சங்க இலக்கியத் தாவரங்கள்/112-150

விக்கிமூலம் இலிருந்து
 

மிளகு–மிரியல்–கறி
பைப்பர் நைகிரம் (Piper nigrum,Linn.)

சங்க இலக்கியங்களில் மிளகுக்கு மிரியல், கறி என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இது ஒரு புதர்க்கொடி.

சங்க இலக்கியப் பெயர் : மிளகு, கறி, மிரியல்
தாவரப் பெயர் : பைப்பர் நைகிரம்
(Piper nigrum,Linn.)

மிளகு–மிரியல்–கறி இலக்கியம்

‘மிளகு’ உண்டாகும் புதர்க்கொடி உயர்ந்த மலைச் சாரலில் வளர்கிறது. இக்கொடியில் விளையும் விதைதான் மிளகு ஆகும். இக்கொடி கரிய நிறமுடையதென்றும், பசிய இதன் காய்கள் நீண்ட கொத்துகளாக இருக்குமென்றும் பெருங்கௌசிகனார் கூறுவர்.

“கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி”

-மலைப. 521
மிளகுக்குக் கறி என்ற பெயரும் உண்டென்பதை இவ்வடியில் காணலாம். நாம் உண்ணும் சோற்றுக்கு ஒரு சாறும் வேண்டப்படும். இச்சாற்றுக்கு நல்ல உரைப்பு உள்ள மிளகைச் சேர்த்துக் கறி ஆக்குவர். அதனால் மிளகுக்குக் கறி என்ற பெயரும் வந்தது போலும். அந்நாளில் ‘மிளகாய்’ பயன்பட்டதாகத் தெரியவில்லை. மிளகைப் போன்ற உரைப்புள்ள காயாகிய (மிளகு+ காய்) மிளகாய் பிற்காலத்தில் பயிரிடப்பட்டு வருகின்றது. மற்று மிளகுக்கு ‘மிரியல்’ என்ற இன்னொரு பெயரைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சேர்ப்பர். மிளகுப் பொதிகளைக் கழுதை மேலேற்றிக் கொண்டு வணிகர் செல்வர் என்கிறார்.

“. . .. . . . . . . . மிரியல்

 புணர்ப்பொறை தாங்கிய”-பெரும்பா. 78-79

ஆகவே மிளகுக்குக் கறி, மிரியல் என்ற பெயர்களைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன என்பது பெற்றாம்.

மிளகுக் கொடி மலைப்புறத்தில் வளரும் என்பதும், மலையில் ஓங்கி வளரும் சந்தன மரத்தில் மிளகுக் கொடி ஏறிப் படரும் என்பதும், பலா மரத்து நிழலில் படர்ந்து வளரும் என்பதும் சங்க நூல்களில் கூறப்படும்.

“கறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய”-குறுந். 90 : 2
“கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்”-புறநா. 168 : 2
“கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி”-ஐங். 243 : 1
“கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது”-அகநா. 2 : 6
“பைங்கறி நிவந்த பலவின் நீழல்”-சிறுபா. 43

மிளகுக் கொடியின் தளிரைக் குரங்குகள் கறிக்கும் என்பர் புலவர்கள்.

“கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறிஅருந்து
 குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல்நாடன்”

-குறுந். 288 : 1-2
“அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ
 உயர்சிமை நெடுங்கோட்டு உகள”

(முறி-தளிர்) -அகநா. 182 : 14-15


மலைகளில் வளரும் மிளகுக் கொடியில் விளைந்த மிளகின் பழமாகிய மிளகு (விதை) பாறைகளின் மேலே சிந்திக் கிடக்கும் என்றும், வையை ஆற்றிலே கறியும் சந்தனக் கட்டைகளும் மிதந்து வருமென்றும் புலவர்கள் கூறுவர்.

“பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை”-குறிஞ். 187
“மைபடு சிலம்பின் கறியொடும் சாந்தொடும்”
-பரிபா. 16 : 2


சுருளி என்னும் சேரநாட்டுப் பேரியாற்றில் யவனரின் மரக்கலம் பொன் பொதிகளைக் கொடுதந்து கறிப் பொதிகளைக் கொடு செல்லும் என்றும், பூம்புகார் துறைமுகத்திலே ‘கடலிலே காற்றான் வந்த கரிய மிளகுப் பொதிகள்’ வந்து குவிந்தன என்றும், தமிழ் நாட்டு மிளகு வாணிபம் பேசப்படுகின்றது.

“. . . . . . . . . . . . . . . . சேரலர்
 . . . . . . . . . . . . . . . .
 சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
 பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”

-அகநா. 149 : 7-10
“காலின் வந்த கருங்கறி மூடையும்”-பட்டின. 186


மிளகு—மிரியல்—கறி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
(அல்லியும் புல்லியும் இணைந்தவை)
தாவரத் தொகுதி : மானோகிளைமிடியே
(Monochlamydeae)
மைக்ரெம்பிரையே (Micrembryeae)
தாவரக் குடும்பம் : பைப்பெரேசி (Piperaceae)
தாவரப் பேரினப் பெயர் : பைப்பர் (Piper)
தாவரச் சிற்றினப் பெயர் : நைகிரம் (nigrum)
சங்க இலக்கியப் பெயர் : மிளகு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கறி, மிரியல்
ஆங்கிலப் பெயர் : கரும் மிளகு (Black pepper)
தாவர வளரியல்பு : புதர்க் கொடி. மரங்களில் ஏறிப் படர்ந்து பன்னாள் வாழும். கொடி கருநிறமானது.
தண்டு : இது ஒரு வலிய கொடியாகும். இதன் தண்டில் இரண்டாம் வளர்ச்சியில் அளவுக்கு மீறிய ‘குழாய் முடிகள்’ உண்டாகும். (Anomalous secondary growth)
இலை : தனியிலை. அகன்ற பசிய இலை முட்டை வடிவானது. பளபளப்பானது. தடித்தது.
 

மிளகு
(Piper nigrum)

மஞ்சரி : இலைக்கெதிரில் ஆண், பெண் பூக்கள் தனித்தும், இருபாலான பூக்களும் இருக்கும்.
மலர் : பூக்கள் பூவடிச் செதிலில் இருக்கும். இச்செதில்கள் இணர்க் காம்பில் ஒட்டியிருக்கும். ஆணிணர் 4-5 அங்குல நீளமானது. பெண்ணிணர் 6 அங்குலம் நீளமானது.
புல்லி, அல்லி வட்டங்கள் : தனித்து இல்லை. இணைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண்மலரில் குட்டையான 2-4 தாதிழைகள் காணப்படும். தாதுப்பை இரு செல்லாலானது.
சூலக வட்டம் : பெண் மலரில் சூலகம் ஒரு செல் உடையது. ஒரு கருவே விளையும்: சூல்தண்டு குட்டையானது: சூல்முடி 2-5 பிளவானது.
கனி : காய் பச்சை நிறமானது. காய் முதிர்ந்து கனியாகி, அதுவே விதையுமாகும். பெர்ரி என்ற சதைக்கனி.
விதை : மிளகு உருண்டை வடிவானது. விதையுறை மெல்லியது.

மிக நல்ல உரைப்புள்ள உணவுப் பொருள் மிளகு. இம்மிளகுக்காக இக்கொடி பயிரிடப்படுகிறது. 1500 முதல் 5000 அடி உயரமான மலைப்புறத்தில் வளரும். இதன் இலைக் கணுவில் முதலில் வேர் உண்டாகும். இவ்வேர் மண்ணில் ஊன்றிய பின்னர், கொடி தழைத்துக் கிளைத்து வளரும். இதில் வெள்ளை மிளகும் உண்டு. வால் மிளகு என்பது வேறு கொடியில் விளையும். அதற்குப் பைப்பர் லாங்கம் என்று பெயர். தமிழ்நாட்டில் இருந்து தொன்று தொட்டு மிளகு சீனம், கிரேக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டதென்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 48 என ஏ. கே. சர்மா, என் கே. பாட்டாச்சாரியா (1958 பி, 1959 இ) என்போரும் 2n = 52, 104 என மாத்தியூ (1958 பி) என்பாரும் 2n = 128 என சானகியம்மாளும் (டி 1945) கணித்துள்ளார்கள்.