சிந்தனை துளிகள்/1201-1300

விக்கிமூலம் இலிருந்து

1201. “மற்றவர் செவ்வி பார்த்து ஒழுகுதல் உயரியப் பண்பு.”

1202. “தேர்தலையே நோக்கமாகக் கொண்ட அரசியல், மக்களைப் பிச்சைக் காரராக்கிவிடும்.”

1203. “அரசு தர்மச்சாலையாக மாறிவிடக் கூடாது.”

1204. “எல்லாம் இருந்தும் காரியம் நடக்க வில்லை. ஏன்? இதுதான் மனிதரின் விபரீதமான போக்கு.”

1205. “பலநாள் பழகியவர்கள் பண்பில் தலைப் பிரியமாட்டார்கள்.”

1206. “இன்றைய ஆளுங்கட்சியினரின் அடித்தளத்தினர் நாடே தங்களுடையது என்ற முடிவுக்கு வந்து ஆட்டம் போடுகின்றனர். இந்தப் போக்கு எதிர் விளைவுகளை உருவாக்குவது இயற்கையின் நியதி! தவிர்க்க இயலாதது.”

1207. “தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர், முற்பட்டோர் பட்டியல் ஒரு நாட்டில் நிலையாக இருப்பின் அது நீதிக்கும் வளர்ச்சி என்ற நியதிக்கும் மாறுபட்ட சமுதாய அமைப்பாகும்.”

1208. “மதிப்பு, மதியாதை என்பது விலை கூடுதலுக்குரியது என்ற நிலை பொய்ம்மையை வளர்க்கும்”

1209. “காலம், உழைப்பு, பயன்படுத்தப்படும் பொருள்கள் இவற்றின் கூட்டு மதிப்புக்குரியன. திரும்பக் கிடைக்காத எதுவும் இழப்பையே தரும்.”

1210. “வாழ்க்கையும் ஒருவகை வியாபாரமே. வாழ்தலுக்குரிய செலவை விட அடைதல் கூடுதலாக வேண்டும். இதுவே ஊதியம் நிறைந்த வாழ்க்கை.”

1211. “பண்பாடில்லாதவர் அதிகாரம் பெறுதல், குரங்கு கையில் கொள்ளி பெற்றது போலாகும்.”

1212. “நிர்வாகம் என்பது காலம், இடம், பொருள், உழைப்பு இவற்றை முறைப்படுத்திப் பயன் படுத்திப் பயன் கொள்ளுதலாகும்.”

1213. “கோப்புகள் குறிக்கோளுடையனவாக இயக்கப் பெறாது போனால் இழப்பேயாம்.”

1214. “கண்ணால் காண்பது, காதால் கேட்பது ஆகியன மூலம் தொடர்ச்சியான செயலூக்கத்தைப் பெறாதவர்கள் இருந்தாலும் இறந்தவர்களேயாவர்.”

1215. “சரியான நேரத்தில் சரியான தகவலைத் தருதல் நிர்வாகத்திற்கு வலிமையைச் சேர்க்கும். ஆக்கத்தினைத் தரும்; இழப்புக்களைத் தவிர்க்கும்.”

1216. “முக்காலி மூன்றுகாலுடையது. இதில் ஒருகால் உடைந்தாலும் பயன் இல்லை. அதுபோலக் கூட்டமைப்பில் தனி ஒருவரின் பலவீனம் கூட பாதிப்புகளைத் தரும்.”

1217. “அறிவியல், உழைப்பை எளிமைப் படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் வாழ்க்கையை அருமைப்படுத்திக் கொண்டு வ்ருகிறது.”

1218. “மாக்கம், வியப்பு ஆகியவற்றிற்குரியன வாழ்க்கையை பூரணத்துவம் செய்யா.”

1219. “உரிமை உணர்வே நிலையான உறவுக்கு அடிப்படை.”

1220. “ஒருவர் வெறுக்கப்படுதலுக்குக் காரணம் அவர்தம் இயல்புகள் மட்டுமல்ல. மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளும் காரணம் ஆகும்.”

1221. “ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டால் யாருக்கும் இடர்ப்பாடு இல்லை.”

1222. “ஒரு சமூக மாற்றம் எளிதில் நிகழாது. தொடர்ச்சியான போராட்டம் தேவை.”

1223. “எந்த ஒரு தீமையும் தொடக்கத்தில் தயக்கத்துடன் தலைகாட்டுகிறது. பின் பழக்கத்தின் காரணமாகத் தீமையே இயல்பாகிவிடுகிறது.”

1224. “சாமார்த்தியமும் திறமையும் ஒன்றல்ல.”

1225. “சாமார்த்தியம் எப்படியும் காரியத்தை சாதிப்பது. திறமை, முறைப்படி சாதிப்பது,”

1226. “அப்பாவிகள் நல்லவர்களல்லர். தீமை செய்ய சக்தியற்றவர்கள்.”

1227. “நல்லவர்'-இது முழு நிறைச் சொல். ஆற்றலுடையவர்களே நல்லவர்களாக வாழ்தல் இயலும்.”

1228. “மானம் இல்லாதவர்கள் எந்த தவறுகளுக்கும் வருந்தமாட்டார்கள். திருந்தவும் மாட்டார்கள்.”

1229. “அடிக்கடி ஏற்படும் செலவுகளில் விழிப்பாக இருப்பது நிதி நிர்வாகத்திற்குத் தேவை."

1230. “எண்ணெய் தேய்த்துக் கொண்டு பின் சீயக்காய் கொண்டு கழுவி விடுவது போல், துய்ப்பைத் துறவால் கழுவவேண்டும்.”

1231. “சித்தாடுகிறவர்கள் நாம் விரும்புவதைக் கொடுத்தால் நம்பலாம்.”

1232. “ஊக்கம் என்பது செயலூக்கங்களேயாம்.”

1233. “ஒன்றையொன்று பிரியாத நிலையில் பிணைக்கப்பெற்ற பிணைப்பே வாழ்வளிக்கின்றன. அதுபோல சமூகம் பிணைக்கப் பெற்றால் தான் வாழ்வு சிறக்கும்.”

1234. “தவறுகள் செய்வதும் விளையாட்டாகி விட்ட விபரீதம் வளர்ந்து வருகிறது.”

1235. “பொறுப்பு உணர்வு கடைச்சரக்கன்று. வாழ்வின் படிப்புகளால் பெறுவது.”

1236. “உயர்வற உயரும் நிலையே நிலை. இதுவே வரவேற்கத்தக்கது.”

1237. “படிப்பறிவிலும் பட்டறிவு சிறந்தது.”

1238. “காய்தல்-குளிர்தல் என்ற நியதிகளை பொருள்களை மாற்றுகின்றன. ஆதலால், காய்தலும் குளிர்தலும் வாழ்க்கையை வளர்ப்பன.”

1239. “ஒழுங்காக அமைக்கப் பெற்ற பற்களே உணவை அறைக்க உதவுகின்றன. அதுபோல ஒழுங்கமைவுபட்ட உழைப்பே உணர்வுகளை வளர்க்கும்; ஆக்கத்தினை நல்கும்.

1240. “உடலமைவில் முதன்மை, இரண்டாம் நிலை என்ற நிலை எந்த உறுப்புக்கும் இல்லை.

த-9 எதுவும் சரியாக இயங்காதுபோனால் தலையும் கெடும். ஆதலால், ஒவ்வொன்றும் முறையாக இயங்குதலே வேண்டும்.”

1241. “உயிர்ப்புள்ள விழிப்பு நிலையில் சமுதாயம் இயங்கினால் வாழ்நிலை சிறக்கும்.”

1242. “பெண், ஒரு போகப் பொருள் என்ற கருத்து உள்ளவரையில் பெண்ணடிமைத்தனம் நீங்காது.”

1243. “சுற்றுப்புறச் சூழ்நிலை காரணமாக நல்லவர்களாக இருப்பதும் இயற்கை.”

1244. “தமிழர்கள் உயர் சிந்தனையாளர்கள்; ஆனால் செயலாளர்கள் அல்லர்.”

1245. “நிறைய ஈட்டல்; குறைவாகச் செலவழித்தல்-இதுவே நல்வாழ்க்கையின் நியதி.”

1246. “செல்வம் கிடைக்கும் பொழுது நுகர்வைக் கூட்டிக் கொண்டால், வருவாய் குறையும்போது இடர்ப்பாடு தோன்றும்.”

1247. “கடமைகள், உரிமைகள், பொறுப்புணர்வுகள் ஆகியன இசைந்த ஒரு பண்பே, கூட்டுறவு என்பது.”

1248. “சிறந்த கூட்டுறவாளன் சொல்வதற்கு முன்பு கேட்பான்; வாங்குவதற்கு முன்பு கொடுப்பான்; உண்பதற்கு முன்பு உழைப்பான்.”

1249. “ஆக்கம் தேடி, முடியும் என்ற நம்பிக்கையில் “பெறமுடியாதவர்கள் இழப்பில் பெரிதும் கவலைப்படுவர்.”

1250. “தன்னைப் போல மற்றவர்கள் என்று நினைக்காதவர்கள் சமூகத்தில் வாழ்வது விரும்பத் தக்கதல்ல.”

1251. “தேவையில்லாமல் பேசுவது பயனில் சொல் கூறுதலே.”

1252. “கறையான் தானாக விரும்பி முயன்று உழைத்து வீடு கட்டுவதில்லை. ஆனால் கட்டிய வீட்டில் எளிதில் குடி புகுகிறது.”

1253. “கட்டிய வீட்டின் அருமை தெரியாத கறையான் அதை அழிக்கிறது. அதுபோல நன்மையறி யாதவர்கள் நன்மையை அழிப்பார்கள்”.

1254. “பயத்தினினும் கேடு பிறிதொன்று இல்லை.”

1255. “வாயினால் முடிக்கக்கூடிய காரியத்தை எழுத்தினால் செய்யக்கூடாது.”

1256. “தொழிலில் இழப்பு என்று கூறி, தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க மறுப்பது நல்ல நிர்வாகம் அல்ல.”

1257. “நிர்வாகம் என்ற அமைப்பே, சீருற நடத்தவே!”

1258. “எதையும் பொறுப்புடன் செய்ய முன் வராதவர்கள், மற்றவர்கள் மீது பழி போடுவர்.”

1259. “பலரோடு பழகுவதால் உதவிகள் செய்வதிலும் கொடையளிப்பதிலும்கூட சிக்கல் தோன்றும்.”

1260. “ஒவ்வொரு உறவும் பொறுப்புக்களையும் கடமைகளையும் கொண்டதேயாம்.”

1261. “உறவுகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளை உடையனவே. எதிர்பாாப்புகளைச் செய்ய இயலாத போது மனத்தாங்கல் ஏற்படும்.”

1262. “செய்யும் மனமிருந்தால் வாய்ப்புகள் தாமே வந்தெய்தும்.”

1263. “புகழ்-மேலாண்மை-செயல்திறன் ஆகிய நன்மைதரு துறைகளில்கூட அழுக்காறு தோன்றாமல் தடுக்க, தன்னடக்கம் தேவை.”

1264. “குறைந்த விலையுடைய உணவுப் பண்டங்களே நல்ல உணவுக்குப் பயன்படுகின்றன.”

1265. இயற்கையை ஒட்டிச் சென்றால் எதுவும் செய்யலாம். இயற்கையிலிருந்து மாறுபடும் வாழ் நிலை கூடாது.”

1266. “செயற்கை, இயற்கையோடு பொருந்தாது.”

1267. “நல்ல சமையற்காரர் கிடைத்துவிட்டாலே ஆயிரம் காரியம் செய்யலாம்.”

1268. “நமது உடலைக் கவனிக்கவே உறவுகள்: ஆனால் நடப்பதுதான் இல்லை.”

1269. “தன்னை என்றும் இளமையுடையோனாகத் கருதிக் கொள்ளவேண்டும் என்பதற்காக-பொய்ம்மையாக உடலின் நிலையினை மறைத்து வாழ்தல் கூடாது.”

1270. “உடனுக்குடன் நோய்க்குரிய காரணத்தை மாற்றாது வாழ்வது, நோயை அதிகப்படுத்தும்.”

1271. “நோயின் காரணத்தை மாற்றாமல் நோய்க்கு மருந்துண்பவர்கள், நிரந்தர நோயாளிகள் ஆகிவிடுவர்.”

1272. “பெரிய மனிதர்களுக்கு நோய் வருவதே ஒரு சித்திரவதை! தண்டனை!”

1273. “பல நூறு துளிகள் சேர்ந்ததுதான் ஆழ்கடல்; காசுகளாகச் சேர்க்கப் பெற்றால் செல்வமும் கோடியாகி விடும்.”

1274. “சில்லறை உறவுகள் செல்வத்திற்குக் கேடு.”

1275. “ஏழைகளிடத்தில் உள்ள ஐயப்பாடே முன்னேற்றத்திற்கு முதல் தடை.”

1276. “வேண்டுவார் வேண்டுவதெல்லாம் இறைவன் வழங்கி விட்டால், உலகம் விசித்திர விலங்கு கூடாரமாகிவிடும். அதனால்தான் இறைவன் வழங்கத் தக்கதையே வழங்குகிறான்!”

1277. “கல்லில் முளை அடிப்பதும், கல்லாதவருக்கு உபதேசிப்பதும் வீண்.”

1278. “ஆசைப்படுபவர்களும், நிர்வாண சாதுக்களும் வெட்கத்தை விட்டவர்கள்.”

1279. “பதவியில் சுகம் இருக்கிற வரை போட்டிகளைத் தவிர்க்க இயலாது.”

1280. “நிறுவனத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்காத ஊழியர்களைக் கொண்டு நிறுவனத்தைக் காப்பாற்ற இயலாது.”

1281. "அர்ப்பணிப்பு உணர்வில்லாத அமைப்பில், மேலாண்மை கல்வி ஏற்புடைய தக்கவராக அமைத்தல் வேண்டும்."

1282. “தனக்கு இவர் உதவியே தீர்வார் என்ற நம்பிக்கையும் கூட, வாழ்க்கையில் அலட்சியத்தைத் தோற்றுவிக்கிறது”.

1283. “சிறுசிறு பணிகளைக் கூட முறையாகச் செய்யாதவர்கள் கை நிறைய ஊதியம் எதிர்பார்க்கின்றனர்.”

1284. “ஒரு இனத்தின் ஒற்றுமை விருப்பமே இன்று ஐயப்பாட்டிற்கு உரியதாகிவிட்டது.”

1285. “மெய்ப்பொருள் உணர்தல் என்பது வேறு. கடவுள் வழிபாடு என்பது வேறு.”

1286. “மெய்ஞ்ஞானமும் மதமும் ஒன்றல்ல.”

1287. “மெய்ஞ்ஞானம் காண்பதுவே வாழ்க்கையின் குறிக்கோள்.”

1288. “விஞ்ஞானம் சுரண்டும் வர்க்கத்துக்குக் கூட, துணை போகிறது.”

1289. “விஞ்ஞானம் இயற்கையின் உள்ளீடுகளைக் கண்டு வாழ்க்கையின் அனுபவத்திற்குக் கொண்டு வரும் அரியப் பணியைச் செய்கிறது.”

1290. “விஞ்ஞானம் ஏவலனாக இருப்பது நன்று.”

1291. “விஞ்ஞானம் தலைமையாக மாறக் கூடாது.”

1292. “ஒருவருடைய சமயம் தொடர்பான நம்பிக்கைகள் - அவர்களுடைய வாழ்க்கையையும் - அந்த நாட்டின் சமூக வாழ்வையும் பாதிக்கச் செய்யும்.”

1293. “இந்திய சமூக வாழ்க்கையின் வறுமைக்கு மிகுதியும் காரணம் ஊழ் தத்துவங்களேயாம்.”

1294. “வரிசைப்படுதல் என்ற மரபு நல்லது.”

1295. “அவன் - அவளுடன் அதனைப் (இயற்கையை) பயன்படுத்தி வாழ்தலே- வாழ்க்கை."

1296. “வல்லாங்கு வாழ்தல் எளிது. வாழ்வாங்கு வாழ்தல் அரிது.”

1297. “வானவர் உலகம் வளம் நிறைந்தது: ஆனால், பண்பாடற்றது.”

1298. “மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது பண்பாடேயாம்.”

1299. “வாழ்க்கைக்கு மிகவுயர்ந்த குறிக்கோள் அமையாவிடில் வாழ்க்கை சிறத்தல் இயலாது.”

1300. “மற்றவர் வரம்பு உகந்த சுதந்திரத்தை எடுத்துக் கொள்வது வாழ்க்கையைக் கெடுக்கும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/1201-1300&oldid=1055653" இலிருந்து மீள்விக்கப்பட்டது