சிலப்பதிகாரம் உரைப்பாயிரம் அடியார்க்கு நல்லார் உரை
சிலப்பதிகாரம்
உரைப்பாயிரம்
அடியார்க்கு நல்லார் உரை
குணவாயில் ... வாழ்வீர் ஈங்கென் (30:202.)
முச்சங்க வரலாறு கூறும் பகுதி
- ஒப்புநோக்குக. இறையனார் அகப்பொருள் உரை
நூலச்சுப் படிமம்
[தொகு]இந்த நூலச்சுப் படிமத்தில் உள்ளவை அப்படியை சொல்-பிரிப்பும், பொருள்-பிரிப்பும் செய்யப்பட்டு அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உரை
[தொகு]தொடர்நிலைச் செய்யுள்
[தொகு]இவ் இயலிசைநாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுளை அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பியம் ஆதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பா இலக்கணத்த ஆதலானும் அந்நூலின் முடிபே இதற்கு முடிபு என்று உணர்க. அந் நூலில் செய்யுள் இயலின் கண்ணே ஆசிரியர் பாவும் இனமும் என நான்கின் நீக்கிய பாலினைத் தொகை வரையறையான் இரண்டு என அடக்கியும், வரி வரையறையான் ஆறு என விரித்தும், அவற்றை அறம் பொருள் இன்பத்தால் கூறுக என்றும் கூறிப், பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறியவர், “இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும்” (தொல்காப்பியம் செய்யுளியல் 239) என்பதனால், குவிந்து மெல்லென்ற சொல்லானும், பரந்து வல்லென்ற சொல்லானும், அறம் பொருள் இன்பம் பயப்ப ஒரு கதைமேல் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா வெண்கலிப்பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத் தொடர்நிலைச் செய்யுள் அங்ஙனம் கூறிய ‘தொடர்நிலை’ என உணர்க.
காப்பியம் (சொல்லாட்சிகள்)
[தொகு]முந்து நூல்களில் காப்பியம் என்னும் வடமொழிப் பெயர் இன்றேனும் ஆசிரியர், “வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே” (தொல்காப்பியம் எச்சவியல் 5) என்றார்; ஆகும்மே என்ற இலேசினான் உய்துணரற்பாலதனை மாணாக்கன் ஐயம் தீர்த்தற்கு என்றே பின்னும் “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்’’ (தொல்காப்பியம் எச்சவியல் 6) என்றார் எனக் கொள்க. அன்றியும் பெரியதனைப் பெருங்காப்பியம் என்றே கூறி மறுக்கவேண்டும் ஆதலானும், சான்றோர் செய்யுட்களிலும் “கூத்தியர் இருக்கையும் சுற்றியதாகக் காப்பிய வாசனை கலந்தன சொல்லி” (பெருங்கதை 4-3 அடி 43-45) என இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் (1) இடைச் சங்கத்துத் (2) தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும், வெள்ளூர்க் காப்பியனாரும், சிறுபாண்டரங்கனாரும், மதுரை ஆசிரியன் மாறனாரும், துவரைக் கோமகனும், கீரந்தையாரும் என்று இத் தோடக்கத்தார் ஐம்பத்து ஒன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவர் தம்மால் பாடப்பட்ட கலியும் குருகும் வெண்டாளியும் முதலான செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும் “கருதுவது அங்கு ஒன்று உண்டோ காப்பியக் கவிகள் காம எரி எழ விகற்பித்திட்டார்” (1585) எனச் சிந்தாமணியுள்ளும், “நாடகக் காப்பியம் நன்னூல் நுனிப்போர்” (19-80) என மணிமேகலையுள்ளும், பிறவற்றுள்ளும் கூறினமையானும் சொற்றொடர்நிலை, பொருட்டொடர்நிலை என்னும் தொடர்நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்து என உணர்க.
சிலப்பதிகாரம் 'தோல்' என்னும் வனப்பு ஆகும்
[தொகு]இதனுள் முன் கூறிய வனப்பு என்பது பெரும்பான்மையும் பல உறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு ஆதலின் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலைச் செய்யுட்கு இவ் எட்டும் அலங்காரம் ஆயின. ஆகவே இக் காப்பியத்துக்கும் ‘தோல்’ என்பது ஒரு சொல்-அலங்காரமாகவே உணர்க.
கதை அன்று, காப்பியமே
[தொகு]இனி, இதன் செய்யுள் காதை என்று வழங்குதலின் கதையை உடையது காதை ஆம் ஆகலின், ஆசிரியம் வெண்பா, வெண்கலிப்பா என்னும் இவற்றோடு சிறுபான்மையான் ஒருசார் கொச்சகக்கலி மயங்கி வருதலானும், காண்டம் எனக் குறி பெறுதலானும் இதனைக் கதை என்றல் வலியுடைத்து என்பார்க்கு அற்று அன்று; கதை என்பது பொய்ப்பொருள் புணர்த்துக் கூறுவது; என்னை? “கதை எனக் கருதல் செய்யான் மெய் எனத் தானும் கொண்டான்” (சீவகசிந்தாமணி 2144) என்றமையானும், வழக்கினுள்ளும் இது ஒரு கதை என்ப ஆகலானும், “நாடகக் காப்பியம்” (மணிமேகலை 19-80) என்றலானும், கதை என்பது அல்லது. இனி அது நல்ல புலவரால் பொருளொடு புணராப் பொய்ம்மொழியால் நாட்டப்பட்டு வருவது ஆகலின், இஃது அவ்வாறு அன்றி யோனி என்னும் நாடக உறுப்பும், நாடகமும் தழுவி உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருள்மேல் சித்தரிக்கப்படாது பட்டாங்கு கிளந்து பலவினப் பாட்டான் வருதலின் ஈது அன்னது அன்று என்பார்க்குக் காப்பியம் என்றலும் ஆம்.
பேரியாழும் இசையிலக்கண நூல்களும்
[தொகு]இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரைப் பெருங்குருகும் பிறவும் தேவலிருடி நாரதன் பஞ்ச பாரதீயம் முதலா உள்ள தொன்னூல்கள் இறந்தன. நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை அல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும். இறக்கவே வரும் பெருங்கலம் முதலிய பிறவுமாம். இவற்றுள் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினது அளவு பன்னிரு சாணும், வணர் அளவு சாணும், பத்தர் அளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக்கு ஏற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரம் கோல் தொடுத்து இயல்வது; என்னை?
“ஆயிரம் நரம்பிற்றது ஆதியாழ் ஆகும்,
ஏனை உறுப்பும் ஒப்பன கொளலே,
பத்தர் அளவும் கோட்டினது அளவும்,
ஒத்த என்ப இருமூன்று இரட்டி,
வணர் சாண் ஒழித்து வைத்தனர் புலவர்”
என நூலுள்ளும்,
“தவ முதல் ஊழியின் தானவர் தருக்கு அற,
புல மகனாளர் புரி நரம்பு ஆயிரம்,
வலி பெறத் தொடுத்த வாக்கு அமைப் பேரியாழ்ச்,
செலவுமுறை எல்லாம் செய்கையில் தெரிந்து
மற்றை யாழும் கற்று முறை பிழையான் (4-3 அடி 51-55)
எனக் கதையினுள்ளும் கூறினார் ஆகலான் பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தன எனக் கொள்க.
இசை, நாடகத் தமிழ் நூல்கள்
[தொகு]இனி,
- தேவலிருடியாகிய குறுமுனிபால் கேட்ட மாணாக்கர் பன்னிருவருள் சிகண்டி என்னும் அருந்தவ முனி இடைச்சங்கத்து அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரோடு விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரில் கூடின இடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றினமையால் சாரகுமரன் என்னும் பெயர் பெற்ற அக் குமரன் இசை அறிதற்குச் செய்த இசைநுணுக்கமும்,
- பாரசவ முனிவரில் யமளேந்திரர் செய்த இந்திரகாளியமும்,
- அறிவனார் செய்த பஞ்சமரபும்,
- ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதியமும்,
- கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கு ஏறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதல் நூல்களில் உள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து இயன்ற மதிவாணர் நாடகத் தமிழ்நூலும்
என இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்து அறிந்த நூல்கள் அன்றேனும், ஒருபுடை ஒப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரை எனக் கொள்க.
சிலப்பதிகாரத்தில் வீடு (வீட்டுநெறி)
[தொகு]உலகத்துக் காப்பியம் செய்வோன் அறனும் பொருளும் இன்பமும் வீடும் கூறல் வேண்டுமன்றே; இந் நாடகக் காப்பியத்தினுள் அறனும் பொருருளும் இன்பமும் கூறிச் சிறிதாயினும் வீடு கூறிற்றிலர்; என்னை எனின் “யான் அறிகுவன் அது பட்டது” (பதிகம் 11) உரைத்த சாத்தனார் நாற்பொருளும் பயப்பப் பெருங்காப்பியமாகச் செய்யக் கருதியிருக்கின்றார்க்கு அடிகள் “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” (பதிகம் 60) என உளப்பாட்டுத் தன்மையால் கூறச் சாத்தனார் இவர் ஏனை இரு வேந்தரையும் புகழ்ந்து உரையார் என்பது கருதி, மூவேந்தர்க்கும் உரியது ஆகலின் “நீரே அருளுக” (பதிகம் 62) என்று ஏகார வினாப் பொருண்மையான் அவர் கருத்து நிகழ்ச்சி விளக்குவான் கூற, அவர் அதனையே துணிந்து, தமது முத்தமிழ்க் கல்வியும், வித்தகக் கவியும் காட்டுதற்குத் தாம் வகுத்துக்கொண்ட மூவகை உள்ளுறையின் விளைவு தோன்ற , மங்கல வாழ்த்துப் பாடல் முதல் வரந்தரு காதை இறுதி முப்பது வரைத்தாக வரையறுத்து அதனை அதிகாரமாகப் பொதித்து முன்வைத்துப் பின்னர், அறனும் பொருளும் இன்பமும் கூறி அடைக்கலக்காதை இறுதிக்கண் “போதி அறவோன் ... அளிப்பவும் (303-304) எனக் கோவலன் முன் கண்ட கனவின்கண் நிகந்ததை எதிர்கால நிமித்தமாக மாடலற்குக் கூறுதலானும், நீர்ப்படையுள் “மாதவி ... போதித் தானம் புரிந்து அறம் கொள்ளவும்” (103-8) என்றலானும், வாழ்த்தின்கண் “மாதவிதன் துறவும் கேட்டாயோ தோழீ, மணிமேகலைத் துறவும் கேட்டாயோ தோழீ” (அடித்தோழி அரற்று) எனத் தேவந்தி கூறுதலானும், வரந்தரு காதையில் “மணிமேகலையார், யாது அவர் துறவுக்கு ஏது ஈங்கு உரை” (4-5) என “மையீரோதி” (10) முதல் “போதித் தானம் புரிந்து அடிப்படுத்தனள்” (28) என்பதின் ஈறாகப் பக்குவம் சொல்லி “பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை திரு விழை கோலம் நீங்கினள்” (35-6) என்றமையானும் மணிமேகலை துறந்தாள் என்பது உரைத்து அத் துறவினைப் பின் வைத்து அதனோடு நாற்பொருளும் பூசித்துப் பெருங்காப்பியமாக முடித்தலைக் கருதி அடிகள் சாத்தனார்க்கு இவ்வுரையை உரைத்துழி, அவர் மணிமேகலை பெயரான் அவள் துறவே துறவாக அறனும் விடும் பயப்ப ஒரு காப்பியம் செய்து அமைத்தனம் எனக் கேட்டு, அவ் அடிகள் விரும்பி இவ்விரண்டினையும் ஒரு காப்பியம் ஆக்கி உலகின்கண் நடாத்துவான் வேண்டவும் இருவர் செய்தலின் இரண்டாகி நடந்தன என்க.
உரைக்குத் தரப்பட்டுள்ள அடிக்குறிப்பு
[தொகு]இனி, இப் பகுதிக்கு அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ள பகுதி:-
இடைச்சங்கமும் மற்றை இரண்டு சங்கங்களும் இருந்த இடம் முதலியவற்றைப் பின் வரும் ஆசிரியப்பாவானும் உணர்க:-
“வேங்கடம் குமரி தீம் புனல் பௌவத்து
இந்நான்கு எல்லையின் இருந்த தமிழ் பயின்ற
செந்நாப் புலவர் செய்தி ஈண்டு உரைப்பின்
ஆடகக் குடுமி மாடக் கூடலின்
முன்னர்ச் சங்கக் கன்மாப் பலகையில்
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்
மன்றல் மராத்தார்க் குன்று எறி இளஞ்சேய்
திண் திறல் புலமைக் குண்டிகைக் குறுமுனி
புவி புகழ் மருதம் கவினிய முரஞ்சிப்
பதி முடிநாகன் நிதியின் கிழவன்
இனையர் நானூற்று நாற்பத்து ஒன்பதின்மர்
அனையர் நான்காயிரம் நூற்றொடு
நாற்பத்து ஒன்பதின்மர் பார்க்கின் செந்தமிழோர்
புரிந்தனர் செய்யுள் பெரும் பரிபாடலும்
முதுமை அடுத்த நாரையும் குருகும்
கதியுறச் செய்த களரியாவிரையும்
ஆங்கு அவர் இருந்த்தும் அத் தொகையாரும்
ஈங்கு இவர் தம்மை இரீஇய பாண்டியர்கள்
காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறா
ஏசிலா வகை எண்த்து ஒன்பதின்மர்
கவி அரங்கு ஏறினார் எழுவர் ஆகும்
மகத்துவம் உடைய அகத்திய இலக்கணம்
வடுவறு காட்சி நடுவண் சங்கத்து
அகத்தியர் தொல்காப்பியத் தமிழ்முனிவர்
இருந்தையூரின் கருங்கோழி மோசியார்
எள்ளாப் குலமை வெள்ளூர்க் காப்பியன்
இறவா இசையின் சிறுபாண்டரங்கன்
தேசிக மதுரையாசிரியன் மாறன்
தவர் ஒப்பாய துவரைக் கோமான்
தேரும் கவிபுனை கீரந்தையார் இவர்
ஒன்பதோடு அடுத்த ஐம்பதின்மர் ஆரும்
தவலரும் கேள்வித் தன்மையர் உள்ளிட்டு
இவர் மூவாயிரத்து எழுநூற்றுவரே
வையகம் பரவச் செய்த செய்யுளும்
இருங்கலி கடிந்த பெருங்கலித்தொகையொடு
குருகு வெண்டாளி தெருள் வியாழமாலை
அந்தாள் இலக்கணம் அகத்தியம் அதனொடு
பின்னாள் செய்த பிறங்கு தொல்காப்பியம்
மதிநலம் கவின்ற மாபுராணம்
புதுநலம் கவின்ற பூதபுராணம்
வல்லிதின் உணருந்த நல்லிசை நுணுக்கம்
தாவாக் காலம் தமிழ் பயின்றதுவும்
மூவாயிரத்தோடு எழுபது நூற்றியாண்டு
பரீஇய சங்கம் இயற்றிய பாண்டியர்கள்
வெண்டேர்ச் செழியன் முதலா விறல்கெழு
திண்டேர்க் கொற்ற முடத்திருமாறன்
முரசுடைத் தானை மூவா அந்தம்
அரசுநிலை இட்டோர் ஐம்பத்து ஒன்பதின்மர்
இவ்வகை அரசரில் கவியரங்கு ஏறினார்
ஐவகை அரசர் ஆய் இடைச்சங்கம்
விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக்
கண்ணகன் பரப்பின் கபாடபுரம் என்ப.
அரும் கடைச்சங்கம் இருந்தோர் யார் எனில்
சிறுமேதாவியார் சேந்தம்பூதனார்
அறிவுடை அரனார் பெருங்குன்றூர்கிழார்
பாடல் சான்ற இளந்திருமாறன்
கூடலாசிரியன் நல்லந்துவனார்
பரவுதமிழ் மதுரை மருதனிளநாகர்
அவிர் கணக்காயர் நவில் நக்கீரர்
கீரங்கொற்றர் கிளர் தேனூர்கிழார்
ஓரும் கலை மணலூர் ஆசிரியர்
நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்
செல்லூர் ஆசிரியர் முண்டம் பெருங்குமரர்
முசிறி ஆசிரியர் நீலகண்டனார்
அசை விரி குன்றத்து ஆசிரியர் அன்றி
நாத்தலம் கனிக்கும் சீத்தலைச் சாத்தர்
முப்பால் உணரும் முப்பூரிகுடி கிழார்
உருத்திரஞ்சன்மர் மருத்துவர் ஆகிய
நாம நாற்கலைத் தாமோதரனார்
மாதவனானோடு ஓதும் இளநாகர்
கடியும் காமப் படியம் கொற்றனார்
அருஞ் செயலூர் வாழ் பெருஞ்சுவனாருடன்
புவி புகழ் புலமைக் கபிலர் பரணர்
இன்னாத் தடிந்த நன்னாகர் அன்றியும்
ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்துக்கு
உரை இடையிட்ட விரகர் கல்லாடர்
பேர் மூலம் உணரும் மாமூலர் தம்மொடு
விச்சைக் கற்றிடு நச்செள்ளையார் முதல்
தேன் ஊற்று எடுப்பச் செந்தமிழ்ப் பகர்ந்தோர்
நானூற்றுவர் முதல் நாற்பத்து ஒன்பதின்மர்
வீடு பெற உலகில் பாடிய செய்யுள்
முத்தொள்ளாயிரம் நற்றிணை நெடுந்தொகை
அகநானூறு புறநானூறு
சிற்றிசை பேரிசை வரியோடு
அறம் புகல் பதிற்றுப்பட்டோடு இருபான்
பெறும் பரிபாடலும் குறுங்கலி நூற்றைம்பது
முதலாகிய நவையறு கலைகள்
அக் காலத்தவர்க்கு அகத்தியம் அதனோடு
மிக்காம் இலக்கணம் விளங்கு தொல்காப்பியம்
எண்ணூல் கேள்வியர் இருந்தது ஆயிரத்து
எண்ணூற்று ஐம்பது வருடம் என்ப;
இடர்ப்படாது இவர்களைச் சங்கம் இரீஇயினார்
முடத்திருமாறன் முதலா உக்கிரப்
பெருவழுதி ஈறாப் பிறங்கு பாண்டிய
நரபதிகளாரும் நாற்பத்து ஒன்பதின்மர்
இவருள் கவியரங்கு ஏறினார் மூவர்
புவியில் சங்கம் புகழ் வடமதுரை
ஆதி முச்சங்கத்து அருந்தமிழ்க் கவிஞர்
ஓதிய செய்யுள் உலவாப் பெரும்பொருள்
வாளாக் கேட்கும் தோளாஞ் செவிக்கும்
கேட்டும் தெரியா ஓட்டை நெஞ்சினுக்கும்
நுழையா ஆதலின் நுழைபுலன் தன்னொடும்
விழைவார்க்கு உரைக்க உரைக்க வேண்டுவர் தெரிந்தே.
இச் செய்யுள் பாண்டி நாட்டிலுள்ள செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் அவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டுப் புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது. இவ் அகவலில் உள்ள சில பகுதி மறுத்தற்கு உரியவாக இருந்தும் ஒரு சாராருடைய கொள்கை தெரிவதற்கு இங்கே பதிப்பிகலாயிற்று.