உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/ஆட்சியாளரின் பிரச்சார தந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

34
ஆட்சியாளரின் பிரச்சார தந்திரம்


ஒரு கிராமத்தில் மரம் நடு விழாவுக்காக அரசு விழா ஏற்பாடாகி இருந்தது.

அரசு அதிகாரிகள் தடபுடலாக அங்கும் இங்கும் போய் வந்தனர்.

விழாவுக்காக பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது.

மாவட்ட அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் கூடி இருந்தனர்.

அமைச்சர் வந்தார் எல்லோரும் அவருக்கு மாலை அணிவித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அமைச்சர் சில வார்த்தைகள் பேசினார். பிறகு “மரம் நடுவது எந்த இடத்தில்?” என்று கேட்டார்.

ஆளுக்கு ஒரு இடத்தைக் காட்டிச் சொன்னார்கள் அதிகாரிகள்.

“முதலிலேயே தீர்மானித்திருக்க வேண்டாமா?” என்று அமைச்சர் கடிந்து கொண்டார்.

உள்ளூர் பெரியவர் ஒருவர் எழுந்து, ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, "இதுவே ராசியான இடம்! ஏனென்றால், இதிலேதான் எத்தனையோ அமைச்சர்கள் வந்து பல ஆண்டுகளாக, மரம் நட்டு விட்டுப் போவது வழக்கம்” என்றார்.

எந்த மரமும், அந்த பொட்டலில் வளர்ந்தது இல்லை! எல்லாமே அரசாங்கத்தின் சுயநல பிரச்சார தந்திரம் என்பதை மக்கள் அறியாமல் இல்லை.