சான்றோர் தமிழ்/5
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள் பல. இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இத்தகு சீர்மையாளர் தம் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்த் தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறித்து இவண் காண்போம்.
பிறப்பும் வளர்ப்பும்
1878ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சமஸ்தான வித்துவானாக விளங்கிய சதாவ தானம் முத்துசுவாமி ஐயங்கார் அவர்களுக்கு ஒரு மகனாகப் பிறந்தவர். வைணவ குலத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே முத்துசுவாமி ஐயங்கார் இறந்து விட்டதால், அவர்தம் மாணவர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இவரை வளர்த்து வந்தார்.
தொழில்
மு. இராகவையங்கார் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையிலேயே தம் வளர்ப்புத் தந்தை பாண்டித்துரைத் தேவர் அவர்களின் அவைக்களப் புலவர் ஆனார். 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழாசிரியப் பணி புரிந்தார். 1904ஆம் ஆண்டில், பாண்டித்துரைத் தேவர் அவர்களால் 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை இரண்டையும் உடன் அமைத்துத் தொடங்கப் பெற்ற செந்தமிழ் என்ற இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து எட்டாண்டுகள் செந்தமிழ் இதழ் ஆசிரியராகப் பணி புரிந்தார். இக்காலத்தே இவர் தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு அளித்த கொடை அளவிடற்கரியது. 1913 முதல் 1939 வரை ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் ஒருவராக, தலைமைத் தமிழ்ப் பண்டிதராக அமைந்து, தமிழ்ப் பேரகராதி ஒன்று உருப் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரண மாக அரசாங்கத்தார். இவருக்கு ‘இராவ் சாகிப்’ என்னும் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். 1944ஆம் இலயோலாக் கல்லூரியில் பி.ஓ.எல். வகுப்புகள் தொடங்கப் பெற்றபோது, இக்கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பு ஏற்றார். 1945ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் அழகப்ப வள்ளல் அவர்கள் நன்கொடையால் தோற்றம் பெற்ற தமிழ் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் பதவியை முதன் முதலில் அணி செய்த பெருமை இவரையே சாரும். திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் பத்பநாப சுவாமி கோவிலின் அருகில் உள்ள ஒரு வீட்டில் தம் மனையாளுடன் தங்கி இருந்தார். இறை வழிபாட்டில் ஈடுபாடுடைய இவர் திருவிதாங்கூர் மன்னரின் அன்பைப் பெற்றவர். திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக இருந்தபோது இவருக்கு உதவியாளராக இருந்தவர் திரு. கிருஷ்ண ஐயங்கார் அவர்கள் ஆவர். 1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து அக்காப்பியத்திற்கு உரை விளக்கமும், பாடபேத ஆராய்ச்சியும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றினார். பதினெட்டு அகவையில் தமிழ்த் தொண்டாற்றத் தொடங்கிய . இவர் தம் வாழ்நாள் முழுமையும் தமிழுக்காக உழைத்துத் தமிழுக்காக வாழ்ந்து தம் எண்பத்திரண்டாம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
தமிழ்த் தொண்டு
மு. இராகவையங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோக்கும்போது, அவர் வாழ்நாள் முழுமையும் தமிழ்த்தாயை அணி செய்வதிலேயே கழிந்தமை வெள்ளிடை மலையாகிறது. ஏறத்தாழ அறுபத்து நான்கு ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் மு. இராகவையங்கார் அவர்களின் அருஞ்செயல்களை இனிக் காண்போம்.
ஆராய்ச்சி வேந்தர் மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார் அவர்களை ஆராய்ச்சி உலக முன்னோடி என்று அறிஞர்கள் ஏத்துவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இவருடைய கைவண்ணத்தால் உருப் பெற்றன. அவற்றுள் பதினான்கு நூல்கள் ஆராய்ச்சி நூல்கள். இவற்றுள் கால/வரலாற்று ஆராய்ச்சி பற்றியன சில; இலக்கிய ஆராய்ச்சி தொடர்பானவை பல; இலக்கண ஆராய்ச்சி பற்றியன சில.
கால வரலாற்று ஆராய்ச்சி பற்றியன
மு. இராகவையங்கார் அவர்களின் முயற்சியில் வெளி வந்த முதல்நான்கு நூல்களுமே கால / வரலாற்று ஆராய்ச்சிக ளாகவே மலர்ந்துள்ளன. அவை 1. வேளிர் வரலாறு, 2. சேரன் செங்குட்டுவன், 3. ஆழ்வார்கள் காலநிலை, 4. சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்பன.
மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி நூல் நிரலில் முதல் இடம் பெறுவது ‘வேளிர் வரலாறு’ என்பது. இந்நூல் 1905ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் வடிவம் இந்நூல். இந்நூல் ‘செந்தமிழ்’ இதழிலும் வெளி வந்துள்ளது, வேளிர் என்ற சொல் வேளாளர் என்ற தனிப்பட்ட ஓர் இனத்தவரைக் குறிக்கிறது என்று சுட்டி, அவ் வினத்தவரின் வரலாறாக நச்சினார்க்கினியர் கூறிய செய்திகளைப் பிற இலக்கிய சாசனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தி, இவ்வினத்தவர் தமிழகத்தில் குடியேறிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று வரையறை செய்கின்றது.
அடுத்து 1915ல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும்.
1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில் உலா வந்தது ‘ஆழ்வார்கள் கால நிலை’ என்ற நூல். ஈரோட்டு இலக்கியச் சங்கத்தில் எச்.ஏ. பாப்லி துரையின் அழைப்பின் பேரில் ஆற்றிய ஆராய்ச்சி உரையின் வடிவமே இந்நூல்.
சா–6 ஆழ்வார்கள் பாடல்களில் அருகிக் காணப்படும் சில செய்திகளைக் கொண்டு பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கி ஆழ்வார்களின் காலநிலை வரையறுக்கப்படுகின்றது.
அடுத்ததாக 1929ஆம் ஆண்டில் வெளிவந்த சாசனத் தமிழ்க்கவி சரிதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பற்றி ஆற்றிய உரையின் வடிவம். இதில் எண்பதுக்கும் மேற்பட்ட புலவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இலக்கியச் சான்றுகளுடனும், சாசனச் சான்றுகளுடனும் மொழியப்படுகின்றன. சேனாவரையரும் பரிமேலழகரும் சமகாலத்தவர் என்பதை இந்நூலில் இவர் தெளிவுபடுத்துகின்றார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவின் எஞ்சிய பகுதி ‘இலக்கிய சாசன வழக்காறுகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றது. இஃது இவர் மறைவுக்குப்பின் வெளிவந்த நூலாகும்; அரசர், தலைவர் வழக்குகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இது சென்னை அரசாங்கப் புத்தக வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. கல்வெட்டுகளும், இலக்கியங்களும் தமிழிலக்கியக் காலப் பரப்பை ஆராய்வதற்கு உதவி புரிவதை இந்நூல் தெளிவாக்குகிறது. ஆழ்வார் நாயன்மார் பாடல் களில் இடம்பெறும் சொல் வழக்குகள் சாசனங்களில் பயிலு மாற்றை இந்நூல் விளக்கம் செய்கிறது.
இலக்கிய ஆராய்ச்சி
இலக்கிய ஆராய்ச்சியாக மலர்ந்த நூல்கள் பல. 1938ஆம் ஆண்டில் பேராசிரியரின் மணிவிழா நினைவாக ‘ஆராய்ச்சித் தொகுதி’ என்ற நூல் வெளிவந்தது. முப்பத்தைந்து கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் . பலவற்றின் தொகுப்பு நூல் இது. 1947ஆம் ஆண்டில் ‘சேர வேந்தர் செய்யுட் கோவை’ என்ற நூலின் முதற் பகுதி வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இந்நூல் வெளிவந்தது. இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் ஆராய்ச்சி நூல் இது. இதை உருவாக்கும் பெருமை மு. இராகவையங்கார் அவர் களையே சாரும். இது சங்க காலச் சேர வேந்தர்களைப் பற்றிய தொகுப்பு நூல். பாடல் பெற்ற சேர வேந்தர், பாடிய சேரவேந்தர், சேரவேந்தர் கிளையினர், சேரவேந்தர் நாடு நகர் முதலியன, சேர மண்டலப் பகுதிகளை ஆண்ட பிற தலைவர்கள் என்ற ஐந்து பிரிவுகளாக இந்நூல் அமைந் துள்ளது.
1951ஆம் ஆண்டில் இந்நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப் பெற்றது. இஃது இடைக்கால பிற்காலச் சேர வேந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு நூல். இதில் பாடல் பெற்ற சேரவேந்தர், பாடிய சேரவேந்தர், சேரநாடு, நகர் முதலியன, சேரர் வரலாறு என்னும் பிரிவுகள் அடங்கி யுள்ளன.
ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட இந்நூல் சேரர் தொடர்பான இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிகளுக்குத் துணையாக அமைகின்றது.
1948ல் ‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ என்ற பெயரிய நூல் தோற்றம் பெற்றது. இது கடந்த நூற்றாண்டில் தோன்றித் தமிழ் வளர்த்த சேது நாட்டுப் பெருமக்களின் வரலாற்றைக் கூறுகின்றது.
1950-ஆம் ஆண்டில் ‘Some Aspects of Kerala and Tamil Literature’ என்ற நூல் வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் வடிவம் இந்நூல். தமிழில் ஆற்றிய உரையினை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் இந்நூல் எழுதப்பெற்றது. இந்நூல் இரண்டு பகுதிகளாக திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தினரால் வெளியிடப்பெற்றது.
இந்த ஆண்டிலேயே வெளிவந்த ‘இலக்கியக் கட்டுரைகள்’ என்ற நூல் வானொலிப் பேச்சுகள், இதழில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளும் இலக்கிய விளக்கமாக அமைந்தனவாகும்.
அடுத்து 1959ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற கட்டுரை மணிகள் தெரிந்தெடுத்த பதினான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எனலாம்.
மு. இராகவையங்கார் அவர்களின் மறைவுக்குப் பின் வெளிவந்த ‘தெய்வப் புலவர் கம்பர்’ என்ற பெயரிய நூல் 1969ஆம் ஆண்டில் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியது. கம்பராமாயண விமரிசனக் கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெறுகின்றன.
1939ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்ற நூல் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் விளக்கமாகும்.
இலக்கண ஆராய்ச்சி
பேராசிரியரின் இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் தலைமை இடம் பெறுவது தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்ற நூலாகும். இந்நூல் 1912ஆம் ஆண்டு இலங்கைச் செல்வர் கு. பூரீகாந்தன் என்பவர் நடத்திய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிப் போட்டியில் முதன்மைப் பரிசு பெற்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை எளிய முறையில் மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் இந் நூலை ஆசிரியர் இயற்றியுள்ளார். தொல்காப்பியத்துட் காணப்படும் அகப்புற ஒழுக்கங்களைத் தெள்ளிதின் விளக்குகிறது இந்நூல்.
1958ஆம் ஆண்டின் மு. இராகவையங்கார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நினைவாக வெளியிடப் பெற்றது வினைத்திரிபு விளக்கம். இஃது ஒரு செய்யுள் இலக்கண நூல். வினை விகற்பங்களைப் பன்னிரண்டு வாய்பாடுகளில் காட்டி, அவ்வாய்பாடுகள் செயல்படும் ஆற்றினை ஐம்பது நூற்பாக்களில் விளக்குகின்றது இந்நூல். 3020 வினைப் பகுதிகள் அனைத்தும் காண்போர்க்கு எளிதில் புலப்படும் வண்ணம் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள திறம் போற்றுதற்குரியது.
சங்க, இடைக்காலத் தமிழ் ஒலிகள் பெயர் வினைகளை அடைந்த வடிவங்களைப்பற்றிய புதிய செய்திகளை மொழி வரலாற்று அடிப்படையில், 1. தொல்காப்பியத்துக் கண்ட பழைய வழக்குகள், 2. தொல்காப்பியனாரும் புள்ளி எழுத்துக் களும், 3. அருகி வழங்கிய சில வினை விகற்பங்கள், 4. ஆய்தவோசை-என்ற நான்கு கட்டுரைகளில் புலப்படுத்துகின்றார்.
அகராதி ஆராய்ச்சி
ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் அகராதிப்பணியில் ஈடுபட்ட மு. இராகவையங்கார் அவர்கள், ‘தமிழ்ப் பேரகராதி’ உருவாவதற்குக் காரணமாக இருந்ததோடு அமையாமல், நிகண்டகராதி, நூற்பொருட் குறிப்பகராதி இவை வெளிவருவதற்கும் காரணமாக இருந்தார். நிகண் டகராதி அச்சேறவில்லை.
திவாகரம், பிங்கலம் உரிச்சொல் நிகண்டு, சூடாமணி என்னும் நான்கு நிகண்டுகளிலும் இடம் பெற்ற சொற்களுக் குரிய பொருளைத் தந்து, அசுர நிரலில் அமைக்கப்பெற்ற நூல் நிகண்டகராதி என்பது. இது பின்னாளில் திவாகரப் பதிப்பிற்குப் பெரிதும் பயன்பட்டது.
‘நூற்பொருட் குறிப்பகராதி’ தேவாரம், திருக்கோவையார், நற்றிணை, குறுந்தொகை முதலிய இலக்கிய நூல்களிலும், இறையனார் களவியல் உரை, வீர சோழியம் முதலிய இலக்கண நூல்களிலும் கூறப்பட்டுள்ள பொருள்களை அகர நிரலில் அமைத்துக் கூறுவதாகும்.
பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார்
பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு. இந்நூல்களில் பாட பேதங்களும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் அமைந்து காணப்படுவதால், ஏடுகளை ஒப்புநோக்கி இந்நூல்களைப் பதிப்பித் துள்ளார் என்பது போதரும். இவர் முதன்முதலில் பதிப்பித்த நூல் ‘திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்’ என்பது. 1910ல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பெற்றது.
‘செந்தமிழ்ப் பத்திரிகை’யில் வெளிவந்து தனி நூல்களாகப் பதிப்பிக்கப் பெற்றவை; 1. நரிவிருத்தம் (அரும்பத உரையுடன்) 2. சிதம்பரப் பாட்டியல் உரையுடன், 3. திருக் கலம்பகம் உரையுடன், 4. விக்கிரம சோழனுலா, 5. சந்திராலோகம், 6. கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை என்பன.
சங்க நூற்றொகைகள் போலத் தனிப்பாடல்கள் பல வற்றினைப் பெருந்தொகை' என்ற பெயரில் 1936ல் ஒரு நூலாகப் பதிப்பித்தார். 2200 பாடல்கள் கொண்ட இந் நூல், 1. கடவுள் வாழ்த்தியல், 2. அறிவியல், 3. பொரு ளியல் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது பின்னாளில் பல தமிழறிஞர்களும் எடுத்தாளத் தக்க வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
1936ஆம் ஆண்டில் பெருந்தொகையைப் பதிப்பித்த அதே ஆண்டில் ‘திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் பதிப்பிக்கப்பெற்றது.
1949ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்த ஞான்று ‘அரிச்சந்திர வெண்பா’ என்ற ஒரு நூலினைப் பதிப்பித். துள்ளார்.
1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து கம்பராமாயணப் பகுதிகளைப் பதிப்பித்துள்ளார் என்பது முன்னரே கூறப்பட்டது.
1953ஆம் ஆண்டில் சிராமலைக் கல்வெட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆந்தாதி ஒன்று ‘திரிசிராமலை அந்தாதி’ என்ற பெயரில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது.
1958, 59ஆம் ஆண்டுகளில் கம்பராமாயண சுந்தர காண்டப் பகுதிகளை உரையுடன் பதிப்பித்துள்ளார். இது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வந்துள்ளது.
மேலும் இவர் பாட அமைதிபற்றி ஆராய்ச்சி செய்தும், அவற்றின் பொருள் நயத்தை விளக்கியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காட்டாகக் ‘கலிங்கத்துப் பரணி’ ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் இவற்றைக் கூறலாம்.
உரையாசிரியர் மு. இராகவையங்கார்
நூல்கள் பலவற்றை ஆய்ந்தும் பதிப்பித்தும் ஆராய்ச்சி வேந்தராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த மு. இராகவை யங்கார் அவர்கள் சில நூல்களுக்கு உரையும் கண்டுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன கம்பராமாயண சுந்தரகாண்டப் பகுதிகள்; திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தின் விளக்க மாக அமைந்த ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்ற
இதழாசிரியர் மு. இராகவையங்கார்
இவர் ‘தமிழர் நேசன்’, ‘கலைமகள்’, ‘செந்தமிழ்’ என்ற இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவர். ‘செந்தமிழ்’ இதழில் முதலில் இரா. இராகவையங்காருக்கு உதவியாசிரியராக அமர்ந்து. பின்னர் அவரது இடத்தை அணி செய்தவர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் இவர் இவ்விதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். கட்டுரைத் தொகுப்பு நூல்களாக அமைந்தற்ைறில் உள்ள சில கட்டுரைகள் செந்தமிழ் இதழில் வெளிவந்தவை. பெருந்தொகை நூலில் காணப்படும் பாடல் கள் பலவும் இவ்விதழில் வெளியானவையே. நூல் வடிவம் பெறாத சில கட்டுரைகளும் இவ்விதழில் வெளிவந்துள்ளன. ஆக இதழாசிரியராக அமர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு மிகப் பெரியது.
சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார்
எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார்.
1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத் தோற்றம் பெற்றது.
1966-ல் காரைக்குடி கம்பன் விழாவில் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார், 1959ஆம் ஆண்டில் பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் அழைப்பின் காரணமாகத் தெய்வப் புலமை என்னும் பொருள் பற்றிச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓர் உரை நிகழ்த்தினார்.
திருவிதாங்கூர் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்தபோது சர்.சி.வி. இராமன் அவர்கள் தலைமையில் ‘காந்தளூர்ச்சாலை’ என்னும் பொருளில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் பல சரித்திர ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துக்களை எடுத்துக் காட்டித் தம் கருத்துக்களைச் சான்றுகளுடன் நிறுவினார். தொடர்ந்து நிகழ்ந்த பொழிவுகளை அற்றை நாள் கல்வித் துறை வல்லுனரான கோபால மேனன் அவர்கள் தலைமை யில் நிகழ்த்தினார். இச்சொற்பொழிவே பின்னாளில் soap 336), 'Some Aspects of Kerala and Tamil Literature" என்ற பெயரில் இரண்டு பகுதிகளாக நூல் வடிவம் பெற்றது.
கவிஞர் மு. இராகவையங்கார்
இவர் கவிபாடும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந் துள்ளார். இளமை முதல் முதுமை வரை இவர் பாடிய கவிதைகள் பலவும் செந்தமிழில் வெளியாகி உள்ளன.
பொதுச் செய்திகள்
இவர் தாமே பல நூல்கள் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியதுடன் நில்லாமல், பல தமிழ் நூல்கள் வெளிவருவ தற்கும் காரணமாக அமைந்தார். இதில் குறிப்பிடத்தக்கவை எஸ். வையாபுரிபிள்ளை அவர்களின் பணவிடு தூதும், வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய மூன்றாம் குலோத்துங்க சோழனும் ஆகும். இராமச்சந்திர தீட்சிதரின் சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையும் மு. இராகவையங்கார் அவர்களின் துணை கொண்டே உருவம் பெற்றது.
மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி முடிவு களைப் பற்றிக் கூறும்போது எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்,
“பெரும்பாலும் ஆசிரியரது கருத்துக்கள் கொள்ளத்
தக்கனவாகவே உள்ளன”
என்கிறார். (தமிழ்ச் சுடர் மணிகள்; ‘மு. இராகவையங்கார்.’ ப. 397). இவர் தம் நடையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெளிந்த நடை’ என்பர்.
“பாண்டித்திய படாடோபமென்பது இவர்கள் நடை
யில் சிறிதும் இல்லை-இவர்கள் உரை நடையிலேயே ஓர் அபூர்வமான கனிவும் இனிமையும் வெளிப்படுகின்றன.”
(எஸ். வையாபுரிப் பிள்ளை:
தமிழ்ச்சுடர் மணிகள் : ப. 397,)
பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் நடையில் மட்டும் எளிமை உடையவர் அல்லர். வாழ்க்கையிலும் எளிமையைக் கடைப் பிடித்தவர். தம்முடன் பணியாற்றுப வர்களுடன் இனிமையாகப் பழகும் ஆற்றலும் மிக்கவர், இதனை அவருடன் பணியாற்றிய ஆர். வீரபத்திரன் அவர்கள் கூற்றால் தெளியலாம்.
‘சேரவேந்தர் செய்யுட் கோவையில் முதற்பகுதி
அச்சாகி முடிந்த தறுவாயில் அந்நூல் பற்றிப்
பேராசிரியரிடம் நான் கூறியிருந்த செய்தி ஒன்று
நினைவிருக்கிறது. நூலில் ஆங்கில முன்னுரை,
தமிழ் முன்னுரை, சேர வேந்தர் சரித்திரச் சுருக்கம்
முதலிய பல செய்திகள் இடம் பெற்றிருக்க,
வேறோர் முக்கியச் செய்தி காணப் பெறாதிருப்பது ஒரு குறையாக எனக்குத் தோன்றியது. திருவிதாங்கூர் மன்னர் பெருமானாரால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்தில், வள்ளல் அழகப்ப செட்டியார் அளித்த நன்கொடையால் உருவான தமிழ் ஆராய்ச்சித் துறையிலிருந்து முதன் முதலாக வெளிவரும் சேர வேந்தர்களைப் பற்றிய நூலில், அக்குலத்தில் தோன்றி அப்பொழுது மாமன்னராகத் திகழ்கிற சித்திரைத் திருநாளைப் பற்றியும், அழகப்ப வள்ளலைப் பற்றியும் வாழ்த்துரைகள் தக்க இடத்தில் அமைய வேண்டியதன் இன்றியமையாமையைப் பேராசிரியர்க்குப் பணிவோடு எடுத்துக் கூறினேன். அதைக் கேட்ட பேராசிரியர் ‘நீங்கள் கருதியது தக்கதே; மறந்திருந்த எனக்கு அதனை நினைப்பூட்டியது நன்று’ என அன்புரை கூறிப் பின்னர் மன்னர்க்கு ஒன்றும் வள்ளற்கு ஒன்றுமாக இரண்டு பாக்களை வாழ்த்தாகப் பாடி நூலில் இணைத்துக் கொண்டார்கள்.”
இப்பகுதி மு. இரகவையங்கார் அவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களாயினும் அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடாமல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் உயர் பண்பாளர் என்பதை உணர்த்தி நிற்கின்றன.
முகவுரை
இவ்வாறாக ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும், உரையாசிரியராகவும், சொற் பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்து மு. இராகவையங்கார் அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற் கரியது. அவர் சென்ற நெறி தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய நெறியாகும்!