சிக்கிமுக்கிக் கற்கள்/நான்காவது குற்றச்சாட்டு
நான்காவது குற்றச்சாட்டு
பர்வின், மாணிக்கத்திடம் சிறிது கடிந்துதான் பேசப்போனாள். 'இங்கே வரப்படாதுன்னு சொன்னேனே' என்று சொல்வதற்காக குவிந்த உதடுகள், செவ்வரளி பூ மொட்டாய் தோன்றின. ஆனாலும் அவரை, - முகம் தொலைத்த மனிதராய், கண்களை மட்டுமே கொண்டவராய் பார்த்ததில், அந்த மொட்டுப் பூ மலர்ந்தது. அவரிடம், வீட்டில் அல்லாவின் பேரில் சொன்ன ஆறுதலை, இப்போது, தான் வைத்திருக்கும் கோப்பின் ஆணையாக ஆறுதலாக்கினாள்.
'கவலப்படாதீங்க... எல்லாம் நல்லபடியாவே முடியும்... அதுவும் இன்றைக்கே முடிந்துவிடும்'.
மாணிக்கத்தின் பார்வை, அவள் வழியாய் தாவி அந்தக் கோப்புக்குள் பயபக்தியுடன் பாய்ந்தது. 'ரகசியம்' என்று தடித்த எழுத்துக்களால் பொறிக்கப் பட்ட வெள்ளைக் காகித அட்டை ஒட்டிய சிவப்புக் கோப்பு... அந்தச் சித்திரக் குப்தக் குழந்தையை, மார்போடு சாத்தி வலது கையால் அணை கொடுத்திருந்தாள். அந்தக் கோப்புக் குழந்தைக்கு விளையாட்டுப் பொம்மைகளான 'அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள்!' , 'நிறுவனம் - நிர்வாகம்' . 'இடைக்கால பதவி - நீக்கம்' , 'விசாரணை - தண்டணை மறுநியமனம்' ஆகிய தலைப்புகளிட்ட முப்பெரும் புத்தகங்களை இடதுகை பிடித்திருந்தது. அந்தப் புத்தகப் பக்கங்களுக்குள் அம்புவடிவக் காகிதங்கள் புத்தக வால்களாக நீண்டு இருந்தன.
மாணிக்கம், குரல் கணக்கப் பேசினார்.
'எம்மா! நீ... நீங்க என் மகளைவிட சின்ன வயசு, ஆனாலும் எனக்கு நீங்கதாம்மா தாய்.... பெறாமல் பெற்றத் தாய்'.
மாணிக்கம் கண்களில் உருண்டு திரண்ட, நீர் கன்னக்கதுப்புகளில் உருண்டோடி விழாமல் இருப்பதற்காக, முகத்தை பின்னோக்கிச் வளைத்தார். வளைந்துபோன வாழ்க்கையை சொல்லாமல் சொன்ன வளைவு. ஆனாலும் அது வாழ்விற்காக கும்பிடுபோடும் முன் வளைவாகாமல், அதன்மேல் அம்பெய்யும் பின்வளைவாய் தோன்றியது. மேல் நோக்கி எழுந்த வெள்ளைக் கலவையான கருந்தாடி, கடற்கரை காற்றில் நாற்றுகளாய் ஆடின. உள்ளடங்கிய கண்கள் கண்ணீரில் மிதந்தன.
மாணிக்கத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்ததைவிட, தனக்கே அதிகமாகத் தெரியும் என்பது போல், பர்வின் அவரை கனிவோடு பார்த்தாள். இ.ஆ.ப. - அதுதான் சகலகலாவல்ல ஐஏஎஸ் தேறி, தமிழக அரசிற்கு மாநில ஒதுக்கீடாகி, ஒரு மாவட்டத்திற்கு, களப்பணிப் பயிற்சிக்காக இந்த பர்வின் அனுப்பப்பட்டபோது, இந்த மாணிக்கத்தைத்தவிர, அத்தனை மாவட்ட அதிகாரிகளும், தங்களது எதிர்கால ஆட்சித் தலைவர், இப்போதே, தங்களை ஆட்டிப் படைக்கலாம் என்பதுபோல் தலைகளை கவிழ்த்து, பாதி வாயை உள்ளங்கையால் மறைத்து 'பயிற்சி' கொடுத்த போது, இந்த மாணிக்கம்தான், இவளிடம் கெஞ்சாமலும் மிஞ்சாமலும், பல்வேறு அரசு செயல்பாடுகளில் பயிற்றுவித்தவர். வீட்டிற்கு கூட்டிப் போய், கணிப்பொறி மகளை தோழியாக்கியவர். அளவெடுத்த வார்த்தைகள்... அதற்கேற்ப கம்பீரமும் குழைவும் சரியான விகிதாச்சாரத்தில் கலந்த குரல். குரலுக்கு ஏற்ற பார்வை. 'வாங்க' என்ற ஒற்றைச் சொல்லில், தாயின் பரிவும், தனயனின் துணையும் உள்ளடங்கி இருக்கும். நிற்கவேண்டிய ஊழியர்களையும் உட்கார வைப்பார். ஒரு செயல்பாடு சாதனையானால், மேலதிகாரிக்கு எழுதும் கடிதங்களில், உதவிய ஊழியர்களை 'மற்றும் பலர்' ஆக்காமல், அவர்களது பெயர்களையும் தெரிவிப்பவர். அந்த மனிதர் இப்போது கூனிக்குறுகி முகம் பழுத்து தோள்கள் தொங்கி, எலும்புக்கூடாய் நிற்கிறார். சிறியன சிந்தியாதவர்கள், சிறுமைப் படும்போது, அதைப் பார்ப்பதே ஒரு தண்டணை. அந்தத் தண்டனையை அனுபவித்துக் கொண்டே, பர்வின், அந்தக் கோப்புக்களைக் தட்டிக்கொடுத்து அவரை ஆற்றுப் படுத்தினாள்.
'கண் கலங்காதீங்க... விசாரணை அதிகாரி, உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லன்னு தெளிவாகவே எழுதி இருக்கார். அதனால உங்க சஸ்பென்சன ரத்து செய்வதற்கான குறிப்பையும் கொண்டு போறேன். செயலாளர் சும்மா ஒப்புக்கு ஒரு கையெழுத்துப் போடணும்... போட்டாகணும். மீதியை நான் பார்த்துக் கொள்வேன். அதோ அங்கே இருக்கிற பார்வையாளர் அறையில் உட்காருங்க கால் மணிநேரத்துல திரும்பி வந்து, அரைமணி நேரத்துல, என் கையாலேயே உங்களுக்கு மறுநியமன ஆர்டரை கொடுத்துடுறேன்.'
மாணிக்கம், உயிர்த்தெழுந்தார். அவளை கையெடுத்துக் கும்பிட்டார். கோவிலில் அம்பாளைக் கூட அப்படி கும்பிட்டி இருக்கமாட்டார். அந்த அடுக்கு மாடி அரசு கட்டிடத்தின் இந்த ஐந்தாவது நீண்ட நெடிய விதானம், அவருக்கு ஆலயப் பிரகாரமாகவும், அவள் கற்சிலையிலிருந்து பர்வினாய் வெளிப்பட்ட துர்க்காகவும் தோன்றியது. ஆறுமாத காலமாக, சஸ்பென்சன், முறையீடு, நடுவர் மன்றம், விசாரணை என்று அலையாய் அலைந்த வனவாசம், முடிகிறது. நிம்மதியாக இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வுப் பெற்று. அவரது சஸ்பென்சன் போல் இடைக்காலமாய் தடைபட்ட மகளின் திருமணத்தை நடத்திவிடலாம். அப்படியும் இந்த சஸ்பென்சன் விவகாரம் திருமணக் கூட்டத்தில் அடிபடத்தான் செய்யும். அவர் மீது அனுதாபப் பார்வைகள் பாயும். இந்த லட்சணத்தில் இடைக்கால பதவி நீக்கம், தண்டணை ஆகாது என்று சட்ட விதிகள் கூறுகின்றன.
சுகுமார் இ.ஆ.ப. - செயலாளர் என்ற பொன் முகாமில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை பார்த்தபடியே தள்ளுகதவைத் தள்ளிய பர்வின், பின்னோக்கி நடந்து, மாணிக்கத்திடம் கிசுகிசுப்பாய் பேசினாள்.
'அப்புறம்..... நான் உங்களுக்கு வேண்டியவள் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிந்தால், முதலமைச்சருக்கும், தலைமைச் செயலாளருக்கும் மொட்ட மனு போய்விடும். மொட்டைமனு எழுதுறதுல, பியூனுக்கும். ஐ.எ.எஸ் அதிகாரிக்கும் வித்தியாசம் கிடையாது. என்ன செய்யுறது?. கல்லூரிப் படிப்புக்கு எதிர் படிப்பை இந்த செக்கரட்டேரியட்டில் சொல்லிக் கொடுக்காங்க. எனக்கும் சிக்கல் வரக்கூடாது பாருங்க.'
'ஒங்களுக்கு சிக்கல் வந்தால், அது எனக்கு இன்னொரு சஸ்பென்சன் மாதிரிம்மா. இது சத்தியமான வார்த்தம்மா... உங்க தலைமையிலதான் என் பொண்ணோட கல்யாணம் நடக்கும்.
பர்வின், கரிசமணி இல்லாத தன் கழுத்தைத் தடவியபடியே, செயலாளர் அறைக்குள் நுழைந்தாள். ஒரு முனையில் தலைதாங்கும். நாற்காலியும், பளபளக்கும் அரைவட்ட மேஜையும், மறுமுனையில் சோபா இருக்கைகளுமான, அந்த விசாலமான அறைக்குள், செயலாளருக்கு தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தபடியே, எதிர் நாற்காலியில் உட்கார்ந்தாள். தொலைபேசி கூச்சல்கள். இன்டர்காம் அலறல்கள், கணிப்பொறி மாய்மாலங்கள், பேக்ஸ் கருவிக்குள் இருந்து விடுபடத்துடிக்கும் காகிதம், தொலைக்காட்சிப் பெட்டியின் கிரிக்கெட் லூட்டிகள் என்று பல்வேறு அவதானங்களை ஒரேசமயத்தில் கவனித்த செயலாளரின் புருவச்சுழிப்பு இவள் புன்னகையால் போய்விட்டது. உடனே, செயலாளர் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சத்தத்தை நீக்கிவிட்டு, காட்சிகளை ஊமையாக்கி, அவளையும் ஊமையாய்ப் பார்த்தார்.
'மாணிக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாரணை அதிகாரி அறிக்கையில் நேரில் பேசவுமு'ன்னு எழுதியிருக்கிங்க சார். அதனால வந்தேன்.
'நாளைக்கு வச்சுக்கலாமே, டென்டுல்கர் என்னபோடு போடுறான் பாருங்க.'
'நன்றே செய்க - அதுவும் இன்றே செய்க'ன்னு நீங்க சொல்வீங்க சார். ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் சார்.
'சரி. முடியாதுன்னா விடுவிங்களா.'
அந்த அரசுச் செயலாளர். ஒரு 'புரோமோட்டி' துணைச் செயலாளர். இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் உப்புவைத்து ஊற வைத்திருப்பார். வந்திருப்பவளோ சொந்த சாதி.... அதாவது நேரடி ஐ.ஏ.எஸ். சாதி. கோப்பை நீட்டிய பர்வினிடம் 'நீங்களே படித்துச் சொல்லுங்க' என்றார். - ஒரு பார்வையில் தொலைக்காட்சிப் பெட்டியையும் மறுபார்வையில் அவளையும் தாங்கிக் கொண்டு.
பர்வின், கோப்பைப் படிக்காமல், அதன் விவரங்களை, சுருக்கமாக எடுத்துரைத்தாள்.
'முதலாவது குற்றச்சாட்டு சார்... மாணிக்கம் என்கிற அரசு அதிகாரி அலுவலக ஜீப்பை நூறு கிலோமீட்டர் வரை தவறாக சொந்தக் காரியத்திற்குப் பயன்படுத்தினார் என்பது. நிசமாவே, அவர் காரியத்திற்குத்தான் பயன்படுத்தி இருக்கார். அதாவது, ஒரு குக்கிராமத்தில் அவர் மேற்பார்வைப் பணிக்குப் போனபோது, தந்தை இறந்துவிட்டதாக நள்ளிரவில் செய்திவந்தது. பேருந்து வசதி இல்லாத அந்த நேரத்தில், ஜீப்பை எடுத்துக் கொண்டு போயிருக்கார். இப்படி அவசரத்திற்கு அரசு வாகனத்தை எடுத்துக் கொள்ளலாமுன்னு. இதோ இந்த விதி கூறுகிறது. அந்த ஜீப்பை எடுத்த மறுநாளே, மாணிக்கம், நிலைமையை விளக்கி அதற்கான இப்சோ பேக்ட்டோ அனுமதி கேட்டு, விண்ணப்பித்து இருக்கார். கூடவே ஜீப்பை எடுத்ததற்கான பணத்தையும் அனுப்பி இருக்கார். இதற்கான கடித நகலும் மணியார்டர் ரசீதும் உள்ளன. அதோடு மறுநாள் விடுமுறை என்பதால் அரசுப்பணியும் பாதிக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி இந்தக் குற்றச்சாட்டில் இருந்து இவரை விடுவித்து இருக்கிறார்'.
'சரி, ஏற்றுக்கொள்கிறேன். அப்புறம்... அடுத்தது....'
பர்வின், மாணிக்கம் தன்னை எப்படிப் பார்த்தாரோ அப்படி சுகுமாரைப் பார்த்தாள். அந்த சுகுமாரோ, அரசாங்க குளிர்சாதனக் காரில் தன் மகள்களை கல்லூரிக்கு அனுப்புவதை நினைத்து லேசாய் நிலைகுலைந்தார். பர்வின் தொடர்ந்தாள்.
'இரண்டாவது குற்றச்சாட்டு சார், ஆதிதிராவிட ஊழியர் ஒருவரை, இந்த மாணிக்கம், சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார் என்பது. ஒருநாள், அந்த ஊழியரைப் பார்த்து 'உன் புத்தியைக் காட்டுறியே... உட்கார்' என்று சிரித்தபடியே மாணிக்கம் கேட்டிருக்கிறார். அதாவது, அலுவலகத்துக்கு வழக்கம்போல் தாமதமாக வரும் புத்தியை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த ஊழியர் புறக்கணிப்பதற்காக, அப்படிக் கடிந்திருக்கிறார். இதை, அந்த ஊழியர். தன் சாதிப் புத்தியை காட்டுவதாக மாணிக்கம் குறிப்பிட்டதாய், தர்க்கமாகவோ, குதர்க்கமாகவோ எடுத்துக்கொண்டு, புகார்செய்துவிட்டார். மாணிக்கம், தான் அப்படிப்பட்டவர் இல்லையென்றும், இடஒதுக்கீடுகளை ஒழுங்காக அமுல்படுத்துகிறவர் என்றும், பல்வேறு ஆதிதிராவிட ஊழியர் கூட்டங்களில் சேரிக்குடிசையும், சாதிக்குடிசையும் ஒன்றாக வேண்டுமென்று பேசியிருப்பதையும், சாட்சியங்களாக வைத்தார். அந்த அலுவலக ஆதிதிராவிட நல ஊழியர் சங்கமும், மாணிக்கம் ஆதிதிராவிட விரோதியல்ல, நண்பரே என்று எழுதிக் கொடுத்திருக்காங்க'.
'அவங்க பயந்துகூட எழுதி கொடுக்கலாம்.'
'அப்படியும் சொல்ல முடியாது சார்... இடைக் கால பதவி நீக்கத்தில் இருக்கிற ஒரு அதிகாரியை, அவர் கெட்டவராக இருந்தால் ஒழித்துக் கட்டுறதுக்கு இதுதானே சந்தர்ப்பம்? விசாரணை அறிக்கை மாணிக்கத்தை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கிறது.'
'நானும் விடுவிக்கிறேன். அப்புறம் அடுத்தது'.
'மூன்றாவது குற்றச்சாட்டு, ஒரு பாடகியிடம், மாணிக்கம், முறைதவறி நடக்கப் போனார் என்பது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாணிக்கம் மாவட்ட துணைஅதிகாரியாய் இருக்கும் போது, மாநில குடும்ப நலத்துறை, ஒரு இசைக் குழுவை இவர்களது துறைக்கு அனுப்பி வைத்திருக்கு. இந்த மாணிக்கம், கலை நிகழ்ச்சியை பார்வையிட சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு போயிருக்கார். ஆனால், அவர் போய்ச் சேர்வதற்கு முன்பே, அந்த இசைக்குழு ஒரு கல்யாண வீட்டில் இசைத்துவிட்டு, அதற்காகப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய்விட்டது. மறுநாள், இவர், அந்தக் கலைக்குழு தலைவரிடம் இதுபற்றிக் கேட்டிருக்கார். மேலதிகாரிகளுக்கு எழுதப்போவதாக தெரிவித்திருக்கிறார். உடனே கலைக்குழுத் தலைவர், பயந்து போய், இவரது மாவட்ட அதிகாரியை அணுகியிருக்கிறார். ஏற்கனவே இந்த மாணிக்கத்தை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த அந்த மேலதிகாரி, கலைக்குழுவின பாடகி, மேற்பார்வை என்ற சாக்கில் இந்த மாணிக்கம் தன்னிடம் முறைதவறி நடந்ததாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்தக் கலைக்குழு அரசுப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் மிரட்டியிருக்கிறார். வேறுவழியில்லாமல் அந்தப் பாடகி கொடுத்த புகார் விசாரணைக்கு வந்தது. இந்தப் புகார் உள்நோக்கம் கொண்டது என்றும், மாணிக்கம் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் தள்ளுபடி செய்யப்பட்டது. எட்டாண்டுகளுக்கு முன்பு, குடும்ப நலத்துறை இயக்குநர் விசாரித்து, நிராகரித்த இந்தப் புகாரை இப்போது பிணத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாளி போடுவதுபோல் போடுகிறார்கள்'.
'நீங்க... இப்படிச் சொல்றீங்களா..? இல்ல விசாரணை அறிக்கையா?
'விசாரணை அறிக்கைதான் சார்'.
'சரி. இந்த பரிந்துரையையும் அரசு ஏற்றுக் கொள்கிறது'.
'சார்... நிசமாவே ஒரு இருண்டுபோன விட்டுக்கு நீங்க விளக்கேற்றி வைக்கிங்க சார்'
'விளக்கேற்றினால் மட்டும் போதாது... எண்ணெய்யும் ஊற்றணும். அடுத்தக் குற்றச்சாட்டு...?
'அது குற்றச்சாட்டே இல்ல சார்'.
'நீங்களே சொன்னால் எப்படி? கோப்பைப் படிங்க'.
'நான்காவது குற்றச் சாட்டு என்னவெனில், சம்பந் தப்பட்ட மாணிக்கம். மேலே குறிப்பிட்ட மூன்று குற்றங்களைப் புரிந்து, அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறி, ஒழுக்கக்கேடு புரிந்திருக்கிறார்'.
'இந்தக் குற்றச்சாட்டுக்கு விசாரணை அறிக்கை என்ன சொல்லுது'
'இது குற்றச்சாட்டே இல்லை சார். ஆதனால அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடல'.
'என்ன பர்வின்! நீங்க ஒரு ஐ.ஏ.எஸ். ஸா? நாலாவது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. மற்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஊதிய உயர்வு முடக்கம். இல்லாட்டால் பதவி இறக்கந்தான் தண்டணை, ஆனால் இந்த நாலாவது குற்றச்சாட்டு இருக்கே, அதுக்கு பதவி நீக்கம் தான் தண்டணை,
'சார்... மூன்று குற்றச்சாட்டுக்களால் எழுந்ததுதான் நாலாவது குற்றச்சாட்டு. அந்த மூன்றும் பொய்யாகும் போது. நாலாவதும் பொய்தானே'.
'இப்படி நீங்கதான் சொல்றீங்க. விசாரணை அதிகாரி சொல்லலியே'.
'குதிரைப்படம் வரைந்து, அதில் குதிரைன்னு வேற எழுதணுமா? பொய்யான மூன்று குற்றச்சாட்டுகளால் எழுந்த நாலாவது குற்றச்சாட்டைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்ல'.
'அவசியம் இருக்குது. சொல்லி இருக்கணும்'.
'உங்களுக்கு எப்படி விளக்குறதுன்னே எனக்குப் புரியல. சார். அந்த கம்யூனிகேஷன் திறமை எனக்கில்லை. ஆனாலும் நியாயம் நியாயம்தான். விபத்தே நடக்காதபோது, காயம் என்கிற கேள்வியே இல்லை. மூன்று குற்றச்சாட்டுகளும் பொய்யாகும்போது, அவற்றால் எழுந்த நாலாவதும் பொய்தான் என்கிறதை எழுதிக்காட்ட வேண்டியதில்லை'.
'அப்படின்னா... அதைக் குற்றச்சாட்டாய் சாட்டியிருக்க வேண்டாமே? நாலாவது குற்றச் சாட்டாய் நம்பர் போட்டு இருக்க வேண்டாமே?. நாலாவது குற்றச்சாட்டு நாலாவது குற்றச்சாட்டுதான்.'
'சார்... நாம் இப்படி செந்தில் - கவுண்டமணி மாதிரி விவகாரத்தை வாழப்பழமா ஆக்கணுமா?.'
அரசுச் செயலாளரான சுகுமாரின் முகம் சிவந்தது. நாற்காலியில் சாய்வாய் கிடந்தவர், முதுகை நிமிர்த்தி முகத்தையும் நிமிர்த்தினார். பர்வினை ஐ.ஏ.எஸ். சாதியில் இருந்து தள்ளிவைத்துவிட்டு, ஒரு துணைச்செயலாளரிடம், செயலாளர் எப்படி பேசவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த நினைப்பைப் பேச்சாக்கினார்.
'நீங்க வரம்பு மீறி பேசுறிங்க மிஸ் பர்வின்... ஒரு மூத்த அதிகாரிகிட்ட பேசும்போது பேச்சுல கண்ணியம் வேண்டும். குரல உயர்த்தக் கூடாது... கையை ஆட்டக் கூடாது.... நீங்க பேசுன முறையும், அரசு ஊழியர் நன்னடத்தை விதியை மீறிய செயல் தான். முதல்தடவை என்கிறதால வாய்மொழியாய் எச்சரிக்கிறேன்'.
'மன்னிக்கணும் சார் கொச்சையான உதாரணத்தைச் சொன்னது தப்புத்தான் சார். ஆனாலும் நான்காவது குற்றச்சாட்டு என்பது...'
'இதுக்கு மேலே பேசாதீங்க பிளீஸ்.'
'பேசல சார்..... ஆனாலும் நான் நான்காவது குற்றச்சாட்டைப்பற்றி, சட்டத்துறையோட கருத்தைக் கேட்கலாம் சார்.'
'நான்காாவது குற்றச் சாட்டு நான்காவது குற்றச் சாட்டுத்தான். கோப்பை வைத்துட்டுப் போங்க. கோப்புல என்ன உத்திரவு போடுறனோ, அதைமட்டும் செயல்படுத்துங்க. நீங்க போகலாம். என் நேரத்தை இதுக்கு மேல வீணாக்காதீங்க.'
அரசுச் செயலாளர், இருக்கையை விட்டு எழுந்து பர்வினையும் எழவைத்தார்.
பர்வின், தனக்குள்ளே முனங்கிக்கொண்டு ஒவ்வொரு முனங்கலுக்கும் கண்கள் ஒவ்வொரு விதமாய் சுழல. அந்த அறைக்கு வெளியே வந்தது தெரியாமலேயே வந்துவிட்டாள். அரைநாள் விடுமுறை போட்டுவிட்டு, மாணிக்கம் இருக்கும் பார்வையாளர் அறைப் பக்கம் தலைகாட்டாமல், வீட்டுக்கு, எப்படித் தலை மறைவாய்ப் போவதென்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
மின்னம்பலம் - ஜூன், 1999 |