சங்க இலக்கியத் தாவரங்கள்/115-150
காஞ்சி
ட்ரீவியா நூடிபுளோரா (Trewia nudiflora, Linn.)
தம்மைத் தாக்கியோரை எதிர்த்துப் போர் புரிவோர் காஞ்சி மலரைச் சூடிக் கொள்வர். இம்மலர் வேறு வகையானும் சிறப்பைப் பெற்றது.
காஞ்சி ஒரு குறுமரம். கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதன் நீல நிற மலர் அழகானது. மணமுள்ளது. மகளிர் அணிந்து கொள்வது.
சங்க இலக்கியப் பெயர் | : | காஞ்சி |
தாவரப் பெயர் | : | ட்ரீவியா நூடிபுளோரா (Trewia nudiflora,Linn.) |
காஞ்சி இலக்கியம்
தம்மைத் தாக்கியோரை எதிர்த்துப் போர் புரியுங்கால் சூடப்படுவது காஞ்சி மலர். இதனாற் பெயர் பெற்றது காஞ்சித் திணை. தொல்காப்பியர் காஞ்சித் திணைக்குச் சான்றோர் அறிவுரைப் பொருளை-அதிலும் நிலையாமைப் பொருளை அமைத்துள்ளார்.
“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருங் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே”-தொல். புறத்: 18
இதன் அடிப்படையிலோ என்னவோ ‘முதுமொழிக் காஞ்சி’ என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல் எழுந்துள்ளது. சிறந்த பத்து, அறிவுப் பத்து முதலாகத் தண்டாப் பத்து ஈறாகப் பத்துத் தலைப்புகளில் நூறு அற நெறிகளைக் கூறுகின்றார் மதுரைக் கூடலூர் கிழார். மேலும் பத்துப் பாட்டில் மிகப் பெரிய பாட்டாகவுள்ள மதுரைக் காஞ்சி அரும்பெருங் கருத்துக்களை அறிவித்துக் கொண்டுள்ளது.
காஞ்சி என்னும் சொல் காஞ்சி என்னும் மரப்பெயருடன், வேறு மூன்று பொருள்களையும் குறிக்கும் என்பது பிங்கலம்[1].
காஞ்சி என்பது ஒரு குட்டையான மரம். நீர்த் துறைகளில் தழைத்து வளரும். மருத மரத்துடன் வளரும். வளைந்து, தாழ்ந்த கிளைகளை உடையது. இதன் நிழலில் குரவைக் கூத்தாடுவர். நீர் நிலைகளில் தாழ்ந்து பூக்கும் இதன் மலர்களை வாளை மீன் கதுவும். கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதன் பூங்கொத்து நீளமானது. நுனியில் சிறுத்து, மாலை தொடுத்தது போல அழகாகத் தோன்றும். இதன் மலர் அழகானது; நறுமணமுடையது. தாதுக்களைச் சொரிந்து விரிந்து பூக்கும்; நீலநிறமானது என்றெல்லாம் புலவர்கள் கூறுவர்.
“முடக்காஞ்சிச் செம்மருதின்”-பொருந. 189
“. . . . . . . . . . . .அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன் ”
-அகநா. 336 : 8-10
“கோதை இணர குறுங்காற் காஞ்சிப்
போதவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல் ”
-அகநா. 296 : 1-2
“மருதுஇமிழ்ந்து ஓங்கிய நளிஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத்தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை ”
-பதிற். ப. 23 . 18-20
“நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை”-புறநா. 18 : 7-8
“மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்”-கலி. 26 : 3
“காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் ”-குறிஞ். 84
“நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி”
-சிறுபா. 178-179
இச்சிறுபாணாற்றுப்படை அடிகளுக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கண்டுள்ளார்:
‘நாடகாலத்தே மாலை கட்டினாற் போல இடையறாமல் தொடுத்த நறிய பூக்களை உடைய சிறிய கொம்புகளையும் குறிய தாளினையும் உடைய காஞ்சி மரத்தின் கொம்பரிலே ஏறி’, இதனால் காஞ்சி மரத்தின் இயல்புகளை அறிதல் கூடும்.
இதன் அழகிய மலரைக் கொத்தாகவே மகளிர் சூடுவர். ‘வீழ்இணர்க்காஞ்சி’ என்றபடி, வீழ்ந்தாலும் கொத்தாகவே விழும். ‘விளையாட்டு மகளிர் பலரும் தளிரும், தாதும், பூவுங் கோடலால் சிதைவு பட்டுக் கிடந்த காஞ்சி’ என்ற வண்ணம் இதனைப் பயன் கொள்வர்.
காஞ்சி மலரில் தாது மிகவும் உண்டாகும். இது பொற் சுண்ணம் போன்றது. குயில் குடைந்து நீராடுவது போன்று, தன் உடலில் இத்தாதுவைப் படிய வைத்துக் கொள்ளுமாம். இப்பூந்தாது படிந்திருந்த மணல் மேடு, மணங்கமழ்ந்து திருமண மேடை போன்று இருந்ததாம். காஞ்சிப் பூங்கொத்தும், தாதுவும் குவிந்து கிடந்த ஒரு எரு மன்றத்தில் குரவை அயர்வர் என்பர் புலவர்.
“விரிகாஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும்”
-கலி. 34 : 8
“தண்கயம் நண்ணிய பொழில்தொறும் காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல”-அகநா. 25 : 3-5
“காஞ்சித்தாது உக்க அன்னதாது எருமன்றத்துத்
தூங்கும் குரவை”
-கலி. 108 : 60
மற்று, காஞ்சிப் பெயர் கொண்ட செவி வழிப் பண் ஒன்றுண்டு. போரில் புண்பட்டவர் நலம் பெறவும், காற்றாவி அணுகாதிருக்கவும், மகளிர் ஐயவி சிதறி, இசை மணி எறிந்து, இப்பண்ணைப் பாடுவர் என்கிறார் அரிசில் கிழார்.
“ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி”
-புறநா. 281 : 4-5
காஞ்சி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | மானோகிளமைடியே (Monochlamydeae) யூனிசெக்சுவேலீஸ் (unisexuales) |
தாவரக் குடும்பம் | : | யூபோர்பியேசி (Euphorbiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ட்ரீவியா (Trewia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | நூடிபுளோரா (nudiflora) |
சங்க இலக்கியப் பெயர் | : | காஞ்சி |
தாவர இயல்பு | : | குறுமரம். தழைத்துக் கிளைத்து வளரும். நீர் நிலைகளுக்கு ஓரமாக வளரும். |
இலை | : | அகன்ற இதய வடிவான தனியிலை., எதிரடுக்கானது. |
மஞ்சரி | : | இருபாலானது. இலையுதிர்ந்து புத்திலை விடுமுன் மஞ்சரி வெளி வரும். ஆணிணரும், பெண்ணிணரும் மிக நீளமானவை. இணர் தொங்கிக் கொண்டு வளரும். இவ்வுண்மையைப் புலவர் கூறுவர். |
மலர் | : | ஆணிணரில் மலர்கள் மலிந்து உண்டாகும். பெண்ணிணரில் பூக்கள் மிகக் குறைவு. பூக்கள் நீல நிறமானவை. |
ஆண் மலர் | : | ஆண் மலரின் அரும்பு உருண்டை வடிவானது. |
புல்லி | : | 3-4 உட்குழிந்த புறுவிதழ்கள் விரிந்து மலரும். |
பெண் மலர் | : | 3-5 புறவிதழ்கள் தழுவிய அமைப்பானவை. |
அல்லி | : | இரு வகை மலர்களிலும் அகவிதழ் இல்லை. |
மகரந்த வட்டம் | : | ஆண்மலரின் பல தாதிழைகள் பொன்னிறத் தாதுக்களைச் சொரியும். |
சூலக வட்டம் | : | பெண் மலரில் சூலகம் 2-5 செல்களை உடையது. ஒரு சூல் மட்டும் உண்டாகி, முதிரும். சூல்தண்டு தடித்து இரு பிளவாக நீண்டு விரிந்து இருக்கும். |
கனி | : | ‘ட்ரூப்’ எனப்படுவது; கடினமானது. இதில் ஒரு விதையுண்டாகும். விதையுறை மரம் போன்று வலியது. வித்திலைகள் அகன்று விரிந்தவை. |
அடிமரம் மிருதுவானது. வெள்ளை நிறமானது. பட்டை கரியது. இம்மரத்தினால் தம்பட்டம் செய்வர். விளையாட்டுக் கருவிகளும் செய்யப் பயன்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என, பாதுரி, கார் (1949) என்போர் கணித்துள்ளனர்.
- ↑ ஒரு மரப் பெயரும் ஓரிசைப் பெயரும்
கச்சிப்பதியும் கலையும் காஞ்சி-பிங். நி. 3343