சரிந்த சாம்ராஜ்யங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

மன்றம் வெளியீடு-17.

முதற்பதிப்பு - மே 1953.










உரிமையுடையது.


உங்கள் அன்புக்கு

இந்த சரிந்த சாம்ராஜ்யத்தை ஏற்கெனவே அணுவணுவாக சரிந்துகொண்டுவரும் திராவிடப் பெருங்குடி மக்களுக்கும், அவர்களல்லாத நடுநிலையாளர்களுக்கும் மையத்தில் வைக்கிருேம். இதில் யாரையும் வேண்டுமென்றே தூக்கியும் தாழ்த்தியும் எழுதப்படவில்லை.


வரலாறு அன்று முதல் இன்றுவரை வளைந்து வளைந்து ஒடிய பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம். அழிந்த சாம்ராஜ்யங்களின்மேல் முளைத்திருக்கும் புல்லைத் தின்று பசியாற வரும் கால்நடைகள் போல், அழிந்த சாம்ராஜ்யங்களால் தங்களுக்கென்று விடப்பட்ட மானியத்தால் ஆரியம் எப்படி வளர்ந்தது என்பதை குறிப்பாக சுட்டிக்காட்டுவதும், அவ்வளவு கொடிய ஆரிய நச்சரவத்தின் முன்னால் பரோபகாரத்தால் கை நீட்டிய மண்டலாதிபதிகள் மண்ணைக் கெளவிய சோக வரலாற்றை சித்தரிப்பதே இந்த சரிந்த சாம்ராஜ்யத்தின் குறிக்கோளாகும்.


நம்முடைய பழைய மன்னர்களின் பிரதாபத்தை பாழடைந்த மண்டபங்களும் பார்த்து சிரிக்க வைத்து விட்டானே என்று ஆத்திரப்படுவோர், ஆத்திரத்துக்கு அடிமைப்பட்டு அறிவை யிழந்துவிடுவதைவிட அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்து இனி வரும் உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை சித்தரிக்க இந்த நூல் பேருதவியாக இருக்கும் என்பதே என் முழு நோக்கமாகும். அன்பர்கள் ஆதரவுக்கு என் நன்றி.


திருச்சி
உங்கள்
20-5-53
சி. பி. சிற்றரசு.

சரிந்த சாம்ராஜ்யங்கள்

வாளின் ஒளியைவிட ஜோதியாய், அதன் கூர்மையைவிட மகாக் கொடியதாய், மின்சாரத்தைவிட வேகமாய்ப் பாயக்கூடியதான கோதையர்களின் கண்வீச்சால் கருத்தழிந்து சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். பலவித வேறுபட்ட பண்பாடுகளால் நாடுகள் ஒன்றோடொன்று முட்டி மோதி ரணகளத்தில் கைசலித்து வேறு வகையில்லாமல் வாளைத் தூர எறிந்து எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து உயிர்ப்பிச்சைக் கேட்டு மன்னர்கள் ஒடிப்போனதால் வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அகழியில் நீர் வற்றியதால், அயலார் கோட்டையின் தலை வாயலிலே நுழைய, அதே நேரத்தில் அவர்களைத்தடுத்து நிறுத்தத் திறமற்று கோட்டையின் கடைவாயில் வழியாக கானகம் ஓடி உயிரைக் காப்பாற்றிக்கொண்ட உதவாக்கரை மன்னர்களால் வீழ்ந்துவிட்ட வல்லரசுகள்.

சட்டத்தால் மனிதன் புரத்தையும், சம்பிரதாயத்தால் மனிதனின் அகத்தையும் அடக்கி ஆண்டுகொண்டிருந்த இரட்டைக் கொள்ளைக்காரர்களான மதகுருவுக்கும், மன்னனுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். தேவையைத் தேடித் தேடித் திரிந்தும் பெறமுடியாமல் திகைத்த மக்கள் ஒருபுறமும், தேவைக்கதிகமான தேக்கத்தில் திளைத்து மதம் பிடித்து அலைந்த மன்னர்கள் ஒருபுறமும் நின்று போர் செய்து, இறுதியில் மக்கள் சக்தியை எதிர்த்து நிற்கமுடியாமல் மக்களுடைய ஆவேசக்கனலால் கருகி சாம்பலான சாம்ராஜ்யங்கள்.

வேட்டுச் சத்தம் வெளியே கேட்டுக்கொண்டிருந்த போது மக்களைக் காட்டிக்கொடுத்து தானும் தன் குடும்பமும் சுரங்க வழியால் வெளியேறியதால் வேதனைக்குள்ளான சாம்ராஜ்யங்கள். வற்றிய அகழி, வான் பறவைகள் வட்டமிட்டப் பிணக்குழி, பொலிவிழந்த பவனம், நாயும் நரியும் நாவை நீட்டிக்கொண்டு பிணங்களின் மேல் திரியும் காட்சி, அரசியல் பங்கீட்டில் போட்டி, அதிகாரத்தைச் செலுத்துவதில் சுயநலம், மக்களையடக்க நானேதான் என்ற இருமாப்பு, மங்கையர்களை சிறைபிடித்ததால் ஏற்பட்ட முற்றுகை, "நீ அந்த மங்கையை விரும்பினால் மணிமுடியைத் தரமாட்டோம் என்றெழுந்த சம்பிரதாயத்தொனி, காலத்தால் ஞாலத்தைப் பார்க்காமல் கணக்கெடுக்கப்பட்ட ஆயுதங்களின் பட்டியலைக்கண்டு களம்புகுந்த அறியாமை, மண்ணுக்குடையவன் நான், ஆகவே மண்டலாதிபனும் நான் தான். மக்களே ! நீங்கள்தான் மண்ணிலும் கேடான வர்கள்" என்று ஏளனம் பேசியதால் அதே மக்களால் அதே மண்ணக் கெளவிய கேலிக்கூற்று. மணியுருட்டிகள், தீக்குண்டத்தார், தேவதூதர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டோர், தர்ப்பையேந்திகள், ஆந்தை விழியார், ஆபாசச்சின்னங்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து மன்னர்களைத் தம் மந்திரங்களென்ற விளையாட்டுக் கூச்சலாலடக்கி மக்களின் மதியையும் நிதியையும் சூறையாடி, அவர்கள் விதியைத் தம்மால் மாற்றமுடியும் என்ற வெட்டி வேதாந்தம் பேசி, இதை நம்பிய மக்கள் பலவாண்டுகள் தங்கள் வாழ்வில் மாற்றங் காணாததால் செய்த புரட்சியால் புதையுண்டுப் போன சாம்ராஜ்யங்கள் ;  அவைக்களத்தில் அவமதிக்கப்பட்டோம் என்ற ஆத்திரத்தால் அலைகடல் கடந்து ஆயுதமேந்தி வந்தவனுக்கு பூரண கும்பமும் புலால் விருந்தும் அளித்து உள்ளே அழைத்து வர, தன் பரம்பரைக்கு புராதனமாக வாழ்வளித்து வந்த புரவலர்களின் கோட்டைச் சாவியைக் கொடுத்துத் தானும் புதுப் பதவியேற்றதால் புலியெனப் பாய்ந்த மக்களால் நார் நாராகக் கிழித்தெறியப் பட்ட சாம்ராஜ்யங்கள்.

தான் ஆள முடியாவிட்டால், வேறு எவனேயும் ஆளவிடக் கூடாதென்ற பொறாமைத்தீயில் குதித்துவிட்ட மன்னர்களின் அழிவுக்குப்பின் தானாகவே அழிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், நாட்டைக் காப்பாற்றப் படையெடுத்து, கோட்டையின் மேல்தளத்தில் காமக் காற்றால் அசைந்தாடிக் கொண்டிருந்த சரசவல்லிகளிடம் தன் மதியைப் பறிகொடுத்து மீளாத காதலால் ரணகளத்திலிருந்து மீள முடியாமல் மண்மேடான சாம்ராஜ்யங்கள். நாட்டின் எல்லைக் கோடுகளை விரிவாக்கவும், மதக் கோட்பாடுகளைத் திணிக்கவும், மத குருவின் ஆசியைப் பெறவும், மண்டலம் பலவற்றிற்கு மன்னர் மன்னன் என்ற பட்டம் பெற வேண்டுமென்ற பேராசையும் குடிகொண்டு படையெடுத்து ஜெகமஞ்ச போரிட்டு, எதிரிகள் தன்னிடம் சரணாகதி யடையாமுன்னமே பாவையர்கள் மையலில் விழுந்து புரையோடிப்போன சாம்ராஜ்யங்கள்.

"மக்களையடக்க நான், மக்களின் உள்ளத்தையடக்க மதகுரு, இவ்வுலகுக்கு அதிபன் நான், அவ்வுலகுக்கு அதிபர் அவர், இந்த இரண்டுக்குமிடையே இங்குமங்குமாக பறந்துசெல்லும் அணுக்கள் மக்கள், பொருள் என்று கேட்டால் போர்முரசு கொட்டுவேன். வாய்திறந்தால் குதிரைக் காலடியால் அவர்கள் வாயிலிருந்து குறுதியைக் காண்பேன், எதிர்த்தால் இருட்டறை, சிந்தித்தால் சித்ரவதையோடு சிறைவாசம், ஏன்? என்று கேட்டால் ஆள்கொல்லி சட்டம், இனி என்னை எவனுமே அணுகமுடியாது. என் பொண்வண்டு தவிர” என்று பொற்கொடியைத் தாவி பூவிரித்த மஞ்சத்தில் சாய்ந்திருந்த மாமிசமலையை, மக்கள் வேங்கையென வரிப்புலியென பாய்ந்து அந்தக் குணக்கேடனின் உதிரத்தைத் தெளித்து வெற்றிவிழா கொண்டாடிய போது உமிழ்ந்த உதிரவாயோடு வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள்.

பகுத்தறிவு பேசியதால் பாய்ந்து சீறிய பார்த்திபன், விளக்கம் கேட்டதால் வேதனையை வேலெனப் பாய்ச்சிய வேந்தன், சிந்திக்கத் தொடங்கியதால் சினம்கொண்ட சிங்காதனத்தான், வேத தூதர்களின் விஷவேலியைக் காத்த வெண்சாமரத்துக்குடையோன், கடவுள் சொன்னதா கற்பனையா என்று கடாவி அறிவின் கபாடக் கதவுகளைத் திறந்துவிட்ட தீனர்களை தீயில்தள்ளிய தீயர்கள், ஆண்டவனே வணங்கப் பணமேன் என்ற அறிவுரையை எழுப்பிய பகுத்தறிவு தூதர்களை பட்டப் பகலில் பகிரங்க மேடையில் நிறுத்திக் கொன்ற பாவிகள்.

உண்டு கொழுத்து வீணைவாசித்து மாதர் மையலில் சிக்கி, மதுவில் குளித்து, பதிகம்கேட்டு, பானம், பாவை, பதிகம் பக்தி இவைகளே பரமண்டலத்தின் திறவுகோல் என்ற மமதையில் திளைத்து எதிரிகளின் முற்றுகையை துளசித் தழைகளால் தடுக்க முடியும் என்று வேதியர்கள் சொன்ன யோசனையாலும், வேள் விழியாளின் அணப்பிலிருந்து விடுபட முடியாத உற்சாகத்தாலும்,  வேதபம்பரங்களை அழைத்து அவர்கள் வாயின்மூலம் மந்திரங்களை கிறு கிறுவென சுற்றவைத்து தானும் சுற்றி தன்னை எதிரியும் சுற்றி கைவிலங்கோடு கைதிகளான மன்னர்கள், ஹரே! ராமா ஆதரிக்கமாட்டாயா, என்ற பெருமூச்சோடு இருட்குகையில் இருளோடு இருளாய் விட்ட சோம்பேறிகளால் இடிந்துபோன சாம்ராஜ்யங்கள்.

அடையாளங்கள்

அரசியலில் மாற்றங் காண வேண்டுமென்று துடியாய்த் துடித்த மேதைகளின் உயிரை போதைப் பொருளென அருந்தியதால் ஏற்பட்ட ஆவேசக் குரலின் அடி தளத்திலேயே மெளனம் சாதித்துவிட்ட மன்னர்களின் உருவச்சிலைகள், இடிந்த கோட்டையின் கற்பாறைகளின் இடுக்கிலே நொறுங்கிக் கிடக்கும் எலும்புகள், காய்ந்தமரத்தின் கிளைகளிலே இரத்தஞ் சொட்டச் சொட்டத் தொங்கிக்கொண்டிருக்கும் பிரேதங்கள். மகனை இழந்த தாயின் மயானக் குரல், கணவனை இழந்த கற்பரசியின் துயரக் குரல், வெஞ்சமரில் வீழ்ந்து விட்ட தன் பிதாவை நினைத்து நினைத்து அழுதக் கண்ணீரின் உப்புக்கோடுகள் உதட்டின் ஒரத்தைத் தொடுவதற்கு முன்னால் அண்ணனும் இறந்துவிட்டான் என்ற அபாயச்செய்தியை கேட்டு செயலற்று சிலைபோல் நின்று விட்ட உருவங்கள், ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட போரில் கணவன் கண்களையிழந்துவிட்டான் என்ற செய்திகேட்டு கதறிய மாதர்கள், தாவரஜங்கம சொத்துக்களையடைய ஏற்பட்ட போரில் எங்களனைவரையுமே இழந்து விட்டான் என்மகன் என்று தேம்பியழுத தாய், பூதளம் தூங்க புல்லினம் ஓய்வெடுக்க ஆந்தைகள் மட்டும் அலறிக் கொண்டிருக்க ஊர்க்கோடியிலே ஒரு  கிழவியின் அழுகுரல் மட்டிலும் கேட்க, நகரப் பரிசோதகன் கதவைத்தட்ட, அழுகையை நிறுத்தி அந்தப் பெரியவள் கதவைத் திறக்க, எங்கள் மன்னன் மானத்தை வாங்கவா இப்படி பெருங்குரலிட்டு அழுது கொண்டிருக்கின்றாய் என்று வந்த வேட்டைநாய் அந்த முதியவள் வாயில் குத்த, அடுத்த வினாடியே அவளும் பிணமாய்ச் சாக, அதைத் தங்கள் அதிர்ஷ்டமென நினைத்து வீட்டிலிருந்ததை வந்தவர்கள் சுருட்ட, விடிகிற வரையிலும்யாரும் அந்த வீட்டையணுகாமலிருக்க, வேந்தனிடம் இந்த விவகாரம் வழக்காக நிற்க, விலா வெடிக்கச் சிரித்துவிட்டு தன் பஞ்சணைக்குச் சென்றுவிட்ட பாதகர்கள்.

மக்கள் செலுத்தும் வரியிலேயே மருந்துகளையும் குண்டுகளையும் வாங்கி அதே மக்களை அதே ஆயுதங்களால் அடக்கியாண்ட சேனைத் தலைவர்கள். தீரர்களுக்கும் தீயர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் தீ மிதித்தவர் போலாடிய தறுக்கர்கள், தன்னையாதரித்தவனை வஞ்சனையால் கொன்று குவிக்க எதிரிகளுக்கு இருட்டில் ஆயுதங்களைக் கொடுத்துதவிய அற்பர்கள், உள் நாட்டில் புகப் பாதை தெரியாமல் திகைத்தப் பகைவரிடம் பேரம்பேசி பாதையைக் காட்டிய பாதகர்கள், ஜெகத்தைக் கட்டியாள தன் படைகள் புடைசூழ வந்த ஜென்ம விரோதிகளுக்கு துவஜாரோகணம் தூக்கிய ஜெகஜாலப் புரட்டர்கள். ஜெமீன்கள், இனாம்கள், சங்கீதத்தால் செங்கோலைத் தன் வசப்படுத்த ஜெகன் மோகினிகளைப் பந்தயப் பொருளாக வைத்து தூது சொக்கட்டானாடிய சோற்றுத் துருத்திகள், மோகனப் புன்னகையால் மன்னர்களின் சித்தத்தைச் சண்டைக் கிழுத்துத் தங்கள் காமக் கோடரியால் மன்னனின் சிரத்தை வெட்டி வீழ்த்தி சதி செய்த சண்டாளிகளின் பாதம்தாங்கிகள். அவன் ஏன் மன்னன்; நான் ஏன் மந்திரி நானே மன்னன் என்று பிரகடனப்படுத்திய அமைச்சனை வஞ்சம் தீர்க்கும் வெறியில் எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து எல்லாவற்றையும் இழந்து விட்ட ஏமாந்த சோணகிரிகள்.

நாட்டில் பஞ்சம் அதிகம், ஆகவே என் தந்கை செய்த சட்டங்களே நான் மாற்றுகிறேன். இனி சதுர் வேதி மங்கலங்கள், தரும ஸ்தாபனங்கள் செல்லாது என திருத்தஞ் செய்த தார்வேந்தர்களையொழிக்கப் பெண்களையேவிய புரோகிதக் கூட்டங்கள். அண்ணன் அரசைத் தம்பிக்கும், தம்பியின் உரிமையை மாற்றானுக்கும் ஆக்கி உளம் களித்த உதிரப் பிண்டங்கள்.

தந்தையை இப்படையிலும், தனையனை அப்படையிலும் நிறுத்தி வேடிக்கைப் பார்த்து உருளும் தலைகள் மேல் நின்று வெற்றிச் சங்கமுழங்கிய வீணர்கள், அவர்களுடைய அடாதச் செயலுக்கு ஒத்துதிய வேதியர்கள் அன்னமிட்டுக் காப்பாற்றியவனுக்கே ஐந்தாம் படை வேலை செய்துத் தங்கள் பஞ்சாங்கத்தின் அட்டைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்ட இரத்தம் உருஞ்சும் அட்டைகள்.

அரசபோகம் தனக்கும் வேண்டுமென்ற பேராசையால் எழுப்பிய அஜமேக யாகத்தின் புகை, அஸ்வமேத யாகத்தில் இரு துண்டாக்கப்பட்ட குதிரை, மண்டலத்தை ஒழிக்கிறேன் என்று குள் உரைத்து அவிழ்த்து விடப்பட்ட குடுமி, சோமபானத்தால் ஏற்பட்ட போதை, ஆற்றங்கரைகளிலே போடப்பட்ட தவளைக் கூச்சல், பல யாககுண்டங்களின் முன்னால் நிறுத்தி வெட்டப்பட்ட ஆடுகளின், உதிர்ந்த ரோமங் கள், உலர்ந்த மலர்கள், சோற்றுப்பருக்கைகள், அவிர்ப் பாகத்தை அளவில்லாமல் தின்று மயக்கமேறி மண்டபத்தின் படிகளிலே உருண்டுக்கிடந்த மாமிச மலைகள், மோப்பத்தால் வாலைக்குழைத்துக்கொண்டு வந்த நாய்கள், இருண்டவுடன் ஊளையிட்ட நரிகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்களாக ஏட்டில் இடம் பெற்றிருக்கும் எழுத்துருவங்கள்.

இன்னும் பல

பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு இருட் குகையிலே மாண்டுவிட்ட கிரேக்க மன்னன் பெரிக்லசின் சோகக் காட்சிதரும் உருவச் சிலை. ”பழைய சின்னங்களை அழிக்காதே” என்று ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருக்கும் சர்க்காரின் எச்சரிக்கைப் பலகைகள், சரிந்திருக்கும் செஞ்சிக் கோட்டை, மொகலாய மன்னன் ஷாஜஹானின் சிறப்பின் மயிலாசனம், செங்கோட்டை, போரில் மாண்ட மாவீரர்களின் அடையாளச் சின்ன மான பிரமிட் கோபுரங்கள்.

புகைவடுக்கள் படர்ந்து சாய்ந்து நிற்கும் கோட்டைச் சுவர்கள், தனது பழைய செல்வாக்கை நினைத்து நினைத்து கண்ணீர்வடிக்கும் ரோம், நைல் நதி வெள்ளத்தைக் காட்டிலும் இரத்த வெள்ளம் அதிகமெனக் காட்டிய சீசர்கால எகிப்து மக்கள், மதிமயக்கத்தால் தன் செங்கோல் சுதியை மீட்டிக்கொண்டிருந்த மஞ்சு சர்க்காரின் தலைநகராம் நான்கிங், சீன சாம்ராஜ்யத்தை ஒருகாலத்தில் அழித்துத் தன்கொடி பறந்தாட சூழ்ச்சி செய்த வெள்ளையருக்குச் சொந்தமாயிருந்த துறைமுகங்களான காண்டன், பூ செள, சுங்கிங். நான்கிங், தேடுவாரற்று தரையில் புதைந்துகிடக்கும் துருப்பிடித்த ஆயு தங்கள், போரில் மாண்ட மாவீரர்களின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்து, இன்று பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரப் பட்டயங்கள், மிகப் பழைய போராயுதமான வில், அதில் நாணேற்றி அறுந்துவிட்ட கயிறுகள், வில்லிலிருந்து புறப்பட்டு குற்றவாளி கோட்டைச் சுவற்றில் முட்டி கூர்மழுங்கிப் போன அம்புகள், வில்லில் நாணேற்றும்போது ஏற்பட்ட ரீங்கார சத்தத்தை மண்டலமெல்லாம் பரவச்செய்த அணுக்களின் அணுக்கள். எதிரிகளின் குதிரைக் குளம்படிப்பட்டு உடைந்துபோன மண்டையோடுகள். சாம்ராஜ்யாதிபதிகள் கையொப்பமிடா முன்னம் களம்புகவேண்டி வந்ததால் அரை குறையாக விடப்பட்ட கையெழுத்தில்லாத சாசனங்கள், சமர்க்களத்தில் சலிக்காது போரிட்டும் வெற்றித் தோல்விகள் தெரியாததால் வெள்ளைக் கொடி காட்டி, விட்டனுப்பிய சமாதான அறிக்கையின் கையெழுத்துப் பிரதிகள், படைகள் எவ்வழி செல்ல வேண்டுமென்பதை சாலையின் மரங்களில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், தளகர்த்தனுக்கு சேதி சொல்ல அனுப்பட்ட புராவினங்களின் சந்ததிகள்.

ஆள்பவன் உயிரோடிருக்கும்போதே அவன் பாதுகையை வைத்தாண்டு, தம்பியை ஏமாற்றியதாகச் சொல்லும் பாடகனின் கற்பனையில் உதித்து இன்று தெய்வீகத் திருவிளயாடல் எனப் போற்றப்படும் ஏடுகள், நா வல்லோன் தன் கற்பனையால் உண்டாக்கிய காகிதக் கோட்டைகள், கற்பனை உலகங்கள், கருத்துக்கே எட்டாத கனவு உலக சாம்ராஜ்யங்கள். சென்னியில் கல்லேற்றி சினம் தீர்த்த மன்னன் மீண்டும் தன் பகைவரை மன்னித்து விருந்தளித்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகள்  ஆகியவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.

எதிரிகளின் குண்டுகளின் தாக்குதலால் வாய்பிளந்து தண்ணீரைக் குடித்துக் கடலின் அடிவாரத்திலே கண் கலங்கிக்கொண்டிருக்கும் மரக்கலங்கள், போர் மூண்டதால் நெடுநாட்கள் புகைவிட முடியாமல் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கும் புகைப் போக்கிகள்.

மக்கள் மடிந்தாலும் தங்கள் மகோன்னத வாழ்வுக்கு முடிவேற்பட்டால் செங்கோலைப் பிடிங்கி மன்னன் செல்லுயிரைப் போக்கும் சீலமற்றவர்கள் விதைத்தவினையால் வீழ்ந்து விட்ட சாம்ராஜ்யங்கள், மதக் கோட்டை ஆட்டங் காண்பதைக் கண்டு வாளாவிருந்த மன்னர்களின் மண்டையில் தேளெனக் கொட்டித் தங்கள் தோளை உயர்த்திக்கொண்ட சண்டாளர்கள் செய்த சதியால் சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அவைக்களத்தில் ஏதோ அவசர வேலையாக இருந்த மன்னன் தன்னை அவமதித்தான் என்ற மன எரிச்சலால் அரசுரிமையை மாற்றானுக்கு ஆக்கித்தந்த மடையர்களால் மண் மேடுகளான கோட்டைக் கொத்தளங்கள், மருந்தடைக்கும் பீரங்கியின் வாயில் மண்ணையும் கல்லையும் அடைத்து வெடிக்க ஒட்டாமல் தடுத்து வேடிக்கைப் பார்த்த வேதியர்களால் வேதனைக் குள்ளான வேந்தர்களின் கல்லறைகள், காலத்தால் செய்த நன்றியை ஞாலத்திலும் பெரிதென எண்ணாமல் கண நேரத்தில் தன்னக் காப்பாற்றியவனைக் காட்டிக் கொடுத்த கயவர்களால் வீழ்ந்து விட்ட கற்கோட்டைகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.

சாம்ராஜ்ய மென்றால் என்ன ?

ஒன்றாக சேர்க்கப்பட்ட பல நாடுகளின் தலைமை: அல்லது வாள் வலிமையால் ஒன்று சேர்க்கப்பட்ட பல நாடுகளைக் கொண்ட ஆட்சி, அல்லது பல சிற்றரசர்களால் மனம் ஒப்பி கெளரவமாக ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒரு தலைமையின் கீழ் அன்பு முறையில் இயங்கும் அரசு, மக்களையாள்வது மன்னன் கடமையென்பதும், மன்னனுக் கடங்கி நடப்பது மக்கள் கடமை யென்பதும் வல்லோன் வகுத்த வழி என்று மக்கள் அறியாமையால் ஒப்புக்கொண்ட ஒரு முறை, பொறுப்பான மன்னர்களால் முதலில் அன்பாக நடத்தப்பட்டு, பிறகு அதே மன்னர்களால் சில சுட்டிக்காட்ட முடியாத காரணங்களால் யதேச்சாதிகாரத் தன்மையைக் காட்டியபோது, எதிர்க்க சக்தியற்றுக்கிடந்த மக்களையடக்கியாண்ட முறை. ’ஆண்டவன் விட்ட வழி’ பழைய பாவத்தின் விதை, இப்படி நாம் அடங்கித்தீர வேண்டிய நிலை ஏற்பட்டதென்ற அறியாமையினாலே ஒரு அரசின் இரும்புப் பிடியிலே அகப்பட்டுக் கொண்ட மக்களடங்கிய ஆட்சியையே நாம் பொதுவாக சாம்ராஜ்யங்கள் என்கிறோம்.

அதிகாரத் தொனியை ஆயுதத்தால் எழுப்பி மக்களையடக்கியாள வேண்டுமென்ற நிலையிலே இருந்த நாடுகளை மாத்திரமன்னியில் பரோபகாரத்தால் பாரையாண்டு அன்பு நெறியும் அறவழியும் காட்ட வேண்டு மென்ற முடிவில் ஆண்ட மன்னர்களுக்குட்பட்டிருந்த நாட்டையும் சாம்ராஜ்யம் என பொதுவாக அழைக்க கடந்த கால சரித்திரங்கள் இடந்தருகின்றன. மண்ணாசையாலும், மத வெறியாலும் மடமை யாலும் சூழ்ச்சியாலும் மறைந்துவிட்ட சாம்ராஜ்யங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.  இயேசு பிறப்பதற்கு முன் நான்காவது நூற்றாண்டில் மகா வீரன் அலெக்சாண்டர் எழுப்பிய சாம்ராஜ்யத்தைக் கொடுமையான தென்றும் ; அதே நூற்றாண்டில் அசோகன் எழுப்பிய சாம்ராஜ்யத்தை நல்ல வல்லரசென்றும் கூறலாம்.

அலெக்சாண்டரின் மண்ணாசை

தன்னுடைய அதிகாரத்தொனி தரணியெல்லாம் எதிரொலிக்க வேண்டும் என்றும், தன் குதிரையின் காலடிகள் படாத இடமே நானிலத்தில் இருக்கக் கூடாதென்ற முறையிலே, அன்று பூகோளத்திலே காணப்பட்ட இடங்களில் சரிபாதியைத் தன் வசப்படுத்தி ஒரு பெரிய கிரேக்க சாம்ராஜ்யத்தை எழுப்பினான் மாசிடோன்யாவின் மகாவீரன் அலெக்சாண்டர்.

கி. மு. நான்காவது நூற்றாண்டில் பூகோளத்தில் தெரிந்த பாதி உலகத்தை பதிமூன்று ஆண்டுகளில் வெற்றி கண்டான். அவன் வெற்றி முழக்கம் ஐரோப்பா, இந்தியாவின் பெரும் பகுதி (திராவிடம் தவிர) பஞ்சாப் முதலிய எல்லா இடங்களிலும் முழங்கின. தோற்றோடிய மன்னர்களை மேலும் மேலும் பயமுறுத்தாமல் அவர்களுடைய பரிபூரண அன்பைப் பெற்ருன். அப்படி அவன் செய்தது அவர்கள் மேலிருந்த அபிமானத்தாலல்ல, அகிலத்தையே கட்டியாளவேண்டுமென்ற தனது குறிக்கோளுக்கு இடையூராக இந்த குட்டி மன்னர்களின் எதிர்ப்பை வளரவிடக் கூடாதென்ற அரசியல் விவேகத்தால்.

இளமை

அலெக்சாண்டர் சிறுவனுயிருக்கும்போது அவன் தந்தை பிலிப் என்ற மன்னன் பல நாடுகளை வென்றான். தந்தையின் வெற்றியைக் கண்டு களித்திருக்க வேண்டிய அலெக்சாண்டர் மன வேதனையடைந்தான். ஏன்? எல்லா நாடுகளையும் தந்தை பிடித்துவிட்டால் தனக்கு பிடிக்க நாடுகள் இல்லாமல் போய்விடுமே என்ற வீரப் பொறாமையால்.

குதிரை

யாராலும் அடக்க முடியாத குதிரை. பெயர் பூஸிபாலஸ் (Bucephalus) அதைத் தொட்டுப் பார்க்க, தட்டிக் கொடுக்க வகையில்லாது குப்புற விழுந்த வீரர்களின் குலை நடுக்கத்தைக்கண்டு கொல்லென சிரித்தான் அலெக்சாண்டர். மனிதனால் அடக்கியாள முடியாததொன்றில்லை, ஆனால் மண்டையில் கொஞ்சம் மூளை வேண்டும். மனதில் ஓர் திடம் வேண்டும், செயலில் நம்பிக்கை வேண்டும், எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சுவதொழிய வேண்டும், இவைகளே இவனுடைய கோட்பாடுகள். மற்றவர்களால் அடக்கியாள முடியாத குதிரையை ஒரு நொடியில் அடக்குகிறான்.

மனிதன் நிழல் தெரிந்தவுடனே காற்று வேகத்தில் கிளம்பிவிடும் அந்தக் குதிரையை காலையில் கிழக்கு நோக்கி நிறுத்தினான், நிழல் குதிரைக்கு முன்னால் போகாமல் பின்னால்படவேண்டுமென்ற உபாயத்தைக் கையாண்டு குதிரைமேல் ஏறிக்கொண்டான். அவ்வளவு தான் ஒரே, அடியில் கீழே விழும் பலவீனன் போல் வீழ்ந்துவிட்டது. குதிரையின் முரட்டுத்தனம் ஒன்றும் அலெக்சாண்டரிடம் சாயவில்லை. வீரத்தை மட்டிலும் பயன்படுத்தாமல் விவேகத்தையும் பயன்படுத்தி குதிரையையடக்கிவிட்ட அலெக்சாண்டரைப் பார்த்து பிலிப்-" என்னுடைய இந்த சிறிய சாம்ராஜ்யம் உனக்குப் போதாது' என்றான். அன்றுதான் தான் ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியாக வேண்டுமென்ற எண்ணம் உதயமாகிறது. அவனால் அடக்கியாளப்பட்ட குதிரை அவன் சென்ற பல ரணகளங்களுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அந்தக் குதிரையின் பெயரை, தான் இந்தியாவில் வெற்றிக் கண்ட ஒரு நகரத்துக்கு வைத்திருந்தான். ஆனால் அந்த குதிரையும் இந்தியாவிலேயே இறந்துவிட்டது மாத்திரமன்னியில் அந்த குதிரையின் பேரால் இடப்பட்டிருந்த நகரமும் நான்கைந்து ஆண்டுகளில் மறைந்துவிட்டது.

கி மு. 338-ல் ஷெரோனியர் போரில் அலெக்சாண்டர் தன்னுடைய பதினைந்தாவது வயதில் வீரனாக சேவை செய்திருக்கின்றான். தன் தந்தைக்குப் பிறகு தான் தான் அரசன் என்ற தளராத நம்பிக்கையால் ஜெகத்தைக் கட்டியாள வல்லதோர் வன்மைகளையும் உபாயங்களையும் சேகரித்துக்கொண்டிருக்கின்றான். குவலயமெங்கணும் கிரேக்கத்தின் கொடி பறக்க வேண்டுமென்பது தான் அலெக்சாண்டருடைய அடங்காக ஆசை. இல்லையென்றால், போர் என்று கேட்டவுடன் பயந்தோடும் பருவமாகிய பதினைந்தாம் வயதில் அவன் ஈட்டியையும் கேடயத்தையும் ஏந்தி ரணகளம் சென்றிருக்கமாட்டான். ’இம் மண்டலம் அலெக்சாண்டருடையது. அதன் தலை நகரம் மாசிடோனியா’ , இதுவே அவன் கனவிலும் நினைவிலும் சதா நினைத்துக் கொண்டிருந்த பிடிவாத எண்ணம்.

ருசிகரமான சம்பவம்

பிலிப் இரண்டாந்தாரமாக கிளியோ பாட்ரா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு, சாந்தித்திருமணம் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அறைக்குள் இருவரும் நுழைவதற்கு முன், கிளியோபாட்ராவின் சிறிய தந்தை இவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கே அரசுரிமையை வழங்க உறுதியளிக்க வேண்டுமென்று பிலிப்பை வழிமறித்துக் கேட்கிறான். இதனால் அலெக்சாண்டருக்கும் பிலிப்புக்கும் வாக்கு வாதம் நடக்கிறது, இறுதியில் சண்டை முற்றி அலெக்சாண்டரை பயமுறுத்துவதற்காக வாளையுறுவுகின்றான் பிலிப். பதிலுக்கு தந்தையின் நெஞ்சுக்கு நேராக தன் வாளை நீட்டி விட்டான் அலெக்சாண்டர். பிலிப் மகனின் கோபத்தைக்கண்டு மயக்க முற்று கீழே விழுந்துவிட்டான்.

மற்றோர் நாள்

தன் சிற்றன்னையின் தம்பி அனைவருக்கும் விருந்து நடத்துகின்றான். எல்லாரும் வெறிக்கக் குடித்த பின், மதுக் கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ”எல்லாரும் என் தமக்கையின் கற்பத்தில் பிறக்கும் குழந்தை தான் இந்த நாட்டின் மன்னனாக வேண்டும் என்று சந்தோஷமாக மது அருந்துங்கள்,” என்கிறான் கிளியோ பாட்ராவின் தம்பி. அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த அலெக்சாண்டர் இவன்சொன்னதைக் கேட்டது தான் தாமதம், ஓங்கி விட்டான் ஒரு அறை. அந்த அறைக்குக் காரணமென்ன. மன்னனாக வேண்டியவன் நானிருக்கும் போது எப்படி கிளியோ பாட்ராவுக்குப் பிறக்கப்போகும் குழந்தை மன்னனாக வரமுடியும் என்பது தான். இதில் அலெக்சாண்டர் தன் அரசுரிமையை மாத்திரம் நிலைநாட்ட வில்லை. தன் தாய் பட்டத்துக் குறிய சட்ட ரீதியான ஒரு மகனை ஈணாதவள் என்று மறைமுகமாக அவமானப் படுத்துகிறான் அட்டலோஸ் என்பதே அலெக்சாண்டருக்கு வந்த அடங்காத கோபம்.

குடும்ப நிலை

பிலிப் எவ்வளவோ வீரனாக இருந்தும் தன் குடும்பத்தில் கலகத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியிருந்தான். அந்த கொந்தளிப்பை அவனால் அடக்கவே முடியவில்லை. அதன் விளைவால் பிலிப் கொல்லப்பட்டான். தந்தையின் இந்த கோர முடிவுக்குப் பிறகு தன்னுடைய இருபதாவது வயதுக்கு முந்தியே பட்டத்துக்கு வந்துவிட்டான் அலெக்சாண்டார். தன் தந்தையின் இறப்புக்குக் காரணமான சதிக்காரர்களின் சதிச் செயலை மேலும் வளரவிட்டால் தன்னையும் அது தாக்கும் என்று தீர்மானித்து முதன் முதலில் சிங்காதன மேறியவுடனே சதிக்காரர்களை ஒழித்தான். அதற்காக, அவர் கள் வாழ்ந்திருந்த திரேஸ், திபேஸ், இல்லிரியா, தெசேலை முதலான நகரங்கள்மேல் படையெடுத்து அவர்களை அடக்கி ஒழித்தான்.

மேலும் ஊக்கம்

இதில் இவன் கண்ட வெற்றியால் கொரிந்த் (Corinth) நகரத்தில் கூடிய மகாசபை, அலெக்சாண்டரையே படைத் தலைவனாக்கி ஆசியாவை ஜெயிக்க அனுப்பவேண்டுமென்று தீர்மானித்தது. இதை முடிப்பதின்முலம் கொல்லப்பட்ட தன் தந்தைக்கு ஆசியா விஷயமாக இருந்த ஆசையும் நிறைவேற்றப்படுவதாகக் கருதினான்.

ஓராண்டில் ஐரோப்பா

ஒரே ஆண்டு முடிவதற்குள் ஐரோப்பாவை வெற்றி கண்டான். பெர்ஷியாவின்மேல் படையெடுத்து மன்னனை ஒடச்செய்தான். அலெக்சாண்டர் பெர்ஷியாவில் அடைந்த வெற்றிக்கு உறுதுணையாக பெர்ஷிய மன்னனிடம் மக்கள் கொண்டிருந்த அறுவறுப்பும் காரணமாகச் சேர்ந்தது. அலெக்சாண்டரின் வீரம், பெர்ஷிய மன்னனின் எதேச்சாதிகாரம், கொடுமை, மக்களுடைய ஆத்திரம், புரட்சி ஆகிய இவைகளே பாரசீகத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகும். மேற்கு ஆசியாவையும் பாரசீகத்தையும், எகிப்தையும் வெற்றிகண்ட அலெக்சாண்டர் ஆசியாமைனரைத்தாண்டி கைபர் போலன் கணவாய்களின் வாயிலிலே நிற்கிறான்.

பூரணகும்பம் புறப்பட்டுவிட்டது

வந்துவிட்டான் அலெக்சாண்டர் என்று தெரிந்தது தான் தாமதம். அன்றந்த பகுதிகளேயாண்டு கொண்டு இந்தியாவின் தலைவாயிலாம் வடமேற்கு எல்லையில் தட்சசீலத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி நடத்திய ஆரியகுல அதிபன் அம்பி ஒரு கையில் மாலையுடனும், தன் எதிரே கொன்று குவிக்கப்பட்ட பசுங்கன்றுகளின் இறைச்சியுடனும் கைபர் கணவாயின் திசைநோக்கி பூரணகும்பம் கொண்டு புறப்பட்டான் கிரேக்க வீரனே வரவேற்க.

அம்பி

ஆரிய அம்பி. அரசன் என்ற பட்டத்தைத் தாங்கி நின்றானே. அதற்காகவாவது வாளும் வேலும் வில்லும் அம்பும் கொண்டு படைகளை அணிவகுக்கச் சொல்லி இருக்கக்கூடாதா. வெற்றியும் தோல்வியும் வேந்தர்களுக்கு சாதாரணமான விதியென்றும் அவன் நினைக்க வில்லை. எந்த மண்ணே அவன் ஆண்டானோ அந்த மண்ணில் அவன் ரத்தம் சிந்தவில்லை. எந்தத் தன் சாம்ராஜ்ய எல்லைக்கோட்டில் எதிரியின் காலடிபடக் கண்டானோ அந்த எதிரியின் காலைத் துண்டிக்க அந்த ஆரிய மன்னன் அம்பி களம்புகவில்லை. 2 மூவாயிரம் கன்று குட்டிகளை ஒன்றாகச் சேர்த்தான். அவைகளைக் கொல்ல கொலையாளிகளை அழைத்தான். வீரம் ஒதுங்கி நின்று அந்த வீணனைக்காண சகிக்கமுடியாத வேதனையால் சிரித்தது. வாயில்லாத பசுங்கன்றுகளைக் கொன்றான். களத்தில் மாற்றாரின் தலைகளைத் துண்டித்திருக்கவேண்டியவன், தன்னே ஏளனமாகப் பேசி தன் சாம்ராஜ்ய கெளரவத்தை அழிக்கவரும் வீரர்களின் வாயில் வழிந்தோடும் குறுதியைக் கண்டிருக்கவேண்டியவன், பசுவை காமதேனுவென பாராட்டிய பார்ப்பன மன்னனேதான் பசுங்கன்றுகளைக் கொன்றான். தன் வாளின் கூர்மையை சரிபார்க்க கன்றுகளின் கழுத்தை சாணைக் கல்லாக பயன்படுத்தினான் என்று எந்த பைத்திய்க்காரன் ஒப்புக்கொள்வான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கன்றுகள் கதறி கதறிச் சிந்திய ரத்தக் தடாகத்தின் அடிவாரத்திலே தலையை மறைத்துக்கொண்டான் மாபாதகன் அம்பி. இந்திய வீரத்தை எதிரிக்கு ரத்ததானம் செய்வதற்குப் பதிலாக தன் கோழைக் குறுதியால் அலெக்சாண்டரின் நெற்றியிலே திலகமிட்டான். இந்திய வரலாற்று வரிகள் இக்கொடியோனின் விருந்து கண்டு இன்றும் நாளேயும் ஏன் எக்காலத்திலுமே வெட்கித் தலைகுனியும்.

கொன்று குவித்த மூவாயிரம் கன்றுகளின் இறைச்சியைக் கொண்டு அருமையான விருந்தொன்றை அலெக்சாண்டருக்கிட்டான். அசகாய சூரர்கள் வாழும் இடமோ என அகம் நடுங்கிய அலெக்சாண்டர் ஆசியாவின் முகப்பிலேயே தனக்கு ஆரியமன்னன் நடத்தும் அற்புதமான விருந்தையும் வேடிக்கையையும் கண்டான். எல்லையில் இருப்பவனே இக்கெதி என்றல் உள்ளே இருப்பவன் நிலை எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அலெக்சாண்டர் அதிகநேரத்தையும் மூளையையும் செலவிடவில்லை. மாற்றாரைத் தடுத்து நிறுத்த வேண்டிய மன்னன் தன் காலடியில் வீழ்ந்தான் என்றால், எட்டாத இமயத்தின் சிகரத்தைக் குட்டிச்சுவரென எண்ணினான் அலெக்சாண்டர்.

குகைக்குள் புலியும், குகைவாயிலில் குள்ள நரியும் இருப்பதை அறிய அலெக்சாண்டரால் எப்படி முடியும். எக்காளமிட்டான், இனி எங்கும் எதிரிகளே இல்லையென இறுமாப்படைந்தான், அந்த எண்ணத்திற்கு விரோதமாக இந்தியாவின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த ஜீலம் சீனப் நதிக்கரைகளுக்கிடையே புருஷோத்தமன் வீரத்தைக் கண்டான். புருஷோத்தமன் படை சிறியது தான். ஆனால் அவன் வீரம் காட்டாறெனக் கிளம்பியது. தடுப்பாரற்ற மதவேழம்போல் வீறுகொண்டெழுந்தான். தனக்கு எல்லேக்கோட்டில் நடந்த விருந்தை நினைத்து உளம்களித்த வீரன் அலெக்சாண்டர் இங்கே வாள் முனை தனக்கு விருந்தாக்கப்படுவதையும் தன் வீரத்தின் தராதரத்தையறிய தைரியமாக படைதிரட்டி எதிர்த்த மாவீரன் புருஷோத்தமனின் பராக்ரமத்தைக் கண்டு மகிழ்ந்தான். புருஷோத்தமன் தோற்றானெனினும், அலெக்சாண்டரை எதிர்த்து நின்ற ஒன்றினாலேயே வீரனென வரலாற்றால் புகழிப்படுகின்றான். அவனது வீரத்தைக் கண்ட கிரேக்கத்தின் காளை அவனிடமிருந்து வென்ற நாடுகளை மீண்டும் அவனுக்கே நல்கி நல்லாசி கூறினன்.

முதலிலே வரவேற்பைக் கண்டான். விருந்தை சுவைத்தான். பிறகு வாளைக் காண்டான். இன்னும் தெற்கே போகப்போக பிணங்களைக் காணவேண்டி வரும் என்றஞ்சியதின் காரணத்தாலோ என்னவோ சீனப் நதியைக் கடந்து தெற்கே வரவில்லை அலெக்சாண்டர்.

போகும் வழியில்

இந்தியாவில் தான் மேற்கொண்ட படையெடுப்பை அறைகுறையாக முடித்துக்கொண்டு திரும்பும் நேரம் தன் படைகளுக்கு விருந்தொன்று நடத்துகின்றான் அலெக்சாண்டர். அதற்கு முந்தியே தனக்குக் கிடைத்த பொருள்களனைத்தையும் தன் படை வீர்ர்களே எடுத்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டான். இவன் தனக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. இவனுடைய தாராள சிந்தையைக் கண்ட பெரடிகாஸ் என்ற வீரன், "தாங்கள் ஜெயித்த நாடுகளில் கிடைத்த பொருள்களையெல்லாம் எங்களை எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லி விட்டீர்களே, தங்களுக்காக என்ன வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்,” என்று கேட்கிறான். எனக்கா நம்பிக்கை (Hope) என்ற ஒன்றிருக்கிறது. அது ஒன்றே எனக்குப் போதும், என்று பதிலளிக்கிறான் அலெக்சாண்டர். இப்படிச் சொன்ன இவன்தான் மற்றோர் நாள் நடந்த விருந்தொன்றில், ’ஒரு அம்பு நமது வீரர் அலெக்சாண்டரை குறிபார்த்துவந்தது, அதைத்தடுத்து நிறுத்தி இவர் உயிரைக் காப்பாற்றினேன் என்கிறான் ஒரு வீரன். அது உண்மையாக இருக்கலாம், அல்லது அந்த நிகழ்ச்சி செழும்புழுதி கிளம்பிய ரணகிளத்தில் அலெக்சாண்டருக்குத் தெரியாமல் யிருந்திருக்கலாம். அல்லது இதைக் கேட்ட அலெக்சாண்டர் ’இருக்கலாம்’ என்று தலையை கெளரவமாகவும் ஆட்டி இருக்கலாம். ஒரு சிறிய புன்சிரிப்பை, இப்படிச் சொன்ன போர் வீரனுக்குப் பரிசாகத் தந்திருக்கலாம். ’என்னை நீ காப்பாற்றியது எனக்காக அல்ல உன்னை மீண்டும் நான் கிரேக்கத்துக் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற உன் சுயநலத்தால் செய்திருக்கலாம் என்று கேலியாக நையாண்டி செய்திருக்கலாம். ஆனால் அலெக்சாண்டர் இவைகளில் ஒன்றையுமே செய்யவில்லை. கோபத்தால் கொதித்தெழுந்து அந்த போர் வீரனை விருந்து மண்டபத்திலேயே குத்திக் கொன்றுவிட்டான். மடிந்தான் போர் வீரன். இச்செய்கை மாண்ட போர் வீரனுக்கு பட்ட அடியல்ல. அலெக்ஜாண்டரின் வீரத்துக்கு மட்டிலும் பட்ட அடி யென்பதுமல்ல, அவனது மாண்புக்கும் ஒழுக்கத்துக்குமே பட்ட அடி. அவனது மாசற்ற வீரத்தின் மண்டையிலே விழுந்த பேரிடி.

அலெக்சாண்டர் ஆத்திரத்தால் செய்துவிட்டான். அன்றுவரை பளிங்குபோல் இருந்த அவனது உள்ளம் அன்று தொடங்கி கலங்கிய நீர்த் தேக்கம் போலாய்விட்டது. வேதனைப்பட்டான். எனினும் தன்னால் அநியாயமாகக் கொல்லப்பட்ட வீரன் இறந்தவன் இறந்தவன்தான். ஒரு கிரேக்கனின் உயிர் அதே கிரேக்கத் தலைவனின் முன்கோபத்திற்கு இந்திய மண்ணில் இறையாயிற்று.

முடிவு

இவ்வளவும் செய்துவிட்டு தன் தாயகம் திரும்புகிற போது மெசபடோமியா என்னும் இடத்தில் கடுங் காச்சலால் தன்னுடைய முப்பதாவது வயதில் இறந்து விட்டான். அவனுடைய பெயரை இந்த இருபத்து மூன்று தலைமுறைகள் சொல்லிக்கொண்டே வருகின்றன. என்றாலும் அவன் கண்ட சாம்ராஜ்யங்கள் ஏட்டிலன்றி நாட்டிலில்லை. சரிந்து விழுந்த பல சாம்ராஜ்ய சம்பவங்களோடு அதுவும் ஒன்றாய் இடம்பெற்று விட்டது.
மெளரிய சாம்ராஜ்யம்

அலெக்சாண்டரைக் கொண்டு சூள்முடித்த சாணக்கியன்

மூவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் ஒருவராலும் காப்பாற்றி வைக்கப்படாதது. தென்னாட்டில் வலிமை பொருந்திய மூன்று வல்லரசுகள் தன்னேரில்லாது ஆண்டு அலைகடல்மேல் தங்கள் மரக்கலங்களை செலுத்தி வேற்று நாட்டில் தன் விளைப்பொருள்களை வழங்கிக் கொண்டிருந்த நேரம்தான் வடக்கே ஒரு ஏகாதிபத்தியத்தை உண்டாக்க வேண்டுமென ஒரு ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே செய்து முடித்தான். கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றிய அம்மாபெரிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டுமென்று வேறோர் ஆரியன் சூள் உரைத்தான். அதன்படியே அதை அழித்தும் விட்டான்.

ஆரியம் எந்த சக்தியாலும் அழிந்துபடாமலிருக்க அரசனையும் அவனுடைய செங்கோலையும் காவல் வைத்தே ஆரியத்தை அரியாசனமேற்றினான், சிறந்த ராஜதந்திரியும் ஆரியகுல மக்களின் குலதெய்வம் என்று போற்றப்படும் சாணக்கியன். தன் உச்சியிலிருந்த ராஜ தந்திரங்களத்தனையையும் சேர்த்து அர்த்த சாஸ்திரமாக எழுதி மெளரிய சாம்ராஜ்யத்தின் முதல் முடிவேந்தனை சந்திரகுப்தனிடம் ஈட்டிபோல் நீட்டிய கெளடில்யன் என்பவன் இவன்தான். ஆரியர்களுக்கு தனித் தனியாக எற்படும் சுயநலத்தைவிட தன் இனம் வாழவேண்டுமென்ற பொதுநலமே மிகுந்தவர்கள் என்பதற்கு இவன் ஒர் தலைசிறந்த உதாரண மனிதனாக விளங்குகிறான்.

இவன் யார்?

யார் இந்த சாணக்கியன் ? தென்னாட்டில் கேரளப் பகுதியிலே எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து வடக்கே சென்று எப்படியோ நவநந்தர்களின் அபிமானத்துக் குறியவனாக அல்லது அவர்களிடமே ஏதோ ஒரு மதிக்கத்தகுந்த, அல்லது அரசர்கள் பழகிவைத்துக் கொண்டிருந்த பலவித கெட்ட பழக்கங்களுக்குத் தேவைப்பட்ட பலவிதமான ஆட்களிலே சாணக்கியனும் நந்தனின் தனிப்பட்ட அபிமானத்துக்குறியவனாக இருந்திருக்கவேண்டும் என்பது மட்டிலும் புலப்படுகிறது. இல்லையானால் கண்ட நேரத்தில் அரண்மனையின் எந்த பக்கங்களிலும் திரிந்துகொண்டிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான். இவனுடைய தாய் தந்தையர்கள் பெயர் தெரியவில்லை. நந்தர் மாளிகையிலிருந்த இவன் ஓர் நாள், அரச குடும்பத்தார் குளிப்பதற்காகத் தனியாகக் கட்டப்பட்டிருந்த குளத்தில் குளித்தான். இதைக்கண்ட நந்தன் வெகுண்டு சாணக்கியனை வெளியேற்றினான். சினங்கொண்ட சாணக்கியனுடைய கண்கள் அக்கினி கோளங்களாய்விட்டன. தான் குளிக்கும் போது அவிழ்த்துவிட்ட குடுமியை முடித்தானில்லை. ஒரு சாதாரண ஆரியன். நந்தன் தயவால் வாழ்ந்தவன். எனினும் நந்தராட்சியை ஒழிக்கத்திட்டமிட்டு, 'என்னை அவமானபடுத்திய அறிவிலிகளே ! உங்களை உங்கள் அரியாசனத்திலிருந்து கீழே இழுத்துத் தள்ளும்வரை என் குடுமியை முடிப்பதில்லை' என தன் நெஞ்சம் அதிர சூள் உரைத்துக்கொண்டான். மன எரிச்சலைத் தாங்காது தீமிதித்தவன் போலானான். எப்படி நந்தராட்சியை முடிப்பது. இவன் மேலிருக்கும் ஆத்திரத்தால் வேற்று நாட்டானைக் கொண்டுவந்தால், வருபவனுடைய ஆட்சி இங்கே நிலைத்து ஆரிய ஆட்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் கேடு வந்தால் என்ன செய்வது. இனி தான் ஏற்படுத்தப்போகும் சாம்ராஜ்யத்தில் தன் இனத்துக்கும் மதத்துக்கும் நல்வாழ்க்கையும் நளினமான அந்தஸ்தையும் நிலைநாட்ட வேண்டுமென்று கருதினான். அவன் எண்ணப்படியே முதலில் எல்லாம் கைகூடியது. ஆனால் இறுதியில் ஆரியத்துக்கே அழிவு தோன்றி விட்டது. எந்த சாணக்கியனால் தன் இனத்தின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று ஒரு பெரிய மெளரிய சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே மெளரிய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னனான பிரஹதத்தனால் ஆரிய உயர்வுக்கு அபாயம் வந்துவிட்டது என்று தெரிந்த உடனே ஒரு ஆரியனாலேயே பிரஹதத்தன் கொல்லப்பட்டான்.

சூழ்ச் உருவெடுத்தல்

நவநந்தர்களால் தான் அடைந்த அவமானத்துக்குப் பதிலாக அவர்களைபழிதீர்க்கவும், அதே நேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யத்தை யுண்டாக்கவும் எண்ணினான். இது உள் நாட்டிலிருக்கும் யாருடைய துணை கொண்டும் சாதிக்க முடியாத காரியம் என்றெண்ணினான்.

உள்ளம் பேசுகிறது

"சாணக்கியனே! யோசித்து செய். வெளிநாட்டரசர்களைக் கொண்டுவா, ஆனால் நிலைக்கவிடாதே. இங்கே நீ பழிதீர்க்க வேண்டுமென்று நினைக்கின்றவனை பயங்காட்ட வேண்டுமானல், நீ அழைத்து வருவதாக உத்தேசித்திருக்கிற மன்னனைப் பயன்படுத்திக்கொள். வருபவனை இங்கே நீ நிலைக்கவிட்டால் உன் மதம் உன்கலாச்சாரம் உன் முன்னோர்கள் வாழ்ந்த, இன்னும் உன் இனத்தார் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிந்துச் சமவெளியும் கங்கைத் திடலும் என்னாகும் என்பதை யோசித்துப் பார். வேற்றான் கொடி பறக்க, விருதுகள் முழங்க, நீயும் உன் சந்ததியும் அவ்வேற்றரசில் அடிமைகளாக இருக்க எண்ணுகிறாயா ? நீயே மன்னனாகலாமா என்று யோசிக்கிறாய் அதைவிட மோசமான எண்ணம் வேரொன்றுமில்லை, ரண களத்தில் உன் குறுதி சிந்தவா உன் இனத்தார் படைக்கலம் ஏந்தி யுத்த பூமியில் நிற்கும் கோரக் காட்சியை நீ கண்டு கலங்கவா, வேண்டாம். சாணக்கியன் என்ற உன்னைப் போன்றதொரு சதுர்வித உபாயங்களை யறிந்தவன்தான் அகப்படுவது கஷ்டம். சண்டைக்கா ஆட்கள் அகப்படமாட்டார்கள். அதோடு நீயே நேரில் போர்க்கோளம் பூண்டு புறப்படுவதன் மூலம் ஆர்யா வர்த்தம் முழுவதிலுமே இன்று உன் இனத்தாராண்டுக் கொண்டிருக்கும் மகதம், கோச்லம், கெளசாம்பி, தட்ச சீலம் முதலான நகரங்கள் நாசமாய் தர்ப்பையும் முளைக்க முடியாத காடாய்விடும் என்பதையும் மறந்துவிடாதே. உன் ஆத்திரத்தின் தோழனும், இனத்தின் எதிரியுமான உன் புன்சிரிப்பின் மூலம் வேற்றானை உள்ளே அனுமதித்தால் வேறுமதமும் புதிய நம்பிக்கையும் உதயமாய்விடும். அதனால் ஏற்படும் விளைவு ஆரியத்தின் முடிவு என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் வைத்துக்கொள். மாற்று மன்னர் ஆட்சி உன் வளர்ச்சிக்கும் எதிர்கால எண்ணங்களுக்கும் ஒரு தடை கல்லாகும் என்பதையும் நினைவூட்டுகிறேன். தெற்கே நீ போகவே முடியாது. உன் சூழ்ச்சியில் ஒரு அணு அவர்களுக்குத் தெரிந்தாலும் உனக்குமாத்திரமல்ல, உன் இனத்துக்கு மாத்திரமல்ல, நீ அழைத்துச் செல்ல நினைக்கிறாயே அவர்களும் அங்கே அணுக முடியாது.  இந்தநாள் ஆரியப்பயிர் தென்னகமண்ணில் முளைக்கவே முடியாது. ஆகவே அந்த யோசனையையும் கைவிடு' என்றெல்லாம் அவன் மனம் அவனை எச்சரிக்கை செய்கிறது. என்றாலும் தான் அன்றந்த அரசக் குளக்கறையில் கொண்ட சூளுரையை முடித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு இப்படியும் அப்படியும் திரிந்துகொண்டிருக்கின்றான்.

அந்த நேரம்தான் இமயத்தின் அடிவாரத்தில் மாசிடோனிய மகாவீரன் அலெக்சாண்டரின் பேரிகை சப்தம் கேட்ட நேரம். சூரியனைக் கண்ட செந்தாமரை என முகம் விரித்தான் சாணக்கியன். அவன் கொண்ட களிப்பு அடுத்த வினாடியே நீர் மேல் எழும்பிய குமிழி என்றாய் விட்டது. ஏன்? நந்தர்கள் மேலிருக்கும் கோபத்தால் வேற்று நாட்டானை உள்ளே அழைத்து வந்தால் கோசலம், அவந்தி, தட்ச சீலம், கோசாம்பி மகதம் முதலான சிறிய சிறிய நாடுகளை ஆண்டுகொண்டிருக்கும் தன் இனத்தாரான ஆரிய மன்னர்களின் கெதி என்னாகுமோ என கெதிகலங்கினான் சாணக்கியன். அடுத்த வினாடியே அவனுக்கொரு ஆறுதல் கிடைத்தது அலெக்சாண்டரை தானே முதலில் சந்திக்காத வகையில் தன் இனத்தானான ஆரிய மன்னன் அம்பியே இறைச்சி விருந்தளித்து ஏதன்ஸ் வீரனே உள்ளே அழைத்துக் கொண்டான். இனி அவனைக் கொண்டு நந்தனைத் தொலைத்துவிடலாம் எனத் திட்டமிட்டுவிட்டான். நந்தன் ஆளுகையை ஒரு முறை வலம் வந்தால் போதும் எனக் கேட்டுக் கொண்டான் சாணக்கியன். அம்பி தந்த போதையில் மதிமயங்கியிருந்த அலெக்சாண்டர் அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண் டான். எக்காளமிட்டான் குடுமியை முடிக்காத சாணக்கியன், எதிரொலித்தது இமயம் கேலியாக. அந்த வான் முட்டி நிற்கும் பனி மலையில் வதிவதாக நினத்துக் கொண்டிருந்தானே தபோதனர்கள் அவர்கள் தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மேலும் பூரித்தான். அலெக்சாண்டர் நந்த நாட்டில் காலடி வைக்காமுன்னம், நந்தன் கொல்லப்பட்டான். குற்றமற்ற நந்தன் சிந்திய ரத்தத்தில் நெளிந்த கிருமிகள் சாணக்கியன் பெயரைச் சொல்ல அஞ்சி அஞ்சி செத்துவிட்டன. அதையே செய்து முடித்தனர், சரித்திராசிரியர்கள் கொலைக் குற்றம் சாணக்கியனுடையதல்ல வென்றால் அவன் வழி வந்தவர்கள், இல்லையானால் வாளுக்கே கை கால் முளைத்தா நந்தனின் கழுத்தைக் துண்டித்திருக்கும்? எப்படியோ முடிந்தான் நந்தன். சாணக்கியன் வஞ்சமும் அலெக்சாண்டரின் அபிமானமும் சேர்ந்து ஆரிய நஞ்சால் அபிஷேகம் செய்யப்பட்ட சந்திரகுப்தன் அரியாசன மேற்றப்பட்டான்.

எந்த ஆரியனால் சந்திர குப்தனுடைய சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே ஆரியத்துக்கு இது மிக மிகக் கடமைப்பட்டதாகிவிட்டது. ஆரியம் இதைத் தோற்றுவித்ததற்குக் காரணம் முன்பு சொன்னவைகள் மாத்திரமல்ல, இந்த சாம்ராஜ்யத்தால் ஆரியத்திற்கு போடப்படும் அஸ்திவாரம். அகிலம் அழியும் வரையிலும் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிந்துவிட வேண்டுமென்று எண்ணியதும் குறிப்பிடத்தகுந்ததாகும், ஆனால் சாணக்கியன் எண்ணத்தில் இடிவிழுந்ததைப்போல் மெளரிய சாம்ராஜ்யம் சரிந்ததற்கும் புத்தர் பேரொளி தோன்றியதற்கும் ஆரியம் அடிப்பட்ட பாம்பென துள்ளித் துடித்து இங்கு மங்குமாக வாலை மாத்திரம் ஆடடிக்கொண்டிருந்ததற்கும் சரியாய் விட்டது.

சந்திரகுப்தன் சாணக்கியன் அபிமானம்

இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த சாணக்கியன் ஏன் தானே மன்னனாக வர வேண்டும் மென்று நினைக்கவில்லை. அல்லது சில நாட்களுக்குப் பிறகாவது மன்னனாக வரலாம் என்ற எண்ணம் ஏன் தோன்றவில்லை. இங்கேதான் ஆரியர்களுக்கு தனித் தனியான சுயநலத்தைவிட தன் இனத்தையே காப்பாற்றித் தீரவேண்டுமென்ற உணர்ச்சி அதிகம் என்பதை முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம்.

சந்திரகுப்தன்

அலெக்ஜாண்டரின் நடமாட்டத்தாலும், அவனே நடமாடச் செய்த சாணக்கியனாலும் அழிந்த நந்த சாம்ராஜ்யத்துக்குப்பின் தோன்றிய மெளரிய சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன். தனக்கு இவ்வளவு பெருமைகளைத் தேடித் தந்த சாணக்கியனையே தன் ராஜ குருவாக ஏற்றுக்கொண்டான். இவனுடைய காலத்தில் தான் பெரிய பெரிய அணைக்கட்டுகளையும், நீர்த் தேக்கங்களையும் உண்டாக்கினான். நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை பங்கிட்டு அளித்து அதற்குண்டான வரிகளை வசூல்செய்தான். இவ்வளவு தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தும் சரியாக விவசாயம் செய்யாதவர்களைக் கடுமையாகத் தண்டித்தான். தன் தலை நகருக்கு மிக தூரத்திலிருந்த கத்தியவார் என்ற பிரதேசத்திற்கு புஷ்யமித்திரன் என்பவன் ஒருவனை கவர்னராக அமைத்து ஆளச் செய்தவனும், நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தருவதில் நிபுணனான சுதர்சனன் என்பவனை ஆதரித்து நாட்டின் பொருளாதார முன் னேற்றத்தையும் நில வளப்பத்தில் பலவித சீர்த்திருத்தங்களையும் செய்தான். மத்திய சர்க்கார் ஒன்றை அமைத்து அதன்மூலம் தன் ஆட்சியை சிறுசிறு பாகங்களாக பிரித்து அதற்கேற்ற அதிகாரிகளைப்போட்டு ஆட்சியை திறம்பட நடத்திய முதல் மெளரிய மன்னன் இவன்தான். மேலும் இவன் காலத்தில்தான் பல பெரிய நகரங்களுக்கு, உலகத்தார் அதிசயிக்கத்தகுந்த வகையிலே பெரிய பெரிய ராஜபாட்டைகளைப் போட்டான். தன் தலைநகரான தட்சசீலத்திலிருந்து ஐந்து நதிகளைக் கடந்து பஞ்சாப்புக்கும், அங்கிருந்து ஜம்னா நதியை கனோஜ் வழியாகக் கடந்து பிரயாக் வரையிலும், பிரயாக்கிலிருந்து பாடலி புத்திரம் வழியாக கெங்கையின் முகத்துவாரம் வரையிலும் அழகான சாலைகளை அமைத்து அதன் இருமருங்கிலும் மரங்களை வைத்து மைல் கற்களை நட்டு அவற்றை சர்க்காரின் கண்காணிப்பிலே வைத்திருந்தான். இப்படி சாலைகளின் ஓரங்களில் மரங்களை வைப்பதானது மக்கள் வெய்யலில் கஷ்டப்படாமல் நிழலில் செல்லவேண்டு மென்ற நல்லெண்ணத்தை சமூகத்துக்கு சர்க்கார் அளிக்கும் நன்கொடையெனக் கருதியவனும் இவன்தான். ஏறக்குறைய இவைகளுக்குக் காரணமான சாணக்கியன் ஆரியனாக இருந்தும் ஜைன மதத்தைச் சார்ந்த சந்திரகுப்தன் இவனை முழுமனதோடு ஆதரித்தான் என்பதில் வியப்பில்லை. கடலாதிக்கமும் ஆற்றாதிக்கமும் இவனாட்சிக்குள் கொண்டு வந்து அவைகளில் ஒழுங்காக கப்பல்களையும் மரக்கலங்களையும் போக்குவரத்துக்கு விடச் செய்து அதை ஒரு தனி இலாகாவாக்கி அந்த நிர்வாகத்தை ஒரு மந்திரியிடம் ஒப்படைத்திருந்தான்.

நிலவரி, சுரங்கவரி, சுங்கவரி, கனிப்பொருள் வரி, வருமானவரி, வாணிப வரி, உப்பாதிக்கம் முதலானவை கள் முக்கிய வருமான இனங்களாகக் கருதப்பட்டன. இவன் செய்த இந்த அரசியல் ஏற்பாட்டால் சிந்து நதி முதல் பிரமபுத்ரா வரையிலும், வடக்கே இமாலயம் முதல் தெற்கே விந்தியம் வரையிலும் ஒரு பலம்பொருந்திய மெளரிய சாம்ராஜ்யம் நிலைக்கக் காரணம்மாயிற்று.

ஆனால் சந்திரகுப்தன் சிங்காதனமேறிய நான்கு ஆண்டுகளில் அலெக்சாண்டரின் தளபதிகளிலே மிகத் திறமையுடையவனும், கிரேக்கர்களால் வெற்றி வீரன் (நிக்கோடார்) என்று புகழப்பட்டவனுமான செலுக்கஸ் காலஞ்சென்றதன் தலைவன் அலெக்சாண்டரின் இந்திய வெற்றிகளை நினைத்து மீண்டும் கிரேக்க மண்டலத்தின் கொடியை இந்திய மண்ணில் நிலை நாட்டவேண்டுமெனக் கருதினான். முன்பு இருந்தபடியே வட பகுதி சிறிய சிறிய நாடுகளாக இருக்குமென எண்ணினான். அம்பி போன்ற தொடை நடுங்கிகளும் அவன் சக மன்னர்களும் முன் போல விருந்து நடத்தி விழுந்து கும்பிடுவார்கள் என்று மனப்பால் குடித்தான்.

அந்த நம்பிக்கையாலேயே சிந்து நதியைக் கடந்து இந்தியாவுக்கு வந்தான். ஆனால் அவன் கனவு பகற் கனவாக முடிந்தது. மெளரியப் படை அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் தொடங்கினால் நிச்சயம் விழுந்து விடுவோம் என்று நினத்தான் செலுக்கஸ் (நிக்கோடார்) பெர்ஷிய சாம்ராஜ்யத்திடமிருந்து தன் தலைவன் அலெக்சாண்டர் சிந்து சமவெளிக்கு மேற்கே காபூல் வரையிலும் வென்றிருந்த நாடுகள் மகா மெளரிய சந்திரகுப்தன் காலடியில் விழவேண்டி வந்தது மாத்திரமல்ல நிக்கோடார் என்ற செலுக்கஸ் தன் மகளை சந்திரகுப்தனின் மகன் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்து அவனுடைய அபிமானத்துக்குரியவனாய் அரச அவையில் தன் நாட்டு தூதுவன் என்ற பேரால் மெகஸ்தனிஸ் என்பவனுக்கு இடந் தேடித் தந்துவிட்டுப் போய்விட்டான்.

முடிவு

தான் சிந்திய ரத்தத்துக்கதிகமாக வெற்றி கண்ட சந்திரகுப்தன் இருபத்துநான்கு ஆண்டுகள் நாட்டை யாண்டு கி. மு. 296-ல் முடி சாய்ந்துவிட்டான். மெளரிய மூவேந்தர்களில் முதல்வனான இவனே போர்க்குணம் படைத்தவனும், ஆளும் திறமையுடையவனுமானவன் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர்.

சற்றொப்ப ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு தென் வேந்தர்கள் பெற்றிருந்த தெளிந்த அரசியல் அறிவை வடவேந்தர்களில் சிலர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புதான் பெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிந்துசாரன்

இவன் சந்திரகுப்தனின் மகன். குடி, கேளிக்கை இந்த இரண்டும் மிதமாக இருக்கும் நேரத்தில் தர்க்க ஞானத்தை வளர்த்தலே இவனுடைய பொழுதுபோக்கு. இவன் வாழ்ந்த காலம் சண்டையில்லாத சமாதான காலம். தன் தந்தை போட்டுவிட்டுப்போன அரசியல் பாட்டையிலேயே தன் அரசியல் தேரை வெகு சுலபமாக செலுத்தியவன் இவன். இவன் தன் சொந்த நாட்டில் கிடைத்த பழங்களையும் மதுவையும் சுவைத்து சுவைத்து நாத்தடித்துப்போய் கிரேக்க நாட்டுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் :-பழங்களையும், மதுவையும், ஒரு தர்க்க ஞானியையும் அனுப்பும்படிக் கேட்டிருந்தான். இவன் கடிதத்தைக் கண்ட கிரேக்க சர்க்கார், பழங்களையும் மதுவையும் வேண்டுமானால் விற்போம், ஆனால் எங்கள் நாட்டில் தோன்றிய எந்த அறிஞனையும் நாங்கள் விற்பஇல்லை என்று பதில் எழுதிவிட்டது. இந்த முறையில் நாநீண்ட வரையில் சுவைத்து அரசபோகத்தில் திளைத்து காலத்தைப் போக்கி கண்மூடி விட்டவன் இவன்.

அசோகன்

தன் தந்தை பிந்துசாரன் ஆட்சியிலிருந்தபோது தட்சசீலத்தின் கவர்னராக வேலைபார்த்து பல அரசியல் நுணுக்கங்களை தெள்ளத் தெளிய தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான் அசோகன்

பரம்பரைப் பாத்தியப்படி ஆட்சி கிடைப்பதாயினும் மாற்றானை போர்க்களத்தில் புறங்கண்ட வீரனாயிருந்தாலும், மக்களாகவே வலிய முன்வந்து மணிமுடி தர நேர்ந்தாலும், தன் அறிவாற்றலால் ஜெகத்தைத் தன் பால் இழுத்தவனாயிருந்தாலும், வாளேந்தி தோள் தட்டி குருதி களத்தில் துள்ளிக் குதிப்பவனா யிருந்தாலும் இடையிலே ஏதாவதொரு சூழ்ச்சி, அல்லது துக்ககரமான நிகழ்ச்சி நடைபெறாமல் பட்டத்திற்கு வரமுடியாமல் இடையிலே எதோ ஒரு வஞ்சனைச் செயல் வட நாட்டு அரசியல் அரங்கில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தது என்பதற்கு விதிவிலக்கில்லாமல், மாபெரிய மெளரிய சாம்ராட் என்றழைக்கப்பட்ட அசோகனும் தன் அண்ணனை எதிர்த்துத்தான் கிருஸ்துவுக்கு முன் 268-ல் ஆட்சிக்கு வந்தான். தான் ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே முடிசூட்டு விழா நடந்தது. தான் கற்றிருந்த அரசியலில் போரைப் பற்றியே மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருந்தான். ஆனால் மற்றவைகளில் அவ்வளவு திறமை குறைந்தவன் என்று சொல்லமுடியாமல் எல்லாவற்றிலும் மிக நேர்த்தியான தேர்ச்சி பெற்றிருந்தான். என்றாலும் போரைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்தது மிக அதிகம் எனலாம். மெளரிய குல திலகமும், மகாமெளரிய அரசியல் கோபுரத்தை எழுப்பியவனும், அந்த அரசியல் முழக்கத்தைத் தனது ஆட்சியின் நான்கு திசைகளிலும் கேட்கும்படி விரிவுபடுத்தியவனுமான சந்திர குப்தன் காலத்தில், சாணக்கியன் தந்திரத்தாலும், சந்திரகுப்தன் சன்மானத்தாலும், கூடியிருந்த ஆரிய மதத் தலைவர்களின் புன்சிரிப்பாலும், அலெக்சாண்டர் தந்த பிச்சையாலும் வேரூன்றி, யாராலும் அசைத்துப் பார்க்கமுடியாதிருந்த ஆரியம், அசோகன் காலத்தில் அடியோடு தொலைந்தது. புத்தர் காலத்துக்கும் அசோகன் காலத்துக்கும் கால இடைவெளியான இருநூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆரியர்கள் புத்தமத விரோதிகளாக இருந்தும், மகதத்தையாண்ட பிம்பிசாரன் அஜாதசத்ரு போன்ற மன்னர்களால் புத்த மகம் ஆதரிக்கப்பட்டு எப்படியோ சமுதாயத்தின் எல்லா பாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது. புத்த மதம் சாதாரண மக்களால் ஆதரிக்கப்பட்டிருந்தால் எப்போதோ ஆரியர்கள் அதைத் தொலைத்திருப்பார்கள் புத்த மத மன்னர்கள் கையில் தாங்கியிருந்த செங்கோல் அதற்கு பங்கம் வரவிடவில்லை, அரியாசனத்தைவிட மேலாசனத்திலமர்ந்திருந்தது. புத்தர் புன்னகையை பூதளத்துக்கறிவித்தவன், அன்பின் ஜீவநாடியான அப்பேராளன் கண்ட முடிவை ஜெகத்தின் சிகரத்தில் ஜெகஜோதியாக்கியவன் அசோகன்

அசோகன் ஆட்சிக் தொடக்கத்தின் சரித்திர பூர்வமான ஆதாரங்கள் கலிங்கப் போரிலிருந்துதான் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது.

கலிங்கக் கோன் காரவேலன்

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா என்ற ஆறுகளின் இடையே அமைந்திருந்த கலிங்கம், காரவேலன் காலம் வரையிலும் மற்ற எவராலும் படையெடுக்க முடியாத சிங்க நாடெனத் திகழ்ந்தது. அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பில் இடம் கொடுக்காத கலிங்கம், ஆரியா வர்த்தத்தையாண்ட ஆரிய மன்னர்கள் அணுக அஞ்சிய கலிங்கம், தன் சூழ்ச்சித் திரை கலிங்கத்தின் வாளால் கிழித்தெரியப்படக்கூடும் என்று பயந்த சாணக்கியன் திரும்பியே பார்க்காத திசையிலிருந்த கலிங்கம். கலிங்கம் என்று நினைக்கும் பகை நாட்டரசர்கள் உள்ளம் கலங்கும் அளவுக்கு வீரம் பெற்றிருந்த கலிங்கம். மற்ற எந்த படையெடுப்பை யும் தன் நாட்டின் பக்கம் சேராதடித்த செறுகளச் சிங்கம் காரவேலன் ஆட்சி நடந்துக்கொண்டிருந்த கி. மு. 256ல்தான் அசோகன் படைகள் கலிங்கத்தை முற்றுகையிட அணிவகுத்து நின்றுவிட்டது. கலிங்கத்தில் அதுவரைக் கண்டிராத யுத்த முழக்கம் கேட்டது. இது காரவேலன் கனவிலும் நினைக்காதது. எதிரிகளே தோன்ற முடியாது என்ற நம்பிக்கையால் மூடிய ஆயுதச் சாலைகள் மூடிய வண்ணம் இருந்த கலிங்கம், அசோகன், யுத்தபேரிகைக் கேட்டவுடன் ஆயுதபாணியாகவேண்டி வந்தது. தன் மூதாதையர்கள் முயன்று முயன்று முடியாமல் கைவிட்டுவிட்ட கலிங்கத்தைக் கலக்கியே தீர வேண்டும் என்ற ஆத்திரத்தால் கலிங்கத்தின் தலை வாயலை ஆவேசமாகத் தட்டினான் அசோகன். காரவேலன் கொண்டிருந்த பெரு நம்பிக்கை புழுதி மயமாய்விட்டது. அதுவரை கலிங்கம் வீரப் பட்டயத்தில் பெற்றிருந்த முதலிடத்தை இழக்காதிருக்கவேண்டுமானால், கலிங்கக் காவலன் இனி சூர வேலனாகவோ, கோர வேலனாகவோ ரணகளம் வந்தேதீர வேண்டும். இல்லையானல் அவனை நாரவேலன் என்றழைத்து நையாண்டி செய்ய பல பகைவர்கள் விரித்த கைகளோடு நின்றனர். போர்தொடுக்காமலே புறமுதுகுக் காட்டுவதென்பது காரவேலன் என்ற வீரனுக்கும் கலிங்க மண்ணுக்கும் சகிக்கமுடியாத அவமானமாகும். ஆகவே வாளேந்தி நிணக்களம் குதித்தான் காரவேலன். படைகள் கோட்டையை விட்டு வெளியே கிளம்பின. பரம்பரை பரம்பரையாக வீரத்தைத் தாங்கி சலித்துப் போன கலிங்கப் படை ஒரு பக்கம், மற்றோர் பக்கம் மெளரிய வீரன் அசோகனின் படைகள்.

கலிங்கப் போர்

வரலாற்று கீர்த்தி வாய்ந்த கலிங்கப் போர், அன்புக்கும், அழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவனிக்கு ஒதிய போர். செத்தவனுக்கும் சாகடித்தவனுக்கும் உலகில் உள்ள தராதரத்தைக் காட்டி, முடிவில் யாருக்கும் ஒன்றுமில்லை என்ற விடையை அளித்த போர். அரசன் சொல்லால் ஆன்மாவை இழந்த நிரபராதிகளுக்கும், அரசன் அரியாசனத்தில் அழகுக்காக செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிங்க உருவுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்ட போர். மன்னன் மனம் மாறிய போர். பலர் இறப்பால் இரக்கம் இன்னதென்றறியச் செய்த பயங்கரப்போர். ” இலையுதிர்வதைப்போல் மக்கள் மடிகிறார்கள் ஆனால் அந்த இலைகளை தனக்கு வேண்டாதபோது உதிர்ந்துவிட்ட மரமும் என்றாவது ஓர் நாள் அழியக்கூடியதே. அதேபோல் உனக்கு வேண்டாத மக்களை இலைகளென உதிர்க்கிறாய் இந்த ரணகளத்தில், ஆனால் இவைகளைத் தாங்கி ஊட்டி வளர்த்த நீயும் ஒரு நாள் விழவேண்டியவனே என்பதை எண்ணிப்பார் மன்னனே ", என்ற பேருண்மையைக் காட்டிய கலிங்கப் போர். அந்த போரில் மாண்டவர்கள் ஒரு லட்சம் பேர்கள். லட்சத்தி ஜம்பதினாயிரம் பேர்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். சண்டைக்கு ஒரு விதத் தொடர்புமில்லாத சாதாரணக் குடிகள், வயோதிகர்கள், வனிதையர், பச்சிளங் குழந்தைகள், அழிந்தனர். அழகான அங்காடிகள் அழிந்தன. வாணிபப்பெரு மக்கள் சுருண்டு சுருண்டு விழுந்தனர். ஜய்யோ என அலறி அங்கெங்கேயே துடிதுடித்து உயிர் விட்ட நகர மக்களின் தொகை எண்ணிலடங்கா, போர் என்பதையே கேள்விப்படாத மக்கள், நேரில் கண்டறியாத மக்கள், வரலாற்று வாயிலாக மட்டிலும் படித்திருந்த மக்கள், இதிகாசங்களில் சொல்லப்பட்ட கற்பனைக்கே எட்டாத அக்ரோணி, சங்கம், மகாசங்கம் தொகையான மக்கள் மடிந்தார்கள் என்பதை புராணிகர் சொல்ல, பக்தி பரவசத்தால் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், ஈட்டியையும் வாளையும் பாதுகாவாலர்கள் ஏந்திவர அவர்களுக்குப் பின்னால் தேரில் ஆரோகணித்து மன்னன் நகர் வலம் வந்தபோது ராஜ தரிசனத்திற்காக தெருக்களில் கூடியிருந்த போது இந்த ஈட்டிகளையும் வாளையும் கண்டதல்லாமல் நெஞ்சில் பாய்ந்து செங்குருதிச்சிந்த மரண மெய்திய பயங்கரப் போர்களை நேரில் காணாத மக்கள் அன்று நேரடியாகக் கண்டார்கள். மன்னனுக்கும் மன்னனுக்கும் சண்டையாம். அதில் நம்மண்டைக்கு ஆபத்தில்லையென்று அனாயாசமாக தெருவில் திரிந்த மக்கள் மண்டையிலும் அடி விழுந்ததைக் கண்டனர். போர் என்றால் ஏதாவதொரு குறிப்பிட்ட இடத்தை போர்க் தளமாகத் தேர்ந்தெடுத்து அதில் இருவரும் மோதிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்த மக்கள், தங்கள் வீடுகள் தீக்கிரையாவதை, கன்றுகளும், காராம் பசுக்களும், மற்றக் கால் நடைகளும் கட்டைத்தெரித்துக் கொண்டு ஒட முடியாமல் எரியும் நெருப்பில் மடிந்து விட்ட காட்சியை நேரில் கண்டார்கள். என் அண்ணன் வயல் நோக்கி நடந்தானே வழியிலேயே மடிந்தானே, இதுவா போர் என்றலறியவர்களும், காடு வெட்ட கானகம் நோக்கி நடந்தானே காளை, கால் முறிந்து விழுந்தானே, இதுவா யுத்தம் என்று ஓலமிட்டவர்களும், தள்ளாடி நடந்தாளே என்பாட்டி, துள்ளி விழுந்தாளே, இதுவா சண்டை என்று அழுதவர்களும் ஏராளம்.

“ மகாநதி நோக்கி ஒடுகிறது கலிங்கப்படை மடக்குங்கள், விடாதீர்கள். கோட்டையின் தென்புற மதிலை இடித்துத் தள்ளுங்கள். அங்கேதான் கார வேலன் அரியாசனமிருக்கிறதாம். அகழியின் தண்ணிர் சென்னீராகட்டும், யுத்தகளத்தில் பச்சாதாபமென்பது கோழையின் அகராதி, விழ வேண்டும், அல்லது வீர சொர்க்கம் புக வேண்டும். யார் போர் வீரர்கள், யார் அவர்களல்லாதார் என்ற பேதம் பாராட்ட நேரமில்லை. ஆயுத மெடுக்காதார் அகலுங்கள், அப்புறம் என்ற தர்மமொழி நமக்கு வேண்டாம், “ என்றெல்லாம் போர் அரங்கின் எல்லா பக்கங்களிலும் பேசப்பட்டது. அசோகன் புகழ் ஓங்குமளவுக்கு பிணக்குவியலின் உயரமும் ஓங்கியது. கார வேலன் கைவாள் மின்னிய வேகத்தைக் காட்டிலும் வேகமாக கொத்தளங்கள் சரிந்தன, குடலற்று விழுந்தோர் தலை தண்ணீரிலும், உடல் கரையிலும் கிடந்தன. கைகள் குதிரைகளின் குளம்படிக் கடியிலும், தலை அதன் முதுகில் தொங்கியவண்ணமிருந்தன. யானையால் மிதிக்கப்பட்டு உடைந்த போர் வீரர்களின் மண்டைகளிலிருந்து படார் படார் என்று எழுந்த சப்தம் இத்தரத்தாருக்கு எக்காளத்தையும், எதிரிகளுக்கு பீதியையும் உண்டாக்கியது. எனினும் கலிங்கத்தின் ஜனத்திரள் கண்ணிர் மல்கியது.

அசோகன் கவலை

கண்டான் அசோகன். அவனுக்கும் உள்ளம் என்று ஒன்று உண்டல்லவா-கண் கலங்கினான். கலிங்கம் தன் மனக்கண்ணைத் திறந்துவிட்டது. மக்கள் சிந்திய இரத்தம் அவன் சித்தத்தை சிதைத்து விட்டது. யாருக்காக இப்போர், யாரிடம் இந்த யுத்தம், எந்த நன்மையை உத்தேசித்து, இதனால் பெறும் பயன் எத்தனை நூற்றாண்டுகள் அழியாதிருக்கும். ஆரியாவர்த்தம் முழுவதையுமே கட்டியாண்ட சந்திரகுப்தன் எங்கே, ஐரோப்பாவை அடக்கி ஆசியாவில் வீர பவனி வந்து வெற்றிகளைக் குவித்து அதன் முன் நின்று வெற்றி சிரிப்புச் சிரித்த அலெக்சாண்டர், அவன் தாயக மண்ணே மீண்டும் மிதிக்கவே இல்லையே என்று, தான் நடத்திக்கொண்டிருக்கும் போர்க்களத்தைக் கண்டான். இவற்றை எல்லாம் விட சாக்கிய அறிஞன் உபகுப்தனைக் கண்டான்.

உபகுப்தன் வாதம்

உபகுப்தர்: சாம்ராட் அசோக சக்ரவர்த்தியாரே! கலிங்கம் உம் பெயருக்கு.......

அசோகன் : களங்கத்தை உண்டாக்கிவிட்டதென்கிறீர்களா?

உபகுப்தர்: அதோ பாரும், மக்களுக்கு உணவளிக்கும் வயல்களெல்லாம் இரத்த வெள்ளம்.

அசோகன்: அங்கே போர்வீரர்கள் செல்லவில்லையே. உபகுப்தர் : உங்கள் கட்டளை பிறவாமலிருந்திருக்கும். அந்த வயல்களில் சிந்தப்பட்டிருக்கும் ரத்தம் உங்களுடைய போர் வீரர்களுடையதோ, அல்லது கலிங்க வீரர்களின் ரத்தமென்றோ எண்ணாதிர்.

அசோகன் : உபகுப்தரே! பிறகு அந்த ரத்தத் தேக்கமெல்லாம் யாருடையதென்கிறீர்?

உபகுப்தர் : போரில் சம்மந்தப்படாத, சம்மந்தப் படுத்தப்படவேண்டிய அவசியத்திலே இல்லாத, போரைப்பற்றி ஒன்றுமே தெரியாத பொதுமக்களுடையது

அசோகன் : சாக்கியத் திலகமே ! உண்மைதானா?

உபகுப்தர் : சாம்ராட் அதுமாத்திரமல்ல, சிந்தப் பட்டிருக்கிறதே ரத்தம். அந்த ரத்தத்தில் ஆண் ரத்தம் பெண் ரத்தம் என்று அடையாளங் கண்டு கொள்ள முடிகிறதா.

அசோகன் : அதெப்படி முடியும்.

உபகுப்தர் : ஆ! அப்படிச் சொல்லும். அதில் ஆண்கள் ரத்தத்தைவிட பெண்கள் ரத்தந்தான் அதிக மென்பதை மறந்துவிட வேண்டாம்.

அசோகன் : யுத்த தருமமல்லதான்.

உபகுப்தர் : யுத்தமே அதருமம் என்று சொல்லும் போது அதற்கு தருமம் என்று வேறு பெயர் உண்டா. நீர் யுத்தத்தைத் தொடங்கியபிறகு வேண்டுமானால் களத்தில் அனுசரிக்க வேண்டிய முறைகள் பலவற்றிற்கு யுத்த தருமம் என்று அழைக்கப்படலாம். ஆனால் நீர் கலிங்கத்தின்மேல் படையெடுக்க எண்ணினீரே அது எந்த தருமத்தைத் தழுவியதோ.

அசோகன் : மன்னர்கள் வாழ்க்கையில் மாற்றாரை அடக்கியாள்வது மண்டலத்தில் பொதுவானதுதானே.

உபகுப்தர் : மன்னர் மன்னா ! ஒருவர் அக்ரமத்தால் கையாள்கிற முறை வழி வழி சொந்தமாக்கப்பட்டால் அதற்குப் பெயர் பொதுவா. ஆசை என்று சொல்லும் ஒப்புக்கொள்ளுகிறேன்.

அசோகன் : மனம் ஒன்றிருப்பதால் ஆசையைத் துண்டுகிறது.

உபகுப்தர் : அப்படியானால் மனதால் தூண்டிவிடப் படுகிற ஆசைகள் அவ்வளவையும் நிறைவேற்ற முடியும் என்று தாங்கள் உறுதிகூற முடியுமா.

அசோகன் : (யோசிக்கிறான்)

உபகுப்தர் : சிந்தியுங்கள், நன்றாகச் சிந்தியுங்கள், கலிங்கப்போரை நிறுத்திவிட்டுக் கடுமையாகச் சிந்தியுங்கள். இந்தப் போரில் வீரர்களையிழந்து கைம்பெண் கோலத்தோடு கண்களிலே வடிந்த நீரின் வெப்பத்தைக் காலத்தாலும் மாற்றமுடியாது.

அசோகன் : அரசர்கள் தமது வீரத்தையும் புகழையும் வாளாலன்றி நிலநாட்ட முடியாதென்பதை சாக்கியப் பெருந்தகை உணரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். உபகுப்தர் : தாங்கள் மன்னர் மன்னர். கேட்டுக் கொள்ளவேண்டியதில்லை. கட்டளையிடலாம், சமுதாய நல்ல உணர்வின் பிரதிநிதி என்ற பேரால் சில ஐயப்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாமா என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

அசோகன் : பெரியோய் ! தெரியாதவைகளைத் தட்டிக்கழிக்கும் பழக்கம் எம் போன்றோர்க்கில்லே என்ற முடிவோடு தங்கள் ஐயப்பாடுகளைக் கேட்கலாம்.

உபகுப்தர் : அரசர்கள் வாளாலன்றி வீரத்தையும் புகழையும் நிலநாட்ட முடியாதென்றீரல்லவா?

அசோகன் : ஆம்.

உபகுப்தர் : உமது சிந்தையை சில ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துச் செல்கிறேன்.

அசோகன் : செய்யலாம்.

உபகுப்தர் : கோசலத்தையாண்டுக் கொண்டிருந்த மன்னன் சுத்தோதனன் என்பவனைப் பற்றித் தாங்கள் கேள்வி பட்டிருப்பீர்களே !

அசோகன் : ஆம்.

உபகுப்தர் : அவர், மகன் சித்தார்த்தன்.

அசோகன் : ஆம். புத்தர் பிரான்.

உபகுப்தர் : அரசர் பிரானே ! அசோகச் சக்ரவர்த்தியே ! அகிம்சைக்கு வெகு அருகாமையில் வந்து விட்டீர்கள். புத்தர், ஆயுதமெடுத்தாரா, இல்லை. இமயத்தின் அடிவாரத்தில் இடி முழக்கம் கேட்டதுண்டா, இல்லை. ரோகிணியாற்றில் போர்ப்பிணங்கள் மிதந்துச் சென்றதுண்டா, இல்லை. கோசலத்தில் மட்டிலுமல்ல, தன் தந்தையின் பகைவன் பிம்பிசாரன் ஆண்ட மகதத்திலாகிலும் மரணகீதம் கேட்கச் செய்ததுண்டா, இல்லை. அந்தப் பேராளன் ஆயுதச்சாலகளை திறக்கவில்லை. அறிவுக்கபாடத்தைத் திறந்தான். கண்களிலே தீக் கணல் காட்டவில்லை. கருணயைக் காட்டினான். ரத்த வாயால் சிரிக்கவில்லை. சித்தம் நொந்து சிரித்தான். ஒரே பிணத்தைக்கண்டான். அதுவும் தன்னால், அல்லது தன்படைவீரர்களால் கொல்லப்படாமல் இயற்கையாகவே மாண்டுபோன வனுடைய பிரேதத்தைக் கண்டான். சித்தம் சோர்ந்து போனான் சித்தார்த்தன். நீர் இவ்வளவு பிணங்களைப் பார்த்தும் மனம் கலங்கவில்லை. அன்று தொடங்கி அவன் விட்டுவிட்ட ஆசைகள் அவ னுடைய மரண பரியந்தம் அவனேத் தொடவே இல்லை. அவனை நாம் கோழை என்று குற்றம்சாட்ட முடியாது. குவலய நல்லோர்களின் மனதிலே கோயில் கொண்டான். குன்றின் மேலிட்ட விளக்கென இன்னும் எத்தன்ன நூற்றண்டு களானலும் அவன் புகழ் மங்காது மறையாது ஒளிவீசியே தீரும். வீரம் அவன் பாலில்லை என்றும் தாங்கள் அவன்மேல் தீராத பழி சுமத்திவிட முடியாது. கையளவுள்ள ஓர் கலிங்க நாட்டை நீர் எதிர்த்துப் போராடினர். அவன் குவலயக் கொடுமை களனத்தையுமே எதிர்த்துப் போராடினான். அவன் எதிர்த்துப் போராடியது மிகச் சாதாரணமானவர்களையல்ல, வன்னெஞ்சக்காரர்களை, மகேசுவரன் பேரால் மாயாவாதம் புரிந்திவர்களை, சிறு சிறு பலிகளின்பேராலி ஒரு பெரிய சமூகத்தையே பலியிட்ட நச்சுக்கொள்கையை, நயவஞ்சகத் தன்மையை, அநீதியை, அறமின்மையை, ஆசையை, இவ்வளவையும். எதிர்த்து அவன் ஒருவனே போராடினான். கையில் ஆயுதமெடுக்காமல் கருத்து ஒன்றினாலேயே போராடினான், நெடும்படையை அழைத்துச் செல்லவில்லை, நீதி ஒன்றையே அழைத்துச் சென்றான். அவனிடம் பலம் பொருந்திய படை ஒன்றிருக்கத்தான் செய்தது. எனினும் அவைகளை அவன் திரும்பியே பார்க்கவில்லை. அநீதியை நீதியால் அழிக்க முடியும் என திடமாக நம்பினான். ஆகவே அவன் ஆயுதத்தைத் துணைக்கழைக்கவில்லை. ஆரியப் பேராசையெனும் பெரும்படைக்கும் அவனுக்கும் எற்பட்ட கோரமான போரில் அவனே வெற்றி பெற்றான், களத்தில் ஒரு துளி ரத்தம் சிந்தாமல். நீர் இவ்வளவு ரத்தத்தைத் தேக்கியிருக்கிறீர் உங்கள் மறப்போரில் ஒருவருக்குமே நன்மையில்லே. அவனுடைய அறப்போரில் அகிலத்துக்கே நன்மையுண்டு. அதையும் தாங்கள் மறுக்கமுடியாது. உங்கள் வீரத்தில் ஓர் கவலையிருந்தது. அது வெற்றியா தோல்வியா என்பது, ஆனால் அவன் வீரத்தில் ஒர் கருணையிருந்தது. கடமையும் சேர்த்தது. முடிவையும் கண்டான். களிப்புக் கடலிலேயே கண்தூங்கினான். புத்தன் இன்றில்லை. என்றாலும் அவனைப்பற்றிப் பேசுகின்றோம். உம்மைப் பற்றி எக்காலமும் பேசத் தகுந்தவற்றில் ஏதாவதொன்றைச் செய்திருக்கின்றீர்களா என்பதையும் சக்ரவர்த்தி அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எப்படி ஒருவனுக்கு நாம் உயிரளிக்க முடியாதோ அப்போதே நமக்கு ஒரு உயிரைக்கொல்ல உரிமையில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். தன்னேயே தான் வெல்லமுடியாதவன் எப்படி பிறரை வெல்லுவான், தன் மனக்கிளர்ச்சி யிலிருந்து விடுதலையடைய முடியாதவன் எப்படி பிறருக்கு விடுதலையளிப்பான். இந்த மாபெரும் அறிஞன் உபகுப்தன் சொல்லியவற்றைக் கேட்ட அசோகன் கலிங்கப்போரை நிறுத்தி விட்டு கண்கலக்கத்தோடு தாயகம் திரும்பினான். இந்த கலிங்கப் போர் ஒன்றேதான் அசோகனுடைய முதல் போரும் கடைசிப் போருமாகும். அசோகன் என்றால் சோகமில்லாதவன் என்ற பொருளுக்கு நேர் விரோதமாக சோகமிக்கவறாய் விட்டான்.

இந்த சிந்தையில் இவன் ஆழ்ந்து தனது ஆட்சி முறையை மாற்றியமைக்கவில்லையானால் இந்த அகிலத்தையே அவன் கட்டியாண்டிருக்கலாம். அந்த அளவுக்கு ஆட்சியை விரிவாக்க, நாடு பிடிக்க, வரிகளை வசூலிக்க, கலகம் நடவாமலிருக்க, பலவிதமான ஒற்றர்கள் சகிதம் ஆட்சி முறையை அமைத்துத் தந்திருந்தான் சந்திரகுப்தன். ஆனால் ஆட்சியின் சுக்கானை அன்புமயமான அறவழியில் செலுத்தி புத்தன் பொன் மொழிகளையே தன் ஆணைச் சக்கரமாக அமைத்துவிட்டான். அன்று தொடங்கி விவேகம் வளர்ந்தது என்றாலும், ஆட்சியின் முன்னேற்றத்தில் இன்றியமையாதது என்று கருதப்பட்ட வீரம் விடைபெற்றுக்கொண்டது.

பாடலீபுரத்திலிருந்து மன்னன் தேர் புறப்பட்ட தென்றால் போருக்காக இருக்காது. தான தருமம் செய்ய, கல் தூண்களை அமைக்க, புத்த பிட்சுகளைக் கண்காணிக்க, இதைப் போன்ற இன்னும் பல நல்ல காரியங்களுக்காகத்தான் இருக்கும் என்ற நிலையாய் விட்டது.

புத்தர் கொள்கைகளை தென் நாட்டு அரசர்களுக்கு சொன்னது மாத்திரமன்றி, கடல் கடந்தும் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தால் தன் உடன் பிறந்தான் மகேந்திரன் என்பவனையும், சகோதரி சங்கமித்திரையையும் சைனா, இந்தோசைனா, இலங்கை, எகிப்து, மெஸபட்டோமியா முதலான இடங்களுக்கு அனுப்பிவைத்தான். இலங்கைக்கு போதிமரத்தை அனுப்பி வைத்தான். யாகத்தில் பலியிடல், மிருக உணவு உண்ணல் அறவே இருக்கக் கூடாதென ஆணையிட்டுவிட்டான். மாளிகைகளில் மாமிச உணவை சமைக்கவே கூடாதெனக் கண்டிப்பான உத்திரவின் மூலம் தடுத்து விட்டான்.

மக்கள் துயரை உடனுக்குடன் கவனித்து தீர்ப்பதற்காக அவன் செய்திருந்த சட்ட வரிகள் கல் தூணில் செதுக்கப்பட்டிருக்கின்றன. குடியரசு என்ற பெயரே அடிபடாத நேரம், அசோகன் மக்களுக்களித்த அபார உரிமை அளவு கடந்து போற்றக்கூடியதாயிருக்கிறது.

At all times and in all places, whether I am dining or in the ladies' apartments, in my bedroom or in my closet, in my carriage or in the palace gardens, the official reporters should keep me constantly informed of the people's business, which business of the people I am ready to dispose of at any time. (Rock Edict VI)

And further, if any difficulty should arise in the bestowal of the Imperial bounty or in the execution of orders, through disputes arising in the agency entrusted with them (the Parishat) it was commanded that immediate report should be made to the Emperor “at any hour and at any place” for work I must for the Commonweal. "எந்த நேரத்திலும், அந்தப்புறத்தில் இருந்தாலும், உணவுண்ணும் போதாயிலும் அல்லது மலர்ச் சோலேயில் உல்லாசமாய் இருந்தாலும், நான் எப்போதும் தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருக்கும் மக்களின் குறைகளைப் பற்றி எனக்கு தெரிவிக்க வேண்டுவது அதிகாரிகளின் கடமையாகும். மேலும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேலைகளை நிறைவேற்றும்போது அதிகாரிக்குத் தொல்லையோ, அல்லது காலதாமதமோ ஏற்பட்டால், நான் எங்கிருந்த போதிலும், இரவு பகல் எந்நேரமாயினும் எனக்கு அது தெரிவிக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் பொது நன்மைக்கு உழைக்கவே விரும்புகிறேன்"

இப்படித் தன் கட்டளைகளை யெல்லாம் கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, மற்ற அரசர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி சிலாசாசனம் செய்திருப்பதைப் போல அசோகன் தன் சொந்த வாழ்க்கை யைப்பற்றி எந்த கல்வெட்டிலும் செதுக்கி வைக்க வில்லை. அதனால் அசோகனின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள் சரியாக நமக்குக் கிடைக்கவில்லை.

அசோகன் அரசனாக மாத்திரமன்னியில் சிறந்த ஞானியாகவும், அன்பின் இருப்பிடமாகவும், புத்தரின் தலைசிறந்த சீடனாகவும், முப்பத்தி எட்டு ஆண்டுகள் அரசாட்சியை நடத்தி கி. மு. 226 ல் முடிசாய்ந்தான்.

ஆனால்

இவ்வளவும் பேரும் புகழோடு வாழ்ந்த அசோகன் மாளிகையில் களங்கம் ஒன்று ஏற்பட்டு அசோகனின் மகனே கண்களையிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பரிதாப சம்பவத்திற்குக் காரணமாக இருந்தவள் அசோகனின் இரண்டாவது மனைவி சிட்சரக்ஷதை. இவள் தன் கணவனின் முதல் மனைவி அசந்திமத்திரையின் மகனான குணாளனிடம் காதல் பிச்சைக் கேட்கிறாள். எவ்வளவோ தான தருமங்களைச் செய்திருக்கிற அசோகனின் மகன் தன் சிற்றன்னைத் தகாத முறையிலே தன்னிடம் நடந்துகொள்ள ஆசைப்படுகிறாள் என்று தெரிந்தவுடன் வெறுக்கிறான். அவள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதென மறுக்கிறான். உடனே உண்மையை அடியோடு மாற்றி குணாளனைப் பழி தீர்த்துக் கொள்கிறாள். அவள் பழி தீர்க்கும் படலத்திற்குப் பரிசாக தன் அருமைக் கண்களையே பரிசாகத் தந்துவிட்டான் மாபெரிய மெளரிய சாம்ராஜ்யாதிபதியின் மகன் குணாளன். குணாளன் பேரழகா, சிக்ஷரக்ஷதையின் தகாத விருப்பமா என்ற உண்மை இரண்டாவது இடம் பெறுகிறது. ஆனால் தள்ளாமையில் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு அபாயமானது என்பதைக் காட்டும் நிகழ்ச்சியே இதில் முதலிடம் பெறுகிறது. இந்த கோர சம்பவத்தோடு அசோகன் ஆட்சி சக்கரம் சுழன்று நிற்கிறது.

தசரதன்

அசோகனின் பேரன் எட்டு ஆண்டுகள் ஆண்டான். ஆட்சிக் கோடுகள் கலைந்தன. பல சிற்றரசர்கள் தோன்றினர். ஆட்சி ஆட்டங்கண்டது.

கொலையுண்ட பிரஹதத்தரன்

இவன் தசரதன் மகன். இவனுடைய ஆட்சிகாலத்துக்குள் மந்திரி சபையிலே ஆரியர்கள் அதிகமாக இடம் பிடித்துவிட்டனர். அவர்கள் சொல்வழி நடக்க மறுத்தான். மீண்டும் ஆரியம் தலையெடுப்பதை வெறுத்தான். அசோகன் காலத்தில் புத்தில் விரட்டப்பட்டு வெளியே தலை நீட்ட முடியாமல் திண்டாடிய ஆரிய அரவம் மீண்டும் தன் படமெடுக்க இடங்கொடுப்பான் பிரஹதத்திரன் என்று எவ்வளவோ எதிர்பார்த்தனர் ஆரிய மந்திரிகள். முடியவில்லை. வேறு வழியில்லை. எந்த அசோகனின் சக்கரச் சுழலின் வேகத்தைக்கண்டு அவர்கள் நடுங்கினர்களோ, அந்த நடுக்கம், அசோகன் முடிவோடு நின்றுவிட்டது. இனி ஆரியம் தலைதூக்கியாக வேண்டும்.

இதற்குள்ள ஒரே வழி, அரசன் பிரஹதத்திரனைக் கொன்று தீர வேண்டும். சதிச் செய்தனர் ஆரிய மந்திரிகள். தளபதி புஷ்யமித்திரனை விட்டு பிரஹதத்திரனைக் கொலை செய்துவிட்டனர். சாய்ந்த அரசனின் தலையோடு புத்தமதக் கொள்கையும் சாயத் தொடங்கியது. குதூகுலக் கடலில் குளித்தனர். அசோகன் கால முதல் கையில் எடுக்க முடியாமல் தடுத்து நிறுத்திவைக்கப் பட்டிருந்த மதுக் கோப்பை கையில் எடுத்தனர். மதுவுண்ட வாயால் மாமிசத்தை சுவைத்தனர். பல ஆண்டுகள் புகை எழும்பாதிருந்த யாக குண்டங்களில் புகை எழும்பின. அசோகன் ஆணையால் தடுத்து உயிர் காப்பாற்றப்பட்ட பல ஆடுகளும் குதிரைகளும் யாகக் குண்டத்தின் முன்னால் வெட்டப்பட்டன. அவைகள் சிந்திய ரத்தம் கொலை செய்யப்பட்ட பிரஹகதத்திரன் ரத்தத்தோடு கலந்துவிட்டது. எந்த ஆரிய மேன்மைக்காக எந்த சாணக்கியன் என்ற ஆரியனால், எந்த சந்திர குப்த சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே ஆரியகுல அடிமை புஷ்யமித்ரனாலேயே மெளரிய சாம் ராஜ்யம் முடிந்தது. நன்மையெனக் கண்டனர் தோற்றுவித்தனர். தீமையென்றறிந்தவுடன் ஒழித்தனர். இதுவே ஆரியர்கள் அன்றும் இன்றும், இனி நாம் விழிப்பு கொள்ளாவிட்டால் என்றும் நடக்கக்கூடிய தாகும் என்பதை சரித்திராசிரியர்கள் ஒவ்வொருவரும் சுட்டிக்காட்டி யிருக்கின்றனர்.

கொலைகார புஷ்யமித்ரசுங்கன் அஸ்வமேத யாகம் செய்து ஆரியர்களின் அடிவருடியானான், அதன் காரணமாகவே மெளரியசாம்ராஜ்யம் முடிந்து, குப்தசாம் ராஜ்யம் உதயமாகிறது. அதன்பிறகு சாணக்கியன் சந்திரகுப்தன் காலத்தில் எதிர்பார்த்தபடி வெளிநாட்டு படையெடுப்பு நடந்தது, எனினும் முன்னூறு ஆண்டுகள் இந்தியசரித்திரம் இருளடர்ந்திருந்து ஆரியத்துக்கு அரசாங்கரீதியிலே இருந்த செல்வாக்கு மடிந்து மீண்டும் ஆரிய நச்சரவம் புற்றில் இருந்து கிளம்பி குப்த சிங்காதனத்தின் குடையாய் காட்சியளிக்கிறது. எனினும் அந்த பாம்பின் படத்தில் பளபளப்பு இருந்ததேயன்றி பல்லுக்குப் பின்னாலிருந்த விஷப்பையின் வேகம் காணப்படவில்லை.

இப்படி மூன்று நூற்றாண்டுகள் ஆரியம் தலையெடுக்க முடியாதிருந்ததாயினும் செயலற்று இருந்து விடவில்லை. அரசர்கள் நம்பியும், அரசுகளைத் தோற்று ஆரியம் எதிர்பார்த்தபடி நல்ல பலன்கள் எக்காலத்திலும் கிடைக்காத காரணம்

இனி வேறு வழியை பின்பற்றினாலன்றி ஆரியம் வளர்வதற்கு வழியில்லையெனக் கண்டனர். இனி புத்த மதத்தைத் தழுவுவதைப்போல் தழுவி அதை அழித்தாலன்றி தன் இனத்துக்கு உய்வில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியவரானர்கள். ஆகவே அழிந்த மெளரிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகு முன்னூறு ஆண்டுகளாக சிறுகச் சிறுக வளர்ந்து வந்த ஆரியம் குஷான் சாம்ராஜ்யம் ஏற்படுகிற வரையிலும் கொஞ்ச கொஞ்சமாகத் தலைதுாக்கியது. மகதத்தை ஆண்டு கொண்டிருந்த சந்திரகுப்தனால் மீண்டும் ஆரியம் உயிர்பெற்றது. இந்த குப்தர்கள் தான் ஆரியத்தை ஆதரித்தானே யன்றி, இந்த ஆரியத்தால் தோற்றுவிக்கப்பட்ட சாம்ராஜ்யத்தைக் தொடக்க முதல் எதிர்த்துக்கொண்டே வந்த கலிங்கம் ஒரு பக்கமும் குஷான் அரசு பக்கமும் இருக்கத்தான் செய்தது.

புயல் நுழைந்துவிட்டது

புத்த சங்கங்களில் புயல்போல் நுழைந்துவிட்டது ஆரியம். அந்த கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள்போல் பாசாங்கு செய்தனர். மொட்டை அடித்துக்கொண்டு காஷாயம் தரித்து புத்த பிட்சுகளாக மாறி அதில் மகாயானம், ஹீனயானம் என்று கடவுளைப்பற்றிய பிரச்னையை வளர்த்து சண்டையை முட்டி விட்டு தங்களுக்குச் சாதகமான இடங்களையும் மடங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். சற்றொப்ப இந்தியா விலிருந்த எல்லா புத்த சங்கங்களையுமே ஆரியர்கள் தமதாக்கிக்கொண்டு புத்தரை மகா விஷ்ணுவாக்கி ஆண்டவன் எடுத்த பல அவதாரங்கள் புத்த அவதாரமும் ஒன்றென வாய் கூசாமல் சொல்லி வயறு வளர்த்தனர் இந்த வடபரதேசிகள். எதிர்த்துக் கெடுக்க முடியாவிட்டால் அண்டிக் கெடுப்பதையே குலத்தொழிலாக வைத்துக்கொண்ட இவர்கள் இன்றளவும் ஒரு நிரந்தரமான கொள்கை யற்றவர்களாய், எந்த வசதி பெற வேண்டியதாயிருந்தாலும் எதை வேண்டுமானாலும் கொடுத்து தங்கள் நிலையை, தங்கள் வருங்கால சந்ததிகளின் நிலையை சரி பார்த்துக்கொண்டார்கள். இதற்குச் சாதகமாக, முன்பு சாணக்கியனுக்கு ஒரு சந்திரகுப்தன் அகப்பட்டதைப்போல இங்கே ஒரு சந்திரகுப்த ஆரியன் என்பவன் அகப்படுகிறான். இவன் தான் மகதத்தை ஆண்டுக்கொண்டிருந்த லட்சாவி அரசனின் மகள் குமாரதேவி என்பவளை கி. பி. 308-ல் திருமணஞ் செய்துகொண்டு அந்த மகதத்திலும் ஆரியத்தை பரவவிட்டான்.

சந்திரகுப்த ஆரியன்

மகத வேந்தன் மருமகனான இவன் பனிரெண்டு ஆண்டுகளில் சக்ரவர்த்தியாகின்றான். இவன் பேராலும் ராணியின் பேராலும் நாணயங்களை வெளியிடுகிறான். சபாமண்டபத்தில் அரிசேனன் என்பவனை ஆஸ்தான கவிஞனாக நியமிக்கிறான். மொழி, கலை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியை மிகைப்படுத்தினான். இவன் காலம்வரை பாரதங்கள் இரண்டு, இராமாயணக் கதைகள் இரண்டுமாக இருந்ததை எல்லாம் ஒன்றாக்கி ஒரே பாரதம், ஒரே இராமாயணமாக புதுப்பித்தான். அது வரையில் அவனவன் இஷ்டத்துக்கும் கற்பனைக்கும் எட்டியவாறு எழுதப்பட்டு கண்ட கண்ட இடங்களில் கேட்பாரற்று சிறுசிறு துண்டுகளாக இருந்த மேற்சொன்ன கதைகளை ஒன்றாக்கி சமூகத்தின் நல்ல இரத்த ஓட்டத்தை நஞ்சாக்கிய மாபாதகனும், திராவிடர்களின் சமுதாயப் பகைவனும் இந்த கொடுங்கோலன்தான். சமஸ்கிருதத்தை நீதிமன்ற மொழியாக்கியவனும் இவனேதான். இவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் இவனுடைய மகன் சமுத்ரகுப்தன். இந்த சமுத்ரகுப்தனும் புஷ்யமித்திரன் செய்ததைப்போல ஒரு அஸ்வமேத யாகம் செய்திருக்கின்றான். இவன் மகன் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் ஆகியோர்களால் வளர்க்கப்பட்ட ஆரியத்தை எவராலும் அழிக்க முடியவில்லை. ஆனால் இவர்களால் புத்த மதத்தை அழிக்க முடிந்தது. எந்த அளவுக்கு அழிந்தது. எந்த புத்தகயாவில் அசோகன், சக்கரம் சுழன்று கொண்டிருந்ததோ, எந்த புத்தகயாவில் சித்தார்த்தன் பேருண்மையைக் கண்டானோ, எந்த புத்தகயாவில் அரசன் ஆணைக்கு அடிபணிய ஆரியர்கள் கைகட்டி நின்றார்களோ, எந்த புத்தகயாவில் போதி மரத்தின் நிழல் படர்ந்திருந்ததோ, எந்த புத்தகயாவில் மக்கள் அனைவரும் சமம், மகேசுவரனைக் காட்டி மக்களை ஏமாற்றுவது மாபெரிய துரோகம் என்று அறிவிக்கப்பட்டதோ, எந்த புத்தகயாவில் கோசலாதிபதி சுத்தோதனன் கொடி பறந்து கொண்டிருந்ததோ, எந்த புத்தகயாவில் வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது என்பதைக் காட்டும்வண்ணம் புத்த விக்கிரகத்துக்கு முன்னால் வேம்பும் மாவும் தளிர்விட்டு நிழல் தந்து நின்று கொண்டிருந்ததோ அந்த புத்தகயாவில் ஒரு மண்டபம் எழுப்ப கேவலம் ஒரு ஆரிய மன்னன் சமுத்ரகுப்தனிடம் சிங்கள அரசன் மேகவர்னன் உரிமைக் கேட்க கைநீட்டவேண்டி வந்தது.

மனுநீதியும் பகவத் கீதையும் ஆட்சி செய்யத் தொடங்கிய காலம் இதுதான். பஞ்சதந்திரக் கதைகளை எழுதி மக்கள்முன் குவித்ததும் இதே காலத்தில்தான்.

திராவிடர் வீழ்ந்தனர்

இதுவரை ஆரியத்தைப் பலமாக எதிர்த்து வந்த திராவிடர்கள், வடக்கே எழுப்பிய பெரிய பெரிய படையெடுப்பை எல்லாம் தன்னகத்துக்கு வராமல் தடுத்தவர்கள். புத்தமத பரவலாலன்றி அதற்கு முன்பு இயற்கை யாகவே ஆரியத்தையும், அதன் அறிவுக்கு ஒவ்வாத கொள்கையையும் பலமாக எதிர்த்துக்கொண்டுவந்த திராவிடர்கள் தொடர்ந்து வந்த நான்கைந்து ஆரிய மன்னர்களாட்சியாலும், அவர்கள் துணையும் செல்வமும் செல்வாக்கும் கொண்டு நாட்டின் மூலை முடுக்குகளிளெல்லாம் நடந்த இடைவிடாத பிரசாரத்திலும் திராவிட சமுதாயத்தின் வீழ்ச்சித் தொடங்கிவிட்டது. அதுவரை உலகத்தின் எதிர்பாராத நிகழ்ச்சிகளெல்லாம் இயற்கையின் நியதியால் நடக்கின்றதென்று சாதாரணமாக இருந்த மக்கள் இறைவனால்தான் இப்படி நடக்கிறது என்பதை ஒவ்வோர் நிகழ்ச்சியிலும வெகு சாமர்த்தியமாக ஆரியர்களால் நுழைக்கப்பட்ட காரணத்தாலும், அவைகளை அரசர்கள் முதல் அறிஞர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வரை எல்லோராலும் கடைப்பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தால் சாதாரண பாமர மக்கள் வேறுவழியில்லாமல், எதிர்த்துப் பேச தைரியமில்லாமல், பின்பற்றவேண்டிய நிலையை அடைந்துவிட்டார்கள். அன்றே திராவிட சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு படுகுழி வெட்டப்பட்டுவிட்டது. வட மொழி ஒரு பக்கம், வேள்விகளும், மோகம் ஒரு பக்கம், வேத பாராயணங்கள் ஒரு பக்கம். கண் மூடிக் கொண்டு ஜெபத்தில் இருப்பதைபோல், உருமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்குகளைப் போல திராவிட சமுதாயம் என்ற மீன் தங்கள் வலையில் கிடைக்கும் வரையில் உறுமாறி புத்த சங்கத்திலும் ஒரு சாராரும், அரசன் அவைக் களத்தில் செல்வாக்கு பெற்ற சிலராகவும், வெளியே செல்வச் சீமான்களின் பக்கத்தில் சிலராகவும் திரும்பிய பக்கமெல்லாம், அவர்களாகவே, அவர்களுடைய அதிசய வேலையாகவே இருந்ததைப் பார்த்த திராவிடர் நாதியற்றவர்களாயினர்.

ஆரியத்துக்கு அழிவு

மீண்டும் ஆரியத்துக்கு அழிவு கி.பி. 5வது நூற்றாண்டில் தொடங்கிவிட்டது. அரசியல் பொருளியல் சமூக இயல் ஆகிய எல்லா பகுதியிலும் கலந்துவிட்ட ஆரியம் இனி எதிர்ப்பும் அழிவும் இருக்கவே முடியாதென்று இறுமாந்திருந்தது. அது எடுத்துக்கொண்ட வேலைகளை செவ்வனே முடித்துத்தந்த ஆரிய மன்னர்களுக்கு பாமாலைகளும் பூமாலைகளையும் தொடுத்துக் கொண்டிருந்தனர். கங்கைக் கரையைக் கடந்து விந்தியத்தைத் தாண்டி தென்னாட்டில் நுழைந்துவிட்ட ஆரியம் அகில உலகத்தையே தன்பாலடக்கி விட்டதாக எக்காள மிட்டுக்கொண்டிருந்தது. இனி இதற்கு அழிவே வர முடியாதென் றெண்ணினர். என்றாலும் அரசியலிலே அதற்கு அழிவு தோன்றிவிட்டது.

மிகிரகோளன்

கி. பி. ஐந்தாவது நூற்ருண்டின் தொடக்கத்தில் ஹூனர்கள் படையெடுத்தனர். அவர்களின் தலைவன் மிகிரகோளன் என்பவன்தான் குப்த சாம்ராஜ்யத்தை அழித்து, சிங்காதன மேறியிருந்த ஆரியத்தை அடியோடு கீழே தள்ளியவன். குப்த சாம்ராஜ்யத்தை நீர்த்துளியாக்கி விட்டான். மிகிரகோளன் ஒருவன் தோன்றி யிராவிட்டால் மன்னர் விட்டுச்சென்ற அரியாசனத்தில் இத்த மாபாதக ஆரியர்களிலே ஒருவன் அமர்ந்திருப்பான். குடி அரசு என்றே சிறுவர்களிட்ட கோலம்போல் முடிந்திருக்கும். அன்று ஆரியம் பெற்றிருந்த செல்வாக்கை இவ்வளவு தைரியமாக எதிர்த்துப் போராடி அதன் அரசியல் நச்சுப் பல்லைப் பிடிங்கிய மகா வீரன் மிகிரகோளனத் தவிர வேறு யாரும் இல்லை. ஆனால் அவனுக்குச் சமானமாக சமுதாயத் துறையிலே சீர்த்திருத்தம் செய்ய எந்த வீரனும் பகிரங்கமாக முன் வராத காரணத்தால் மக்கள் உள்ளங்களிலே படிந்து விட்ட மூடப் பழக்கவழக்கங்களும் அர்த்தமில்லாத சடங்குகளும் குறைய வசதியே இல்லாமல் போய்விட் டது. இப்படி 14 நூற்றாண்டுகள் உருண்டோடி வந்த ஆரியத்தின் எதிரிகள் இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்திலே திராவிட சமுதாயத்திலே தோன்றி முழு மூச்சாக எதிர்க்கும் காரணத்தினால்தான்.

இவ்வளவு நாகரிக மிக்கக் காலம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், திராவிட இனத்திலே சில குறிப்பிடத் தகுந்தவர்கள் சூழ்ச்சியால் கொல்லப்படுவதும், தூக்கில் மாட்டித் தொங்கவிடப்படுவதும், பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கடுமையான தண்டனைக் குள்ளாவதும், திராவிடத்தார் எழுதுகிற நூல்கள் தடை செய்யப்படுவதும், அல்லது கொளுத்தப்படுவதும், அவர்கள் வீடு சூறையாடப்படுவதும், நாடகங்கள் தடை செய்யப்படுவதும் போன்ற சில்லரைச் சண்டைகள் அங்குமிங்குமாக ஏற்பட்டுக்கொண்டிருப்பதற்குக் காரணமே அந்த வெண்கணாளர் திராவிடர்மேல் கொண்டிருக்கும் தீராத பகை என்பது தவிர வேறு வழியில்லை. இனி எவ்வளவு சலசலப்புகள் அவர்களால் ஏற்பட்டாலும் தெய்வீகத் தன்மையென தன் உஞ்சிவிர்த்திக்கு மகுடம் சூட்டி மாபெரியவர்கள், போற்றத் தகுந்தவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்கள் என்றெல்லாம் பொய் வேடம் தரித்துத் திரிந்துகொண்டிருந்த ஆரியக்கோட்டையில் அழுகுரல்கேட்கக் காண்கிறோம். மரணக் குழி வெட்டப்படுகிறது. மயானத்தில் அதன் கவஅடக்கம் அடுத்த நூற்றாண்டில் என்றாலும் ஆச்சரியமில்லை.

மதவெறியால் தோன்றி மதவெறியாலேயே மறைந்த சாம்ராஜ்யம்

இந்தியாவின் கதவை இஸ்லாமியர்கள் கி. பி. 725-ல் தட்டுகின்றனர். அந்த குரல், வந்தவனை வாழ வைத்த இந்தியர்களுக்கு எதிரியினுடையது என்று படவில்லை. எவனெவன் எந்தெந்த அக்ரமங்களைச் செய்தாலும் ஈசன் வெகுண்டதால் இந்த அழிவையுண்டாக்க இப்படி சிலரை அவதார புருஷர்களாக அனுப்புகிறான் என்றே எருமைபோலிருந்தனர். அரேபியப் படையெடுப்பில் தொடங்கி கஜினி கையாண்ட கபோதிக் கொள்கையும், முகம்மது கோரி சூறையாடியதலைகளும், அதன் பிறகு அந்த ஆணவமிக்கவர்கள் கோவேந்தர்களென பட்டம்பெற்று கொள்ளையும் கொலையுமே குலத் தொழிலாகக் கொண்ட அவர்களால் நியமிக்கப்பட்ட அடிமையரசர்கள் வடபாகத்தையாண்டதும், கில்ஜி வமிசத்தினரும் லோடி பரம்பரையினரும் கொஞ்சமும் கருணையில்லாமல் ஆண்டதும், மொகல் சாம்ராஜ்யம்தோன்றியதும், பாபர் உமாயூன் பரம்பரைப் பாத்தியத்தைக் கொண்டாடியதும், இடையிலே தோன்றி மறைந்த ஷேர்கான் ஆட்சியும், இந்துக்களை பகைத்து வாழ தைரியமில்லாமல் சமரசம் பேசி வாழ்ந்த அக்பர் ஆண்டதும், அதைத் தொடர்ந்தே ஜஹாங்கீர் ஷாஜ ஹான் பார் எங்கிலும் பிறைக்கொடி பறக்கவேண்டுமென்ற மதவெறியை அடக்குவதற்காக ஏற்பட்ட மகாராஷ்டிரத்தின் முற்றுகையை, வீரன் சிவாஜி ஏந்திய வாளை, ரஜபுதனரின் வீரத்தை எதிர்க்க முடியாமல் வீழ்ந்து விட்ட ஒளரங்கசீப்பின் இஸ்லாமிய பேராசையோடு மொகலாய சாம்ராஜ்யம் வீழ்ந்துவிட்டது. அதன் அடையாளங்களாக எஞ்சி நின்றவை, ஜும்மாமஸ்ஜித் தாஜ்மஹால், செங்கோட்டை, மைலாசனம்.

மூன்று நிலைகள்

அரேபிய படையெடுப்பில் இந்தியாவில் மூன்று சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. ஒன்று - புதியதோர் சாம்ராஜ்யம் ஏற்படுகிறது. இரண்டு - இந்துமத ஆதிக்கம் குறைந்துபோய் வேரோர் மத ஆதிக்கம் வளர்வது, மூன்று - இதன் காரணமாக ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாகிறது. அல்லாவின் பெயருக்கு அகிலமெல்லாம் அடிபணிய வேண்டுமென்ற காரணத்தாலேயே ஒரு கையில் பிறைக் கொடியும், மற்றோர் கையில் வாளையும் எந்தி இந்தியாவின் இரும்புக் கதவுகளைத் தமது டார்ட்டாரி குதிரைகளின் காலால் தட்டித் தகர்த்தெறிந்தனர். மரணம் எய்துவதாயினும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மரணப் போர் நடத்தியவர் கள்தான் மற்றவர் மதத்தை மண்ணென மதித்தனர். மதக் கேர்யில்களை மண்மேடாக்கினர், தங்கச் சிலைகளை சூரையாடினர், வாளால் மற்றவர்கள் வழிபாடுகளைத் தடுத்தனர். ' இது உங்கள் மதக்கோட்பாடுகளிலே ஒன்றா ' என்று கேட்கத் துணிவற்ற சில சோற்றுத் துருத்திகள் உண்மையான வீரர்களையும் கோழைகளாக்கி, அன்பு, அறம், அகிம்சையெனப் பேசி இந்திய ரத்தத்தைச் சிந்தச் செய்து இஸ்லாமிய ஆட்சியின் கல் நாட்டு விழா செய்தனர். அன்று தொடங்கி இந்திய வீரத்தின் பட்டயத்திலே எண்ண முடியாத சுருங்கள் கோடுகள் வீழ்ந்துவிட்டன.

காசீம்

கி. பி. 725-ல் முதன் முதலில் இந்தியாவை நோக்கி வந்தான் முகம்மத் பின் காசீம். 728-ல் குஜராத் நாட்டரசன் நாகபட்டன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான். முழு தோல்வியடைந்து திரும்பி ஓடிய காசீமுக்குப்பிறகு 250 ஆண்டுகள் எந்த இஸ்லாமிய மன்னனும் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஒழிந்தது எதிர்ப்பு என்றிருந்தனர் இந்திய அரசர்கள். ஆனல் அரேபியாவில் இந்திய நாட்டின் எழிலைப்பற்றி நினைக்காத நாளில்லை. எப்படி அதை அடிமைப்படுத்துவது என்று பேசாதவர்களில்லை. காசீம் வேரூன்றிய நாள் தொடங்கி ஆட்சி நிலையாக வேரூன்றியிருந்தால் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் நாட் குறிப்பில் 250 ஆண்டுகள் கூடியிருக்கும். தோன்றி உதிர்ந்த நட்சத்திரம்போல் தோன்றி மறைந்தான் காசீம்.

கஜினி

முகமத் கஜினி. அண்ட சராசரங்களையாண்டதாகச் சொல்லும் சோமநாதர் சிலையை துண்ட துண்டமாக்கியவன் இவன்தான். சிலை வணக்கத்தின் வைரி, படை திரட்டி வந்த பகற் கொள்ளைக்காரன். பதினேழு முறை படையெடுத்து கூர்ஜரத்திலுள்ள சோமேசர் ஆலயத்தையும், தானேஸ்வர், கன்னோஜ், மித்ரா என்ற அழகு நகரங்களை அழித்தவன். இவனது கொடுஞ் செயலை வர்ணித்திருக்கிற உட்பி என்ற சரித்திர ஆசிரியன் எழுதுகோல் நடுங்கி நடுங்கிச் சென்றிருக்கின்றது. அவ்வளவு. அழுதுதீர்த்திருக்கினறான் அந்த நிகழ்ச்சியின் சிற்பிகாலக் கோர்வையின் கலைஞன் உட்பி. மித்ராவில் ஆயிரம் அழகான கல் வீடுகள். அந்த அழகு மாளிகைகளுக்கு அழகு செய்வதுபோல் இடையே ஒரு அழகான கோயில், அவைகளையழிக்க ஒரு சாதாரண மிருகத்துக்குக்கூட மனம் வராது. அந்த எழில் நகரைத்தான் படைகளால் தரைமட்டமாக்கிவிட்டான் தறுக்கன் கஜினி, எத்தனையோ கோடிகள் செலவிட்டு இருநூறு ஆண்டுகள் கட்டினாலும் மீண்டும் அதே நிலையில் காண முடியாத நகரத்தைத்தான் இந்தக் கொடியவன் நாசம் செய்தான் என்ற பேராசிரியன் உட்பியின் சொற்களே கஜினியின் கொடுஞ் செயலை விளக்கப் போதுமானது.

இவனுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவவேண்டுமென்ற ஆசையைவிட கொள்ளையடித்து சேர்த்த பொருள்களை அரேபியாவுக்குக் கொண்டுசெல்லவேண்டு மென்ற எண்ணந்தான் அதிகம். எனினும் இவன்தான் இங்கே இஸ்லாமிய அரசு நிரந்தரமாக நிலைபெற வழி, வகுத்துத் தந்தவனும் அதற்குக் காரணமானவனுமாவான்

ஆசை

தான் ஆர்யவர்த்தத்தில் கொள்ளையடித்துக் கொண்டுபோன செல்வத்தை எல்லாம் ஓர் நாள் தன் எதிரிலே குவிக்கச் செய்து தான் பார்த்து மகிழ்ந்ததுமன்னியில் தன் தளகர்த்தர்களையும் பார்த்து மகிழச் செய்தான் கஜனி. அந்தச் செல்வக் குவியலின் உயரமும் அதிலே மின்னிய வைரங்களின் ஒளியும் பார்த்தவர் உள்ளத்திலே பேராசையை எழுப்பி இந்தியாவை கொள்ளையிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. அன்றந்த செல்வக் குவியலின் எதிரிலே நின்ற அரேபியர்களின் நாவில் நீர் ஊறி கைகள் திணவெடுக்கத் தொடங்கின. அவர்கள் உடலில் ஒடிக்கொண்டிருந்த ரத்தத்தின் சென்னிறத்தைவிட இந்தியாவில் கிடைக்கும் மாணிக்கக் கற்களின் சென்னிறமும் ஜொலி ஜொலிப்பும் அதிகமென எண்ணினர். ஒரு துளி ரத்தத்தால் ஒரு அரேபிய குடும்பம் வாழ முடியாமல் தத்தளிப்பதைவிட உடல் ரத்தம் முழுவதையும் ஈடுசெய்தாவது ஒரே ஒரு மாணிக்கத்தை, மரகதத்தை, கோமேதகத்தைப் பெற்றால் ஒரு சங்கிலித்தொடர்புள்ள அரேபியப் பரம்பரையே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணினர்போலும். அதற்காக அவர்கள் போட்ட மூலதனம், சில ஆட்கள், சில ஆயுதங்கள், மன உறுதி, கொஞ்சம் கடுமையான உழைப்பு, இவ்வளவுதான்.

கஜனியின் கடைசி படையெடுப்புதான் சோமநாதபுரம், ஆலையச் சிதைவு, பொருள் சூறை, மக்கள் பீதி நகரம் பாழ் எல்லாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதைப்போல் பாரமீடா என்ற அரசனால் சரியான அடி வாங்கி தனது பெரிய படையை நாச மாக்கிக்கொண்டு குறுக்கு வழியாக பாலைவனத்திலே நுழைந்து தன்னை நம்பி வந்த படைகளை ஆங்காங்கே சிதறவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டான். இதோடு கஜனியின் பொன்னாசையும் பொருளாசையும் பொசுங்கி மாண்டது. எனினும் சோமநாதராலையத்தின் சிரித்த சிலை சீரழிந்து சாய்ந்தது. ஒருவன் பேராசையால் அழிக்கப்பட்ட நகரம் பல்லாயிரம் பேர்களால் செப்பனிட முடியாமல் பல நூற்றாண்டுகள் கிலமாய்க்கிடந்தது. இன்றந்த சோமநாதபுரத்தில் இடிந்து சரிந்திருக்கும் கோயில்களுக்கும் கொத்தளங்களின் சுவர்களுக்கும் உயிர் வந்தால் கஜனியின் சந்ததியையே அழித்தொழிக்கும். பிற நீண்டகாலம் வரை எந்த அரேபிய மன்னனுடைய தொல்லையும் இங்கே தலை நிட்டவில்லை.

கோரி

கண்ணோஜ்ஜியில் பிரிதிவிக்கும் ஜெயச்சந்திரனுக்கும் ஏற்பட்ட தகராரின் காரணமாக முகம்மது கோரி உள்ளே நுழைகிறான். பிரிதிவியை பழிதீர்க்கவேண்டுமென்று ஜெயச்சந்திரன்தான் கோரியை அழைத்து வருகின்றன். ஆனால் கோரி, பிரிதிவியிடம் எதிர்த்து நிற்க முடியாமல் உயிருக்குத் தப்பி ஓடுகிறான். தான் ஜெயித்த நாடுகளைத் தன் அடிமைகளிடம் ஒப்படைத்து அவர்களை ஆளும்படிச் செய்துவிட்டு ஒடுகிறான். அந்த அடிமை அரசர்களும் மாபாதகன் ஜெயச்சந்திரன் உதவியினால்தான் ஆள்கிறார்கள். இப்படி விட்டுவிட்டு ஓடிப்போன மொகலாய மன்னர்களில் கோரியின் ஆட்சியையும் அவனுக்குப் பின்பும் நிலைக்கச் செய்தவன் ஜெயச்சந்திரன்தான். வெள்ளையர் ஆட்சியை இங்கே நிலைநிறுத்தத் துரோகி உமீசந்த் என்ற ஆரியன் காரணமானதைப்போல் முஸ்லீம் சாம்ராஜ்யம் இங்கே வேரூன்ற ஜெயச்சந்திரன் காரணமானான்.

அடிமை அரசர்கள்

கோரி விட்டுச்சென்ற அடிமை அரசர்கள். இவர்களிடந்தான் தான் கண்ட நாடுகளின் ஆட்சியை ஒப்படைக்கின்றன். ஒன்றுக்கும் உதவாதக் தன் அடிமைகளை இந்திய மக்களுக்கு மன்னர்களாக்கினான் என்றால் இந்திய மக்களையும் மன்னர்களையும் அவன் எவ்வாறு கருதியிருக்கவேண்டும். அந்த அடிமை அரசர்களிலே, முதல் அரசன் குதுப்தீன், மாற்றான் மண்ணிலே முகம்மதியர்கள் ஏற்படுத்திய அரசின் துவக்கத்தை உலகெங்கும் எடுத்துக் கூறுவதுபோல் இன்னும் டில்லியின் அருகே குதுப்புத்தீன் பெயரால் எழுப்பிய குதுப்மினார் எனும் கோபுரம் காட்சியளிக்கிறது. இப்படித் துவங்கிய இஸ்லாமிய அரசு, அடிமை வம்சம் என்ற பெயரில் ஆரம்பமாகி, கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், லோடி வம்சம், மொகல் வம்சம் என்ற பெயர்களில் மறைந்து உருவாகி ஒளரங்கசீப்பின் கடைசி நாளோடு உருக்குலைந்து போயிற்று.

அல்லாவுத்தீன் கில்ஜி

அல்லாவுத்தின் கில்ஜி. இவன்தான் ஜெஸியா வரியையும் யாத்ரீக வரியையும் போட்டவன். இடத்தையும் பிடித்து மதப் பெருமையையும் சொல்லி, பொருளையும் குறையாடி, சிங்காதனத்தையும் சொந்த்மாக்கிக் கொண்டு, மெதுவாக மேற்சொன்ன இரண்டு வரிகளையும் போட ஆரம்பித்தான். இந்த வரிகளையும் இவனையும் பலமாக எதிர்த்து முறியடித்தவன் தம்பாரையாண்ட ரஜபுத்திர அரசன் ராணா. இன்னும் தெற்கே என்னென்ன இருக்கின்றதென்று தெரிந்துகொள்ள தனது தளகர்த்தன் மாலிகாபூரைவிட்டுப் பார்த்தவனும் இந்த கில்ஜிதான். இவனோடு முடிவடைகிறது கில்ஜியின் சாம்ராஜ்யம்.

பைத்தியக்கார துக்ளக்

தலைநகரை ராஜகிரிக்கும் ராஜகோட்டைக்கும் மக்களோடு மாற்றி பல மக்கள் வழியிலேயே இறந்துவிடக் காரணமான முன்யோசனையில்லாத பைத்தியக்கார முகம்மதுபின் துக்ளக். இவன் இந்தியாவை மாத்திரம் கனவு காணவில்லை. திபேத்தையும் சேர்த்து கணக்கிட்டான். இவனால் நீண்ட நாட்கள் ஆளமுடியாமல் லோடிகள் என்ற பலவீனமான மன்னர்களிடம் விட்டுச் சென்றான். அவர்கள் தங்கள் தலைவன் தங்களிடம் விட்டுச்சென்ற சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற முடியாமல் தோல்வி கண்டார்கள்.

இப்படி விட்டும் தொட்டும், இங்கே இருந்த சில குடிலர்களாலும் குத்துயுரும் குலையுயிருமாய் இருந்த இஸ்லாமிய அரசு 1526ல் பாபர் கையில் வந்தது.

பாபர்

இந்த பாபர்தான் முதன் முதலில் பீரங்கியைக் கொண்டுவந்து களத்தில் நிறுத்தியவன். அரசைக் காப்பாற்றி விரிவாக்கிக் கொண்டிருந்தான்.

உமாயூன்

இவன் ஷேர்கான் என்ற பீகார் அரசனால் தோற்கடிக்கப்பட்டு ஓடியபோது அமர் கோட்டையில் அக்பர் பிறந்தான். 16 வயதடைந்த சிறியவனான அக்பர் 1556ல் டெல்லி அரியாசனமேறினான். இவனுக்கு பெருந்துணை புரிந்தவன் பைராம்கான். அக்பர் இந்து முஸ்லிம் சமரச வேந்தன் என்ற பட்டம் பெற்றவன். மீரா-ராணாவைத் தவிர மற்ற அரசர்கள் அனைவருமே அடங்கிவிட வேண்டியதான உபாயத்தைக் கையாண்டவன் இவன். ரஜபுதன மாதரின் தியாகம். இந்து சிப்பாய்கள் ஜனானாவில் சிந்திய ரத்தம், கொலை செய்யப்பட்ட சிந்து பனியாவின் தலை, ஆகியவற்றால் எழுந்த எதிர்ப்பை தந்திரமாக அடக்கிவிட்டான். அதற்காக அக்பர் கையாண்ட முறை மிகவும் விசித்திரமானவை. இதுவரை வந்து போன இஸ்லாமிய அரசர்கள் எண்ணத்தில் தோன்றாதது. பாபர் நினைத்து நினைத்து கைகூடுமோ கலகம் வருமோ என்ற கலக்கத்தால் கைவிட்டு விட்ட முறை. தந்தை உமாயூன் கையாளாத முறை. இந்து அரசர்கனை எதிர்த்து நின்ற முஸ்லிம் மன்னர்களடைந்த நாசத்தை மனப்பாடம் செய்து வைத்தவனும், அதற்கு முற்றிலும் மாறானதோர் மார்க்கத்தை வகுத்தவனும் இவன்தான்.

இந்துக்களோடு சேர்ந்து வாழ்வது என்ற முடிவோடு, தன் முன்னேர்களிலே ஒருவனான அலாவுத்தின் கில்ஜி இந்துக்களுக்குப் போட்டிருந்த ஜெஸியா வரியையும் யாத்திரை வரியையும் நீக்கிவிட்டான். இந்துக்களுக்குத் தன்மேல் அதிக நம்பிக்கை வரவேண்டுமே என்ற காரணத்தால் அசல் குர்ஆனையே நிராகரித்து ஒரு புதிய தீனேஹிலாயி என்ற ஒரு போட்டி குர்-ஆனை அப்துல் பாசில் என்பவரின் துணைகொண்டு எழுதச் செய்தவனும் இந்த அக்பர்தான். இந்து இதிகாசங்களான இராமாயணத்தையும் பாரதத்தையும் பெர்ஷிய மொழியிலே மொழி பெயர்க்கச் செய்து இந்துமத வாதிகளின் முழு நம்பிக்கையையும் பூரண அபிமானத்தையும் பெற்றுக் கொண்டான். ரஜபுத்திர வம்சத்தின் ரத்த பாசத்தை வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தால் ரஜபுதன அரசன் அம்பர் என்பவன் மகளைத் திருமணம் செய்து கொண்டான். அவள் தம்பி மான்சிங் என்பவனுக்கு மந்திரிப் பதவியளித்தான். அங்கே இருந்த மற்றோர் அரசன் தோடர்மால் என்பவனுக்கு பொருளாதார மந்திரிப் பதவியையளித்தான். பீர்பால் என்பவனுக்கு மற்றோர் வேட்டையைக் காட்டினான், இவன் கையாண்ட இந்த முறைகளால் இந்துஸ்தானம் இஸ்லாமின் அடிமையாய்விட்டது. எதிர்ப்பு அடங்கிவிட்டது, இந்தியாவை ஒன்றாக்குவது, இந்துக்களுக்குள் ஒற்றுமையுண்டாக்குவது, அரசியல் அந்தஸ்தை உயர்த்து வது ஆகிய இவைகளே இவனுடைய குறிக்கோள் களெனக் காட்டினான்.

ஆனால் இவனுடைய இந்த உயர்வான அந்தஸ்துக்குக் காரணமான பைராம்கான் விரட்டப்பட்டான். அக்பரின் சாம்ராஜ்யத்தை பல எதிர்ப்புகளிடையே நிலை நாட்டிய பைராம்கான், அக்பரின் சிறிய வயதிலேயே அவனைத் தக்காரு மிக்காருமில்லாதவனென்று தரணியோர் புகழ அரும்பாடுபட்ட பைராம்கான் சில சுயநலமிகள் வைத்த கலகத்தால் வெளியேற்றப்பட்டான். சமரசம் பேசிய அக்பர், தான் சன்மானிக்க வேண்டிய பைராம்கான சரகென ஊதித் தள்ளினான், ரணகளத்தில் ரஜபுத்திரர்களின் தலைகள் உருண்டபோது பார்த்து அலறிய சிறுவன் அக்பருக்கு அருகிருந்து ஆறுதல் கூறி, யுத்த தருமத்தை எடுத்துரைத்து. டெல்லி அரியாசனத்திலே அக்பரை ஏற்றிவைத்து கண் குளிரக் கண்டு அதுவே தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பரிகார மென பரவசமடைந்த பைராம்கான் சில பாதகர்கள் செய்த சதியால் நாடுகடத்தப்பட்டான். அக்பரின் உய்வுக்காக அல்லும் பகலும் அரும்பாடுபட்டு அவனுடைய பிறைக் கொடியின் நிழல்படாத இடமே பாரில் இருக்கக் கூடாதென்று தியாகம் செய்க வீரத் தியாகி பைராம்கான் சில வீணர்கள் கக்கிய விஷச் சொற்களால் ஏமாற்றப்பட்ட வேந்தனின் வெகுளிக்கு ஆளாய் வெளியேறிவிட்டான். அரசனுக்கு உழைத்தது போதும் இனி ஆண்டவனுக்காகிலும் உழைப்போம் என மெக்கா நோக்கி சுடு மணலில் செல்கின்றான். வழியிலே சிலச் சதிகாரர்களால் கொல்லப்படுகிறான். நன்றிகெட்ட உலகத்தில் நடமாடுவதைவிட இறப்பதே மேலென அந்த இஸ்லாத்தின் புனித மண் என்று சொல்லப்படுகிற மெக்கா மண்ணில் தனது குறுதியைக் கொட்டிக் கண்களை மூடிவிட்டான். அக்பர் யார் யாருக்கோ எதை எதையோ செய்திருப்பான். ஆனால் அவன் பைராம்கானிடம் நடந்துகொண்ட முறை மிக மிக நன்றி கெட்டது என்றே சரிதம் பேசுகிறது.

ஷாஜஹான்- ஜகாங்கீர்

அக்பருக்குப் பிறகு வந்த ஷாஜஹானும் ஜகாங்கிரும் அக்பரை அறைகுறையாகப் பின்பற்றினார்கள். ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டவைதான் டெல்லியிலிருக்கும் செங்கோட்டை, ஜும்மா மஜீத், தாஜ்மகால், கோஹிதூர், கோஹினுர் என்ற இரண்டு விலையுயர்ந்த கற்களைக் கண்களாக வைத்து செய்யப்பட்ட மைலாசனம். ஆனால் இவர்களும் இந்து கோயில்களை உடைக்கத் தவரவில்லை, ஷாஜஹானின் நான்கு மக்களிலே ஒருவரான ஒளரங்கசீப் தக்காணத்தில் கவர்னராக நியமிக்கப்பட்டான். இவர்கள், இந்தியாவில் ஆட்சியை நிறுவுவதைவிட மதத்தை எப்படியாகிலும் நுழைத்துவிட வேண்டும் என்ற காரணத்தால்தான் இந்துமதச் சின்னங்களை அழிப்பதன் மூலம் இந்து மதம் அழிந்துவிடக் கூடும் என எண்ணினார்கள்.

ஒளரங்கசீப்

தக்காணத்தில் இவன் கவர்னராக இருந்தபோதே சிவாஜி தன் வேலயை இவனிடம் காட்டிவைத்தான். இந்து ராஜ்யத்தை முறியடித்து முஸ்லிம் மதத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற மண்டைக்கணம் ஏறிய மன்னன் ஒளரங்கசீப். தந்தையை சிறையில் வைத்து தன் மூன்று தம்பிமார்களை சூழ்ச்சியால் கொலை செய்து பட்டம் சூட்டிக்கொண்டவன் இவன்தான். அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸியா வரியையும் யாத்ரீக வரியையும் மீண்டும் கட்டித்தீரவேண்டுமென்று வற்புறுத்தினான். இதனால் ரஜபுதன களத்தில் ஏற்பட்ட எதிர்ப்பை அடக்க எவ்வளவு முயன்றும் இவனால் அது முடியவில்லை. சீக்கியர்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. சிவாஜியைத் தலைவனாகக் கொண்ட மராட்டிய வீரர்களை முறியடிக்க முடியவில்லை. குமுறி எழுந்த கோபத்தால் சீக்கிய மத குருவை கொலை செய்தவனும் இவன்தான். நெருப்பை வைக்கோல் போர் மூடிக்கொண்டிருக் கின்றது என்பதைப் போல் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிர்ப்பு கிளம்பிவிட்டது. மார்வார் சுதந்திர யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. மேவார் ராணாவின் தலைமையில் எல்லா ரஜபுத்திர வீரர்களும் கடலெனத் திரண்டனர்.

மகாராஜா ஜஸ்வந்த் சிங்கு தலைமையில் புறப்பட்ட படை வெற்றிகரமாகத் தன் எதிர்ப்பைக் காட்டியது. எங்கும் தன்மேல் கிளம்பிய ஆத்திரத்தைக் கண்ட ஒளரங்கசீப் அல்லாவால் கைவிடப்பட்டோமோ என்ற கோபத்தால் பல கோயில்களை இவனும் தன் பங்குக் கேற்ற வண்ணம் அழித்தான். இறுதியில் ஒளரங்கசீப்பின் ஜெனரல் ஜெயசிங்க் என்பவனால் 1664-ல் சிவாஜி, அரசன் ஒளரங்கசீப்பின் அவைக்களம் கொண்டுவரப் படுகிறான். எனினும் சிவாஜி தந்திரமாகத் தப்பித்துக் கொள்கிறான். தப்பியோடிய சிவாஜி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல. இந்திய மானத்தைக் காப்பாற்றி வீரத்துக்கு என்றும் சாகாவரமளிக்கச் சென்றான். அந்த வேகத்தில்தான் தேர்னாபுரந்தர், ராஜகிரி, கல்யாண், என்ற மகத்தான கற்கோட்டைகளைத் தகர்த்தெரிந்த மராட்டியகுல திலகம் சிவாஜி. மொகலாய மன்னர்களின் சிங்கக் கனவாகத் திகழ்ந்தான். மகாராஷ்டிரத்தின் கெளரவ வீரத்தை குன்றின் மேலிட்ட விளக்கென ஏற்றிவைத்த வீரன். வேந்தன் என்றால் வீரன். கோழையுள்ளம் படைத்து குவலயத்தையாளத் திட்டமிடும் குறைமதியோனல்ல என்பதை வட இந்திய வரலாற்றிலேயே வாள் முனையால் எழுதிக் காட்டிய வீரன் சிவாஜி.

மங்கோலிய சாம்ராஜ்யத்தை நிறுவிய செங்கிஸ்கான் கால முதல் இப்பாரில் எம்மை அசைப்போர் யாருமில்லை என்று எக்காளமிட்ட இஸ்லாத்தின் முன்னே, குதிரை விரன் சிவாஜி தோன்றினான். பானிப்பட்டில் இஸ்லாமிய வீரன் பாபர் பீரங்கியின் முன் நின்று வாழ்க இஸ்லாம்" என்று முழக்கமிட்டானே அந்த முழக்கத்திற்கு ஒரு எதிர் முழக்கம், விந்தியத்துக்கு வடக்கே இந்து கோவில் களையெல்லாம் உடைத்து இடிந்துபோன அக்கோவில்களின் கற்களைக்கொண்டு மசூதிகள் எழும்பியபோது முகலாயப் படை எழுப்பிய முழக்கத்திற்கு எதிரே, மறு முழக்கம் இப்போது கேட்கத் தொடங்கியது. நான் மட்டும் உண்டாக்கியதல்ல இந்த மாபெரும் சாம்ராஜ்யம், பாபரின் படைவன்மையால், ஹூமாயூனின் கூர் மதியால், அக்பரின் அன்பால், ஷாஜஹானின் மயிலாசனத்தின் ஒளியால், தோன்றிய சாம்ராஜ்யம் இது, என்று கம்பீர ஒலி எழுப்பினான் ஒளரங்கசீப்.

பாபரின் படை வன்மையால் தோன்றியதுதான், பாபரின் படை வன்மையைவிட சிவாஜியின் வாள் மட்டுமே, வன்மைபெற்று விளங்கியது. ஹூமாயூனின் கூர்மதியைவிட சிவாஜியின் தளகர்த்தர்கள் மதியூகம் படைத்தவர்கள், அக்பரின் அன்புள்ளம், இந்துக்களுக்கு அளித்த மன அமைதியைவிட, சிவாஜியின் புன்னகை இந்துக்கள் மனதிலே மனமாற்றம் ஏற்படச் செய்துவிட்டது. ஒளரங்கசீப் மாபெரும் தளகர்த்தன் என்றாலும், அவன் உள்ளம் நிரம்பி வழிந்த மதவெறி அவன் வாளின் கூர் முனையை மழுங்கச் செய்துவிட்டது. தக்காணத்திலே கலகம். அடக்க முடியவில்லை. வட மேற்கு எல்லையில் எதிர்ப்பு உருவாகியது. அதைச் சமாளிக்க முடியவில்லை. வங்கத்திலே மொகலாயப் படையை வஞ்சம் தீர்க்க, புதிய படை ஒன்று தயாரா கிறது. ஆனால் அதை அடக்க ஒளரங்கசீப்பின் படை வலிவை இழந்துவிட்டது.

இருநூறு ஆண்டுகளாக இந்திய மண்ணிலே வாழ்ந்த மொகலாயர்களின் வீரம் மறைந்துபோயிற்று. காபூல் களத்திலே அவர்கள் காட்டிய வீரம், கஜினியின் பின்னே அணிவகுத்து நின்ற போர் படையின் தீரம் செங்கிஸ்கானின் விழி அசைத்தால் இந்த உலகையே வென்று வருகிறோம் என்று மார் தட்டிய மொகலாயப் படையின் தைர்யம் எங்கே ? எங்கே? என்று கேட்டான் ஒளரங்சீப். இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒளரங்கசீப்பின் பின் நின்ற படை வீரர்கள் முகத்திலே ஒளியில்லை. தலை முறை தலை முறையாக போரிட்டு அவர்கள் முகத்திலே சோகம் ததும்பியது. பல யுத்தங்களைக் கண்டவர்கள், பரம்பரைப் போர் வீரர்கள், மாற்றானின் படைக்கு அஞ்சித் தோற்றோடாத மக்களின் சந்ததியார்கள்தான். இப்போது வலிமை இழந்து நிற்கிறார்கள். மத போதை இவர்கள் உடலிலே தோன்றிய வீரத்தின் சாரத்தை உறிஞ்சிவிட்டது. ஓயாமல் போர் போர் என்று போரிட்ட அவர்கள் கைகள் பலம் குன்றி விட்டன. இப்படிப்பட்ட படையை வைத்துக்கொண்டு தான் ஒளரங்கசீப் சிவாஜியின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என்று கனவுகண்டான்.

சிவாஜியின் கையில் என்று வாள் மின்னியதோ அன்றே தனது, சாம்ராஜ்யம் இடியத் தொடங்கியது என்பது ஒளரங்கசீப்புக்குத் தெரியாது. ஜெஸியா வரியைக் கொடுக்கவேண்டும் என்று என்றைக்கு உத்திரவிட்டு இந்துக்களின் தீராப் பகையை தேடிக்கொண்டானோ, என்றைக்கு தன்னால் கொலை செய்யப்பட்ட சீக்கிய மத குருவின் உடலில் சொட்டிய இரத்தத்தைப் பார்த்து கேலிச் சிரிப்பினால் தங்கள் அகங்காரத்தை சீக்கியர்களுக்கு அறிவித்தானோ, அன்றைக்கே முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி அத்தியாயத்தை ஒளரங்கசீப் எழுத ஆரம்பித்துவிட்டான் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லிவிட்டனர். இந்துக்கள் கல்லை வணங்கும் கயவர் கூட்டத்தினர். அவர்களிடம் எப்படி வீரம் உருவாகும் என்று இறுமாந்திருந்தான். சிவாஜியின் தன்மையில் இந்திய வீரம் ஒளரங்கசீப் கண்டு வியக்குமாறு உருப்பெற்றது. குருவைக் கொலை செய்தவன் குவலயத்தை ஆளும் மன்னன் என்றாலும் அவன் கொட்டத்தை அடக்க வேண்டும். நமது குருதேவர் மடிந்த இடம் மறையு முன்பே அவரைக் கொலை செய்தவனின் உருவமும் மறைய வேண்டும் என்று சீக்கியர்கள் முடிவு செய்தனர். “ போர்க் களத்தில் உயிரைக் கொடுப் பேன், ஆனால் உன்மத்தனே, உன் படையில் சேர மாட்டேன் ” என்று ராஜபுத்திரன் சொல்லிவிட்டான்.

மாவீரன் என்று சரித்திர வல்லுணர்கள் புகழும் ஒளரங்கசீப் தன்னைச் சுற்றிலும் புற்றீசல் போல், கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு மனம் கலங்கினான். படைத் தளபதி தான். சூழ்ச்சியின் சிகரம் போன்றது தான் இராஜ தந்திரம் நிரம்பிய அவன் உள்ளம். இமய முதல் விந்தியம் வரையில் அவன் கொடி பறந்தது உண்மை தான். ஆனால் அவன் உள்ளத்திலிருந்து கிளம்பிய மதவெறி என்னும் கோரப் புயல், மொகலாய சாம்ராஜ்யத்தின் எல்லையில் கம்பீரமாய் பறந்து கொண்டிருந்த பிறைக் கொடியைச் சாய்த்து விட்டது. எவ்வளவோ முயன்றும், வீழ்ந்து விட்ட கொடி மரத்தை ஒளரங்கசீப்பின் படையால் மீண்டும் நிமிர்த்த முடியவில்லை. முகமது பின் காசிம் காலத்தில் கேட்கத் தொடங்கிய அரபியக் குதிரைகளின் குளம்பொலி, இந்திய மண்ணில் ஒளரங்கசீப்பின் காலத்தில் கேட்கவில்லை.

" தக்காணத்திலே வெற்றி, மேவார் ராணாவைக் காணோம். நமது படைகளுக்கு அஞ்சி ஓடி ஒளிந்து விட்டான் போல் தோன்றுகிறது. புரந்தர் கோட்டையைப் பிடித்து விட்டோம், சித்தூர் தரை மட்டமாகி விட்டது. வங்கத்திலே கலகம் செய்தவர்கள் தலைநேற்று மாலை தரையில் உருண்டோடி விட்டது. மன்னர்பிரானே இனி நம்மை அசைப்போர் இந்திய மண்ணில் யாருமே கிடையாது" என்று சொல்லிய ஒளரங்கசீப்பின் மந்திரிகள், ”மகாப்பிரபோ, நான் என் சொல்வேன். அமிர்தசரஸில் சீக்கியர்கள் கூடி நமது படையை அழிக்க சபதம் செய்கிறார்களாம். குருதேவர் மரணத்திற்குப் பழி வாங்க போகிறார்களாம்” நாம் உடனே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் இல்லையேல், அவர்கள் தொல்லை அடக்க முடியாதபடி வளரலாம்.

ராஜபுதனம் சென்ற நமது படை திரும்பிவிட்டது. பாலைவனத்தைக் கடந்து சென்ற நமது வீரர்கள் இந்துக்களின் எதிர்ப்பைக் கண்டதும் ஓடி வந்து விட்டனர். வேறுபடையை அனுப்பட்டுமா ? என்ன செய்ய வேண்டுமென்று மன்னர் தான் சொல்ல வேண்டும்.

சிவாஜி டில்லி மீது படையெடுக்கப் போகிறானாம், பாதுஷாவுக்கு இதை சொல்ல வேண்டுமென்று ஒற்றர்களிடமிருந்து செய்தி வந்திருக்கிறது."

இப்படிச் சொன்னார்கள் மந்திரிகள்.

தன் மந்திரிகள் ஊதிய அபாயச் சங்கைக் கேட்டு திகைத்துப் போனான் ஒளரங்கசீப். என்ன செய்வது என்று யோசிப்பவன்போல் தன் எதிரே அமர்ந்திருந்தோரை நோக்கினன். இந்துக்கள் எவரும் காணப்படவில்லை. அரேபிய நாட்டு ராஜ தர்பார்போல் காட்சி யளித்த, தனது சபையின் தோற்றம் ஒளரங்கசீபின் எஃகு உள்ளத்தில் அவநம்பிக்கையை உண்டாக்கியது. அக்பர் கால முதல் இந்துக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை நிறுத்தியதால், பாதுஷாவின் தாராள உள்ளத்திடம் எந்த இந்துவும் நம்பிக்கை வைத்து டில்லி நோக்கி வரவேயில்லை.

எதிர்ப்பு தோன்றிய இடங்களிலெல்லாம் ஒளரங்கசீப் தானே படைகளே நடத்திச் சென்றான், பயன் இல்லை. மொகலாய சாம்ராஜ்யம் சரிந்துவிட்டது. மீண்டும் யாராலும், எப்படி முயன்றாலும் தலை நிமிர முடியாது. சரிந்து விட்டது. பாபர் தன் மகன் ஹுமாயூனிடம் சொல்லிய சொற்களை, அக்பர் பின்பற்றினான். அமர் கோட்டை காட்டில் பிறந்த அக்பரின் அன்புச் சொற்களே மொகலாய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்குப் போதுமானது. ஒளரங்கசீப்பின் வாள் வலிமை, தோள் பலம், படைகளின் எண்ணிக்கை ஆகிய அனைத்தாலும், ஒரு சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

மொகலாய சாம்ராஜ்யம் சரிந்த சாம்ராஜ்யங்களில் ஒன்றாகிவிட்டது. இந்தியாவின் போர்க்களத்திலே பீரங்கி வண்டியை இழுத்து வந்த சாம்ராஜ்யம், தீனே இலாஹி என்ற புதியதோர் தத்துவத்தையும், சீக்கிய மதத்தையும், ஆரிய வர்த்தத்துக்கு அளித்த சாம்ராஜ்யம், அழகு என்ற சொல்லுக்கு இலக்காய், உலக அதிசயங்களில் ஒன்றாய் விளங்கும் தாஜ்மஹாலைக்கொண்ட சாம்ராஜ்யம், பெரு வைரமாம் கோஹினூரை நாதர்ஷாவுக்குச் சொந்தமாக்கிய சாம்ராஜ்யம், மொகலாய கலாச்சாரம் என்ற புதியதோர் கலாச்சாரத்தை இந்திய மண்ணில் தோற்றுவித்த சாம்ராஜ்யம், சரிந்துபோய் விட்டது. சரித்திரம் என்ற கடல் தன் அலைகளில் ஒன்றாக மொகலாய சாம்ராஜ்யத்தையும் சேர்த்து அணைத்துக் கொண்டது. " இந்தியாவில் இடைக்காலத்தில் தோன்றிய மாபெரும் சாம்ராஜ்யம் ஒன்று மறைந்து போய்விட்டது." என்று சரிதப் பேராசிரியர்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டனர். ”இந்திய உபகண்டத்தில் இமய முதல் குமரிவரை என்றுமே, எக்காலத்திலுமே, ஒரு சாம்ராஜ்யம் தோன்ற முடியாது என்ற அழியாத உண்மையை டில்லியின் கோட்டைப் படிகளில் ஒலிக்குமாறு செய்துவிட்டது மொகலாயர்களின் தோல்வி” என்று உண்மை உள்ளம் கொண்டோர் பேசித் தீர்த்தனர்.

மொகலாயர்கள், மட்டுமல்ல மகம்மதியர்கள் மட்டுமல்ல, அரேபியர்மட்டுமல்ல, எத்தனையோ இனத்தவர்கள் ஆரியா வர்த்தத்தில் ஆதிக்கம் செலுத்த எண்ணி தோல்வியுற்றனர். மத்திய ஆசிய ஸ்டெப்ஸ் புல் வெளியில் வாழ்ந்த இனம், திராவிடர்களை, அவர்கள் கலாச்சாரத்தை அழித்து சாம்ராஜ்யம் தோற்றுவிக்க எண்ணியது. சூழ்ச்சியின் பிறப்பிடம், மாமுனிவன் சாணக்கியன் தன் கண்ணோட்டத்தை கங்கைச் சம வெளியிலே செலுத்தினான். தோல்வி கண்டான். அன்பு, அகிம்சை என்ற இரு பெரும் ஆயுதங்களைக்கொண்டு இந்திய உபகண்டத்தின் எல்லைக்குள் சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவ எண்ணினான், அசோகன். தோல்வியுற்றான். கனிஷ்கனால் முடியாததை, தான் சாதிக்கலாம் என்று மனப்பால் குடித்தான் சந்திரகுப்தன் அவன் சந்ததியார் தோல்வி முரசு கொட்டினர்கள்.

கஜினி படையெடுத்தான். கொள்ளைக்காரன் என்ற அடைமொழிக்கு இலக்கானான். கோரி போர் முரசு கொட்டினான். பயன் ஏற்பட்டது. நீடித்தது. ஆனால் நிலையுள்ள சாம்ராஜ்யத்துக்கு வழி செய்யவில்லை.
முடிவு

இப்படித் தோன்றி மறைந்த பல சாம்ராஜ்யங்கள் இந்திய மண்ணில் ஒவ்வொன்றும் தன் சக்திக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்திருக்கின்றன. காலவெள்ளம் அவற்றில் பலவற்றை மூழ்கடித்துவிட்டது. காலவெள்ளத்தின் வேகத்தைப் பொருட்படுத்தாது பல நினைவுச் சின்னங்கள், இடிந்துபோன கோட்டைகளாக, அழிக்க முடியாத அரண்மனைகளாக. மாற்றி எழுத இயலாத இலக்கியங்களாக, இன்றும் நம்மிடையே இருக்கின்றன. அந்தச் சின்னங்கள் சொல்லும் சோகக் கதைகள் அநேகம். ஏகாதிபத்தியத்தை உருவாக்கவேண்டும், ஆதிக்கம் செலுத்தவேண்டும். மக்களை அடிமைகொள்ள வேண்டும், ஆட்சியின்மூலம், தன் புகழை நிலைநாட்ட வேண்டுமென்று எண்ணுவோருக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தோன்றி மறைந்த சாம்ராஜ்யங்கள் உலகிற்கு நல்ல படிப்பினையைத் தந்துள்ளன. உலகிலே எண்ணற்ற சாம்ராஜ்யங்கள், சரித்திரத்திலே இடம் பெற்றவை, சரித எடுகளில் இடம் பெறாதவை, புகழ் பெற்றவை, புகழ் எணியின் முதற் படியில் கால்வைத்து தடுமாறி மாற்றாரின் எதிர்ப்பால் மறைந்துபோன சாம்ராஜ்யங்கள், வாள்முனை அமைத்துத் தந்த சாம்ராஜ்யங்கள், வேல்விழியாள் தயவில் தோன்றிய சாம்ராஜ்யங்கள், படைபலம் ஒன்றின் துணையால் மட்டும் தோன்றிய சாம்ராஜ்யங்கள், கொந்தளிக்கும் அரசியல் சூழ்நிலையில், சந்தர்ப்பவாதிகள் ஏற்படுத்திய அரசுகள், மகா வீரர்களின் மறைவால் தலை நீட்டிய தனியரசுகள், ஆகிய எண்ணற்ற அரசுகள் தோன்றியிருக்கின்றன. ஜுலியஸ் சீசர் தன் போர்த் திறமையால் தோற்று வித்த சாம்ராஜ்யம் அவன் உடல் மறைந்த அன்றே மறைந்துவிட்டது. கிரேக்கத்தில் ஒப்பற்ற நாகரீகம் ஒன்றை உருவாக்கி, உலக இலக்கியத்திலே ஒரு சில பகுதிகளில் அடைக்கலம் புகுந்துவிட்டதும் ஒரு சாம்ராஜ்யம் தான். லூயி மன்னர்கள் பிரான்சிலே, பரம்பரை பாத்தியத்தில் கட்டுவித்த சாம்ராஜ்யம் பாஸ்டில் சிறையிலே அடைக்கலம் புகுந்துவிட்டது. எகிப்தில், நைல் நதியின் ஓரத்தில், பாலை நிலத்தின் விளிம்பில் தோன்றிய சாம்ராஜ்யம் பிரமிட் கோபுரங்களில் குடிபுகுந்துவிட்டது மண் ஆசை பிடித்து உலகைத் தன் கைக்குள் கொண்டு வரவேண்டுமென்று படை திரட்டி இப்பாரைப் பவனி வந்த அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யம் பாபிலோன் நகரில் தன் கடைசி கட்டத்தை அடைந்துவிட்டது.

அதே போலத்தான் இந்தியாவில் தோன்றிய சாம்ராஜ்யங்களும் மறைந்துவிட்டன. ஆனால் இந்த மண்ணில் தோன்றி மறைந்த அரசுகளுக்கும், இமய மலைக்கு அப்பால், மேல் நாடுகளில் தோன்றி மறைந்த சாம்ராஜ்யங்களுக்கும் மாறுபாடுகள் உண்டு, இங்கே மதவெறியால் சாம்ராஜ்யம் தோன்றியது. மற்ற இடங்களில், மதவெறியால் சாம்ராஜ்யங்கள் அவ்வளவு அதிகமாகத் தோன்றியது இல்லை, ஆரியம் இங்கே அரசு அமைத்திருக்கிறது. இஸ்லாம் இங்கே அரசோச்சியிருக்கிறது. அன்பு அரியாசன மேறியிருக்கிறது. ஆனால் எந்த சாம்ராஜ்யமானாலும் அழிந்து போகும் தன்மை கொண்டது. மக்கள் பாலத்தின் மீது கட்டப்படாத சாம்ராஜ்யங்கள் தரை மட்டமாகிவிடும். ஆரியர்கள், புதியமொழியைக் கொண்டுவந்தார்கள், வேதத்தை உருவாக்கினர்கள், உபநிஷத்துகளை எழுதினார்கள், காவியங்களை இயற்றினார்கள், படை பலம் தவிர அனைத்தும் அவர்களிடம் இருந்தன. திராவிடர்களின் மகோன்னத வாழ்வைச் சிதைத்தனர். திராவிட நாகரீகத்துக்கு வழியனுப்பினர்கள், ஏன் இந்த நாட்டிற்கே, புதுப் பெயர் ஒன்றைத் தந்தார்கள், ஆனால் அவர்கள் இந்த நாட்டில் வாழத்தான் முடிந்தது. ஆதிக்கம் செலுத்தினர்கள். எந்த இனம் ஆட்சி செய்தாலும், ஷத்திரியன் செங்கோலேந்தியிருந்தாலும், சந்திர குலத்தவன், குவலயத்தின் அதிபதியாக பட்ட மேற்றாலும், சூரிய குலத்தவன், சிங்காதன மேறினாலும், ஆரியர்கள், தங்கள் இனத்துக்கும், வருங்கால சந்ததிக்கும் அழியாத வாழ்வைத்தான் தேடிக்கொண்டார்கள். அழிக்கமுடியாத சாம்ராஜ்யம் ஒன்றை ஏற்படுத்த இயலாது தோல்வியுற்றனர்.

அன்பின் வழி வந்தவன்தான், கலிங்கத்துப்போரின் கோர முடிவைக் கண்டு மனம் கலங்கியவன் தான், சீனத்துப் பேராசிரியன் சொல்வழியில் சென்றவன் தான், கேரள நாட்டானின் அன்பையும், சோழனின் பாராட்டுதலையும், பாண்டியனின் நட்பையும் பெற்றவன்தான், சிங்களம் நோக்கி தன் தங்கையை அனுப்பியவன்தான், எகிப்து நாட்டிற்கு தன் அன்பின் அறிகுறியாய் தூது கோஷ்டி அனுப்பினவன்தான். தன் வாழ்வுதான் மக்களின் வாழ்வு என்று சொன்னதுமாத்திரமன்னியில் கல்லிலே எழுதியும் வைத்தான், எனக்கென்று தனியாக வாழ்வு ஒன்று கிடையாது, அரண்மனையில் எனக்கு ஆனந்தம் இல்லை, குடி மக்களின் புன்னகை தான் எனக்கு வாழ்வென்றான் அசோகன், சாணக்கியன் எழுதித்தந்த அர்த்த சாஸ்திரத்தை காலை முதல் மாலை வரையில் தன் அருகே வைத்துக் கொண்டு ஆட்சி செய்தான் அசோகன். ஆனால் அவனது ஆட்சி ஏன் அவன் காலத்துடனே அழிந்து போய் விட்டது என்று இன்றும் நாளையும், சரித்திரப் புலவர்கள் உலகைப் பார்த்து கேட்ட வண்ணமிருக்கின்றனர்.

அஸ்வமேத யாகம் செய்தான். அஸ்வமேதக் குதிரையின் குளம்பொலியைக் கேட்டு ஆர்ப்பரித்தான். மூவேந்தர்களை முறியடிப்பேன் என்று முழங்கினான். இராமேஸ்வரம் வரையில் தன் படைகளை அனுப்பினான். இந்தியாவை என் படை வலம் வந்துவிட்டது என்று எக்காளமிட்டான் சந்திரகுப்தன். அவன் தோற்று வித்த சாம்ராஜ்யத்தை அழித்தது யார்? மதவெறியா? மாற்றானின் படையெடுப்பா? என்று சரித்திர ஏடுகள் நம்மைப் பார்த்து இன்றைக்கும் கேட்டவண்ணமிருக்கின்றன.

கணவாய் வழியே உள்ளே நுழைந்தார்கள். காலாட் படை, தேற்சி பெற்ற குதிரைப்பட்டாளம், போர் களத்திலே பயிற்சி பெற்ற படைவீரர்கள். அனைத்தும் இஸ்லாமிய மன்னர்களிடையே இருந்தன. போரிலே வெற்றி பெற்றார்கள். புனிதவான்கள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தினார்கள். புதிய கொள்கை ஒன்றை நிலை நாட்டினார்கள். செல்வத்தைச் சேமித்தார்கள். சில நேரங்களில் நல்ல ஆட்சியை ஏற்படுத்தினார்கள். ராஜபுத்திரனின் அன்பையும், அவன் வாள் திறனையும் இவர்கள் இனத்தின் வீரத்தையும் துணையாகப் பெற்றார்கள். மாற்றானின் படையெடுப்பினின்று தப்பினார்கள் மொகலாயர்கள். அவர்கள் தோற்றுவித்த சாம்ராஜ்யம் அழிந்து போனது ஏன் என்று டில்லி செங்கோட்டையின் முன் நின்று தாஜ்மஹாலின் வாயிலின் நின்று இன்றைக்கும் சரித்திர மாணவர்கள் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர்.

மாவீரன் என்று பெயர் பெற்றான், மகாராஷ்டிரம் என்ற பெயரை சாம்ராஜ்யங்களில் வரிசையில் சேர்த்தான். யாராலும் எதிர்க்க முடியாதவன், எதிர்ப்புக்கே அஞ்சாதவன் என்று பெயர் பெற்ற ஔரங்கசீப்பை ஆட்டிப் படைத்தான். அழிந்தே போய்விட்டது அழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லப்பட்ட இந்து மதத்தை மீண்டும் தலை நிமிரச் செய்தான். யாராலும் வெல்லமுடியாத கோட்டைகளை வென்றான் சிவாஜி. ஆனால் அவன் கட்டிக்காத்த சாம்ராஜ்யம் ஏன் அழிந்து போயிற்று என்ற கேள்விக்குறியுடன் மகாராஷ்டிர மண்டலத்தில் இடிந்தும் இடியாமலும் காட்சியளிக்கும் வீரசிவாஜியின் கோட்டைகள் நம் முன்னே காட்சியளிக்கின்றன.

இப்படிக் காட்சியளிக்கும் சரிந்த சாம்ராஜ்யங்களின் சின்னங்களைப் பார்த்து நாமும் கேட்கிறோம் என் இவைகள் அழிந்துபோயின. யார் இவைகளின் அழிவுக்கு காரணம்? எந்த சக்தி இவைகளை சரிந்து போகச் செய்தது. என்ற சந்தேக வினாவைக் கேட்ட வண்ணமிருக்கின்றனர். கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் மாறுபட்ட சாம்ராஜ்யங்கள், மக்கள் அன்பைப் பெற்றாலும், மாற்றானின் நட்பில்லாத சாம்ராஜ்யங்கள், மன்னன் வலிமையின் தோழன் என்றாலும், பூகோள விதிமுறைக்கு அப்பாற்பட்ட சாம்ராஜ்யங்கள் தோன்றவே முடியாது என்ற அழியாத உண்மைக்கு இந்திய மண்ணில் தோன்றி மறைந்த சாம்ராஜ்யங்கள் சான்றுகளா என்ற தத்துவத்தை உலகம் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சரிந்த_சாம்ராஜ்யங்கள்&oldid=1524865" இலிருந்து மீள்விக்கப்பட்டது