உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/129-150

விக்கிமூலம் இலிருந்து

தெங்கு–தென்னை
கோகாஸ் நூசிபெரா (Cocos nucifera,Linn.)

சங்க நூல்கள் தென்னை மரத்தைத் ‘தெங்கு’ என்று கூறும். இதற்குத் ‘தாழை’ என்ற பெயரும் உண்டு.

சங்க இலக்கியப் பெயர் : தெங்கு
தாவரப் பெயர் : கோகாஸ் நூசிபெரா
(Cocos nucifera,Linn.)

தெங்கு–தென்னை இலக்கியம்

குறிஞ்சிப் பாட்டில் கபிலர், ‘தாழை’யைக் கூறுவர்.

“தாழை தளவம் முட்டாள் தாமரை” -குறிஞ். 80

தாழை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தெங்கிற்பாளை’ என்று உரை கண்டார். ‘தெங்கு’ எனப்படும் தென்னை ஒரு மரமாகும். இதன் எல்லாப் பாகங்களும் பயன்படும். தென்னையில் விளையும் தேங்காய் உணவுப் பொருள். கடியலூர் உருத்திரங் கண்ணனார் இதனைக் கோள்தெங்கு என்று கூறுவர்

“கோள் தெங்கின் குலை வாழை” -பட். 16

‘கோள்தெங்கு’ என்பதற்குக் ‘குலைகளை உடைய தெங்கு’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்.

குறிஞ்சிப்பாட்டில் வரும் ‘கைதை’ என்பதற்குத் ‘தாழை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், அதே பாட்டில் வரும் ‘தாழை’ என்பதற்குத் தெங்கிற்பாளை என்கிறார். அவர் உரை எழுதிய பிறவிடங்களிலெல்லாம் வரும் தாழை என்பதற்குத் தாழை என்றே உரை கூறுவார். ஆகவே, தெங்கு என்பதே தென்னைக்கு வழங்கிய பெயரென்பதும், தாழை என்ற பெயரும் தென்னைக்கு உண்டு என்பதும் அறியப்படும்.

சங்க நூல்களில் தாழை என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்குத் தெங்கு என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. எனினும், உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப்படையில் தென்னையைப் பற்றிய சில குறிப்புகளைக் கூறுவர்.

கமுகு புடை சூழத் தெங்கு வளருமென்றும், வளங்கெழு பாக்கத்தில் நெடுந்தூரத்திடை வழியில் பல தெங்குமரங்கள் உள்ளன என்றும், தெங்கின் அடிமரம் யானையின் உடம்பை ஒத்து சருச்சரையை உடையதென்றும் , வளவிய இலையினை உடையது என்றும், தெங்கின் பழுத்த ஓலை (பழுப்பு) முடைந்து கூரை வேயப்படுமென்றும், தேங்காய் மூன்று புடைப்பினை உடையதென்றும், வழிப்போவார் தெங்கின் காயைப் பசி தீர உண்பர் என்றும், பாக்கத்தில் தெங்கின் அடியில் சோறு ஆக்கும் பானை நழுவும்படி தேங்காய் முற்றித் தானே விழுமென்றும் கூறுவர்.

“குன்றுறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
 வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த”
-பெரும்பா. 352-353

“. . . . . . . . . . . .மாத்தாட் கமுகின்
 புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
 ஆறுசெல் வம்பலர் காய்பசி தீர
 சோறு அடுகுழிசி இளக விழூஉம்”
-பெரும்பா. 363-366

காற்றில் தெங்கின் ஓலைகள் அசையும் போது ஒலிக்குமெனவும், தென்னையில் விளையும் பழம் பெரியதெனவும் கூறுவர்.

“ஒலிதெங்கின் இமிழ்மருதின்” -பதிற். 13 : 7
“தெங்குபடு வியன் பழம் முனையின்” -புறநா. 61 : 9

தெங்கு—தாழை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசினே (Calycinae)
தாவரக் குடும்பம் : பாமே (Palmae)
தாவரப் பேரினப் பெயர் : கோகாஸ் (Cocos)
தாவரச் சிற்றினப் பெயர் : நூசிபெரா (nucifera)
சங்க இலக்கியப் பெயர் : தெங்கு
பிற்கால இலக்கியப் பெயர்கள் : தாழை, தெங்கு
உலக வழக்குப் பெயர் : தென்னை
தாவர இயல்பு : 40-80 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும். தடித்த மரம்; கிளைக்காது; மரத்தில் இலையடித் தழும்புகள் காணப்படும்; உச்சியில் பல, நீண்ட பரவிய இலைகளை மூடி போல் விட்டு வளரும்.
இலை : 6-15 அடி நீளம் வரையிலானது; மெல்லிய நீண்ட சிற்றிலைகள் 2-3 அடி நீளம் வரையிலானவை; இலைக் காம்பு 3- 5 அடி நீளமிருக்கும்.
மஞ்சரி : தடித்த பாளையுள் உண்டாகும்; இணர்.முற்றியவுடன், பாளை பிளந்து விரியும்.
மலர் : பாளைக்குள்ளேயிருந்து வெளிப்படும் குலையில் பல நீண்ட நரம்புகள் உள்ளன. அவற்றில் முத்துக் கோத்தாற் போன்ற மஞ்சள் நிறமான சிறிய ஆண் பூக்கள், நரம்பின் மேற் புறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்; நரம்பின் அடியில் 2-3 பெண் பூக்கள் (உருண்டை வடிவானவை) ஒட்டிக் கொண்டிருக்கும்;; இவை குரும்பை எனப்படும்.
புல்லி வட்டம் : ஆண் மலரில் 3 புறவிதழ்கள் மிகச் சிறியவை.
அல்லி வட்டம் : 3 அகவிதழ்கள் நேர் அமைப்பில்;
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 6 தாதிழைகள். தாதுப் பைகள் நீளமானவை.
சூலக வட்டம் : பெண் மலரில் 3 அல்லிகளும், 3 புல்லிகளும் அகன்ற இவை சூலகத்தினை மூடியிருக்கும். சூலகம் 3 செல் உடையது. 3 சூலறையிலும், 3 சூல்கள். சூல்முடி 3 பிளவானது. அடிப்புறத்தில் வளைந்து விடும்.
கனி : இளந்தேங்காயில் நறுஞ்சுவையுடைய நீர் மிகுந்திருக்கும்; முற்றிய காய் தானே பழுத்துக் கீழே விழும்.
காய் : முப்பட்டை எடுப்பானது; “மீசோ கார்ப்” நார் உடையது; “எண்டோ கார்ப்” வலிய ஓடு உடையது; அடியில் 3 துளைகளை உடையது.
விதை : ‘கொப்பறை’ எனப்படுவதுதான் விதை உள்ளே கூடு விழுந்திருக்கும்; அதிலிருந்த நீர் சுண்டி விடும். மூன்று துளைகளில், ஒன்றிலிருந்து முளை வெளிப்படும்.

தெங்கு எந்த நாட்டைச் சேர்ந்தது என்று சரி வரத் தெரியவில்லை என்கிறார் காம்பிள். இதன் காய்களுக்காக இம்மரம் பெரிதும் பயிரிடப்பட்டு வருகிறது: கடற்கரைப் பகுதிகளில் மிக அதிகமாக வளர்கிறது; பாளை முதிர்வதற்குள், அதனை நசுக்கி அதிலிருந்து வடியும் சாற்றை (கள்) வடித்தெடுப்பர். தேங்காயின் இளங்காய் இளநீராகவும், சற்று முதிர்ந்த காய் உணவாகவும், முற்றிய ‘கொப்பறை’யிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய், பலவாறாகவும் பயன்படும்.

இந்நாளில் தென்னையில் பலப்பல வகைகள், செல்லியல் கலப்பு முறையினால் உண்டாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன: இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 32 என சான்டோஸ் (1928), காஸ்நெர் (1944), சானகி அம்மாள் (1945) சர்மா ஏ. கே. சர்க்கார் (1957) என்போர் கணக்கிட்டுள்னர்.