சந்திரிகையின் கதை/வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து
நான்காம் அத்யாயம்.
வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து.
மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் தின்று, ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறையக் காபியும் குடித்துவிட்டு, கோபாலய்யங்கார் “ஹோ“ என்று ஏப்பமிட்டுச் சாய்வு நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாஸனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால்மணி நேரத்தில் ஹதம் பண்ணிவிட்டார்.
அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை—விளம்பரங்களுட்பட—ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார். கோபாலய்யங்கார் இங்கிலீஷ், ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த ஸமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய் மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.
இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.
தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவேயில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள். “யாருடைய சமையல் தெரியுமா?” என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். “காலையில் வந்தாளே, அந்தப் பெண்ணுடைய சமையலா?“ என்றார் பந்துலு.
“ஆம்“ என்றாள் பந்துலுவின் மனைவி.
“அந்தப் பெண்ணை இங்கு சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மஹா ஸுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?“ என்றார் வீரேசலிங்கம் பந்துலு.
“அவளுக்கு பலமான தலைநோவு. சமையல் சிரமம், யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய் விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம் என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆஹாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கைகழுவிவிட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜைமேல் பந்துலுவின் மனைவி கொண்டு வந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் “இதுவே சுவர்க்கம்“ என்று பந்துலு சொன்னார்.
“எது?“ என்று பந்தலுவின் மனைவி கேட்டாள்.“இப்போது செய்த போஜனம்“ என்று பந்துலு சொன்னார்.
“சமையல் ருசியாக இருந்ததா?“ என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.
“மிகவும் ருசியாக இருந்தது“ என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள், உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனை தான் சொன்னாரா?“ என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று.
அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டிவா“ என்றார். சரி என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.
அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:— “அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி? என்று கேட்டார்.
“அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக்குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக்குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும் இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளைப் போலவே ஸரஸ்வதி ரூபமாக விளங்கும்“ என்று பந்துலு சொன்னார்.
பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல், செய்ய குங்குமப் பொட்டு, அந்தக் குழந்தை விசாலாக்ஷியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது ஸரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லக்ஷமீதேவி விக்ரஹமாக விளங்கிற்று.
அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவஸ்திரீகளின் நாட்டியச் செயல்களை யொத்திருந்தன.
இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக்கண்ணுக்கு முன்னே எழுந்தது.
“குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?“ என்று கோபாலய்யங்கார் கேட்டார். “தெரியும்“ என்றாள் சந்திரிகை. “எங்கே, ஒன்று பாடு, கேட்போம்“ என்றார் கோபாலய்யங்கார்.
“அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?“ என்று சந்திரிகை கேட்டாள்.
“பாடு“ என்றார் கோபாலய்யங்கார்.
சந்திரிகை பாடத் தொடங்கினாள்:—
நந்தலால் பாட்டு
யதுகுல காம்போதி ராகம்—ஆதி தாளம்.
பார்க்கு மரத்தி லெல்லாம், நந்தலாலா—நின்றன்
பச்சை நிறந்தோன்றுதடா, நந்தலாலா;
காக்கைச் சிறகினிலே, நந்தலாலா—நின்றன்
கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;
கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா—நின்றன்
கீத மிசைக்கு தடா, நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா—நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.
ஸஸ்ஸாஸா—ஸம்மாபதா—பததபபமபா—பாபா
பநீஸதபா—மாகா—ஸரிமகரீ—கெகரிரிஸஸா.
இந்தப் பாட்டடை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிடத் தெரிந்தது. அவர் தம்முடைய ஜன்மத்தில் இவ்வித ஸங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை.
“இதுதான் சுவர்க்கம்” என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
“எது?“ என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.
“இந்தக் குழந்தையின் பாட்டு“ என்று அய்யங்கார் சொன்னார்.
“ஸங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?“ என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.
அதற்கு கோபாலய்யங்கார்:— “மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்“ என்றார்.
“குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்“ என்று பந்துலு சொன்னார்.
“அவையும் சேர்ந்துதான்“ என்று அய்யங்கார் சொன்னார்.
இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப் போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.
அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:— “இந்தக் குழந்தையையும் இதன் அத்தையையும் பற்றிய கதை சொல்வதாகத் தெரிவித்தீர்களே? இப்போது சொல்லுகிறீர்களா? என்று கேட்டார்.
பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார்.
“என் ஜன்மம் பலிதமாய் விட்டது“ என்றார் கோபாலய்யங்கார்.
“அதெப்படி?“ என்று பந்துலு கேட்டார்.
“இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது“ என்றார் அய்யங்கார்.
இதைக் கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகலவென்று நகைத்தார்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?“ என்று அய்யங்கார் கேட்டார்.
விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே! அதைக் கேட்டு நகைத்தேன். தங்களை மணம் புரிந்து கொள்ள அந்தப் பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ? இன்று ராத்திரி அவள் போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். ஸாதாரணமாக, ஹிந்து ஸ்திரீகளிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும் பரஸ்பரம் ஸந்தித்து ஸம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளைக் காலையில் என் மனைவியின் மூலமாக அந்தப் பெண்ணுடைய ஸம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் ஸம்மதமுணர்த்துவாளாயின், பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்” என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார்:— “அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமுமில்லை“ என்றார்.
“அப்படியே செய்யுங்கள்“ என்றார் பந்துலு.
பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.
கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்த, படியே நித்திரை போய்விட்டார்.
கோபலய்யங்கார் தூங்கிக் கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறுசுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத் தேர்ச்சி பெற்றவள். நமது விசாலாக்ஷியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிகத் தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும், “பிராமணா: போஜனப்ரியா:“ (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுஸரிப்பதில் ஸாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்தூரம் மேற்பட்டவர். ப்ராமணர்களை குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தைப் பலர் உபயோகப்படுத்துகிறார்கள். பார்ப்பானுக்குச் சோற்று ருசியில் மோஹமதிகம் என்று மற்ற ஜாதியார் ஸாதாரணமாகச் சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில ஸமயங்களில் இதைத் தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறை போல பேசிக்கொள்ளுகிறார்கள். சில ஸமயங்களில் தம்மைத் தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ்வசனத்தைக் கையாடுகிறார்கள். வேறு சில ஸமயங்களில் மற்ற ஜாதியாரிடமிருந்து பணங் கேட்பதற்கு முகாந்தரமாக இந்த வாக்கியத்தைத் தவிர்க்கொணாத விதியைப் புலப்படுத்துவது போல் எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன். ஸர்வோ ஜநா: போஜனப்பிரியா:— எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம். உணவின் அளவை எடுத்து நோக்கின் ஸாதாரண பிராமணனொருவனைக் காட்டிலும் ஸாதாரண சூத்திரன்— மறவன், அல்லது இடையன், அல்லது உழவன், எந்தத் தொழிலாளியும்-நாளன்றுக்குக் குறைந்த பட்சம் மூன்று மடங்கு அதிகமாகத் தின்னுகிறான். ஆங்கிலேயன் ஒன்பது மடங்கு அதிகமாக உண்கிறான். ஜெர்மானியன் இருபத்தேழு பங்கு அதிகமாகத் தின்கிறான். இனி, அளவை விட்டுவிட்டு, ஆஹாரத்தின் பக்குவ பேதங்களை எண்ணுமிடத்தே அதில் பிராமணர், அல்லாதார் என்ற பாகுபாட்டுக்கிடமில்லை. செல்வர்கள் உணவைப் பலவகையாகப் பக்குவங்கள் செய்து புஜிக்கிறார்கள். ஏழைகள் சிலவகைப் பக்குவங்களே செய்கிறார்கள். பரம ஏழைகளாய், ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஜனங்களே, இந்நாட்டில், லக்ஷக்கணக்காக மலிந்து கிடக்கிறார்கள். இவர்கள் கூழும் கஞ்சியும் ஒருகால் மிளகாயும் தவிர வேறுவிதமான பக்குவங்களை உண்ணுதல் அருமையிலும் அருமையிலும் அருமை. இத்தனை கொடிய ஏழ்மை நிலையில் பெரும்பாலும் பள்ளர் பறையர்களும் சூத்திரர்களில் தாழ்ந்த வகுப்பினருமே இருக்கிறார்கள். ஆனால் மற்ற வகுப்பாரிலும் பலர் அந்த ஸ்திதிக்கு மிக சமீபத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களிலும் அங்ஙனமே பலர் அந்தப் பரிதாபகரமான நிலையில் அகப்பட்டுத் தவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த தேசத்தில் மற்றஜாதி ஏழைகளைக் காட்டிலும் பிராமண— ஏழைகளுக்கு முக்கியமாக வைதிக பிராமணர்களுக்கு, இனாம் சாப்பாடு அதிகமாகக் கிடைக்கும் வழியேற்பட்டிருக்கிறது. எனினும் இவ்விஷயத்தில் பிராமணரென்றும், அல்லாதரென்றும் பிரிவு செய்தல் பொருந்தாது. “பொதுப்படையாக” ஏழைகளின் வீட்டில் செய்வதைக் காட்டிலும் செல்வர் வீட்டில் கறி, குழம்பு முதலிய பதார்த்தங்களில் அதிக வகுப்புக்கள் சமைக்கிறார்களென்று சொல்லாம். இந்த விதிக்குப் பல விளக்குகளுமல்லதால், பொதுப்படையாக என்றேன். ஏனென்றால் செல்வமிருந்த போதிலும் லோப குணமுடையோரின் வீடுகளில் போஜனவகைகள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். தவிரவும், தொழில் செய்யாமல் சோம்பேறிகளாக வாழும் செல்வர்களுக்கும், பொருள் தேடுவதிலும் அதைக் காப்பதிலும் மிதமிஞ்சிய கவலை செலுத்தும் செல்வர்களுக்கும் ஜீர்ணசக்தி எப்போதும் பரம மோசமாகவே இருக்குமாதலால், அவர்கள் வீட்டில் எத்தனை வகையான பக்குவங்கள் செய்தபோதிலும் ஒன்றிலும் ருசியேற்படாது. ஏற்கெனவே, இத்தையோர் போஜனப்பிரியர் என்று சொல்லத்தகார். அன்னத் துவேஷமுடையோரை போஜனப்பிரியர் என்று கூறுவதெப்படி? இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் அதிக விஸ்தாரமாக எழுதலாம். எனினும், போஜனம் பண்ணுவதில் எல்லோரும் விருப்புடையோரெயெனிலும், போஜன விஷயத்தைக் குறித்து நீண்ட ப்ரஸ்தாபம் நடத்துவதில் தற்காலத்துப் படிப்புப் படித்தவர்களுக்கு அதிகச் சுவையேற்படாதாகையாலும், இந்நூல் படிப்போரில் எவ்வித ருசியுடையோருக்கும் அதிக அருசியேற்படாமல் கதையெழுத வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாதலாலும் எனது கருத்தை இங்கு சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். எவ்வகையாக நோக்குமிடத்தும் பிராமணர் போஜனப்பிரியர் என்று கூறி அவ்வகுப்பினர் இவ்விஷயத்தில் பொது மனித ஜாதியின்றும் வேறுபட்ட குணமுடையோரென்று குறிப்பிடும் பழமொழி யுக்தமில்லையென்பதே என் அபிப்ராயம். இது நிற்க.கோபாலய்யங்காருக்கு ஜீர்ண சக்தி அதிகம். வீமஸேனனுக்கு விருகோதரன்— ஓநாய் வயிறுடையோன்—என்ற பெயரொன்று உண்டு. ஓநாய்க்குப் பசி அதிகமாம். தின்னத் தின்ன—எவ்வளவு தின்றபோதிலும்—ஸாதாரணமாக அதன் பசி அடங்குவதில்லையாம். உழைக்கும்போது மிகவும் தீவிரத்துடனும் நிதானத்துடனும் சோம்பரென்பது சிறிதேனுமில்லாமலும் உழைத்தால், மனிதர் இப்படிப்பட்ட பசி பெறலாம். தொழில் செய்வதில் வலிமை செலுத்த வேண்டும். ஒருவனது முழு வலிமையையும் செலுத்திச் செய்யப்படும் தொழிலே தொழிலாம். ஆனால், எவ்வளவு தொழில் செய்த போதிலும், அதனால் உடம்புக்கு சிரம முண்டாகாத வண்ணமாகச் செய்யவேண்டும். வேர்க்க வேர்க்க கஸ்ரத் எடுப்பவன் ஸமர்த்தனல்லன். எத்தனை கஸ்ரத் எடுத்தாலும் வேர்வை தோன்றாதபடி தந்திரமாக எடுப்பவனே ஸமர்த்தன். இதை ஒரு வேளை ஸாதாரண மல்லர் அங்கீகாரம் செய்யத் திகைக்கக்கூடும். ஆனால் நூறு கஸ்ரத் பண்ணின மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டிப் போகும் மனிதனைக் காட்டிலும், ஆயிரம் கஸ்ரத் செய்தபின் வெயர்க்கும் மனிதன் அதிக ஸமர்த்தன் அதிக பலவான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தக் கணக்கைத்தான் நான் இன்னும் சிறிது தூரம் எட்டிப் போடுகிறேன். கஸ்ரத் செய்யும் தொழிலாயினும், கதையெழுதும் தொழிலாயினும்—எல்லாவிதமான தொழிலுக்கும் தத்துவம் ஒன்றேயாம். அதாவது மனதில் சிரமந் தோன்றிய பிறகு தான் உடம்பில் சிரமந் தோன்றுகிறது. அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் தொழிலில் சிரமுமுந் தோன்றாது; அது உன்னதமான வெற்றி பெறவுஞ் செய்யும். இங்கனம் தொழில் செய்தால் மேன்மேலும் புதிய ரத்தம் பெருகி, உடம்பில் மேன்மேலும் ஒளியும் வலியும் விருத்தியடைந்துகொண்டு வரும். இந்த வழியில் வீமசேனனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கலாமென்னில், கோபாலய்யங்காருக்குப் பத்துப் பொன் கொடுக்கலாம். அவ்வளவு பண்டிதர். எனவே மதுமாமிசப் பழக்கங்களால், வீரேசலிங்கம் பந்துலு எதிர்பார்த்தபடி, கோபாலய்யங்கார் அத்தனை விரைவாக இறந்து போவாரென்று எதிர்பார்க்க இடமில்லை. இது நிற்க.
கோபாலய்யங்கார் போஜன ப்ரியர்களிலே சிரேஷ்டர். இந்த விஷயம் பந்துலுவின் மனைவிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே, விசாலாக்ஷியின் விழிகளென்னும் வலைக்குள் கோபாலய்யங்காரின் ஹ்ருதயமென்ற மானை வீழ்த்துவதற்கு இரை போடும் அம்சத்தில் கோபாலய்யங்காருடைய வயிற்றுக்கு ஸ்தூலமாகிய விருந்து போடுவதே தக்க இரையென்று தீர்மானித்துக்கொண்டு, வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி மிகவும் கோலாஹலமாகச் சமையல் பண்ணினாள். முப்பது வகைக் கறி; முப்பது வகை சட்டினி; முப்பது வகை பொரியல்;— எல்லாம் பசு நெய்யில். இலை போட்டு ஜலந் தெளித்துப் பரிமாறுதல் தொடங்கிவிட்டது. நாலிலை; குழந்தைக்கொன்று; விசாலாக்ஷிக்கொன்று; பந்துலுவுக்கொன்று; கோபாலய்யங்காருக்கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள்.
பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவதாக உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் விசாலாக்ஷியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிது நேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாக்ஷியை நோக்கி:— “விசாலாக்ஷி எங்கே?” என்று கேட்டார். இவள்தான் விசாலாக்ஷி யென்பது அவருக்குத் தெரியாது. பணிப்பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக அப்பணிப் பெண்ணே விசாலாக்ஷி என்ற பிராந்தியில் அவர் மயங்கியிருந்தார்.
“நான்தான் விசாலாக்ஷி” என்றாள் விசாலாக்ஷி.
“நீயா விசாலாக்ஷி?” என்றார் கோபாலய்யங்கார்.
“ஆம்” என்றாள் விசாலாக்ஷி.
“காலையில் இக்குழந்தையுடன் சோலையில் விளையாடிக் கொண்டிருந்த பெண் யார்?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
“அவள் இக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குழந்தைக்குக் காவல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி” என்று விசாலாக்ஷி சொன்னாள்.கோபாலய்யங்காருக்கு நெஞ்சுக்குள் ஒரு பேரிடி விழுந்தது போலாயிற்று. காலையில் பூஞ்சோலையில் வேலைக்காரி சந்திரிகையை முத்தமிட்டபோது அச்செய்கையை இருவர் பார்த்ததாகவும் அவ்விருவருள் ஒருவர் அந்த வேலைக்காரியின் மீது காதல் கொண்டனரென்றும் சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். அங்ஙனம் நோக்கிய இருவர் கோபாலய்யங்காரும் பந்துலுவும், காதல் கொண்டவர் கோபாலய்யங்கார். அந்த வேலைக்காரிக்கு இருபது வயதிருக்கும். மிகவும் அழகுடைய பெண். விசாலாக்ஷியின் அழகு அறிவும் பயிற்சியும் கலந்த அழகு. பணிப்பெண்ணுடைய அழகு கிராமியமானது.
எனிலும், இப்போது விசாலாக்ஷியை நோக்குமிடத்தே கோபாலய்யங்காருக்கு இவள் அதிக அழகா, அவள் அதிக அழகா என்ற ஸமுசயமேற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு மனவிழியால் பணிப்பெண்ணுடைய வடிவத்தை நோக்குவார். பிறகு கண்ணை விழித்து எதிரே நிற்கும் விசாலாக்ஷியின் முகத்தைப் பார்ப்பார். இப்படி இரண்டு மூன்று தரம் கண்ணை மூடி மூடி விழித்துச் சோதனை செய்து பார்த்ததில் அவருடைய புத்திக்கு இன்னார்தான் அதிக அழகென்பது நிச்சயப்படவில்லை. எனிலும், விசாலாக்ஷியை மணம் புரிந்து கொள்வதே பொருந்துமென்ற யோசனை ஒரு கணம் அவருக்குண்டாயிற்று. ஆயினும், காதல் வலியதன்றோ? காதலுக்கெதிரே எந்த சக்தி, எந்த யோசனை நிற்கவல்லது? காதல் இறுதியிலே வெற்றி பெற்றுத்தீரும். கோபாலய்யங்காரே! உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு விசாலாக்ஷியை மணம்புரிந்து கொள்ளும் பாக்கியம் இனிக் கிடையாது. காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கையத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர்விட்டு அவிப்பது என்பது ஸாத்தியமில்லை.
நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து ஸம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரஸம் போய்விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரஸமேற்படவில்லை. ஆஹாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி கோபாலய்யங்கார்:— பந்துலுகாரு, “நான் விசாலாக்ஷியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை” என்றார். “ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?” என்று பந்துலு கேட்டார்.
அதற்கு கேபாலய்யங்கார்:— “அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாக்ஷி ஸர்வ சுபலக்ஷணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும், மற்றொருத்திக்கு எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்திவிட்டேன். மற்றொருத்தியின் மீது காதலுடையேன்” என்றார்.
“அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாக்ஷியை மணம் புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது?“ என்று பந்துலு வினவினார்.
“எனக்குக் காலையில் தெரியாத, எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்துவிட்டேன் என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது“ என்றார் அய்யங்கார்.
“அஃதெங்ஙனம்?“ என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால் அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதி வந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன ஸமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். அதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். “காதலாவது, உருளைக்கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணாவது கதையாவது! நடக்கக் கூடிய விஷயமா? பணிப்பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?” என்று பந்துலு கேட்டார்.
இது கேட்டு கோபாலய்யங்கார்:— “அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது?“ என்றார்.
அப்போது பந்துலு:— “தங்களைப் போன்ற ஸ்தானமும் மதிப்புடைய மனிதரை அந்தப் பெண் மணம் செய்துகொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்டமாத்திரத்தில் இணங்கிவிடுவார்கள். இதிலெல்லாம் அதிகக் கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களைப் புத்தி ஸ்வாதீனமற்றவரென்று நினைப்பார் தங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துபோய்விடும்“ என்றார்.
“ஸர்க்கார் வேலை போகாதே? அதற்கு யாதொரு ஹானியும் வராது. இங்கிலீஷ் ராஜ்யம்! தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை! எந்த ஜாதியார் எந்த ஜாதிப் பெண்ணை மணம் புரிந்து கொண்ட போதிலும், இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது” என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
அதற்குப் பந்துலு:— “அவ்விஷயம் எனக்குத் தெரியாததன்று. தாங்கள் வேலைக்காரியை மணம் புரிந்து கொள்வதால் உங்கள்மீது ராஜாங்க அதிருப்தி ஏற்படாது. உங்கள் உத்தியோகத்துக்கு யாதொரு தீங்கும் நேராது. ஆனால், உங்களுடைய ஸ்நேகிதர்களும் உங்களுடன் ஸமபதவியுடைய பிறரும் உங்களை இகழ்ச்சியாகப் பேசுவார்கள். ‘மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அபகீர்த்தி மரணத்தைக் காட்டிலும் கொடியது’ என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லுகிறார். அந்த அபகீர்த்தியைக் குறித்தே நான் அஞ்சுகிறேன்“ என்றார்.
இதுகேட்டு கோபாலய்யங்கார்:— “வெறுமே விதவா விவாகம் செய்து கொண்டாலும் பந்துக்களும் ஸ்நேகிதர்களும் அபகீர்த்தி சாற்றத்தான் செய்வார்கள். அதற்குத் துணிந்த நான் இதற்குத் துணிதல் பெரிதன்று. பந்துக்களும் ஸ்நேஹிதர்களும் சிறிது காலம் வரை வாய் ஓயாமல் பழி தூற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களுக்கே சலிப்புண்டாய்விடும். ஒரே ஸங்கதியைப் பற்றி எத்தனை நாள் பேசுவது? ஒரே மனிதனை எத்தனை காலம் தூற்றிக் கொண்டிருப்பது? நாளடைவில் எல்லாம் சரியாய்விடும். ஜாதிப்பிரஷ்டம் இருக்கத்தான் செய்யும். சாகும்வரை பந்தக்களுடன் பந்தி போஜனமும் ஸம்பந்தமும் செய்ய முடியாமல் போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாக்ஷியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான் செய்யும். ஜாதிப்பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம் விசாலமானது. பிராமணர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள். பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால், ஒருவனுக்கு ஜாதிப்பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. ஸ்நேகிதர்களும் இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய ஸ்நேஹிதர்கள் கைவிட்ட போதிலும், புதிய ஸ்நேஹிதர் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்கு ஸ்நேஹிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோகமுள்ளவரை ஸ்நேஹிதரில்லையென்ற குறைவு நேராது” என்றார்.
”இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும் என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன” என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.“அந்தக் காரணங்களையெடுத்து விளக்குங்கள்” என்றார் கோபாலய்யங்கார்.
“முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சி யில்லாதவள். கல்விப் பயிற்சி யில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதை யெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்“ என்று பந்துலு சொன்னார்.
அதற்கு கோபாலய்யங்கார்:— “நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல ஸங்கீத ஞானம்— இன்னும் எத்தனையோ லக்ஷணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அஃதற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளைக் கீழ்க்குலத்துப் பெண்கள் மிக விரைவிலே கற்றுக்கொள்ள முடியும். அந்த நாகரிக நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம் குடியிருந்தால் போதும். அந்தப் பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன்” என்று அய்யங்கார் சொன்னார்.
“உலக அனுபவமில்லாத பதினாலுவயதுப் பச்சைப் பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது. முப்பது வயதாய், உயர்ந்த ஸர்க்கார் வேலையிலிருந்து ஸகலவித லௌகிக அனுபவங்களுமுடைய தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமாகக் கொண்டது. புதுமை மாறிப் போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவுப் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது“ என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.
“மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. ஸாவித்திரியும் ஸத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. ஹிமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்” என்று அய்யங்கார் சொன்னார்.
செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு:— சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்“ என்றார்.
அப்போது கோபாலய்யங்கார்:— அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு வீரேசலிங்கம் பந்துலு:— “அப்பணிப்பெண்ணுக்குப் பெயர் மீனாக்ஷி. அவள் ஜாதியில் இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது.... .......ஓஹோ ஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?“ என்றார்.
“அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை “என்று கோபாலய்யங்கார் சொன்னார்.
“தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருந்திருக்கலாம்“ என்றார் பந்துலு.
“அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு ஸ்த்ரீயின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும், வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியனவற்றை எனக்குச் சொல்லுங்கள்” என்று கோபாலய்யங்கார் வேண்டினர்.
”எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த வேலைக்காரியுமன்று. இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என் நண்பர் வேங்கடாசலநாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமஸமாஜத்தைச் சேர்ந்தவர். இந்த வீடும் அவருக்குச் சொந்தமானதே. இந்த வேலைக்காரி அவருடைய குடும்பத்தில் வேலை செய்பவள். இங்கு நான் தாமஸிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்குத் துணையாக வீடு பெருக்கி, மாடு கறந்து, விளக்கேற்றி, இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜ மஹேந்திரபுரத்துக்குப் போகும்போது அப்பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்குப் போய்விடுவாள்” என்று பந்துலு சொன்னார்.
“நாளைக்குக் காலையில் நான் ௸ வேங்கடாசல நாயுடுவைப் பார்க்கவேண்டும். அவர் இங்கு வருவாரா? நாம் அவருடைய வீட்டுக்குப் போகவேண்டுமா?” என்று கோபாலய்யங்கார் கேட்டார்.
“அவரையே இங்கு வரச் சொல்லலாம். நாம் போகவேண்டாம். எனிலும், இந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளும் விஷயத்தைத் தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது“ என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.
இதுகேட்டு கோபாலய்யங்கார்:— “எதற்கும் நாளைக்குக் காலையில் நாயுடுவை இங்கு தருவியுங்கள். மற்ற ஸங்கதி பிறகு பேசிக்கொள்வோம்“ என்றார்.
அப்பால் இருவரும் நித்திரை செய்யப் போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த ஸம்பாஷணையைத் தமது மனைவியிடம் தெரிவித்தார். அவள் மறுநாட் பொழுது விடிந்தவுடனே அச்செய்தியையெல்லாம் விசாலாக்ஷியிடம் கூறினாள். அது கேட்டு விசாலாட்சி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து:— “இது போனால் போகட்டும். வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது“ என்றாள்.
அப்போது பந்துலுவின் மனைவி:- “பயப்படாதே, அம்மா. உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான். நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன்“ என்றாள்.
[நான்காம் அத்யாயம் முற்றிற்று]