உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/089-150

விக்கிமூலம் இலிருந்து

பாலை
ரைட்டியா டிங்டோரியா (Wrightia tinctoria,R. Brid.)

‘தில்லை பாலை கல்லிவர் முல்லை’ என்றார் கபிலர். பாலை மரம், பாலை நிலத்தில் வளரும். தொல்காப்பியம் பாலை நிலத்தைக் குறிப்பிடவில்லையாயினும் முல்லை நிலத்தியல்புகளும் குறிஞ்சி நிலத்தியல்புகளும் மாறிப் போய்ப் பாலை என்ற நிலமாகத் திரியும் என்பர் சேரமுனிவர் . இப்பாலை மரத்தின் தாவரவியல் பெயரைக் கண்டு கொள்வதற்குத் துணை புரிந்தது நற்றிணைப் பாடலாகும் (நற். 107).

சங்க இலக்கியப் பெயர் : பாலை
பிற்கால இலக்கியப் பெயர் : பாலை
உலக வழக்குப் பெயர் : வெப்பாலை, நிலமாலை
தாவரப் பெயர் : ரைட்டியா டிங்டோரியா
(Wrightia tinctoria,R. Brid.)

பாலை இலக்கியம்

தொல்காப்பியம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களைக் கூறுமாயினும் சிலப்பதிகாரம் [1] ‘முல்லையுங் குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து பாலை என்பதோர் படிவங் கொள்ளு’மெனக் கூறிப் பாலை நிலத்தையும் உருவாக்கும். இவை ஐந்தும் இவற்றின் ஒழுக்கம் கருதி ஐந்திணைகள் எனவுங் கூறப்படும். இவ்வைந்திணைகட்கும் உரிப் பொருள் வகுத்துரைத்த தொல்காப்பியர், பிரிதலும், பிரிதல் நிமித்தமும் பாலைத் திணைக்கு உரிப் பொருள் என்பர்.

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
 ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
 நேருங் காலை திணைக்குரிப் பொருளே”

-தொல் . அகத் . 16


பிரிதலும், பிரிதல் நிமித்தமும் கூறும் பாலை ஒழுக்கத்தைப் பலபடப் பகர்ந்துள்ளனர் நம் சங்கச் சான்றோர். சங்க இலக்கியத்துள் பாலைத் திணைப் பாக்களே மிகுந்துள்ளன. அகநானூற்றில் ஒற்றைப் படை எண்ணில் அமைந்த பாடல்கள் எல்லாம்–அதாவது வியமெல்லாம்–பாலைத் திணைப் பாக்கள் ஆகும். ஆதலின், அகநானூற்றில் பாலைத் திணைப் பாக்கள் இரு நூறு ஆகும். கலித்தொகையில் பாலைக் கலி முப்பத்தைந்து பாடல்களும், ஐங்குறுநூற்றில் நூறு பாக்களும் பாலைத் திணையைப் பற்றியன. இவையன்றி, ஏனைய சங்க நூல்களில் பாலைத் திணைப் பாக்கள் பல உள. பத்துப் பாட்டில் உள்ள பட்டினப்பாலை, தன் பெயரளவானே பாலை ஒழுக்கத்தை நுதலியதாகும். இதன் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகாற் பெருவளத்தான். இச்சோழ மன்னனுடைய காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்து, இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பட்டினப்பாலை என்னும் சிறந்த பாடலைப் பாடினார் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இப்பாடலுக்குப் பரிசாகப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகக் கொடுத்து, இதனை ஏற்றுக் கொண்டான் கரிகாற் சோழன் என்று கலிங்கத்துப் பரணி[2] கூறும். இப்பாட்டு, தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறியதாக அமைந்துள்ளது.

“முட்டாச் சிறப்பின் பட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்) பெறினும்
 வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
 வாரேன் வாழிய நெஞ்சே”
-பட்டினப். 218-219

என்று கூறிய தலைவன், செலவிடை அழுங்குதற்குரிய காரணத்தையும் பின்வருமாறு கூறுகின்றான்.

பாலை
(Wrightia tinctoria)

“திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய
 வேலினும் வெப்ப கானம் அவன்
 கோலினும் தண்ணிய தடமென் தோளே”

-பட்டினப் 299-301


தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். அதனால், தெய்வமும் கூறிற்றிலராயினும், பாலைத் திணைக்குரிய உரிப் பொருளைக் கூறியுள்ளார். களவியல் உரையுள் பிற திணைகளுக்குள்ளவாறு போல், பாலைத் திணைக்குரிய கருப் பொருள்களைக் காணலாம். அவற்றுள் இருப்பையும், ஓமையும் மட்டுமே மரங்களாகக் கூறப்படுகின்றன. எனினும், சங்க இலக்கியத்துள் பாலை மரம் பாலைத் திணையொழுக்கத்தைக் கூறும் பாக்களில் பயிலப்படுகின்றது.

தலைமகன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி, தன் தோழியை நோக்கித் தன் காதலன் சென்ற பாலை நிலத்தின் நெறியை நினைத்துக் கூறுகின்றாள். ‘அங்கே புல்லிய இலையை உடைய ஓமை மரங்களும், பாலை மரங்களும் வளர்ந்துள்ளன. அந்நெறியில், அங்குமிங்குமாகப் புலி வழங்குகின்றது. காற்றடிக்கும் வேகத்தில், பாலை மரத்தின் இலைகள் உதிர்ந்து விட்டன. அதன் பட்டையை உரித்து யானை தின்று விட்டது. அதனால், அடிமரம் வெள்ளியதாகக் காணப்படுகின்றது. அது வெள்ளிய பூக்களைக் கொண்ட பூங்கொத்துக்களை உடையது; காய்களும் உள்ளன. குறடு போன்ற அதன் காய்கள் காற்றில் அலைக்கப்பட்டு ஒலிக்கின்றன. அவ்வொலி மலையினின்றும் விழுகின்ற அருவியின் ஒலியை ஒத்துள்ளது’ என்று கூறுகிறாள்.

“பிடி பிளந்திட்ட நாரில் வெண்கோட்டுக்
 கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலை
 செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம்
 கல்இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்”
-நற். 107 : 2-5

இந்நற்றிணைப் பாடலைக் கொண்டுதான் பாலை மரத்தின் இயல்புகளைக் கூர்ந்து அறிந்து, இதன் தாவரவியல் பெயரை அறுதியிட முடிகிறது. சங்க இலக்கியத்தில் இவ்வொரு பாடலில்தான், பாலை மரத்தின் காய்கள் குறடு போல்வன என்று கூறப்படுகின்றது. இப்பாடல், பாலைத் திணைக்குரிய உரிப் பொருளைக் கூறுவதன்றி, பாலைத் திணைக்குரிய ஓமை மரத்தையும் குறிப்பிடுகின்றது. ஆகவே, இப்பாடலில் பாலைத் திணைக்குரிய பாலை மரமும் இங்குப் பேசப்படுவதைக் காணலாம். இலக்கியப் பூப்பந்தல் எனத் தகும் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் ‘தில்லை பாலை

பாலை
(Wrightia tinctoria)

கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) என்பர். இதனை வெப்பாலை எனவும் வழங்குவர். இவையன்றி, கொடிப் பாலை, கருடப் பாலை, ஏழிலைப் பாலை எனப் பல தாவரங்கள் வழக்கில் உள்ளன. இருப்பினும், சங்க இலக்கியம் குறிப்பிடும் பாலை மரம் எது? இதனுடைய காய்கள் பற்றுக் குறடு போன்று இருக்குமெனத் தொண்டமான் இளந்திரையன் குறிப்பிடுகின்றார் (நற். 107). இம்மரத்தில் காய்கள் இரட்டையாகவே உண்டாகும். அவையிரண்டும் அடியில் ஒன்றாகி இணைந்தும், குறடு போல் நடுவில் உள்வளைவாக விரிந்தும், நுனியில் இவையிரண்டும் ஒட்டினாற் போலவும் இருக்கும். இம்மரத்தின் இவ்வியல்பினை நற்றிணைப் பாடல்தான் குறிப்பிடுகின்றது. இதனைக் கொண்டு இதுவே அகத்திணைப் பாலை மரமென அறுதியிட முடிகின்றது. இம்மரத்தில் வெள்ளிய பூங்கொத்துக்கள் உண்டாகுமென்று இப்பாடலில் காணப்படும் குறிப்பும், இதனையே பாலை என வலியுறுத்துவதற்கும் துணை செய்கின்றது.

இசைத் தமிழில் பாலை என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஏனைய திணைகளைக் கூறும் மலர்களுக்கு உள்ளவாறு போல, பாலை யாழும், பாலைப் பண்ணும் சங்க இலக்கியத்துள் காணப்படுகின்றன. பாலை யாழினை மகளிரும், பாணரும் மீட்டிப் பாடுவர்.

“வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
 தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
 பணியா மரபின் உழிஞை பாட”
-பதிற். 46 : 4-6

“பாணர் கையது பணிதொடை நரம்பின்
 விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணி
 குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி”
-பதிற். 57 : 7-9

“வாங்கு இருமருப்பின் தீம்தொடை பழுனிய
 இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி
 படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல”
-பதிற். 66 : 1-3

மற்று பாடினி இனிய குரலில் பாலைப் பண்ணிசைப்பாள் என்பர்; ‘ஒரு திறம் பாடினி முரலும் பாலை அங்குரலின்’ (முரலும்-இசைக்கும், குரல்-இசை, ஓசை) -பரி. 17 : 17. மேலும், பரிபாடலில் முதலில் அமைந்த 11 பாடல்களின் (2-12) பண்ணும் பாலை யாழ் ஆகும்.

பாலை மரத்தில் பால் வடியும். மலரில் நறுமணமில்லை. ஆதலின் பாலைப் பூவை யாரும் விழைவதில்லை. இங்ஙனமே தில்லையஞ் சிறுமரத்திலும் பால் வழியும். இதில் கொடிய நச்சுப் பொருள் இருப்பதால், கண்ணில் பால் படக் கூடாது. இதனுடைய இருபாலான தனிப்பூக்கள் மிகச் சிறியவை. மணமில்லாதன. இவற்றையும் யாரும் விரும்புவதில்லை. எனினும், குறிஞ்சிப் பாட்டில் கபிலர் தில்லைப் பூ, பாலைப் பூக்களுடன் முல்லைப் பூவையும் சேர்த்துப் பூப்பந்தல் போடுகின்றார்.

பாலை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி (Apocynaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரைட்டியா (Wrightia)
தாவரச் சிற்றினப் பெயர் : டிங்டோரியா (tinctoria)
தாவர இயல்பு : மரம்
தாவர வளரியல்பு : வறண்ட நிலத்தில் வளரும் இலையுதிர் மரம். 8 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும்.
கிளை : பளபளப்பானது; நுண்மயிர் ஒட்டியிருக்கும்.
இலை : தனி இலை, எதிர் அடுக்கில் நீண்டது. அடியில் நுனியும், குறுகியும், கிளை அடியில் உள்ள இலைகள் 5-5.5 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் உள்ளவை.
கிளையின் மேலே : 11-12 செ.மீ. X 4.5-5 செ.மீ.
இலை நரம்பு : 6-12 இணைகள். இரு பக்கமும் இலையடியில் நரம்புகளின் ஓரமாக நுண் மயிர் காணப்படும்.
இலைக் காம்பு : மிகவும் சிறியது. 2-4 மி.மீ. நீளமானது.
மஞ்சரி : நுனி வளராக் (சைம்) கலப்பு மஞ்சரி. 8-10 செ.மீ. அகன்றுமிருக்கும்.
மலர் : வெண்மை நிறமானது. 5 மி.மீ. அகலமுள்ளது. மலரடிச் செதில்கள் நுண்ணியவை. மலர்க் காம்பு 1.5. செ.மீ. நீளம்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் 4 மி.மீ. நீளமானவை. முட்டை வடிவானவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் அடியில் ஒட்டியவை. மேலே 15 மி.மீ. அகன்று, விரிந்து, நீண்ட 5 இதழ்களும் காணப்படும்.
மகரந்த வட்டம் : 5 மகரந்தக் கால்கள், மென்மையானவை. அல்லிக் குழலுள் 2-3 வரிசையில் கரோனா செதில்கள் உள்ளன. இவற்றுள் மகரந்தக் கால்கள் இருக்கும். மகரந்தப் பைகள் 5 மி.மீ. நீளமானவை. சூல்முடியுடன் இணைந்தாற் போல், அல்லிக் குழலின் வாயின் மீது செருகப்பட்டிருக்கும்.
சூலக வட்டம் : சூற்பை 2 சூலிலைகளினால் ஆகியது. சூலிலைகள் இணைந்து இருக்கும். பல சூல்கள் கொண்டவை. சூல்தண்டு நூல் போன்றது.
சூல்முடி : முட்டை வடிவாயும், அடிப்பக்கத்தில் பற்கள் கொண்டும் இருக்கும்.
கனி : இரு கனிகள் இணைந்திருக்கும்; வழவழப்பானவை. 22 முதல் 23 செ.மீ. நீளமானவை. ஆனால், மெலிந்தவை. 3-4 மி.மீ. அகலமுள்ளவை. பாலிகுலார் மெரிகார்ப்புகள்.
விதைகள் : மெலிந்தும், அடிப்புறம் கோமா என்ற நுண்மயிர்கள் கொண்டுமிருக்கும்.
கனி : முளை சூழ் தசை இல்லை. வித்திலைகள் அகலமாயும், திருகியுமிருக்கும்.

முளை வேர் குட்டையாகவும், மேல் மட்டமாயும் காணப்படும். இம்மரம் மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள சிறு காடுகளில் வளர்கின்றது. சிறிய இலையுதிா மரம். ஜே. டீ. ஹூக்கர் இதனைப் பர்மாவில் காண முடியவில்லை என்பார். சூலை, ஆகஸ்டு மாதங்களில் வெண்ணிறமான மலருகுத்துப் பூக்குமென்பர்.



  1. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
     நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
     பாலை என்பதோர் படிவங் கொள்ளும்.
    -சிலப். 2:11:64-66
  2. “பத்தொடு ஆறு நூறுஆயிரம் பெறப்
    பண்டு பட்டினப் பாலை கொண்டதும்”
    -கலிங்கத்துப்பரணி