சங்க இலக்கியத் தாவரங்கள்/110-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

குரீஇப்பூளை
ஏர்வா லனாட்டா (Aerva lanata, Juss.)

குரீஇப்பூளை இலக்கியம்

கபிலர் குறிஞ்சிப் பாட்டில், சிறுபூளைச் செடியைக் ‘குரீஇப் பூளை’ என்று குறிப்பிடுகின்றார்.

“குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி”-குறிஞ். 72

‘வேறுபல்பூளையொடு’ என வரும் பட்டினப் பாலைச் சொற்றொடருக்கு (235) நச்சினார்க்கினியர் ‘சிறுபூளையும், பெரும்பூளையும் உண்மையின், வேறு பல்பூளை என்றார்’ என விரித்துரை செய்கின்றார்.

‘சிறுபூளை’ என்பது ஒரு சிறிய செடி. செடி முழுவதும் மிக நுண்ணிய வெண்ணிற மலர்கள் இருக்கும். கண்ணில் ஒதுங்கும் கசடு, பீளை, பூளை எனப்படும். சிறு பூளையின் மலர் இதனை ஒத்து இருத்தலின் இதனைக் ‘கண் பீளை’ என்றுங் கூறுவர்.

குரீஇப்பூளை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே (Monochlamydeae) (புல்லிவட்டமும், அல்லிவட்டமும் இணைந்துள்ளன.)
தாவரக் குடும்பம் : அமராண்டேசி (Amarantaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஏர்வா (Aerva)
தாவரச் சிற்றினப் பெயர் : லனாட்டா (lanata)
சங்க இலக்கியப் பெயர் : குரீஇப்பூளை
உலக வழக்குப் பெயர் : சிறுபூளை, கண் பூளை, கண் பீளை
தாவர இயல்பு : சிறு செடி. ஓராண்டுச் செடி. ஒன்று முதல் 3 அடி உயரம் வரையில் ஓங்கிக் கிளைத்து வளரும். 3500 அடி உயரம் வரையிலான மலைப்புறத்தும் வளரும்.
இலை : சிறு இலை. அடியும், நுனியும் குறுகி இருக்கும். 1 அங்குலம் நீளமான இலையின் மேற்புறத்தில், மிக நுண்ணிய மயிரிழைகளும், அடிப்புறத்தில் வெள்ளிய மயிரிழைகளும் அடர்ந்திருக்கும்.
மஞ்சரி : வெண்ணிற மலர்கள் கிளை முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.
மலர் : மிகச் சிறியது.
புல்லி வட்டம் : 5 இதழ்கள் மிகச் சிறியவை.
அல்லி வட்டம் : 5 பிளவுகள் போன்றிருக்கும்.
மகரந்த வட்டம் : 5. தாதிழைகள்; தாதுப்பை இரு செல் உடையது.
சூலக வட்டம் : உருண்டை வடிவமானது. ஒரு செல். சூல் தொங்கிக் கொண்டிருக்கும். சூல் காம்பு நீளமானது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : ‘காப்சூல்’ என்ற உலர்கனி, விதையுறை தடித்தது. வித்திலை நீளமானது.

இதன் மலர் மருத்துவத்தில் நீரடைப்பைப் போக்கும் நன்மருந்தாகும் என்பர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என கஜபதி (1961) பால், எம் (1964) என்போர் கணக்கிட்டுள்ளனர்.