சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/மூன்று பேரையும் தேள் கொட்டியது
Appearance
46
மூன்று பேரையும் தேள் கொட்டியது
ஒரு ஊரிலிருந்து மூன்று இளைஞர்கள் வேலை தேடி அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள். வழியில் ஒரு அரச மரத்தின் அடியில், மிகப் பெரிய பிள்ளையார் சிலை காணப்பட்டது. அந்தப் பிள்ளையாரின் தொப்புள் பெரிதாக இருந்தது. அதில் ஏதாவது இருக்குமா என்று நினைத்து, ஒரு விரலை அதில் நுழைத்தான் ஒருவன். அங்கே தேள் ஒன்று அவனைக் கொட்டியது.
“ஆகா தொப்புளுக்குள் புனுகு இருக்கிறது!” என்றான் விரலை வைத்தவன்.
அவன் சொல்லை நம்பி, இரண்டாவது இளைஞனும் தொப்புளில் விரலை வைத்தான். அவனையும் தேள் கொட்டியது. “ஆகா, புனுகு இருக்கிறது” என்றான்.
மூன்றாவது இளைஞனும், அவர்களைப் போல் தொப்புளில் விரலை வைத்தான். அவனையும் தேள் கொட்டியது. ஆனால், அவன் எதுவும் சொல்லவில்லை.
இப்படித்தான் தனக்கு நேர்ந்த துன்பம், பிறருக்கும் ஏற்படவேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.