிப் போலப் பலவுடன்
 மணிநிற இரும்புதல் தாவும் நாட”
-அகநா. 202 : 3-8

இங்ஙனமாகப் புலவர்கள் வேங்கை மரத்தைப் பற்றிக் கூறுவன எல்லாம் தாவரவியலுண்மைகளுக்கு ஒத்துள்ளன.

வேங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilitionatae)
தாவரப் பேரினப் பெயர் : டீரோகார்ப்பஸ் (Pterocarpus)
தாவரச் சிற்றினப் பெயர் : மார்சூப்பியம் (marsupium)
சங்க இலக்கியப் பெயர் : வேங்கை
பிற்கால இலக்கியப் பெயர் : திமிசு, திமில், கணி
உலக வழக்குப் பெயர் : வேங்கை
தாவர இயல்பு : ஓங்கித் தழைத்து வளரும் வலிய மரம். இலையுதிர் காடுகளில் வளரும்.
இலை : கூட்டிலை; 5-7 சிற்றிலைகள். அகன்றவை; தடித்தவை. நடுவில் அகன்றும், இது மேலும், கீழும் குறுகியுமிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர். கலப்பு மஞ்சரி போன்று .தோன்றும். இலைக் கோணத்தில் வளரும்.
மலர் : மஞ்சள் நிறமானது.
புல்லி வட்டம் : வளைந்த புனல் வடிவானது. 2-4-2 புறவிதழ்கள் மேலுங் கீழுமாக அமைந்திருக்கும்.
அல்லி வட்டம் : நீண்ட 5 தனித்த அகவிதழ்கள். பதாகை இதழ் அகன்று பளபளப்பாகவும், மஞ்சள் நிறமாகவும் காணப்படும் நீள் சதுரப் பிளவுபட்டிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள்; இரு தொகுதியாக இருக்கும். தாதுப் பைகள் ஒரே மாதிரி மாதிரியானவை.
சூலக வட்டம் : ஒரு செல் உடையது. சூல்தண்டு உள் வளைவானது; சூல்முடி குல்லாப் போன்றது. 2-6 சூல்கள்.
கனி : உலர் கனி. பாட் (Pod) எனப்படும். தட்டையானது. இரு பக்கத்திலும் சிறகு போன்ற அமைப்பானது. ஒரு விதையே உள்ளது.

இம்மரம் 4,500 அடி உயரமான மலைப்பாங்கில் இலையுதிர் காடுகளில் தழைத்துக் கிளைத்து ஓங்கி வளரும். இதன் தண்டு அடிமரம் மிக வலிமையானது. கட்டிட வேலைக்குப் பயன்படுவது. பழுப்பு மஞ்சள் நிறமானது. இம்மரத்தில் நீண்டு, அழகிய கோடுகள் காணப்படும். இதில் செந்நிறப் பிசின் (Red-Gum) உண்டாகும். இது மருந்துக்கு உதவும். இம்மரம் பூத்திருக்கும் போது இதன் தோற்றப் பொலிவு மிக அழகானது. இதன் காய்களை முள்ளம் பன்றிகள் தின்று விடுவதால் இம்மரம் இயற்கையில் அருகி வருகிறது.

 

  1. 1. சிலப்பதிகாரம் : பதிகம் : 4
  2. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 413