உள்ளடக்கத்துக்குச் செல்

சான்றோர் தமிழ்/1

விக்கிமூலம் இலிருந்து
1. தமிழ்ச் சுவடிகள் தந்த
தமிழ்த் தாத்தா

மிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை வாய்ந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் உத்தமதானபுரம் என்னும் சிற்றுாரில் சாமிநாத ஐயர் பிறந்தார். உத்தமதான புரத்தைப் பற்றிச் சாமிநாத ஐயர் கூறும் சொற்கள் வருமாறு:

‘என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான்
என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக்
காலத்தில் உள்ள பல செளகரியமான அமைப்புக்கள்
அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை;
கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை;
ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும் அழகு
இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடததில்
திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்

தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மி கரம் விளங்கியது.’

(என் சரித்திரம். பக்கம் : 4)

என்று கூறியுள்ளார்.

இளமையும் கல்வியும்

உத்தமதானபுரம் இரண்டே தெருக்களைக் கொண்ட சிற்றூராகும். அவ்வூரில் 19-2-1855ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் அவர்கள் சங்கீத வித்துவானான வேங்கடசுப்ப ஐயருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் முதல் மகனாகத் தோன்றினார். இளமையில் அவர் பெற்றோர் வறுமையில் பெரிதும் துன்புற்றிருந்தனர். ஏறத்தாழ ஆண்டுக்கு 50 ரூபாய் தான் அவர்களுக்கு வருமானமாக வந்தது. உடையார் பாளையம் அரண்மனையின் ஜமீன்தார் ஆதரவு ஓரளவு இக்குடும்ப வாழ்க்கையை நடத்திவரத் துணை செய்தது. சாமிநாதன் என்று குழந்தைக்குப் பெயரிட்டுச் செல்லமாக ‘சாமா’ என்று அழைத்து வந்தனர். வேங்கடராமன் என்ற பெயர் சாமிநாத ஐயருக்கு வழங்கி வந்தது. காரணம் திருப்பதி வேங்கடாசலபதி அவர்களுடைய குலதெய்வம். தந்தையார் வேங்கடசுப்ப ஐயர் சங்கீத வித்துவானான காரணத்தினால் ஆங்காங்கு சங்கீதத்தோடு கூடிய கதா காலட்சேபம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதன் காரணமாக ஊர்விட்டு ஊர் சென்று பிழைக்கும் வாழ்வே அவருக்கு அமைந்தது. வருங்காலத்தில் தம்முடைய மகனும் ஒரு சங்கீத வித்துவானாக வரவேண்டுமென்றே எண்ணினார். ஆனால் சாமிநாத ஐயருக்குச் சங்கீதமும் சமஸ்கிருதமும் அவ்வளவாக வரவில்லை. தமிழே அவர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவர் உள்ளத்தில் நிலையாகக் குடிகொண்டிருந்தது. சாமிநாத ஐயர் முதன் முதலாக அரியலூர் சடகோப ஐயங்கார் என்பவரிடத்தில் தமிழ் பயின்றார். சாமிநாத ஐயரே,

‘தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும்
வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பி
னேன். சடகோபையங்காரிடம் என்று நான்
மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த்
தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன்.
எனக்குத் தமிழில் சுவை உண்டாகும்வண்ணம்
கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே.’

(என் சரித்திரம்; பக்கம் : 103)

என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் என்பவரிடத்தில் தமிழ்க் கல்வி கற்றார். சாமிநாதருக்குத் தமிழில் இருந்த பேரார்வத்தை அறிந்து தமிழ்ப் புல்வர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று தங்கி இவர் கல்வி கற்கும் வசதிகளை இவர் தந்தையார் விரும்பிச் செய்தார். இவ்வாறு கல்வி கற்றுவருங்கால், ஆசிரியருக்குச் சன்மானமாகத் தருவதற்குச் சாமிநாத ஐயரிடம் பணம் இல்லை என்பதோடு, ஆசிரியரோடு தங்கிப் படிக்கும்போது சாப்பிடுவதற்கு வசதியும் இல்லை. ஆதலால் தாம் எந்த ஆசிரியரிடத்தில் தங்கிக் கற்றாரோ அங்கேயே இலவசமாக உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார். இவர் தமிழில் காட்டிய ஆர்வத்தையும் அறிவையும் பாராட்டி ஆசிரியர்கள் இவருக்குத் தாமாகவே விரும்பிக் கல்வி கற்பித்ததோடு, உணவுக்கு வேண்டிய வசதிக்கும் ஏற்பாடு தந்து செய்தார்கள். காலை 5 மணிக்கே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கற்கின்ற மரபு இவரிடம் வளர்ந்திருந்தது. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மட்டும் ஆசிரியருக்கு மாதம் நான்கு அணா சம்பளம் கொடுத்துப் படிக்கத் தொடங்கிய சாமிநாத ஐயர் தம் வாழ்நாளின் இறுதிவரையில் அந்தப் படிப்பையே தொழிலாக நெஞ்சில் நிலையாக நிறுத்தியிருந்தார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு நூலையும் எளிய விலைகொடுத்தும் வாங்க முடியாத நிலையில் சாமிநாத ஐயர் இருந்தார். புலவர்களை அண்டி அவர்களிடமிருந்து ஒரு சிறிய நூலையும் அன்பளிப்பாகப் பெற்றாலும் அதற்காக அருநிதி-புதையல் கிடைத்தவர்போல் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இவரே பிற்காலத்தில் எண்ணற்ற நூல்களைச் சுவடியிலிருந்து எடுத்து அருமையாகப் பதிப்பித்துத் தமிழ் உலகுக்குத் தந்து உதவியவர் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களிடம் பயின்றது

1880ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் மாயூரம் சென்றார். அங்கே அப்போது திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக இருந்த தமிழ்நாட்டின் பல திசைகளிலிருந்தும் பாடம் சொல்லிக் கொள்ளவந்த மாணாக்கர் பலருக்கும், சில பல ஆதினங்களைச் சார்ந்த குட்டித் தம்பிரான்களுக்கும் பாடம் சொல்லித் தந்த-மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள். அவர்களை அண்டிச் சாமிநாத ஐயர் பல நூல்களைக் கற்றார். இதற்கு இடையே 1869ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்ததனையும் குறிப்பிடவேண்டும். திருமணம் ஆனாலும் உடனடியாக இல்லறவாழ்க்கையில் சாமிநாத ஐயர் பற்றுக் கொள்ளாமல் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலால் உந்தப்பட்டு மாயூரம் வந்து சேர்ந்தார்.

‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லோருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’

(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)

என்று சாமிநாத ஐயரே இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மாயூரம் சென்றதும் தம் அனுபவத்தை ஐயரவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்.

‘தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு, எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.’

(என் சரித்திரம்; பக்கம்; 187)

என்று குறிப்பிட்டுள்ளார்,

மாயூரம் சென்ற சாமிநாத ஐயர் ஆசிரியரால் சாமிநாத ஐயர் என்று அழைக்கப்பெற்றார். வீட்டில் வேங்கடராமனாகவும், சாமாவாகவும் அழைக்கப் பெற்றவர்

சா—2 ஆசிரியர் அழைத்த காரணத்தால் அன்றிலிருந்து சாமிநாத ஐயர் என்றே அழைக்கப் பெற்று வந்தார். பெற்றோர் வழங்கிய பெயர் நிலைக்காமல் ஆசிரியர் இட்ட பெயரே பின்னர் நிலைத்து விட்டது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றி வந்த நூல்களை எழுதுவதும், அவரிடம் நூல்களைப் பாடங்கேற்பதும், திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக அந்நாளில் விளங்கிவந்த சுப்பிரமணிய தேசிகரோடும், அந்த மடத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் தமிழ்ப் புலவர்களுடனும், வடமொழி வாணரோடும். சங்கீத வித்துவானோடும் நெருங்கிப் பழகி உரையாடுவதும் சாமிநாத ஐயர் அவர்களுடைய அந்நாளைய செயல்களாக விளங்கின.

ஆசிரியர் மறைவும் மாணவர் பரிவும்

1876ஆம் ஆண்டு பிரப்வரித் திங்களில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் காலமானார்கள். ‘19ஆம் நூற்றாண்டின் கம்பன்’ என்று பாராட்டப் பெற்ற பிள்ளை அவர்கள், நாள் ஒன்றுக்கு 300 பாடல்கள் பாடினார் என்பர். இவர் 19 தலபுராணங்களும், 10 பிள்ளைத் தமிழ் நூல்களும், 4 மாலைகளும், 16 அந்தாதிகளும் பாடினார். இவருடைய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பலராலும் பாராட்டப் பெறுவது. இத்தகு கல்விப் புலமை நிறைந்த ஆசிரியர் காலமானதால் சாமிநாத ஐயர் பெரிதும் வருந்தினார். ஆசிரியருடைய கல்விப் பரப்பு. பாடம் சொல்லும் திறம், பண்பு நலம், செய்யுள் இயற்றும் புலமை முதலியவற்றையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிப் சொல்லி மகிழ்ந்தார். எனவே, ஆசிரியர் மறைவுக்குச் பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணியதேசிகரிடம் இவர் பாடம் கேட்டுக் கொண்டே ஆதீனத்துக்கு வந்த மாணாக்கர்களுக்குத் தாம் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார்.

திரு. தியாகராசச் செட்டியார் தொடர்பு

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த திரு. தியாகராசச் செட்டியார் ஆவார். தியாகராசச் செட்டியார் அவர்கள் தம் மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர். பரந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலப் பேராசிரியர்கள் போலவே இவர் அந்தக் காலத்தில் பெருமதிப்புப் பெற்றிருந்தார். அவர் ஒரு நாள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சுப்பிரமணிய தேசிகர் அவர்களின் அனுமதி பெற்றுச் சாமிநாத ஐயர் அவர்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய்த் தாம் பார்த்துவந்த பதவியை அவருக்கு வாங்கிக் கொடுத்தார். 1880ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாமிநாத ஐயர் குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்ற தமிழ்க் கல்வியும், அறிவாற்றலும், பாடம் சொல்லும் திறமையும், சாமிநாத ஐயர் அவர்களைக் குறுகிய காலத்திலேயே மாணவரிடத்திலும் பேராசிரியப் பெருமக்களிடத்திலும் ஒருங்கே நற்புகழ் பெறத் துணை செய்தன.

பதிப்புப் பணி

இக்காலத்தில் கும்பகோணத்தில் மாவட்ட முனிசீபாக இருந்த சேலம் இராமசாமி முதலியார் தொடர்பு சாமிநாத ஐயருக்கு வாய்த்தது. முதலியார் அவர்கள் நிறைந்த தமிழ்ப் பற்றாளர்; புலமை நெஞ்சம் வாய்ந்தவர். எனவே சீவகசிந்தாமணியைச் சாமிநாதஐயரிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். பின் அந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று வேண்டினார். அதுவரை சிந்தாமணி ஒரு சிலருக்கு மட்டுமே ஓலைச்சுவடி வடிவில் காட்சி வழங்கிக் கொண்டிருந்தது. பழம் பெருமை வாய்ந்த-தொன்மை வாய்ந்த-தமிழ் இலக்கியங்கள் பல கடல்கோளாலும், தமிழர் கவனக் குறைவாலும் அழிந்து ஒழிந்தன. இறையனார் களவியல் உரை குறிப்பிடும் பல இயற்றமிழ் நூல்களும், இசைத்தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் பெயர் அளவில் தெரிய வருகின்றனவே அன்றி, அவைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,

‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’

என்று தமிழகத்தின் தென்பகுதி வெள்ளத்தால் அழிந்த செய்தியினைப் புலப்படுத்தியுள்ளார். சாமிநாத ஐயரும் அவர் வாழ்ந்த காலத்தில் மூடபக்தி நிறைந்த பொதுமக்கள் சிவ ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் விட்ட அவல நிலையினைப் பின்வருமாறு சுட்டியுள்ளார்.

‘ஆடி மாதம் 18ஆம் தேதியில் பழஞ் சுவடிகளை எல்லாம் சேர்த்து ஒரு சப்பரத்தில் வைத்து மேள தாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள்.’

(என் சரித்திரம்; பக்கம்: 85)

என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஓலைச்சுவடி விடுவோரிடமிருந்து பெற்றுப் பழம்பெரும் நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய பெருமைக்கு உரியவராகச் சாமிநாத ஐயர் விளங்குகிறார். சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். ஜைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவகசிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு பழந்தமிழகத்தின் வரலாற்றுக் கருவூலமாக விளங்குவது. எனவே பழந்தமிழரின் கொடை வளத்தையும் வாழ்க்கை வளத்தையும் அறிந்து கொள்ளத் தலைப்பட்டார். இவர் தொண்டால் முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் மக்களிடையே பரவத் தொடங்கியது. பெளத்த சமய நூலான மணிமேகலை தமிழரிடையே அறக்கருத்தைப் போதித்தது. பத்துப்பாட்டின் இலக்கியப் பெருந்தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தது. ஐயர் அவர்களின் பெருமையும், அறிவும், பண்பாடும்: பதிப்புத் திறமையும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்றன. பின் ஐயர் அவர்கள் ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் தொகை நூல்களை வெளியிட்டார். கொங்குவேள் என்னும் புலவர் இயற்றிய ‘பெருங்கதை’ என்னும் இடைக்கால இலக்கியம் அச்சுக்கு வந்தது.

இலக்கிய நூல்களைப் பதிப்பித்ததோடு அன்றி இலக்கண நூல்களையும் சாமிநாத ஐயர் நன்கு பதிப்பித்தார். புறப்பொருள் வெண்பா மாலை. நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை முதலான இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.

அடுத்து, சமய இலக்கியங்களையும் இவர் திறமையாகப் பதிப்பித்தார். நம்பி திருவிளையாடல், திருக்காளத்திப் புராணம் முதலியன இவரால் வெளியிடப் பெற்றன. கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ். குறவஞ்சி முதலிய சிறுபிரபந்த நூல்கள் இவரால் உரையுடன் பதிப்பிக்கப் பெற்றன.

பதிப்பின் திறம்

ஏட்டிலிருந்த பாடத்தை இவர் அப்படியே பதிப்பிக்கவில்லை. ‘ஏடு எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. ஆதலால் ஒரு முறைக்குப் பலமுறை நன்கு ஆராய்ந்து செல்லரித்துப் போன இடத்தையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தக்க பாடங்களை ஊகித்துத் தம்பாலுள்ள பயிற்சியாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும் பழஞ்சுவடிகளை ஆராய்ந்து செப்பம் செய்தார். திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழி அமைத்துக் கொண்டு புஞ்சைக் காட்டை நஞ்சைக் காடாக்கிய நல்ல அறிவு உழவர் இவர். இவருடைய பதிப்பின் திறம் இன்று பேராசிரியப் பெருமக்களால் ஒருமுகமாகப் பாராட்டப் பெறுகின்றது. இவர், தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலுக்கும் எழுதியுள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும் நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும், அறிவு உலகத்தால் என்றென்றும் பாராட்டப்படும் தகுதி வாய்ந்தன. இவர் எடுத்துக் கொண்ட உயர்வு மிக்க சிறப்பு, ஊக்கம் நிறைந்த உயர் உழைப்பாகும். எனவே மறைந்த இராஜாஜி அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது;

‘சாமிநாத ஐயர் முயற்சியுடன் எறும்பும் தேனீயும் போட்டி போடலாம்’ என்றும், ‘தமிழ்மொழியின் லாவகமும்’ எளிய நடையில் ஆழ்ந்த பொருள்களை அளிக்கும் அதன் ஆற்றலும் இவரால் நமக்குத் தெரிய வந்தன.’

என்றும், ‘தமிழ் வியாசர்’ என்றும் இவரைப் போற்றியுள்ளார். இவருடைய பதிப்பு நூல்களில் ஒவ்வொரு பக்கங்களின் அடியிலும் அடிக்குறிப்பில் பலவகையான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப் பெற்ற ஒப்புமைப் பகுதிகளும் சொல்லாற்றல் வளமும் காணப்பெறும். நூலின் இறுதியில் நூல் களில் வந்துள்ள பொருள்களின் பெயர் அகராதி (Word–index) இருக்கும். ஆகையால் ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் இவருடைய பதிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன.

உரைநடைப் பணி

தாம் பதிப்பித்த நூல்களின் முன்னுரையில் அந்நூலைப் பற்றிய சிறந்த செய்திகளை-ஆராய்ச்சி நலன்களை அழகுச் செவ்விகளைப் புலப்படுத்த எளிய இனிய உரைநடையினைக் கையாண்ட சாமிநாத ஐயர், விரிந்த அளவில் மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் முதலிய உரைநடை நூல்களை எழுதினார். மேலும் இவர் கோபாலகிருஷ்ண பாரதியார், வைத்தியனாதையர், கனம் கிருஷ்ணய்யர் முதலிய பெரியோர் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். ‘நல்லுரைக் கோவை’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாங்கி நான்கு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ‘நினைவு மஞ்சரி’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை கொண்ட இரு தொகுதிகளாகும். ‘புதியதும் பழையதும்’, ‘கண்டதும் கேட்டதும்’ முதலியன நல்ல தமிழ் நூல்களாகும்.

சென்னை மாற்றம்

1903ஆம் ஆண்டு வரை குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் 1903ஆம் ஆண்டிலிருந்து 1919ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கொலு வீற்றிருந்தார். கல்லூரியில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதோடு அமையாமல் வீட்டிலும் தம்மிடம் பயில வந்த மாணவர்களுக்கு இவர் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் பாடம் கேட்டவர்களில் வியாசபாரதத் தமிழ்மொழி பெயர்ப்பு ஆசிரியர் ஆகிய மகோ மகோபாத்தியாய இராமானுஜாச்சாரியர், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான், துள்ளும் நடையில் நெஞ்சையள்ளும் காவடிச் சிந்து பாடிய சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் முக்கியமானவர்கள் ஆவர். இவரிடம் பயின்று ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்ட பின்னர் நற்றிணையைப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவர். மற்றொருவர் இ. வை. அனந்தராம ஐயர் ஆவர். இவர் கலித்தொகையைப் பதிப்பித்தார்.

அண்ணாமலைப் பணி

1924 முதல் 1927 வரையில் செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்கள் சிதம்பரத்தில் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் தலைவராகப் பணியாற்றினார்.

ஓய்வுக் காலப் பணி

பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி எழுதினார். தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தை இரண்டு பாகங்களில் விரிவாக எழுதி 1933, 1934 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். 

சென்னைப் பல்கலைக் கழகத்தில்
சொற்பொழிவுப் பணி

1927 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில், சங்ககாலம் பற்றிப் பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற பெயரோடு புத்தக வடிவில் வந்திருக்கிறது. இவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க இவர் குறுந்தொகைப் பதிப்பினை வெளியிட்டார். பதிப்பு நூல்களில் குறுந்தொகை நூலை முடிமணியாகக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அந்நூலில் உழைப்பின் உண்மையும், ஆராய்ச்சியின் உயர்வும் ஒருங்கே விளங்கக் காணலாம்.

பட்டமும் பாராட்டும்

அரசாங்கத்தார் இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1906ஆம் ஆண்டில் ‘மகாமகோபத்தியாய’ என்ற பட்டத்தை வழங்கினர். 1917ஆம் ஆண்டு ‘பாரத தர்ம மண்டலத்தார்’ ‘திராவிட வித்யா பூஷ்ணம்’ என்ற பட்டத்தையும், 1925ஆம் ஆண்டில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஆகிய ஸ்ரீசங்கராச்சாரியார், தகதினாத்ய கலாநிதி என்ற பட்டத்தையும் வழங்கினர். சென்னைப் பல்கலைக் கழகம் ‘டாக்டர்’(டி.லிட்.) என்ற கெளரவப்பட்டத்தை 1932ஆம் ஆண்டில் வழங்கியது. பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூற் குழுவிலும் தேர்வுக் குழுவிலும் இவர் பணியாற்றினார்.

இறுதிக் காலம்

1936 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி இவருக்கு 80 ஆண்டுகள் நிறைவு அடைந்ததும், தமிழுலகம் இவருடைய ‘சதாபிடேக’ விழாவைக் கொண்டாடியது. அவருடைய 80ஆம் வயதில் குறுந்தொகைப் பதிப்பும் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், குமரகுருபரர் திரட்டு ஆகிய நூல்களும் வெளிவந்தன. ஐயரவர்கள் தம் வரலாற்றை ரசிகமணி டி.கே சி., கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன் முதலியோர் வேண்டுகோளின்படி ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் 1940 ஜனவரி முதல் எழுதத் தொடங்கித் தொடர்ந்து 122 அத்தியாயங்கள் எழுதி முடித்தார். 1942ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார். அங்கே ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (1942) உலக வாழ்வை நீத்தார். இவர் இறக்கும்போது இவருக்கு வயது 86. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் இவர் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

பண்பு நலன்

ஐயரவர்கள் சிறந்த பண்புள்ளவர். தம்மிடம் பேசுபவர்களுடைய இயல்பு அறிந்து பேசும் இயல்பும், தம்மிடம் தமிழ் படிக்க வரும் மாணாக்கரிடம் நிறைந்த பேரார்வமும் கொண்டவர், மாணவர்களின் தகுதியறிந்து பாடம் சொல்லும் திறமை பெற்றவர். பல அவைகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார்; சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். இவரோடு உரையாடும்போது பழஞ்செய்திகளையும் இலக்கியச் சுவை மலிந்த நூற்பகுதிகளையும் கேட்டு மகிழலாம். இவர் பேச்சில் நகைச்சுவை மிகுதியாக இருக்கும். தெளிவான நடை இவருக்குக் கைவந்த கலை. இவர் கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். தேசியகவி சுப்பிர மணிய பாரதியார் இவரிடம் பெருமதிப்புக் கொண்டு மூன்று பாடல்களை இவர் குறித்துப் பாடியுள்ளார். அவற்றில் நம் நெஞ்சை மகிழ வைக்கும் பாடற்பகுதி வருமாறு :

‘நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தங் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.’

இவருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் கலியாணசுந்தர ஐயர். ஐயர் அவர்கள் சேமித்து வைத்திருந்த சுவடிகளையெல்லாம் அவர் அடையாறு கலாக்ஷேத்திராவிற்கு வழங்கினார். அடையாறு கலாக்ஷேத்திராவில் டாக்டர் சாமிநாத ஐயர் நூல் நிலையம் ஒன்று இப்பொழுது நடை பெற்று வருகிறது.

1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருடைய நூற்றாண்டு விழா தமிழ்நாடு எங்கும் கொண்டாடப் பெற்றது.

இவர்தம் சிறப்பாகக் குறிக்கத்தக்க - நாம் விரும்பிப் போற்றத்தக்க பண்பு - இவருடைய நன்றிமறவா நல்லுள்ளம் ஆகும். தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராசச் செட்டியார் நினைவாக இவருடைய வீட்டின் பெயர் இன்றும் ‘தியாகராச விலாசம்’ என்றே வழங்கப் பெறுகின்றது. திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு, 53ஆம் எண் வீடாக உள்ளது.

முடிவுரை

தமிழ்த் தாத்தா என்று சாமிநாத ஐயரவர்களைத் தமிழ் உலகம் கொண்டாடுகிறது. இவருடைய முயற்சியும், உழைப்பும் தமிழுக்கு அழியாத செல்வங்களைத் தந்தன. செல்லரித்துச் சிதைந்துபோன - கரையான் அரித்துத் திருத்தம் இழந்த நம் பழம்பெரும் இலக்கியங்களையெல்லாம் பேருழைப்பு மேற்கொண்டு திருத்தமாகப் பதிப்பித்து. தமிழர் கைகளில் தவழவைத்த தனிப்பெருமை இவர்களையே சாரும். இவர் தொண்டு என்றும் நிலைத்திருக்கும். இவர்தம் ஊக்கமும், முயற்சியும், தொண்டும் வாழ்வும், நன்றிமறவா நல்லுள்ளமும் என்றும் போற்றற் பாலனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/1&oldid=1017391" இலிருந்து மீள்விக்கப்பட்டது