சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/அதை நீயே எடுத்துச் செல்
11
அதை நீயே எடுத்துச் செல்
ஒரு சிற்றூரில் பெரியவர் ஒருவர் இருந்தார். மிகுந்த அனுபவமும், கல்வி அறிவும் பெற்றவர்.
எவர் வந்து, எந்த நேரத்தில் உதவியோ, யோசனையோ கேட்டாலும் தயங்காமல் இயன்றளவு செய்யக் கூடியவர்.
அந்த ஊரில் உள்ள போக்கிரிக்கு பெரியவரிடம் வெறுப்பு. அவரைத் திட்டிக் கொண்டே இருப்பான். ஆனால், அவரோ அதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஒரு நாள் அவரிடம் நேரில் சென்று, வாயில் வந்தபடி ஏசினான். அவர், “உன்னுடைய வசவுகளை எல்லாம் கூறி முடித்து விட்டாயா?” என்று கேட்டார். அவன் பதில் எதுவும் சொல்லாமல் நின்றான்.
“உன்னுடைய உறவினர்களின் வீடுகளுக்குப் போகும் போது, ஏதாவது கொண்டு செல்வாயா?” என்று கேட்டார்.
"ஆம், வாழைப்பழம், வேர்க்கடலை ஏதாகிலும் வாங்கிச் செல்வேன்” என்றான் அவன்.
"நீ கொண்டு போனதை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லையானால், என்ன செய்வாய்?” என்று கேட்டார் பெரியவர்.
"திரும்ப எடுத்துக் கொண்டு, வீட்டுக்குத் திரும்பி விடுவேன்” என்றான்.
"தம்பி! அதுபோல, சற்று முன், என்னை ஏசினாய் அல்லவா? அந்த ஏச்சுக்களை இப்போது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், நீ என்னை ஏசியவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், நீ ஏசிய ஏச்சுக்களையும் திரும்ப நீயே எடுத்துச் செல்” என்றார் பெரியவர். பிறகு, அவன் ஏசுவதை நிறுத்தி விட்டான்.