சங்க இலக்கியத் தாவரங்கள்/105-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

முஞ்ஞை–முன்னை
பிரெம்னா லாட்டிபோலியா (Premna latifolia,Roxb.)

சங்க இலக்கியங்களுள் புறநானூற்றில் காணப்படும் ‘முஞ்ஞை’ என்பது ஒரு புதர்ச் செடி. இதன் அடித்தண்டு வலியது. இதன் இலைகளை உணவாகக் கொள்வதுண்டு. இவை நல்ல மருந்தாகப் பயன்படும்.

சங்க இலக்கியப் பெயர் : முஞ்ஞை
பிற்கால இலக்கியப் பெயர் : முன்னை
உலக வழக்குப் பெயர் : முன்னை, மின்னை, முன்னைக் கீரை, பசுமுன்னை
தாவரப் பெயர் : பிரெம்னா லாட்டிபோலியா
(Premna latifolia,Roxb.)

முஞ்ஞை–முன்னை இலக்கியம்

முஞ்ஞை என்னும் புதர்ச் செடியைப் பற்றிப் புறநானூற்றுப் பாடல்கள் மட்டும் கூறுகின்றன.

“இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
 குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
 புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்”

-புறநா. 197 : 10-12
“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
 பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்”

- புறநா. 320 : 1-2
“தாளிமுதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
 முயல் வந்து கறிக்கும் முன்றில்
 சீறூர் மன்னனைப் பாடினை செலினே”
-புறநா. 328 :14-16

இம்மூன்று செய்யுள்களின் மூலம், இப்புதர்ச் செடியைப் பற்றி யாம் அறியுமாறு: முசுண்டைக் கொடியும், இதனிற் படரும். அதனால், இது நல்ல நிழல் தரும்; இதனடியில் பலர் சேர்ந்து துயிலுதற்கும் உதவும்; இதன் இலைகள் சிறியன; ஒரு வகையான நறுமணம் தருவன; இலைகளை ஆடும், முயலும் தின்பதுண்டு; ஆடு மேய்ந்தொழிந்த இவ்விலைகளை எளியோர் வரகரிசிச் சோற்றுடன் தின்பதுண்டு. இக்குறிப்புகளைத் தவிர வேறு யாதும் இச்செடியைப் பற்றி அறிய முடியவில்லை. குறிஞ்சிப் பாட்டில் முஞ்ஞை கூறப்படவில்லை.

இக்காலத்தில் இதனை முன்னை என்று கூறுவர். இதனைப் பசுமுன்னை என்பதும் உண்டு. இதன் இலைகளை முன்னைக் கீரை என்று கூறுப. இது உணவாகக் கொள்ளப்படும்.

இதனைத் தாவரவியலில் பிரெம்னா லாட்டிபோலியா (Premna latifolia) என்றழைப்பர். பிரெம்னா என்ற இப்பேரினத்தில், 12 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன என்பர். இது வர்பினேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவர்.

“முன்றிலாடு முஞ்ஞை மூதிலை கறிக்கும்”

என்ற அடியினைப் பேராசிரியர், தொல்காப்பியச் செய்யுள் நூற்பாவில் (31) மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

முன்னையிலைகளைப் பசும்பாலில் அரைத்து, அமாவாசை நாள்களில் உட்கொண்டால், உடம்பின் மேல் உள்ள பலவகையான சரும நோய்களும் தீரும் என்பர்.

முஞ்ஞை—முன்னை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே. அகவிதழ்கள் ஐந்தும் இணைந்து, மேலே இரு உதடுகள் இருக்கும்.
தாவரக் குடும்பம் : வர்பினேசி
தாவரப் பேரினப் பெயர் : பிரெம்னா (Premna)
தாவரச் சிற்றினப் பெயர் : லாட்டிபோலியா ((latifolia)
தாவர இயல்பு : புதர்ச் செடி. சிறு மரமெனவும் கூறுவர். 20-25 அடி உயரம் (6-8 மீ) வரை பரவி வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்.
இலை : தனியிலை சிறியது முட்டைவடிவானது, இலை நுனி கூரியது, பளபளப்பானது, பசியது. இலையில் நுண்மயிர் இருக்கும். இலை வரம்பு நேரானது. இலை நரம்பு 4.3, 2. இலைக் காம்பு 0.5-1.5 அங்குலம் நீளமானது. காய்ந்த இலை கறுப்பு அல்லது நீல நிறமாக இருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர் ‘காரிம்’ எனப்படும். கிளை நுனியிலும், பக்கத்திலும் உண்டாகும் சிறிய மஞ்சரி.
மலர் : பசுமை கலந்த வெண்மை நிறமானது. மலர் இதழ்கள் இரு பகுதியான உதடுகள் போன்றவை. மேற்புறம் 2 இதழ்களும், அடிப்புறம் 3 இதழ்களும் இணைந்தவை.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் இரு பிளவானது. மேற்புறத்தில் இரு இதழ்களும், அடிப்புறத்தில் 3 இதழ்களும் இணைந்தவை.
அல்லி வட்டம் : அடியில் அல்லியிதழ்கள் இணைந்து, குழல் வடிவாயிருக்கும். 5 சிறிய மடல்கள் இரு பிளப்பாக (2 + 3) இருக்கும். நுண்மயிர் உட்புறத்தில் அடர்ந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள்; 2 குட்டையாக இருக்கும். அகவிதழ்க் குழலின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும். தாதுப்பை முட்டை வடிவானது.
சூலக வட்டம் : 2 சூலிலைச் சூலகம். 4 சூல்கள். சூல்தண்டு நீளமானது. சூல்முடி இரு பிளவானது.
கனி : ‘ட்ரூப்’ எ ன ப் ப டு ம் சதைக் கனி. புல்லியின் மேல் ஒட்டிக் கொண்டு இருக்கும். உருண்டையானது. கனியின் நடுவே உள்ள சதையுறை மெல்லியது: உள்ளுறை வலியது. ஒரே ஒரு ‘பைரீன்’ எனப்படும் கனி உண்டாகும். உட்கூடு உடையது. விதை சற்று நீளமானது. விதையுறை மெல்லியது. விதையிலைகள் தட்டையாக இருக்கும் ஆல்புமின் இல்லை.

கருநாடகத்திலும், தென்னார்க்காடு முதல் திருநெல்வேலி வரையிலும், மேற்குக் கடல் ஓரமுள்ள கொச்சின் முதலியவிடங்களிலும் வளர்கிறது. இது ஒரு நல்ல மருந்துச் செடி. ஒருவகையான மணம் இலைகளில் உண்டு. இதன் ‘குரோமோசோம்’ எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை.