சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/மாப்பிள்ளை வீட்டார் செய்வது என்ன?
37
மாப்பிள்ளை வீட்டார் செய்வது என்ன?
ஒரு ஊரிலிருந்து மாப்பிள்ளையின் பெற்றோர், அடுத்த ஊரில் இருந்த பெண் வீட்டிற்கு திருமணம் பேசுவதற்குச் சென்றனர். மாப்பிள்ளையின் தந்தை, “உங்கள் பெண்ணுக்கு என்னென்ன சீர் வரிசை செய்வீர்கள்?” என்று பெண்ணின் தந்தையிடம் அதிகார தோரணையில் கேட்டார்.
பெண்ணின் தந்தை மிகவும் பலவீனமான குரலில், “கழுத்துச் சங்கிலி, தோடு, மோதிரம் எல்லாம் பதினைந்து பவுனுக்குள் போடுகிறோம்” என்றார். மற்றும், “மாப்பிள்ளைக்குச் சரிகை வேட்டி, பட்டுச் சட்டை, சரிகைத் துண்டு முதலியன தருகிறோம்” என்றார் பெண்ணின் தந்தை.
“மாப்பிள்ளைக்கு என்ன செய்வீர்கள்? ரொக்கம் எவ்வளவு தருவீர்கள்?” என்று வீராப்புடன் கேட்டார் மாப்பிள்ளையின் தந்தை.
“எங்களால் வேறு எதுவுமே செய்ய இயலாது, இப்போது எங்களிடம் வசதி இல்லை” என்று தயங்கியபடி சொன்னார். பெண்ணின் தந்தை.
மாப்பிள்ளையின் பெற்றோர் முகத்தைச் சுளித்தனர்.
அருகில் இருந்து, அவர்கள் பேசியவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் பெண்ணின் தம்பி.
அவன் மாப்பிள்ளையின் பெற்றோரிடம், “அது சரி, நாங்கள் இவ்வளவும் போடுகிறோம். நீங்கள் என்ன போடுவீர்கள்?” என்று கேட்டான்.
மாப்பிள்ளையின் தாய், சிரித்துக் கொண்டே, “நீங்கள் தந்த பட்டியலில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால், அதற்காகச் சண்டைபோடுவோம்” என்றாள்.
அடுத்து, மாப்பிள்ளையின் தந்தை “நீங்கள் போட்ட நகைகள் அனைத்தும் எடை சரியாக இருக்கிறதா என்று நிறுத்துப் பார்ப்போம்” என்றார்.
இப்படி, “அவ நம்பிக்கையான உங்கள் வீட்டுச் சம்பந்தம் எங்களுக்குத் தேவையே இல்லை” என்று கூறி விட்டனர் பெண்ணின் பெற்றோர்.
பெண் வீட்டாரிடம் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்பதே மாப்பிள்ளை வீட்டாரின் திட்டம்.