சங்க இலக்கியத் தாவரங்கள்/085-150
கணவிரம்–செவ்வலரி
நீரியம் இன்டிகம்
(Nerium indicum,Mill.)
சங்க இலக்கியத்தில் ‘கணவிரம்’ எனப் பயிலப்படும் புதர்ச் செடி ‘செவ்வலரி’ ஆகும். இதில் வெள்ளலரியும் உண்டு. இச்செடி கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதனை யாரும் சூடுவதில்லை. இது சிவனுக்குரிய மலர் என்பர். இதில் இன்னொரு வகையும் உண்டு.
சங்க இலக்கியப் பெயர் | : | கணவிரம் |
உலக வழக்குப் பெயர் | : | செவ்வலரி |
தாவரப் பெயர் | : | நீரியம் இன்டிகம் (Nerium indicum,Mill.) |
கணவிரம்–செவ்வலரி இலக்கியம்
அலரும் மலருக்குக் காரணப் பொதுப் பெயராக ‘அலரி’ என்ற ஒரு பெயர் உண்டு. அலரிப்பூ அடுக்காகவும் தொகுப்பாகவும் அலர்வது. சங்க இலக்கியத்தில் இதனைக் கணவிரம் என்பர். நக்கீரர் இதனைக் கணவீரம் என்று கூறுவர்.
“பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி”
—திருமுரு. 236-237
கணவீரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் செவ்வலரி என்று உரை வகுத்தார். பரிபாடல் இதனைக் கணவிரி என்று பகரும்.
“சினைவளர் வேங்கை கணவிரி காந்தள்”
—பரிபா. 11:20
பரிமேலழகரும் கணவிரி என்பதற்குச் ‘செவ்வலரி’ என்றே உரை கூறுவர். அலரிப்பூ அடுக்காகவும், தொகுப்பாகவும் விரிவது ஆகும். கணம் என்றால் தொகுப்பு அல்லது அடுக்கு என்று பொருள்படும். ஆகவே, கணவிரி என்னும் பெயர் அலரிப் பூவுக்கு ஒக்கும். கணவிரத்தையே கணவிரமென்றனர். நிகண்டுகள், இதற்கு அடுக்கு என்ற பெயரையும் சூட்டுகின்றன.
செவ்வலரி என்பதே இதன் நிறத்தைக் கூறுகின்றது. இதில் வெள்ளை அலரியும், மஞ்சள் அலரியும் உண்டு. பாலை நிலப் பாதையில் வழிச் செல்வோரைக் கொள்ளையர், தம் கணையால் அடித்து வீழ்த்துவர். வீழ்ந்தவர் குருதி கொப்பளிப்பக் கிடந்ததை மாமூலனார் பாடுகின்றார். இவரது நிலை சூடிக் கழித்த கணவீர மாலையை ஒத்துள்ளதென்பர்.
“நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண்ணுமிழ்க் குருதி பரிப்பக் கிடந்தோர் ”
-அகநா. 31 :8- 10
கணவிரப் பூமாலை புண்ணுமிழ்க் குருதி போன்றது. மணிமேகலையில் சுதமதி என்பாளது தந்தையைப் புனிற்று ஆ ஒன்று முட்டிக் குடரைச் சரித்தது. குருதி கொட்டும் குடரைக் கையில் ஏந்தி நின்ற அவரைச் சாத்தனார்,
“கணவிர மாலை கைக் கொண்டன்ன
நிணம்நீடு பெருங்குடன் கையத்து ஏந்தி”[1]
இவ்வாறு குருதி தோய்ந்த குடருக்குக் கணவிரமாலை உவமையாயிற்று. அதனால், இதனை ‘நிணக்குடர் மலர்’ என்றார் கோவை. இளஞ்சேரனார்.
முருகனுக்கு அமைக்கும் களவழிபாட்டில், செவ்வலரி மாலையை ஒத்த அளவில் அறுத்துக் கள ஒப்பனையாகத் தொங்க விடப்பட்டிருந்ததை நக்கீரர் கூறுவர்.
“பெருந்தண் கணவீர நறுந்தன் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி”
-திருமுரு. 236ー237
மேலும் ‘கணவிரமாலையில் கட்டிய திரள் புயன்’ என இதனைச் சிவனுக்குரிய மலர் எனக் கூறும்.
பொதுவாக, யாரும் அலரி மாலையைச் சூடுவதில்லை. எனினும், கல்லாடனார்,
“போதவிழ் அலரி நாரில் தொடுத்துத்
தயங்கிரும் பித்தை பொலியச் சூடி”
(பித்தை-குஞ்சி)
-புறநா. 371 : 3-4
என்பார். நாரில், அலரிப் பூவைக் கட்டிக் குஞ்சியில் அழகொடு விளங்கச் சூடியதாகப் பாடியுள்ளார்.
மேலும் தாயங்கண்ணனார், வடுகர் தேயத்து நாட்பலி கொடுக்குநர் அதிரலுடன், அன்றலர்ந்த அலரிப்[2] பூவுடன் கட்டிய மாலையைச் சுரும்புடன் தலையில் சூடியிருப்பர் என்பார்.
“கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி
சுரிஇரும் பித்தை சுரும்பு படச்சூடி”
அகநா. 213 : 3-4
இவ்விரு பாடல்களிலும் கூறப்படும் ‘அலரி’ மாலை கணவிரத்தைக் குறிக்குமா என்ற ஐயம் எழுகின்றது.
அலரி ஒரு புதர்ச் செடி. இதில் செவ்வலரிதான் கணவிரம் எனப்படுகிறது. இதில் மலர்கள் மூன்று அடுக்கான அகவிதழ்களைக் கொண்டவை. இதுவன்றி, ‘வெள்ளலரி’ ஒன்றுண்டு. இதன் மலர்களும் கொத்தாகப் பூக்கும். மலர்களில் 3 அடுக்கான அகவிதழ்கள் உள்ளன. இவையன்றி, செவ்வலரியில் 5 அகவிதழ்களைக் கொண்ட (அல்லி) செடியும், வெளிர் சிவப்பான 5 + 5 அகவிதழ் களைக் கொண்ட செடியும் உண்டு. இது போலவே வெள் அலரியிலும் 5 வெண்மையான அகவிதழ்களைக் கொண்ட செடியும் வளர்க்கப்படுகின்றது. இவையனைத்தும், தாவரவியலில் நீரியம் ஒடோரம் (Nerium odorum, Soland.) என்றே கூறப்படும். பெரும்பாலும் இவை காய்ப்பது அரிது.
இவையன்றி அலரியைப் போலவே உள்ள அரளிச் செடியொன்று உண்டு. இதனையும் அலரி என்றே மயங்கிச் சொல்வர். அரளி என்பது இதனினின்றும் வேறானதென்பதை அரளி என்ற தலைப்பில் காணலாம்.
கணவிரம்—செவ்வலரி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | அப்போசைனேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | நீரியம் (Nerium) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகம் (indicum) |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | அலரி, கணவிரை. கணவீரம் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | அடுக்கு, அலரி |
ஆங்கிலப் பெயர் | : | ஒலியாண்டர் (Oleander) |
தாவர இயல்பு | : | புதர்ச் செடி. 3-4 மீட்டர் உயரமாக அடர்ந்து வளரும். நான்கு வகைகள் காணப்படுகின்றன. |
தாவர வளரியல்பு | : | சீரோபைட் (Xerophyte) பாலை நிலத்தில் வளரும். |
இலை | : | சிறு காம்புள்ளது. மூவிலைத் தொகுப்படுக்கு நீளமானது. 10-16.5 செ.மீ. நீளமும், 2-2.5 செ.மீ. அகலமும், அடியிலும், நுனியிலும் வர வரக் குறுகி இருக்கும். நுனி கூரியது. தோல் போன்றது. பசிய நிறம். நடு நரம்பு மஞ்சள் நிறமானது. |
மலர் | : | இதன் மலரைக் கொண்டு இவற்றில் ஐந்து செடிகளாகக் காணலாம். மலர்க்குழல் மிகச் சிறியது.
|
புல்லி வட்டம் | : | 5 பசிய புறவிதழ்கள் 4-5 மி.மீ - 13 மி.மீ. நீளமானவை எல்லா வித மலர்கட்கும் பொது. |
அல்லி வட்டம் | : | அல்லியிதழ்கள் இணைந்து 6-10 மி.மீ. நீளமான மலர்க் குழல் காணப்படும்.
|
மலர்களிலும் ஒவ்வொரு அகவிதழிலும் அடியில் 6-7 இழைகள் அல்லி ஒட்டி உள்ளன.
| ||
மகரந்த வட்டம் | : | மகரந்தத் தாள்கள் ஒவ்வொரு தாளிலும் மகரந்தப் பைகள் முறுக்கினாற் போல 8-10 மி.மீ. நீளமாக உள்ளன. |
சூலக வட்டம் | : | 2 சூலக அறைகளில் பல சூல்கள் உள. |
சூல் முடி | : | சூல் தண்டு இழை போன்றது. நுனியில் சூல் முடிச்சு அடிப்புறத்தில் 5 நுண் குழல் போன்றது. |
கனி | : | நீண்ட கடினமான அமுங்கிய ஒரு புற வெடி கனி. இதனைக் கொண்டு, சதைக் கனியுள்ள அரளியை வேறாகக் காணலாம். |
விதைகள் | : | ‘ஆப்லாங்’. நுனியில் கோமோ நுண்ணிழைகளுடன் முளை சூழ்தசையுள்ளது. விதையிலைகள் தட்டையானவை. |
இதனை, விதைகள் கொண்டு வளர்க்க இயலாது. தண்டுகளைச் சிறு துண்டாக நறுக்கிப் புதைத்து வளர்க்கலாம். மத்திய தரைக்கடல் பகுதியிலும், வட ஆசியாவிலும், பர்சியா வரையில் அழகுச் செடியாக வளர்க்கப்படுகிறது. சப்பான் நாட்டிலும் காணப்படுகிறது. வட இந்தியாவில் நேபாளத்திலிருந்து மத்திய இந்தியா வரை காணப்படுகிறது. இதில் மஞ்சள் அலரியும் உண்டென்பர். 6500 அடி உயரம் வரையிலும் வளரும்.
இதன் இலைகளில் பசுங்கணிக வரிசைகள் இரண்டு இருக்கின்றன. இவ்வியல்பினால், இது வறண்ட பாலை நிலத்திலும் வாழும் என்று அறியப்படும்.
அப்போசைனேசி எனப்படும் இதன் தாவரக் குடும்பத்தில், 155 பேரினங்களும், ஏறக்குறைய 1000 சிற்றினங்களும் உலகின் வெப்பமான பகுதிகளில் வாழ்கின்றன. இக்குடும்பத்தில் 39 பேரினங்கள் இந்தியாவில் உள்ளன என்று ஹூக்கர் குறிப்பிட்டு உள்ளார். இவற்றுள் அலரி (Nerrum) அரளி (Allamanda) இரண்டும் அடங்கும். அலரியில் நீரியம் இன்டிகம், நீரியம் ஒடோரம் என்னும் இரண்டு சிற்றினங்கள் உள.
மேலும் இக்குடும்பத்தைச் சேர்ந்த புளுமேரியா அக்யூட்டிபோலியா (Plumeria acutifolia) என்ற சிறு மரத்தை ‘ஈழத்தலரி’ என்றழைக்கின்றனர். இது அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு அழகுத் தாவரமாகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது.
நீரியம் ஒடோரம் என்ற இனத்திற்குக் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 எனச் சுகியூராவும்(1931), ஜியோ(Tjio)வும் (1948) கூறுவர். நீரியம் ஒலியாண்டர் என்ற இனத்திற்கு 2n = 16 எனச் சஷீகாஃப், முல்லர் (1937) என்போரும் கண்டனர்.